என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்கா விட்டால் இறைவன் உங்களை மன்னிக்க மாட்டார்” என்ற உண்மையை இயேசு நினைவுறுத்தினார்.
    தான் செய்த தவறுகளை நினைத்து மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்பு வேண்டாத மனிதர் யார்? ஆனால், எப்போது இறைவன் நம்மை மன்னிப்பார்? “மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னித்தால், உங்கள் இறைத்தந்தை உங்களை மன்னிப்பார். மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்கா விட்டால் இறைவன் உங்களை மன்னிக்க மாட்டார்” என்ற உண்மையை இயேசு நினைவுறுத்தினார்.

    ‘இறைவனுக்கு காணிக்கை செலுத்த நீங்கள் ஆலயம் வரும்போது, யாரோ ஒருவர் மீது இன்னும் கோபமோ பகையோ இருந்தால், உங்கள் காணிக்கைகளை அப்படியே ஆலயத்தில் வைத்துவிட்டு, அந்த மனிதரைத் தேடி அவருடன் நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அதன்பின் ஆலயம் வந்து உங்கள் காணிக்கைகளைக் கொடுங்கள்’ என்றார் இயேசு. சக மனிதர் ஒருவரோடு சண்டையிட்டு, இன்னும் சமாதானம்செய்து கொள்ளாத ஒரு நபரின் காணிக்கையை எப்படி ஏற்பார் கடவுள்?

    பரிசு ஒன்றை வாங்கிக்கொண்டு தந்தையின் பிறந்த நாள் அன்று, அதைக் கொடுத்து அவரை வாழ்த்தி, ஆசி பெற வருகிறான் மூத்த மகன். தன் இளைய மகனோடு சண்டையிட்டு அவர்களுக்குள் சமாதானம் இல்லை என்று அறிந்த தந்தை என்ன சொல்வார்? “நீங்கள் இருவரும் என் பிள்ளைகள். நீங்கள் இருவரும் நல்லிணக்கத்தோடு, மாறாத பாசத்தோடு இருந்தால்தான் என் மனம் மகிழ்ச்சியுறும். அந்த மகிழ்ச்சியை முதலில் எனக்குக் கொடு. பிறகு வந்து நீ உன் பரிசைத் தந்தால், நான் மகிழ்ச்சியோடு அதனை ஏற்றுக்கொள்வேன்” என்றுதானே அவர் சொல்வார்?

    எனவே, கோபத்தைக் கட்டுப்படுத்தும் ஞானம், மன்னிக்கும் மனம் இவற்றோடு இறை நம்பிக்கையும் வழிபாடும்கூட பகைமை எனும் கொடிய நஞ்சை நாம் உட்கொண்டு அழிந்துபோகாமல் நம்மைக் காப்பாற்ற முடியும் என விளக்கி மலைப்பொழிவில் வழிகாட்டினார் இயேசு.

    “பகை சூழும் இதயத்துச் சுவரை எல்லாம் - என் பாசத்தால் தகர்க்கின்ற வரம் கேட்கிறேன்” என்று மன்றாடும் ஆலயப் பாடல் ஒன்று உள்ளது. அப்படித்தான் பகை சூழ்ந்திருக்கும் இதயச்சுவரை நாம் அன்பால் தகர்க்க வேண்டும்.
    மார்கழி பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட 18 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரியில் சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு 2 மாதங்களுக்கு பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர். காலை 7 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, மலையேற அனுமதிக்கப்பட்டனர்.

    காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. காலை 10 மணிக்கு வனத்துறை கேட் அடைக்கப்பட்டது.

    மார்கழி பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட 18 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுந்தரமகாலிங்கம் காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    பக்தர்களுக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் பக்தர்கள் வத்திராயிருப்பில் இருந்து தாணிப்பாறை அடிவாரம் பகுதிக்கு செல்ல அவதி அடைந்தனர். வருகிற 19-ந் தேதி வரை பக்தர்கள் சதுரிகிரி கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
    கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக வழக்கமாக கோவிலில் நடைபெறும் தேரோட்டம், கருப்பன் துள்ளல், கலை நிகழ்ச்சிகள், அன்னதானம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தூரத்தில் கேரள மாநிலம் அச்சன்கோவில் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவில்களில் ஒன்றான தர்மசாஸ்தா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மகோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் மாலை ஆபரண பெட்டி கோவிலுக்கு வந்து சேர்ந்தது. அதிலுள்ள விலை உயர்ந்த ஆபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டன. காலையில் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    தொடர்ந்து தங்க கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை நடந்தது. இதனை கோவில் தந்திரி கண்டரரு மோகனரு தலைமையில் அர்ச்சகர்கள் நடத்தினர். தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஆபரண பெட்டி வரவேற்புக்குழு தலைவர் ஏ.சி.எஸ்.ஜி.ஹரிஹரன் மற்றும் தமிழக-கேரள பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக வழக்கமாக கோவிலில் நடைபெறும் தேரோட்டம், கருப்பன் துள்ளல், கலை நிகழ்ச்சிகள், அன்னதானம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோவில் பிரகாரத்திற்குள் நடைபெறும் பூஜைகள் அனைத்தும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பி.கே.லால் செய்துள்ளார்.

    இதனை பழங்காலத்தில் உத்தரங்கம் அல்லது ஆதிரங்கம் என்று அழைத்துள்ளனர். தற்போது இது ‘ஆதி திருவரங்கம்’ என்று வழங்கப்படுகிறது.
    வைணவ சமயத்தினரின் வழிபாட்டு தெய்வமாக இருக்கும், திருமாலுக்கு 108 திவ்ய தேசங்கள் மிகவும் பிரபலமானவையாக இருக்கின்றன. ஆனாலும் அதைவிடவும் சிறப்பு வாய்ந்த, பழமையான ஒரு திருக்கோவில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. விஷ்ணுவின் முதல் அவதாரமான மச்ச அவதாரத்தின் போதே நிறுவப்பட்ட கோவிலாக இந்த ஆலயம் பார்க்கப்படுகிறது. இதனை பழங்காலத்தில் உத்தரங்கம் அல்லது ஆதிரங்கம் என்று அழைத்துள்ளனர். தற்போது இது ‘ஆதி திருவரங்கம்’ என்று வழங்கப் படுகிறது.

    தல வரலாறு

    அசுரா வம்சாவளியைச் சேர்ந்த சோமுகன் என்ற அரக்கன் கடுமையான தவம் செய்ததன் மூலம் அழியாமையையும், பல ஏற்றங்களையும் பெற்றான். ஆணவத்தையும், அசுரர்களைப் போன்ற மிருகத்தனத்தையும் கொண்டிருந்தான். பூமியையும், வானத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து முனிவர்களையும், தேவர்களையும் கீழ்ப் படுத்தி சேவிக்கச் செய்ய விரும்பினான். பூமியையும் வானத்தையும் வென்று முனிவர்களையும் தேவர்களையும் தனது அடிமைகளாக்கி, தனக்குக் கீழ்ப்படியும் படி கட்டளையிட்டான்.

    அவன் பிரம்மாவையும் சிறையில் அடைத்து, அவரிட மிருந்து வேத மந்திரங்களை பறிமுதல் செய்தான். பிரம்மா, தேவர்கள் மற்றும் முனிவர்கள் ஸ்ரீ நாராயணன் (விஷ்ணு) அவர்களிடம் சென்று சோமுகனைக் கட்டுப்படுத்தி தங் களைப் பாதுகாக்கும்படி பிரார்த்தனை செய்தனர். ஸ்ரீ நாராயணன் சோமுகனுடன் சண்டையிடச் சென்றார். அவர் களுக்கு இடையே பயங்கர யுத்தம் வெடித்தது. சோமுகன் தனது மந்திர தந்திரங்கள் அனைத்தையும் இழந்து சோர்வடைந்தான். இனி அங்கேயே தங்கியிருந்தால் தன்னை ஸ்ரீநாராயணன் கொன்று விடுவார் என்று அவன் அஞ்சினான்.

    கடலுக்குள் சென்று தன்னை மறைத்துக்கொண்டான். ஸ்ரீநாராயணன் ‘மத்ஸ்யா’ அவதாரத்தை எடுத்து சோமுகனை அடக்கி வேதங்களை மீட்டெடுத்தார். தேவர்களும் முனிவர்களும் உற்சாகமடைந்து ஸ்ரீ நாராயணனை ஆதி திருவரங்கத்தில் வணங்கினர். இந்த கோவிலில் புரட்டாசி, பவுர்ணமி, வைகுண்ட ஏகாதசி போன்றவை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சனிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

    அமைவிடம்

    திருவண்ணாமலைக்கும், மணலூர்பேட்டிற்கும் இடையில் ஆதி திருவரங்கம் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. மணலூர்பேட்டிலிருந்து மினி பஸ், ஆட்டோ, வேன், பேருந்து மூலம் கோவிலை சென்றடையலாம். திருக்கோவிலூரில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது.
    சபரிமலையில் மண்டல பூஜை நெருங்குவதால், பக்தர்களின் கோரிக்கையினை ஏற்று சாமி தரிசனத்திற்கு கூடுதல் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக கேரள அரசுக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில், கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
    திருவனந்தபுரம் :

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல, மகரவிளக்கு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி கடந்த நவம்பர் மாதம் 15-ந்தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. 16-ந் தேதி முதல் ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    தற்போது ஆன்லைன் முன் பதிவு மூலம் தினசரி 40 ஆயிரம் பக்தர்களும், உடனடி முன் பதிவு அடிப்படையில் 5 ஆயிரம் பக்தர்களும் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த தடைகள் படிப்படியாக தளர்த்தப்பட்டது. அதைத்தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் சன்னிதானத்தில் அறைகளை வாடகைக்கு எடுத்து தங்கவும், கூடாரங்கள் அமைத்து ஓய்வெடுக்கவும், பம்பையில் பக்தர்கள் நீராடவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் வருகிற 26-ந் தேதி சபரிமலையில் மண்டல பூஜை நடைபெறுகிறது. அன்று இரவு 10 மணிக்கு நடைஅடைக்கப்படும். இதையொட்டி முன் பதிவு செய்த பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாத காலத்தில் சபரிமலையில் 6.55 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

    அடுத்தமாதம் 14-ந்தேதி மகரவிளக்கு பூஜை நடக்கிறது. எனவே 14-ந்தேதி வரையிலான ஆன்லைன் முன்பதிவு ஓரளவுக்கு முடிவுக்கு வந்துள்ளதால், கூடுதல் பக்தர்களை சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை வந்தது. அதைத்தொடர்ந்து மண்டல பூஜை நெருங்குவதால், பக்தர்களின் கோரிக்கையினை ஏற்று சாமி தரிசனத்திற்கு கூடுதல் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக கேரள அரசுக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில், கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசுதான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று தேவஸ்தான அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை (சனிக்கிழமை) காலை 8.15 மணிக்கு தொடங்கி மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.22 மணிக்கு நிறைவடைகிறது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்வார்கள். பவுர்ணமி நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை (சனிக்கிழமை) காலை 8.15 மணிக்கு தொடங்கி மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.22 மணிக்கு நிறைவடைகிறது. கொரோனா பரவல் கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் பவுர்ணமியன்று திருவண்ணாமலையில் மலை சுற்றும் பாதையில் பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு அனுமதி கிடையாது. இதன் காரணமாக திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் வர வேண்டாம்.

    தமிழக அரசின் கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், பொதுமக்களை பாதுகாக்கவும் எடுக்கப்பட்டு உள்ள இந்த நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த தகவலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

    திருப்பாவை பாடி மார்கழி நோன்பு இருந்து ரங்கநாதரை ஆண்டாள் திருமணம் செய்து கொண்டாள். ஆண்டாள் இருந்த விரதத்தை இப்போதும் கன்னிப் பெண்கள் அனுஷ்டித்தால் நல்ல கணவர் கிடைப்பார்.
    அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யப்படும் செயல்கள் நல்ல பலன்களைக் கொடுக்கும். மார்கழி மாதம் முழுவதும் இறைவழிபாடு செய்தால் ஒரு வருடம் முழுவதும் இறைவனை வழிபட்ட பலன் கிடைக்கும். திருப்பாவை, திருவெம்பாவை ஓதி வழிபட்டால் நம் பாவங்கள் அழிந்து புண்ணியம் வந்து சேரும்.
    மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசியன்று உண்ணா நோன்பு இருந்து பரமபத வாசல் தரிசனம் செய்தால் எல்லா பலன்களும் கிடைக்கும். அதுபோல திருவாதிரை தினத்தன்று களி நிவேதனம் செய்து நடராஜரை வழிபட்டால் வெற்றி கிடைக்கும். ஆண்டாள் இயற்றிய பிரபந்தங்கள் இரண்டு. ஒன்று திருப்பாவை. மற்றொன்று நாச்சியார் திருமொழி.

    மார்கழி நோன்பு இருக்கும் பெண்கள் அதிகாலையில் பாடுவதற்காக திருப்பாவையை ஆண்டாள் இயற்றினார். திருப்பாவையில் மொத்தம் 30 பாடல்கள். நோன்பு இருந்த ஒவ்வொரு நாளும் ஒரு பாடலாக 30 பாடலை ஆண்டாள் பாடினார். வேதங்களின் முடிவுப் பகுதியாகிய உபநிஷதங்களின் நுட்பமான பொருட்களை திருப்பாவை எடுத்துச் சொல்வதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

    திருப்பாவையில் உள்ள 30 பாடல்களில் முதல் 5 பாடல்கள் மார்கழி நோன்பு பற்றியும், அடுத்த 10 பாடல்கள் தோழிகள் அதிகாலையில் எழுப்பப்படுவது பற்றியும், அதற்கு அடுத்த 10 பாடல்கள் கண்ணனை கண் விழிக்க செய்யும், கடைசி 5 பாடல்கள் பாவை நோன்பு பயன்கள் பற்றியும் சொல்கிறது.
    திருப்பாவையின் 30 பாடல்களையும் கற்பவர்கள் எப்போதும் திருமால் அருளால் பூ உலகிலும், வான் உலகிலும் இன்ப வாழ்க்கை வாழ்வார்கள். எல்லா நலன்களும் கிடைக்கும். அதோடு வாழ்வாங்கு வாழ்ந்து பின்பு மோட்சத்தையும் அடைவார்கள்.

    கன்னிப் பெண்கள் தாங்கள் விரும்பும் கணவனை அடைய நோன்பு இருப்பது வழக்கம். பிரம்ம முகூர்த்தம் எனப்படும் நேரத்தில் (அதிகாலை 4 மணி முதல்) கன்னிப் பெண்கள் தங்கள் தோழியருடன் சென்று குளித்து, நல்ல கணவர் வேண்டும் என்று வழிபடுவதே இந்த நோன்பின் முக்கிய அம்சமாகும். மார்கழி மாதம் 30 நாளும் இந்த நோன்பை கடை பிடிப்பது விசேஷம் என்பதால் இதை மார்கழி நோன்பு, பாவை நோன்பு என்று கூறுகிறார்கள்.

    திருப்பாவை பாடி மார்கழி நோன்பு இருந்து ரங்கநாதரை ஆண்டாள் திருமணம் செய்து கொண்டாள். ஆண்டாள் இருந்த விரதத்தை இப்போதும் கன்னிப் பெண்கள் அனுஷ்டித்தால் நல்ல கணவர் கிடைப்பார்.

    அந்த எளிய பரிகார விரதம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

    கன்னிப் பெண்கள் தினமும் அதிகாலை 4.30 மணிக்கே எழுந்து நீராடி திருப்பாவை படிக்க வேண்டும். மார்கழி முதல் தேதியில் ‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்’ என்ற பாடலை பாட வேண்டும். இப்படி திருப்பாவையின் 30 பாடலையும் பாட வேண்டும். மார்கழியில் 29 நாட்களே இருப்பதால் கடைசி நாள் (மார்கழி 29-ந்தேதி ஜனவரி 13 போகி தினத்தன்று) மட்டும் கடைசி 2 பாடல்களை பாட வேண்டும்.

    நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் தன் திருமணம் எப்படி நடந்தது என்பது பற்றிய கனவை எழுதியுள்ளார். “வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து” என்று தொடங்கும் அந்த பாசுரங்களை மார்கழி மாதம் முழுவதும் பெண்கள் படித்தால் உடனே திருமணம் நடக்கும்.

    வாரணம் ஆயிரம் பாடி முடித்ததும் பெருமாள், ஆண்டாள் படம் மீது பூ தூவி வழிபட வேண்டும். இதனால் ஆண்டாள் மனம் மகிழ்ந்து நல்ல கணவர் கிடைக்க அருள்வாள். திருமணத் தடைகள் இருந்தால் விலகி விடும்.

    கன்னிப் பெண்கள் மார்கழி அதிகாலையில் தங்கள் தோழிகளை எழுப்பி குளித்து விட்டு சிவவழிபாட்டுக்கு செல்வதாக திருவெம்பாவை பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன.
    மார்கழி மாதம் சிவன் கோவில்களில் திருவெம்பாவை பாடப்படுகிறது. திருவெம்பாவை 20 பாடல்கள் கொண்டது. இதைத் தொடர்ந்து திருப்பள்ளி எழுச்சியில் உள்ள 10 பாடல்கள் பாடப்படுகிறது.

    திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி இரண்டையும் 10-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மாணிக்கவாசகர் இயற்றினார். திருவெம்பாவையை அவர் இயற்றி அருளிய இடம் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருக்கிறது. கன்னிப் பெண்கள் மார்கழி அதிகாலையில் தங்கள் தோழிகளை எழுப்பி குளித்து விட்டு சிவவழிபாட்டுக்கு செல்வதாக திருவெம்பாவை பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன.

    ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை
    யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கள்
    மாதே! வளருதியோ?

    -என்ற திருவெம்பாவையின் முதல் பாடலிலேயே தோழிகள் துயில் எழுப்பப்படுவதை காண லாம். திருவாசகத்தில் மிகச் சிறந்த பகுதிகளில் ஒன்றாக திருவெம்பாவை கருதப்படுகிறது. மோட்ச நிலைக்கு செல்ல விரும்பு பவர்கள் திருவெம்பாவை பாடல்கள் மூலம் வேண்டு கிறார்கள். மார்கழி மாதம் வீட்டில் திருவெம்பாவை படித்தால் திருமண தடைகள் விலகும்.

    மார்கழி மாதம் அதிகாலையில் பனி பெய்யும். கடும் குளிர் இருக்கும். அதுவும் குறிப்பாக பிரம்ம முகூர்த்த நேரம் என்று கூறப்படும் அதிகாலை 3 மணி முதல் 5.45 மணி வரை ‘ஜில்’லென்று இருக்கும். இந்த பிரம்ம முகூர்த்த நேரம் தான் பரிசுத்தமான பஞ்சுபூத வாயுசக்தி நிறைந்த நேரமாகும். (இப்போது ஓசோன் சக்தி என்கிறார்கள்) பிரம்ம முகூர்த்த நேரத்தில் நாள், நட்சத்திரம் பார்க்காமல் நல்ல காரியங்கள் செய்யலாம்.

    வியாழக்கிழமைகளில் மஞ்சள் பூ, அட்சதை கொண்டு சிவனை அஷ்டோத்திரம் சொல்லி வழிபட்டால் சுப பலன்கள் கிடைக்கும். நல்ல ஞானம், செல்வ சேர்க்கை உண்டாகும். மார்கழி மாதம் பொதுவாக மனிதர்களின் ரத்த ஓட்டத்தில் மாறுபாடு ஏற்படும். இதனால் அறியாமலே சோம்பல் வந்து விடும். பிரம்ம முகூர்த்த நேரத்தில் குளிர்ந்த நீரில் நீராடி, நடந்து விட்டு வந்தால் ரத்த ஓட்டம் சீராகும். நரம்புகள் தூண்டப்பட்டு உடல் புத்துணர்ச்சி பெறும். அனைத்துக்கும் மேலாக மனம் குழப்பத்தில் இருந்து அமைதி பெறும். அதுபோல மாலை 4 மணி முதல் 5.45 மணி வரையிலான நேரத்தை “கோதூவி” என்கிறார்கள். இந்த சமயத்தில் சூரிய அஸ்தமனத்தை பார்த்து விட்டு சிவனை வணங் கினால் அளவிடற் கரிய பலன்கள் கிடைக்கும்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் அதிகாலை சுப்ரபாதம் பாடி ஏழுமலையானை துயில் எழுப்புவது வழக்கம். ஆனால் மார்கழி மாதம் மட்டும் சுப்ரபாத சேவைக்கு பதிலாக ஆண்டாள் திருப்பாவை பாடப்படும்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 18-ந்தேதி முதல் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை, அபிஷேகம், கல்யாண உற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள் நிறுத்தப்பட்டது.

    ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகள் பதிவு செய்த பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தொற்று பரவல் குறைந்ததால் கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம் உள்ளிட்ட சேவைகள் ஆன்லைனில் நடத்தப்பட்டது.

    இந்த சேவைகளில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. படிப்படியாக தொற்று குறைந்ததால் பக்தர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கப் பட்டது. தற்போது தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    அடுத்த மாதம் பொங்கல் பண்டிகையில் இருந்து அனைத்து ஆர்ஜித சேவைகளிலும் பக்தர்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து மத்திய மாநில அரசுகளிடம் தேவஸ்தனம் சார்பில் அனுமதி கேட்கப் பட்டுள்ளதாக தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்தார்.

    இந்த நிலையில் மார்கழி மாத பிறப்பையொட்டி திருப்பதி கோவிலில் இன்று முதல் சுப்ரபாத சேவைக்கு பதிலாக திருப்பாவை பாடப்படுகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் அதிகாலை சுப்ரபாதம் பாடி ஏழுமலையானை துயில் எழுப்புவது வழக்கம். ஆனால் மார்கழி மாதம் மட்டும் சுப்ரபாத சேவைக்கு பதிலாக ஆண்டாள் திருப்பாவை பாடப்படும். மார்கழி மாதம் பிறந்ததையொட்டி இன்று அதிகாலை ஏழுமலையானுக்கு ஆண்டாள் திருப்பாவை பாடப்பட்டது. மார்கழி மாதம் முழுவதும் ஆண்டாள் திருப்பாவையே பாடப்படும். தை மாதத்தில் இருந்து வழக்கம்போல் சுப்ரபாத சேவை நடக்கும்.

    திருப்பதியில் நேற்று 33,898 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 17,345 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ. 3.15 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
    மார்கழி மாதத்தையொட்டி இன்று காலை ஏராளமான பக்தர்கள் வீரராகவர் கோவில் திரண்டனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.
    திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. திருவள்ளூர், காஞ்சீபுரம், சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து மூலவரை தரிசனம் செய்த பின் ஆண்டாள் சன்னதியில் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி செல்வர்.

    இந்தநிலையில் இன்று மார்கழி மாதம் பிறந்து உள்ளது. இதை முன்னிட்டு வழக்கமாக நடை திறக்கும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தினந்தோறும் காலை 6 மணிக்கு நடைதிறக்கப்படும். தற்போது காலை 5 மணிக்கே நடை திறக்கப்படும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து இன்று முதல் ஜனவரி மாதம் 12&ந் தேதி வரை காலை 5 மணி முதல் 6 மணி, 7 முதல் 8 மணி, 9 மணி முதல் 12 வரையிலும், மாலை 4.30 மணி முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

    இந்த நேரத்தில் பக்தர்கள் கோவிலுக்கு வந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். மார்கழி மாதத்தையொட்டி இன்று காலை ஏராளமான பக்தர்கள் வீரராகவர் கோவில்  திரண்டனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.

    பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமிதரிசனம் செய்தனர். பெண் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
    பௌர்ணமியன்று மாலை 6.00 மணியளவில் அம்பாளுக்கு நடைபெறும் அபிஷேகம் பக்தர்களின் வாழ்கையை மேன்மை அடைய செய்யும் என்பது சான்றோர் வாக்கு.
    தலச்சிறப்பு :

    சோழ மன்னர்களால் வழிபட்ட தெய்வம் வெக்காளி. இத்தலத்தில் பக்தர்கள் தங்களது கோரிக்கைகளை ஒரு சீட்டில் எழுதி அம்பாளின் பாதத்தில் வைத்து பின்னர் அம்மன் சன்னதியில் உள்ள சூலத்தில் கட்டி வைப்பது வழக்கம். பக்தர்களின் கோரிக்கையை அம்பாளின் திருவருளால் நிறைவேறிய பின்னர் இத்தலத்திற்கு வந்து பிராத்தனையை செலுத்துவது கண்கூடு. இத்தலத்தில் வீற்றிருக்கும் வெக்காளியம்மனுக்கு விமானம் கிடையாது.

    வெயிலிலும் மலையிலும் நனைந்து "இப்படி தான் இருப்பேன்"என்று அருள்பாலித்து வருகிறார். பிரதி பௌர்ணமியன்று மாலை 6.00 மணியளவில் அம்பாளுக்கு நடைபெறும் அபிஷேகம் பக்தர்களின் வாழ்கையை மேன்மை அடைய செய்யும் என்பது சான்றோர்வாக்கு.

    தலவரலாறு :

    ஊர்களை அமைக்கும்போது ஊர்க்காவல் தெய்வங்களை ஊர்களின் எல்லையில் எழுந்தருளச் செய்வதும், வீரமும், வெற்றியளிக்கும் தெய்வங்களையும் வடக்கு நோக்கி அமைப்பார்கள். அதன்படி ஊர் எல்லையிலும், வடக்கு நோக்கியும் அமைந்துள்ளது உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில்.இக்கோயில் அமைந்துள்ளதற்கு மற்றொரு காரணம் கூறப்படுகிறது.

    உறையூரில் வன்பராந்தகன் என்னும் அரசன், தனது மனைவி புவனமாதேவியுடன் ஆட்சி செய்த காலத்தில், சாரமாமுனிவர் என்பவர் நந்தவனம் அமைத்து பல்வகை மலர்ச்செடிகளையும் பயிரிட்டு, மலர் கொய்து தொடுத்துத் தாயுமானசுவாமிக்கு அணிவித்து அழகு பார்த்துக் கொண்டிருந்தார்.

    இந்தநிலையில், பிராந்தகன் என்னும் பூ வணிகண் அரசரிடம் ஆதரவு பெற எண்ணி, நந்தவனத்து மலர்களைப் பறித்து அரசர்க்கு அளிக்கத் தொடங்கினான், அரசரும் உயர்வான மலர்களைக் கண்டு உளம் களித்து, தாயுமானவருக்கு மட்டுமே அணிவிப்பதற்கென சாரமாமுனிவர் அமைத்த நந்தவனத்து மலர்கள் என்று அறிந்தும்கூட, தவறான ஆசையால் வணிகனிடம் நாளும் மலர்களைப் பறித்துவர ஆணையிட்டான்.

    நந்தவனத்தில் நாளும் மலர்கள் குறைவதைக் கண்ட சாரமாமுனிவர், ஒருநாள் வணிகன் மலர் கொய்யும் போது பிடித்துவிட்டார். தாயுமானவருக்குரிய மலர்கள் அரசனுக்கு செல்வதைக் கண்டு சினந்து மன்னரிடம் முறையிட்டார். மன்னனோ முனிவரை அலட்சியம் செய்து மலர் வணிகனது செயலை ஊக்குவிக்க, மனம் நொந்து முனிவர் தாயுமானவரிடமே முறையிட்டார்.

    தனக்குச் செய்யும் குறைகளைக் கூட தாங்கிக் கொள்ளும் இறைவன், அடியார்க்குச் செய்கின்ற இடர்களைத் தாங்குவதில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், மேற்கு முகமாக திரும்பி உறையூரை நோக்கியதால், மண்மாரி பொழியத் தொடங்கியது. இதனால் ஊரை மண் மூடியது.

    மக்கள் தங்களைக் காக்க எல்லைத் தெய்வமாக விளங்கிய வெக்காளி அம்மனை விட்டால் வேறுவழியில்லை என்று ஓலமிட்டுச் சரண் அடைந்தனர்.அன்னை இறைவனை வேண்டினாள். மண் மாரி நின்றது. ஆனாலும், மக்கள் வீடிழந்தனர். வெட்ட வெளியே தங்குமிடமானது. மக்கள் துயர்கண்டு அன்னை வெக்காளியம்மன், உங்கள் அனைவருக்கும் வீடு கிடைக்கும் வரை நானும் உங்களைப் போல வெட்ட வெளியிலேயே இருக்கிறேன் என்று அருளியதாக வரலாறு கூறுகிறது.

    இன்றைக்கும் பலர் வெட்ட வெளியே வீடாகக் கொண்டிருக்கின்றனர். அன்னையின் உறுதிமொழி நிறைவேறாததால் இன்றைக்கும் அருள்மிகு வெக்காளியம்மன் வானமே கூரையாகக் கொண்டு அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.

    நடைதிறப்பு :

    காலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணிவரை.

    திருவிழாக்கள் :

    சித்திரை - ஐந்துநாட்கள்திருவிழா, வைகாசி – கடைசி வெள்ளி " மாம்பழஅபிஷேகம்" , ஆனி – கடைசி வெள்ளி காய்கனிகள் அலங்காரவழிபாடு.ஆடி – அனைத்து வெள்ளிகளும் சிறப்புவழிபாடு. ஆவணி - "சண்டிஹோமம்". புரட்டாசி - நவராத்திரிவிழா. கார்த்திகை - தீபம்.

    தை – பொங்கல் சிறப்பு வழிபாடு, தைப்பூசம் புறப்பாடு. மாசி – கடைசி ஞாயிறு "லட்சார்ச்சனை". பங்குனி – முதல் வெள்ளியில் பூச்சொரிதல் விழா.

    கோயில் முகவரி :

    அருள்மிகு உறையூர் வெக்காளியம்மன் திருக்கோவில்.
    உறையூர், திருச்சி-620003.

    விடிய விடிய நடந்த இந்த விழாவின்போது ஆண்டாள், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி ஆகியோர் பகல் பத்து மண்டபத்தில் எழுந்தருளினர்.
    ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலுக்கு தினமும் எண்ணற்ற பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்தநிலையில் கார்த்திகை மாதத்தையொட்டி ஆண்டாள் கோவிலில் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதேபோல இந்த கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கவுசிக ஏகாதசி விழா நடைபெறும்.

    அதன்படி நேற்று இரவு இந்த விழா நடைபெற்றது.

    இரவில் விடிய விடிய நடந்த இந்த விழாவின்போது ஆண்டாள், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி ஆகியோர் பகல் பத்து மண்டபத்தில் எழுந்தருளினர். அப்போது 108 பட்டுப்புடவைகளை சாற்றும் வைபவம் நடைபெற்றது. குளிர்காலம் தொடங்குவதின் முன்னோட்டமாக இந்த விழா நடைபெறுகிறது.

    இந்த விழாவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர். நேற்று காலை திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    ×