என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    மகாளய அமாவாசை அன்று பித்ருக்களுக்கு செய்யப்படுகிற தர்ப்பண வழிபாட்டில் கருமைநிற எள்ளைப் பயன்படுத்துவதால் நமது முன்னோரும் தேவர்களும் மகிழ்ச்சி அடைகின்றனர்.
    உலகத்தில் எத்தனையோ வகை புற்கள் இருக்கின்றன. ஆனால், தர்ப்பை புல்லை மட்டும் வழிபாட்டிற்குப் பயன்படுத்துவது ஏன் என்று அறிதல் வேண்டும். எள் என்னும் கருமை நிற விதை திருமாலின் வியர்வைத் துளியிலிருந்து வெளிவந்த பரிசுத்தமான தானியம் என்பது வேதக்கூற்று. பித்ருக்களுக்கு செய்யப்படுகிற தர்ப்பண வழிபாட்டில் கருமைநிற எள்ளைப் பயன்படுத்துவதால் நமது முன்னோரும் தேவர்களும் மகிழ்ச்சி அடைகின்றனர்.

    மாளய பட்சம் வருவதற்கு 15 நாட்கள் முன்னதாகவே ஒரு வீட்டின் பானையில் கொட்டி வைக்கப்பட்டுள்ள எள்ளானது பித்ரு வருவதைச் சொல்ல நிமிர்ந்து நிற்பதாக நம்பப்படுகிறது. தர்ப்பை புல் ஆகாயத்தில் தோன்றியது என்று கூறுவர். இதில் ஒரு முனையில் பிரம்மாவும், மறு முனையில் சிவபெருமானும், நடுப்பகுதியில் திருமாலும் வாசம் செய்வதாகக் கூறுவர்.

    தர்ப்பைக்குக் குசம், திருப்புல், தெய்வப்புல் அமிர்த வீர்யம் என்ற பெயர்கள் உண்டு. நிலத்தில் வாடாமல் நீரில் அழுகாமல் விதை, செடி, பதியம் இல்லாமல் சுயமாகத் தோன்றுவதே தர்ப்பை. ஆன்மா தோற்றம் போன்று புதிரான தர்ப்பை தானே தோன்றி வளர்வதால் தர்ப்பையில் ஆன்மாவை ஆவாகனம் செய்து வழிபடுவர்.

    உஷ்ணம் மிகுந்த தர்ப்பை அமாவாசையிலும் கிரகண காலத்திலும் அதிக வீர்யம் உடையதால் தர்ப்பணம் இட பயன்படுத்தப்படுகிறது. அதனால் தான் தர்ப்பண பூஜைக்கு இதை பயன்படுத்துவர்.

    மகாளய கால நாட்களில் நம் முன்னோர்கள் நமக்கு ஆசி வழங்குவதற்காகவே பிதுர்லோகத்தில் இருந்து, பிதுர்தேவதைகளிடம் அனுமதி பெற்று நம்மைப் பார்க்க பூலோகத்திற்கு வருகின்றனர்.
    மற்ற அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க மறந்துவிட்டாலோ அல்லது அதற்கான வாய்ப்பு இல்லாமல் தவற விட்டவர்கள், இந்த மகாளய அமாவாசையன்று திதி கொடுத்தால், அது அதற்கான முழுப் பயனையும் அளிக்க வல்லதாகும். மகாளய அமாவாசை அன்று முன்னோர்கள் எல்லோரும் பூமிக்கு வந்து செல்வதாக ஐதீகம்.

    நாம் அவர்களுக்கு அளிக்கும் திதி, அவர்கள் செய்த பாவங்களில் இருந்தெல்லாம் விடுவித்து அவர்களை சொர்க்க வாழ்விற்கு கொண்டு செல்லும் என்பது நம்பிக்கை. அன்றைய தினம் ஏதாவது ஒரு புனித நதியில் நீராடுவது, தான தர்மங்கள் செய்வது போன்றவற்றை செய்தால் நல்லது. பல தெய்வீக நூல்களில் மகாளய பட்சத்தின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய யுகங்களில் மறைந்த முன்னோரைக் கண்ணால் காணும் பாக்கியம் மக்களுக்கு கிடைத்திருக்கிறது.

    நாம் கலியுகத்தில் வாழ்வதால், அது சாத்தியமில்லாமல் போய்விட்டது. மகாளய கால நாட்களில் நம் முன்னோர்கள் நமக்கு ஆசி வழங்குவதற்காகவே பிதுர்லோகத்தில் இருந்து, பிதுர்தேவதைகளிடம் அனுமதி பெற்று நம்மைப் பார்க்க பூலோகத்திற்கு வருகின்றனர். இந்நாட்களில் நம் வீடுகளை மிகத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். சைவம் மட்டுமே உண்ண வேண்டும்.

    வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டையிடக் கூடாது. வீணான பொழுதுபோக்கு அம்சங்களை அறவே தவிர்த்து, உள்ளத்தையும், உடலையும் தூய்மையாக வைத்துக் கொள்வது மிக வும் அவசியம் இந்த பதினான்கு நாட்களும் முன்னோர் வழி பாட்டினைச் செய்வது சிறப்பு. புண்ணிய நதிக் கரைகள், தீர்த்தக்கரைகள், ராமேஸ்வரம் போன்ற கடற்கரைத்தலங்களுக்கு ஒருநாளாவது செல்ல வேண்டும்.

    முடியாதவர்கள் காகத்திற்கு அன்னமிடலாம். பசுவுக்கு புல், பழம் கொடுக்கலாம். ஸ்ரீமந்நாராயணனே ராமாவதார, கிருஷ்ணாவதார காலங்களில் பிதுர்பூஜை செய்து முன்னோர்களை வழிபாடு செய்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எதுவும் செய்ய இயலாதவர்கள் முன்னோரின் பெயர்களை உச்சரித்து, “காசி காசி” என்று சொன்னபடியே, வீட்டு வாசலிலேயே எள்ளும் தண்ணீரும் விட்டு கூட திதி பூஜையைச் செய்யலாம். பின்னர், பூஜையறையில் நம் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த எளிய பூஜை அளவற்ற நன்மைகளைத் தரக்கூடியது.

    மற்ற அமாவாசையைக் காட்டிலும் மகாளயஅமாவாசை ஏன், அவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என் பதை, நாம் இந்த மகாளயஅமாவாசை தினத்தில் அறிந்துகொள்வதும் ஒரு வகையில் சிறப்புதான். அமாவாசை முதலான முக்கிய நாட்களில் நமது முன்னோர்கள், பூமிக்கு வந்து தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று, ஆசீர்வதிப்பார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த நாட்களில் சிரத்தையோடு அவர்களை வழிபட்டால், தீர்க்க ஆயுள், புகழ், செல்வம், உடல் ஆரோக்கியம், இன்பம் போன்ற அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    மகாளயஎன்றால் ‘கூட்டாக வருதல்’ என்பது பொருள். மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக ஒருசேரக் கூடும் காலமே மகாளயபட்சம் என்று கருதப் படுகிறது. பட்சம் என்றாகல், 15 நாட்கள் என்பது பொருள். அதாவது மறைந்த நமது முன்னோர்கள், 15 நாட்கள் நம்மோடு தங்கக்கூடிய காலங்களை மகாளய பட்சம் என்று கூறுகிறோம்.

    மகாளயபட்சம் புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை நீடிக்கிறது. புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையே, மகாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. சாதாரண அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும். ஆனால், மஹாளயபட்ச அமாவாசை தினத்தில், தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி, நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் மற்றும் ஏனைய அனைவருக்கும் இன்றைய தினத்தில் தர்ப்பணம் கொடுப்பதே மகாளயஅமாவாசையின் தனி பெரும் சிறப்பாக திகழ்கிறது. மகாளயபட்சத்தில் அனைத்து நாட்களுமே தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷம். இயலாதவர்கள் மகாளயஅமாவாசை அன்றாவது பக்தியுடனும், நம்பிக்கையுடன் தர்ப்பணம் செய்வது எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும்.

    மகாளயபட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதால் பல்வேறு பலன்கள் நம்மைச் சேர்கின்றன. 1-ம் நாள் - பிரதமை - செல்வம் சேரும் 2--ம் நாள் - துவிதியை - பெயர் சொல்லும் குழந்தைகளைப் பெறலாம். 3-ம் நாள் - திரிதியை - நினைத்த காரியங்கள் நிறைவேறும் 4-ம் நாள் - சதுர்த்தி - பகையிலிருந்து எளிதில் விடுபடலாம். 5-ம் நாள் - பஞ்சமி - அசையா சொத்துக்கள் மற்றும் செல்வம் பெருகும். 6-ம் நாள் - சஷ்டி - பேரும், புகழும் தேடி வரும். 7-ம் நாள் - சப்தமி - தகுதியான மற்றும் சிறந்த பதவிகள் கிடைக்கும். 8-ம் நாள் - அஷ்டமி -அறிவு கூர்மை பெறும்.

    9-ம் நாள் நவமி - நல்ல வாழ்க்கைத்துணை மற்றும் நல்ல குடும்ப சூழல் அமையும். 10-ம் நாள் - தசமி - நீண்ட நாள் ஆசை உடனடியாக நிறைவேறும். 11-ம் நாள் - ஏகாதசி - கல்வி, விளையாட்டு, கலைகளில் அசுர வளர்ச்சி கிடைக்கும். 12-ம் நாள் - துவாதசி - ஆபரணங்கள் சேரும். 13-ம் நாள் - திரயோதசி - விவசாயம் மற்றும் தொழில் செழிக்கும். தீர்க்காயுள் கிடைக்கும். 14-ம் நாள் - சதுர்த்தசி - பாவம் கழியும். வாரிசுகளுக்கும் நன்மையே நடக்கும். 15-ம் நாள் - மகாளயஅமாவாசை - அத்தனை பலன்களும் நமக்குக் கிடைக்க, நமது முன்னோர்களின் பரிபூரண ஆசி கிடைக்கும்.

    இவ்வாறான சிறப்புக்களால்தான், தை அமாவாசை, ஆடி அமாவாசையைக் காட்டிலும் மகாளயஅமாவாசை அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
    உலக புகழ் பெற்ற சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா இன்று (புதன்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    உலக புகழ் பெற்ற சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் நவராத்திரி திருவிழா மிகவும் சிறப்பம்சம் கொண்டது ஆகும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா இன்று(புதன்கிழமை) தொடங்கி வருகிற 15-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    விழாவையொட்டி இன்று காலை அம்மன் கொலு மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. அதைத்தொடர்ந்து திருவிழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கும், காலை 10 மணிக்கும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பகல் 11 மணிக்கு வைர கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு பகவதிஅம்மன் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பகல் 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, இரவில் அம்மன் வாகனத்தில் பவனி வருதல் ஆகியவையும் நடக்கிறது.

    இன்று முதல் 8-ந்தேதி வரை இரவு 8 மணிக்கு அம்மன் வெள்ளி கலைமான் வாகனத்திலும், 9-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை இரவு 8 மணிக்கு அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்திலும் கோவிலை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    12-ந்தேதி இரவு 8 மணிக்கு வெள்ளி இமயகிரி வாகனத்திலும், 13-ந்தேதி இரவு 8 மணிக்கு வெள்ளி காமதேனு வாகனத்திலும், 14-ந் தேதி இரவு 8 மணிக்கு வெள்ளி கலைமான் வாகனத்திலும் அம்மன் எழுந்தருளி பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    10-ம் திருவிழாவான 15-ந்தேதி காலையில் அம்மன் அலங்கார மண்டபத்தில் வெள்ளி குதிரை வாகனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    தொடர்ந்து மதியம் 12 மணிக்கு அம்மன் அலங்கார மண்டபத்தில் இருந்து வெள்ளிக்குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் மகாதானபுரம் நோக்கி பரிவேட்டைக்கு ஊர்வலமாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலையில் மகாதானபுரத்தில் உள்ள வேட்டை மண்டபத்தை சென்றடைகிறது. அங்கு பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது.

    அதன் பின்னர், மகாதானபுரம், பஞ்சலிங்கபுரம் ஆகிய கிராமங்களில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. வீதிஉலா முடிந்த பின்னர் அம்மன் வெள்ளி பல்லக்கில் கன்னியாகுமரிக்கு புறப்பட்டு செல்லுதல், நள்ளிரவு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது. அதன் பிறகு வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம் மற்றும் கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் சங்கம் ஆகியவை இணைந்து செய்து வருகின்றன.
    பிரம்மோற்சவ விழாவையொட்டி பக்தர்கள் நடந்து வர ஏதுவாக அலிபிரி நடைபாதையை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி நாளை (வியாழக்கிழமை) திறந்து வைக்கிறார்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா நாளை கோலாகலமாக தொடங்குகிறது.

    பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவில் மற்றும் திருமலை முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் வண்ணமயமாக காட்சியளிக்கிறது.

    இதேபோல் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மலர்களை கொண்டு கோவில் முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. பிரம்மோற்சவ விழாவையொட்டி இன்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை சேனாதிபதி விழா ஏற்பாடுகளை பார்வையிடும் அங்குரார்ப்பணம் நடக்கிறது.

    இதைத் தொடர்ந்து நாளை கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக தொடங்குகிறது.

    11-ந்தேதி நடைபெறும் கருட சேவையில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கலந்துகொண்டு ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கிறார். மேலும் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.

    இதையொட்டி சித்தூர் கலெக்டர் ஹரிநாராயணன் திருப்பதி எஸ்.பி. வெங்கட அப்பாலநாயுடு மற்றும் அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

    அலிபிரியில் இருந்து திருமலை வரை உள்ள நடைபாதை கடந்த ஓரு ஆண்டாக சீரமைக்கும் பணி நடந்தது. தற்போது அந்த பணிகள் முடிவடைந்தது. பிரம்மோற்சவ விழாவையொட்டி பக்தர்கள் நடந்து வர ஏதுவாக அலிபிரி நடைபாதையை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி நாளை (வியாழக்கிழமை) திறந்து வைக்கிறார்.

    15-ந்தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுவதால் அன்று விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதியில் நேற்று 20,475 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 10,370 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.2.61 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது.
    ஸ்ரீ கணபதி சஹஸ்ரநாமம் விநாயகரின் 1000 திருநாமங்களைக் கொண்டது. அதைத் தினமும் கூற முடியாதவர்கள், சஹஸ்ரநாமத்தில் உள்ள சில ஸ்லோகங்களைத் தினமும் ஜெபித்து வருவதால் பல பலன்களை அடையலாம்.
    வஜ்ராத்யஸ்த்ர பரீவார:கனசண்ட ஸமாஸ்ரய
    ஜயோஜய பரீவார :விஜயோ விஜயாவஹ :||

    இதைத் தினமும் 27 தடவை தெற்கு நோக்கி அமர்ந்து சங்கல்பம் செய்து ஜெபித்து வர எதிர்ப்புகள், எதிரிகளால் உண்டாகும் தொல்லைகள் நீங்கும்.
    தர்ப்பண தினத்தில் தன்னால் முடிந்த அளவு அன்னதானம் செய்தல் அவசியம். சன்னியாசி ஒருவருக்கு மட்டுமாவது அன்னதானம் செய்தல் வேண்டும்.
    சுத்தமான நீரில் தலை முழுவதாக நனையும்படி நீராடி உலர்ந்த ஆடையை அணிந்து நெற்றியில் அவரவர்களின் குலவழக்கத்திற்கு ஏற்றபடி விபூதியோ, திருமண்ணோ, கோபிச்சந்தனமோ, செந்தூரமோ அணிந்து கொண்டு கிழக்கு அல்லது வடக்கு நோக்கியபடி மனைப்பலகை அல்லது தர்ப்பைப்பாய் போட்டு அதன்மேல் பத்மாசனம் இட்டு அமர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

    வலது கை மோதிர விரலில் தர்ப்பை புல்லால் செய்யப் பட்ட பவித்திரத்தை அணிந்து கொள்ளுதல் அவசியம். சுத்தமான பித்தளை தாம்பாளத்தில் கட்டை தர்ப்பையை 7 எண்ணிக்கை விரித்து அதன்மேல் கூர்ச்சம் கிழக்கு நுனியாக வைத்து நமது முன்னோர்களாகிய பித்ருக்களை அதில் ஆவாகனம் செய்தல் வேண்டும்.

    முன்னோர் பெயரையும் வம்சாவழி கோத்திரம் தெரிந்தால் சொல்லிக் கொண்டு (தெரியாதவர்கள்) சிவ அல்லது விஷ்ணு கோத்திரம் என்று சொல்லிக் கொண்டு வலது உள்ளங்கையில் எள்ளை வைத்துக்கொண்டபடி வலது ஆள்காட்டி விரல் கட்டை விரல் இடையில் நீரும் எள்ளும் கலந்தபடி தர்ப்பைமேல் விழுமாறு விடவேண்டும்.

    தர்ப்பணம் முடிந்த பிறகு பித்ருக்கள் வசிக்கின்ற பித்ருலோகம் உள்ள திசை எனப்படும் தெற்கு நோக்கி 12 முறை விழுந்து வணங்குதல் வேண்டும்.
    தர்ப்பணத்தை கிழக்கு நோக்கி செய்தல் மிகச் சிறப்பான பலன்களைத்தரும். ஒவ்வொரு திசைக்கும் வெவ்வேறு வகை பலன்கள் ச்ரார்த்தாங்க- தர்ப்பணம் விதியில் சொல்லப்பட்டுள்ளது.

    தர்ப்பண நீரை சிறிதளவு குடும்பத்தார் தன் தலையில் தெளித்துக் கொண்டு பிறகு கால் படாத இடமான வில்வம், அரசு, மற்று பூச் செடிகளின் வேரில் ஊற்றிவிட வேண்டும்.

    தர்ப்பண தினத்தில் தன்னால் முடிந்த அளவு அன்னதானம் செய்தல் அவசியம். சன்னியாசி ஒருவருக்கு மட்டுமாவது அன்னதானம் செய்தல் வேண்டும்.
    மந்திரங்கள் முறையாகத் தெரியவில்லையே என்று சிலர் இந்த தர்ப்பணத்தைச் செய்யாமல் விட்டு விடுகின்ற நிலை உள்ளது. அதைத்தவிர்க்க ஒர் எளிய தமிழ்க்கூறு உள்ளது.

    தர்ப்பைச் சட்டத்தை அமைத்து அதன்மேல் எள்ளூம் நீரும் விட்டு, விண்ணில் இருக்கும் முன்னோரே....(பெயர்) மண்ணில் வந்து நிற்கும் நீவிர்.... (திதிநாளில்) என்னால் இடப்படும் எள்ளும் நீரும் சேர்ந்திட வேணும் நன்றாய் வாழ வாழ்த்து வீரே-நல்லருள் பெற வேண்டுகிறேன். என்று 16 முறை தர்ப்பணம் இடவேண்டும் உறுதியாக இப்படிச் செய்யப்படும் எளிய தர்ப்பணம் அவர்களைச் சென்றடைந்து அவர்கள் ஆசீர்வாதத்தைப் பெற்றுத்தந்து விடும்.
    பெற்றோருக்கு செய்யும் பித்ரு தர்ப்பண, சிரார்த்தங்களை அண்ணன்-தம்பிகள் தனித்தனியாக செய்யலாமா? அல்லது ஒன்றாக நின்றுதான் செய்ய வேண்டுமா என்ற சந்தேகம் ஏற்படலாம்.
    உலகம் நவீனமாக மாற, மாற அன்பும், அரவணைப்பும் குறைந்து வருகிறது. ஒரு காலத்தில் அண்ணன்-தம்பி என்றால் அப்படி ஒரு அன்யோன்யமாக இருப்பார்கள்.

    ஆனால் இப்போதெல்லாம் அண்ணன்-தம்பி பாசம் என்பது அளவு எடுத்தது போல ஆகி விட்டது. பொது இடங்களில் கூட கடமைக்காக சிலர் அண்ணன் தம்பியாக வந்து நிற்பார்கள்.

    இத்தகைய நிலையில் பெற்றோருக்கு செய்யும் பித்ரு தர்ப்பண, சிரார்த்தங்களை அண்ணன்-தம்பிகள் தனித்தனியாக செய்யலாமா? அல்லது ஒன்றாக நின்றுதான் செய்ய வேண்டுமா என்ற சந்தேகம் ஏற்படலாம்.

    அண்ணன்-தம்பிகள் தனித்தனியாக சிராத்தம், தர்ப்பணம் போன்ற பித்ரு கடமைகளை செய்யலாம். அண்ணன், தம்பிகளில் சிலருக்கு தர்ப்பணம் கொடுக்க வசதி-வாய்ப்பு இல்லாமல் இருக்கலாம்.

    அப்படிப்பட்டவர்கள் யாராவது ஒரு சகோதரருடன் சேர்ந்து கொண்டு அவர் கொடுக்கும் தர்ப்பண பூஜைகளில் கலந்து கொண்டு பலன் பெறலாம். பொதுவாகவே அண்ணன் தம்பிகள் ஒற்றுமையாக இருந்தால்தான் பலம். அவர்கள் ஒன்றிணைந்து கொடுக்கும் தர்ப்பணம், சிரார்த்தத்துக்கு சக்தி அதிகம்.

    பிள்ளைகள் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்றாக நின்று நம்மை நினைத்து வழிபடுகிறார்கள் என்பதைப் பார்க்கும் போது பித்ருக்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி உண்டாகும். அந்த மகிழ்ச்சியில் அளவற்ற பலன்களை நமக்கு தந்து அருள்வார்கள்.

    இவை எதுவுமே செய்ய முடியாதவர்கள் மகாளய அமாவாசை நாட்களில் எக்காரணம் கொண்டும் மறைந்த முன்னோர்களை விமர்சனம் செய்யாமல் அவர்களின் ஆன்ம சாந்திக்கு மானசீக வழிபாடு செய்தாலே பெரும் புண்ணியம் கிட்டும்.
    முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையவும், சாந்தியடைந்த ஆன்மாவிடம் இருந்து ஆசி பெறுவதற்கும் ஒவ்வொரு வரும் தங்கள் ராசிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள எளிய தான தர்மங்களைச் செய்து பித்ருக்களின் நல்லாசியைப் பெறுவது முக்கிய கடமையாகும்.

    மேஷம்:- தந்தை மற்றும் வயது முதிர்ந்த பெரியோர்களின் விருப்பங்களை நிறைவு செய்து நல் ஆசி பெற்றால் கோடி புண்ணியம் தேடி வரும்.

    ரிஷபம்:- முதியவர்களைப் பராமரிக்கும் இல்லங்களுக்கு உணவு, உடை தானம் தர பெரியோர்களின் நல்லாசி கிடைக்கும்.

    மிதுனம் :- நீர்நிலைகளில் உள்ள மீன்களுக்கு அன்னமோ ஒரு படி பொரியோ அர்ப்பணித்தால் கூட அதை முன்னோர்கள் மனமகிழ்வோடு ஏற்றுக் கொள்வார்கள்.

    கடகம்:- விவசாயிகளுக்கு தேவையான விதை, உரம் விவசாய தளவாட பொருட்கள் வாங்கி கொடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தினால் உங்களின் பாவம் நீங்கி அதிர்ஷ்டம் வந்து சேரும்.

    சிம்மம்:- அசைவ உணவை தவிர்த்து சிவாச்சாரியார்களுக்கு உணவு, உடை, ஆடை தானம் தந்து ஆசி பெற்றால் பித்ருக்களின் நல்லாசி கிடைக்கும்.

    கன்னி:-கஷ்டங்களில் இருக்கும் சகோதர, சகோதரிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது முன்னோர்களின் நல்லருளை பெற்றுத்தரும்.

    துலாம் :- துப்புரவு தொழிலாளர்களுக்கு முழுச் சாப்பாடு தண்ணீருடன் தானம் தந்தால் மன நிம்மதி நிலைக்கும், பூர்வ புண்ணிய ஸ்தானம் வலிமை பெறும்.

    விருச்சிகம்:- சிறிது பச்சரிசி, எள்ளு, தினை சேர்த்து மாவாக்கி, நாட்டுச் சர்க்கரை கலந்து எறும்பு புற்றுகளில் தூவ, வாயில்லா ஜீவன்கள் உண்டு மகிழும் போது பல தலைமுறை சாபம் நீங்கி புண்ணிய பலன் அதிகரிக்கும்.

    தனுசு:- குழந்தைகள் காப்பகத்தில் உள்ள பிள்ளைகளுக்கு புத்தாடையுடன் இட்லி,எள்ளு சட்னியுடன் தண்ணீரும் தானம் தந்தால் முன்னோர்களின் நல் ஆசி கிட்டும்.

    மகரம்:- சிவன் கோவில்களுக்கு தீபம் ஏற்ற எண்ணை வாங்கி தந்து பராமரிப்பு இல்லாத கோவில் களுக்கு பராமரிப்பு பணிக்கு உதவினால் கர்ம வினை நீங்கும்

    கும்பம்:- சாலை ஒரங்களில் ஆதரவின்றி அல்லல் படுபவர்களுக்கு பெட்சீட், காலணி கொடுத்து உதவினால் முன்னோர்கள் ஆசி தேடி வரும்.

    மீனம்:-அந்தணர்களுக்கு வஸ்திரத்துடன் பச்சை காய்கறிகள், அரிசி, பருப்பு தானம் தர வினைப்பயன் தீரும்.

    இவை எதுவுமே செய்ய முடியாதவர்கள் மகாளய அமாவாசை நாட்களில் எக்காரணம் கொண்டும் மறைந்த முன்னோர்களை விமர்சனம் செய்யாமல் அவர்களின் ஆன்ம சாந்திக்கு மானசீக வழிபாடு செய்தாலே பெரும் புண்ணியம் கிட்டும். நன்மை தரக்கூடிய தான, தர்மம், பித்ரு காரியங்களை யாரை உத்தேசித்து செய்கிறோமோ அவர்கள் பித்ரு உலகில் இருக்கலாம் அல்லது தேவ உலகில் இருக்கலாம். ஏன் மனித ரூபத்தில் நமக்குப் பக்கத்திலேயே கூட இருக்கலாம்.

    அவர்களின் நிலை தாழ்ந்ததாகவோ, உயர்ந்ததாகவோ இருக்கலாம். நமது முன்னோர்களான அவர்களுக்கு நம்மால் செய்யப்படும் வழிபாடு அவர் உயர்ந்த நிலையில் இருந்தால் ஆசியாக நமக்குக் கிடைக்கும். தாழ்ந்த நிலையில் இருந்தால் அவரின் நிலை உயர உதவும். மறுபிறப்பு எடுத்திருந்தால் அவர்களின் இந்த உலகத் துன்பம் தீர உதவும். அன்று ஒட்டு மொத்த முன்னோர்களையும் நினைவு கூர வேண்டும். நம்பிக்கை இருந்தாலும், இல்லாவிட்டாலும் தன்னை நம்பி வாழும் தனது குடும்பத்தினரின் நன்மையைக் கருதி கட்டாயம் பித்ரு வழிபாட்டை செய்வது நல்லது.

    ஸ்ரீரங்கம் கோவிலில் காலை 6-30 முதல் காலை 7-30 மணி வரையில் விஸ்வரூபத்துக்கும், காலை 9 முதல் பகல் 12 மணி வரையிலும், பகல் 1-15 முதல் பிற்பகல் 3 மணி வரையிலும் பக்தர்கள் மூலஸ்தான தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. நவராத்திரி உற்சவத்தின் முதல் நாளான இன்று பகல் 1-30 மணிக்கு தாயார், மூலஸ்தானத்தில் திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் மாலை 6-30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொலு மண்டபம் சென்றடைகிறார். அங்கு 7-45 மணிக்கு கொலு தொடங்குகிறது. பின்னர் அங்கிருந்து இரவு 9-45 மணிக்குப் புறப்பட்டு இரவு 10 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். காலை 6-30 முதல் 7-30 மணி வரையில் விஸ்வரூபத்துக்கும், காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையில் மூலஸ்தானத்தில் சேவைக்கும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

    இதேபோன்று 7, 11, 13-ந் தேதிகளில் தினந்தோறும் மாலை 5.30 மணிக்கு தாயார், மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொலு மண்டபம் சேருவார். இரவு 7 மணிக்கு கொலு தொடங்கி இரவு 8 மணிக்கு நிறைவடையும். பின்னர் கொலு மண்டபத்திலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.

    இந்த நாட்களில் காலை 6-30 முதல் காலை 7-30 மணி வரையில் விஸ்வரூபத்துக்கும், காலை 9 முதல் பகல் 12 மணி வரையிலும், பகல் 1-15 முதல் பிற்பகல் 3 மணி வரையிலும் பக்தர்கள் மூலஸ்தான தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.

    இதேபோன்று 8-ந்தேதி முதல் 10-ந் தேதி வரை மாலை 5.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து தாயார் புறப்பட்டு கொலு மண்டபம் சேருவார். மாலை 6.15 மணிக்கு கொலு தொடங்கி இரவு 7.15 மணி வரையில் நடைபெறும். இரவு 8 மணிக்கு தாயார் மூலஸ்தானம் சேருவார். இந்த 3 நாட்களும் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதியில்லை.

    7-ந் திருநாளான 12-ந் தேதி ரெங்கநாச்சியார் திருவடி சேவை நடைபெறும். அன்றைய தினம் மாலை 4 மணிக்கு தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 4-45 மணிக்கு கொலு மண்டபம் சேருவார். இரவு 7-30 மணிக்கு கொலு தொடங்கி இரவு 9-30 மணி வரையில் நடைபெறும். இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு தாயார் மூலஸ்தானம் சென்றடைவார். அன்றைய தினம் காலை 6-30 முதல் காலை 7-30 மணி வரையிலும் விஸ்வரூப தரிசனத்துக்கும், காலை 9 முதல் முற்பகல் 11 மணி வரையில் பக்தர்கள் மூலவர் சேவைக்கும் அனுமதிக்கப்படுவர்.

    9-ந் திருநாளான 14-ந் தேதி மாலை 5 மணிக்கு சரஸ்வதி பூஜையையொட்டி தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொலு மண்டபத்தில் மாலை 6.30 மணிக்கு திருமஞ்சனம் கண்டருள்வார். அங்கு அலங்காரம் அமுது செய்யப்பட்டு, இரவு 10.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். அன்றைய தினம் காலை 6.30 முதல் காலை 7.30 மணிக்கு விஸ்வரூபத்துக்கும், காலை 9 முதல் பகல் 12 மணி வரையிலும், பகல் 1.15 முதல் பிற்பகல் 3.30 மணி வரையிலும் பக்தர்கள் மூலவர் தரிசனத்துக்கும் அனுமதிக்கப்படுவர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    திருவிழா நடைபெறும் 12 நாட்களில் நாளை மற்றும் வருகிற 11,12,13,14 ஆகிய 5 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற 7 நாட்களும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
    உடன்குடி

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றதாகும். மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் நடைபெறும் தசரா திருவிழாவுக்கு அடுத்த படியாக இங்குதான் லட்சக்கணக்கில் பக்தர்கள் திரள்வார்கள்.

    இந்த ஆண்டு திருவிழா இன்று காலை 9.30 மணிக்கு கோவில் முன்பு இருக்கும் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு பல்வேறு அபிஷேகங்களுடன் திருவிழா தொடங்கியது.

    கொடியேற்ற நிகழ்ச்சியில் பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. குலசேகரன்பட்டினத்திற்கு முன்னதாகவே போலீசார் தடுப்பு கம்பிகள் அமைத்து யாரும் உள்ளே நுழையாதபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் கொடியேற்ற நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஒரு சிலரே கலந்து கொண்டனர்.

    இதனால் கொடியேற்றம் பக்தர்கள் இல்லாமல் எளிமையாக நடைபெற்றது. எனினும் கொடியேற்ற நிகழ்ச்சிகள் யூ-டியூப்பில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதனை பக்தர்கள் வீட்டில் இருந்தவாறே கண்டு களித்தனர்.

    இன்று இரவு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் எழுந்தருளல் நடக்கிறது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு கோலத்தில், வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி கோவிலில் வலம் வருகிறார்.

    திருவிழா நடைபெறும் 12 நாட்களில் நாளை மற்றும் வருகிற 11,12,13,14 ஆகிய 5 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற 7 நாட்களும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

    முன்னதாக நேற்றிரவு அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. வழக்கமாக பக்தர்கள் பூசாரி கையினால் காப்பு என்ற மஞ்சள் கயிறை கட்டி பின்னர் வேடம் அணிவார்கள். இந்த ஆண்டு தசரா குழுக்களை சேர்ந்தவர்களுக்கு மட்டும் காப்புகள் வழங்கப்படுகிறது.

    விரதம் தொடங்கிய பக்தர்கள் தங்கள் ஊரிலேயே காப்பு கட்டிக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதனால் ஏராளமான கிராமங்களில் தசரா குடில் அமைத்து குலசை முத்தாரம்மன் படம் வைத்து தினசரி பூஜை செய்து வழிபாடு செய்து வருகின்றனர்.

    மாதவன்குறிச்சி தசரா குழுவினர் குடில் அமைத்து வழிபட்ட காட்சி.

    கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திருவிழா கொண்டாடப்படுகிறது. அதன்படி கடற்கரை மற்றும் கோவிலை சுற்றி எந்தவிதமான கலை நிகழ்ச்சிகள், தற்காலிக கடைகள் வைக்க அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் மேள தாளங்களுடன் தசரா பக்தர்கள் கோவிலுக்கு வரக்கூடாது. தேங்காய், பழம், பூ போன்ற அர்ச்சனை பொருட்களை கொண்டு வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 15-ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு நடக்கிறது. வழக்கமாக கடற்கரையில் நடக்கும் இந்த நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள்.

    ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு கடற்கரைக்கு பதிலாக கோவில் முன்பு நடைபெற்றது. இந்த ஆண்டும் 2-வது முறையாக கோவில் முன்பு நடைபெறுகிறது. இதை காண்பதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

    எனினும் இன்றைய கொடியேற்ற நிகழ்ச்சியை போன்று சூரசம்ஹாரம் மற்றும் கொடியிறக்க நிகழ்ச்சியும் பக்தர்கள் வசதிக்காக யூ-டியூப் மூலம் ஒளிபரப்பு செய்யப்படும்.

    மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு வழக்கம் போல் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

    கொரோனா தடை உத்தரவு காரணமாக குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு செல்லும் பிரதான வழியான திருச்செந்தூர்- உடன்குடி வழியாக செல்லும் பாதை மற்றும் உவரி, பெரிய தாழை, மணப்பாடு வழியாக செல்லும் சாலைகளில் பேரி கார்டுகள் வைத்து தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதுவரை, திதி-தர்ப்பணம் செய்யாதவர்களும், பிதுர் தோஷத்துக்கு ஆளானவர்களும் இங்கு வந்து, ‘தோசை’ முதலான உளுந்தால் ஆன உணவைப் படைத்து, அம்மனை வழிபட்டு பலனடையலாம் என்கிறார்கள்.
    நாகப்பட்டினம்-திருவாரூர் பாதையில் நாகையில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வல்லங்குளம் ஸ்ரீமாரியம்மன் திருக்கோவில். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவில் இந்த ஊர் மக்கள் பலரும் கோவிலில் தங்குகின்றனர். மறுநாள் மாரியம்மனை தரிசித்து, வணங்கினால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.

    இங்கே மாரியம்மனை மனதார வேண்டி, உளுந்தாலான பலகாரங்களை அம்மனுக்குப் படைத்து, பக்தர்களுக்கு விநியோகிக்கின்றனர். இதனால் அம்மனின் அருளோடு நம்முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும். இதுவரை, திதி-தர்ப்பணம் செய்யாதவர்களும், பிதுர் தோஷத்துக்கு ஆளானவர்களும் இங்கு வந்து, ‘தோசை’ முதலான உளுந்தால் ஆன உணவைப் படைத்து, அம்மனை வழிபட்டு பலனடையலாம் என்கிறார்கள்.

    இப்படி, இந்த கோவிலின் பரிகார வழிபாடுகள் மட்டுமல்ல மாரியம்மன் இங்கு குடிகொண்ட கதையும் சுவாரஸ்யமானது தான். திருவண்ணாமலையை தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்த வல்லாள மகாராஜாவுக்கு குழந்தை பாக்கியம் வாய்க்கவில்லை. இதனால் வருந்திய மகாராஜா யாகங்கள் நிகழ்த்தி வழிபட்டார். இதன் பலனால் அரசி கருவுற்றாள். ஆனால் விதி வேறுவிதமாக விளையாடியது. ‘இந்த குழந்தை பிறந்தால் நாட்டுக்கு கேடு விளையும்’ என்று ஜோதிடர் எச்சரிக்க, கலங்கிப் போன போன மகாராஜா, செய்வதறியாது குழம்பினார்.

    இறுதியில் நாட்டு மக்களின் நலனே முக்கியம் என்று கருதி மனைவியையும், அவள் கருவில் வளரும் குழந்தையையும் அழிக்கத் திட்டமிட்டார். ஒருநாள் மனைவி அசந்திருந்த வேளையில் அவளை வெட்டுவதற்கு வாளை ஓங்கினார் மகாராஜா. அப்போது, ஆக்ரோஷமாகத் தோன்றினாள் பேச்சாயி அம்மன்.
    மகாராஜாவின் கையில் இருந்த வாளைப் பிடுங்கி எறிந்தாள், அவரைத் தன் காலில் போட்டு மிதித்தாள்.

    அரசியை தன்மடியில் கிடத்தி அவளுக்கு பிரசவம் பார்த்துக் குழந்தையையும், தாயையும் காப்பாற்றினாள், தனது தவறை உணர்ந்த மகாராஜா, பேச்சாயி அம்மனிடம் பாவபரிகாரம் குறித்து வேண்டினார். கீவளூரில் ஒரு குளம் வெட்டி பாவத்துக்குப் பரிகாரம் தேடிக்கொள் என்று கட்டளையிட்டாள் அம்மன். அதன் படியே செய்தார் மகாராஜா. அவரால் உருவாக்கப்பட்ட குளம் தான் ‘வல்லங்குளம்’ எனப்பட்டது.

    காலம் உருண்டோடியது ஏறத்தாழ 500-700 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த குளத்தில் இருந்து அம்மன் சிலை ஒன்றை மக்கள் கண்டெடுத்தனர். பிறகு அவர்கள் ஒரு கோவில் கட்டி அம்மனை பிரதிஷ்டை செய்தனர். வல்லங்குளத்தில் வெளிப்பட்டவள் ஆதலால் இவளுக்கு ஸ்ரீ வல்லங்குளத்து மாரியம்மன் என்று பெயர். பிரதான சாலையின் இடப்புறம் திருக்குளம், வலப்புறம் திருக்கோவில். இப்போது சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. உள்ளே நுழைந்தால், வலப்பக்கம் ஸ்ரீபேச்சாயி அம்மன், பின்புறம் ஸ்ரீசுப்ரமணியர் சந்நதி.

    நுழைவாயிலில் இருந்து அம்மனை நோக்கி காவலாளியின் தோற்றத்தில் அய்யனார் காட்சி தருகிறார். உள்ளே கிழக்கு நோக்கி கருணையே வடிவாகக் காட்சி தருகிறாள் வல்லங்குளத்து மாரியம்மன். சுற்று வட்டார ஊர்களில் எந்த சுபகாரியமாக இருந்தாலும் இந்த மாரியம்மனுக்குத் தான் முதல் தகவல் தெரிவிக்கின்றனர். இந்த பகுதியில், வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும் கீவளூர் அஞ்சு வட்டத்தம்மன் ஆலய திருவிழாவின் போதும், முதலில் வீதி உலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவது ஸ்ரீவல்லங்குளத்து மாரியம்மன் தான்.
    மகாளய அமாவாசையான இன்று ராமேசுவரம் வந்த பக்தர்கள் கோவில், அக்னி தீர்த்த கடல் பகுதிக்கு செல்லாமல் மற்ற கடலோர பகுதிகளுக்கு சென்று நீராடி தர்ப்பணம் கொடுத்தனர்.
    ராமேசுவரம் :

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அமாவாசை மற்றும் முக்கிய நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி மகாளய அமாவாசையான இன்று பக்தர்கள் ராமேசுவரத்திற்கு வருவதை தவிர்க்குமாறும், கோவில்களில் தரிசனம் செய்யவும், அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி தர்ப்பணம் செய்வதற்கு தடை விதிக்கப்படுவதாகவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

    இதன் காரணமாக ராமேசுவரம் கோவில் மற்றும் முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கார், வேன், பஸ்களில் வந்த பயணிகளை திருப்பி அனுப்பினர்.

    அக்னி தீர்த்த கடலுக்கு பக்தர்கள் செல்லாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    ஆனாலும் மகாளய அமாவாசையான இன்று ராமேசுவரம் வந்த பக்தர்கள் கோவில், அக்னி தீர்த்த கடல் பகுதிக்கு செல்லாமல் மற்ற கடலோர பகுதிகளுக்கு சென்று நீராடி தர்ப்பணம் கொடுத்தனர்.

    தடையை மீறி சங்குமால் துறைமுக கடல்பகுதி உள்பட பல்வேறு இடங்களில் புனித நீராடினர். பின்னர் ராமநாதசுவாமி கோவிலில் கிழக்கு கோபுர வாசலில் நுழைவாயில் வெளியில் நின்று கோபுர தரிசனம் செய்தனர். அப்பகுதியில் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

    அக்னிதீர்த்த கடற்கரைக்கு செல்லாமல் இருக்க சாலை அடைக்கப்பட்டு உள்ளதை படத்தில் காணலாம்.

    போலீசாரின் கெடுபிடிகளை மீறி பக்தர்கள் குவிந்து புனித நீராடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டத்தில் உள்ள தாணிப்பாறை மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலிலும் மகாளய அமாவாசையை முன்னிட்டு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இதன் காரணமாக இன்று மலை அடிவாரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். காலை மலை ஏற வந்த பக்தர்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.

    வழக்கமாக மகாளய அமாவாசை நாளில் சதுரகிரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். ஆனால் இந்த ஆண்டு தடை காரணமாக சதுரகிரி வெறிச்சோடி காணப்பட்டது.

    சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் இன்று முதல் 15-ந்தேதி வரை கொண்டாடப்பட உள்ள நவராத்திரி திருவிழாவிற்கும் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

    எனவே பொதுமக்கள் யாரும் சதுரகிரி செல்ல விருதுநகர் மாவட்டத்திலுள்ள தாணிப்பாறை மலை அடிவாரத்திற்கு வரவேண்டாம் என கலெக்டர் மேகநாதரெட்டி கேட்டுக் கொண்டுள்ளார்.

    ×