search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் திறப்பு"

    • கோவிலின் வழிபாட்டு முறை தொடர்பாக இருசமுதாயத்தினரிடையே பிரச்சினை ஏற்பட்டது.
    • கோர்ட்டு உத்தரவின் பேரில் கோவிலை திறக்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள நேசனேரி கிராமத்தில் பழமை வாய்ந்த அங்காள ஈஸ்வரி வாலகுருநாதன் கோவில் இருக்கிறது. இந்த கோவிலின் வழிபாட்டு முறை தொடர்பாக இருசமுதாயத்தினரிடையே பிரச்சினை ஏற்பட்டது.

    இதனால் அந்த கோவில் கடந்த 2012-ம் ஆண்டு பூட்டப்பட்டது. பூட்டப்பட்ட அந்த கோவிலை திறக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. பலமுறை சமாதான கூட்டமும் நடத்தப்பட்டது. ஆனால் அதில் எந்த முடிவும் எட்டப்படாததால் கோவில் நிரந்தரமாக பூட்டப்பட்டது.

    கடந்த 11 ஆண்டுகளாக அங்காள ஈஸ்வரி வாலகுருநாதன் கோவில் பூட்டியே கிடந்தது. கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் வெளியில் நின்றே சாமியை கும்பிட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், கோவிலை திறக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    கோர்ட்டு உத்தரவின் பேரில் கோவிலை திறக்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். 11 ஆண்டுகளாக பூட்டி கிடந்த கோவிலை திறக்க கடந்த ஒரு வார காலமாக இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர்.

    இதனால் அந்த கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவியது. இந்த நிலையில் அங்காள ஈஸ்வரி வாலகுருநாதன் கோவில் 11 ஆண்டுகளுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்வி தலைமையிலான வருவாய் துறையினர் இன்று காலை கோவிலுக்கு வந்தனர். அவர்கள் கோவில் கதவில் போடப்பட்டிருந்த பூட்டை உடைத்து கோவிலை திறந்தனர். பின்பு கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சிறப்பு யாகம் நடந்தது.

    இதில் கோவில் செயல் அலுவலர்கள் சங்கரேஸ்வரி, சர்க்கரையம்மாள், அங்கயற்கண்ணி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை தாசில்தார் (ஆலய நிலங்கள்) முருகையன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கோவிலை திறக்க ஒரு சமுதாயத்தினர் ஏற்றுக்கொண்ட நிலையில், அவர்கள் கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டனர்.

    கோவிலை திறக்க மற்றொரு சமுதாயத்தினர் ஏற்றுக்கொள்ளாததால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் அங்கு திருமங்கலம் துணை சூப்பிரண்டு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • கடந்த ஏப்ரல் மாதம் 11-ந் தேதி சாலை பராமரிப்பு பணிகள் தொடங்கியது.
    • 3 மாதங்களுக்கு பின்னர் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    திருக்குறுங்குடி வனத்துறை சோதனை சாவடியில் இருந்து, திருமலைநம்பி கோவில் வரையிலான மலைப்பாதை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நமக்கு நாமே திட்டத்தின் கீழ், ரூ.33 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதனைதொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 11-ந் தேதி சாலை பராமரிப்பு பணிகள் தொடங்கியது. இதையடுத்து கோவிலுக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். சாலை பராமரிப்பு பணிகள் மிகவும் மந்தமாக ஆமை வேகத்தில் நடப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த மாதம் சாலை பராமரிப்பு பணிகள் முழுமை அடைந்தன. ஆனால் பக்தர்களுக்கு தொடர்ந்து அனுமதி வழங்கப்படவில்லை.

    இதனால் பக்தர்கள் வேதனை அடைந்தனர். இதனிடையே நேற்று முதல் திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவிலுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை வனத்துறையினர் விலக்கினர். 3 மாதங்களுக்கு பின்னர் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின் 4-ம் பிரகாரத்தில் அமைந்துள்ளது ஆயிரங்கால் மண்டபம்.
    • இம்மண்டபமானது கடந்த 2011-ம் ஆண்டு ரூ.50 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டது.

    உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக விளங்கும் காஞ்சிபுரம் ஏலவார் குழலி உடனுறை ஏகாம்பரநாதர் கோவிலின் 4-ம் பிரகாரத்தில் அமைந்துள்ளது ஆயிரங்கால் மண்டபம். இந்த மண்டபமானது எவ்வித பயன்பாடும் இல்லாமல் பூட்டியே கிடந்தது.

    இம்மண்டபத்தில் மேல்தளங்களில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உத்திர திருக்கல்யாணம் நடைபெறும். மற்ற நாட்களில் பாதுகாப்பு கருதி பக்தர்கள் மேல் தளத்திற்கும், உள் பகுதியிலும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேலும் இம்மண்டபமானது கடந்த 2011-ம் ஆண்டு ரூ.50 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டது.

    பங்குனி உத்திர திருக்கல்யாணத்தின் போது ஏகாம்பரநாதர் வீதியுலா செல்ல இந்த ஆயிரங்கால் மண்டபத்தின் வழியாகவே வெளியில் வருவார். மற்ற நேரங்களில் பொதுமக்களுக்கு அங்கு அனுமதி மறுக்கப்படும். இந்நிலையில் ஆயிரங்கால் மண்டபமானது திறக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

    பல ஆண்டுகளாய் மூடப்பட்டிருந்த ஆயிரங்கால் மண்டபமானது தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளதால் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் மகிழ்ச்சியுடன் சென்று சிற்ப கலைகளை கண்டு ரசித்து வருகின்றனர்.

    ×