என் மலர்
சினிமா செய்திகள்
ஜீவா நடிப்பில் கீ படம் வருகிற வாரத்தில் ரிலீசாக இருக்கும் நிலையில், அவர் அளித்த பேட்டியில், அஜித்துடன் இணைந்து நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்தார். #Jiiva #AjithKumar
ஜீவா நடிப்பில் கீ, கொரில்லா, ஜிப்சி என 3 படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. அடுத்து 3 படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். ஜிப்சி படம் பற்றி அளித்துள்ள ஒரு பேட்டியில் ’இயக்குனர் ராஜூமுருகன் சொன்ன கதையைக் கேட்டு மிரண்டு போனேன். ஜிப்சி எனக்கு மிகப்பெரிய பெயரைப் பெற்றுக் கொடுக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். தல அஜித்துடன் நடிக்கவேண்டும் என்பதே என் ஆசை. அப்படியொரு கதை அமைய வேண்டும் என்று காத்திருக்கிறேன்’.
இவ்வாறு ஜீவா தெரிவித்தார். #Jiiva #AjithKumar
பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி - ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகும் `தமிழரசன்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. #Thamizharasan #VijayAntony
விஜய் ஆண்டனி தற்போது பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் `தமிழரசன்' படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.
சோனு சூட் வில்லனாகவும், சுரேஷ்கோபி, ராதாரவி, யோகி பாபு, சங்கீதா, கஸ்தூரி, ரோபோ சங்கர், சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ், சென்ட்ராயன், கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமிநாதன், முனீஸ்காந்த், ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன், இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கும் இந்த படத்தின் இரண்டுகட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்த நிலையில், இன்னும் சில நாட்களில் அடுத்த கட்ட படப்பிடிப்பை துவங்கி விரைவில் முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது. ஆக்ஷன் படமாக உருவாகும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். #Thamizharasan #VijayAntony #RamyaNambeesan #SonuSood
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி - பகத் பாசில் - சமந்தா - ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடிப்பில் வெளியாகி இருக்கும் `சூப்பர் டீலக்ஸ்' படத்தின் விமர்சனம். #SuperDeluxe #SuperDeluxeReview
பகத் பாசில் - சமந்தா இருவரும் கணவன் மனைவி. இருவரும் பெரிதாக புரிதல் இல்லாமல் இருக்கின்றனர். ஒருநாள் இவர்களது வீட்டுக்கு வரும் சமந்தாவின் நண்பர் அங்கு மர்மமான முறையில் இறந்துவிடுகிறார்.
மறுபக்கம் காயத்ரியை திருமணம் செய்துகொண்ட விஜய் சேதுபதி, காயத்ரிக்கு குழந்தை பிறந்த நிலையில் வீட்டை விட்டு சென்றுவிடுகிறார். சில வருடங்களுக்கு பிறகு தனது மகனை பார்க்க மீண்டும் சென்னை வருகிறார். விஜய் சேதுபதியை வரவேற்க அவர்களது மொத்த குடும்பமும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். அவர் திருநங்கையாக வந்து நிற்க அனைவருக்கும் பேரதிர்ச்சி.

மற்றொரு புறத்தில் ரம்யா கிருஷ்ணன் - மிஷ்கின் தம்பதிக்கு ஒரு மகன். அவனுக்கு நான்கு நண்பர்கள். இவர்களது வாழ்க்கையில் ஏற்படும் ஒரு சம்பவம்.
இந்த மூன்று சம்பவங்களில் இடம்பெறும் கதாபாத்திரங்கள், போலீஸ் அதிகாரியான பகவதி பெருமாளுடன் ஒரு புள்ளியில் இணைகிறார்கள்.

கடைசியில் பகத் பாசில் - சமந்தா எப்படி தப்பித்தார்கள்? விஜய் சேதுபதி குடும்பத்தின் நிலை என்ன? ரம்யா கிருஷ்ணன் குடும்பத்தில் ஏற்பட்ட மாற்றம்? இவை அனைத்தும் கலந்த நல்லது, கெட்டது தான் படத்தின் மீதிக்கதை.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி திருநங்கை கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததற்காகவே அவருக்கு பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டும். ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் திருநங்கையாக, அவர்களது உணர்வையும், வலியையும் உணர வைக்கும்படி நடித்திருக்கிறார். போலீசிடம் சிக்கிக் கொள்ளும் காட்சிகள், மகனிடம் காட்டும் பாசம், மனைவியின் வலியை புரிந்து கொள்வது என தன்னை அந்த கதாபாத்திரமாகவே மாற்றியிருக்கிறார்.

சிறிய சிறிய இடங்களில் கூட தனது நடிப்பால் ஸ்கோர் செய்திருக்கிறார் பகத் பாசில். சமந்தாவுக்கு சவாலான வேடம். அந்த வேடத்தை ஏற்றுக் நடித்தது சமந்தாவின் துணிச்சல். சிறப்பாக நடித்திருக்கிறார். காயத்ரிக்கு அதிகமாக வசனங்கள் இல்லை என்றாலும் பார்வையாலேயே உணர்ச்சிகளை வெளிப்படுத்தியிருக்கிறார். ரம்யா கிருஷ்ணன் தனது அனுபவ நடிப்பால் அசத்தியிருக்கிறார். மிஷ்கின் கிறிஸ்தவ போதகராக தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
பகவதி பெருமாள் காமெடி கலந்த வில்லத்தனத்தில் சில இடங்களில் சிரிப்பையும், சில இடங்களில் எரிச்சலையும் உண்டு பண்ணுகிறார்.

நண்பர்களாக வரும் 4 இளைஞர்களும் சேட்டை செய்துவிட்டு சென்றிருக்கிறார்கள். கொடுத்த வேலையை சிறப்பாக செய்து அசத்தியிருக்கிறார்கள். விஜய் சேதுபதியின் மகனாக மாஸ்டர் அஸ்வந்த் விஜய் சேதுபதிக்கு ஈடுகொடுத்து நடித்திருப்பது சிறப்பு. மிருணாலினி அழகு தேவதையாக வந்து செல்கிறார்.
தியாகராஜன் குமாரராஜாவின் 8 வருடங்கள் காத்திருப்பு வீண்போகவில்லை என்று கூறும்படி, தனது ஸ்டைலில் அனைத்தும் கலந்த ஏ சான்றிதழ் படத்தை உருவாக்கியிருக்கிறார். எனவே குடும்பத்தோடு சென்று பார்க்க முடியாவிட்டாலும், இளைஞர்களை கவரக்கூடியதாய் இருக்கிறது. முதல் பாதி காமெடி கலந்த விறுவிறுப்புடனும், இரண்டாவது பாதி காமெடி கலந்த சஸ்பென்சுடனும் நகர்கிறது. இரண்டாவது பாதியின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

படத்தில் கடவுள் பக்தி, கணவன் - மனைவி புரிதல், திருநங்கைகளின் குடும்பம், பாலியல் தொழில் செய்பவர்களின் வாழ்க்கை, சாதி, மதம் என பலவற்றை திரைக்கதையினூடே திணித்திருக்கிறார். நன்மை, தீமை இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை. இந்த உலகத்தில் அனைவரும் நல்லவர்களும் இல்லை, கெட்டவர்களும் இல்லை. ஒரு செயல் ஒருவருக்கு நன்மையை கொடுத்தால் மற்றொருவருக்கு தீமையை தான் கொடுக்கும். அதுவே நியதி என்பதை புரிய வைத்திருக்கிறார். அனைத்தும் சரியுமில்லை, அனைத்தும் தவறுமில்லை, சரியாய் இருப்பது தவறாய் மாறலாம், தவறாய் இருப்பது சரியாய் மாறலாம் என்பனவற்றை விளங்க வைத்திருக்கிறார்.
யுவன் ஷங்கர் ராஜா பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். காட்சிகளை புதிய பரிணாமத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் நிரவ் ஷா, பி.எஸ்.வினோத். சத்யராஜ் நடராஜனின் படத்தொகுப்பு கச்சிதம்.
மொத்தத்தில் `சூப்பர் டீலக்ஸ்' சுறுசுறுப்பு. #SuperDeluxe #SuperDeluxeReview #VijaySethupathi #FahadhFaasil #Samantha
அட்லி இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் உருவாகும் தளபதி 63 படத்திற்காக பிரம்மாண்ட அரங்கு ஒன்று அமைக்கப்படுகிறது. #Thalapathy63 #Vijay
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 மாதமாக சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது. விஜய்யின் 63-வது படமாக உருவாகும் இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். முக்கிய வில்லனாக ஜாக்கி ஷராப் நடிக்கிறார்.
கதிர், யோகி பாபு, விவேக், ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, சாய் தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு சென்னையிலேயே நடைபெற்றது. அடுத்த கட்ட படப்பிடிப்பும் சென்னையிலேயே நடைபெற இருக்கிறது. இதுபற்றி படக்குழுவினர் ஒருவர் கூறியதாவது:-
``இந்த படத்துக்கு `வெறித்தனம்' என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதாக இணையதளங்களில் பொய்யான தகவல் பரவியிருக்கிறது. படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நெருங்கும்போது, பெயர் சூட்டப்பட இருக்கிறது.

பெரும்பகுதி படப்பிடிப்பு பரங்கிமலை, காசிமேடு, தியாகராயநகர் ஆகிய இடங்களிலேயே நடைபெற்றது. இதற்கு விஜய்தான் காரணம் ``நம் ஊர் ஆட்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கட்டும்'' என்று அவர் சொன்னதால்தான், சென்னையிலேயே படப்பிடிப்பு நடைபெற்றது. அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், மிக பிரமாண்டமான முறையில் ஒரு கால்பந்து அரங்கம் போன்ற செட் அமைக்கப்படுகிறது. விஜய் இப்போது வெளிநாடு சென்றிருக்கிறார்.
அவர் சென்னை திரும்பியதும், கிழக்கு கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டு வரும் கால்பந்து அரங்க படப்பிடிப்பில் கலந்து கொள்வார்.'' என்றார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கும் இந்த படம், தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Thalapathy63 #Vijay63 #Vijay #Nayanthara #Kathir #Atlee
ராட்சசன் படத்தில் ஆசிரியர் வேடத்தில் நடித்த வினோத் சாகரை, பிரபல நடிகர் என்னையே மிஞ்சிட்ட என்று பாராட்டி இருக்கிறார். #VinothSagar
ஒரு திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை அதிகம் கவர்பவர்கள் கதாநாயகன், கதாநாயகி மற்றும் வில்லன். இவர்களையும் தாண்டி ஒரு சில கதாபாத்திரங்கள் மட்டுமே ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும். அப்படி சமீபத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் வினோத் சாகர்.
விஷ்ணு விஷால் நடிப்பில் ராம் குமார் இயக்கத்தில் வெளியான படம் ‘ராட்சசன்’. சூப்பர் ஹிட்டான இந்த படத்தில் இன்பராஜ் என்கிற ஆசிரியர் வேடத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் வினோத் சாகர். படம் பார்ப்பவர்களை பாதிக்க வைப்பதே ஒரு கதாப்பாத்திரத்தின் ஈர்ப்பு என்று சொல்லலாம். அப்படி பார்வையாலயே மிரட்டும் ஆசிரியர் வேடத்தில் நடித்த வினோத் சாகரின் கதாப்பாத்திரம் பார்ப்பவர்களையும் கோபப்படவும், பாராட்டவும் வைத்தது. இதுதான் ஒரு நடிகருக்கு ரசிகர்கள் தரும் சிறந்த அங்கிகாரம். இந்த கதாப்பாத்திரம் கொடுத்த அடையாளம் தான் இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி படப்பிடிப்புகளுக்கும் பறந்து கொண்டிருக்கிறார் வினோத் சாகர்.
இது குறித்து வினோத் சாகர் கூறும்போது, ‘ராட்சசன் திரைப்படம் எனக்கு சிறந்த அடையாளத்தை கொடுத்திருக்கிறது. இதற்கு இயக்குனர் ராம் குமார் தான் காரணம். நான் இதற்கு முன் பிச்சைக்காரன் படத்தில் நடித்திருக்கிறேன். ராட்சசன் படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘குருதி ஆட்டம்’, ‘சாம்பியன்’, ‘சைரன்’, தெலுங்கில் உருவாகும் ராட்சசன் படத்திலும் நடிக்கிறேன். மலையாளத்தில் 2 படங்கள் நடிக்கிறேன்.

நான் துபாயில் ரேடியோ ஜாக்கியாக பணிபுரிந்து வந்தேன். பின்னர் சென்னைக்கு வந்து டப்பிங் ஆர்ட்டிஸ்டாக மாறினேன். அதன் மூலம் நடிகராக மாறினேன். இதயம் திரையரங்கம் படத்தின் இயக்குனர் ராம்கி ராமகிருஷ்ணன் தான் எனக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அதைத் தொடர்ந்து, நான், ஹரிதாஸ், ஆரஞ்சு மிட்டாய், உறுமீன் மற்றும் பல குறும்படங்களில் நடித்திருக்கிறேன்.
சவால்கள் நிறைந்த வேடங்களில் நடிக்க விருப்பம். அது நெகட்டிவ் வேடமாக இருந்தாலும் சரி, குணச்சித்திர கதாப்பாத்திரமாக இருந்தாலும் சரி. என்னுடைய ரோல் மாடல் ராதாரவி சார். கொடுத்த கதாப்பாத்திரத்தை சிறப்பாக செய்யக்கூடியவர். நாசர் சார் நடிப்பும் எனக்கு பிடிக்கும்.
ராட்சசன் படத்தை பார்த்து ராதாரவி சார் பாராட்டியது என்னால் மறக்க முடியாது. "40 வருடத்தில் நான் எவ்வளவோ வில்லத்தனம் பண்ணிருக்கிறேன். ஆனால், நீ பண்ண வில்லத்தனம் நான் பண்ணவில்லை. என்னை மிஞ்சிட்டா" என்று ராதாரவி சார் என்னை பாராட்டினார். மேலும், டப்பிங் யூனியனில் எனக்கு விருதும் கொடுத்தார்.
அடுத்தடுத்து வரும் படங்களில் கொடுத்த கதாபாத்திரத்திரத்தை சிறப்பாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பேன்’ என்றார் வினோத் சாகர்.
சுரேஷ் இயக்கத்தில் வீரசமர், அமிதா ராவ், யோகி பாபு நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பட்டிபுலம்’ படத்தின் விமர்சனம். #Pattipulam #PattipulamReview
பைக் ரேசராக இருக்கும் வீரசமர், டியூ கட்டாத பைக்குகளை தூக்கி வருகிறார். மேலும் அதே பகுதியில் இருக்கும் நாயகி அமிதா ராவை காதலித்து வருகிறார். ஒரு நாள் அரசியல்வாதி மூலம் ஒரு பைக் ரேஸ் நடக்கிறது. இதில் நாயகன் வீரசமருக்கும் ஒரு கும்பலுக்கும் சண்டை ஏற்படுகிறது.
அந்த கும்பல் வீரசமரை அடித்து ஒரு பெட்டிக்குள் வைத்து உயிருடன் புதைத்து விடுகிறார்கள். நினைவு திரும்பி பார்க்கும் வீரசமர், எப்படி தப்பிப்பது என்பது தெரியாமல் தவிக்கிறார். தன்னுடைய செல்போன் நெட்வொர்க் மூலம் காதலிக்கு பட்டிபுலம் என்ற பகுதியில் இருப்பதாக தகவல் அளிக்கிறார்.
இறுதியில் அமிதா ராவ், வீரசமர் இருக்கும் பகுதியை கண்டுபிடித்து காப்பாற்றினாரா? உயிருடன் பெட்டிக்குள் புதைக்கப்பட்ட வீரசமர் என்ன ஆனார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கலை இயக்குனரான வீரசமர், இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். பைக் ரேசராகவும், பெட்டிக்குள் அடைத்தவுடன் பதட்டமான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். காதலரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற துடிப்புடன் நடித்திருக்கிறார் அமிதாராவ். யோகிபாபுவின் காமெடி படத்திற்கு ஒரே பலம். இவர் வரும் காட்சிகள் அனைத்தும் ரசிக்கும்படி உள்ளது.
பைக் ரேசை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் சுரேஷ். ஆனால், பெரிதளவிற்கு திரைக்கதை கைகொடுக்க வில்லை. படம் பார்க்கும் போது பழைய ஒரு சில படங்களின் காட்சிகள் ஞாபகத்திற்கு வருகிறது. திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
ஆர்.கே.வர்மாவின் ஒளிப்பதிவு சுமார் ரகம். வல்லவனின் இசை கவனம் பெற வில்லை.
மொத்தத்தில் ‘பட்டிபுலம்’ இன்னும் பட்டி பார்க்கணும்.
சினிமா, டிவி தயாரிப்பாளர் சங்கத்தில் ஜாக்குவார் தங்கம் முறைகேடு செய்திருப்பதாக உறுப்பினர்கள் புகார் கூறியுள்ளனர். #JaguarThangam
தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை தி.நகரில் இயங்கி வருகிறது. ’கில்டு’ என்று அழைக்கப்படும் இந்த சங்கத்தின் உறுப்பினர்கள் 50 பேர் சங்கத்தின் முன்னாள் தலைவரான ஜாக்குவார் தங்கம் மீது பல்வேறு குற்றச் சாட்டுகளை முன்வைத்து இன்று காலை சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
போலீசார் வந்து அவர்களை சமாதானப் படுத்தினார்கள். அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-
‘கில்டு அமைப்பு கடந்த நான்கு வருடங்களாக கணக்கு வழக்குகளை சமர்ப்பிக்காததால் பதிவுத்துறை நடவடிக்கையால் தற்போது முடக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த மாதம் 28-ந்தேதி அரசிதழில் கில்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஜாக்குவார் தங்கம் அரசிதழில் வெளிவந்த செய்தியை மறைத்து சங்கத்திற்கு வரும் உறுப்பினர்களிடம் சந்தா புதுப்பித்தல், டைட்டில் பதிவு செய்தல் மற்றும் உறுப்பினர்களை சேர்த்தல் போன்ற செயல்களின் மூலம் முறைகேடாக பணங்களை பெற்று வருகிறார். இதற்கு சட்டவிரோதமாக ரசீதும் வழங்கி வருகிறார். இப்படி வசூலிக்கப்படும் பணத்தை தன் சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்துகிறார்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
சமீபத்தில் வெளியான 90 எம்.எல் படத்தில் மது அருந்தும் காட்சியில் நடித்த ஓவியா, தற்போது மீண்டும் ஒரு படத்தில் மது அருந்தி நடித்திருக்கிறார். #Oviya
ஓவியா நடிப்பில் சமீபத்தில் வெளியான 90 எம்.எல் படத்தில் அவர் மது அருந்தும் காட்சிகளில் நடித்தது சர்ச்சையானது. இந்நிலையில் அவர் அடுத்து நடித்துள்ள கணேசா மீண்டும் சந்திப்போம் படத்திலும் மது அருந்தும் காட்சியில் மீண்டும் நடித்துள்ளார்.
இந்த படத்தில் பிருத்வி பாண்டியராஜனுக்கு ஜோடியாக ஓவியா நடித்துள்ளார். படத்தை ரத்தீஷ் எரட் இயக்க அருண் விக்ரமன் கிருஷ்ணன் தயாரித்துள்ளார்.

படம் பற்றி ரத்தீஷ் எரட் கூறும்போது, ‘ஒரு பைக்கை மையமாக வைத்து உருவான கதை. ஒரு பைக்கால் கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் பிரச்சினைகள் காமெடியான படமாகி இருக்கிறது. முதல் பாதி மதுரையிலும் இரண்டாம் பாதி சென்னையிலும் நடக்கிறது. பிக் பாசுக்கு முன்பே ஓவியா ஒப்பந்தமான படம். நிகழ்ச்சி முடிந்த பிறகு வந்து நடித்து கொடுத்தார். மது அருந்தும் காட்சி கதைக்கு தேவைப்பட்டது. அவர் கடும் மன அழுத்தத்தில் இருக்கும்போது மது அருந்துவது போன்று காட்சி இருக்கும். படத்துக்கு சென்சாரில் யூ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள். கணேசா மீண்டும் சந்திப்போம் பெயருக்கான காரணம் சஸ்பென்ஸ். படம் பார்த்தால் புரியும்’. இவ்வாறு அவர் கூறினார்.
சமீபத்தில் ரஜினிகாந்தை சந்தித்த பிரபல திரையரங்க உரிமையாளர், தனது ட்விட்டர் பக்கத்தில் ஆரோக்கியமாக இருக்க ரஜினிகாந்த் தினமும் நீச்சல் பயிற்சி செய்வதாக கூறியதாக தெரிவித்தார். #Rajinikanth
சென்னையை சேர்ந்த திரையரங்க உரிமையாளர் ஒருவர் சமீபத்தில் ரஜினிகாந்தை குடும்பத்துடன் சந்தித்துள்ளார். அதை ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார். அவர் தனது பதிவில் ’எனது வாழ்நாள் கனவு இன்று நிறைவேறியது.
தலைவருடன் 15 நிமிடங்கள் செலவிட்டேன். 15 நிமிடங்களுமே பாசிட்டிவ் வைபரேஷன். ஒரு கோயிலை விட்டு வெளியேறியது போல நான் உணர்ந்தேன். அவர் சூப்பர் ஸ்டாருக்கும் மேல். திரையில் பார்ப்பதைப் போலதான் நிஜத்திலும் இருக்கிறார். நிறைய உற்சாகமும், நகைச்சுவை உணர்வும் அவரிடம் உள்ளது. தலைவர் யோகா பயிற்சி செய்வது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அவரது பிட்னஸ் ரகசியத்தைக் கேட்டு நான் வியந்தேன்.

தினமும் நீச்சல் பயிற்சியில் சூப்பர் ஸ்டார் ஈடுபடுகிறார். முக்கியமாக படப்பிடிப்புக்கு முன் நீச்சல் பயிற்சி செய்கிறார். தினசரி உடற்பயிற்சி, யோகா, ஆரோக்கியமான உணவால் உடல்நலத்துடன் இருப்பதுடன் இளமையாகவும் உணர முடியுமென என்னிடம் கூறினார்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Rajinikanth
‘அதே கண்கள்’ படத்தை இயக்கிய ரோகின் வெங்கடேசன் அடுத்ததாக இயக்கவிருக்கும் திகில் கலந்த காமெடி படத்தில் தமன்னா முன்னணி கதாபாத்திரமாக நடிக்கிறார். #Tamannaah #RohinVenkatesan
ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் கலையரசன், ஜனனி, ஷிவதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அதே கண்கள்’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. சி.வி.குமார் இந்த படத்தை தயாரித்தார்.
இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பால், இயக்குநர் ரோகின் வெங்கடேசன் தனது அடுத்த படத்துக்கான கதையில் பொறுமை காத்தார். இறுதியில், திகில், காமெடி பாணியில் ஒரு கதையை உருவாக்கினார். தற்போது இக்கதையில் நடிக்க தமன்னா சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதில், யாருக்கும் நாயகியாக தமன்னா நடிக்கவில்லை. தனிப்பட்ட ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்தனர். மேலும், தமன்னாவோடு நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுதவிர சுந்தர்.சி இயக்கத்தில் விஷாலுடன் இணைந்து தமன்னா நடித்து வருகிறார். #Tamannaah #RohinVenkatesan
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் பாடல்கள் பாடி புகழ்பெற்ற பி.சுசீலாவுக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது. #PSusheela
தனது இனிய குரலால் பெரும் புகழ்பெற்ற பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா, தமிழ் உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்.
1953-ல் ‘பெற்றதாய்’ படத்தில் பாடகியாக அறிமுகமாகி, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன, தமிழுக்கு அமுதென்று பேர், சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து, உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல, அமுதே பொழியும் நிலவே, உன்னை நான் சந்தித்தேன், ஆயிரம் நிலவே வா, பார்த்த ஞாபகம் இல்லையோ, நான் பேச நினைப்பதெல்லாம் உள்பட காலத்தால் அழிக்க முடியாத ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.

மத்திய அரசு அவருக்கு பத்மபூஷண் விருதை வழங்கியது. 5 முறை தேசிய விருதுகளையும், 11 மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.தென்னிந்திய மொழிகளில் அதிக பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். சினிமாவிற்கு வந்து 65 வருடங்களை கடந்துவிட்ட அவருக்கு தற்போது 84 வயதாகிறது.
சுசீலாவின் சாதனைகளை பாராட்டி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் வருகிற மே 19-ந் தேதி அவருக்கு பாராட்டு விழா நடத்தப்படுகிறது. இதில் நடிகர்-நடிகைகள், இசையமைப்பாளர்கள், பாடகர்-பாடகிகள் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பங்கேற்கின்றனர். #PSusheela
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் ஹீரோ படத்தில் ஒரு முக்கிய கதபாத்திரத்தில் நடிக்க நடிகர் விவேக் ஒப்பந்தமாகி இருக்கிறார். #HERO #Sivakarthikeyan
சிவகார்த்திகேயன் நடிப்பில் மிஸ்டர். லோக்கல் படம் வருகிற மே 1-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. அடுத்ததாக ரவிக்குமார் இயக்கத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்திலும் நடித்து வருகிறார்.
இதில் பி.எஸ்.மித்ரன் இயக்கும் படத்தை 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா, கே.ஜி.ஆர். ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் இணைந்து தயாரிக்கின்றனர். `ஹீரோ' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் அர்ஜூன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கல்யாணி பிரியதர்ஷன், இவானா நாயகிகளாக நடிக்கின்றனர்.

இந்த நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க காமெடி நடிகர் விவேக் ஒப்பந்தமாகி இருக்கிறார். அவருக்கு இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தின் மூலம் முதல்முறையாக சிவகார்த்திகேயன் - விவேக் கூட்டணி சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர பாண்டிராஜ் இயக்கத்திலும், விக்னேஷ் சிவன் இயக்கத்திலும் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #HERO #Sivakarthikeyan #PSMithran #Vivekh






