என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • சூர்யா காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.
    • மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட உள்ளது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துள்ள 45-வது படமான 'கருப்பு' படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா, வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியாக இருக்கிறது.

    இதனை அடுத்து, ஆவேஷம் படத்தின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. இது சூர்யாவின் 47-வது படமாகும். இப்படத்தில் ஃபஹத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் சூர்யா காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

    மேலும் இந்த படம் மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட உள்ளது. இதனிடையே, சூர்யா 47 படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது.

    இதனால் சூர்யா 47 படம் தொடர்பான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • இந்த சீசனை தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு மொழிகளில் கண்டு களிக்கலாம்.
    • மேற்கு வங்கத்தில் திரையரங்குகளில் வெளியிட தடை செய்யப்பட்ட இப்படம் வருகிற 21-ந்தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.

    நடு சென்டர்

    நரு நாராயணன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மகன் சூர்யா நடித்துள்ள வெப் தொடர் 'நடு சென்டர்'. கூடைப்பந்து விளையாட்டு மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த வெப் தொடரில் சசிக்குமார், ஆஷா சரத், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த வெப் தொடர் வருகிற 20-ந்தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. இந்த வெப் தொடரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் கண்டு களிக்கலாம்.

    தி ஜுராசிக் வேர்ல்ட்: கேயாஸ் தியரி சீசன் 4

    2020 இல் ஒளிபரப்பான ஜுராசிக் வேர்ல்ட்: கேம்ப் கிரெட்டேசியஸின் தொடர்ச்சியாக சீசன் 4 வெளியாக உள்ளது. வருகிற 20-ந்தேதி முதல் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.

    டீசல்

    அறிமுக இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கி, ஹரீஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்துள்ள படம் டீசல். இந்த படத்தில் அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் சிம்பிளி சௌத் ஓடிடி தளத்தில் வருகிற 21-ந்தேதி முதல் வெளியாக உள்ளது. 

    பைசன்

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். கபடி வீரரின் வாழ்க்கையை தத்துரூபமாக வெளிப்படுத்தி உள்ள 'பைசன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழில் வரவேற்பை பெற்ற 'பைசன்' படம் விரைவில் தெலுங்கில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. பலதரப்பு மக்களையும் கவர்ந்த 'பைசன்' உலகளவில் இதுவரை ரூ.70 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனிடையே, 'பைசன்' படத்தை வருகிற 21-ந்தேதி முதல் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.

    தி ஃபேமிலி மேன் சீசன் 3

    தி ஃபேமிலி மேன் வெப் தொடரின் சீசன் 3 வருகிற 21-ந்தேதி முதல் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. கடந்த இரண்டு சீசன்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து மூன்றாவது சீசன் மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். இந்த சீசனில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, ஷாரிஃப் ஹாம்ஷி, ஆஷ்லேஷா தாக்கூர், ஸ்ரேயா தன்வந்தரி மற்றும் வேதாந்த் சின்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த சீசனை தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் கண்டு களிக்கலாம்.

    தி பெங்கால் ஃபைல்ஸ்

    விவேக் அக்னிஹோத்ரி இயக்கியுள்ள இப்படம் 1946-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் நடந்த இந்து இனப்படுகொலையை அடிப்படையாகக் கொண்டது. மேற்கு வங்கத்தில் திரையரங்குகளில் வெளியிட தடை செய்யப்பட்ட இப்படம் வருகிற 21-ந்தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    இதனிடையே 20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும் ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளது.

    • பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ் டுடே, டிராகன் படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றன.
    • டியூட் படம் வெளியான 6 நாட்களில் உலகளவில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

    இயக்குநர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் 'டியூட்'. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17-ந்தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் டியூட் படம், வசூலை குவித்து வருகிறது.

    திரைப்படம் வெளியான 6 நாட்களில் உலகளவில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

    முன்னதாக, பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ் டுடே, டிராகன் பட வெற்றியை தொடர்ந்து டியூட் படமும் ரூ.100 கோடியை கடந்து வசூல் சாதனையில் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது.

    இந்நிலையில், பிரதீப் ரங்கநாதன், தனது முதல் படத்தில் இருந்து இணை இயக்குநராக பணியாற்றி வரும் நெருங்கிய நண்பரான ரமேஷ் நாராயணசாமிக்கு புதிய கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • வானத்தை போல சீரியல் மூலமாக நடிகை மான்யா ஆனந்த் பிரபலமானார்.
    • மான்யா ஆனந்த் நடித்த கயல், அன்னம் , மருமகள் சீரியல்களும் மக்களிடையே நல்ல கவனம் பெற்றது.

    பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வானத்தை போல சீரியல் மூலமாக நடிகை மான்யா ஆனந்த் பிரபலமானார். இதனை தொடர்ந்து அவர் நடித்த கயல், அன்னம், மருமகள் சீரியல்களும் மக்களிடையே நல்ல கவனம் பெற்றது.

    தற்போது ஜிம்முக்கு சென்று பிட்னெஸ் விஷயங்களில் கவனம் செலுத்தி வரும் மான்யா ஆனந்த் தனது சீரியல் மற்றும் திரைத்துறை அனுபங்களை குறித்து நேர்காணல் கொடுத்துள்ளார்.

    அந்த நேர்காணலில் தனுஷின் மேனேஜர் தன்னை தனுஷ் படத்தில் நடிக்க அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று கூறினார் என்று குற்றம் சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    நேர்காணலில் பேசிய மான்யா ஆனந்த், "தனுஷின் மேனேஜர் ஷ்ரேயஸ் என்பவரிடம் இருந்து அழைப்பு வந்தது. தனுஷ் படத்தில் நீங்க நடிக்க முடியுமா... அப்படியெனில் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்று கூறினார். நான் அது எல்லாம் பண்ண மாட்டேன் என்று கூறினேன். அதற்கு தனுஷ் என்றாலும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய மாட்டீர்களா என்று அந்த நபர் மெசேஜ் அனுப்பினார். தனுஷாக இருந்தாலும் நான் அட்ஜஸ்ட் பண்ண மாட்டேன் என்று கூறிவிட்டேன்.

    அதே மாதிரி அண்மையில், ஷ்ரேயஸ் எனக்கு தனுஷ் படத்தின் ஸ்க்ரிப்ட் அனுப்பி நடிக்க வேண்டுமா என்று கேட்டார் . ஆனால் நான் அந்த கதையை கூட படிக்கவில்லை. நாங்கள் நடிகர்கள் வேறு தொழில் செய்பவர்கள் இல்லை" என்று தெரிவித்தார்.

    இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது,

    • “கை வட்டக குருதி பூஜை” என்பது கேரள கோவில்களில் செய்யப்படும் சிறப்பு வாய்ந்த சடங்கு ஆகும்.
    • பூஜையை தொடர்ந்து நடிகர் விஷாலுக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அனயாரா என்ற இடத்தில் வாராஹி பஞ்சமி தேவி கோவில் அமைந்துள்ளது. கேரளாவில் உள்ள ஒரே வாராஹி பஞ்சமி கோவில் என்று கூறப்படும் இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    இந்தநிலையில் நடிகர் விஷால் அந்த கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். அவர் ஒரு சினிமா படப்பிடிப்பிற்காக கேரளா வந்திருந்ததாக கூறப்படுகிறது. அதற்காக திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல ஓட்டலில் தங்கியிருந்த நடிகர் விஷால், அனயாராவில் உள்ள வாராஹி பஞ்சமி கோவிலை பற்றி அறிந்தார்.

    இதையடுத்து அவர் தனது மேலாளருடன் வாராஹி பஞ்சமி கோவிலுக்கு சென்றார். அவர் சாதாரண உடையிலேயே கோவிலுக்கு சென்றார். பிரபல திரைப்பட நடிகரான விஷால் சாதாரண உடையில் வருவதை பார்த்த பக்தர்கள், அவரை கைதட்டி வரவேற்றனர்.

    இதையடுத்து நடிகர் விஷால் கோவிலுக்கு சென்று பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர், "கை வட்டக குருதி பூஜை" என்ற சிறப்பு பூஜை செய்தார். மாவேலிக்கரை பிரசாந்த் நம்பூதிரி தலைமையில் அவருக்கு "கை வட்டக குருதி பூஜை" செய்யப்பட்டது.

    "கை வட்டக குருதி பூஜை" என்பது கேரள கோவில்களில் செய்யப்படும் சிறப்பு வாய்ந்த சடங்கு ஆகும். இது தீய சக்திகளை அகற்றி, தடைகளை நீக்கி வாழ்க்கையில் நன்மைகளை கொண்டுவர உதவும். முக்கியமாக எதிர்மறை சக்திகளையும், தடைகளையும் நீக்கும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.

    இந்த பூஜையை தொடர்ந்து நடிகர் விஷாலுக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்பு சிறிது நேரம் கோவிலில் அமர்ந்துவிட்டு நடிகர் விஷால் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    • சித்திக்கின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் உருவான படம்.
    • இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.

    2001-ம் ஆண்டு நடிகர்கள் விஜய்- சூர்யா இணைந்து நடித்து வெளியான படம் 'ஃப்ரண்ட்ஸ்'. இப்படத்தில் தேவயானி, ராதாரவி, ரமேஷ் கண்ணா, வடிவேலு, சார்லி, ஸ்ரீமன், விஜயலட்சுமி, மதன் பாப், சரிதா உள்ளிட்ட பலரும் நடித்து இருந்தனர்.

    மலையாள திரைப்படமான 'ப்ரண்ட்ஸ்' திரைப்படத்தை தழுவியே இப்படம் வெளிவந்தது. சித்திக்கின் கதை, திரைக்கதை, இயக்கத்திலும், கோகுல் கிருஷ்ணாவின் வசனத்திலும் வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

    இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. அதிலும் வடிவேலுவின் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

    இந்த நிலையில் 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் மீண்டும் 4-கே டிஜிட்டல் முறையில் வரும் 21-ந்தேதி மீண்டும் வெளியாக உள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் ப்ரண்ட்ஸ் படத்தின் புதிய மேம்பட்ட டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

    • மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் வளர்த்து வரும் நடிகராக உள்ளார்.
    • மோகன்லால் நடத்தும் ஆசிர்வாத் சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் தனது 25 வது ஆண்டை நிறைவு செய்தது.

    மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் வளர்த்து வரும் நடிகராக உள்ளார். அண்மையில் அவர் நடிப்பில் வெளியான 'டைஸ் ஐரே' என்ற பேய் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் மோகன்லால் தனது மகள் விஸ்மயா-வை மோகன்லால் சினிமாவில் களம் இறக்கி உள்ளார்.

    மோகன்லால் நடத்தும் ஆசிர்வாத் சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் தனது 25 வது ஆண்டை நிறைவு செய்ததை ஒட்டி இந்த அறிவிப்பு வந்தது.

    விஸ்மயா நடிக்கும் முதல் படத்தை இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்குகிறார். இப்படத்திற்கு, 'துடக்கம்' எனப் பெயரிடப்பட்டது.

    இந்த படத்தில் மோகன்லாலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பிரபல பின்னணி இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

    இப்படத்தின் படப்பிடிப்பு இன்று இடுக்கியில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 

     

    • ஆட்ட நாயகன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமானார்.
    • மலையாள நடிகர் ஜான் கொக்கனை மறுமணம் செய்தார். அவருடன் அரிஹரா என்ற மகனை பெற்றார்.

    பிரபல மலையாள நடிகை மீரா வாசுதேவன் மூன்றாவது முறையாக விவாகரத்து செய்துள்ள சம்பவம் கவனம் பெற்று வருகிறது.

    மோகன்லாலின் தன்மந்த்ரா படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமாகி முன்னணி நடிகையாக மீரா உயர்ந்தார்.

    தமிழில் உன்னை சரணடைந்தேன், அடங்க மறு, ஜெர்ரி, அறிவுமணி, கத்திக்கப்பல், ஆட்ட நாயகன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமானார்.

    இவர் 2005இல் பிரபல ஒளிப்பதிவாளர் மகனை மீரா வாசுதேவன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக 2010 இல் அவரை விவாகரத்து செய்தார். 

    தொடர்ந்து மலையாள நடிகர் ஜான் கொக்கனை மறுமணம் செய்தார். அவருடன் அரிஹரா என்ற மகனை பெற்றார்.

    ஆனால் அந்த உறவும் நீடிக்காமல் அவரை விவாகரத்து செய்த மீரா, 2024 ஏப்ரலில் ஒளிப்பதிவாளர் விபின் புதியங்கத்தை திருமணம் செய்துகொண்டார்.

    இந்த நிலையில் மூன்றாவது கணவர் விபினையும் மீரா வாசுதேவன் விவாகரத்து செய்துள்ளார்.

    "2025 ஆகஸ்ட் முதல் நான் சிங்கிளாகி விட்டேன். என் வாழ்க்கையின் அழகான மற்றும் அமைதியான கட்டத்தில் இருக்கிறேன்" என்று மீரா வாசுதேவன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது. 

    • அதன் பின்னரே ரஜினிக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
    • திரைப்பட விமர்சகராகவும் இருந்துள்ளார்.

    இயக்குனர் கே. பாலச்சந்தர் ரஜினியை சினிமாவில் அறிமுகப்படுத்தியதை அனைவரும் அறிவர். ஆனால் ரஜினியை ஒரு நடிகராக மெருகேற்றியவர் கோபாலி.

    தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பாக நடத்தப்பட்ட, திரைப்படப் பயிற்சி கல்லூரியில் ரஜினி படித்த சமயம், அங்கு நடிப்பு பயிற்சி கற்றுக்கொடுக்கின்ற ஆசிரியராக கோபாலி பணியாற்றினார்.

    கே.பாலச்சந்தர் திரைப்பட பயிற்சிக் கல்லூரிக்கு வந்த போது தனது மாணவர் ரஜினியை கோபாலி அவருக்கு அறிமுகப்படுத்தினார். அதன் பின்னரே ரஜினிக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

    கோபாலி, இந்தியன் எக்ஸ்பிரஸ், தூர்தர்ஷன் ஆகியவற்றிலும் பணியாற்றி உள்ளார். மேலும் திரைப்பட விமர்சகராகவும் இருந்துள்ளார்.

    இந்நிலையில் வயது மூப்பு காரணமாக கோபாலி சென்னையில் இன்று காலை காலமானார். ரஜினிகாந்த் நேரில் சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து இறுதிமதியாதை செலுத்தினார். 

    • படத்தில் தாதாவாக ஆனந்தராஜ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
    • ஆட்டம் போடுபவர்கள் ஒருநாள் நிச்சயம் அடங்கிப் போவார்கள் என்பதை இயக்குனர் சொல்ல முயற்சி செய்து இருக்கிறார்.

    நாயகன் ஆனந்தராஜ் தாதாவாக இருக்கிறார். இவர் தலைமையை விரும்பாத சில அதிருப்தியாளர்கள், கூடவே இருந்து அவரை கொல்ல சதி திட்டம் தீட்டுகின்றனர். இதற்கிடையே போலீஸ் அதிகாரி சம்யுக்தா தலைமையில் ஆனந்தராஜ் பின்னணி குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க தனிப்படை அமைக்கப்படுவதுடன் ஆனந்தராஜை என்கவுண்டர் செய்யவும் திட்டம் போடுகிறார்கள்.

    இறுதியில் என்கவுண்டரில் ஆனந்தராஜ் சிக்கினாரா? இல்லையா? ஆனந்த ராஜ் கூட இருப்பவர்களின் சதி திட்டம் நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    மதறாஸ் மாபியா படத்தில் தாதாவாக ஆனந்தராஜ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கிளைமாக்சில் அவரது தோற்றம் எதிர்பாராதது. என்கவுண்டர் செய்ய துடிக்கும் சம்யுக்தா, மிடுக்கான தோற்றத்தில் மிரட்டி இருக்கிறார். ஆனந்தராஜ் மனைவிகளாக தீபா சங்கர், சசி லயா, காதலியாக ஷகீலா ஆகியோர் வரும் காட்சிகள் கலகலப்பு.

    முனீஷ்காந்த், மிப்பு கோஷ்டி ஆனந்தராஜை கொல்ல முயன்று தோற்று காமெடி செய்துள்ளனர். மேலும் ஆராத்யா, ரிஷி ஆகியோர் நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.

    ரவுடிகளுக்கான கதையில் காதல், குடும்ப சென்டிமெண்ட், காமெடி கலந்து எழுதி இயக்கியுள்ளார் ஏ.எஸ்.முகுந்தன். ஆட்டம் போடுபவர்கள் ஒருநாள் நிச்சயம் அடங்கிப் போவார்கள் என்பதை சொல்ல முயற்சி செய்து இருக்கிறார். தேவை இல்லாத வசனங்கள் படத்திற்கு பலவீனம்.

    ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கிறது. அசோக் ராஜ் ஒளிப்பதிவு இயல்புபாக ரசிக்க வைக்கிறது.

    • சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25-வது படம் உருவாகி வருகிறது.
    • அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ல் ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் திரைக்கு வருகிறது.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25-வது படம் உருவாகி வருகிறது. பராசக்தி என பெயரிடப்பட்ட இந்த படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரித்துள்ளது.

    படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாயகியாக ஸ்ரீலீலா நடித்திருக்கிறார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி உள்ளது.

    அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ல் ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் திரைக்கு வருகிறது.

    படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    • விஷாலின் 35-வது படத்தை ஈட்டி மற்றும் ஐங்கரன் படங்களை இயக்கிய ரவி அரசு இயக்கியுள்ளார்.
    • விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் அஞ்சலியும் நடிக்க வருகின்றனர்.

    விஷாலின் 35-வது படத்தை ஈட்டி மற்றும் ஐங்கரன் படங்களை இயக்கிய ரவி அரசு இயக்கியுள்ளார். இப்படத்திற்கு மகுடம் என பெயரிடப்பட்டுள்ளது.

    இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம் இப்படத்தை தயாரிக்கிறது. இது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 99 -வது திரைப்படமாகும். விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் அஞ்சலியும் நடிக்க வருகின்றனர்.

    படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இப்படத்தின் கிளைமேக்ஸ் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 

    ×