என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    கவிசித்தேஸ்வரா கோவில் தேரோட்டத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அதில் பலரும் முககவசம் அணியாமலும், சமூகவிலகலை கடைப்பிடிக்காமல் குவிந்திருந்தனர்.
    கொப்பல் (மாவட்டம்) டவுனில் கவிசித்தேஸ்வரா மடம் உள்ளது. இங்குள்ள கவிசித்தேஸ்வரா கோவிலில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா கோலாகலமாக நடத்தப்படுவது வழக்கம்.

    ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு (2021) தேரோட்டம் பக்தர்கள் இன்றி கோவில் வளாகத்திலேயே எளிமையாக நடத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான கவிசித்தேஸ்வரா கோவில் தேரோட்டம் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் நடந்தது.

    கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் கூட்டமாக பங்கேற்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று அதிகாலை நடந்த தேரோட்டத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அதில் பலரும் முககவசம் அணியாமலும், சமூகவிலகலை கடைப்பிடிக்காமல் குவிந்திருந்தனர்.
    சாபம் என்பது கோபத்தின் உச்சகட்டம். கடுமையான தோஷங்களாக ஜோதிட உலகம் கூறும் தோஷங்களில் ஒன்று பெண் சாபம் அல்லது ஸ்திரி தோஷம்.
     தாயின் அன்பும் ஆதரவும் கிடைக்காமல் இளவயதில் தாயை இழக்கும் அல்லது பிரியும் நிலை ஏற்படும். காதல் தோல்வி, மனைவியால் சித்ரவதை அல்லது அடங்காத  மனைவியுடன் வாழ வேண்டிய கட்டாயம். கணவன், மனைவி பிரிவினை. விவாகரத்து, ஆரோக்கிய குறைபாடு போன்ற விளைவுகள் உண்டாகும்.

    குழந்தை பாக்கியமின்மை, திருமணத் தடை அல்லது சிலருக்கு திருமணமாகாமல் போவது ஏற்படும். இன்றைக்குத் திருமணத்திற்காகக் காத்திருக்கும் ஆண்களுக்குப்  மணப்பெண் கிடைப்பது குதிரைக் கொம்பாகிவிட்டது.

    திருமணத் தடையை சந்திப்பதில் ஆண்களே முதலிடம் வகிக்கிறார்கள். பெண் குழந்தை வேண்டாம் என்று பல பெற்றோர்கள் செய்த பாவம், இன்றைக்கு பெண்களே இல்லையோ என பயப்படும்  நிலையை ஏற்படுத்தி விட்டது. இதில் எந்த மிகைப்படுத்தலும் கிடையாது.

    இன்று பல மேட்ரி மோனி சென்டரில் திருமணத்திற்கு பதியும் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாகவும் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவும் இருப்பதே  இதற்கு சாட்சி.

    ‘பிரசன்ன ஜோதிடர்’
    ஐ.ஆனந்தி
    செல்: 98652 20406

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கடந்த 5 நாட்களுக்கு பிறகு இன்று பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட்டது. பக்தர்கள் ஆர்வமுடன் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
    தமிழகத்தில் கொரோனா 3-வது அலை வேகமாக பரவி வருகிறது. தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் கடந்த 14-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது.

    இதனால் பொங்கல் பண்டிகை காலங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் பவுர்ணமி கிரிவலம் செல்லவும் கடந்த 2 நாட்களாக தடைவிதிக்கப்பட்டிருந்தது. அதனைப் பொருட்படுத்தாமல் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் தினமும் கிரிவலம் சென்று வந்தனர் .போலீசார் தடுத்து நிறுத்திய போதிலும் கிராமங்கள் வழியாக பக்தர்கள் சென்றனர்.

    தற்போது வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் திருவண்ணாமலை வந்துள்ளனர். அவர்கள் விடுதியில் தங்கி இருந்து ரமணாஸ்ரமம் உள்ளிட்ட பல ஆசிரமங்களுக்கு சென்று வழிபாடுகளை செய்து வருகின்றனர். அவர்கள் தினமும் இருசக்கர வாகனங்களில் கிரிவலம் வருகின்றனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கடந்த 5 நாட்களுக்கு பிறகு இன்று பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட்டது. பக்தர்கள் ஆர்வமுடன் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று வெளியூர் பக்தர்கள் வருகை மிகவும் குறைவாகவே காணப்பட்டது.

    உள்ளூர் பக்தர்கள் அதிகளவில் இருந்தனர். காலையில் கூட்டம் குறைவாக இருந்தாலும் நேரம் செல்ல செல்ல அதிகரித்தது.
    மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசிக்கொடை பந்தல்கால் நாட்டு விழா பக்தர்களின்றி நடந்தது. கோவில் வாசல் அடைக்கப்பட்டிருந்தது.
    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இரு முடிக்கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோவில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது.

    இங்கு ஆண்டுதோறும் மாசிக்கொடைவிழா பல்வேறு நிகழ்ச்சிகளுடன் 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டிற்கான மாசிக்கொடை விழா வரும் பிப்ரவரி மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    மாசிக்கொடை விழாவையொட்டி பந்தல் கால் நாட்டு விழா நேற்று காலையில் நடந்தது.‌ அதிகாலை 4 மணிக்கு நடை திறப்பு, 5 மணிக்கு பஞ்சாபிஷேகம், காலை 6 மணிக்கு நிறை புத்தரிசி வழிபாடு, 6.30 மணிக்கு தீபாராதனை, 7.45 மணிக்கு பந்தல் கால் நாட்டும் நிகழ்ச்சி ஆகியவை நடந்தது.

    இதில் கோவில் தந்திரி சங்கர நாராயணன், கண்காணிப்பாளர் செந்தில்குமார், மராமத்து பொறியாளர் அய்யப்பன், ஸ்ரீகாரியம் ஆறுமுக நயினார், இந்து முன்னணி கோட்ட செயலாளர் மிசா சோமன், ஒன்றிய துணைத்தலைவர் பிரதீப்குமார், ஹைந்தவ (இந்து) சேவா சங்க தலைவர் கந்தப்பன், பொதுச்செயலாளர் ரெத்ன பாண்டியன், செயலாளர் முருகன், பொருளாளர் சசீதரன் மற்றும் நிர்வாகிகள், பெரிய சக்கர தீவட்டிக்குழு தலைவர் முருகன், ஸ்ரீதேவி கலா மன்ற தலைவர் செல்லத்துரை, தேவி சேவா சங்க தலைவர் காளிப்பிள்ளை, மாவட்ட இந்து கோவில்கள் கூட்டமைப்பு அமைப்பாளர் ஸ்ரீபதி ராஜ், துணை அமைப்பாளர் வேல்தாஸ் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து சமய மாநாடு திடலில் ஹைந்தவ (இந்து) சேவா சங்கம் சார்பில் 85-வது சமய மாநாடு பந்தல் கால் நாட்டு விழா நடந்தது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நேற்று வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் நேற்று நடந்த பந்தல் கால் நாட்டும் விழாவில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோவில் வாசல் அடைக்கப்பட்டிருந்தது. மணவாளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் வேப்பஞ்சேரி என்ற இடத்தில் இருக்கிறது, லட்சுமி நாராயணர் திருக்கோவில். இந்த கோவிலில் 21 அடி உயரத்தில், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கிருஷ்ணரின் சிலை வைக்கப்பட்டுள்ளது.
    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் வேப்பஞ்சேரி என்ற இடத்தில் இருக்கிறது, லட்சுமி நாராயணர் திருக்கோவில். இது சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்பு, மூன்றாம் குலோத்துங்கச் சோழ மன்னனால் கட்டப்பட்டது. பிற்காலத்தில் நடைபெற்ற அன்னிய படையெடுப்புகளால், இந்த ஆலயம் சிதலமடைந்து பராமரிப்பு இன்றி போனது.

    அதுவரை செல்வச் செழிப்பு மிக்க பூமியாக, விவசாயம் கொழிக்கும் இடமாக இருந்த இந்த ஊர், மழை இன்றி, விவசாயம் அழிந்து போனது. மழை பொய்த்துப் போய், அடிப்படைத் தொழிலான விவசாயம் அழி வைச் சந்தித்ததால், வாழ்வாதாரம் இன்றி அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

    தங்களின் இந்த நிலைக்கான காரணத்தை அப்பகுதி மக்கள் ஆராய்ந்தபோது, அங்குள்ள லட்சுமி நாராயணர் கோவில் சிதிலமடைந்து கிடப்பதும், ஒரு கால பூஜை கூட நடைபெறாமல் இருப்பதுமே இந்த துன்பங்களுக்கு காரணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து பெரியவர்களின் ஆலோசனையின் பேரில், ஆலயத்தை புனரமைத்து, நித்ய பூஜை செய்ய முடிவு செய்யப்பட்டது.

    அப்படி செய்யத் தொடங்கியதும், அந்த பகுதியில் மாதம் மும்மாரி மழை பொழிந்தது. மீண்டும் விவசாயம் தழைக்கத் தொடங்கியது.

    கோவிலுக்குள் நுழைந்ததும் கொடிமரம் உள்ளது. அதைத் தாண்டி உள்ளே சென்றால், அமைதி தவழும் முகத்துடன் கருடன் தரிசனம் தருகிறார். அவருக்கு எதிரில் கருவறை தென்படுகிறது. வாசலில் ஜெயன், விஜயன் என்ற துவாரபாலகர்கள் உள்ளனர். கருவறை விமானத்தில் கலியுக கண்ணன் இருக்கிறார்.

    கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் வீற்றிருக்கிறார். சகல பாவங்களையும் போக்கும் சுதர்சன சக்கரமும் உள்ளது. பெருமாளை தமிழால் புகழ்ந்து பாடிய ஆழ்வார்கள், தனிச் சன்னிதியில் தரிசனம் தருகின்றனர். லட்சுமியை தன்னுடைய மடியில் அமர வைத்தபடி சாந்தமான ரூபத்தில் லட்சுமிநாராயணர் அருளாட்சி செய்கிறார்.

    இந்த ஆலயத்தில் தசாவதார தீர்த்தக்குளம் உள்ளது. இந்த குளத்தின் தண்ணீர், இனிப்பு சுவையுடன் இருக்கிறது. இந்த தீர்த்தத்தில் நீராடி இறைவனை வேண்டினால், பாவங்கள் விலகும் என்கிறார்கள். குளத்தின் நடுவில் காளிங்க நர்த்தனம் புரியும் கிருஷ்ணரின் சிலை வடிக்கப்பட்டுள்ளது. அதே போல் குளத்தைச் சுற்றிலும் அழகிய வேலைபாடுகளுடன் கூடிய தசாவதார சிலைகள் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன.

    தவிர குளத்தின் அருகில் 21 அடி உயரத்தில், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கிருஷ்ணரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இதனை ‘தசாவதார கிருஷ்ணர்’ என்கிறார்கள். இந்த ஒரே சிலையில், திருமாலின் 10 அவதாரங்களையும் குறிப்பிடும் வகையிலான அனைத்து அம்சங்களுடன் கூடியதாக உருவாக்கியிருக்கிறார்கள்.

    கோவிலின் தென்பகுதியில் அஷ்டலட்சுமிக்கு தனிச் சன்னிதி உள்ளது. மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள், இந்த சன்னிதிக்கு வந்து தாயாரை மனமுருக வேண்டி, விளக்கு ஏற்றி வழிபட்டால், மது பழக்கத்தில் இருந்து விடுபடுவர் என்பது நம்பிக்கை. செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு நடைபெறும் ராகு கால பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு, சுபகாரியங்களில் ஏற்படும் தடைகள் அகலும் என்கிறார்கள்.

    திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கடன் பிரச்சினை அகலவும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேண்டுபவர்கள், நீண்ட நாள் நோய் தீர, தொழில் விருத்தியாக, நலிந்த தொழில் மீண்டும் நல்ல முறையில் நடைபெற என அனைத்து பிரச்சினைகளுக்கும், இத்தல லட்சுமி நாராயணரை வணங்கி வழிபட்டு வந்தால் போதுமானது. தங்களின் கோரிக்கை நிறை வேறியதும் பக்தர்கள், இறைவனுக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    சித்தூரில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில், வேப்பஞ்சேரி லட்சுமி நாராயணர் திருக்கோவில் அமைந்துள்ளது.
    வரலாற்றிலேயே தெப்பத்திருவிழாவை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரை குளத்தில் நடத்தியது, இது தான் முதல் முறையாகும் என்று பட்டர் ஹலாஸ் கூறினார்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆடி, ஆவணி, ஐப்பசி, தை, மாசி திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த ஆண்டுக்கான தை தெப்பத்திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது.

    கொரோனா கட்டுப்பாடு காரணமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று அரசு உத்தரவிட்டிருந்தது. எனவே கொடியேற்றத்தை காண பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

    விழா நாட்களில் சுவாமி-அம்மன் வீதி உலா கோவிலுக்குள் உள்ள ஆடி வீதியில் நடைபெறுகிறது. ஆனால் தெப்பத்திருவிழா மாரியம்மன் கோவிலுக்கு எதிரே உள்ள தெப்பக்குளத்தில் வழக்கம்போல் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அரசு உத்தரவுப்படி அனைத்து திருவிழாக்களையும் கோவிலுக்குள் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து கடந்த 12-ந் தேதி சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலையும், 14-ந் தேதி வலை வீசி அருளிய லீலையும், 16-ந் தேதி தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சியும், கதிரறுப்பு திருவிழாவும் கோவிலுக்குள்ளேயே பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

    விழாவில் சிகர நிகழ்ச்சியான தெப்பத்திருவிழாவை, கோவிலுக்குள் உள்ள பொற்றாமரை குளக்கரையில் நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்தது.

    அதன்படி நேற்று மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் அதிகாலையில் சேத்தி மண்டபத்தில் இருந்து புறப்பாடாகி பொற்றாமரை குளத்திற்கு வந்தனர். அங்கு குளத்தை இருமுறை வலம் வந்து, அங்குள்ள ராணிமங்கம்மாள் மண்டபத்தில் எழுந்தருளினார்கள். அங்கு சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு தீபாராதனை நடந்து விழா பூஜைகள் நடந்தன.

    பின்னர் இரவு ஒரு முறை சுவாமியும், அம்மனும் பொற்றாமரை குளத்தை வலம் வந்ததும் தீபாராதனை காண்பிக்கபட்டது. அதை தொடர்ந்து குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஆடி வீதிகளை வலம் வந்து காட்சி அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து பட்டர் ஹலாஸ் கூறும்போது, “தை தெப்பத்திருவிழா ஆங்கில வருட தொடக்கத்தின் முதல் திருவிழாவாகும். தெப்பத்திருவிழாவை எப்படியாவது தெப்பத்தில் வைத்து நடத்தி விடுவோம். அங்கு தண்ணீர் இல்லாவிட்டாலும் நிலை தெப்பமாக திருவிழா நடைபெறும். ஆனால். கொரோனா பரவல் காரணமாக கோவிலுக்குள்ளேயே திருவிழாவை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. வரலாற்றிலேயே தெப்பத்திருவிழாவை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரை குளத்தில் நடத்தியது, இது தான் முதல் முறை” என்றார்.

    தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரம்ப இருந்தும் கொரோனாவால் தெப்பத்திருவிழா நடைபெற முடியாமல் போனது பக்தர்களை ஏமாற்றம் அடைய செய்தது.
    பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கடந்த 5 நாட்களாக வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    இந்நிலையில் இன்று முதல் பக்தர்கள் கோவில்களுக்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் கோவில்களில் கூட்டம் அதிகமாக காணப் பட்டது.

    திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடைபெறக்கூடிய முக்கிய விழாக்களில் ஒன்றான தைப்பூசத் திருவிழா நேற்று பக்தர்களின்றி எளிமையாக நடைபெற்றது.

    5 நாட்களுக்கு பிறகு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தைப்பூசத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலும் மாலை அணிந்து விரதம் இருக்கக் கூடிய பக்தர்கள் பாத யாத்திரையாக வந்து காத்திருந்தனர்.

    இன்று காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். அதனைத்தொடர்ந்து விருதுநகர், ராஜபாளையம், தென்காசி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    சிலர் வேண்டுதல்களை நிறைவேற்றும் விதமாக அங்கப்பிரதட்சணம் செய்தும், அலகு குத்தியும் , காவடி சுமந்தும், சாமி சப்பரம் தூக்கி வந்தும் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.

    கடந்த 5 நாட்களாக பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்ட கோவில் வளாகம் மற்றும் கடற்கரை பகுதிகள் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது.

    பக்தர்களின் கூட்டம் அதிகளவில் இருந்து வரும் நிலையில் கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசன வரிசைகளில் புனித நீராடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
    அனுமனின் அனுக்கிரகத்தைப் பெற்றுத் தருவதில் தூய ரத்தினங்களாக ஜொலிக்கும் 'ஸ்ரீஹனுமத் பஞ்சரத்னம் ஸ்தோத்திரம்’ இங்கே உங்களுக்காக...
    வீதாகிலவிஷயேச்சம் ஜாதானந்தாஸ்ருபுலகமத்யச்சம்
    ஸீதாபதி தூதாத்யம் வாதாத்மஜமத்ய பாவயே ஹ்ருத்யம்

    கருத்து:

    எல்லாவிதமான விஷய அனுபவங்களைக் கொண்டவரும், ஆனந்தக் கண்ணீர், மயிர்க்கூச்சல் ஆகிய வற்றை அடைந்தவரும், சுத்தமான மனம் கொண்டவரும், ஸ்ரீராம தூதர்களில் முதன்மையானவரும், தியானம் செய்யத் தக்கவரும், வாயு குமாரனுமான ஹனுமனை தியானிக்கிறேன்.

    தருணாருணமுககமலம் கருணாரஸபூரபூரிதாபாங்கம்
    ஸஞ்சீவனமாஸாஸே மஞ்சுல மஹிமானமஞ்ஜனாபாக்யம்

    கருத்து:

    பால சூரியனுக்கு ஒப்பான முகக் கமலத்தைக் கொண்டவரும், கருணையாகிய நீர்ப் பிரவாகத்தால் நிறைந்த கண்களைக் கொண்டவரும், ஔஷதி பர்வதத்தைக் கொண்டு வந்து யுத்தத்தில் இறந்த வானரர்களைப் பிழைக்கும்படி செய்தவரும், புகழத்தக்க மகிமை உள்ளவரும், அஞ்சனாதேவியின் புண்ணிய பலனுமானவருமான ஹனுமனைத் தரிசிக்க விரும்புகிறேன்.

    ஸும்பரவைரிஸராதிகமம்புஜதளவிபுலலோசனோதாரம்
    கம்புகளமநிலதிஷ்டம் பிம்பஜ்வலிதோஷ்ட மேகமவலம்பே

    கருத்து:

    மன்மத பாணத்தைக் கடந்தவரும், தாமரை தளம் போல் அகன்ற கண்களால் அழகு பொருந்தியவரும், சங்கு போன்ற கழுத்தைக் கொண்டவரும், வாயுதேவரின் பாக்கிய பூதருமான ஹனுமனைச் சரணம் அடைகிறேன்.

    தூரீக்ருதஸீதார்த்தி: ப்ரகடீக்ருதராமவைபவஸ்பூர்த்தி:
    தாரிததஸமுககீர்த்தி: புரதோ மம பாது ஹனுமதோ மூர்த்தி

    கருத்து:

    சீதையின் கஷ்டங்களை வெகு தூரத்தில் விலக்கியதும், ஸ்ரீராம மகிமையின் நினைவை வெளியிடுவதும், ராவணனுடைய கீர்த்தியைப் பிளந்ததுமான ஸ்ரீஹனுமனின் சரீரம் எனக்கு முன்னால் தோன்றட்டும்.

    வானரநிகராத்யக்ஷம் தானவகுல குமுதரவிகரஸத்ருஸம்
    தீனஜனவனதீக்ஷம் பவனதப: பாகபுஞ்ஜமத்ராக்ஷம்

    கருத்து:

    வானரர்களின் கூட்டத்துக்குத் தலைவரும், ராட்சதர்களின் வம்சமாகிய ஆம்பல் புஷ்பத்துக்கு சூரிய கிரணம் போல் இருப்பவரும், ராட்சத குலத்தை அழித்தவரும், துக்கம் அடைந்தவர்களை ரட்சிப்பதில் உறுதிகொண்டவரும், வாயு தேவனின் தவப்பயனாக இருப்பவருமான ஸ்ரீஹனுமனை நேரில் தரிசித்தேன்.

    ஏதத்பவனஸுதஸ்ய ஸ்தோத்ரம் ய: படதி பஞ்சரத்னாக்யம்
    சிரமிஹ நிகிலான் போகான் புக்த்வா ஸ்ரீராமபக்திபாக்பவதி

    கருத்து:

    பஞ்ச ரத்னம் என்று பெயருள்ள - ஸ்ரீஹனுமனின் இந்த ஸ்தோத்திரத்தை எவர் படிக்கிறாரோ, அவர் இவ்வுலகில் எல்லாவிதமான போகங்களையும் வெகு காலம் அனுபவித்து, ஸ்ரீராம பக்தனாகவும் சிறந்து விளங்குவார்.
    பவானி கூடுதுறையில் பரிகாரம் செய்ய 5 நாட்களுக்கு பிறகு இன்று அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் இன்று காலை முதல் பொதுமக்கள் பலர் வந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர்.
    தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து வருகிறது.

    இதே போல் சுற்றுலா தலங்களுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் வழி பாட்டு தலங்களில் பக்தர்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பொதுமக்கள் வழிபட தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இதே போல் கடந்த 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் 18-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) வரை தொடர்ந்து 5 நாட்கள் வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபட தமிழக அரசு தடை விதித்திருந்தது.

    இதனால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோவில்கள், சார்ச்கள், மசூதிகள் அடைக்கப்பட்டு இருந்தன. வழிபாட்டு தலங்களுக்கு மக்கள் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் 5 நாட் களுக்கு பிறகு இன்று (புதன்கிழமை) முதல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் கட்டுபாடுகளுடன் வழிபட அனுமதிக்கப்பட்டனர்.

    இதையொட்டி சத்திய மங்கலம் அருகே உள்ள பண்ணாரியம்மன் கோவிலில் இன்று அதிகாலை வழக்கம் போல் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் சத்திய மங்கலம் மற்றும் ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் பலர் வந்து சாமி தரிசனம் செய்தனர். சமூக இடை வெளியுடன் முககவசம் அணிந்து கொண்டு பக்தர்கள் வந்தனர்.

    பவானி கூடுதுறையில் பரிகாரம் செய்ய 5 நாட்களுக்கு பிறகு இன்று அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் இன்று காலை முதல் பொதுமக்கள் பலர் வந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர். அவர்களுக்கு மட்டுமே கூடுதுறையில் புனிதநீராட அனுமதி வழங்கப்பட்டது.

    இதனால் அருகே உள்ள அய்யப்ப சேவா மண்டபம் பகுதியில் உள்ள ஆற்றில் மற்ற பக்தர்கள் குளித்தனர். ஆனால் இன்று குறைந்த அளவிலேயே மக்கள் வந்து இருந்தனர்.

    சங்கமேஸ்வரர் கோவிலில் இன்று காலை முதலே பக்தர்கள் பலர் வந்து சாமி தரிசனம் செய்தனர். சானிடைசர் மூலம் கைகள் கழுவிய பிறகே பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

    இதே போல் கொடுமுடி காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடினர். பொது மக்கள் தர்ப்பணம் உள்பட பல்வேறு பரிகாரங்கள் செய்தனர்.

    அந்தியூர் பஸ் நிலையம் அருகே உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் இன்று காலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஈரோடு மட்டுமின்றி பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் கோவிலில் வாக்கு கேட்டு சென்றனர்.

    மேலும் கொடுமுடி மகுடேஸ்வரர், கோபி பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், சாரதா மாரியம்மன், பவானி கருமாரியம்மன், பெருந்துறை ஈஸ்வரன் கோவில், சென்னிமலை முருகன் கோவில் உள்பட அனைத்து கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவில், பெருமாள் கோவில், பத்ர காளியம்மன், பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், கருங்கல் பாளையம் மாரியம்மன், பார்க் ரோடு எல்லை மாரியம்மன், வீரப்பன் சத்திரம் மாரியம்மன் கோவில் உள்பட நகரில் உள்ள அனைத்து கோவில்களிலும் இன்று காலை முதலே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதரிடம் அவரது தங்கையான சமயபுரம் மாரியம்மன் சீர்பெறும் நிகழ்ச்சி கோவில் உள் பிரகாரத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
    அம்மன் கோவில்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் அம்மன் ஒவ்வொரு நாளும் காலையில் பல்லக்கிலும், இரவு பல்வேறு வாகனங்களிலும் எழுந்தருளினார். 9-ம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் இரவு கோவில் உள்பிரகாரத்தில் அமைக்கப்பட்ட சிறிய அளவிலான தெப்பத்தில் அம்மன் காட்சி அளித்தார்.

    இந்தநிலையில், ஒவ்வொரு ஆண்டும் சமயபுரத்திலிருந்து மாரியம்மன் கொள்ளிடம் ஆற்றங்கரைக்கு சென்று அங்கே தனது அண்ணனான ஸ்ரீரங்கம் ரெங்கநாதரிடம் சீர்பெறும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக அம்மன் புறப்பாடு கோவில் உள் பிரகாரத்தில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக நேற்று காலை 8 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி கோவிலின் உள் பிரகாரத்தை வலம் வந்தார்.

    அதனைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதரிடம் அவரது தங்கையான சமயபுரம் மாரியம்மன் சீர்பெறும் நிகழ்ச்சி கோவில் உள் பிரகாரத்தில் நடைபெற்றது. இதனையொட்டி, ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் கோவில் பணியாளர்கள் சீர்வரிசை பொருட்களான பட்டுப்புடவை, மாலை, சந்தனம், பழங்கள் உள்ளிட்ட பொருட்களை சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு எடுத்து வந்தனர். அதனை, சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் செல்வராஜிடம் வழங்கினர். அதைத்தொடர்ந்து அம்மனுக்கு புடவை சாத்தப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
    5 நாட்களுக்கு பின் இன்று கோவில்கள் திறக்கப்பட்ட நிலையில் பழனி கோவிலில் ஏற்கனவே பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் இன்று காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த 14-ந் தேதி முதல் நேற்று வரை தொடர்ச்சியாக 5 நாட்கள் அனைத்து வழிபாட்டு தலங்களும் அடைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

    இதனையடுத்து பொங்கல் உள்பட பண்டிகை நாட்களில் கோவில்களுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் வீடுகளிலேயே வழிபாடு நடத்தினர். முருகபெருமானின் 3-ம் படை வீடான பழனி கோவிலுக்கு வருடந்தோறும் தைப்பூசத்தை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரையாக வருவது வழக்கம்.

    அதன்படி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும் தொடர்ந்து பழனியை நோக்கி பாதயாத்திரையாக பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

    நேற்று தைப்பூச நாளில் பெரியநாயகி அம்மன் கோவில் வளாகத்தில் பக்தர்கள் இன்றி தைப்பூச தேரோட்டம் நடைபெற்றது. இதில் கோவில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

    தேரோட்டத்தை காண பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பக்தர்கள் அடிவாரத்தில் நின்றபடியே மலைக்கோவிலை பார்த்து சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் பல்வேறு மண்டபங்களில் தங்கி இருந்தனர்.

    இன்று காலை நடை திறக்கப்பட்டதும் படிப்பாதை, யானைப்பாதை வழியாக காத்திருந்த பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய திரண்டனர்.

    ஒரே நேரத்தில் கூட்டம் அதிகரிப்பதை தடுக்க தடுப்புகள் அமைத்து ஆயிரம் பேர் கொண்ட குழுக்களாக பிரித்து பிரித்து அனுப்பினர். மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு அவர்கள் அங்கேயே தங்க விடாமல் அனுப்பி வைக்கப்பட்டனர். இருந்தபோதும் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    காவடி சுமந்து வந்த பக்தர்கள் அதனை காணிக்கை செலுத்தியபிறகு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைத்து பாதைகளிலும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு திரண்டதால் மலைக்கோவிலில் கூட்டம் அலைமோதியது.
    பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநில பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் ராமேசுவரத்தில் இன்று திரண்டனர். இதனால் ராமேசுவரம் நகர் முழுவதும் இன்று பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.
    கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடலவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் மக்கள் அதிகம் கூடுவதை தடுப்பதற்காக ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு தினங்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டது.

    இந்து சமயஅறநிலையத் துறைக்கு சொந்தமானவை உள்ளிட்ட அனைத்து கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், பள்ளி வாசல்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டது.

    கடந்த 2 வாரங்களாக இந்த நடைமுறை கோவில்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தைப்பூச திருவிழாவிலும் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இதனால் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் இல்லாமல் தைப்பூச திருவிழா நடைபெற்றது.

    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலிலும் பக்தர்கள் இல்லாமல் தைப்பூச திருவிழா நடந்தது. ஏற்கனவே வெள்ளி, சனி, ஞாயிறு என 3 தினங்கள் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், தைப்பூச திருவிழாவில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமையும் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

    இதனால் கடந்த 5 நாட்களாக ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்று சாமி கும்பிட்டுவிட்டு சென்றனர். 5 நாட்கள் தரிசனத்துக்கு தடை பற்றி அறியாத ஏராளமான வெளிமாநில பக்தர்கள் ராமேசுவரம் பகுதியில் தங்கி இருந்தனர்.

    இந்நிலையில் 5 நாட்கள் தடை இன்று முடிவுக்கு வந்தது. இதனால் பக்தர்கள் அனைவரும் வழக்கம்போல் இன்று கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். 5 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் இன்று கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    ராமேசுவரத்தில் அதிகாலையிலேயே பக்தர்கள் கோவிலில் நடந்த ஸ்படிக லிங்க பூஜையில் கலந்து கொண்டனர். அதன் பின்பு காசிக்கு இணையாக கருதப்படும் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடினர். பின்னர் கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதிகளில் நடந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநில பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் ராமேசுவரத்தில் இன்று திரண்டனர். இதனால் ராமேசுவரம் நகர் முழுவதும் இன்று பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.

    ×