என் மலர்tooltip icon

    மதுரை

    • விஜயகாந்த் கடந்த 1998-ம் ஆண்டு, நிலத்தை நேரடியாக வழங்காமல் அரசு மூலம் வழங்கினார்.
    • விஜயகாந்த் மறைந்தாலும், அவர் எங்களுக்கு இருப்பிடம் தந்து வாழ்வளித்த கடவுளாகவே காட்சி அளிக்கிறார்.

    மதுரை:

    வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்? என்ற கவியரசு கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்தவர்களின் வரிசையில் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த்தும் இன்று மேலோங்கி நிற்கிறார்.

    மதுரை மண்ணில் பிறந்தாலும், காலப்போக்கில் மறந்த வரலாறும் உண்டு. ஆனால் பிறந்த மண்ணுக்கு எதையாவது, இல்லை... இல்லை... ஏராளமாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்தவர் விஜயகாந்த். அதற்கு சான்றாக பல இருக்க கோபுரத்தில் வைத்து பார்க்கக்கூடிய வகையிலும் அவரது ஈகை குணம் இருந்தது என்பதற்கு சான்றாக தனக்கு சொந்தமான நிலத்தை தானமாக வழங்கியுள்ளார் கேப்டன் விஜயகாந்த்.

    திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரிய ஆலங்குளம் கிராமத்தில் தனது தந்தை அழகர்சாமி, கிருஷ்ணன் என்பவரிடம் இருந்து வாங்கிய 7 ஏக்கர் நிலத்தை மகனின் எதிர்காலத்திற்காக வைத்திருந்தார். தந்தையின் மறைவுக்கு பிறகு திரைத்துறையில் உயர்ந்த இடத்தில் இருந்த விஜயகாந்த் தனக்கு தந்தை சேர்த்து வைத்திருந்த அந்த நிலத்தை ஏழைகளுக்கு தானமாக வழங்க முன்வந்தார்.

    அதன்படி இயன்றதை வழங்குவோம், இல்லாதோருக்கு என்பதற்கேற்ப தாழ்த்தப்பட்டோர் மற்றும் நரிக்குறவ இன மக்களுக்கு மட்டும்தான் வழங்க வேண்டும் என்ற முடிவுக்கும் வந்த விஜயகாந்த் கடந்த 1998-ம் ஆண்டு, தான் நேரடியாக வழங்காமல் அரசு மூலம் வழங்கினார். கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த 7 ஏக்கர் நிலத்தின் இன்றைய சந்தை மதிப்பு ரூ.21 ஆகும்.

    இதன் மூலம் பயனடைந்த அப்பகுதியை சேர்ந்த சோனைமுத்து, துரைப்பாண்டி ஆகியோர் கூறுகையில், கேப்டன் விஜயகாந்த் அரசியலுக்கு வருவதற்கு முன்னதாகவே தனக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலத்தை நாங்கள் வீடு கட்டிக்கொள்வதற்காக தானமாக அளித்தார். இன்று அவர் மறைந்தாலும், அவர் எங்களுக்கு இருப்பிடம் தந்து வாழ்வளித்த கடவுளாகவே காட்சி அளிக்கிறார் என்றனர்.

    • கடைசியாக கடந்த ஆவணி மாதம் நடை பெற்ற குலதெய்வமான வீரம்மாள் கோவில் கும்பாபிஷேகத்திற்கு நன்கொடை அளித்துள்ளார்.
    • விஜயகாந்த் இனிமேல் வரமாட்டாரா? என்பதை ஏற்கும் மனப்பக்குவத்தை கொண்டு வருவது காங்கேயநத்தம் கிராமத்தினருக்கு சவால்தான்.

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த காங்கேயநத்தம் கிராமத்தில் ரெங்கராஜ் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் 4 தலைமுறைகளாக பலருக்கு குல தெய்வ கோவிலாக இருந்து வருவது வீரம்மாள் கோவில். அந்த வகையில் விஜயகாந்த் தனது தந்தை வழியில் வீரம்மாள் கோவிலுக்கு வரத்தவறியதில்லை.

    இந்த கோவில் திருப்பணிகளுக்காக ஏராளமான நன்கொடைகளை வாரி வழங்கிய வள்ளலாக திகழ்ந்த விஜயகாந்த், தன்னால் குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலையிலும் தனது மனைவி, மகன்களை அனுப்பி வைத்து உதவிகள் செய்து வந்துள்ளார். கடைசியாக கடந்த ஆவணி மாதம் நடை பெற்ற குலதெய்வமான வீரம்மாள் கோவில் கும்பாபிஷேகத்திற்கு நன்கொடை அளித்துள்ளார்.

    சுப நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் அதனை தொடங்கும் முன்பு வீரம்மாள் கோவிலுக்கு விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் வந்திருந்து பூஜைகளில் கலந்துகொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார். குறிப்பாக மகா சிவராத்திரி தினத்தன்று மனைவி, மகன்களுடன் வந்து இரவில் கோவிலில் தங்கி படையலிட்டு, 6 கால பூஜையிலும் பங்கேற்று வழிபாடு நடத்தியுள்ளார்.

    பின்னர் கோவிலில் இருந்து புறப்படும் முன்பாக அங்கு வரும் பங்காளி முறை கொண்ட அனைவரையும் அழைத்து நலம் விசாரிப்பதோடு, அவர்களின் குடும்பத்தினர், குழந்தைகளின் கல்வி குறித்தும் கேட்டறிந்து மன நிறைவு பெறுவார்.

    அதிலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் கஷ்டப்படுவர்களிடம் அவர்களின் தேவை குறித்து கேட்டறிந்து உதவிகள் பல செய்துள்ளார். இருந்தபோதிலும் அதனை வெட்ட வெளிச்சமாக காண்பித்ததில்லை. நீங்கள் நன்றாக இருந்தால்தான் உங்களின் குழந்தைகளின், அவர்களின் எதிர்காலமும் நன்றாக இருக்கும் என்பதில் எப்போதும் நம்பிக்கை கொண்டவன் என்பதில் உறுதியாக இருந்த கேப்டன் விஜயகாந்த், பலருக்கு பல்வேறு உதவிகளை செய்து கொடுத்துள்ளார்.

    தலைமுறைகள் பல கடந்தாலும், குலதெய்வ கோவிலுக்கும், அங்கு வரும் பலரது குடும்பத்தாருக்கும் யாரும் அறியா வண்ணம் உதவிகள் செய்துவந்துள்ள விஜயகாந்த் இனிமேல் வரமாட்டாரா? என்பதை ஏற்கும் மனப்பக்குவத்தை கொண்டு வருவது காங்கேயநத்தம் கிராமத்தினருக்கு சவால்தான்.

    காங்கேயநத்தம் கிராமத்தில் வீரம்மாள் கோவில் பலருக்கு குலதெய்வமாக இருந்தபோதிலும், கண்கண்ட தெய்வமாக விஜயகாந்த் இருந்துள்ளார் என்பது வெளியில் தெரியாத உண்மை.

    • திருவாதிரை மற்றும் ஆருத்ரா விழா மிகவும் பிரசித்தி பெற்றது.
    • நடராஜர் சன்னதி ஆருத்ரா தரிசன தினத்தில் மட்டும் திறக்கப்படும்.

    ராமநாதபுரம்:

    கடவுளுக்கு உகந்த மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை மற்றும் ஆருத்ரா விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். குறிப்பாக நடராஜரை இந்த நாளில் வழிபட்டால் துன்பங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

    ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோசமங்கை கிராமத்தில் பழமையும், பெருமையும் வாய்ந்த மங்களநாதர் கோவில் அமைந்துள்ளது. இங்கு மரகத நடராஜர் சன்னதி தனியாக அமைந்திருக்கிறது. அங்குள்ள பச்சை மரகதக்கல்லால் ஆன 6 அடி உயரம் கொண்ட மரகத நடராஜர் சன்னதி ஆருத்ரா தரிசன தினத்தில் மட்டும் திறக்கப்படும்.

    நடராஜப்பெருமாள் சிதம்பரத்தில் அம்பலத்தில் ஆடியதாகவும், மதுரையில் கால் மாறி ஆடியதாகவும், திருஉத்தரகோசமங்கையில் அறையில் ஆடியதாகவும் வரலாறு. மற்ற கோவில்களில் நடராஜரின் கற்சிலைகள், பஞ்சலோக சிலைகளையே காணமுடியும். இங்கு பச்சை மரகதக்கல்லால் உருவாக்கப்பட்ட நடராஜர் சிலை இருக்கிறது.

    மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்ற முதுமொழிக்கு ஏற்ப மரகத நடராஜர் சிலை ஆண்டின் அனைத்து நாட்களிலும் சந்தனம் பூசி பாதுகாக்கப்படுகிறது. ஆருத்ரா தரிசனத்திற்காக மட்டும் சந்தனக்காப்பு களையப்பட்டு மரகத நடராஜர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அன்று ஒரு நாள் மட்டும் அந்த சன்னதி விழாக்கோலம் பூண்டிருக்கும்.

    இந்த ஆண்டு ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் கோவிலில் கடந்த 18-ந்தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. அப்போது முதல் தினமும் சுவாமி-அம்பாள், நடராஜரும் மக்களுக்கு விஷேசமாய் அருள்பாலித்து வருகின்றனர்.

    விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனம் களைதல் வைபவம் இன்று நடை பெற்றது. இதற்காக மரகத நடராஜர் சன்னதி இன்று காலை 8 மணிக்கு திறக்கப்பட்டது. அப்போது நடராஜர் மீது பூசப்பட்ட சந்தனங்கள களையப்பட்டு ஜொலிக்கும் மரகதக்கல்லில் சுய உருவமாக நடராஜர் காட்சியளித்தார். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பக்தி பெருக்குடன் நடராஜரை வழிபட்டனர்.

    பின்னர் பால், பன்னீர், மாபொடி, மஞ்சப்பொடி, திரவியப்பொடி, தேன், இள நீர் உள்பட 32 வகையான பொருட்களால் நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் நடராஜரை வரிசையாக சென்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இன்று நள்ளிரவில் மீண்டும் நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறும்.

    நாளை அதிகாலையில் சூரிய உதயமாகும் நேரத்தில் நடராஜருக்கு மீண்டும் சந்தனம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரங்களுடன் பூஜை நடைபெறும். நாளை மாலை வரை மட்டுமே மரகத நடராஜர் சன்னதியில் தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். அதன் பிறகு நடராஜர் சன்னதி மூடப்படுகிறது.

    இந்த கோவிலின் சிறப்பே இங்கு அருள்பாலிக்கும் மரகதக்கல் நடராஜர் மீது பூசிய சந்தனத்தை சூடான நீரில் கரைத்து அருந்தினால் எந்த நோயாக இருந்தாலும் குணமாகும் என்பது ஐதீகம். மருத்துவ குணம் நிறைந்த இந்த சந்தனத்தை பக்தர்கள் போட்டி போட்டு வாங்கி செல்கிறார்கள்.

    இந்த விழாவையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று (26-ந்தேதி) உள்ளூர் விடுமுறை அறி வித்து கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் பல்வேறு ஊர்களில் இருந்து உத்தரகோச மங்கைக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

    ஒரே ஆண்டில் நடைபெறும் இரண்டாவது ஆருத்ரா தரிசன விழா இதுவாகும். அதாவது இந்த ஆண்டின் (2023) ஜனவரி மாதம் 5-ந்தேதி ஒரு ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பேரில் கீழக்கரை டி.எஸ்.பி. சுதிர்லால் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • தமிழகத்தில் உள்ள கோவில்களில் மிகவும் பழமையானதாகும்.
    • மரகத நடராஜர் சன்னதி ஆருத்ரா அன்று மட்டுமே திறக்கப்படும்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரத்தில் இருந்து சுமார் 17 கி.மீ. தொலைவில் திரு உத்தரகோசமங்கை கிராமத்தில் அமைந்துள்ளது மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி கோவில். இந்த கோவில் தமிழகத்தில் உள்ள கோவில்களில் மிகவும் பழமையானதாகும்.

    ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் மரகத நடராஜர் சன்னதி அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இந்த கோவிலில் உள்ள மரகத நடராஜர் சன்னதியானது ஆருத்ரா திருவிழா அன்று ஒரு நாள் மட்டுமே திறக்கப்படும்.

    இந்தநிலையில் திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் கோவிலில் இந்த ஆண்டின் ஆருத்ரா திருவிழாவானது கடந்த 18-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழா தொடங்கியதில் இருந்து தினமும் சுவாமி-அம்பாள் மற்றும் நடராஜர் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர்.

    ஆருத்ரா தரிசன திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி அளவில் மரகத நடராஜர் சன்னதியானது திறக்கப்படுகின்றது. தொடர்ந்து நடராஜர் மீது பூசப்பட்டுள்ள சந்தனங்கள் முழுவதுமாக களையப்படுகிறது. பின்னர் நடராஜருக்கு பால், பன்னீர், மாபொடி, மஞ்சப்பொடி, திரவியப் பொடி, தேன், இளநீர் உள்ளிட்ட 32 வகையான மங்கல பொருட்களால் அபிஷேகம் நடைபெறுகிறது.

    தொடர்ந்து அன்று இரவு 11 மணி அளவில் நடராஜருக்கு மீண்டும் ஆருத்ரா மகா அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகம் முடிந்து நாளை மறுநாள் (27-ந்தேதி) காலை சூரிய உதயமாகும் நேரத்தில் நடராஜருக்கு சந்தனம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெறுகிறது. 27-ந்தேதி மாலை மீண்டும் நடராஜர் சன்னதியானது மூடப்படுகிறது.

    நாளை (26-ந்தேதி) காலையில் இருந்து நாளை மறுநாள் மாலை வரையிலும் மட்டும் மரகத நடராஜர் சன்னதியில் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    ஆருத்ரா தரிசனம் நாளை நடைபெறு வதை முன்னிட்டு திருஉத்தரகோசமங்கை கோவிலில் நாளை பகல் மற்றும் இரவு முழுவதும் சென்னை, மதுரை, பெங்களூரு உள்ளிட்ட பல ஊர்களை சேர்ந்த பரதநாட்டிய கலைஞர்களின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    நாளை நடைபெறும் ஆருத்ரா தரிசனத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை, திவான் பழனிவேல் பாண்டியன் மற்றும் கோவில் பணி யாளர்கள் செய்து வருகின்றனர்.

    ஆண்டுதோறும் ஒரு நாள் மட்டுமே மரகத நடராஜர் சன்னதியானது பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தந்தை பெரியாரை இளைஞர்கள் அதிகளவில் பின்பற்ற ஆரம்பித்து விட்டனர்.
    • தமிழக தென்மாவட்டங்களில் மத்திய நிதியமைச்சர் ஆய்வு செய்யப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    மதுரை:

    பெரியாரின் 50-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி மதுரை சின்ன சொக்கிக்குளம் அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மகன் துரை வைகோ ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பின்னர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சமூகநீதியின் வடிவமாக தந்தை பெரியார் திகழ்கிறார். தந்தை பெரியாரை இளைஞர்கள் அதிகளவில் பின்பற்ற ஆரம்பித்து விட்டனர். சமீப காலமாக தந்தை பெரியார் சிலை அவமதிப்பு அதிகளவில் நடைபெறுவது வேதனைக்குரியது.

    தந்தை பெரியார் சிலையை திட்டமிட்டு ஒரு கூட்டம் அவமதிப்பு செய்கிறது. அதற்கு தகுந்த பதிலடியை நாங்கள் கொடுத்துள்ளோம். வெளிப்படையாக பெரியார் சிலையை அவமதிப்பு செய்வோம் என கூறி விட்டு யாராவது ஒருவர் அவமதிப்பு செய்தால் அவர்கள் கை இருக்காது.

    தமிழக தென்மாவட்டங்களில் மத்திய நிதியமைச்சர் ஆய்வு செய்யப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மத்திய அமைச்சர்கள் தென்மாவட்ட வெள்ள பாதிப்பை பார்வையிடவில்லை என உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு தெரிவித்ததை தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தென் மாவட்டங்களில் ஆய்வு செய்ய வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சயன மண்டபத்தில் சுவாமிக்கு விசேஷ பூஜைகள், சிறப்பு அபிஷேகம் நடந்தது.
    • மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் வழியாக சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அலங்காநல்லூர்:

    திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என அழைக்கப்படும் மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு வருடந்தோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 13-ந்தேதி பகல் பத்து உற்சவத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சுந்தரராஜபெருமாள் ஸ்ரீதேவி-பூதேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    விழாவின் சிகர நிகழச்சியான சொர்க்கவாசல் திறப்பு விழா இன்று அதிகாலை நடந்தது. இதில் மேளதாளம் முழங்க வர்ணக்குடை, தீவட்டி பரிவாரங்களுடன் காலை 5.10 மணிக்கு கள்ளழகர் என்கிற சுந்தரராஜ பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வந்து அங்குள்ள சயன மண்டத்தை சுற்றி வந்து அதே மண்டபத்தில் எழுந்தருளினார். 'முன்னதாக நம்மாழ்வார் பரமபத வாசல் வழியாக பெருமாளை வரவேற்கும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து சயன மண்டபத்தில் சுவாமிக்கு விசேஷ பூஜைகள், சிறப்பு அபிஷேகம் நடந்தது. சர்வ அலங்காரத்தில் சுந்தர ராஜபெருமாள் அருள்பாலித்தார். திருஅத்யயன உற்சவத்தின் முக்கிய நிகழ்வான பெருமாள் சொர்க்கவாசல் எழுந்தருளும் நிகழ்வை காண அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கள்ளழகர் கோவிலுக்கு வருகை தந்து நீண்ட நேரம் காத்திருந்து சொர்க்கவாசல் வழியாக வந்து சுந்தரராஜ பெருமாளை வணங்கினர்.

    இதைப்போலவே இந்த கோவிலின் உபகோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை அதே நேரத்தில் சொர்க்கவாசல் வழியாக சுவாமி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அங்கும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அப்பன் திருப்பதி போலீசார் செய்தி ருந்தனர்.

    மதுரை நகரின் மைய பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கூடலழகர் பெருமாள் கோவிலில் இன்று மாலை சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு மூலவர் கூடலழகருக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றன.

    காலை முதலே திரளான பக்தர்கள் கோவிலில் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர். சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு கோவில் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்காக கீழக்கரை கிராமத்தில் 44 கோடி ரூபாய் செலவில் 66 ஏக்கரில் மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது.

    மதுரை:

    ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக்குப்பிறகு கலெக்டர் சங்கீதா கூறியதாவது:

    * அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்காக கீழக்கரை கிராமத்தில் 44 கோடி ரூபாய் செலவில் 66 ஏக்கரில் மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது.

    * அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அடுத்த ஆண்டு வழக்கமான இடத்திலேயே நடைபெறும் என அறிவித்துள்ளார்.

    2024-ம் ஆண்டு அலங்காநல்லூர் அரங்கில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கமான இடத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • டாக்டர் சுரேஷ் பாபு திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார்.
    • பணத்தை பெற்றுக் கொண்டு காரில் தப்பிக்க முயன்ற அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர்.

    மதுரை:

    திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர் சுரேஷ் பாபு மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் இருந்து தப்பிக்க வைக்க தனக்கு ரூ.3 கோடி லஞ்சம் வேண்டும் என மதுரை அமலாக்கத்துறையில் பணிபுரியும் துணை இயக்குனர் அங்கிட் திவாரி டாக்டர் சுரேஷ் பாபுவை அணுகி உள்ளார்.

    இதனை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் ரூ.20 லட்சம் கொடுத்துள்ளார். தொடர்ந்து வாட்ஸ்ஆப் மூலமாக அங்கிட் திவாரி, மீதியுள்ள ரூ.31 லட்சத்தை கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

    இதனையடுத்து டாக்டர் சுரேஷ் பாபு திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் ரசாயன கலவை தடவிய ரூபாய் நோட்டு கட்டுகளை பேக்கில் வைத்து சுரேஷ் பாபு கொடுத்தார். அந்தப் பணத்தை பெற்றுக் கொண்டு காரில் தப்பிக்க முயன்ற அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர்.

    பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர். அங்கிட் திவாரியை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.

    இந்த நிலையில் அங்கிட் திவாரி தனக்கு ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கு நேற்று நீதிபதி சிவஞானம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி அங்கிட் திவாரிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனை பதிவு செய்த நீதிபதி தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று வழக்கை ஒத்தி வைத்திருந்தார்.

    இன்று காலை ஜாமீன் வழக்கு குறித்து நீதிபதி சிவஞானம், அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 3 கிலோ எடை கொண்ட குழந்தையும், தாயும் நலமுடன் இருப்பதாக அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் ரத்தினவேல் தெரிவித்தார்.
    • அரசுக்கும், ஹெலிகாப்டரில் வந்த மீட்புக்குழுவினருக்கும் என்றும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்று அனுசுயா மயில் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

    மதுரை:

    வடகிழக்கு வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் வரலாறு காணாத அளவிற்கு பேய் மழை கொட்டித் தீர்த்தது.

    அதிலும் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 95 செ.மீ. மழை பதிவானது. வானத்தை பிளந்துகொண்டு கொட்டிய மழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. உணவு, தண்ணீர் இன்றி பொதுமக்கள் தவித்தனர்.

    இதற்கிடையே ஸ்ரீவைகுண்டம் அருகே தண்டவாள பகுதியில் ஏற்பட்ட மண் அரிப்பால் திருச்செந்தூரில் இருந்து சென்னை புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. தண்டவாளம் அந்தரத்தில் தொங்கியதால் அந்த பகுதியை ரெயில் கடக்க முடியவில்லை. அதில் தவித்த 500 பயணிகள் நேற்று ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    அதேபோல் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் வீட்டின் மொட்டை மாடியில் தவித்த நிறைமாத கர்ப்பிணியான அனுசுயா மயில் (வயது 27), அவரது தாயார் சேதுலட்சுமி, பெருமாள் மற்றும் கைக்குழந்தை ஆகிய 4 பேரையும் ஹெலிகாப்டரில் சென்று மீட்டனர்.

    பின்னர் உடனடியாக அவர்கள் அதே ஹெலிகாப்டரில் மதுரை விமான நிலையம் அழைத்து வரப்பட்டு அங்கிருந்து ஆம்புலன்ஸ் வேன் மூலம் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நிறைமாத கர்ப்பிணியான அனுசுயா மயிலுக்கு ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்படி 25-ந்தேதி பிரசவ தேதியாக கொடுக்கப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் இன்று அதிகாலை அவருக்கு சுகப்பிரசவம் மூலம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. 3 கிலோ எடை கொண்ட அந்த குழந்தையும், தாயும் நலமுடன் இருப்பதாக அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் ரத்தினவேல் தெரிவித்தார்.

    சரியான நேரத்தில் ஹெலிகாப்டரில் வந்து எங்களை பத்திரமாக மீட்டு உரிய சிகிச்சை அளித்ததன் மூலம் சுகப்பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுத்து உள்ளேன். அதற்காக அரசுக்கும், ஹெலிகாப்டரில் வந்த மீட்புக்குழுவினருக்கும் என்றும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்று அனுசுயா மயில் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

    • கர்ப்பிணி உள்பட 4 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • எங்கள் ஊருக்கு அருகில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையும் முழுமையாக தண்ணீரில் மூழ்கியது

    மதுரை:

    தென் மாவட்டங்களான தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்தது. இதில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் ரெயில் பாதைகளில் மண் அரிப்பு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தப்பட்டது.

    ரெயிலில் இருந்த பயணிகள் பஸ், வேன்கள் மூலம் சுமார் 300 பேர் மீட்கப்பட்டனர். மீதமிருந்த 500 பயணிகளை மீட்கும் பணியில் ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டது. முதற்கட்டமாக ஹெலிகாப்டர் மூலம் ரெயிலில் சிக்கிய பயணிகளுக்கு உணவுகள் வழங்கப்பட்டது.

    அதன் ஒரு பகுதியாக ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண் உள்பட நான்கு பேரை சூலூரில் இருந்து வந்த ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு மதுரை விமான நிலையம் கொண்டு வரப்பட்டனர்.

    ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் அனுசுயா மயில், கணவர் பெருமாள், தாய் சேது லட்சுமி, குழந்தை தாஸ் வருண் ஆகிய நான்கு பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மதுரை மதுரை விமான நிலையம் கொண்டு வரப்பட்டனர்.

    மதுரை விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். அங்கு கர்ப்பிணி உள்பட 4 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் கர்ப்பிணி பெண் உள்ளிட்டோர் நலமுடன் இருப்பதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

    ஸ்ரீவைகுண்டத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் தாயார் சேது லட்சுமி கூறியதாவது:-

    எங்கள் ஊருக்கு அருகில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையும் முழுமையாக தண்ணீரில் மூழ்கியது. மின்சாரம் இல்லாத நிலையில் யாரையும் செல்போன் மூலமாக கூட தொடர்பு கொள்ள முடியாமல் தவித்தோம்.

    3 நாட்களாக உணவு, தண்ணீர் இன்றி தவித்தோம். நாங்கள் இருக்கும் பகுதிக்கு உணவு வழங்குவதற்காக ஹெலிகாப்டர் வந்தபோது உதவி என்று பெரிய அட்டையில் எழுதி காண்பித்ததால் உடனடியாக ராணுவ வீரர்கள் எங்களை மீட்டனர்.

    எங்களை நெல்லை அரசு மருத்துவமனைக்கு தான் அழைத்து செல்வார்கள் என்று நினைத்தபோது அங்கு போதிய வசதி தற்போது இல்லை எனக்கூறி மதுரைக்கு அழைத்து வந்தனர். முதன் முறையாக ஹெலிகாப்டரில் வந்தபோது பதட்டமாக இருந்தது.

    எங்களுக்கு உணவு கூட வேண்டாம், கர்ப்பிணிப் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றால் போதும் என நினைத்து காத்திருந்தோம். எங்கள் நல்ல நேரத்திற்கு ஹெலிகாப்டர் நாங்கள் இருக்கும் பகுதிக்கு வந்தது.

    மதுரை அரசு மருத்துவமனையில் எனது மகள் தற்போது நலமாக இருக்கிறார் என்று கண்ணீருடன் கூறினார்.

    • மதுரையின் பல்வேறு இடங்களில் மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டன.
    • தேனி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருவதால் வைகை அணைக்கு சுமார் 20000 கன அடி தண்ணீர் வருகிறது.

    மதுரை:

    மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய விடிய மிதமான மழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகள் மற்றும் பஸ் நிலைய பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின. மதுரை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கண்மாய்கள், குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நீர்நிலைகள் நிரம்பும் நிலையில் இருந்து வருகிறது.

    இந்த நிலையில் மதுரையின் பல்வேறு இடங்களில் மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டன. மதுரை நகரை பொறுத்தவரை கோரிப்பாளையம், சிம்மக்கல், பெரியார் பஸ் நிலையம், ரெயில் நிலையம் பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். பரவலான மழை காரணமாக மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. இதனால் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது.

    வைகை கரையோர சர்வீஸ் சாலையிலும் கல்பாலம் அருகே தண்ணீர் தேங்கியுள்ளது. நீர்வரத்து அதிகப்பு காரணமாக மதுரை வைகை ஆற்றில் இறங்கவும், கால்நடைகளை குளிப்பாட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆற்றுக்குள் செல்லும் பாதைகள் அடைக்கப்பட்டுள்ளன.

    தேனி மாவட்டத்திலும் பரவலாக கனமழை பெய்து வருவதால் வைகை அணைக்கு சுமார் 20000 கன அடி தண்ணீர் வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியுள்ளது. மொத்த கொள்ளளவான 71 அடியை விரைவில் எட்டும் என்பதால் வைகை கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

    எந்த நேரத்திலும் வைகை அணையில் இருந்து ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்படும் என்பதால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வைகை கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளனர்.

    கனமழை காரணமாக இன்று விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் மதுரையில் மிதமான மழை பெய்ததால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுமா? என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் மதுரையில் வழக்கம் போல பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்று மாவட்ட கலெக்டர் அறிவித்தார்.

    இதனால் காலை நேரத்தில் மழை பெய்த போதும் பள்ளி கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் நனைந்தபடியே சென்றனர். இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்களில் அதிக அளவில் மாணவர்கள் பயணம் செய்ததால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.

    மதுரையில் மழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. தண்ணீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. தத்தனேரி, கருடர் பாலம் பகுதியில் உள்ள சுரங்க பாதைகளில் மழைநீர் தேங்காத வகையில் அதனை உடனுக்குடன் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • தொலை தூரத்தில் உள்ள மாணவ, மாணவிகள் காலையிலேயே பள்ளிக்கு வந்து வளாகத்தில் அமர்ந்து படிப்பது வழக்கம்.
    • 14 பேர் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள தெற்கு தெரு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    தற்போது பள்ளியில் அரையாண்டு தேர்வு நடந்து வருகிறது. 9-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பிற்பகலில் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதற்காக தொலை தூரத்தில் உள்ள மாணவ, மாணவிகள் காலையிலேயே பள்ளிக்கு வந்து வளாகத்தில் அமர்ந்து படிப்பது வழக்கம்.

    அதன்படி இன்று தேர்வுக்காக வளாகத்தில் உள்ள மரத்தடியில் மாணவ-மாணவிகள் மும்முரமாக படித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்தப்பகுதியில் பலத்த காற்று வீசியது. மரக்கிளைகள் காய்ந்திருந்ததால் காற்றில் பலமாக ஆடியது.

    இதில் எதிர்பாராதவிதமாக மரம் முறிந்து படித்துக்கொண்டிருந்த மாணவ-மாணவிகள் மீது விழுந்தது. இதில் அவர்கள் கூச்சலிட்டனர். உடனே அங்கிருந்த பள்ளி ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு சிக்கியிருந்த மாணவ, மாணவிகளை மீட்டனர். மாணவிகள் விஜயா, விஷாலினி, மதுஸ்ரீ, இலக்கியா உள்ளிட்ட 17 பேர் படுகாயமடைந்தனர். இதில் 14 பேர் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவ-மாணவிகள் மீது மரம் முறிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×