என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராமேசுவரத்தில் தடையை மீறி புனித நீராடிய பக்தர்கள்
    X
    ராமேசுவரத்தில் தடையை மீறி புனித நீராடிய பக்தர்கள்

    இன்று மகாளய அமாவாசை: ராமேசுவரத்தில் தடையை மீறி புனித நீராடிய பக்தர்கள்

    மகாளய அமாவாசையான இன்று ராமேசுவரம் வந்த பக்தர்கள் கோவில், அக்னி தீர்த்த கடல் பகுதிக்கு செல்லாமல் மற்ற கடலோர பகுதிகளுக்கு சென்று நீராடி தர்ப்பணம் கொடுத்தனர்.
    ராமேசுவரம் :

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அமாவாசை மற்றும் முக்கிய நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி மகாளய அமாவாசையான இன்று பக்தர்கள் ராமேசுவரத்திற்கு வருவதை தவிர்க்குமாறும், கோவில்களில் தரிசனம் செய்யவும், அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி தர்ப்பணம் செய்வதற்கு தடை விதிக்கப்படுவதாகவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

    இதன் காரணமாக ராமேசுவரம் கோவில் மற்றும் முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கார், வேன், பஸ்களில் வந்த பயணிகளை திருப்பி அனுப்பினர்.

    அக்னி தீர்த்த கடலுக்கு பக்தர்கள் செல்லாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    ஆனாலும் மகாளய அமாவாசையான இன்று ராமேசுவரம் வந்த பக்தர்கள் கோவில், அக்னி தீர்த்த கடல் பகுதிக்கு செல்லாமல் மற்ற கடலோர பகுதிகளுக்கு சென்று நீராடி தர்ப்பணம் கொடுத்தனர்.

    தடையை மீறி சங்குமால் துறைமுக கடல்பகுதி உள்பட பல்வேறு இடங்களில் புனித நீராடினர். பின்னர் ராமநாதசுவாமி கோவிலில் கிழக்கு கோபுர வாசலில் நுழைவாயில் வெளியில் நின்று கோபுர தரிசனம் செய்தனர். அப்பகுதியில் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

    அக்னிதீர்த்த கடற்கரைக்கு செல்லாமல் இருக்க சாலை அடைக்கப்பட்டு உள்ளதை படத்தில் காணலாம்.

    போலீசாரின் கெடுபிடிகளை மீறி பக்தர்கள் குவிந்து புனித நீராடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டத்தில் உள்ள தாணிப்பாறை மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலிலும் மகாளய அமாவாசையை முன்னிட்டு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இதன் காரணமாக இன்று மலை அடிவாரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். காலை மலை ஏற வந்த பக்தர்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.

    வழக்கமாக மகாளய அமாவாசை
    நாளில் சதுரகிரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். ஆனால் இந்த ஆண்டு தடை காரணமாக சதுரகிரி வெறிச்சோடி காணப்பட்டது.

    சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் இன்று முதல் 15-ந்தேதி வரை கொண்டாடப்பட உள்ள நவராத்திரி திருவிழாவிற்கும் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

    எனவே பொதுமக்கள் யாரும் சதுரகிரி செல்ல விருதுநகர் மாவட்டத்திலுள்ள தாணிப்பாறை மலை அடிவாரத்திற்கு வரவேண்டாம் என கலெக்டர் மேகநாதரெட்டி கேட்டுக் கொண்டுள்ளார்.

    Next Story
    ×