என் மலர்
இந்தியா
- சில இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக புறப்பட்டன.
- விமானங்கள் ரத்து செய்ய்யப்பட்டதால் பயணிகள் கடுமையாக பாதிப்பு அடைந்தனர்.
புதுடெல்லி
இண்டிகோ விமான நிறுவனம் கடந்த 3 நாளாக விமான சேவைகளை நிறைவேற்றுவதில் சொதப்பி வருகிறது. மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் பிறப்பித்த புது விதிகளை காரணம் காட்டி, பல்வேறு விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்தது. நேற்றும்கூட ஏராளமான விமான சேவைகளை ரத்து செய்தது.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் அனைத்து இண்டிகோ விமான சேவைகளை ரத்துசெய்தது. சில இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக புறப்பட்டன. இதனால் பயணிகள் கடுமையாக பாதிப்பு அடைந்தனர்.
இந்நிலையில், இண்டிகோ நிறுவனம் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ரத்து செய்யப்பட்ட இண்டிகோ விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு விமான கட்டணம் தானாகவே திருப்பிச் செலுத்தப்படும் என அந்நிறுவனம் அறிவித்தது. டிசம்பர் 5 முதல் 15ம் தேதி வரை பயணிகள் டிக்கெட் ரத்து செய்தல் அல்லது வேறு தேதிகளுக்கு மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளுக்கும் எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துகிறோம் என பதிவிட்டுள்ளது.
- டிசம்பர் 3ம் தேதி ஹூப்பள்ளியில் வரவேற்புக்கான ஏற்பாடு செய்யப்பட்டது.
- டிசம்பர்-2 காலை முதல் மறுநாள் அதிகாலை வரை விமானம் தாமதம் என இன்டிகோ ஊழியர்கள் கூறினர்.
பெங்களூரு:
கர்நாடகத்தின் ஹூப்பள்ளியைச் சேர்ந்தவர் மேகா க்ஷீரா சாகர். இவர் ஒடிசாவின் புவனேஸ்வரைச் சேர்ந்த சங்கிராம் தாஸ் என்பவரை காதலித்து நவம்பர் 23-ம் தேதி திருமணம் செய்துகொண்டார். டிசம்பர் 3ம் தேதி மேகாவின் சொந்த ஊரான ஹூப்பள்ளியில் ரிசப்ஷனுக்கான ஏற்பாடு செய்யப்பட்டது.
ரிசப்ஷனில் கலந்து கொள்வதற்காக மணமக்கள் இருவரும் புவனேஸ்வரிலிருந்து பெங்களூருவிற்கும், அங்கிருந்து ஹூப்பள்ளிக்கும் டிசம்பர் 2ம் தேதி விமானத்தில் முன்பதிவு செய்தனர். அதேபோல், சில உறவினர்களுக்கும் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர்.
இதற்கிடையே, டிசம்பர் 2-ம் தேதி காலை முதல் மறுநாள் அதிகாலை வரை விமானம் தாமதம் என இன்டிகோ ஊழியர்கள் கூறினர். அதன்பின், விமானம் ரத்து செய்யப்பட்டது என தெரிவித்தனர். ஊழியர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விமானங்கள் ரத்தானது என விமான நிறுவனம் தெரிவித்தது.
இந்நிலையில், விமானம் ரத்தானதால் மணமக்கள் ஹூப்பளி செல்ல முடியவில்லை. இதனால் வேறு வழியின்றி புவனேஸ்வரில் இருந்தபடியே வீடியோ காலில் பங்கேற்றனர். ஹூப்பள்ளியில் உறவினர்கள் இருந்தபடி வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
ஹூப்பள்ளியில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்த மேடையில், மணமக்களுக்குப் பதிலாக மணமகளின் பெற்றோர் அமரவைக்கப்பட்டு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
- அன்புமணி தரப்பில் கொடுக்கப்பட்ட ஆவணங்களை ஏற்று அவரை பா.ம.க. தலைவராக தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
- வருகிற ஆகஸ்டு மாதம் வரை அவரது தலைவர் பதவி உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், டாக்டர் அன்புமணிக்கும் மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் டாக்டர் அன்புமணி தரப்பில் கொடுக்கப்பட்ட ஆவணங்களை ஏற்று அவரை பா.ம.க. தலைவராக தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. வருகிற ஆகஸ்டு மாதம் வரை அவரது தலைவர் பதவி உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டாக்டர் அன்புமணி மீது டெல்லி போலீசில் டாக்டர் ராமதாஸ் சார்பாக ஜி.கே.மணி இன்று புகார் செய்துள்ளார். அந்த புகாரில், "தேர்தல் ஆணையத்திடம் போலி ஆவணங்களை அளித்து டாக்டர் அன்புமணி மோசடி செய்துள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.
- ரத்தான விமான டிக்கெட்டிற்கான பணமும் திருப்பி தரப்படவில்லை என பயணிகள் குற்றம்சாட்டினர்.
- குழு 15 நாட்களில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ கடந்த சில நாட்களாக திட்டமிட்டபடி விமானங்களை இயக்குவதில் சிக்கல்களை எதிர்கொண்டது. மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான விமானங்களை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்தது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
தேவையான விமான பணியாளர்களை அமர்த்துவதில் ஏற்பட்ட சிக்கல் மற்றும் விமான போக்குவரத்து அட்டவணைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் அந்த விமான நிறுவனத்தின் செயல்பாடுகளை பாதித்தது.
இண்டிகோ நிறுவனத்தின் இச்செயலுக்கு பொதுமக்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் ரத்தான விமான டிக்கெட்டிற்கான பணமும் திருப்பி தரப்படவில்லை என பயணிகள் குற்றம்சாட்டினர்.
இதனிடையே, இண்டிகோ நிறுவனத்தின் விமானங்கள் அடுத்தடுத்து ரத்து செய்யப்படும் சம்பவம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, சிவில் விமான போக்குவரத்து விவகாரத்தை கண்காணிக்கும் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம், இப்பிரச்சினை பற்றி விசாரிக்க 4 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இக்குழு 15 நாட்களில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்றும் நாடு முழுவதும் இண்டிகோ விமானத்தின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விமான நிலையங்களில் பயணிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
இண்டிகோவின் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், ஜம்மு விமான நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.
இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஜெய் பிரகாஷ் நாராயண் சர்வதேச விமான நிலையத்தில் பாதிக்கப்பட்ட பயணிகள்...
பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள்...
- தேவஸ்தான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரையும் பிடித்து டிரோன்களை பறிமுதல் செய்தனர்.
- திருப்பதியில் நேற்று 67,336 பேர் தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலின் புனிதத்தை காக்கும் வகையில் கோவில் மீது விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆளில்லா டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரை சேர்ந்தவர் சர்வ லக்ஷன் தாஸ். ஆந்திர மாநிலம், ஒங்கோலை சேர்ந்தவர் பானு சந்தர். இருவரும் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர்.
ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நேற்று திருப்பதி வந்தனர். பஸ்சில் ஏறி திருப்பதி மலைக்கு சென்றனர். திருப்பதி மலையில் உள்ள கல் வளைவு என்ற பகுதியில் தாங்கள் கொண்டு வந்த டிரோன்களை பறக்க விட்டு படம் பிடித்தனர்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தேவஸ்தான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரையும் பிடித்து டிரோன்களை பறிமுதல் செய்தனர். பிடிபட்டவர்களை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி மலைக்கு மது, மாமிசம், போதைப் பொருட்கள் கொண்டு செல்வதை தடுப்பதற்காக அலிபிரி சோதனை சாவடியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகு மலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. பலத்த சோதனைக்கு பிறகு இவர்கள் எப்படி டிரோன் கேமராவை கொண்டு வந்தார்கள். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் அலட்சியமாக பணியில் ஈடுபட்டுள்ளதாக பக்தர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
திருப்பதியில் நேற்று 67,336 பேர் தரிசனம் செய்தனர். 25,063 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.68 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- டிரெய்லர் லாரியை முந்தி செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் லாரியின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது.
- 6 பேரும் பல்நாடு மாவட்டத்தில் நடைபெறும் படிபூஜையில் பங்கேற்க சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் சிலகலூரி பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் கனப்பவரம் என்னும் இடத்தில் புதிய டிராக்டர்களை ஏற்றிக்கொண்டு டிரெய்லர் லாரி ஒன்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் விட்டம்ராஜூ பள்ளி அருகே நடைபெறும் படிபூஜையில் கலந்து கொள்வதற்காக கார் ஒன்று வேகமாக சென்றது. காரில் 6 பேர் இருந்தனர்.
டிரெய்லர் லாரியை முந்தி செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் லாரியின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் காரிலிருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதில் ஒருவர் செல்லும் வழியிலேயே இறந்தார். ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், பலியான 5 பேரும் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த வாசு, மகேஷ், ஸ்ரீகாந்த், ராமிரெட்டி, யஷ்வந்த் சாயி என்பதும், என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்திருந்தனர். 6 பேரும் பல்நாடு மாவட்டத்தில் நடைபெறும் படிபூஜையில் பங்கேற்க சென்றபோது இந்த கோர விபத்து நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- பாபாசாகேப் அம்பேத்கரை நினைவு கூர்வோம்.
- அம்பேத்கரின் லட்சியங்கள் நமது பாதையை ஒளிரச் செய்யட்டும்.
சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 69-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
அம்பேத்கரின் தலைமைத்துவம், நீதி, சமத்துவம், அரசமைப்பு மீதான அர்ப்பணிப்பு நம்மை வழி நடத்துகிறது. பாபாசாகேப் அம்பேத்கரை நினைவு கூர்வோம். கண்ணியத்தை நிலைநிறுத்தவும், ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்தவும் தலைமுறைகளை தூண்டியவர், வளர்ந்த இந்தியாவை கட்டியெழுப்ப அம்பேத்கரின் லட்சியங்கள் நமது பாதையை ஒளிரச் செய்யட்டும் என்று கூறியுள்ளார்.
- ரெயில் பயணத்தில் கீழ் படுக்கைகள் காலியாக இருந்தால், வேறு பெர்த்களில் பயணம் செய்யும் மூத்த குடிமக்கள், கர்ப்பிணியருக்கு அந்த இடங்கள் ஒதுக்கப்படும்.
- மாற்றுத்திறனாளிகள் சிரமம் இன்றி பயணிக்கும் வகையில் ரெயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மாநிலங்களவையில் ரெயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் தொடர்பான கேள்விக்கு மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில்,
* ரெயில் பயணம் மேற்கொள்ளும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏராளமான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
* முன்பதிவு செய்யும்போது விருப்பத்தை தேர்வு செய்யாவிட்டாலும் முன்னுரிமை அடிப்படையில் 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண் பயணிகளுக்கு ரெயிலில் லோயர்பெர்த் வழங்கப்படும்.
* மூத்த குடிமக்கள், 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்கள், கர்ப்பிணியர் ஆகியோருக்கு ரெயிலில் கீழ் படுக்கை வசதி ஒதுக்கப்பட்டுள்ளது.
* இதற்காக, ஸ்லீப்பர் வகுப்பில், ஒரு பெட்டிக்கு ஆறு முதல் ஏழு பெர்த்களும், மூன்றாம் வகுப்பு 'ஏசி' பெட்டியில் நான்கு முதல் ஐந்து பெர்த்களும், இரண்டாம் வகுப்பு 'ஏசி' பெட்டியில் மூன்று முதல் நான்கு பெர்த்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
* ராஜ்தானி, சதாப்தி உட்பட அனைத்து மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்களுக்கு சிறப்பு முன்பதிவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
* ஸ்லீப்பர், மூன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு 'ஏசி' பெட்டிகளில் தலா நான்கு பெர்த்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
ரெயில் பயணத்தில் கீழ் படுக்கைகள் காலியாக இருந்தால், வேறு பெர்த்களில் பயணம் செய்யும் மூத்த குடிமக்கள், கர்ப்பிணியருக்கு அந்த இடங்கள் ஒதுக்கப்படும்.
* மாற்றுத்திறனாளிகள் சிரமம் இன்றி பயணிக்கும் வகையில் ரெயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
* அகலமான கதவுகள், அகலமான பெர்த்கள், சக்கர நாற்காலியை நிறுத்தும் வசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கழிப்பறைகளும் அவர்களுக்கு தகுந்த மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளன.
* பார்வை குறைபாடு உள்ள பயணியர் வசதிக்காக, 'ப்ரெய்லி' எழுத்துகளுடன் கூடிய அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. நவீன அம்ரித் பாரத் மற்றும் வந்தே பாரத் ரெயில்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- எந்த மத விழாவையும் ஒரு வாரம் தாமதமாகக் கொண்டாட முடியுமா?
- பக்தர்கள் தங்கள் கோயில்களையும் மத விவகாரங்களையும் நிர்வகிக்க 'சனாதன தர்ம ரக்ஷா வாரியம்' நமக்குத் தேவை.
திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
கார்த்திகை மாதத்தில் மலையில் விளக்கு ஏற்றுவது ஒரு பண்டைய இந்து பாரம்பரியம். இன்று இந்தியாவில் உள்ள இந்துக்கள் தங்கள் நம்பிக்கை மற்றும் மரபுகளைப் பின்பற்ற நீதிமன்றங்களை நாட வேண்டியிருப்பது துரதிர்ஷ்டவசமானது.
ஒரு தீர்க்கமான சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்ற பிறகும், பக்தர்கள் தங்கள் சொந்த சொத்தில் ஒரு சிறிய, அமைதியான சடங்கைக் கூட செய்ய முடியாவிட்டால், இந்த நாட்டில் அவர்களுக்கு அரசியலமைப்பு நீதி எங்கே கிடைக்கும்?
உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். எந்த மத விழாவையும் ஒரு வாரம் தாமதமாகக் கொண்டாட முடியுமா? ஒரு புனித நாளைக் கொண்டாடுவதை வேறொரு நேரத்திற்கு மாற்ற முடியுமா?
ஆனாலும், அந்த புனிதமான கார்த்திகை தீப தருணம் திருடப்பட்டுள்ளது.
பக்தர்கள் தங்கள் கோயில்களையும் மத விவகாரங்களையும் நிர்வகிக்க 'சனாதன தர்ம ரக்ஷா வாரியம்' நமக்குத் தேவை.
இந்து மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களை கேலி செய்வது சில குழுக்களுக்கு வழக்கமாகிவிட்டது. மற்ற மத நிகழ்வுகளின் விஷயத்திலும் அவர்களால் இதைச் செய்யத் துணிய முடியுமா?
இந்துக்கள் சாதி, பிராந்தியம் மற்றும் மொழித் தடைகளால் பிரிக்கப்பட்டிருக்கும் வரை, இந்து மதமும் அதன் நடைமுறைகளும் தொடர்ந்து கேலி செய்யப்பட்டு அவமதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, காமாக்யா முதல் துவாரகா வரை ஒவ்வொரு இந்துவும் தங்கள் சொந்த மண்ணில் இந்துக்கள் எதிர்கொள்ளும் அவமானங்களைப் பற்றி விழித்துக் கொள்ளும் நாள் வரும் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- ஜம்மு-காஷ்மீரில் UAPA-வின் கீழ் அதிகபட்சமாக 3,662 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், 23 பேர் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளனர்.
- இரண்டாவதாக உத்தரப் பிரதேசத்தில் 2,805 கைதுகள் நடந்துள்ளன.
2019-23 க்கு இடையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் மொத்தம் 10,440 பேர் கைது செய்யப்பட்டதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதில் 335 பேர் மட்டுமே குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் மக்களவையில் சமர்ப்பித்த தரவுகளின்படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஜம்மு-காஷ்மீரில் UAPA-வின் கீழ் அதிகபட்சமாக 3,662 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், 23 பேர் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் காலகட்டத்தில் இரண்டாவதாக உத்தரப் பிரதேசத்தில் 2,805 கைதுகள் நடந்துள்ளன. இவற்றில் 222 வழக்குகளில் தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதிக எண்ணிக்கையிலான கைதுகள் நடைபெறும் பிற மாநிலங்களில் அசாம், மணிப்பூர் மற்றும் ஜார்கண்ட் ஆகியவை அடங்கும்.
1967 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட UAPA, மத்திய அரசை ஒரு நபர் அல்லது அமைப்பை சட்டவிரோதமானது என்று அறிவிக்க அனுமதிக்கிறது மற்றும் பயங்கரவாதம் என்ற வரையறையின் கீழ் பாவிக்கப்படுகிறது. இது மற்ற வழக்குகளை போலல்லாமல் கைது செய்யப்பட்டவர்களுக்கு சட்டரீதியாக உரிமையை குறைக்கிறது.
UAPA-வின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் பெறுவதும் கடினமானதாகும். அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் மீது அதிகரித்து வரும் UAPA வழக்குகள் குறித்து சமூக ஆர்வலர்களும் ஜனநாயக சக்திகளும் கவலை தெரிவித்துவரும் சூழலில் அரசின் இந்த தரவு வந்துள்ளது.
- இன்றும் நாடு முழுவதும் 750க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
- ஒவ்வொரு துறையிலும் மேட்ச் பிக்சிங் நடக்கிறது.
நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ கடந்த சில நாட்களாக திட்டமிட்டபடி விமானங்களை இயக்குவதில் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.
இன்றும் நாடு முழுவதும் 750க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடைசி நேரத்தில் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். சேவைகள் பாதிப்பால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு இண்டிகோ நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.
விமானிகளுகு விடுப்பு வழங்கும் விமான இயக்குநரகத்தின்(DGCA) புதிய விதிகளால் ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதாக இண்டிகோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே விமானிகளுக்கு வாரம் 48 மணி நேரம் ஓய்வு வழங்க வேண்டும் என்ற புதிய விதிமுறையை விமான இயக்குனரகம் திரும்பப்பெற்றது.
இந்நிலையில் இதுகுறித்து மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'இண்டிகோ பிரச்சினை மத்திய அரசின் ஏகபோக மாடலின் விளைவு.
அரசின் தவறுக்கு, தாமதம், ரத்து, உதவியின்மை என மீண்டும் ஒருமுறை சாதாரண மக்கள் தான் விலை கொடுத்துள்ளனர். ஒவ்வொரு துறையிலும் மேட்ச் பிக்சிங் ஏகபோகங்கள் இல்லாமல் நேர்மையான போட்டிக்கு இந்தியா தகுதியானது என்று குறிப்பிட்டு உள்ளார்.
மேலும் இந்தியாவில் பல துறைகளில் ஏகபோகங்களுக்கு அரசு துணை புரிவதை சுட்டிக்காட்டி கடந்த ஆண்டு அவர் எழுதியிருந்த கட்டுரை ஒன்றையும் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.
- DGCAவின் உதவி எண்கள் - 011-24610843, 011-24693963, 096503-91859
- சென்னையில் 31 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ கடந்த சில நாட்களாக திட்டமிட்டபடி விமானங்களை இயக்குவதில் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.
தேவையான விமான பணியாளர்களை அமர்த்துவதில் ஏற்பட்ட சிக்கல் மற்றும் விமான போக்குவரத்து அட்டவணைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் அந்த விமான நிறுவனத்தின் செயல்பாடுகளை பாதித்தது.
இந்நிலையில் இன்றும் நாடு முழுவதும் 750க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
டெல்லியில் 225 விமானங்கள், மும்பையில் 104 விமானங்கள், பெங்களூருவில் 102 விமானங்கள், ஐதராபாத்தில் 92 விமானங்கள், ஜெய்ப்பூரில் 34 விமானங்கள், புனேவில் 32 விமானங்கள், சென்னையில் 31 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதனால் பயணிகள் கடைசி நேரத்தில் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். சேவைகள் பாதிப்பால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு இண்டிகோ நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.
இந்நிலையில் விமானிகளுகு விடுப்பு வழங்கும் விமான இயக்குநரகத்தின்(DGCA) புதிய விதிகளால் ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதாக இண்டிகோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே விமானிகளுக்கு வாரம் 48 மணி நேரம் ஓய்வு வழங்க வேண்டும் என்ற புதிய விதிமுறையை விமான இயக்குனரகம் திரும்பப்பெற்றது.
இந்தநிலையில், இண்டிகோ விமான சேவைகள் பாதிப்பால், மற்ற உள்நாட்டு விமான சேவை நிறுவனங்கள் டிக்கெட்டுகளின் விலையை பன்மடங்கு உயர்த்தியுள்ளன.
உதாரணமாக சென்னையில் இருந்து டெல்லி செல்ல ரூ.7000 ஆக இருந்த டிக்கெட் விலை, இன்றும் நாளையும் ரூ. 40,000 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. பயணிகள் வேறு வலி ஏதும் இல்லாமல் விழி பிதுங்கி உள்ளனர். இதற்கிடையே இந்த பிரச்சனையால் பயணிகளுக்கு ஏதுவாக ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படும் என்று ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான இயக்குனரகம் புதிய விதிகளை திரும்பப்பெற்றதால் விமான சேவைகள் ஓரிரு நாளில் நிலைமை சீராகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பயணிகளுக்கு உதவ DGCAவின் உதவி எண்கள் - 011-24610843, 011-24693963, 096503-91859 ஆகியவற்றில் அழைக்கலாம் என்று விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.






