என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ‘எங்கேயும் எப்போதும்‘ படத்தை இயக்கிய சரவணன் இயக்கத்தில் நடிகை திரிஷா ஆக்‌ஷன் ஹீரோயினாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Trisha #Saravanan
    ஜெய், அஞ்சலி, சர்வானந்த், அனன்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் ‘எங்கேயும் எப்போதும்‘. ஏ.ஆர்.முருகதாசின் உதவி இயக்குனர் எம்.சரவணன் இயக்கத்தில் உருவானது. 

    இந்த படத்தை தொடர்ந்து ‘இவன் வேறமாதிரி’, ‘வலியவன்’ ஆகிய படங்களை இயக்கினார். அந்த படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. கன்னடத்தில் புனித் ராஜ்குமார் நடித்த ‘சக்ரவியூகா’ படத்தை இயக்கினார்.



    இடையே விபத்து ஏற்பட்டதால் சில காலம் ஓய்வில் இருந்தார். தற்போது மீண்டும் இயக்குனர் பணிக்கு திரும்பி உள்ளார். முழுக்க முழுக்க நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து கதை ஒன்றை எழுதி உள்ளார். அந்த கதையில் நடிக்க திரிஷா சம்மதம் தெரிவித்துள்ளார். தற்போது திரிஷாவுடன் நடிக்க உள்ளவர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த படம் ஆக்‌‌ஷனுக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக உருவாக இருக்கிறது. #Trisha #Saravanan

    பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஓவியா நடிப்பில் வெளியாக இருக்கும் 90 எம்.எல். படத்தின் அதிகாலை சிறப்பு காட்சியை ரசிகர்களுடன் சேர்ந்து பார்க்கவிருப்பதாக ஓவியா தெரிவித்துள்ளார். #90ML #Oviyaa
    பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஓவியா பிரபலம் ஆனார். ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் பல பக்கங்களை வைத்துள்ளனர். ஆனால் அந்த புகழை பயன்படுத்தி சில படங்களை ஒப்புக்கொண்டு திரையுலகில் மீண்டும் ஒரு ரவுண்டு வராமல் தனக்கு பிடித்த கதாபாத்திரத்துக்காகக் காத்திருந்தார்.

    தற்போது 90 எம்.எல் என்ற அடல்ட் ஒன்லி படத்தில் ஒவியா நடித்துள்ளார். டிரெய்லரில் இடம்பெற்ற காட்சிகளுக்கும், வசனங்களுக்கும் விமர்சனங்கள் அதிக அளவில் வர அதற்கான பதிலையும் அதே பாணியில் கூறினார்.


    தற்போது படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி ஒன்றைத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 90 எம்.எல் திரைப்படம் பிப்ரவரி 22-ம் தேதி வெளியாக உள்ளது.

    அன்று தான் ரசிகர்களுடன் சேர்ந்து அதிகாலை சிறப்பு காட்சியைப் பார்க்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த படத்துக்கு சிம்பு இசையமைத்திருக்கிறார். யோகி பாபு, சிம்பு, பிரபுதேவா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் வலம் வருகின்றனர். #90ML #Oviyaa #STR #AnitaUdeep

    கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா - ஜோதிகா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற `காக்க காக்க' படத்தின் இரண்டாவது பாகத்தை உருவாக்குவதாற்கான பணிகள் துவங்கியிருப்பதாக கூறப்படுகிறது. #KaakhaKaakha2 #Suriya #Jyotika
    வெற்றிப் படங்களின் அடுத்தடுத்த பாகங்களை எடுப்பதே தமிழ் சினிமாவின் தற்போதைய டிரெண்டாக உள்ளது. அந்த வகையில், வேலையில்லா பட்டதாரி 2, சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2, விஸ்வரூபம் 2, மாரி 2, சார்லி சாப்ளின் 2 என சமீபத்தில் வெளியான பெரும்பாலான படங்களுக்கு போதிய வரவேற்பு இல்லை.

    இந்த நிலையில், கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா - ஜோதிகா நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற `காக்க காக்க' படத்தின் இரண்டாவது பாகத்தை உருவாக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. காக்க காக்க படத்தை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு, இரண்டாவது பாகம் குறித்து கவுதம் மேனனனிடம் பேசியிருப்பதாகவும், அதற்கான பணிகள் விரைவில் துவங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.



    இதிலும் சூர்யா - ஜோதிகாவை நடிக்க வைக்க முடிவு செய்திருப்பதாகவும், ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைக்க இருப்பதாகவும், அடுத்த வருடம் படப்பிடிப்பு துவங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    கவுதம் மேனன் தற்போது எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம், ஜெயலலிதா வாழ்க்கை பற்றிய இணையதொடரில் பிசியாக இருக்கிறார். இவற்றை முடித்த பிறகே `காக்க காக்க 2' தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #KaakhaKaakha2 #Suriya #Jyotika #GauthamMenon

    ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் கார்த்தி - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் `தேவ்' படத்தின் முன்னோட்டம். #Dev #Karthi #RakulPreetSingh
    பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்‌ஷ்மன் குமார் தயாரித்துள்ள படம் `தேவ்'.

    கார்த்தி நாயகனாகவும், ரகுல் ப்ரீத் சிங் நாயகியாவும் நடித்துள்ள இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், வம்சி கிருஷ்ணா, ரேணுகா, விக்னேஷ்காந்த், அமுதா ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். நவரச நாயகன் கார்த்திக் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

    ஒளிப்பதிவு - ஆர்.வேல்ராஜ், படத்தொகுப்பு - ரூபன், தயாரிப்பு வடிவமைப்பு - ராஜீவன், ஸ்டண்ட் - அன்பறிவ், கலை இயக்குனர் - ராஜீவன், பாடல்கள் - தாமரை, விவேக், ரஜத், நடனம் - தினேஷ், ஷோபி, உடை வடிவமைப்பு - நீராஜா கோனா, நிர்வாக தயாரிப்பு - கே.வி.துரை, தயாரிப்பு - எஸ்.லக்‌ஷ்மன் குமார், எழுத்து, இயக்கம் - ரஜத் ரவிஷங்கர்.



    படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கார்த்தி பேசும்போது,

    இந்த படம் காதல் கதை மட்டுமல்ல. உங்களை சுற்றியிருக்கும் அனைத்தையும் விரும்ப வேண்டும் என்று கூறும் படம். இந்த நிமிடம் உன்னுடைய இதயம் என்ன சொல்கிறதோ அதை செய் என்ற கருத்தை வலியுறுத்தும். ரஜத் திறமையான இயக்குநர். அவர் இன்னும் நிறைய படங்கள் இயக்க வேண்டும் என்று அவரை பார்க்கும் போதெல்லாம் கூறுவேன். ரகுல் ப்ரித் சிங் சிறந்த நடிகை. இதுபோல அவர் பல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். இப்படத்திற்காக ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அனைவருக்கும் இப்படம் மிகவும் பிடிக்கும் என்று கூறினார். 

    தேவ் காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகிறது. #Dev #Karthi #RakulPreetSingh #RajathRaviShankar

    தேவ் டிரைலர்:

    ‘8 தோட்டாக்கள்’ படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கும் ‘குருதி ஆட்டம்’ படத்தில் அதர்வா அஜித் ரசிகராக நடிப்பதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். #KuruthiAttam #Atharvaa
    அதர்வா நடிப்பில் அடுத்ததாக பூமராங் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. அதர்வா தற்போது ‘8 தோட்டாக்கள்’ பட இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் ‘குருதி ஆட்டம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதர்வாவின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

    இதில் அஜித்குமார் மீது அன்பு கொண்ட தீவிர ரசிகராக அதர்வா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். படம் பற்றி இயக்குநர் ஸ்ரீகணேஷ் கூறியதாவது:-



    ‘‘ஒரு உச்ச நடிகரின் ரசிகரை பிரதான கதாபாத்திரமாக வைத்து, இதற்கு முன்பு சில படங்கள் வந்துள்ளன. இந்த படத்தின் நாயகன் அஜித்குமார் ரசிகராக வருவதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. படத்தின் கதை மற்றும் கதாபாத்திரத்தை அதர்வாவிடம் சொன்னபோது, மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

    கதைப்படி, அதர்வா கபடி வீரர். அஜித்குமாரின் தீவிர ரசிகர். அவர் ஆடுகிற ஆட்டம்தான், குருதி ஆட்டம். கதாநாயகி பிரியா பவனி சங்கரின் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. த.முருகானந்தம் தயாரிக்கிறார். படத்தின் பெரும்பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு முடிவடைந்து விடும்.’’ என்றார். #KuruthiAttam #Atharvaa #PriyaBhavaniShankar #AjithKumar

    பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ‘ரவுடி பேபி’ பாடல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. #RowdyBaby #Dhanush #Saipallavi
    பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, டோவினோ தாமஸ், கிருஷ்ணா, வரலட்சுமி, ரோபோ சங்கர், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாரி 2’. 

    யுவன் ‌ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் ‘ரவுடி பேபி’ என்ற பாடல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் வெளியான சில நாட்களிலேயே, ‘ரவுடி பேபி’ பாடல் வீடியோவை யூடியூப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்கள். தொடக்க முதலே பாடலுக்கு பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.



    தற்போது வரை ரவுடி பேபி பாடலை 200 மில்லியன் (20 கோடி) பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர். இதன்மூலம் தமிழ் சினிமாவில் 20 கோடி பார்வையாளர்களை பெற்ற முதல் வீடியோ பாடல் என்ற சாதனையை ‘ரவுடி பேபி’ படைத்துள்ளது. மேலும் தென்னிந்திய திரையுலகில் அதிகப் பார்வையாளர்களைக் கொண்ட யூடியூப் வீடியோ பட்டியலில் ‘ரவுடி பேபி’ முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. RowdyBaby #Dhanush #Saipallavi #Maari2

    ரவுடி பேபி பாடல்:

    எம்.ஜி.ஆர். முதல்- அமைச்சராக பதவி வகித்தபோது, ஒரு படத்தில் நடிக்க ஏற்பாடு நடந்தது. பாடல் பதிவும் நடந்தது. ஆனால், அத்துடன் படம் கைவிடப்பட்டது.
    எம்.ஜி.ஆர். முதல்- அமைச்சராக பதவி வகித்தபோது, ஒரு படத்தில் நடிக்க ஏற்பாடு நடந்தது. பாடல் பதிவும் நடந்தது. ஆனால், அத்துடன் படம் கைவிடப்பட்டது.

    1977-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சரானார்.

    தேர்தலில் வெற்றி பெற்றபோது, எம்.ஜி.ஆர். நடித்த "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்'' என்ற படம் முடிவடையும் தருணத்தில் இருந்தது. மீதியிருந்த இரண்டொரு காட்சிகளை நடித்துக் கொடுத்துவிட்டு, முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். பதவி ஏற்றார். அதன்பின் நடிக்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டது.

    ஆனால், 1978-ல் அவர் படத்தில் நடிக்க ஏற்பாடு செய்தார். அதுபற்றி, கவிஞர் வாலி எழுதியிருப்பதாவது:-

    `அக்கரைப்பச்சை', `இளைய தலைமுறை' முதலிய படங்களைத் தயாரித்த என் நண்பர் ஜி.கே.தர்மராஜ் அவர்களும், புகழ் வாய்ந்த ஒளிப்பதிவாளர் மாருதிராவ் அவர்களும் ஒரு நாள் இரவு என் வீட்டிற்கு வந்தார்கள்.

    "நான் ஒரு படம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். நண்பர் மாருதிராவும் எனக்கு உறுதுணையாக இருக்கிறார். நíங்கதான் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எல்லாம் எழுதணும்'' என்று வந்த விஷயத்தை சுருக்கமாக விளக்கினார், தர்மராஜ்.

    ``இப்போது என் கைவசத்தில் எந்தக் கதையும் இல்லையே...'' என்று நான் தயங்கியவாறே சொல்லிவிட்டு, "யார் ஹீரோவாக நடிக்கப்போகிறார்?'' என்று தர்மராஜை வினவினேன்.

    "யார் ஹீரோவா நடிக்கப்போகிறார்ங்கறதை அப்புறம் சொல்றேன். ஆனால் அந்த ஹீரோதான் உங்ககிட்ட கதையை வாங்கி, வேலையை ஆரம்பிக்கச் சொல்லி எங்களை இங்கே அனுப்பினார்...'' என்று மாருதிராவ் ஒரு சஸ்பென்ஸ் வைத்துப் பேசினார்.

    "அவருக்கு எப்படிக் கதை எழுதணும்னு, உங்களுக்குத்தான் தெரியும்னு அவரே சொன்னாருங்க. அவர் வீட்லேருந்துதான், அவர் சொல்லி அனுப்பித்தான் நாங்க நேர உங்க வீட்டுக்கு வந்திருக்கோம்...'' என்று புன்னகைத்தார், தர்மராஜ்.

    நான்தான் கதை வசனம் எழுத வேண்டுமென்று என் எழுத்தில் அவ்வளவு ஆர்வம் கொண்டு, இவர்களை என் வீட்டிற்கு அனுப்பிய ஹீரோ யாராக இருக்கக்கூடும் என்று நான் வியப்பும், மகிழ்வும் விழிகளில் குமிழியிட ஒரு வினாடி சிந்தனையில் ஆழ்ந்தேன்.

    பிறகு, தர்மராஜிடம், "உங்களை என்கிட்ட அனுப்பிச்ச ஹீரோ யாரு சார்? அதெ முதல்ல சொல்லுங்க...'' என்று விடாப்பிடியாகக் கேட்டேன்.

    அவர் யாரென்று, தர்மராஜ் சொன்னதும் நான் திகைத்துப்போனேன். இது கனவா? நனவா? என்று நான் கிள்ளிப் பார்க்காத குறைதான்.

    "நிஜமாவா சொல்றீங்க?'' என்று நான் மாருதிராவிடமும், தர்மராஜிடமும் மாறி மாறிக்கேட்டேன்.

    "உங்களுக்கு சந்தேகமிருந்தா, நீங்க வேணும்னா அவர்கிட்டயே, போன் பண்ணிப் பேசுங்க...'' என்றார் தர்மராஜ்.

    "அதுக்குக் கேக்கலீங்க. அவர் சினிமாவில் நடிக்க முடியாதே... அப்படியிருக்கும்போது எப்படி உங்ககிட்ட நடிக்கிறேன்னு ஒத்துக்கிட்டாரு? சாத்தியமில்லாத விஷயத்தைச் சொல்றீங்களே சார்!'' என்று சொன்னேன் நான்.

    தர்மராஜ் மெல்லிய புன்னகையை இதழோரம் இழையவிட்டவாறே, "இந்தப் பத்தாயிரம் ரூபாயை அட்வான்சா வாங்கிக்கங்க. அப்புறம் அண்ணனோட நீங்களே பேசி, அவர் நடிக்கிறார்ங்கற விஷயத்தை உறுதி பண்ணிக்கிட்டு, கதை எழுத ஆரம்பியுங்க...'' என்று என் கையில் காசோலையைத் திணித்துவிட்டு மாருதிராவுடன் காரில் ஏறிப்போய்விட்டார்.

    மறுநாள் அதிகாலையிலேயே நானே என் காரை ஓட்டிக்கொண்டு அன்புக்குரிய என் அண்ணனை அவர் இருப்பிடத்தில் சந்தித்து, "நீங்க படத்திலே நடிக்க ஒத்துக்கிட்டு, என்னைக் கதையெழுதச் சொல்லி தர்மராஜையும், மாருதிராவையும் என் வீட்டுக்கு அனுப்பிச்சீங்களாண்ணே!'' என்று ஒரே மூச்சாகப் பேசி முடித்தேன்.

    "ஆமாம். நான் நடிக்கப்போகிறேன்... சீக்கிரம் கதையை ரெடி பண்ணுங்க. ஏப்ரல் 14-ந்தேதி பூஜை!'' என்று அவர் சொன்னதும் நான் வியப்பால் வாயடைத்துப்போனேன்.

    ஏனெனில் என்னிடத்தில் படத்தில் நடிக்கப்போவதாகச் சொன்னவர், அப்போது முதல்-அமைச்சராகக் கோட்டையில் கொலுவிருந்த என் அன்பு அண்ணன் எம்.ஜி.ஆர். அவர்கள்.

    "ஏண்ணே, நீங்க முதல்-அமைச்சரா இருந்துக்கிட்டு சினிமாவில் நடிக்கறது...'' என்று நான் சொல்வதற்குள், "சாத்தியமான்னு கேக்குறீங்களா? சாத்தியமா இருக்கத் தொட்டுத்தான் உங்களைக் கதை எழுதச் சொல்றேன்'' என்று பாசத்தோடு என் கன்னத்தை வருடினார் எம்.ஜி.ஆர்.

    நான் வீடு வந்து சேர்ந்தேன். இரவு பகலாக உட்கார்ந்து எம்.ஜி.ஆர். நடிப்பதற்காக ஒரு கதையை உருவாக்கினேன்.

    10 நாட்கள் கழித்து, `கதை தயார்' என்று எம்.ஜி.ஆருக்கு டெலிபோன் செய்தேன்.

    அன்று இரவு, அண்ணன் எம்.ஜி.ஆரின் நெருங்கிய உறவினரும், அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமானவருமான குஞ்சப்பன், என் வீட்டிற்கு வந்தார்.

    "நாளைக் காலை 6 மணி விமானத்தில் சி.எம். கூட நீங்களும் மதுரைக்குப் போறீங்க. விமானப் பயணத்திலேயே கதையைக் கேட்டுக்கறேன்னு சொன்னாரு. அடுத்த நாள் விமானத்தில் நீங்க மதுரையிலிருந்து மெட்ராசுக்குத் திரும்பிடலாம். அதுக்கும் ஏற்பாடு பண்ணி வச்சிருக்கறேன்'' என்று குஞ்சப்பன் தான் வந்த விஷயத்தை விளக்கிச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

    விமானத்திலேயே எம்.ஜி.ஆருக்குக் கதையைச் சொன்னேன். அவருக்கு மிகவும் பிடித்துப்போயிற்று. திருநெல்வேலிக்கும் என்னை உடன் அழைத்துச் சென்றார். அன்று இரவு நெடுநேரம், நானும் அவரும் அந்தக் கதையைப் பேசிப் பேசி மெருகேற்றினோம்.

    படத்திற்கு, "உன்னை விடமாட்டேன்'' என்று தலைப்பு வைத்தால் நன்றாயிருக்கும் என்று சொன்னேன். எம்.ஜி.ஆர். பொன்னிறம் மின்னப் புன்னகைத்தார். அவர், புன்னகைத்தால் `சம்மதம்' என்று அர்த்தம்.

    சென்னை வந்த பிறகு திரைக்கதையை எழுதும் பணியில் நான் ஈடுபட்டாலும், `ஒரு மாநில முதல்-அமைச்சர் சினிமாவில் நடிப்பதை, மத்திய அரசு எப்படி ஒத்துக்கொள்ளும்' என்கிற சந்தேகம் என் சிந்தனை ஓட்டத்தை அவ்வப்போது தடை செய்து கொண்டுதானிருந்தது.

    ஓரிரு வாரங்கள் கழித்து ஒருநாள் அதிகாலையில் தொலைபேசியின் மணி, என் துயிலைக் கலைத்தது.

    ரிசீவரை எடுத்து, `ஹலோ!' என்றேன்.

    `வாழ்க!' என்று சொல்லிவிட்டு, "காலை பேப்பர் பார்த்தீங்களா? உடனே எடுத்துப் பாருங்க'' என்றார் எம்.ஜி.ஆர். உடனே போனை வைத்துவிட்டார்.

    "மாநில முதல்-அமைச்சராக இருந்து கொண்டு, தன் கடமைகளுக்கு குந்தகம் வராமல் எம்.ஜி.ஆர். சினிமாவில் நடிப்பதில் தனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை'' என்று பொருள்பட பத்திரிகையாளர்களிடம் பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்கள் சொல்லியிருந்த விஷயம், பத்திரிகையில் பிரசுரமாகியிருந்தது.

    பிறகென்ன! இரவு பகலாக திரைக்கதையை எழுதி முடித்தேன். படத்தின் இயக்குனராக கே.சங்கரை அமர்த்திக் கொள்ளும்படி எம்.ஜி.ஆர். என்னிடத்திலும், தயாரிப்பாளர் தர்மராஜிடமும் சொன்னார்.

    "யாரை இசையமைப்பாளராகப் போடுவது?'' என்று தர்மராஜ் கேட்டார்.

    "புதுசா ஒரு பையன் வந்திருக்கிறாரே! அந்தப் பையனைப் போட்டுக்கலாம். பாட்டெல்லாம் கேட்டேன். நல்லாயிருக்கு'' என்றார், எம்.ஜி.ஆர்.

    "நீங்க, இளையராஜாவைச் சொல்றீங்களா?'' என்றேன் நான்.

    "ஆமாய்யா!'' என்றார் எம்.ஜி.ஆர்.

    பிறகு என்னைப் பார்த்து, "நீங்கபோயி பூஜைக்கு தலைமை தாங்க வரச்சொல்லி, கவர்னரைக் கூப்பிடுங்க. தர்மராஜையும் அழைச்சுக்கிட்டுப் போய், நான் சொன்னேன்னு சொல்லுங்க...'' என்று எம்.ஜி.ஆர். சொன்னதன் பேரில், நானும், தர்மராஜ×ம் கவர்னர் மாளிகைக்குச் சென்று பூஜையில் கலந்து கொள்ள அழைத்தோம்.

    `என்ன கதை? என்ன மாதிரிப்படம்?' என்றெல்லாம் கவர்னர் என்னிடம் கேட்டறிந்து கொண்டு, வருவதற்குச் சம்மதம் தெரிவித்தார்.

    பிறகு, சில காரணங்களை முன்னிட்டு கவர்னர் வருகை தவிர்க்கப்பட்டது.

    பிரசாத் ஸ்டூடியோவில் பாடல் ஒலிப்பதிவுடன், எம்.ஜி.ஆர். அவர்களும், ஏனைய அமைச்சர்களும் கலந்து கொள்ள படத்தின் பூஜைக்கான அழைப்பிதழ்கள் அச்சாகிக் கொண்டிருந்தன.

    விழாவிற்கு இரண்டு நாள் முன்னதாக அண்ணன் எம்.ஜி.ஆர். என்னைத் தொலைபேசியில் அழைத்து, "படத்துவக்க விழாவிற்கு, நாஞ்சில் மனோகரனைத் தலைமை தாங்கச் சொல்லி கேட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் வரவேற்புரையை நிகழ்த்துங்கள்'' என்று என்னைப் பணிந்தார்.

    பூஜை, குறிப்பிட்ட நாளில் கோலாகலமாக நடந்தது. இளையராஜாவின் இசையில் டி.எம்.சவுந்தரராஜன் பாட, எம்.ஜி.ஆர். முன்னிலையில் பாடல் ஒலிப்பதிவாயிற்று.

    அந்நாளில் எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்து கொண்டே, படத்திலும் நடிக்கப் போகிறார் என்னும் செய்தியை, அன்றாடம் பத்திரிகைகள் கொட்டை எழுத்துக்களில் பிரசுரித்துக் கொண்டு வந்தன.

    ஓரிரு மாதங்களுக்குப் பிறகு, படத்தில் நடிப்பதை, என்ன காரணத்திற்காகவோ எம்.ஜி.ஆர். மறுபரிசீலனை செய்து தவிர்த்து விட்டார்.

    காரணத்தை நானும் கேட்கவில்லை; அவரும் சொல்லவில்லை.''

    இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.
    சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகிபாபு, எலிஸ்சா நடிப்பில் உருவாகி வரும் கூர்கா படத்தின் முன்னோட்டம். #Gurkha #YogiBabu
    தீவிரமான திட்டமிடுதலே ஒரு இலக்கை அடைவதற்கான மிகச்சரியான வழிமுறை. முக்கியமாக சினிமாவிற்கு இதுபொருந்தும். குறிப்பாக யோகிபாபுவின் "கூர்கா" திரைப்படத்தை நிலையான வேகத்தில், சரியான திட்டமிடலோடு படப்பிடிப்பை மிக குறுகிய காலத்திலேயே முடித்தனர்.

    "இதற்கான பாராட்டுக்கள் அனைத்தும் படக்குழுவினரையே சேரும். குறிப்பாக உதவி இயக்குனர்கள் செய்த அயராத உழைப்புக்கு எனது மனமார்ந்த நன்றி. "கூர்கா" கதையின் தொடர்ச்சியை அதிகமாக நம்பியிருந்ததால், அதை அவர்கள் மிகவும் கச்சிதமாக கடைப்பிடித்தனர். நடிகர்கள் யோகி பாபு, கனடா அழகி எலிஸ்சா, மற்றும் அனைத்து நடிகர்களும் நடிகைகளும் தங்கள் பங்களிப்பை மிக சிறப்பாக அளித்தனர். தற்பொழுது இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கும் கூர்கா, கோடை விருந்தாக திரைக்கு வரும் என்று எதிர்பாக்கலாம்" என்றார் படத்தின் இயக்குனர் சாம் ஆண்டன்.

    காமெடி மற்றும் ஆக்‌ஷன் கலந்த திரைப்படமாக வளரும் "கூர்கா", ஒரு கடத்தப்பட்ட காரை, ஒரு அப்பாவி கூர்காவும் அவரது நாயும் எப்படி கண்டுப் பிடிக்கிறார்கள் என்பதே மையக்கரு.

    சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்தை, தனது நண்பர்களோடு இணைந்து "4 மங்கீஸ்" ஸ்டுடியோஸ் சார்பில் அவரே தயாரிக்கவும் செய்கிறார். ராஜ் ஆர்யன் இசையமைக்க , கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரூபன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.
    அலேகா படத்தில் பிசியாக நடித்து வரும் நடிகர் ஆரி, தன்னுடைய பிறந்த நாளை வித்தியாசமாக புதுமையான முறையில் கொண்டாடி இருக்கிறார். #Aari
    சமுதாயத்திற்கு பல நல்ல செயல்களை செய்து வரும் ஆரி தனது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். தற்போது, காதலின் உயர்வை சொல்லும் 'அலேகா' என்ற படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு கோடம்பாக்கத்தில் இன்று நடைபெற்றது. படக்குழுவினர் அவரது பிறந்த நாளுக்காக 5 கிலோ எடையுள்ள கேக்கை தயார் செய்திருந்தனர். 

    ஆனால், இயற்கை உணவுக்கு முன்னுரிமை தரும் ஆரி, கேக் என்பது இயற்கை உணவு வகையை சார்ந்தது கிடையாது என்று கூறி  படப்பிடிப்புத் தளத்தில் உள்ள அனைவருக்கும் இளநீர் கொடுத்து தனது பிறந்த நாளை கொண்டாடினார். உடன் ஐஸ்வர்யா தத்தாவும் இருந்தார்.



    இப்படத்தை க்ளோஸ்டார் கிரியேஷன்ஸ் பி.தர்மராஜ் மற்றும் கிரியேட்டிவ் டீம்ஸ் இ.ஆர்.ஆனந்தன் தயாரிக்கிறார்கள். 'அய்யனார்' புகழ் எஸ்.எஸ்.ராஜா மித்ரன் இயக்குகிறார். இசை - சத்யா, ஒளிப்பதிவு - தில் ராஜ், படத்தொகுப்பு - கார்த்திக் ராம், பாடல்கள் - யுகபாரதி, விவேகா மற்றும் லாவரதன் ஆகியோர் பணியாற்றி வருகிறார்கள்.
    மேயாதமான் படம் மூலம் மிகவும் பிரபலமான பிரியா பவானி சங்கர், அடுத்ததாக பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். #PriyaBhavaniShankar
    சின்னத்திரையில் பிரபலமான பிரியா பவானி சங்கர், ‘மேயாத மான்’ படம் மூலம் பெரிய திரைக்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே அதிக கவனம் பெற்ற இவர், கார்த்தி நடித்த ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்தார். இவரது நடிப்பில் மான்ஸ்டர், குருதி ஆட்டம் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

    மேலும் ஜீவா மற்றும் அருள்நிதி நடிக்கும் படங்களில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இந்நிலையில், துல்கர் சல்மான் நடிக்க இருக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.



    ரா.கார்த்திக் இயக்க இருக்கும் இப்படத்திற்கு ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.
    சினிமா விஷயங்களை வீட்டு வாசல்படிக்கு வெளியிலேயே விட்டு வந்து விடுவேன் என்று நடிகை சமந்தா பேட்டி அளித்துள்ளார். #Samantha
    நடிகை சமந்தா திருமணத்துக்கு பிறகும் தமிழ், தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

    “தொழிலுக்கும் வாழ்க்கைக்கும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? எதற்கு எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என்று எனக்கு தெரியும். சினிமாவில் எவ்வளவு பிசியாக இருந்தாலும் சரி குடும்ப வாழ்க்கைக்கு எந்த இடையூறும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன். இந்த விஷயத்தில் நான் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பேன்.

    நாம் சந்தோஷமாக இருக்கத்தான் உழைக்கிறோம் சம்பாதிக்கிறோம். வீட்டில் நுழைந்தால் ஒரு ஆனந்தமயமான சூழல் இருக்க வேண்டும். நானும், நாக சைதன்யாவும் ஒரே துறையில் இருக்கிறோம். கணவரின் மொத்த குடும்பமும் சினிமா துறையில் ஏதோ ஒரு வகையில் இணைந்து இருக்கிறார்கள்.



    ஆனால் வீட்டில் சினிமா பற்றி பேசமாட்டோம். மாலை 6 மணி ஆகிவிட்டால் எல்லா சினிமா விஷயங்களையும் மறந்து என்னை பற்றி சைதன்யாவும், அவரைப்பற்றி நானும் யோசிப்போம். எங்கள் வாழ்க்கையை பற்றி மட்டுமே சிந்திப்போம். சினிமா விஷயங்களை வீட்டு வாசல்படிக்கு வெளியிலேயே விட்டு வந்து விடுவோம்.

    அதனால் எங்களுக்கு தேவையான நேரத்தை எங்களால் ஒதுக்கி கொள்ள முடிகிறது. சந்தோஷத்தையும் பகிர்ந்து கொள்ள முடிகிறது. இருவரும் சேர்ந்து புதிய படமொன்றில் நடிக்கிறோம். ஆனாலும் வீட்டில் வந்து பட விஷயங்கள் பற்றி பேசுவது இல்லை. படப்பிடிப்பு அரங்கில் பேசுவதோடு சரி”. இவ்வாறு சமந்தா கூறினார்.
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். #Anushka #AnushkaShetty
    ‘பாகுபலி 2’ படத்துக்கு பிறகு அனுஷ்கா எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. பிரபாசுடன் `சாஹோ’ படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு, கேரக்டருக்காக உடல் இளைக்க, பல சிகிச்சைகளையும் துபாயில் மேற்கொண்டார் எனத் தகவல்கள் வெளியாயின. ஆனாலும் அதிகமான ஆக்‌‌ஷன் காட்சிகள் இருப்பதால் அந்த படத்திலிருந்து அவரே விலகினார் என கூறப்பட்டது.

    இதற்கு உடல் இளைப்பதற்கான சிகிச்சைகள் பலனளிக்காததும் ஒரு காரணம் என தெரிவித்தனர். அனுஷ்காவை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலாய் இருந்தபோதும் தனக்கு வந்த படங்களை தவிர்த்து வந்தார் அனுஷ்கா. உடல் எடை காரணமாக பொது நிகழ்வுகளிலும் பங்கேற்பதை தவித்து வந்தார்.



    நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மாதவனுடன் இணைந்து ‘சைலன்ட்’ என்ற திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே அனுஷ்காவின் புகைப்படங்கள் நேற்று மாலை முதல் சமூக வலைதளத்தில் கலக்கி வருகிறது. நடிகரும் புகைப்படக்கலைஞருமான சுந்தர் ராமு இப்படங்களை எடுத்துள்ளார். இந்த படங்களில் அனுஷ்கா உடல் எடையை குறைத்து பழைய தோற்றத்தில் காணப்படுகிறார்.
    ×