என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    பஜனைக் குழுவினர் இசை வாத்தியங்களை முழங்கியபடி தெருத்தெருவாக சென்று பக்தி பாடல்களை பாடி சென்றனர். பின்னர் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
    மாதங்களில் மார்கழி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த மாதம் தெய்வ தரிசனத்திற்கு உகந்த மாதமாக போற்றப்படுகிறது.

    திருமணமாகாத இளைஞர்கள், இளம்பெண்கள் மார்கழி மாதம் அதிகாலை நேரம் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் திருமணம் விரைவில் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த ஆண்டுக்கான மார்கழி மாதம் இன்று பிறந்தது.

    இதனை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் இன்று அதிகாலையில் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    இதில் திரளான உள்ளூர், வெளியூர் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    உண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு திருவெம்பாவை விளக்க உரை சமயச் சொற்பொழிவு நடைபெற்றது. நல்லாசிரியர் சீனிவாச வரதன் சொற்பொழிவாற்றினார். அதனை பக்தர்கள் ஆர்வமுடன் கேட்டனர்.

    பஜனை பாடி வந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

    மேலும் திருவண்ணாமலையில் வீடுகள் தோறும் பெண்கள் அழகிய கோலங்களை போட்டு மார்கழி மாதத்தை வரவேற்று இருந்தனர். பஜனைக் குழுவினர் இசை வாத்தியங்களை முழங்கியபடி தெருத்தெருவாக சென்று பக்தி பாடல்களை பாடி சென்றனர். பின்னர் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

    மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு திருவண்ணாமலை பூத நாராயண பெருமாள் உள்ளிட்ட பெருமாள் கோவில்களிலும் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அங்கும் பக்தர்கள் திரளாக சென்று வழிபட்டனர்.

    இன்று அனைத்து பக்தர்களும் கோவிலுக்கு சென்று வந்ததால் மிகவும் மனநிறைவுடன் மகிழ்ச்சியாக காணப்பட்டனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள இந்துக் கோவில்களில் மார்கழி மாத சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன திருவண்ணாமலையை அடுத்த பர்வதமலையில் மார்கழி உற்சவத்தை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இன்று அனுமதிக்கப்படவில்லை. இருந்தபோதிலும் அங்கு சென்ற பக்தர்கள் மலைகோவிலை பார்த்து வணங்கி விட்டு சென்றனர். பர்வதமலை வந்த பக்தர்களுக்கு காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகர சுவாமிகள் பக்தர்கள் அன்னதானம் வழங்கினர்.

    பெண்கள் மார்கழி மாதம் முழுவதும் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை சொல்லிக் கொண்டே கோலம் போட்டால் வறுமை நீங்கி வளம் சேரும்.
    பெண்கள் சுலோகம் சொல்லிக் கொண்டே கோலம் போட்டால் வறுமை நீங்கி வளம் சேரும். இதோ அந்த சுலோகம்:

    கங்கை நீரே கோதாவரியே
    குளம்படி சாணமே
    அள்ளித் தெளிக்கிறேன்.
    ஐஸ்வர்யம் உண்டாக வேணும்
    கரைத்துத் தெளிக்கிறேன்
    கைலாசம் காணவேணும்
    இருளோடு போகட்டும் மூதேவி
    பொருளோடு வரணும் ஸ்ரீதேவி.
    திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று (வியாழக்கிழமை) முதல் அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் வனப்பகுதிக்கு சுற்றுலா செல்லவும் தடை நீக்கப்பட்டு உள்ளது.
    நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்திப்பெற்ற திருமலை நம்பி கோவில் உள்ளது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்த கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. இந்த கோவிலுக்கு சனி மற்றும் மாத கடைசி சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 16-ந்தேதி பெய்த கனமழை காரணமாக நம்பியாற்றில் வெள்ளப்ெபருக்கு ஏற்பட்டது. இதனால் திருமலைநம்பி கோவிலுக்கு சென்ற பக்தர்கள் திரும்பி வர முடியாமல் தவித்தனர். பின்னர் அவர்கள் கயிறு கட்டி மீட்கப்பட்டனர். தொடர்ந்து வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால், அந்த பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மழை பெய்து வந்தது. இதனால் திருமலை நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர்.

    இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி பக்தர்கள் திருமலை நம்பி கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கக்கோரி, வனத்துறை சோதனை சாவடி முன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று (வியாழக்கிழமை) முதல் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் கூறுகையில், ‘இன்று முதல் திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல வழிகாட்டு நெறிமுறைகளுடன் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. திருக்குறுங்குடி வனப்பகுதிக்கு சுற்றுலா செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்படுகிறது’ என்றார்.
    இயேசுவின் சிலுவைச் சாவே நமக்கு மீட்பு அளித்து, நாம் நிலை வாழ்வு பெறக்காரணமாக அமைந்தது என்பதே திருத்தூதர்களின் போதனையாக இருந்தது.
    இயேசு வாழ்ந்த காலத்தில் இருந்த யூதர்களில் சிலர் அவரை இறைவாக்கினராக பார்த்தனர். ஆனால், யூத சமயத்தலைவர்கள் அவரை ஒரு சமூக விரோதியாகவும், கடவுளை நிந்திப்பவராகவும் பார்த்தனர்.

    அவர்கள், “எங்கள் சட்டத்தின்படி இவன் சாக வேண்டும். ஏனெனில், இவன் தன்னை ‘இறைமகன்’ என உரிமை கொண்டாடுகிறான்” (யோவான் 19:7) என்று கூறி இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றனர்.

    இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை அனுபவமாக உணர்ந்த சீடர்கள் அனைவரும் அவரை மனிதராய் வந்த கடவுளாகவே கண்டனர். சீடர்கள் பெற்ற உயிர்ப்பின் அனுபவம் “இயேசுவே கடவுள்” என்று உலகம் முழுவதும் சென்று பறைசாற்றுமாறு அவர்களைத் தூண்டியது.

    ஆனால் கிறிஸ்தவத்தின் வளர்ச்சி கண்டு மனம் வெதும்பிய சிலர், “இயேசு வெறும் மனிதர் மட்டுமே” என்று கூறி வந்தனர். இதற்கு பதில் கொடுக்க முயன்ற சிலர், “இயேசு மனிதரல்ல, அவர் கடவுள் மட்டுமே” என்று எதிர்வாதம் செய்தனர்.

    இத்தகைய முரண்பாடுகள், இயேசு கிறிஸ்துவைப் பற்றிய தவறான புரிதலுக்கு இட்டுச்சென்றன. ‘இயேசு கடவுள் மட்டுமே’ என்று போதித்தவர்கள், “அவர் உண்மையாகவே மனிதராக பிறக்கவில்லை, அவரது உடல் வெறும் மாயத்தோற்றமே” எனக் கூறினர். மேலும், “இயேசுவுக்கு உடல் இல்லை என்பதால், அவர் உண்மையாகவே சிலுவையில் அறைந்து கொல்லப்படவில்லை” என்ற குழப்பமான கருத்துக்களை வெளியிட்டனர்.

    கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய இந்த தவறான கொள்கை ‘தோற்றத் தப்பறை’ என்று அழைக்கப்படுகிறது.

    இந்த தப்பறைக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாகவே, “இயேசு கிறிஸ்து மனிதராக வந்தவர் என்னும் உண்மையை ஏற்றுக்கொள்ளும் தூண்டுதல் அனைத்தும் கடவுளிடம் இருந்து வருவது. இவ்வாறு கடவுளிடம் இருந்து வரும் தூண்டுதல் எதுவென அறிந்து கொள்வீர்கள். இயேசுவை ஏற்று அறிக்கையிட மறுக்கும் தூண்டுதல் எதுவும் கடவுளிடம் இருந்து வருவதல்ல” (1 யோவான் 4:2,3) என்று யோவான் எழுதுகிறார்.

    தொடர்ந்து அவர், “நாம் கடவுள்மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்பு கொண்டு, தம் மகனை நம் பாவங்களுக்குப் பரிகாரமாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது” (1 யோவான் 4:10) என்று விளக்குகிறார்.

    இவ்வாறு, இயேசுவின் சிலுவைச் சாவே நமக்கு மீட்பு அளித்து, நாம் நிலை வாழ்வு பெறக்காரணமாக அமைந்தது என்பதே திருத்தூதர்களின் போதனையாக இருந்தது.

    நமது மீட்புக்காக இறை மகன் இயேசு சிலுவையில் இறந்து உயிர்த்தெழ ஓர் உடல் தேவைப்பட்டது. ஆகவே, அவர் தூய ஆவியின் வல்லமையால் கன்னி மரியாவின் வயிற்றில் கருவாகி மனிதராகப் பிறந்தார். இயேசு தமது இறைத்தன்மையை இழக்காமல், மனித உருவில் தோன்றி நம்மோடு வாழ்ந்தார் என்பதே உண்மை. ஆபிரகாமுக்கும் தாவீதுக்கும் கடவுள் வாக்களித்தபடி, அவர்களது வழிமரபிலேயே இயேசு கிறிஸ்து தோன்றினார்.

    மனிதர்களை மீட்க மனிதராய் பிறந்து வாழ்ந்ததால், அவர் தம்மை ‘மானிட மகன்’ என்று அடிக்கடி அழைத்துக் கொண்டார். கடவுள் தம் உருவிலும் சாயலிலும் மனிதரைப் படைத்தார் என்று தொடக்க நூலில் (1:27) வாசிக்கிறோம். அந்த உண்மையான கடவுளின் உருவமாகிய இயேசு மனித உருவில் தோன்றியபோது, இறைவாக்கு களின் நிறைவைச் சுட்டிக்காட்டத் தம்மை ‘மானிட மகன்’ என்று வெளிப்படுத்தினார்.

    இயேசு ‘மானிட மகன்’ என தம்மைப் பற்றிக் கூறுவதால், அவர் இறைத்தன்மையை இழந்துவிட்டார் என்று கருதக் கூடாது. “மானிட மகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வானதூதர்களுடன் வரப்போகிறார். அப்பொழுது ஒவ் வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்ப கைம்மாறு அளிப்பார்” (மத்தேயு 16:27) என்று இயேசு கூறுவதில் இருந்தே அவரது இறை மாட்சியைக் கண்டுணர முடிகிறது. இயேசுவின் மனித உருவிலேயே, மனிதருக்கான மீட்புத் திட்டம் நிறைவேறுவது தந்தையாம் கடவுளின் விருப்பமாக இருந்தது.

    இயேசுவின் செயல்பாட்டை யூதர்கள் விமர்சனம் செய்தது குறித்து அவர் பின்வருமாறு கூறினார்: “மானிட மகன் வந்துள்ளார். அவர் உண்கிறார், குடிக்கிறார். நீங்களோ, ‘இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுவோருக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்கிறீர்கள்” (லூக்கா 7:34).

    மேலும் இயேசு, “மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித்தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்” (லூக்கா 9:22) என்று சொன்னார்.

    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் முன்பே, பேதுரு, யாக்கோபு, யோவான் என்ற மூன்று சீடர்களுக்கு தமது இறை மாட்சியை வெளிப்படுத்தும் வகையில் ஒரு மலைமீது அவர்கள் முன்பாக தோற்றம் மாறினார். அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்த போது அவர், “மானிட மகன் இறந்து உயிர்த்தெழும் வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக் கூடாது” (மாற்கு 9:9) என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். இயேசு தமது சிலுவைச் சாவு நெருங்கியதை உணர்ந்து, “மானிட மகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது” (யோவான் 12:23) என்று கூறியதைக் காண்கிறோம்.

    மேலும் தீர்ப்பு நாள் பற்றி அவர் பேசும்போது, “மானிட மகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வான மேகங்கள்மீது வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன்” (மத்தேயு 26:64) என்றார். “என்னையும் என் வார்த்தைகளையும் குறித்து வெட்கப்படும் ஒவ்வொருவரைப் பற்றியும் மானிட மகன் தமக்கும் தந்தைக்கும் உரிய மாட்சியோடு வரும்போது வெட்கப்படுவார்” (லூக்கா 9:26) என்றும் இயேசு எச்சரிக்கிறார்.

    இயேசு கடவுளா, மனிதரா என்பதை புரிந்து கொள்வதில் கிறிஸ்தவத்தின் தொடக்க காலத்திலேயே பல்வேறு குழப்பங்கள் இருந்தன. இதற்கு பதிலளித்த திருச்சபைத் தந்தையர், இயேசு முழுமையாக கடவுளாகவும் முழுமையான மனிதராகவும் திகழ்கிறார் என்று கூறினர். இயேசுவின் இறைத்தன்மையும் மனிதத்தன்மையும், ஒன்றுடன் மற்றது கலக்காமலும் ஒன்று மற்றதிலிருந்து பிரியாமலும் இருக்கின்றன. ஆகவே, மனித்தன்மை கொண்ட இறைமகனாகவும், இறைத்தன்மை துலங்கும் மானிட மகனாகவும் இயேசு கிறிஸ்து இருக்கிறார் என நம்புகிறோம்.

     - டே. ஆக்னல் ஜோஸ், சென்னை.  

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழாவையொட்டி கருட தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பரத நாட்டியம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    5-ம் திருவிழாவான நேற்று அதிகாலையில் கருட தரிசன நிகழ்ச்சி நடந்தது. இதனையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவிலில் இருந்து ரிஷப வாகனத்தில் உமாமகேசுவரர், அன்ன வாகனத்தில் அறம் வளர்த்த நாயகி அம்மன், கருட வாகனத்தில் பெருமாள் ஆகியோர் வந்தனர்.

    அப்போது அவர்களுடன் வேளிமலை முருகன், மருங்கூர் சுப்பிரமணிய சாமியும், விநாயகரும் இணைந்து கொண்டனர். பின்னர் அனைவரும் கோவிலை வலம் வந்தனர். பிறகு வீரமார்த்தாண்ட கோவில் முன் மேற்கு நோக்கி உமாமகேஸ்வரர், பெருமாள், அறம்வளர்த்த நாயகி அம்மன் ஆகிய 3 பேரும் நின்றனர்.

    அப்போது அத்திரி முனிவரும், அனுசுயா தேவியும் வானத்தில் கருட வடிவில் வந்து தாணுமாலயசாமியை வணங்கினர். இந்த கருட தரிசன நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் பார்த்து வணங்கினர்.

    விழாவில் வருகிற 19 -ந் தேதி காலை 7.30 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது. இதில் சாமி தேர், அம்மன் தேர், விநாயகர் தேர் ஆகிய 3 தேர்கள் உலா வருகின்றன. அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுத்து வருவர். அன்று நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண நிகழ்ச்சியும், மறுநாள் அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது.

    திருவிழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் கண்காணிப்பாளர் செந்தில்குமார், மேலாளர். ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன், சுசீந்திரம் தெய்வீக இயல், இசை, நாடகச் சங்கம் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்துள்ளனர்.
    வருடத்திற்கு ஒரு முறை சந்தனம் களையும் விழாவின்போது மரகத நடராஜர் சிலை மீது பூசப்பட்ட சந்தனம் 19-ந்தேதி காலை 9 மணிக்கு களையப்பட்டு, பொதுமக்கள் தரிசனத்திற்காக வைக்கப்படும்.
    திருஉத்தரகோச மங்கை மங்களநாதசுவாமி கோவிலில் சிறப்பு வாய்ந்த மரகத நடராஜர் சிலை உள்ளது. இந்த கோவிலில் வரும் 19 மற்றும் 20 ஆகிய தினங்களில் ஆருத்ரா தரிசன விழா நடைபெறுகிறது.

    வருடத்திற்கு ஒரு முறை சந்தனம் களையும் விழாவின்போது மரகத நடராஜர் சிலை மீது பூசப்பட்ட சந்தனம் 19-ந்தேதி காலை 9 மணிக்கு களையப்பட்டு, பொதுமக்கள் தரிசனத்திற்காக வைக்கப்படும். அதைத்தொடர்ந்து இரவு முழுவதும் பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று மறுநாள்(20-ந்தேதி) அதிகாலை சிலை மீது மீண்டும் சந்தனம் பூசப்படும்.

    கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இத்திருவிழாவில் கலந்து கொள்வதற்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வெளியூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் திருஉத்தரகோசமங்கை ஆருத்ரா தரிசன விழாவிற்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கோவில் வளாகத்தில் கூட்ட நேரிசல் ஏற்படாத வகையில் போதிய பேரிகாட் தடுப்புகள் அமைத்திடவும், தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பொது மக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பறை வசதிகள் ஏற்படுத்திடவும், குப்பைகள் தேங்காத வகையில் சுற்றுப்புற சுகாதார தூய்மை பணிகளை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவசர சூழ்நிலைகளை எதிர்கொள்ள ஏதுவாக தயார் நிலையில் மருத்துவக் குழுக்கள் அமைத்திடவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்திடவும் சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    திருப்பாவையின் 30 பாடல்களையும் கற்பவர்கள் எப்போதும் திருமால் அருளால் பூ உலகிலும், வான் உலகிலும் இன்ப வாழ்க்கை வாழ்வார்கள். எல்லா நலன்களும் கிடைக்கும்.
    இன்று மார்கழி மாதம் பிறந்தது. நமது ஒரு வருஷம் தேவர்களுக்கு ஒரு நாளாகும். அந்த வகையில் மார்கழி மாதமானது தேவர்களுக்கு விடியற்காலை நேரம். அதாவது சூரியன் உதிப்பதற்கு முன்புள்ள 2 நாழிகை நேரமே தேவர்களின் விடியற்காலமாக கருதப்படுகிறது. இந்த 2 நாழிகை நேரத்தை பிரம்ம முகூர்த்த நேரம் என்பார்கள். இந்த நேரத்தில் தான் தேவர்கள் கோவிலுக்குச் சென்று திருப்பள்ளி எழுச்சி சொல்வார்கள். இறைவன் கண் விழித்ததும் முதல் ஆராதனையை செய்வார்கள்.

    அந்த சமயத்தில் நாமும் வழிபாடு நடத்தினால் பகவானின் அருளை மிகச் சுலபமாக பெற முடியும். அதனால் தான் மார்கழி மாதம் மங்களகரமான, புண்ணிய மாதமாக கருதப்படுகிறது. மாதங்களில் நான் மார்கழி என்று பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறியுள்ளார். பாரத யுத்தம் இந்த மாதம் தான் நடந்தது. பகவத்கீதை அருளப்பட்டது மார்கழியில்தான். திருப்பாற்கடல் கடையப்பட்டதும், அதில் இருந்து தோன்றிய விஷத்தை சிவபெருமான் உண்டதும் மார்கழி மாதத்தில்தான் என்று புராணம் சொல்கிறது.

    அய்யப்பன், ஆஞ்சநேயர் அவதரித்ததும், ஆண்டாள் அதிகாலையில் எழுந்து நீராடி, திருப்பாவை பாடி திருமால் மனதில் இடம் பிடித்ததும் இந்த மாதத்தில்தான். கிருஷ்ணர் கோவர்த்தன மலையை குடையாக பிடித்து மக்களை காத்தது மார்கழி மாதத்தில்தான். இத்தகைய சிறப்புடைய மார்கழி மாதத்தை சிலர் மனம் போன போக்கில் பீடை மாதம் என்கிறார்கள். உண்மையில் மார்கழியைதான் முன்னோர்கள் “பீடுடை மாதம்” என்றழைத்தனர்.

    பீடுடை என்றால் சிறப்பான மங்களகரம் நிறைந்தது என்று பொருள். பீடுடை என்ற வார்த்தை உச்சரிப்பில் திரிந்து, மருவி பீடை என்றாகி விட்டது. இனியாவது மார்கழியை பீடை மாதம் என்று சொல்லாதீர்கள். எல்லா சிறப்புகளும் வாய்ந்த மார்கழி மாதத்தில் திருப்பாவை, திருவெம்பாவை பாடி, கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தால் மனம் தூய்மை பெறும்.

    அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யப்படும் செயல்கள் நல்ல பலன்களைக் கொடுக்கும். மார்கழி மாதம் முழுவதும் இறைவழிபாடு செய்தால் ஒரு வருடம் முழுவதும் இறைவனை வழிபட்ட பலன் கிடைக்கும். திருப்பாவை, திருவெம்பாவை ஓதி வழிபட்டால் நம் பாவங்கள் அழிந்து புண்ணியம் வந்து சேரும்.
    மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசியன்று உண்ணா நோன்பு இருந்து பரமபத வாசல் தரிசனம் செய்தால் எல்லா பலன்களும் கிடைக்கும். அதுபோல திருவாதிரை தினத்தன்று களி நிவேதனம் செய்து நடராஜரை வழிபட்டால் வெற்றி கிடைக்கும். ஆண்டாள் இயற்றிய பிரபந்தங்கள் இரண்டு. ஒன்று திருப்பாவை. மற்றொன்று நாச்சியார் திருமொழி.

    மார்கழி நோன்பு இருக்கும் பெண்கள் அதிகாலையில் பாடுவதற்காக திருப்பாவையை ஆண்டாள் இயற்றினார். திருப்பாவையில் மொத்தம் 30 பாடல்கள். நோன்பு இருந்த ஒவ்வொரு நாளும் ஒரு பாடலாக 30 பாடலை ஆண்டாள் பாடினார். வேதங்களின் முடிவுப் பகுதியாகிய உபநிஷதங்களின் நுட்பமான பொருட்களை திருப்பாவை எடுத்துச் சொல்வதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

    பெண்கள் பாடுவதற்கு ஏற்ப எளிய தமிழ், இனிய தமிழ், பக்தி சுவை சொட்டும் பைந்தமிழில் திருப்பாவையை ஆண்டாள் பாடியுள்ளார். பெருமாள் கோவில்களில் 108 திவ்ய தேசங்களில் சாற்று முறை காலங்களில் திருப்பாவையே முதன்மையாகப் பாடப்படுகிறது. ஆழ்வார்கள் இயற்றிய பிரபந்தங்களை படிப்பவர்கள் முதலிலும் முடிவிலும் திருப்பாவை படிப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    மார்கழி மாதம் முழுவதும் திருப்பதி ஏழுமலையானை திருப்பாவை பாடிதான் எழுப்புகிறார்கள். ராமானுஜர் திருப்பாவை பாடிதான் பிச்சை எடுத்ததாக குறிப்புகள் உள்ளன. திருப்பாவை வேத வித்து, கீதையின் சாரம் என்றெல்லாம் புகழப்படுகிறது. “திருப்பாவைக்கு வியாக்கியானம் சொல்ல ஆள் இல்லை” என்று ராமானுஜர் கூறியுள்ளார்.

    வேதம் போல சிலருக்கு மட்டுமே பயன்படாமல், எவரும், எல்லோரும் பக்தி ஞானம் பெற்று முக்தி பெற திருப்பாவை வழி காட்டுகிறது. இந்தியாவில் மட்டுமின்றி பர்மா, கம்போடியா, தாய்லாந்து, ஜாவா, சுமத்ரா நாடுகளிலும் திருப்பாவை பாடப்படுகிறது. தாய் லாந்து கோவில் களிலும், அரண்மனையிலும் இன்றும் திருப்பாவை பாடப்படுகிறது.

    திருப்பாவையில் உள்ள 30 பாடல்களில் முதல் 5 பாடல்கள் மார்கழி நோன்பு பற்றியும், அடுத்த 10 பாடல்கள் தோழிகள் அதிகாலையில் எழுப்பப்படுவது பற்றியும், அதற்கு அடுத்த 10 பாடல்கள் கண்ணனை கண் விழிக்க செய்யும், கடைசி 5 பாடல்கள் பாவை நோன்பு பயன்கள் பற்றியும் சொல்கிறது.
    திருப்பாவையின் 30 பாடல்களையும் கற்பவர்கள் எப்போதும் திருமால் அருளால் பூ உலகிலும், வான் உலகிலும் இன்ப வாழ்க்கை வாழ்வார்கள். எல்லா நலன்களும் கிடைக்கும். அதோடு வாழ்வாங்கு வாழ்ந்து பின்பு மோட்சத்தையும் அடைவார்கள்.
    பூஜையின்போது சுவாமி மற்றும் அம்மனுக்கு ரெங்கநாதர்கோவில் வஸ்திரங்கள் சாற்றப்பட்டு பதினாறு வகை உபசாரங்களுடன் மகாதீபாராதனை நடைபெறும்.
    சமயபுரம் மாரியம்மன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு தங்கை என்ற முறையில் ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று ஸ்ரீரங்கம் கோவில் சீர்வரிசைகள் சமயபுரம் மாரியம்மனுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன. இதே போல் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மனையும் ரெங்கநாதரின் மற்றொரு தங்கையாக கருதப்பட்டு, அக்கோவிலில் மார்கழி முதல்நாள் நடைபெறும் திருப்பாவாடைக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கியதற்கான சான்றுகள் சில ஆண்டுகளுக்கு முன் கிடைக்கப்பெற்றன.

    அதன் அடிப்படையில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் நின்று போன இவ்வழக்கத்தை புதுப்பித்து நடைமுறைக்கு கொண்டுவர இரு கோவில் நிர்வாகங்களும் முடிவு செய்தன. அதன்படி இன்று (வியாழக்கிழமை) மார்கழி மாதம் பிறக்கிறது.

    இதையொட்டி திருவானைக் காவல் அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து புதிய வஸ்திரங்கள், அரிசி, பருப்பு, காய்கறிகள், பழங்கள், மாலைகள், தாம்பூலம், மங்கல பொருட்கள் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் ஊர்வலமாக ஸ்ரீரங்கம் கோவில் உதவி ஆணையர் கந்தசாமி, அர்ச்சகர் ஹரிஷ்பட்டர் ஆகியோருடன் அலுவலர்கள், ஊழியர்கள் திருவானைக்காவல் கோவிலுக்கு எடுத்து வந்தனர்.

    திருவானைக்காவல் கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் மற்றும் கோவில் பண்டிதர்கள் கோவில் கொடிமரம் முன் வைத்து சீர்வரிசை பொருட்களை வரவேற்றுப் பெற்றுக்கொண்டனர். இதில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் நிவேதனத்துடன் இன்று (மார்கழி முதல்நாள்) காலை பூஜைகள் நடைபெறும். முதல் பூஜையின்போது சுவாமி மற்றும் அம்மனுக்கு ரெங்கநாதர்கோவில் வஸ்திரங்கள் சாற்றப்பட்டு பதினாறு வகை உபசாரங்களுடன் மகாதீபாராதனை நடைபெறும்.

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மார்கழி மாதத்தையொட்டி 16.12.21 முதல் 15.1.22 வரை நடக்கும் பூஜை விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மார்கழி மாதத்தையொட்டி 16.12.21 முதல் 15.1.22 வரை நடக்கும் பூஜை விவரங்களை கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தெரிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    அதிகாலை 3 மணிக்கு நடைதிறப்பு, அதிகாலை 4 மணிக்கு மங்கல வாத்தியங்கள், அதிகாலை 4.15 மணிக்கு திருமஞ்சன சேவை, அதிகாலை 4.30 மணிக்கு கோபூஜை, சுப்ரபாத சேவை இல்லை. அதற்கு பதிலாக தேவாரம் பாடப்படுகிறது. அதிகாலை 5 மணிக்கு பக்தர்களுக்கு அனுமதியின்றி முதல் கால அபிஷேகம், 2-ம் கால மற்றும் 3-ம் கால அபிஷேகம் கோவில் சார்பில் மட்டுமே நடத்தப்படுகிறது. காலை 7 மணிக்கு துணை சன்னதிகளுக்கு நைவேத்தியம்.

    அதைத்தொடர்ந்து கொரோனா தொற்று விதிமுறைக்கு உட்பட்டு காலை 7.30 மணிக்கு ஆண்டாள் (உற்சவ மூர்த்தி) கோவிலுக்குள் ஊர்வலம் நடத்தப்படும், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு பிரதோஷ கால அபிஷேகம் நடக்கிறது.

    வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கட்கிழமை போன்ற நாட்களில் இரவு 9 மணிக்கும், செவ்வாய், புதன், வியாழக்கிழமை போன்ற நாட்களில் இரவு 8.30 மணிக்கு பள்ளியறை பூஜை நடத்தப்படுகிறது.

    மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
    ஆபரண பெட்டி ஆரியங்காவு வழியாக அச்சன்கோவில் சென்றடைந்தது. கோவிலில் இன்று (வியாழக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.
    தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தூரத்தில் கேரள மாநிலம் அச்சன்கோவிலில் பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவில்களில் ஒன்றான தர்மசாஸ்தா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மண்டல மஹோத்சவ விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்த விழாவின்போது அய்யப்பனுக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்படும். இதில் தங்க வாள், தங்க கவசங்கள் மற்றும் கருப்பனுக்கு வெள்ளி அங்கி ஆகியன அடங்கும்.

    இந்த ஆபரணங்கள் அடங்கிய பெட்டி நேற்று காலை கேரள மாநிலம் புனலூர் அரசு கருவூலத்திலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுக்கப்பட்டு இதற்கென ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு வாகனத்தில் செங்கோட்டைக்கு கொண்டு வரப்பட்டது. செங்கோட்டை பஸ்நிலையம் அருகில் இருக்கும் வெற்றிவிநாயகர் கோவில் முன்பு கோவில் நிர்வாகிகள் வரவேற்றனர். பின்பு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் அங்கிருந்து தென்காசிக்கு மதியம் 2 மணிக்கு கொண்டு வரப்பட்டது. தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில் முன்பு இந்த ஆபரண பெட்டிக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்து சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்களின் வரவேற்பு முடிவடைந்ததும் ஆபரண பெட்டி ஆரியங்காவு வழியாக அச்சன்கோவில் சென்றடைந்தது. கோவிலில் இன்று (வியாழக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.
    திருச்செந்தூர் முருகன் கோவிலில் சில தினங்களுக்கு முன்பு தங்கத்தேர் இழுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
    அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இக்கோவிலில் தங்கத்தேர் இழுப்பது சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில், தமிழக அரசு அறிவுறுத்தலின்படி, திருச்செந்தூர் முருகன் கோவிலில் சில தினங்களுக்கு முன்பு தங்கத்தேர் இழுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதற்காக பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த தங்கத்தேரை சுத்தப்படுத்தி மின்விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்றது.

    நேற்று தங்கத்தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக மாலை 6.57 மணிஅளவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தங்கத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து இரவு 7.08 மணி அளவில் தங்கத்தேரை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வடம்பிடித்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து பக்தர்கள் வடம்பிடித்த இழுத்தனர். தேர் கோவில் வெளிப்பிரகாரத்தில் உலா வந்து 7.18 மணிக்கு நிலையை அடைந்தது.

    நிகழ்ச்சியில், தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, எம்.எல்.ஏ.க்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு தங்கத்தேர் ஓடியதால் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) செல்வராஜ் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    முன்னதாக அமைச்சர் சேகர்பாபு திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச கோவில் ஆகிய கோவில்களில் ஆய்வு செய்தார்.

    இதேபோல் திருச்சி வயலூர் முருகன் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். முன்னதாக அவர் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து மரத்தேரின் நிலைக்குறித்தும், அதனை தேக்கு மரத்தில் சீரமைக்கவும் அறிவுறுத்தினார். மேலும் அவர் தெப்பக்குளத்தை ஆய்வு செய்தார். குளத்தில் உள்ள குப்பைகளை அகற்றவும், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, 10 ஆண்டுகளாக அறங்காவலர்கள் நியமிக்கப்படாமல் இருந்தனர். தற்போது 300 கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம் குறித்து அறிவிப்பு வெளியிட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. விரைவில்குழு அமைத்து அடுத்த ஆண்டுக்குள் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார்.

    நல்ல குணமுள்ள கணவர் வாழ்க்கைத் துணையாக வர வேண்டும் என நினைப்பவர்கள் மார்கழி மாதம் விரதமிருந்து கண்ணனை மனமுருகி வேண்டினால் நிச்சயம் நிறைவேறும்.
    பிறந்த வீட்டில் எப்படி சந்தோசமாக வாழ்கிறார்களோ அதே சந்தோசத்தை தருகிற அளவுக்கு புகுந்த வீடும், கணவரும் அமைய வேண்டும் என்பது இன்றைய காலப் பெண்களின் பெருங்கனவாக இருக்கிறது. நல்ல குணமுள்ள கணவர் வாழ்க்கைத் துணையாக வர வேண்டும் என நினைப்பவர்கள் மார்கழி மாதம் விரதமிருந்து கண்ணனை மனமுருகி வேண்டினால் அது நிச்சயம் நடைபெறும் என்பது தெய்வீக நம்பிக்கை.

    எல்லா செல்வங்களும் நிறைந்து நாடும் நாட்டு மக்களும் தன்னிறைவோடு இருக்க மார்கழி மாத விரதம் கடைபிடிக்கப்பட்டாலும் ஆயர் குலப் பெண்கள் தங்களுக்கு வரும் வாழ்க்கைத் துணை சிறப்பானதாக அமைய கண்ணனின் துதி பாடி நோன்பு இருந்தனர். மார்கழி மாதத்தில் இந்த விரதத்தை ஆயர்குலப் பெண்கள் மேற்கொண்டதால் மார்கழி விரதம் என்ற பெயர் இதற்கு வந்து விட்டது.

    எம்பெருமான் கண்ணனை நினைத்து ஆண்டாள் பாடிய திருப்பாவை, சிவனை நினைத்து மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவை, இதோடு திருப்பள்ளியெழுச்சி உள்ளடக்கிய பாடல்களை மார்கழி மாதத்தில் பெண்கள் மனமுருகிப் பாடி இறைவனைத் துதிக்கிறார்கள். திருப்பாவையில் 30 பாடல்களும், திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி இரண்டும் சேர்த்து 30 பாடல்களும் இருக்கின்றன.

    பனி விழும் மாதம் மார்கழி. இந்த மாதத்தில் அனைவரும் அதிகாலையில் எழுந்து ஆறு, குளத்திற்கு சென்று நீராடிவிட்டு பகவானின் நாமத்தை கூறியபடியும், திருவெம்பாவை, திருப்பாவை, திருப்பள்ளி யெழுச்சி பாடல்களை பாடியபடியும் வீதிகள்தோறும் நடந்து செல்வார்கள்.

    கோவிலுக்கு சென்றும் வழிபடுவர். வீட்டில் இருப்பவர்கள் குளித்துவிட்டு வீட்டின் வாசலை தெளித்து பெருக்கி, பெரிய கோலங்கள் போடுவர். மார்கழி மாதத்தில் அதிகாலை நேரத்தில் ஒசோன் வாயு கீழே வெளிப்படுகிறது.

    அது வியாதிகளை கட்டுப்படுத்தும் தன்மைகொண்டது. ஓசோன் நம்மீது பட்டு உடல் ஆரோக்கியம் பெறுகிறது என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. இதனால் தான் மார்கழி மாதத்தில் பொழுது விடியும் நேரத்தில் நீராடி நோன்பு நோற்கும் முறை உருவானது.

    பூஜையறையில் ஆண்டாள், பெருமாள் படங்களை வைத்து காலையும் மாலையும் மலர்தூவி வழிபாடு செய்ய வேண்டும். மார்கழி முதல் நாளில் மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளே என்ற பாடலோடு தொடங்குவது சிறப்பான பலன்களைத் தரும். ஒவ்வொரு துதிப் பாடல்களையும் மூன்று முறை பாடப்படவேண்டும். 
    ×