search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மதுரை மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர்-பிரியாவிடை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.
    X
    மதுரை மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர்-பிரியாவிடை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.

    மீனாட்சி அம்மன் கோவிலில் பொற்றாமரை குளக்கரையில் நடந்த தெப்ப திருவிழா

    வரலாற்றிலேயே தெப்பத்திருவிழாவை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரை குளத்தில் நடத்தியது, இது தான் முதல் முறையாகும் என்று பட்டர் ஹலாஸ் கூறினார்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆடி, ஆவணி, ஐப்பசி, தை, மாசி திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த ஆண்டுக்கான தை தெப்பத்திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது.

    கொரோனா கட்டுப்பாடு காரணமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று அரசு உத்தரவிட்டிருந்தது. எனவே கொடியேற்றத்தை காண பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

    விழா நாட்களில் சுவாமி-அம்மன் வீதி உலா கோவிலுக்குள் உள்ள ஆடி வீதியில் நடைபெறுகிறது. ஆனால் தெப்பத்திருவிழா மாரியம்மன் கோவிலுக்கு எதிரே உள்ள தெப்பக்குளத்தில் வழக்கம்போல் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அரசு உத்தரவுப்படி அனைத்து திருவிழாக்களையும் கோவிலுக்குள் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து கடந்த 12-ந் தேதி சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலையும், 14-ந் தேதி வலை வீசி அருளிய லீலையும், 16-ந் தேதி தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சியும், கதிரறுப்பு திருவிழாவும் கோவிலுக்குள்ளேயே பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

    விழாவில் சிகர நிகழ்ச்சியான தெப்பத்திருவிழாவை, கோவிலுக்குள் உள்ள பொற்றாமரை குளக்கரையில் நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்தது.

    அதன்படி நேற்று மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் அதிகாலையில் சேத்தி மண்டபத்தில் இருந்து புறப்பாடாகி பொற்றாமரை குளத்திற்கு வந்தனர். அங்கு குளத்தை இருமுறை வலம் வந்து, அங்குள்ள ராணிமங்கம்மாள் மண்டபத்தில் எழுந்தருளினார்கள். அங்கு சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு தீபாராதனை நடந்து விழா பூஜைகள் நடந்தன.

    பின்னர் இரவு ஒரு முறை சுவாமியும், அம்மனும் பொற்றாமரை குளத்தை வலம் வந்ததும் தீபாராதனை காண்பிக்கபட்டது. அதை தொடர்ந்து குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஆடி வீதிகளை வலம் வந்து காட்சி அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து பட்டர் ஹலாஸ் கூறும்போது, “தை தெப்பத்திருவிழா ஆங்கில வருட தொடக்கத்தின் முதல் திருவிழாவாகும். தெப்பத்திருவிழாவை எப்படியாவது தெப்பத்தில் வைத்து நடத்தி விடுவோம். அங்கு தண்ணீர் இல்லாவிட்டாலும் நிலை தெப்பமாக திருவிழா நடைபெறும். ஆனால். கொரோனா பரவல் காரணமாக கோவிலுக்குள்ளேயே திருவிழாவை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. வரலாற்றிலேயே தெப்பத்திருவிழாவை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரை குளத்தில் நடத்தியது, இது தான் முதல் முறை” என்றார்.

    தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரம்ப இருந்தும் கொரோனாவால் தெப்பத்திருவிழா நடைபெற முடியாமல் போனது பக்தர்களை ஏமாற்றம் அடைய செய்தது.
    Next Story
    ×