search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    • உடலில் நன்றாக காற்று புகக்கூடிய வகையிலான பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும்.
    • கோடை காலத்தில் ஏற்படும் செரிமான பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு தயிர்.

    தமிழகத்தில் கோடை வெயில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகவே சுட்டெரித்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தற்போது கோடை வெயில் உச்சத்தை தொடும் நிலையில் வெப்ப அலை வீசும் என்று எச்சரிக்கப்படுகிறது.

    தமிழகத்தில் வருகிற 30-ந்தேதி வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டுள்ளது. வெப்ப அலை வீசும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பானது பொதுமக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது. ஆனால் அதற்கு பயப்பட வேண்டியதில்லை. பகல் 11 மணி முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தால் போதும், வெப்ப அலையில் இருந்து எளிதாக தப்பலாம் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

    அதே நேரத்தில் எத்தனை பேரால் பகல் 11 மணி முதல் 3 மணி வரை வெளியே வராமல் இருக்க முடியும்? அவரச வேலை, சொந்த வேலை, அலுவலக வேலை, தொழில் நிமித்தம் என ஏதாவது ஒரு காரணத்துக்காக பலர் பகல் நேரத்தில் வெளியே வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதனால் வெப்ப அலையை எப்படி சமாளிக்கப்போகிறோம்? என்கிற கேள்வியும் அவர்களின் மனதிற்குள் எழாமல் இல்லை.

    கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர காலத்தில் தான் வழக்கமாக வெயில் உச்சம் தொடும். ஒவ்வொரு ஆண்டும் மே 4-ந்தேதி தொடங்கும் அக்னி நட்சத்திரம் மே 28-ந்தேதி வரை மொத்தம் 25 நாட்கள் நீடிக்கும். ஆனால் அதற்கு முன்பே வெப்ப அலை தாக்கும் என்ற எச்சரிக்கையானது, பொதுமக்களை அச்சப்படத்தான் வைக்கிறது.

    வெப்ப அலை என்றால் என்ன? அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வதில் பலருக்கும் ஆர்வம் உள்ளது.

    ஒரு மாநிலத்தில் குறைந்தது 2 மாவட்டங்களிலாவது வெப்பநிலை 113 டிகிரிக்கு மேல் பதிவாக வேண்டும். அல்லது வெப்பநிலை 104 டிகிரிக்கு மேல் பதிவாகி 2 நகரங்களில் வழக்கத்தை விட 8 டிகிரி வெப்பம் அதிகமாக இருந்தாலும் வெப்ப அலை உருவாகும் என்று கணிக்கப்படுகிறது.

    மேலும் சமவெளிப் பகுதியில், குறைந்தது 2 நாட்களுக்கு 104 டிகிரி வெயில் அல்லது அதற்கு மேலாகவும், மலைப் பிரதேசங்களில் 86 டிகிரி வெயில் அல்லது அதற்கு மேலாகவும், கடலோரப் பகுதிகளில் 98.6 டிகிரி வெயில் அல்லது அதற்கு மேலாகவும் வெப்பநிலை உயரும்போது 'வெப்ப அலை' நிகழ்வு ஏற்படுவதாக வானிலை ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். தமிழகத்தில் கடந்த 25 ஆண்டுகளில், சராசரியாக ஆண்டுக்கு 8 வெப்ப அலைகள் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    வெப்ப அலைகளால் தமிழகம் பல்வேறு காலகட்டங்களில் பலவித பாதிப்புகளை சந்தித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு தான் வெப்ப அலை கடுமையாக தாக்கியது.

    வெப்ப அலைகளின் காலம் அதிகரிக்கும்போதும், தீவிரமடையும்போதும் கூடவே வறட்சியும் அதிகரிக்கும். வெப்ப அலைகளுக்கு மத்தியில் மழை பெய்வது குறையும். எனவே, நிலத்தில் உள்ள ஈரப்பதம் குறைந்து நிலம் விரைவில் வறண்டு போகும். இதனால் நிலம் வேகமாக வெப்பமடைந்து காற்றை சூடாக மாற்றும். இது ஒரு தொடர் சுழற்சியாகி ஒட்டுமொத்த வெப்ப நிலையும் அதிகரிக்கும். இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்.

    இதுபோன்ற வெப்ப அலை காலகட்டத்தில் கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர்கள், உடல் நலக்குறைபாடு கொண்ட நோயாளிகள் ஆகியோரே கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே வெப்ப அலையின்போது கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர்கள் விஷயத்தில் கூடுதல் கவனமும், கண்காணிப்பும் செலுத்த வேண்டும். தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் ஆசியா கண்டம் முழுவதும் 24 கோடி குழந்தைகள் வெப்ப அலையால் பாதிக்கப்படக்கூடிய ஆபத்து இருப்பதாக ஐ.நா. சபை எச்சரித்துள்ளது. வெப்ப அலையின்போது நமது உடலில் இருந்து அதிக வியர்வை வெளியேறுவதால் பூஞ்சை தொற்றுகள், சொறி, படர் தாமரை போன்ற தோல் நோய்கள் ஏற்படலாம். உடலின் ஈரப்பதத்தை பராமரித்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதன் மூலம் இதிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

    கோடை காலங்களில் உடலில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையால் பல்வேறு நீர் சார்ந்த நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்போது, நமக்கு கிடைக்கும் நீர் மாசடைந்து இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். அதனால், வாந்தி, வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். ஆகவே, நீரை சூடாக்கிய பின்னர் குடிப்பது நல்லது. மேலும் உடலில் நீர்ச்சத்து குறைந்தால் சிறுநீரகக் கல் வரும் பாதிப்பு அதிகமாகவே இருக்கும். கோடைக்காலங்களில் அதிக அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்போருக்கு இந்தப் பிரச்சனை ஏற்படும்.

    அதே நேரத்தில் வெப்ப அலையில் இருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகளையும் மருத்துவர்கள் வகுத்துள்ளனர்.

    இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது:-

    வெப்ப அலையில் இருந்து தப்பிக்க முதலில் ஆடை விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உடலில் நன்றாக காற்று புகக்கூடிய வகையிலான பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும். தினமும் அதிக அளவில் தண்ணீர் குடித்து உடலை நீர்ச்சத்துகளுடன் வைத்திருக்க வேண்டும். 10 நிமிடம் முதல் 15 நிமிடத்துக்கு ஒரு முறை தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் எடுக்கவில்லை என்றாலும் அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும். பகல் 11 மணி முதல் 3 மணி வரை வெளியே வெயிலில் வருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

    குழந்தைகளை வெப்பம் தாக்காமல் இருக்க அவர்களுக்கு பருத்தி துணியால் ஆன ஆடைகளையே அணிவிக்க வேண்டும். தினமும் 2 முறை அவர்களை குளிக்க வைக்க வேண்டும். குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் பகல் நேரத்தில், குறிப்பாக பகல் 11 மணி முதல் 3 மணி வரை வெயிலில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும்.

    மேலும் வெயிலுக்கு தகுந்தாற்போல் உணவு பழக்கங்களையும் கடைபிடிக்க வேண்டும். நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும்போது இரும்பு சத்தும் உடலில் குறையும். இதனை தவிர்க்க பேரீச்சை மற்றும் சாத்துக்குடி பழங்களை சாப்பிட வேண்டும். பேரீச்சை, சாத்துக்குடி ஆகிய பழங்கள் வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதத்தில் இருந்து நம்மை பாதுகாக்கும். பேரீச்சை சாப்பிடுவதால் நாள் முழுவதும் சோர்வில்லாமல் ஆரோக்கியமாக இருக்கலாம்.

    கோடை காலத்தில் ஏற்படும் செரிமான பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு தயிர். இதனை கண்டிப்பாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தயிரை லஸ்சியாகவும் செய்து சாப்பிடலாம். புதினா இலையில் இயற்கையாகவே ஏராளமான நன்மைகள் உள்ளன. உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும் புதினாவை சட்னி செய்து சாப்பிடலாம். புதினா சாறு குடிப்பது கோடையில் ஆரோக்கிய மேம்பாட்டுக்கு உதவும்.

    தர்பூசணியில் லைகோபீன் எனப்படும் ஆக்சிஜனேற்றி உள்ளது. இது சருமத்தின் பளபளப்பை பராமரிக்கிறது. தர்பூசணியில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. மேலும் அதில் குளிர்ச்சி தன்மையும், 92 சதவீதம் தண்ணீரும் இருப்பதால், உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது.

    மேலும் எலுமிச்சையில் வைட்டமின் 'சி' உள்ளது. இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, குழந்தைகளிடம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. அதனால் தான் கோடைக்காலத்தில் எலுமிச்சை பழச்சாறு அதிகம் குடிக்க வேண்டும். வியர்வையால் குழந்தைகள் உடலில் உள்ள தாது உப்புகள் அதிகமாக வெளியேறும். இதனால் உடலில் ஏற்படும் தாது உப்புக்களின் பற்றாக்குறையை போக்க எலுமிச்சை பழச்சாறில் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து கொடுக்கலாம். 

    தயிர் சேர்த்த கம்மங்கூழ், பழச்சாறு, இளநீர், நுங்கு ஆகியவற்றையும் சாப்பிடலாம். பெரும்பாலும் ஐஸ்கிரீம், செயற்கை குளிர்பானம் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.

    முதியவர்கள் பகல் நேரத்தில் வெயிலில் வெளியே செல்லும்போது அவர்களுக்கு மயக்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே 60 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் பகல் நேரத்தில் வெளியே செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க வேண்டும்.

     

    பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது தண்ணீர் குடித்தால் வாந்தி வரும் என்பதற்காக பலர் தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பார்கள். அவர்கள் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் பிரசவத்தின் போது பிரச்சனை உருவாகி குழந்தையின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும். பனிக்குடத்தில் எப்போதும் குழந்தைக்கு தேவையான அளவு நீர் இருக்க வேண்டும் என்பதால் கோடை காலத்தில் கர்ப்பிணி பெண்கள் அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.

    வெப்ப அலையின்போது புரதச்சத்து அதிகம் உள்ள உணவை தவிர்க்க வேண்டும். வீட்டில் தண்ணீர் தெளித்து எப்போதும் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் வெப்ப அலையில் இருந்து நாம் நம்மையும், நம் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • எங்கள் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.
    • தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 15-ந்தேதி மின்னஞ்சல் மூலம் புகார் அளித்த போதும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    சென்னை:

    கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த சுதந்திர கண்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க சென்றபோது, வாக்காளர் பட்டியலில் எனது பெயர் மற்றும் எனது மனைவி பெயர் நீக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும், 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் வாக்களித்த நிலையில், இந்த முறை எனது பெயரும், மனைவி பெயரும் நீக்கப்பட்டுள்ளது. அதே முகவரியில் வசிக்கும் எனது மகள் பெயர் பட்டியலில் உள்ளது.

    இதேபோல, எங்கள் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 15-ந்தேதி மின்னஞ்சல் மூலம் புகார் அளித்த போதும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    அதனால் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து, வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். அதுவரை கோவை பாராளுமன்ற தொகுதி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • வேட்பாளர்கள் பெயர் என்னிடம் வரும்போது, அதற்கான அறிவிப்பாணையில் கையெழுத்திடுவேன்.
    • அதன்பின் அறிவிப்பு வெளியிடப்படும். அதற்கான இன்னும் சில நாட்கள் காத்திருங்கள்.

    காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியமான அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு இன்னும் வேட்பார்ளர்கள் அறிவிக்கப்படாமல் உள்ளது. இன்று மாலை காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

    அப்போது அமேதி, ரேபரேலி தொகுதியில் யாரை நிறுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்படும் எனத் தகவல் வெளியானது. மேலும், இரு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியானது.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-

    அமேதி மற்றும் ரேபரேலி ஆகிய தொகுதி வேட்பாளர்களுக்காக இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும். ஆலோசனை முடிந்து வேட்பாளர்கள் பெயர் என்னிடம் வரும்போது, அதற்கான அறிவிப்பாணையில் கையெழுத்திடுவேன். அதன்பின் அறிவிப்பு வெளியிடப்படும்

    ராகுல் காந்தி தொகுதி மாறியதாக அடிக்கடி கூறப்படுகிறது. வாஜ்பாய் மற்றும் அத்வானி ஆகியோர் எத்தனை முறை தொகுதிகள் மாறினார்கள் என்பதை என்னிடம் தெரிவிக்க வேண்டும்.

    காங்கிரஸ் கட்சி பாய்ந்தோடும் ஆறு போன்றது. கட்சியில் வளர்ச்சி பெற்று பின்னர் வெளியேறிய சிலரால் பாதிக்கப்படாது.

    இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.

    • டிராக்டரில் பார்த்தபோது தனது இளைய மகன் தேவவிருதனை காணவில்லை.
    • குழந்தையை தேடிய போது, லாரியின் அடியில் சிக்கி பலத்த காயத்துடன் குழந்தை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    மயிலம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த எடைபாலயம் கிராமத்தை சேர்ந்தவர் சிவா (வயது 45). விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி ராதிகா (35). இவர்களுக்கு மனுநீதி (6), தேவவிருதன் (3) ஆகிய 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் இன்று காலை சிவா செங்கல்பட்டில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு ஹாலோபிளாக் கற்களை எடுத்துக்கொண்டு டிராக்டரில் புறப்பட்டார். அப்பொழுது அவரது குழந்தைகள், நாங்களும் வருவோம் என அடம் பிடித்ததால் குழந்தைகளையும் டிராக்டரில் அழைத்துக் கொண்டு சென்றார்.

    இன்று காலை 7.30 மணிக்கு கூட்டேரிப்பட்டு மேம்பாலத்திலிருந்து கீழே இறங்கி வார சந்தையின் அருகே டிராக்டர் சென்று கொண்டிருந்தது. அப்போது டிராக்டரின் பின்னால் வேகமாக வந்த லாரி, டிராக்டர் மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய டிராக்டர் சிறிது தூரம் வேகமாக சென்றது. அதிர்ச்சி அடைந்த சிவா டிராக்டரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தினார்.

    டிராக்டரில் பார்த்தபோது தனது இளைய மகன் தேவவிருதனை காணவில்லை. குழந்தையை தேடிய போது, லாரியின் அடியில் சிக்கி பலத்த காயத்துடன் குழந்தை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து குழந்தையை மீட்ட சிவா, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள்.

    அப்போது, அங்கு வந்த தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், தந்தை கண்முன்னே குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மயிலம் போலீசார், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து, லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    • கார் வேக வரம்பை விட வேகமாக பயணம் செய்துள்ளது.
    • விபத்தில் உயிர் பிழைத்த ஒரு நபர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.

    அமெரிக்காவில் கார் ஒன்று மரத்தின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் குஜராத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

    குஜராத்தின் அனந்த் மாவட்டத்தை சேர்ந்த ரேகாபென் படேல், சங்கீதாபென் படேல் மற்றும் மனிஷாபென் படேல் ஆகியோர் அமெரிக்காவில் உள்ள தெற்கு கரோலினாவில் உள்ள கிரீன்வில்லி மாகாணத்தில் உள்ள காரில் சென்றுக் கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மோதி விபத்துக்குள்ளானது.

    இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், " வேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து 20 அடி உயரத்தில் பறந்து பாலத்தின் எதிர்புறத்தில் உள்ள மரம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    கார் வேக வரம்பை விட வேகமாக பயணம் செய்துள்ளது. மரத்தில் மோதிய வேகத்தில் கார் சுக்குநூறாக நொருங்கியது.

    3 இந்தியப் பெண்கள் உயிரிழந்த நிலையில், விபத்தில் உயிர் பிழைத்த ஒரு நபர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    • தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் பின்வரும் நெறிமுறைகளை தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் பின்பற்ற வேண்டும்.
    • 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு மதிப்பெண்களை பதிவு செய்வதுடன், பள்ளிக்குழு தேர்ச்சி விதிகளை பின்பற்றி தேர்ச்சி அளிக்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ், அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நடப்பு (2023-24) கல்வி ஆண் டில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் சுயநிதி பள்ளி, ஆங்கிலோ-இந்தியன் பள்ளி ஆதிதிராவிடர் நலத் துறை பள்ளி மற்றும் சிறப்பு பள்ளிகளில் 6, 7, 8, 9-ம் வகுப்புகளுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் பின்வரும் நெறிமுறைகளை தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் பின்பற்ற வேண்டும்.

    அதன்படி, 6, 7-ம் வகுப்பு களுக்கு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறையின்படி ஒருங்கிணைந்த பதிவேட்டில் 3-ம் பருவ தேர்வுக்குரிய மதிப் பெண்கள், கிரேடுகளை பதிவு செய்ய வேண்டும். 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும். 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு மதிப்பெண்களை பதிவு செய்வதுடன், பள்ளிக்குழு தேர்ச்சி விதிகளை பின்பற்றி தேர்ச்சி அளிக்க வேண்டும்.

    மாணவர்களின் இடை நிற்றலை தவிர்க்கவும், கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்துக்கு குறையாமலும் ஆசிரியர் குழுவின் ஒப்புதலுடன் 9-ம் வகுப்புக்கான தேர்ச்சி விதிகள் முடிவு செய்யப்பட்டு, தேர்ச்சி அளிக்கப்பட வேண்டும்.

    அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின்படி, அனைத்து பள்ளிகளும் 6, 7, 8-ம் வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாய தேர்ச்சி அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • அதிக அளவில் அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் பெருநகரமாக இருந்தாலும் கூட அதற்கான எந்திரங்களை இறக்குமதி செய்யவேண்டிய நிலையிலேயே திருப்பூர் இருக்கிறது.
    • தொழிலை முன்னெடுத்து செல்லும் முயற்சியாக ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

    திருப்பூா்:

    பின்னலாடை உற்பத்தியில் பல்வேறு நிலைகளான நிட்டிங், சாய ஆலை, பதப்படுத்துதல், பினிஷிங், எம்ப்ராய்டரி, பிரிண்டிங், தையல் உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எந்திரங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சினைகளை களைய உள்நாட்டிலேயே பின்னலாடை எந்திர உதிரிபாகங்களை தயாரிக்க ஏற்றுமதியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    இதற்கான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கூறுகையில், திருப்பூரில் ரூ.34 ஆயிரத்து 350 கோடி பின்னலாடை ஏற்றுமதி, ரூ.30 ஆயிரம் கோடி அளவிலான உள்நாட்டு வர்த்தகம், 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உள்பட அதிக அளவில் அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் பெருநகரமாக இருந்தாலும் கூட அதற்கான எந்திரங்களை இறக்குமதி செய்யவேண்டிய நிலையிலேயே திருப்பூர் இருக்கிறது.

    பாதுகாப்புத்துறை மற்றும் சந்திராயன்-3 செயற்கைகோள் ஆகியவற்றின் பங்களிப்பிற்காக எந்திரங்களுக்கு தேவையான உபகரணங்கள் தயாரிப்பதற்காக, அரசு தேர்வு செய்த நகரம் கோவை ஆகும்.

    பின்னலாடை தொழில் துறைக்கு தேவையான நிட்டிங், சாய ஆலை, பதப்படுத்துதல், பினிஷிங், எம்பிராய்டரி, பிரிண்டிங், தையல் உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு தேவையான அனைத்து வகையான எந்திரங்கள் மற்றும் உதிரி பாகங்கள் இறக்குமதி செய்வதில் ஏற்படும் பிரச்சினைகளான எந்திரங்களின் விலை உயர்வு, அதற்கான அதிக முதலீடு, எந்திரங்கள் வந்து சேர்வதில் காலதாமதம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை நீக்கும் முயற்சியாகவும், முதல் கட்டமாக எந்திரங்களின் உதிரி பாகங்கள் தயாா் செய்ய கவனம் செலுத்துவதில் தொடங்கி அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

    நிட்மா சங்கத்தின் தலைவர் அகில் எஸ்.ரத்தினசாமி பேசும்போது, தொழில்துறை உள்நாட்டு வர்த்தகத்தில் இருந்து ஏற்றுமதிக்கு வளர்ச்சி அடைந்திருந்தாலும் எந்திர உதிரி பாகங்கள் வாங்குவதிலும் அதற்கான செயல்பாடுகளும் நாம் வெளிநாட்டையே எதிர்நோக்கி இருக்கும் நிலை மாறி தொழிலை முன்னெடுத்து செல்லும் முயற்சியாக ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

    • வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்.
    • தமிழகத்தில் வழக்கமாக கோடை காலத்தில் 54.7 மி.மீ மழை பதிவாக வேண்டும்.

    தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டது.

    வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, இன்று முதல் 1ம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் 30ம் தேதி வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் ஒரு சொட்டு மழை கூட பெய்யவில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், இந்தாண்டு கோடைகால பருவமழை தற்போது வரை இயல்பைவிட 83 சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது.

    தமிழகத்தில் வழக்கமாக கோடை காலத்தில் 54.7 மி.மீ மழை பதிவாக வேண்டும்.

    தற்போது வரை 9.5 மி.மீ மழை மட்டுமே பதிவாகியுள்ளது.

    இதுவரை 16 மாவட்டங்களில் ஒரு சொட்டு கோடை மழை கூட பதிவாகவில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • புதுச்சேரி கடற்கரை சாலையில் சிற்றுண்டி கடை வைத்து நடத்தி வருபவர் அருண்.
    • சேவை தொடர வேண்டும் என்று காவல் துறையினர் வாழ்த்தி கைகுலுக்கி அனுப்பி வைக்கின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொது மக்கள் வெயிலுக்கு பயந்து வீட்டிலே முடங்கியுள்ளனர்.

    இந்த நிலையில் புதுச்சேரி கடற்கரை சாலையில் சிற்றுண்டி கடை வைத்து நடத்தி வருபவர் அருண்.

    சமூக ஆர்வலரான இவர் சில நாட்களாக தன்னுடைய வாகனத்தில் ஐஸ் பெட்டியை பின்புறம் கட்டி அதில் மோர், நன்னாரி சர்பத், இளநீர், குடிநீர், லெமன் ஜூஸ் ஆகியவற்றுடன் புதுச்சேரி நகர பகுதியில் வலம் வருகிறார்.

    இதனை கடும் வெயிலில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், போக்குவரத்தை சீரமைக்கும் போலீசார் ஆகியோருக்கு அவர்கள் பணிபுரியும் இடத்துக்கே சென்று வெப்பத்தை தணிக்கும் வகையில் அவர்கள் விரும்பிய குளிர்பானங்களை கொடுத்து வருகிறார்.

    இவருடைய சேவை தொடர வேண்டும் என்று காவல் துறையினர் வாழ்த்தி கைகுலுக்கி அனுப்பி வைக்கின்றனர்.

    இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

    • ஆடுகளை வாங்க ஊத்தங்கரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர்.
    • சந்தையில் 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும் கொண்டு வந்தனர்.

    அரூர்:

    கம்பைநல்லூரில் வாரந்தோறும் வெள்ளி கிழமைகளில் சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு சந்தையில் நடைபெறும் ஆடு, கோழி உள்ளிட்ட வாங்க விவசாயிகளும், ஆடு வளர்ப்பவரும், விற்பனைக்கு கொண்டு வந்தனர்

    ஆடுகளை வாங்க ஊத்தங்கரை, திருப்பத்தூர், ஆம்பூர், காரிமங்கலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர்.

    நேற்று நடந்த சந்தையில் 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும் கொண்டு வந்தனர். ஒரு ஆடு விலை ரூ. 5,000 முதல் ரூ.9,500 வரையும் விற்பனையானது. சந்தையில் நேற்று ஆடுகள் மொத்தம் ரூ.23 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • தமிழகம் முழுவதுமே வெயில் தனது உக்கிரத்தை காட்டி வருகிறது. வெயிலின் தாக்கத்தால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே சுமார் ஒரு மாத காலமாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது.

    இந்த ஆண்டு வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும், அடிக்கடி வெப்ப அலையும் வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து வருகிறது. அதற்கு ஏற்பவே வெயிலின் உக்கிரமும் தினமும் அதிகரித்து வருகிறது.

    தமிழகத்தில் கடந்த மார்ச் மாதமே வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது. ஈரோடு, திருப்பத்தூர், சேலம் உள்பட சுமார் 12 மாவட்டங்களில் கடந்த மாதமே வெயில் 100 டிகிரியை தாண்டியது. கடந்த 22-ந்தேதி ஈரோடு மாவட்டத்தில் இந்தியாவிலேயே 3-வது அதிக அளவில் வெயில் பதிவாகியுள்ளது. அன்று ஈரோட்டில் 109.4 டிகிரி வெயில் கொளுத்தியது.

    நேற்று ஈரோடு, திருப்பத்தூர், சேலம், தர்மபுரி, கரூர், திருத்தணி, வேலூர், திருச்சி, நாமக்கல், கோவை, மதுரை, தஞ்சாவூர், பாளையங்கோட்டை ஆகிய 13 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது. ஈரோட்டில் அதிகபட்சமாக 107.6 டிகிரி வெயில் பதிவானது. திருப்பத்தூர், சேலத்தில் 106 டிகிரியை தாண்டி வெயில் பதிவானது. ஈரோட்டை பொறுத்தவரை தொடர்ந்து 6-வது நாளாக 108 டிகிரியை நெருங்கி வெயில் பதிவாகி வருகிறது.

    சென்னையில் வெயில் 100 டிகிரியை நெருங்கி பதிவாகி வருகிறது. இதனால் சென்னையிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தமிழகம் முழுவதுமே வெயில் தனது உக்கிரத்தை காட்டி வருகிறது. வெயிலின் தாக்கத்தால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    குறிப்பாக பகல் நேரங்களில் சுட்டெரிக்கும் வெயிலால் வெளியே செல்ல முடிவதில்லை. இரவிலும் காற்று இல்லாததால் புழுக்கத்தின் காரணமாக பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். இரவு நேரத்தில் மின் விசிறியில் இருந்து வெளியே வரும் காற்று அனலை கக்குவதால் பொதுமக்கள் தூங்க முடியாமல் தவிக்கிறார்கள். சென்னை உள்பட தமிழகம் முழுவதுமே வெப்பம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் தமிழகத்தில் வெப்ப அலை வீசும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தமிழகத்தில் 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு கடுமையான வெப்ப அலை வீசும். தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, பீகார், உத்தரபிரதேசம், தெலுங்கானா, கோவா ஆகிய மாநிலங்களில் வெப்ப அலை வீசும். மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவிலும் கடுமையான வெப்ப அலை தாக்குவதற்கான வாய்ப்பு உள்ளது. மேற்கு வங்காளத்தில் வெப்ப அலைக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    வருகிற 30 மற்றும் 1-ந்தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். மற்ற மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    இன்று முதல் வருகிற 30-ந்தேதி வரை தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி வரை படிப்படியாக உயரக்கூடும். அதிகபட்ச வெப்ப நிலை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் 102 டிகிரி முதல் 107 டிகிரி வரை பதிவாகும். மற்ற மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 95 டிகிரி முதல் 102 டிகிரிவரை பதிவாகும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 97 முதல் 99 டிகிரியை ஒட்டி இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்கள் வெப்ப அலை தாக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் வருகிற 30-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கடுமையான வெப்ப அலை வீசுவதற்கான மஞ்சள் நிற எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

    இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் வருகிற 30-ந்தேதி கடுமையான வெப்ப அலை வீசும். அன்று வெப்ப அலை வீசுவதற்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. வெப்ப அலை வீசும் என்பதால் அன்று நண்பகல் நேரங்களில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம். வெப்ப அலை வீசும் நேரங்களில் அசவுகரியமான சூழல் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்ப்பது நல்லது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராகுல் காந்தி மீண்டும் அமேதியில் களம் இறங்குவார் என்று தகவல்கள் வெளியானது.
    • காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி, ரேபரேலி தொகுதிகள் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க தொகுதிகளாக கருதப்படுகின்றன.

    ரேபரேலி தொகுதியில் இருந்து சோனியா தேர்வு செய்யப்பட்டு வந்தார். தற்போது அவர் மேல்சபை எம்.பி. ஆகிவிட்டதால் அந்த தொகுதியில் பிரியங்கா போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியானது.

    இதற்கிடையே ராகுல் காந்தி மீண்டும் அமேதியில் களம் இறங்குவார் என்று தகவல்கள் வெளியானது. கடந்த முறை ராகுல் அமேதி தொகுதியில் ஸ்மிருதிஇரானியிடம் தோல்வியை தழுவினார். வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் அவர் எம்.பி.யாக முடிந்தது.

    இந்த தடவையும் அவர் வயநாடு தொகுதியில் களம் இறங்கி உள்ளார். நேற்று அந்த தொகுதியில் ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றது. இந்த நிலையில் அவர் அமேதியிலும் போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    அமேதியில் ராகுலையும், ரேபரேலியில் பிரியங்காவையும் களம் இறக்குவது பற்றி காங்கிரஸ் தேர்தல் மையக்குழு ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. அதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    அமேதி, ரேபரேலி தொகுதி நிலவரம் பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ராகுல் மற்றும் பிரியங்காவை இந்த தொகுதிகளில் போட்டியிட வைக்க வேண்டும் என்று அனைத்து தலைவர்களும் கருத்து தெரிவித்தனர்.

    இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    ×