என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    உதவியாளரை தயாரிப்பாளராக்கி அழகு பார்த்த விஜயகாந்த்
    X

    விஜயகாந்த் - சுப்பையா

    உதவியாளரை தயாரிப்பாளராக்கி அழகு பார்த்த விஜயகாந்த்

    • எனக்கு திருமணம் செய்து வைத்தது மட்டுமின்றி எனது மகள்கள் திருமணத்தையும் நடத்தி வைத்தது விஜயகாந்த் தான்.
    • நானும் ராவுத்தரும் ஒரே இடத்தில் தான் வசித்து வந்தோம். விஜயகாந்துக்கு பெண் பார்த்ததே நான் தான்.

    விஜயகாந்திடம் பல வருடங்களாக உதவியாளராக பணியாற்றியவர் சுப்பையா. உதவியாளர் மட்டுமின்றி ஓட்டுனராகவும் டச்சப் மேனாகவும் பணியாற்றி வந்தார்.

    அவரை பெரியண்ணா படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆக்கி அழகு பார்த்தார் விஜயகாந்த்.

    இதுபற்றி உதவியாளராக பணியாற்றிய சுப்பையா இன்று கூறியதாவது:-

    விஜயகாந்த் உதவியாளராக சாட்சி படத்திலிருந்து தொடங்கி ஏராளமான படங்களில் பணியாற்றினேன்.

    எனக்கு திருமணம் செய்து வைத்தது மட்டுமின்றி எனது மகள்கள் திருமணத்தையும் நடத்தி வைத்தது விஜயகாந்த் தான். நான் அவர் குடும்பத்தில் ஒரு ஆளாக இருந்தேன்.

    அதிகமாக நான்தான் அவரிடம் அடி வாங்கியவன். பாசத்துடன் அடிக்கடி சண்டையிட்டு கொள்வோம்.

    விஜயகாந்தின் தம்பி பிருதிவி திருமணம் சென்னையில் நடந்தது. திருமண விழாவில் பங்கேற்க ஜேப்பியாரும் ஏ.சி சண்முகமும் வந்திருந்தனர். அவர்களிடம் இவன்தான் எனது முதல் பொண்டாட்டி என்று என்னை பார்த்து விஜயகாந்த் கூறினார்.

    உதவியாளராக பணியாற்றி வந்த நிலையில் திடீரென கேப்டன் பிரபாகரன் படத்தில் மேனேஜராக பணியாற்ற சொன்னார்.

    நான் வேண்டாம் உங்களுடனே இருந்து விடுகிறேன் என்று கூறினேன்.

    ஏண்டா எத்தனை நாள் இப்படியே இருக்கப் போகிறாய் புரமோஷன் வேண்டாமா? என்று கூறி பிடிவாதமாக என்னை மேனேஜர் ஆக்கினார். இதைத்தொடர்ந்து பல படங்களில் மேனேஜராக பணியாற்றினேன்.

    நானும் ராவுத்தரும் ஒரே இடத்தில் தான் வசித்து வந்தோம். விஜயகாந்துக்கு பெண் பார்த்ததே நான் தான். ஆண்டு கணக்கில் விஜயகாந்த் உடன் இருந்து வந்த நிலையில் சில பிரச்சனைகள் காரணமாக பிரிவு ஏற்பட்டது.

    நான்கு, ஐந்து வருடங்ளுக்கு பிறகு மீண்டும் மதுரையில் விஜயகாந்தை சந்திப்பதற்காக சென்றேன். மீனாட்சி அம்மன் கோவிலில் விஜயகாந்த்தும் பிரேமலதாவும் தரிசனம் செய்துவிட்டு வந்தனர். கோவிலுக்கு வெளியே நின்று இருந்த என்னை பார்த்து என்னடா திடீர்னு இங்கு? என்று விஜயகாந்த் கேட்டார். உங்களைப் பார்க்கத்தான் வந்தேன் என்று கூறினேன்.

    அப்போது அவர் கள்ளழகர் படப்பிடிப்புக்கு செல்கிறேன் மதியத்திற்கு பிறகு ஆண்டாள் அழகர் அலுவலகத்திற்கு வா பேசுவோம் என்றார். மாலை அவரை சந்தித்தபோது என்னடா இப்ப என்ன செய்ற என்று கேட்டார். நான் படம் தயாரிக்க போகிறேன் என்றேன். என்னடா சொல்ற.. என்றார். நீங்கதானே சொன்னீங்க இப்படியே இருப்பியா? புரமோஷன் வேண்டாமா? என்று கேட்டீர்கள் என்றேன்.

    சரி ஹீரோ யார்?என்றார். நீங்கள் தான் என்று கூறினேன். இயக்குனர் யார் என்றார் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் பேசலாம்னு இருக்கிறேன் என்றேன். சரி நீ அவரிடம் பேசி விட்டு உடனடியாக படப்பிடிப்புக்கு ஏற்பாடு செய் என்று கூறினார். சென்னைக்கு வந்து எஸ்.ஏ. சந்திரசேகரிடம் விஷயத்தை சொன்னேன். அவர் முதலில் நம்பவில்லை. விஜயகாந்தை தொடர்பு கொண்டு பேசினார். ஆமாம் உண்மை தான் நம்ம ஆளு வளர வேண்டாமா என்று கூறி படத்தின் வேலையை உடனே தொடங்குங்கள் என்று எஸ்.ஏ சந்திரசேகரிடம் கூறினார் விஜயகாந்த்.

    அப்படி எடுக்கப்பட்டது தான் பெரிய அண்ணா. என்னை போன்று பலரை யும் வாழ்க்கையில் உயர்த்தியவர் விஜயகாந்த். அவரது இறப்பு எனக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் பேரிழப்பு.

    இவ்வாறு சுப்பையா கூறினார்.

    Next Story
    ×