search icon
என் மலர்tooltip icon

    கேரளா

    • மாவோயிஸ்டுகள் குறித்த வீடியோவில் துப்பாக்கியுடன் வந்த 4 பேரின் முகங்கள் தெளிவாக இருந்தன.
    • இன்று பகல் கம்பமலை பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கம்பமலை பகுதியில் ஏராளமான தமிழர்கள் உள்பட பலதரப்பட்ட மக்களும் வசித்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக இந்தப் பகுதி பேசப்படும் பகுதியாக உள்ளது. இதற்கு காரணம் வயநாடு பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, 2-வது முறையாக போட்டியிடுவது தான்.

    இந்த மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளது. அவர்களை தண்டர்போல்ட் அதிரடிப்படையினர் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி வயநாடு தொகுதிக்கு 4 மாவோயிஸ்டுகள் துப்பாக்கியுடன் வந்தனர்.

    அவர்கள், அங்குள்ள மக்களிடம் தேர்தலில் வாக்களிக்கக்கூடாது என மிரட்டல் விடுத்துச் சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    தண்டர்போல்ட் அதிரடிப்படையினர் கண்காணிப்பையும் மீறி, மாவோயிஸ்டுகள் துப்பாக்கியுடன் ஊருக்குள் வந்து மிரட்டல் விடுத்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாவோயிஸ்டுகள் குறித்த வீடியோவில் துப்பாக்கியுடன் வந்த 4 பேரின் முகங்கள் தெளிவாக இருந்தன. அதனை வைத்து தண்டர்போல்ட் அதிரடிப்படையினர், தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

    இந்த நிலையில் இன்று பகல் கம்பமலை பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிரடிப்படையினர் அங்கு விரைந்தனர். அவர்களை பார்த்ததும், மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டனர்.

    இதனை தொடர்ந்து தண்டர்போல்ட் அதிரடிப்படையினரும் திருப்பி சுட்டனர். இரு தரப்பினரும் மாறி மாறி சுட்டதால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் யாரும் சிக்கினார்களா? என்பது பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை.

    • சிறுவன் ஆகாஷ் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான்.
    • போலீசார் வழக்குப்பதிந்து விபத்துக்கு காரணமான இரண்டு லாரிகளின் டிரைவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டம் சூரிக் காடு பீமநதி பகுதியை சேர்ந்தவர் சுதாகரன்(வயது 52). இவரது மனைவி அஜிதா(35). இவர்களுக்கு சவுரவ் என்ற மகன் இருக்கிறார். சவுரவ் கோழிக்கோட்டில் சி.ஏ படிப்பதற்கு, அங்குள்ள கல்லூரி ஒன்றில் சேர்ந்துள்ளார்.

    அவரை விடுதியில் விட்டுவிட்டு வருவதற்காக சுதாகரன், அவரது மனைவி, மாமனார் கிருஷ்ணன் (65) மற்றும் மனைவியின் அண்ணன் மகன் ஆகாஷ்(9) ஆகியோர் காரில் தலச்சேரியில் இருந்து காசர்கோடு நோக்கி சென்றனர்.

    காரை காசர்கோடு மாவட்டம் காளிச்சநடுக்கம் சாஸ்தம்பாறை பகுதியைச் சேர்ந்த பத்மகுமார் 59 என்பவர் ஓட்டிச் சென்றார். சவுரவ்வை விடுதியில் விட்டுவிட்டு சுதாகரன் உள்ளிட்ட மற்றவர்கள் காரில் திரும்பி வந்தனர். அவர்களது கார் கண்ணூர் செருக்குன்னு அருகே உள்ள புன்னச்சேரி பகுதியில் நேற்று இரவு வந்து கொண்டிருந்தது.

    அப்போது அவர்களுக்கு பின்னால் வந்த ஒரு லாரி, காரின் மீது மோதியதாக தெரிகிறது. இதனால் அவர்களது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே கியாஸ் சிலிண்டர்கள் ஏற்றிக்கொண்டு வந்த லாரி மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் அவர்களது கார், லாரியின் முன்பதிக்குள் புகுந்தது.

    காருக்குள் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இந்த கோரவிபத்து குறித்து கண்ணபுரம் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    முதலில் அவர்கள் லாரிக்குள் சிக்கியிருந்த காரை வெளியே எடுத்தனர். பின்பு காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். அப்போது காரில் இருந்த சுதாகரன், அவரது மனைவி அஜிதா, மாமனார் கிருஷ்ணன், டிரைவர் பத்மகுமார் ஆகிய 4பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசங்கி பலியாகியிருப்பது தெரியவந்தது.


    மேலும் அந்த காரில் இருந்த சிறுவன் ஆகாஷ் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். அவனை போலீசார் மீட்டு பரியாரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக இறந்துவிட்டான். இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. காரில் இருந்த டிரைவர் உள்ளிட்ட 5பேருமே விபத்தில் பலியாகிவிட்டனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விபத்துக்கு காரணமான இரண்டு லாரிகளின் டிரைவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோர விபத்தில் சிறுவன் உள்பட 5பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

    • ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த வீடியோ மீண்டும் வைரலாகி ஆயிரக்கணக்கான பார்வைகளை குவித்து வருகிறது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    விலங்குகள் மனிதர்களுடன் விளையாடுவது சகஜம் தான் என்றாலும், யானை ஒன்று மனிதர்களை போல தும்பிக்கையில் பேட் பிடித்து கிரிக்கெட் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    சமூக வலைதளமான ரெடிட் தளத்தில் பரவி வரும் அந்த வீடியோவில், யானை ஒன்று பூங்காவுக்கு அருகே சிலருடன் கிரிக்கெட் விளையாடும் காட்சிகள் உள்ளது. அதில், சிலர் பீல்டிங் செய்த நிலையில் ஒருவர் யானைக்கு பந்து வீசுகிறார். அந்த பந்தை யானை தும்பிக்கையால் அடிக்கும் காட்சிகளும், பந்தை பீல்டிங் செய்பவர்கள் அதனை பிடித்து மீண்டும் யானைக்கு பந்து வீசும் காட்சிகளும் உள்ளது.

    இந்த வீடியோ கேரளாவில் கடந்த 2021-ம் ஆண்டு படமாக்கப்பட்டது என கூறப்படுகிறது. ஆனாலும் தற்போது நாடு முழுவதும் ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த வீடியோ மீண்டும் வைரலாகி ஆயிரக்கணக்கான பார்வைகளை குவித்து வருகிறது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • பல மாநிலங்களில் வெப்பஅலை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • 5 மாநிலங்களில் நீர் இருப்பு வரலாறு காணாத வகையில் கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக வெப்பம் நிலவி வருகிறது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே இந்த இரு மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயில் கடுமையாக சுட்டெரித்து வருகிறது.

    பகல் நேரத்தில் பொது மக்கள் வெளியில் சென்று வர முடியாத அளவுக்கு வெயில் கடுமையாக அடிக்கிறது. இந்த வெப்பம் இரவிலும் நீடிப்பதால் மக்கள் இரவில் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் பல மாநிலங்களில் வெப்பஅலை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் தமிழகம் மற்றும் கேரள மாநிலமும் அடங்கும்.

    கேரள மாநிலத்தை பொறுத்தவரை, தினமும் வெயில் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்கள் விவரம் அறிவிக்கப்பட்டு, அந்த மாவட்ட மக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை பொதுமக்கள் தினமும் கடைபிடிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட மக்களும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். வழக்கத்தை விட வெப்பநிலை அதிகமாக இருப்பதால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    அதிக தண்ணீர் குடித்தல் உள்ளிட்டவைகளை கடைபிடித்தாலும் வெப்ப பாதிப்பு அதிகமாகவே இருக்கிறது. இந்நிலையில் மத்திய நீர் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் நீர் இருப்பு வரலாறு காணாத வகையில் கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதிலும் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நீர் இருப்பு மிகவும் குறைந்துவிட்டதாக கூறியிருக்கிறது. தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களிலும் தற் போதைய நிலவரப்படி 17 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த 5 மாநிலங்களிலும் உளள 42 நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 53.334 பில்லியன் கன மீட்டர்கள் ஆகும். தற்போது இந்த நீர்த்தேக்கங்களில் 8.865 பில்லியன் கன மீட்டர்கள் அளவே தண்ணீர் இருப்பு இருக்கிறது. கடந்த ஆண்டு இந்த நீர்த்தேக்கங்களில் இந்த நேரத்தில் 29 சதவீதம் தண்ணீர் இருந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்த நேரத்தில் சராசரி நீர் இருப்பு 23 சதவீதமாக உள்ளது. இந்நிலையில் தற்போது நீர் இருப்பு 17 சதவீதமாக குறைந்திருப்பதால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

    • அடுத்த 3 நாட்களில் 40 டிகிரி வரை வெப்பம் பதிவாகலாம்.
    • பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே வர வேண்டாம்.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் அதனை மிஞ்சும் வகையில் நாட்டின் பல இடங்களிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கேரளாவிலும் வழக்கத்தை விட வெயில் வெளுத்து வாங்கி வருகிறது.

    இந்த வெயிலின் காரணமாக நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது மாநிலம் முழுவதும் சுருண்டு விழுந்து 9 பேர் பலியானார்கள். இந்த நிலையில் நேற்று மேலும் ஓருவர் வெயிலின் கோரப் பிடியில் சிக்கி பரிதாபமாக இறந்தார். இதனால் வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த சூழலில் வெப்பத் தின் தாக்கம் வரும் நாட்க ளில் இன்னும் அதிகமாக இருக்கும் என மத்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கொல்லம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் வெப்பச் சலனம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், அடுத்த 3 நாட்களில் 40 டிகிரி வரை வெப்பம் பதிவாகலாம். பாலக்காட்டில் வெப்பநிலை 41 டிகிரியை எட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வெப்ப அலையின்போது சூரிய ஓளி மற்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் மரணம் கூட ஏற்படலாம் என்பதால் பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே வர வேண்டாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    • கம்யூனிஸ்டுக்கும் பாரதிய ஜனதாவுக்கும் புனிதமற்ற தொடர்பு உள்ளது என காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.
    • ஜெயராஜனுக்கு ஆதரவாக, முதல்-மந்திரி பினராயி விஜயன், மார்க்சிஸ்டு மாநில செயலாளர் கோவிந்தன் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    தென் மாநிலங்களில் தொகுதிகளை கைப்பற்ற பாரதிய ஜனதா இந்த பாராளுமன்ற தேர்தலில் பல்வேறு முயற்சிகளை கையாண்டுள்ளது. பிரதமர் நரேந்திரமோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட பலரும் அடிக்கடி தமிழகம், கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் தீவிர சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினர்.

    இதில் கேரள மாநிலத்தில் 20 பாராளுமன்ற தொகுதிகளிலும் ஆளும் இடதுசாரி கூட்டணி, காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் போட்டியிட்டன. இந்த முறை கேரளாவில் ஒரு தொகுதியையாவது கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் நடிகர் சுரேஷ்கோபி உள்ளிட்ட பல பிரபலங்களை பாரதிய ஜனதா களம் இறக்கியது. மேலும் மற்ற கட்சிகளை சேர்ந்த பிரபலங்கள் சிலர் பாரதிய ஜனதாவில் இணைந்தனர். இதில் முன்னாள் முதல்-மந்திரிகள் ஏ.கே. அந்தோணியின் மகன் அனில் அந்தோணி, கருணாகரன் மகள் பத்மஜா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்.

    இதனை இடது சாரி கூட்டணி குறை கூறி வந்த நிலையில், அந்தக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக் குழு உறுப்பினருமான ஈ.பி.ஜெயராஜன், பாரதிய ஜனதாவில் இணைய உள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கு காரணம் அவர், தற்போது தேர்தல் நடைபெறும் சூழலில் பாரதிய ஜனதாவின் கேரள மாநில பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து பேசியது தான். திருவனந்தபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்பட்டது.

    இந்த சந்திப்பு விவகாரம் கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெயராஜன், நான், எல்.டி.எப். கன்வீனர். என்னை சந்திக்க பலர் வருகிறார்கள். காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா முக்கிய தலைவர்கள் அனைவரும் என்னை சந்திக்க வந்துள்ளனர். ஜவடேகருடனான சந்திப்பு தனிப்பட்டது. எனது அரசியல் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.

    ஆனால் காங்கிரஸ் கட்சி, இந்த சந்திப்பு, முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு தெரிந்தே நடந்துள்ளது. கம்யூனிஸ்டுக்கும் பாரதிய ஜனதாவுக்கும் புனிதமற்ற தொடர்பு உள்ளது என குற்றம் சாட்டி உள்ளது. இந்த விவகாரத்தில் ஜெயராஜனுக்கு ஆதரவாக, முதல்-மந்திரி பினராயி விஜயன், மார்க்சிஸ்டு மாநில செயலாளர் கோவிந்தன் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறுகையில், ஜவடேகரை சந்திப்பதில் தவறில்லை. இங்கு தேர்தல் மூலம் பா.ஜனதாவுக்கு எதுவும் கிடைக்காது. ஈ.பி.ஜெயராஜன் மீதான குற்றச்சாட்டுகள், கம்யூனிஸ்டு எதிர்ப்பு பிரசாரத்தின் ஒரு பகுதி என்றனர். இருப்பினும் ஜெயராஜன் இன்னும் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

    • அன்வர் மீது எர்ணாகுளத்தை சேர்ந்த பிஜூ நோயல் என்பவர் மன்னார்காடு முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் புகார் செய்தார்.
    • அன்வர் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்த கோர்ட் உத்தரவிட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் நீலம்பூர் தொகுதி இடதுசாரி ஜனநாயக முன்னணியின் எம்.எல்.ஏ. அன்வர். இவர் பாலக்காடு மக்களவை தொகுதியில் போட்டியிடும் இடதுசாரி ஜனநாயக முன்னணி வேட்பாளர் விஜயராகவனை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்தபோது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பற்றி மிகவும் அவதூறாக பேசினார்.

    அதாவது காந்தி என்ற குடும்ப பெயருடன் அழைக்க தகுதியற்ற நான்காம் தர குடிமகனாக ராகுல் காந்தி மாறிவிட்டார். காந்தி என்ற குடும்ப பெயரை விடுவித்து ராகுல் என்று தான் அவரை அழைக்க வேண்டும். ராகுலின் டி.என்.ஏ.வை ஆய்வு செய்யவேண்டும் என்று பேசினார்.

    அவரது இந்த பேச்சு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அன்வர் எம்.எல்.ஏ. மீது தேர்தல் ஆணையத்தில் கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் ஹாசன் புகார் செய்தார். மேலும் அவர் மீது எர்ணாகுளத்தை சேர்ந்த பிஜூ நோயல் என்பவர் மன்னார்காடு முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் புகார் செய்தார்.

    அதனை விசாரித்த கோர்ட்டு, அன்வர் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன்பேரில் அன்வர் எம்.எல்.ஏ. மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் 153(1) ஏ மற்றும் 125 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

    • உஷாவிற்கு இடது கை ஆள்காட்டி விரலில் தடவப்பட்ட மை கடந்த 8 ஆண்டுகளாக மறையாமலேயே இருந்து வருகிறது.
    • பெண்ணை ஓட்டு போட வைக்க தேர்தல் ஆணையமும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் சொர்னூர் குளப்புள்ளியை சேர்ந்தவர் உஷா (வயது 62). இவர் கடந்த 2016-ம் ஆண்டு கேரள சட்டசபைக்கு நடந்த தேர்தலின் போது வாக்களித்தார். அப்போது அவரது இடது கை ஆள்காட்டி விரலில் தடவப்பட்ட மை கடந்த 8 ஆண்டுகளாக மறையாமலேயே இருந்து வருகிறது. அதற்கு பின் 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும், 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலிலும் பிரச்சினை ஏற்படும் என்று கருதி உஷா ஓட்டு போடவே செல்லவில்லை.

    அந்த பெண்ணை ஓட்டு போட வைக்க தேர்தல் ஆணையமும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நேற்று நடந்த தேர்தலிலும் அவர் வாக்களிக்க செல்லவில்லை. ஓட்டு போட முடியாததால் தான் தொடர்ந்து ஏமாற்றம் அடைவதாக அவர் தெரிவித்துள்ளார்.

    • கண்ணூர் பினராயி அரசு ஆரம்ப பள்ளியில் முதல்-மந்திரி பினராயி விஜயன் வாக்களித்தார்.
    • மலையோர பகுதிகளில் எந்தவொரு அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை.

    திருவனந்தபுரம்:

    நாடு முழுவதும் 7 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்தது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19-ந்தேதி 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளும் அடங்கும்.

    2-வது கட்டமாக 88 பாராளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில் கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்காளர்கள் ஆர்வமுடன் ஓட்டு போட்டனர்.

    அதேபோல் அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள், மந்திரிகள், நடிகர்களும் ஆர்வமுடன் அவர்களுக்குரிய வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தனர். முதியவர்களும், முதல் தலைமுறை வாக்காளர்களும் ஆர்வமுடன் வந்து வாக்களித்ததை காணமுடிந்தது.

    கண்ணூர் பினராயி அரசு ஆரம்ப பள்ளியில் முதல்-மந்திரி பினராயி விஜயன் வாக்களித்தார். எர்ணாகுளத்தில் உள்ள ஒரு பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் நடிகர் மம்முட்டி ஓட்டு போட்டார்.

    சில வாக்குச்சாவடிகளில் எந்திரங்கள் பழுதானதால் வாக்குப்பதிவு தாமதமானது. மேலும் எந்திரத்தில் சின்னம் மாறியதாலும் பிரச்சனை ஏற்பட்டது. சில இடங்களில் கள்ள ஓட்டு போடப்பட்டதாகவும் பிரச்சனை எழுந்தது.

    அந்த வகையில் கண்ணூர் சப்பாரபடா வாக்குச்சாவடியில் கதீஜா என்பவரின் ஓட்டு கள்ளஓட்டு போடப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவருக்கு டெண்டர் ஓட்டு போட அனுமதி அளிக்கப்பட்டது. காசர்கோட்டில் காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் சேர்குளா அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் கள்ளஓட்டு போட முயற்சிப்பதாக இடதுசாரி முன்னணி தொண்டர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார் அளித்தனர்.

    கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் மலையோர பகுதியில் உள்ள மாவோயிஸ்டுகள் துப்பாக்கியுடன் சில நாட்களுக்கு முன்பு ஊருக்குள் வந்து யாரும் வாக்களிக்கக்கூடாது என மிரட்டி சென்றனர். ஆனாலும் நேற்று பொதுமக்கள் அந்த தொகுதியில் ஆர்வமுடன் வாக்களித்ததை காணமுடிந்தது. மலையோர பகுதிகளிலும் எந்தவொரு அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை. இதனால் ராகுல் தொகுதியில் 71.69 சதவீதம் வாக்குகள் பதிவானது. இது கேரளாவின் மொத்த சதவீதத்தை விட அதிகம்.

    இதுகுறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சை கவுல் கூறுகையில், ''கேரளாவில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. மாலை 6 மணிக்கு முன்னதாக வந்தவர்கள், வாக்குப்பதிவு நேரத்தை கடந்த பிறகு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்'' என்றார்.

    கேரளாவில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 77 லட்சத்து 49 ஆயிரத்து 159 ஆகும். இதில் மாநிலம் முழுவதும் 70.35 சதவீதம் பேர் வாக்களித்தனர்.

    • கேரள மாநிலத்தில் நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தனது வாக்கை பதிவு செய்தார்.
    • திருவனந்தபுரத்தில் 15 ஆண்டுகளாக என்ன மாதிரியான ஆட்சி இருந்தது என்று அனைவருக்கும் தெரியும்.

    கேரளா:

    இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.

    இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்த இந்த தேர்தலில் 65.5 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

    இதைத்தொடர்ந்து 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

    கேரள மாநிலத்தில் நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தனது வாக்கை பதிவு செய்தார். இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    தேர்தல் எப்போது ஒரே மாதிரி இருப்பதில், எந்த ஒரு விஷயத்திலும் ஒரு மாற்றம் வரவேண்டும். ஒரே மாதிரியான வடிவத்தில் ஆட்சியிருந்தால் நன்றாக இருக்காது. திருவனந்தபுரத்தில் 15 ஆண்டுகளாக என்ன மாதிரியான ஆட்சி இருந்தது என்று அனைவருக்கும் தெரியும். அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் இன்னும் நல்லா இருக்கும் என்று நினைக்கிறேன்.

    புதிய ஆட்சி வந்தால் தானே மாற்றங்கள் எப்படி இருக்கும் என்று நம்மால் உணர முடியும். 15 ஆண்டுகளுக்கு பிறகு நல்ல ஒரு ஆட்சி வரும் என்று என் மனதில் ஒரு நம்பிக்கை இருக்கிறது.

    தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை. இதுவரை பிஜேபி கேரளாவில் வந்ததில்லை என்றும், இந்த முறை பிஜேபி வந்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறினார். பத்து முறை கீழே விழுந்த பிஜேபி இந்த முறை கண்டிப்பாக கேரளாவில் தனது ஆட்சியை பிடிப்பார்கள். கண்டிப்பாக திருவனந்தபுரம், திருச்சூர் ஆகிய இடங்களில் பிஜேபி வெற்றி பெறும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. சுரேஷ் கோபி கண்டிப்பாக வெற்றி பெறுவார். இவ்வாறு அவர் கூறினார்.

    • காங்கிரஸ் எம்.பி.யும், திருவனந்தபுரம் தொகுதி வேட்பாளருமான சசி தரூர் தனது வாக்கை பதிவு செய்தார்.
    • தொகுதியின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை நல்லிணக்கத்தை கண்டதால் முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

    கேரளா:

    இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.

    இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்த இந்த தேர்தலில் 65.5 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

    இதைத்தொடர்ந்து 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

    கேரள மாநிலத்தில் காங்கிரஸ் எம்.பி.யும், திருவனந்தபுரம் தொகுதி வேட்பாளருமான சசி தரூர் தனது வாக்கை பதிவு செய்தார். இதைதொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    ஜனநாயகம், பன்முகத்தன்மை மற்றும் இந்தியாவின் பன்மைத்துவத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்க இங்கே வந்துள்ளேன்.

    தொகுதியின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை நல்லிணக்கத்தை கண்டதால் முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன். மூன்று தேர்தல்களிலும் மக்கள் எனக்கு அளித்த அதே உற்சாகத்தையும், ஆதரவையும், நல்லெண்ணத்தையும் எனக்கு அளித்துள்ளனர். நான் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.


    • தற்போதைய மக்களவை தேர்தலில் காங்கிரசும், கம்யூனிஸ்டு கட்சிகளும் தனித்தனியாக களம் காணுகின்றன.
    • காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கு போட்டியாக இருக்கும் வகையில் ஆனி ராஜா உள்ளிட்ட வேட்பாளர்களை கம்யூனிஸ்டு கட்சிகள் களமிறக்கி உள்ளன.

    திருவனந்தபுரம்:

    தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் இருக்கின்ற நிலையில், கேரள மாநில மக்களவை தேர்தலில் அந்த கட்சிகள் தனித்தனியாக களம் காணுகின்றன. இதனால் அந்த கட்சிகளுக்கிடையே சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

    கேரள மாநிலத்தை பொறுத்தவரை மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய இடதுசாரி ஜனநாயக முன்னணியே ஆட்சி செய்து வருகிறது. இதனால் அங்கு பலம் பொருந்திய கட்சியாகவே கம்யூனிஸ்டு கட்சிகள் இருந்து வருகின்றன.

    அதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி இருக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டு தான் மக்களவை தொகுதிகள். இங்குள்ள 20 மக்களவை தொகுதிகளில் 19 தொகுதிகள் காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்தவர்கள் தான் எம்.பி.க்களாக உள்ளனர். அதிலும் 16 தொகுதிகள் காங்கிரஸ் கட்சியின் வசம் இருக்கிறது.

    இப்படிப்பட்ட சூழலில் தற்போதைய மக்களவை தேர்தலில் காங்கிரசும், கம்யூனிஸ்டு கட்சிகளும் தனித்தனியாக களம் காணுகின்றன. மக்களவை தொகுதிகளில் ஏற்கனவே செல்வாக்கு மிக்க காங்கிரஸ் கட்சியுடன் போட்டியிடும் அதே நேரத்தில், பாரதிய ஜனதாவையும் கம்யூனிஸ்டு கட்சிகள் சமாளிக்க வேண்டிய நிலைக்கு இந்த தேர்தலில் தள்ளப்பட்டுள்ளது.

    ஏனென்றால் கேரளாவில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒவ்வொரு தேர்தலிலும் ஆதரவு பெருகி வருவது தான் அதற்கு காரணம். 2014 தேர்தலின் போது பாரதிய ஜனதாவுக்கு 10 சதவீத வாக்குகளும், அதன் தலைமையிலான கூட்டணிக்கு 11 சதவீத வாக்குகளும் கிடைத்தன.

    அந்த வாக்கு சதவீதம் 2019 தேர்தலில் அதிகரித்தது. 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு 13 சதவீத வாக்குகளும், அதன் தலைமையிலான கூட்டணிக்கு 16 சதவீத வாக்குகளும் கிடைத்தன. 2014 தேர்தலை விட 2019 தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு அதிக சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

    தற்போது அதன் செல்வாக்கு கேரளாவில் மேலும் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.அதனை வைத்து கேரளாவில் பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றி அங்கு கால்பதித்துவிட வேண்டும் என்ற இலக்குடன் செயல் பட்டது. அதற்கு தகுந்தாற் போல் வேட்பாளர்களை பாரதிய ஜனதா களமிறக்கி இருக்கிறது.

    இதன் காரணமாக தற்போதைய தேர்தலில் கேரளாவில் சில தொகுதிகளை பாரதிய ஜனதா கைப்பற்றும் என்று கருதப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் தான் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுடன் கம்யூனிஸ்டு கட்சிகள் கேரள மக்களவை தேர்தலில் களம் காணுகின்றன.

    மாநிலத்தில் தங்களின் கட்சிகளுக்கு உள்ள செல்வாக்கை அதிகரித்து மக்களவை தேர்தலில் வெற்றிபெறும் முனைப்பில் கம்யூனிஸ்டு கட்சிகள் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கு போட்டியாக இருக்கும் வகையில் ஆனி ராஜா உள்ளிட்ட வேட்பாளர்களை கம்யூனிஸ்டு கட்சிகள் களமிறக்கி உள்ளன.

    மேலும் அனைத்து தொகுதிகளிலும் தீவிரமாக பிரசாரம் செய்தன. சில மாநிலங்களில் தனது செல்வாக்கை இழந்துள்ள நிலையில் கம்யூனிஸ்டு கட்சிகள் மக்களவை தேர்தலை எதிர்கொள்கிறது.

    தேசிய அந்தஸ்தை தக்க வைத்துக்கொள்ள மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு கேரள உதவுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தல் முடிவு வந்தபிறகே அந்த கேள்விக்கான பதில் தெரியவரும்.

    ×