என் மலர்
மதுரை
- 12 மாதங்களிலும் பல்வேறு திருவிழாக்கள், உற்சவங்கள் நடைபெறும்.
- மார்கழி மாதத்தில் தேய்பிறை அஷ்டமி திருவிழா நடக்கும்.
மதுரை:
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருடத்தின் 12 மாதங்களிலும் பல்வேறு திருவிழாக்கள், உற்சவங்கள் நடைபெறும். அதன்படி உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவன் படி அளக்கும் லீலையை குறிக்கும் வகையில் மார்கழி மாதத்தில் தேய்பிறை அஷ்டமி திருவிழா நடக்கும். அன்றைய நாளில் சுவாமி-அம்பாள் அஷ்டமி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருவது வழக்கம்.
அதன்படி மதுரையில் வாழ்ந்து அஷ்டமி பிரதட்சண சப்பரத்தை காண்போருக்கு துன்பம் நீங்கி முக்தி கிடைக்கும் என்பது ஜதீகம். இதனால் அஷ்டமி சப்பரத்தை காண பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிநெடுகிலும் திரண்டு நின்று சுவாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த ஆண்டு மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியான இன்று (வியாழக்கி ழமை) சப்பர வீதி உலா வெகு விமரிசையாக நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுந்தரேசுவரர்-மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து ரிஷப வாகனங்களில் சுவாமி-அம்பாள் எழுந்தரு ளினர். பின்னர் அலங்கரிக் கப்பட்ட பெரிய சப்பரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், சிறிய சப்பரத்தில் மீனாட்சி அம்மனும் எழுந்தருளினர். பின்னர் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 6 மணிக்கு அஷ்டமி சப்பர வீதிஉலா சிவாய கோஷம் முழங்க தொடங்கியது.
இதில் கலந்துகொண்ட சிவ பக்தர்கள் கயிலாய வாத்தியம், சங்கு ஒலியை எழுப்ப பெரிய சப்பரத்தை பக்தர்கள் வடம்பிடித்து முன்னே சென்றனர். அதனைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் எழுந்தருளிய சிறிய சப்பரத்தை பெண்கள் மட்டுமே இழுத்து சென்றனர்.
கீழமாசி வீதியில் தொடங் கிய அஷ்டமி சப்பர வீதி உலா யானைக்கல், கீழ வெளிவீதி, தெற்கு வெளி வீதி, கிரைம் பிராஞ்ச், திருப்பரங்குன்றம் சாலை, மேல வெளிவீதி, குட்ஷெட் தெரு, வக்கீல் புதுதெரு வழியாக மீண்டும் கோவிலை சென்றடைந்தது.
முன்னதாக வழிநெடுகிலும் ஏராளமானோர் குடும் பம், குடும்பமாக வந்து சாமி தரிசனம் செய்தனர். அஷ்டமி சப்பரம் சென்ற சாலைகளில் சிவாச்சாரி யார்கள் அரிசியை சாலைகளில் தூவி விட்டவாறு சென்றனர். அதனை பக்தர்கள் ஆர்வத்துடன் சேகரித்து வீட்டுக்கு எடுத்து சென்றனர். இந்த அரிசியை வீட்டில் வைத்து வேண்டினால் பசிப்பிணி நீங்கும் என்பது நம்பிக்கை.
சித்திரை தேரோட்டத்திற்கு அடுத்தப்படியாக அஷ்டமி சப்பரத்துக்கு அதிக அளவில் பக்தர்கள் திரளுவார்கள் என்பதால் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முக்கிய சாலையில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டிருந்தது.
- குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தபோது அடிக்கடி வாந்தியும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டுள்ளது.
- தற்போது பச்சிளம் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மிகவும் பாதிப்பிற்குள்ளாகி இருக்கிறது.
மதுரை:
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் லோகநாதன்-மீனாட்சி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 16 ஆண்டுகளுக்கு பிறகு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது அந்த குழந்தைக்கு 8 வயது ஆகிறது.
இந்தநிலையில் மீனாட்சி இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்தார். பிரசவத்திற்கு முன்பாக பல்வேறு கட்டங்களில் நடத்தப்பட்ட பரிசோதனையில் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக கூறப்பட்டது. அந்த குழந்தையை வரவேற்கும் விதமாக மருந்து, மாத்திரைகள் உட்கொண்டு உடலை மீனாட்சி முறையாக பராமரித்து வந்தார்.

பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த நவம்பர் மாதம் 14-ந்தேதி பெண் குழந்தை பிறந்தது. அப்போது குழந்தையின் எடை 1 கிலோ 900 கிராம் மட்டுமே இருந்தது. சராசரி எடையை விட குறைவாக இருந்ததால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் மற்றும் சர்க்கரை அளவு குறைபாடும் இருந்தது.
இதையடுத்து அந்த குழந்தையை அரசு ஆஸ்பத்திரியில் இன்குபேட்டரில் வைத்து டாக்டர்கள் கண்காணித்து வந்தனர். அங்குள்ள சிறப்பு வார்டில் தீவிர சிகிச்சை பிரிவில் 21 நாள் பச்சிளம் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன்பின் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு சொந்த ஊரான முதுகுளத்தூருக்கு சென்றனர்.
அங்கு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தபோது அடிக்கடி வாந்தியும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டுள்ளது. வாந்தி எடுக்கும் போது வாயில் இருந்து குழாய் போன்ற அமைப்பில் காற்றுடன் தண்ணீர் வெளியேறுவதுபோல் முட்டை முட்டையாக வந்ததை பார்த்து பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அழுது கொண்டே வலியால் துடித்ததால் உடனடியாக குழந்தையை பரமக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அப்போது ஸ்கேன் எடுத்து பார்த்ததில் குழந்தையின் வயிற்றில் டியூப் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 21 நாட்கள் இன்குபேட்டரில் வைத்திருந்த குழந்தைக்கு தொண்டைக்குள் டியூப்பை விட்டு சிகிச்சை அளித்த போது அந்த டியூப்பை அகற்றாமல் அஜாக்கிரதையால் மறந்து குழந்தையை பெற்றோரிடம் திருப்பி கொடுத்துள்ளனர். அதனை அகற்ற அங்கு போதிய மருத்துவ வசதி இல்லாததால் மீண்டும் குழந்தையை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர்.
இதனால் தற்போது பச்சிளம் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மிகவும் பாதிப்பிற்குள்ளாகி இருக்கிறது. டாக்டர்களின் அலட்சியம் மற்றும் அஜாக்கிரதையால் குழந்தை உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் உள்ளது. அங்கு சிறப்பு டாக்டர்கள் குழுவினர் குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து பரிசோதனை மற்றும் டியூப்பை அகற்றுவதற்கான சிகிச்சையை தொடங்கியுள்ளனர்.
- காளைகளுக்கு நீச்சல் பயிற்சி, மண் குத்தும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.
- அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகள் தொடங்கிய நிலையில் அந்த ஊர் தற்போது முதலே விழாக்கோலம் பூண்டு வருகிறது.
அலங்காநல்லூர்:
தமிழர்களின் பாரம்பரிய உலகப் புகழ்பெற்ற வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு அவனியாபுரத்தில் 15-ந்தேதியும், பாலமேட்டில் 16-ந்தேதியும், அலங்காநல்லூரில் 17-ந்தேதியும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதையொட்டி ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகளை விழா குழுவினர், ஜல்லிக்கட்டு கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
அதன்படி முதற்கட்டமாக ஜல்லிக்கட்டு அழைப்பிதழ் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி அங்குள்ள காளியம்மன் கோவில் முன்பாக உள்ள மந்தை திடலில் நடைபெற உள்ளது. இதையொட்டி அலங்காநல்லூர் பேரூராட்சி சார்பில் காளைகள் வந்து சேரும் இடம், காளைகள் நிறுத்தும் இடங்களில் டிராக்டர் மூலம் சுத்தப்படுத்தும் பணிகளும் மும்முரம் அடைந்துள்ளது.
இதேபோன்று பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி அங்குள்ள மஞ்சமலை ஆற்று திடலில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அதற்கான முன்னேற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக பாலமேடு பேரூராட்சி சார்பில் வாடிவாசல் முன்புறம், காளைகள் நிறுத்துமிடம் காளைகள் வந்து சேரும் இடங்களில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்றது.
தொடர்ந்து நேற்று வாடிவாசல் வண்ணம் தீட்டி புதுப்பிக்கும் பணிகள் தொடங்கியது. இதனையடுத்து தற்போது மைதானத்தை தூய்மைபடுத்தும் பணி, பார்வையாளர்கள் அமரும் கேலரி, காளைகள் வந்து சேரும் இடம், காளைகள் சேகரிக்கும் இடம் உள்ளிட்ட பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளது. இதனை பாலமேடு கிராம பொது மகாலிங்கசுவாமி மடத்து கமிட்டி தலைவர் மலைச்சாமி, செயலாளர் பிரபு, பொருளாளர் ஜோதி தங்கமணி மற்றும் கமிட்டி நிர்வாகிகள் பார்வையிட்டனர்.
பின்னர் அவர்கள் கூறுகையில், இந்தாண்டு 2024 பாலமேடு ஜல்லிக்கட்டு அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் விதிமுறைகள்படி ஜனவரி 16-ந்தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதில் கலந்துகொண்டு அதிக காளைகளை அடக்கும் வீரருக்கு தமிழக முதல்வர் சார்பில் முதல் பரிசாக சொகுசு கார், இரண்டாவது பரிசாக பைக், வழங்கப்பட உள்ளது. இதே போன்று சிறந்த காளைக்கு முதல் பரிசாக பைக், இரண்டாவது பரிசாக கன்றுடன் கூடிய நாட்டு பசு, பரிசாக வழங்கப்பட உள்ளது.
மேலும் விலை உயர்ந்த டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின், தங்கக்காசு, சைக்கிள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்பட உள்ளதாக கமிட்டியினர் தெரிவித்தனர்.
ஜல்லிக்கட்டு பணிகள் தொடங்கிய நிலையில் அலங்காநல்லூர் பாலமேடு மற்றும் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகளை அதன் உரிமையாளர்கள் தீவிரமாக தயார்படுத்தி வருகின்றனர். காளைகளுக்கு நீச்சல் பயிற்சி, மண் குத்தும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.
கடலை மிட்டாய், புண்ணாக்கு ரொட்டி தீவனம், வைக்கோல் உள்ளிட்ட உணவு பொருட்களை ஜல்லிக்கட்டு காளைகளுக்கு உணவாக கொடுத்து தங்களது காளைகளை ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்க தயார்படுத்தி வருகின்றனர். மேலும் மாடுபிடி வீரர்கள் தங்களது குல தெய்வங்களுக்கு காப்பு கட்டி, விரதம் இருந்து காளைகளை வடத்தில் கட்டி பயிற்சி கொடுத்து வருகிறார்கள். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகள் தொடங்கிய நிலையில் அந்த ஊர் தற்போது முதலே விழாக்கோலம் பூண்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் புதுமையை படைத்து வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் தற்போது காளைகளினால் உயிர்ச்சேதம், காயங்களை தவிர்த்திடும் வகையில், இந்திய விலங்குகள் நல வாரியத்தின் பரிந்துரையின்பேரில் காளைகளின் கொம்புகளில் பிளாஸ்டிக் மற்றும் ரப்பரால் உருவாக்கப்பட்ட பாதுகாப்பு கவசம் பொருத்தவும் ஏற்பாடுகள் ஒருபுறம் நடந்து வருகிறது.
ஆனாலும் காளைக்கும், காளையர்களுக்கும் இடையே நடக்கும் இந்த வீர விளையாட்டில் சொகுசு கார், பைக்கை குறித்து களம் இறங்க இருதரப்பிலும் தயாராகி வருகிறார்கள்.
- இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு தைப்பொங்கல் நாளான வருகிற 15-ந் தேதி அவனியாபுரத்தில் தொடங்குகிறது.
- போட்டியில் பங்கேற்கும் காளையின் வயது 3 முதல் 8-க்குள் உள்ளதா? என்று பரிசோதித்தனர்.
திருப்பரங்குன்றம்:
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விழா மதுரைக்கு தனி அடையாளத்தை தருகிறது.
பொங்கல் பண்டிகை அன்று மதுரை அவனியாபுரத்திலும், அதற்கு அடுத்தநாள் பாலமேடு, அதற்கு அடுத்த நாள் அலங்காநல்லூர் ஆகிய இடங்களிலும் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாக்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.
இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு தைப்பொங்கல் நாளான வருகிற 15-ந் தேதி அவனியாபுரத்தில் தொடங்குகிறது.
ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்கும் காளைகளுக்கு கால்நடை மருத்துவ குழுவினர் மூலம் பரிசோதனை செய்து தகுதி சான்றிதழ்கள் வழங்குவது வழக்கம்.
அதன்படி காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நேற்று திருப்பரங்குன்றத்தை அடுத்த விளாச்சேரியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் நடைபெற்றது. காளைகளின் கொம்புகள் உயரம், பற்களின் எண்ணிக்கை, திமில் அளவு குறித்து அளவீடு செய்து கால்நடை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.
மேலும் போட்டியில் பங்கேற்கும் காளையின் வயது 3 முதல் 8-க்குள் உள்ளதா? என்றும் பரிசோதித்தனர். தகுதியுடைய காளைகளுக்கு படத்துடன் கூடிய தகுதி சான்றிதழ்களை மருத்துவ குழுவினா் வழங்கினா்.
- தமிழகம் முழுவதும் சுமார் 350-க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது.
- அரசு வழிகாட்டுதல்படி 55 முதல் 60 காளைகள் வரை மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்க வேண்டும்.
மதுரை:
தமிழர்களின் பாரம்பரியம் மிக்க மரபு வழி விளையாட்டுக்களில் ஜல்லிக்கட்டும் ஒன்றாகும். ஏறு தழுவுதல், மஞ்சுவிரட்டு ஆகிய வரிசையில் நம்முடைய பண்பாட்டையும், வீரத்தையும் வெளிப்படுத்தும் வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது.
மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் அதிக அளவிலும், மற்ற மாவட்டங்களில் குறைவான அளவிலும் நடைபெறும் இந்த போட்டிகளைகாண உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி வெளிநாட்டினரும் வருகை தருகிறார்கள். அதன்படி தமிழகம் முழுவதும் சுமார் 350-க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது.
அதில் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு பேரும், புகழும் வாய்ந்ததாகும். உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண சுற்றுலாத்துறை சார்பில் வெளிநாட்டு பயணிகள் அழைத்து வரப்பட்டு, அவர்களுக்கு தனி கேலரி வசதியும் ஏற்படுத்தி தரப்படுகிறது.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், காளைகளுக்கு அதன் உரிமையாளர்கள் நீச்சல் பயிற்சி, மண்ணை குவித்து வைத்து அதில் முட்டி கொம்புகளை தீட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகின்றனர். அதேபோல், மாடுபிடி வீரர்களும் காளைகளை அடக்க பயிற்சி மூலம் தயாராகி வருகிறார்கள்.
இதற்கிடையே ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை மறு ஆய்வு மேற்கொண்ட இந்திய விலங்குகள் நலவாரியம் கூட்ட நெரிசல், காயங்கள் மற்றும் உயிரிழப்புகளை தடுக்க ஆன்லைனில் பதிவு செய்யும் முறையை அறிமுகப்படுத்துமாறு வலியுறுத்தி உள்ளது. அரசு வழிகாட்டுதல்படி 55 முதல் 60 காளைகள் வரை மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்க வேண்டும்.
ஆனால், அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகளில் 600-க்கும் மேற்பட்ட காளைகள் களம் இறக்கப்படுகிறது. இதில் கடந்த 2022-ல் நடந்த ஜல்லிக்கட்டில் 9 காளைகளும், 950 மாடுபிடி வீரர்களும் காயமடைந்தனர். தமிழகம் முழுவதும் நடந்த 350 ஜல்லிக்கட்டுகளில் மொத்தம் 8 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர்.
இதற்கிடையே இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு முன்னேற்பாடாக உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்கவும், காயங்களை குறைக்கவும் காளைகளின் கொம்புகளில் ரப்பர் அல்லது பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட பாதுகாப்பு கவசம் (ஹார்ன்புஷ்) பொருத்த தமிழக அரசும், விலங்குகள் நலவாரியமும் ஆலோசித்து வருகிறது.
மேலும் போட்டிகளை நடத்தும் விழா கமிட்டிகளுக்கு தமிழக அரசும், விலங்குகள் நலவாரியமும் வழிகாட்டுதல்களை வழங்கி இருப்பதோடு, இந்த பாதுகாப்பு கவசத்தை தயாரிக்க அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.
அரசு சார்பில் நடத்தப்படும் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரத்தில் 15-ந்தேதி பொங்கல் நாளில் நடைபெறுகிறது. 16-ந்தேதி பாலமேட்டிலும், 17-ந்தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கிறது.
- மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்க மொத்தமாக ரூ.1977.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்திற்கான திட்ட மேலாண்மை இயக்குநரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை:
மதுரை தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந்தேதி மதுரைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
ஆனால் தற்போது வரை அடிக்கல் நாட்டி, சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. இதுவரை எந்த பணிகளும் தொடங்கப்படாமலேயே உள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்குவதற்கு முன்பே, ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் படிக்கும் சூழல் இருந்து வருகிறது.
எனவே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து மதுரையை சேர்ந்த வல்லரசு என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதில் அளித்து விளக்கம் தரப்பட்டுள்ளது. அதில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிதி ஒதுக்கீட்டிற்கு முன்பு செய்ய வேண்டிய பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளது. இந்தியா அரசு மற்றும் ஜப்பான் அரசுடன் ஒப்பந்தம் கையெழுத்து பணிகள் முடிவடைந்துள்ளது.
இரு நாட்டு ஒப்பந்தப்படி மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் அக்டோபர் 2026 ஆம் ஆண்டிற்குள் முடிக்கப்பட வேண்டும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு மொத்தமாக ரூ.1977.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்திற்கான திட்ட மேலாண்மை இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார்.
எய்ம்ஸ் கட்டுமானத்திற்கான மாஸ்டர் பிளான் இறுதி செய்யப்பட்டுள்ளது. 2021-2022 ஆம் ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ். வகுப்புகள் தற்காலிகமான இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இவ்வாறு பதிலளித்துள்ளது.
நேற்று மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை ஆய்வு செய்வதற்காக வந்த மத்திய சுகாதார இணை அமைச்சர் எஸ்.பி.சிங் நிருபர்களிடம் கூறுகையில், ஜனவரி 2-ந் தேதிக்குள் ஒப்பந்தப் புள்ளி இறுதி செய்யப்படும். மூன்று மாதத்தில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும். 2027 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்படும் என குறிப்பிட்டிருந்தார்.
வரும் ஜனவரி மாதத்துடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டப்பட்டு ஐந்து வருடங்கள் ஆக உள்ளது. இந்தநிலையில் கட்டுமான பணிகள் தொடங்காதது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தினாலும் விரைவாக எய்ம்ஸ் மருத்துவமனை வர வேண்டும் என்பதே தென் மாவட்ட மக்கள் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
- மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் என மத்திய மந்திரி கூறினார்.
- இந்தியாவில் ஜே.என்.1 வகை தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது என தெரிவித்தார்.
மதுரை:
மதுரை எய்ம்ஸ் நிர்வாகத்துடன் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி எஸ்.பி.சிங் இன்று மதுரைக்கு வருகை தந்தார்.
இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி.சிங், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும். எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளுக்கு ஜனவரி 2-ல் டெண்டர் விடப்படும். டெண்டர் விடப்பட்ட 3 ஆண்டுகளில் கட்டுமானம் முடிவடையும். மருத்துவமனை கட்டுமான மதிப்பு தற்போது 20 சதவீதம் உயர்ந்துள்ளது என தெரிவித்தார்.
மேலும், ஜே.என்.1 வகை கொரோனா குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இந்தியாவில் ஜே.என்.1 வகை தொற்று கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்தப் புதிய வகை கொரோனாவின் தாக்கம் குறைவுதான் என கூறினார்.
- எனக்கு திருமணம் செய்து வைத்தது மட்டுமின்றி எனது மகள்கள் திருமணத்தையும் நடத்தி வைத்தது விஜயகாந்த் தான்.
- நானும் ராவுத்தரும் ஒரே இடத்தில் தான் வசித்து வந்தோம். விஜயகாந்துக்கு பெண் பார்த்ததே நான் தான்.
விஜயகாந்திடம் பல வருடங்களாக உதவியாளராக பணியாற்றியவர் சுப்பையா. உதவியாளர் மட்டுமின்றி ஓட்டுனராகவும் டச்சப் மேனாகவும் பணியாற்றி வந்தார்.
அவரை பெரியண்ணா படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆக்கி அழகு பார்த்தார் விஜயகாந்த்.
இதுபற்றி உதவியாளராக பணியாற்றிய சுப்பையா இன்று கூறியதாவது:-
விஜயகாந்த் உதவியாளராக சாட்சி படத்திலிருந்து தொடங்கி ஏராளமான படங்களில் பணியாற்றினேன்.
எனக்கு திருமணம் செய்து வைத்தது மட்டுமின்றி எனது மகள்கள் திருமணத்தையும் நடத்தி வைத்தது விஜயகாந்த் தான். நான் அவர் குடும்பத்தில் ஒரு ஆளாக இருந்தேன்.
அதிகமாக நான்தான் அவரிடம் அடி வாங்கியவன். பாசத்துடன் அடிக்கடி சண்டையிட்டு கொள்வோம்.
விஜயகாந்தின் தம்பி பிருதிவி திருமணம் சென்னையில் நடந்தது. திருமண விழாவில் பங்கேற்க ஜேப்பியாரும் ஏ.சி சண்முகமும் வந்திருந்தனர். அவர்களிடம் இவன்தான் எனது முதல் பொண்டாட்டி என்று என்னை பார்த்து விஜயகாந்த் கூறினார்.
உதவியாளராக பணியாற்றி வந்த நிலையில் திடீரென கேப்டன் பிரபாகரன் படத்தில் மேனேஜராக பணியாற்ற சொன்னார்.
நான் வேண்டாம் உங்களுடனே இருந்து விடுகிறேன் என்று கூறினேன்.
ஏண்டா எத்தனை நாள் இப்படியே இருக்கப் போகிறாய் புரமோஷன் வேண்டாமா? என்று கூறி பிடிவாதமாக என்னை மேனேஜர் ஆக்கினார். இதைத்தொடர்ந்து பல படங்களில் மேனேஜராக பணியாற்றினேன்.
நானும் ராவுத்தரும் ஒரே இடத்தில் தான் வசித்து வந்தோம். விஜயகாந்துக்கு பெண் பார்த்ததே நான் தான். ஆண்டு கணக்கில் விஜயகாந்த் உடன் இருந்து வந்த நிலையில் சில பிரச்சனைகள் காரணமாக பிரிவு ஏற்பட்டது.
நான்கு, ஐந்து வருடங்ளுக்கு பிறகு மீண்டும் மதுரையில் விஜயகாந்தை சந்திப்பதற்காக சென்றேன். மீனாட்சி அம்மன் கோவிலில் விஜயகாந்த்தும் பிரேமலதாவும் தரிசனம் செய்துவிட்டு வந்தனர். கோவிலுக்கு வெளியே நின்று இருந்த என்னை பார்த்து என்னடா திடீர்னு இங்கு? என்று விஜயகாந்த் கேட்டார். உங்களைப் பார்க்கத்தான் வந்தேன் என்று கூறினேன்.
அப்போது அவர் கள்ளழகர் படப்பிடிப்புக்கு செல்கிறேன் மதியத்திற்கு பிறகு ஆண்டாள் அழகர் அலுவலகத்திற்கு வா பேசுவோம் என்றார். மாலை அவரை சந்தித்தபோது என்னடா இப்ப என்ன செய்ற என்று கேட்டார். நான் படம் தயாரிக்க போகிறேன் என்றேன். என்னடா சொல்ற.. என்றார். நீங்கதானே சொன்னீங்க இப்படியே இருப்பியா? புரமோஷன் வேண்டாமா? என்று கேட்டீர்கள் என்றேன்.
சரி ஹீரோ யார்?என்றார். நீங்கள் தான் என்று கூறினேன். இயக்குனர் யார் என்றார் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் பேசலாம்னு இருக்கிறேன் என்றேன். சரி நீ அவரிடம் பேசி விட்டு உடனடியாக படப்பிடிப்புக்கு ஏற்பாடு செய் என்று கூறினார். சென்னைக்கு வந்து எஸ்.ஏ. சந்திரசேகரிடம் விஷயத்தை சொன்னேன். அவர் முதலில் நம்பவில்லை. விஜயகாந்தை தொடர்பு கொண்டு பேசினார். ஆமாம் உண்மை தான் நம்ம ஆளு வளர வேண்டாமா என்று கூறி படத்தின் வேலையை உடனே தொடங்குங்கள் என்று எஸ்.ஏ சந்திரசேகரிடம் கூறினார் விஜயகாந்த்.
அப்படி எடுக்கப்பட்டது தான் பெரிய அண்ணா. என்னை போன்று பலரை யும் வாழ்க்கையில் உயர்த்தியவர் விஜயகாந்த். அவரது இறப்பு எனக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் பேரிழப்பு.
இவ்வாறு சுப்பையா கூறினார்.
- சாப்பிடுவர்களின் அருகில் சென்று தோளில் தட்டிக்கொடுத்து கேட்டு வாங்கி சாப்பிடுங்கள் என்று கூறும் விஜயகாந்த்தின் பாங்கு, பலருக்கு கண்ணீரை வரவழைத்துவிடும்.
- தீபாவளி, பொங்கல் நாட்களில் தன்னிடம் உதவிகள் கேட்டு வருவோருக்கு வேட்டி, பரிசுப்பொருள் கொடுத்து உபசரித்து அனுப்புவதை கடைசி மூச்சு உள்ளவரை கடைபிடித்தார்.
பள்ளிப்படிப்பை 10-ம் வகுப்புடன் நிறுத்திக்கொண்ட விஜயகாந்த், தனது சினிமா ஆசையை பெற்றோரிடம் கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் தந்தையின் ரைஸ் மில் நிர்வாகத்தை திறம்பட கற்றபோதிலும், குறிப்பிட்ட காலத்தில் பெற்றோரும் பச்சைக்கொடி காட்டி மகனை ஆசீர்வதித்து அனுப்பி வைத்துள்ளனர். எம்.ஜி.ஆரின் வசீகரத்தில் கவர்ந்து இழுக்கப்பட்ட விஜயகாந்த் பின்னாலில் புரட்சிக்கலைஞராக வருவார் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
நடிகராக அவதாரம் எடுத்தாலும் தான் பிறந்து, வளர்ந்து, படித்த நாட்களையும், நபர்களையும் மறக்காமல் இருந்த விஜயகாந்த், மதுரை மேல ஆவணி மூல வீதியில் அலுவலகத்தையும் அமைத்தார். சென்னையில் இருந்து மதுரைக்கு எப்போது வந்தாலும், வீட்டிற்கு சாப்பிட செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களை அலுவலகத்திலேயே கழித்தார்.
அப்போதுதான் அவரை சந்தித்த நாடக நடிகர்களை விஜயகாந்த் பெரிதும் கவர்ந்தார். இதுபற்றி தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக்குழு செயலாளரும், குறும்பட இயக்குனருமான விக்டர் கூறியதாவது:-
சினிமாவில் முகம் தெரிந்தாலே நடிகர்களாக தங்களை பாவித்துக்கொண்டு அதன் மூலம் வாழ்வாதாரம் தேடிய மூன்றாம் கட்ட கலைஞர்களையும், கதாநாயகனாக வலம் வந்த விஜயகாந்த் எப்போதுமே தட்டிக் கழித்தது இல்லை. அதனை விஜயகாந்த்தும், அவரது நண்பருமான அ.செ.இப்ராஹிம் ராவுத்தரும் தங்களது வாழ்நாளில் கடைசி வரை கட்டிக்காத்துள்ளனர்.
படப்பிடிப்பு தளத்தில் கேரவேனுக்கு சாப்பிட செல்லும் விஜயகாந்த், சாப்பாட்டில் கை வைக்கும் முன்பு, தன்னுடன் பணியாற்றும் சக கலைஞர்கள், அனைத்து வகையான ஊழியர்கள் அனைவருக்கும் வழங்கப்படும் சாப்பாட்டை சென்று பார்ப்பார். தனக்கு கொடுக்கும் சாப்பாடுதான் அவர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்.
அதேபோல் சாப்பிடுவர்களின் அருகில் சென்று தோளில் தட்டிக்கொடுத்து கேட்டு வாங்கி சாப்பிடுங்கள் என்று கூறும் விஜயகாந்த்தின் பாங்கு, பலருக்கு கண்ணீரை வரவழைத்துவிடும். அதேபோல் நாடக நடிகர் என்ற பாகுபாடின்றி அவர்களை தனது அலுவலகத்திற்கு அழைத்து பேசி வேண்டிய உதவிகளை செய்து கொடுத்துள்ளார்.
குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, திருவிழாக்கள் தவிர வேலையின்றி தவிக்கும் மேடை கலைஞர்களின் வாழ்வாதாரம் காக்க எண்ணற்ற உதவி என தனது உதவியாளர்கள் மூலம் அவர்களின் பெயர், விபரங்களை கேட்டு அறிந்து கொண்டு உதவிகளை தாராளமாக செய்து கொடுத்துள்ளார்.
தீபாவளி, பொங்கல் நாட்களில் தன்னிடம் உதவிகள் கேட்டு வருவோருக்கு வேட்டி, பரிசுப்பொருள் கொடுத்து உபசரித்து அனுப்புவதை கடைசி மூச்சு உள்ளவரை கடைபிடித்தார்.
அதேபோல் மதுரையில் இருந்து சென்னைக்கு யார் வந்தாலும், அவர்களை முதலில் சாப்பிட வைத்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து பத்திரமாக சென்று வாருங்கள் என்று வழியனுப்பி வைத்த விஜயகாந்த்தை இன்று தமிழகமே வழியனுப்பி வைத்துள்ளது.
- நாம் யார்? எப்படிப்பட்டவர்கள் என்று தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல் இந்திய நாட்டுக்கே தெரியப்படுத்த வேண்டும்
- 90 சதவீத மக்கள் நிச்சயமாக என்னை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
மதுரை:
கடந்த 14.9.2005 அன்று மதுரை திருநகரில் விஜயகாந்தின் முதல் அரசியல் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் தே.மு.தி.க. என்ற தனது கட்சியின் பெயரை விஜயகாந்த் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த மாநாட்டிற்கு தலைமை தாங்கிய விஜயகாந்த் பேசியதாவது:-
நாம் யார்? எப்படிப்பட்டவர்கள் என்று தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல் இந்திய நாட்டுக்கே தெரியப்படுத்த வேண்டும். இந்த கட்சிக்கு பெயர் வைப்பது குறித்து நானும், எனது மனைவியும் கலந்து பேசினோம். எனது நண்பர் குனியமுத்தூர் பாலசுப்பிரமணியனிடமும் பேசினேன். இரண்டு, மூன்று மாதங்களாக பல பெயர்களை எழுதி பார்த்தேன். குழப்பமாக இருந்தது. உண்மையிலேயே சொல்லப்போனால் நேற்று இரவுதான் கட்சி பெயரை முடிவு செய்தேன். அது என்னவோ தெரியவில்லை. கடவுளின் கருணையாலும், உங்களது ஆசியினாலும் இது நடந்து உள்ளது.
மதுரையை ஆளும் சிவபெருமான், மீனாட்சி, திருப்பரங்குன்றம் முருகன் மற்றும் எனது குலதெய்வம் அருளாலும், உங்களின் ஆசியினாலும் கட்சியின் பெயர் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என வைக்கப்பட்டுள்ளது. திராவிடம் என்றால் தமிழ் மட்டும்தான் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் 4 மொழிகள் சேர்ந்ததுதான் திராவிட நாடு.
திராவிட நாடு தேசியத்துக்குள் அங்கம் வகிக்க வேண்டும் என்பதால் தேசியத்தை சேர்த்து உள்ளோம். இந்திய நாடு ஒற்றுமையாக இருக்க தேசியம் அவசியம்.
முற்போக்கு என்பதற்கு காரணம், இன்னும் கல்வி, பொருளாதாரம் போன்ற விஷயங்களில் நாம் பின்தங்கியே இருக்கிறோம் என்ற நிலை மாற, முற்போக்குத்தனமான கொள்கைகள் இருக்க வேண்டும். சிந்தனைகள் வரவேண்டும் என்பதற்காகத்தான் முற்போக்கு என்ற வார்த்தையை கட்சியின் பெயரில் சேர்த்துள்ளோம்.
எந்த அளவுக்கு இந்த பெயர் பிரபலம் அடையும்?. நிச்சயமாக பிரபலம் அடையும். அது உங்களால் முடியும். நீங்கள் இருக்கிறீர்கள். நான் நம்பி இருப்பது மக்களைத்தான். எப்படி நம் மன்றக்கொடி 5 ஆண்டுகளில் பிரபலம் அடைந்ததோ, அதுபோல கட்சியின் பெயர் இன்னும் 6 மாதத்தில் பிரபலமாகும்.
90 சதவீத மக்கள் நிச்சயமாக என்னை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. 50 சதவீத ஓட்டுகள் பெண்களிடம் உள்ளது என்பதும் எனக்குத்தெரியும்.
(அப்போது அங்கிருந்த பெண்கள் கூட்டத்தினரை பார்த்து, உங்கள் ஆதரவு எனக்குத்தானே என கேட்டார். அதற்கு பெண்கள் அனைவரும் ஆமாம்... ஆமாம்... என்று சொல்லி கரகோஷம் எழுப்பினர்)
பெயருக்கு ஏற்றாற்போல கட்சியின் செயல்பாடுகள் அமையும். மற்றவர்களை போல இரண்டு நாள், மூன்று நாள் மாநாடு நடத்தலாம் என நினைத்தேன். ஆனால் எனது தொண்டர்கள் யாரும் பணக்காரர்கள் அல்ல. ஏழைகள்தான். அதனால்தான் ஒருநாள் மாநாடு நடத்துகிறேன். உங்கள் சக்தி அனைவருக்கும் தெரியவேண்டும். சிறு, சிறு தவறுகள் இருக்கலாம். அது எல்லோரிடமும் இருக்கும். ஆனால் எனது தொண்டர்கள் ராணுவத்தை போன்றவர்கள்.
இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
பேசி முடித்ததும் தனது ரசிகர் மன்றத்தின் கொடியை தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் கொடியாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
- சினிமா, அரசியல் என எல்லா இடங்களிலும் மற்றவர்களுக்காக வாழ்ந்தவர்.
- தன்னுடைய பிறந்தநாளுக்கு கோவில், கிறிஸ்தவ ஆலயம், பள்ளிவாசல் என 3 இடங்களுக்கும் சென்று விடுவார்.
வடக்குமாசி வீதி திருப்பதி (வயது 75):-
நான், விஜயகாந்த், இப்ராகிம் ராவுத்தா் உள்ளிட்ட நண்பா்கள் தினமும் மேல ஆவணி மூலவீதியில் கூடுவோம். எங்களுக்குள் கிட்டத்தட்ட 45 வருட பழக்கம் உள்ளது. பெரிய நடிகர் என்றாலும் விஜயகாந்திடம் எந்தவித பந்தாவும் கிடையாது.
யாருக்கு வேண்டுமானாலும் உதவி செய்வார். சினிமா, அரசியல் என எல்லா இடங்களிலும் மற்றவர்களுக்காக வாழ்ந்தவர். மதங்களுக்கு அப்பாற்பட்டவர். இந்து, கிறிஸ்து, முஸ்லீம் என பேதம்பார்க்க மாட்டார்.
தன்னுடைய பிறந்தநாளுக்கு கோவில், கிறிஸ்தவ ஆலயம், பள்ளிவாசல் என 3 இடங்களுக்கும் சென்று விடுவார். அவரால் யாரும் பாதிக்கப்பட்டார்கள் என கூற முடியாது. அவரிடம் வேலை பார்ப்பவர்களையும் நன்றாக பார்த்துக்கொண்டார். டிரைவர் முதல் அனைவரையும் உரிமையோடும், பாசத்தோடும் அழைப்பார். தீபாவளி பண்டிகைக்கு மதுரைக்கு வந்து விடுவார். நண்பர்கள் யாரையும் விட்டுக்கொடுக்கமாட்டார். எளிய மனம் கொண்டவர். சுருக்கமாக சொல்லபோனால், நட்பிற்கு இலக்கணமாக திகழ்ந்தவர். சிறு வயதில் ரைஸ் மில்லில் எல்லா வேலைகளையும் தனி ஆளாக செய்தார். நாய் வளர்க்கும் பழக்கம் இருந்தது. ரைஸ் மில்லிலும் நாய் வளர்த்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அண்ணனின் இழப்பு எங்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் இழப்புதான்.
- மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவிலும், அரசியலிலும் முன்னுக்கு வந்தார். அவருடைய உழைப்பால் தான் எங்கள் குடும்பம் தலைநிமிர்ந்து இருந்தது.
மதுரை:
விஜயகாந்த் தெரியும்... அவரது உண்மையான பெயர் விஜயராஜ் என்பது எத்தனை பேருக்கு தெரியும்...!
மதுரை வீதிகளில் அவரது கால்தடம் படாத இடங்கள் இல்லை என்று கூறும் அளவுக்கு தூங்காநகருடன் மிகுந்த பிணைப்பை ஏற்படுத்தி இருந்தார்.
மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர், கள்ளழகர், ஆண்டாள் மீது அதிக பக்தி கொண்டவர். அதேபோல் பிற மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று வழிபடக்கூடியவர்.
மீனாட்சி அம்மன் மீது கொண்ட பக்தி காரணமாக மீனாட்சி திருக்கல்யாணம் என்ற படத்தில் சிவபெருமானாக நடித்து இருப்பார்.
எந்த நல்ல நிகழ்வாக இருந்தாலும் மதுரையில் தன் சொந்தபந்தங்களுடன் சேர்ந்து கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருந்தார். அதன்படிதான் தே.மு.தி.க. கட்சியை மதுரை தோப்பூரில், 75 ஏக்கர் பரப்பிலான திடலில் பிரமாண்ட மாநாடு நடத்தி, மக்களை திரட்டி அவர்கள் முன்பு அறிவித்தார்.
திரையுலகிற்கு வருவதற்கு முன்பு துடிப்பான இளைஞரான விஜயகாந்தின் வாழ்க்கையை அவருடைய குடும்பத்தினர் நேற்று நம்முடன் பகிர்ந்துகொண்டனர். அவர்கள் கூறிய தகவல்களை இங்கே காண்போம்...!

மதுரை மேலமாசி வீதியில் உள்ள விஜயகாந்தின் வீடு.
மதுரை மேலமாசி வீதி சவுராஷ்டிரா லைன் பகுதியில் உள்ள 'ஆண்டாள் பவனம்' என்ற வீட்டில்தான் விஜயகாந்த் சிறுவயதில் வாழ்ந்தார். அந்த வீட்டில், விஜயகாந்தின் இளம்வயது புகைப்படங்கள் நிறைய உள்ளன.
தற்போது அந்த வீட்டில் விஜயகாந்தின் சகோதரர் செல்வராஜ் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
விஜயகாந்த் எனக்கு 2-வது சகோதரர். எங்களுடன் பிறந்தவர்கள் மொத்தம் 11 பேர். அதில், 6 ஆண்கள், 5 பெண்கள்.
மூத்தவர் நாகராஜ், அதற்கடுத்தபடியாக விஜயராஜ் (விஜயகாந்த்), அதன்பின்னர் செல்வராஜ், பால்ராஜ், ராமராஜ், பிரித்திவிராஜ். இதுபோல் விஜயலட்சுமி, திருமளாதேவி, சித்ரா, மீனாகுமாரி, சாந்தி என 5 சகோதரிகள். தற்போது மதுரையில் நானும் எனது சகோதரர் பால்ராஜ் மட்டுமே இருக்கிறோம். மற்றவர்கள் சென்னை, ஓசூர், தேனி ஆகிய இடங்களில் வசித்து வருகின்றனர்.
விஜயகாந்த் மிகவும் நல்ல மனிதர். எல்லோரிடத்திலும் அன்பு காட்டுவார். எங்கள் குடும்பம் பெரியது என்பதால் விஜயகாந்த் ஒரு தந்தை போல் இருந்து எங்களை வழிநடத்தினார். எந்த முடிவாக இருந்தாலும் அப்பாவிற்கு அடுத்தபடியாக அவர்தான் எடுத்தார். அந்த முடிவில் எப்போதும் உறுதியாக இருந்தார்.
விருத்தாசலம் தொகுதியில்தான் முதன்முதலில் அவர் போட்டியிட்டார். அந்த தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு இந்த வீட்டிற்கு வந்து வணங்கிச்சென்று மனு தாக்கல் செய்தார். அப்படிப்பட்டவரை இழந்து நாங்கள் இப்போது தவிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒத்தக்கடையை சேர்ந்த விஜயகாந்தின் மற்றொரு சகோதரர் பால்ராஜ் கூறியதாவது:-
அண்ணனின் இழப்பு எங்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் இழப்புதான். எல்லாத்துறையிலும் தனக்கென தனி இடத்தை பிடித்து இருக்கிறார். நாங்கள் எல்லோரும் ஒன்றாக இருந்த நாட்கள் அவ்வளவு அழகானவை. அதை எண்ணிப்பார்க்கும்போது தானாக கண்களில் கண்ணீர் வருகிறது. அவர் நன்றாக இருந்த சமயங்களில் எங்களுக்கு எல்லாவிதமாக உதவிகளையும் செய்து கொடுத்திருக்கிறார். அவர் எப்படி நன்றாக இருந்தாரோ, அதுபோல் எங்களையும் பார்த்துக்கொண்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேனியை சேர்ந்த சகோதரி சித்ராவும் மதுரை வீட்டுக்கு வந்திருந்தார். அவர் கூறியதாவது:-
மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவிலும், அரசியலிலும் முன்னுக்கு வந்தார். அவருடைய உழைப்பால் தான் எங்கள் குடும்பம் தலைநிமிர்ந்து இருந்தது. தற்போது அவரை இழந்துவிட்டோம். எங்கு சென்றாலும், விஜயகாந்த் பெயரை கூறி பெருமை அடைந்தோம். யாருக்கும் எந்தவித தீங்கும் நினைக்காத நல்ல மனிதர். வீட்டிற்கு சென்றால் பாசமாக பார்த்து கொள்வார். என்னைபோல், என் உடன்பிறந்த அனைவரிடமும் நல்ல பாசத்துடன் இருந்தார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






