search icon
என் மலர்tooltip icon

    Recap 2023

    • கடந்த ஏப்ரல் மாதம் 142.86 கோடி மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா முதலிடம் பிடித்தது.
    • சீனா 142.57 கோடி என்ற எண்ணிக்கையுடன் 2-வது இடத்தையும் பிடித்தது.

    உலக நாடுகளின் மக்கள் தொகை குறித்து ஐ.நா.சபை அவ்வப்போது ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிடும். மக்கள்தொகை அதிகம் கொண்ட நாடுகள் பட்டியலில் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பிடித்திருப்பதாக ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது.


    கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா உலக மக்கள்தொகை எண்ணிக்கையில் சீனாவை தாண்டி முதலிடம் பிடித்தது. அதாவது, 142.86 கோடி மக்கள்தொகை கொண்டு இந்தியா இதில் முதலிடமும், சீனா 142.57 கோடி என்ற எண்ணிக்கையுடன் 2-வது இடத்தையும் பிடித்தன.

    • சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிப்பது குறித்து கூறிய கருத்துகள் சர்ச்சையை கிளப்பியது.
    • சனாதன சர்ச்சைக்கு மத்திய மந்திரிகள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று மோடி 6-ந்தேதி பேசினார்.

    பருவம் தவறி பெய்த மழை

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பிப்ரவரி 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை காவிரிடெல்டா பகுதிகளான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா, தாளடி பயிர் சேதமடைந்தன.

    பிப்.5-ல் சேதங்களை ஆய்வு செய்த அமைச்சர் சக்கரபாணி பருவம் தவறி பெய்த மழையால் டெல்டா மாவட்டங்களில் 2.17 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டதாக அறிவித்தார். மறுநாள் தமிழக அரசு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு அறிவித்தது.

    பிளஸ்-2 மாணவியின் வரலாற்று சாதனை

    பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே.8-ல் வெளியானது. இதில் 94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

     திண்டுக்கல் மாணவி நந்தினி 600க்கு-600 மதிப்பெண் எடுத்து வரலாற்று சாதனை படைத்தார். மே.11-ந்தேதி நந்தினிக்கு கவிஞர் வைரமுத்து திண்டுக்கல்லுக்கு நேரில் சென்று தங்கப் பேனா வழங்கினார்.

    அமைச்சரவை மாற்றம்

    பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் அமைச்சரவையில் (மே.9) இருந்து விடுவிக்கப்பட்டார். தமிழக அமைச்சரவை மே.11-ல் மாற்றி அமைக்கப்பட்டது. அதில் நிதித்துறை அமைச்சராக தங்கம் தென்னரசு துறை மாற்றப்பட்டார்.

    மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சராகவும், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராகவும் மாற்றப்பட்டனர். தொழில்துறை அமைச்சராக டி.ஆர்.பி. ராஜா புதிதாக பதவி ஏற்றார்.

    விச சாராயத்துக்கு 22 பேர் பலி

    விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மே.14-ல் விச சாராயம் குடித்த 10 பேர் பலியாகினர். அடுத்த 2 நாட்களில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது. விச சாராயத்தை கட்டுப்படுத்த தவறிய 7 போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கமும், சாராய வியாபாரி அமரன் கைதும் செய்யப்பட்டனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. மே.17-ல் விழுப்புரம் மாவட்டத்தில் விச சாராயம் சாப்பிட்ட 15 பேருக்கு கண்பார்வை பாதிப்பு ஏற்பட்டது.

    தக்காளி, தங்கம் விலை உயர்வு

    இந்த ஆண்டில் அடிப்படை காய்கறியான தக்காளியும், மக்களின் பேராதரவு பெற்ற ஆபரணமான தங்கமும் வழக்கம்போல விலையேற்றத்துடன் காணப்பட்டு, மக்களை ஏக்கம் கொள்ளச் செய்தன. குறிப்பாக தக்காளி விலை ஜூன், ஜூலை மாதத்தில் கிலோ ரூ.200 என்ற அளவில் உச்சம் தொட்டு மக்களை வாட்டி வதைத்தது. இதனால் தமிழக அரசு ரேசன் கடைகளில் ரூ.60 என்ற விலையில் தக்காளியை விற்பனை செய்ய ஆரம்பித்தது. செப்டம்பரில் இருந்து தக்காளி விலை சரிந்து காணப்பட்டது.

    விலை உச்சத்தில் இருந்தபோது கிலோ ரூ.20-க்கு விற்ற வியாபாரி ஒரு டீ குடித்தால் ஒரு கிலோ தக்காளி இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டு பிரபலம் ஆனார்கள். அதேபோல சென்னை தம்பதி ஒன்று, கர்நாடகாவில் இருந்து வந்த தக்காளிகளை கடத்தி விற்பனை செய்து லாபம் பார்த்ததாக கைதான சம்பவமும் அரங்கேறியது.

    தங்கம் விலை ஆண்டின் தொடக்கத்தில் 44 ஆயிரத்திற்கு கீழ் இருந்தது. பின்னர் அவ்வப்போது விலையேற்ற இரக்கமாக இருந்தது. அக்டோபரில் இஸ்ரேல் போர் மூண்ட பின்பு தங்கம் விலை சரசரவென்று உயர்ந்து 46 ஆயிரத்தை எட்டிப்பிடித்தது. உச்சபட்சமாக 47 ஆயிரத்தை தொட்டு புதிய வரலாறு படைத்தது.

    எம்.எஸ். சுவாமிநாதன் மறைவு

    புதிய ரக கோதுமை மற்றும் நெல் ரகங்களை அறிமுக செய்த இந்தியாவில் உணவுப் பொருள் உற்பத்தியில் தன்னிறைவு பெற செய்தவர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன். இந்தியாவில் பசுமை புரட்சிக்கு வித்திட்டவர் என அழைக்கப்பட்ட எம்.எஸ். சுவாமி நாதன் (வயது 98) செப்.28-ல் மரணம் அடைந்தார். தஞ்சாவூர் வேளாண்மை கல்லூரிக்கு எம்.எஸ். சுவாமிநாதன் பெயர் சூட்டப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    உதயநிதி ஸ்டாலின் பேச்சு

    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் (செப்.2) அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். சனாதனத்தை ஒழிப்பது குறித்து அவர் கூறிய கருத்துகள் சர்ச்சையை கிளப்பியது. அவரது தலைக்கு அயோத்தி சாமியார் ரூ.10 கோடி பரிசு அறிவித்து அவரது உருவப்படததை கத்தியால் கிழித்து போராட்டம் நடத்தினார். 5-ந்தேதி தி.மு.க.வினர் இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். சனாதன சர்ச்சைக்கு மத்திய மந்திரிகள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று மோடி 6-ந்தேதி பேசினார்.

    அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி முறிந்தது

    செப்.25ல் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. பின்னர் அ.தி.மு.க. பாஜனதா கூட்டணி முறிந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    பங்காரு அடிகளார் மரணம்

    மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் அக்.19-ல் மரணம் அடைந்தார். மறுநாள் அவரது உடல் அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. கருவறையில் பெண்களும் பூஜை செய்யலாம் என்ற மாற்றத்தை கொண்டு வந்தவர் பங்காரு அடிகளார்.

    கவர்னர்களுக்கு கண்டனம்

    பஞ்சாப் அரசு தொடர்ந்த வழக்கில் மசோதாக்களுக்கு ஒப்புதல் பெற கோர்ட்டுக்கு வரும் நிலையை உருவாக்குவதா என்று கவர்னர்களுக்கு (நவ.6) சுப்ரீம் கோர்ட்டு கண்டனம். தாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்பதை உணர வேண்டும் என்று கருத்து தெரிவித்தது.

    இதேபோல் தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கவர்னரின் செயல்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ள அதேசமயம் 10 மசோதாக்களை கவர்னர் ஆர்.என்.ரவி நவ.16-ல் திருப்பி அனுப்பினார். நவ 18-ல் தமிழக சட்டசபையில் அந்த 10 மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப் பட்டு உடனடியாக கவர்னருக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து மறுநாளே சட்ட நிபுணர்களுடன் ஆலோசிக்க தமிழக கவர்னர் டெல்லி புறப்பட்டு சென்றார்.

    சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் வழக்கு நவ.20ல் விசாரணைக்கு வந்தது. அப்போது மசோதாக்களை திருப்பி அனுப்பியது ஏன், 3 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டு இருந்தார் என கவர்னருக்கு நீதிபதி சரமாரி கேள்விகேட்டது.

    சங்கரய்யா மறைந்தார்

    முதுபெரும் கம்யூனிஸ்டு தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான சங்கரய்யா 102 வயதில் (நவ.15) மரணம் அடைந்தார். மறுநாள் அரசு மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்கு நடந்தது.

    சுதந்திர போராட்டத்தின் போதும், அதன் பின்னரும் 8 ஆண்டுகள் சிறை வாழ்க்கையும், 4 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையும் வாழ்ந்தார். தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டு கட்சியை உருவாக்கி வளர்த்தவர்களில் முக்கியமானவராக திகழ்ந்தார்.

    1964-ம் ஆண்டு கம்யூனிஸ்டு கட்சி இரண்டாக பிரிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உருவான போது அதில் முக்கிய பங்காற்றியவர். 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த இவர் மதுரையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டம், ஆலய நுழைவு போராட்டங்களில் முக்கிய தலைவராக பங்கு பெற்றவர்.

    சங்கரய்யாவுக்கு, கடந்த 2021-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு தகைசால் தமிழர் விருது வழங்கி கவுரவித்தது. அந்த விருதுத்தொகை ரூ.10 லட்சத்தையும் கொரோனா நிதியாக தமிழக அரசுக்கே அவர் திருப்பி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரேமலதா பொதுசெயலாளர் ஆனார்

    விஜயகாந்த் தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தே.மு.தி.க. பொது செயலாளராக பிரேமலதா (டிச.14) தேர்வு செய்யப்பட்டார்.

    • டெஸ்ட் சாம்பியன்ஷிப் டிராபியை கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.
    • பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி ஒருநாள் உலகக் கோப்பை தொடரை வென்றது.

    இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் யாரும் எதிர்பார்க்காத அளவில் பேட் கம்மின்ஸ் அதிக தொகைக்கு ஏலம் போனார். ரூ.20.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணி ஏலம் எடுத்தது.

    இவர் இவ்வளவு தொகைக்கு தகுதி ஆனவரா என்பது குறித்து கருத்து சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இந்நிலையில் அவர் அந்த தொகைக்கு தகுதியானவர் என்பது போல அவரது பல சாதனைகளை இந்த ஆண்டு படைத்துள்ளார். ஆஸ்திரேலிய கேப்டனான பேட் கம்மின்ஸ் தலைமையில் தொடர்ச்சிய ஐசிசி கோப்பைகளை வென்று சாதித்துள்ளது.

    இவர் தலைமையிலான முதலில் டெஸ்ட் சாம்பியன் டிராபியை கைப்பற்றியது. இந்தியா - ஆஸ்திரேலிய மோதிய இறுதி ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 ரன்களும் இந்தியா 296 ரன்களும் எடுத்தது. அடுத்து 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 270 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் இந்தியாவுக்கு 444 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனை சேஸ் செய்த இந்திய அணி 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 

    இதன் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் டிராபியை ஆஸ்திரேலியா தட்டிச் சென்றது.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு ரூ.13.2 கோடியும், இந்திய அணிக்கு ரூ.6.5 கோடியும் பரிசு தொகை வழங்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து இங்கிலாந்தில் ஆஷஸ் தொடர் நடைபெற்றது. முதல் 2 டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவும் கடைசி 2 டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 3-வது டெஸ்ட் டிரா ஆனது. இதன்மூலம் தொடர் சமனில் முடிந்தது. இருந்தாலும் இங்கிலாந்து அணிக்கு மிகவும் நெருக்கடியை கொடுத்ததாக முன்னாள் வீரர்கள் பலரும் அவரை பாராட்டினர்.

    இதனையடுத்து நடந்த ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதலில் தடுமாறிய ஆஸ்திரேலிய அணி கடைசி வரை போராடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த இறுதிப் போட்டியிலும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியே வெற்றி பெற்று உலகக் கோப்பையை கைப்பற்றியது.

     

    இதமட்டுமல்லாமல் தற்போது நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது டெஸ்ட்டில் அவர் 10 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    டெஸ்டில் ஆஸ்திரேலிய கேப்டன் ஒருவர் 10 விக்கெட் எடுப்பது இது 2-வது முறையாகும். இதற்கு முன்பு 1989-ம் ஆண்டு சிட்னியில் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் ஆலன் பார்டர் 11 விக்கெட் எடுத்திருந்தார். கம்மின்ஸ் இதுவரை 252 விக்கெட் (57 டெஸ்ட்) கைப்பற்றி இருக்கிறார். டெஸ்டில் 250-க்கு மேல் விக்கெட் வீழ்த்திய 10-வது ஆஸ்திரேலிய பவுலர் ஆவார்.

    இந்த ஆட்டத்தில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில், '2023-ம்ஆண்டு எங்களுக்கு நம்ப முடியாத ஒரு ஆண்டாக அமைந்தது. நிறைய கிரிக்கெட்.... நிறைய வெற்றி (உலகக் கோப்பை உள்பட). திரும்பி பார்க்கும் போது, 2023 சிறப்பு வாய்ந்த ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும். என்றார்.

    • பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை ஆட்சியிலிருந்து அகற்றுவதே இந்தியா கூட்டணியின் நோக்கம்.
    • பா.ஜ.க.வுக்கு எதிராக அணிதிரண்ட 26 எதிர்க்கட்சிகள் ஜூலை 18 அன்று இந்தக் கூட்டணியை உருவாக்கின.

    பா.ஜ.க.வுக்கு எதிராக அணிதிரண்ட 26 எதிர்க்கட்சிகள் ஜூலை 18 அன்று இந்தியா கூட்டணியை உருவாக்கின. வரும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியின் அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து அகற்றுவதே இந்தக் கூட்டணியின் நோக்கம்.

    இந்த ஆண்டில் நடந்துமுடிந்த சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க. தொடர்ந்து வெற்றி பெற்று வரும் நிலையில், இந்தியா கூட்டணியின் எதிர்காலம் குறித்து அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    • டிசம்பர் 13ல் பாராளுமன்றத்தில் நடந்த பாதுகாப்பு மீறல் சம்பவம் பெரும் சர்ச்சையானது.
    • வண்ண புகை குண்டுகளை வீசி அவையில் இருந்த உறுப்பினர்களை கலக்கத்தில் ஆழ்த்தினர்.

    பாராளுமன்ற தாக்குதல் நினைவு தினமான டிசம்பர் 13-ம் தேதி பலத்த பாதுகாப்பையும் மீறி மக்களவையில் 2 இளைஞர்கள் வண்ண புகை குண்டுகளை வீசி அவையில் இருந்த உறுப்பினர்களை கலக்கத்தில் ஆழ்த்தினர். அதன்பிறகு சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.


    புதிய பாராளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து வரலாறு காணாத அளவிற்கு 140க்கும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    • அதிவேக இணைய சேவைக்கு ஸ்டார்லிங்க் செயற்கை கோள்கள் பயன்படும்
    • 70 நாடுகளில் 2.3 மில்லியன் மக்களை ஸ்டார்லிங்க் இணைய சேவை இணைக்கிறது

    கடந்த 2002ல் உலகின் முன்னணி கோடீசுவரர்களில் ஒருவரான அமெரிக்காவை சேர்ந்த எலான் மஸ்க், விண்வெளி ஆராய்ச்சிக்காக துவக்கிய நிறுவனம், ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX).

    ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன வல்லுனர்கள், விண்வெளிக்கு மனிதர்களையும், சரக்குகளையும் கொண்டு செல்ல ஃபால்கன்-9 (Falcon-9) எனும் செயற்கை கோள் ஏவும் வாகனத்தை உருவாக்கினர்.

    இந்த ஃபால்கன்-9 மூலம் இணைய சேவைகளை வழங்கும் ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு வருகின்றன.

    ஆன்லைன் கேமிங் (online gaming) உட்பட பல அதிவேக இணைய சேவை தேவைப்படும் பயன்பாடுகளை எளிதாக்க கூடிய ஸ்டார்லிங் செயற்கை கோள்கள், 70 நாடுகளில் 2.3 மில்லியன் மக்களை இணைக்க உள்ளது.


    இந்நிலையில், 2023 வருடத்திய கடைசி பயணமாக அமெரிக்காவின் புளோரிடா (Florida) மாநிலத்தில் இருந்து ஃபால்கனின் 96-வது பயணத்தில், 23 ஸ்டார்லிங்க் செயற்கை கோள்களை வெற்றிகரமாக செலுத்தியதாக அதன் அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் ஸ்பேஸ்எக்ஸ் பதிவிட்டது.

    இந்த சாதனைக்கு ஸ்பேஸ்எக்ஸின் நிறுவனர் எலான் மஸ்க், பாராட்டு தெரிவித்துள்ளார்.

    2023 ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு சாதனை ஆண்டாக அமைந்துள்ளது.

    • முதியோர் ஓய்வூதிய தொகையை மாதம் ரூ.1,000-த்தில் இருந்து, 1,200 ஆக உயர்த்தி அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்து அரசு அறிவித்தது.
    • நெல்லை- எழும்பூர் வந்தே பாரத் ரெயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    ஜனவரி

    ஜன.12: சேதுசமுத்திர திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம்.

    ஜன.13: அரசு பணியில் சேர தமிழ் கட்டாயம் என்று தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேறியது.

    ஜன.13: முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில் அவரது தம்பி ஆதம்பாஷா கைது.

    ஜன.17: பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டில் 5 பேர் பலி.

    ஜன.25: தமிழகத்தில் குட்கா, பான்மசாலாவுக்கு தடை விதித்த அரசின் உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    பிப்ரவரி

    பிப்.11: தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை ஜார்கண்ட் கவர்னராக நியமிக்கப்பட்டார். அவர் பிப்.18-ல் கவர்னராக பதவியேற்றார்.

    பிப்.13: உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில், பிரபாகரன் உயிருடன் இருப்பதாக அறிவித்ததால் பரபரப்பு நிலவியது.

    மார்ச்

    மார்ச்.3: விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 100 யூனிட் ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது.

    மார்ச்.5: கீழடியில் பிரமாண்ட அருங்காட்சியகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.

    மார்ச்.8: திருமணமான மகள் வாரிசு வேலை பெற தகுதியானவர் இல்லை என்ற உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    மார்ச்.17: தமிழக காவல்துறையின் பெண்கள் பிரிவு தொடங்கப்பட்டு பொன்விழா ஆண்டு (50 ஆண்டு) கொண்டாட்டம் முதல்- அமைச்சர் மு.கஸ்டாலின் தலைமையில் நடந்தது. பெண் போலீசாருக்கு விடுமுறை, விருது, விடுதி உள்ளிட்ட 9 அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

    மார்ச்.22: தமிழக பாம்புபிடி வீரர்கள் உள்பட 54 பேருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.

    மார்ச்.24: நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை மந்தைவெளியில் உள்ள சாலைக்கு டி.எம்.சவுந்தரராஜன் சாலை என பெயர் சூட்டி, பெயர் பலகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    ஏப்ரல்

    ஏப்.6: கீழடி உள்ளிட்ட 5 இடங்களில் அடுத்தகட்ட தொல்லியல் அகழாய்வு பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    ஏப்.14: தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தான் கூறியபடி ஏப்.14-ல் தி.மு.க.வினர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் 12 பேர் மீது முறைகேடு குற்றச்சாட்டு பட்டியலை வெளியிட்டார்.

    ஏப்.16: வீரப்பன் கூட்டாளி, மாதையன் பெங்களூரு ஆஸ்பத்திரியில் இறந்தார்.

    ஏப்.25: குட்கா, புகையிலை பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது செல்லும் என்றும், தடையை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடைவிதித்தும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    மே

    மே.18: தமிழக அரசின் சட்ட திருத்தம் செல்லும். ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு.

    ஜூன்

    ஜூன்.2: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அகற்ற 9 பேர் குழு அமைக்கப்பட்டது.

    ஜூன்.9: குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணியை தொடங்கியது இஸ்ரோ.

    ஜூன்.13: மாநில தகவல் ஆணையராக ஷகில் அக்தர் நியமனம் செய்யப்பட்டார்.

    ஜூன்.22: முன்னாள் தலைமை செயலாளா் சபாநாயகம் மரணம்.

    ஜூன்.23: சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார், யுவ புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டன. தமிழகத்தை சேர்ந்த உதயசங்கர், ராம் தங்கம் ஆகியோர் இந்த விருதுக்கு தேர்வு.

    ஜூன்.30: தமிழகத்தின் தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்றார். தமிழ்நாட்டின் சட்டம்- ஒழுங்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஓய்வு பெற்றார். புதிய டி.ஜி.பி.யாக சங்கர் ஜிவாலும், சென்னையின் புதிய கமிஷனராக சந்தீப் ராய் ரத்தோரும் நியமனம்.

    ஜூலை

    ஜூலை.6: தேனி நாடாளுமன்ற தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு. அரசு இடத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை.

    ஜூலை.7: கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி விஜயகுமார், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.

    ஜூலை.16: சாலை விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றினால் ரூ.10 ஆயிரம் வெகுமதி வழங்கப்படும் என்று அரசாணை வெளியீடு.

    ஜூலை.22: முதியோர் ஓய்வூதிய தொகையை மாதம் ரூ.1,000-த்தில் இருந்து, 1,200 ஆக உயர்த்தி அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்து அரசு அறிவித்தது.

    ஜூலை.26: பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக கவர்னரிடம் தி.மு.க. பைல்ஸ்-2 என்ற பெயரில் தி.மு.க. ஊழல் பட்டியலை கவர்னரிடம் வழங்கினார். இதில் இருந்து ரூ.5 ஆயிரத்து 600 கோடிக்கான ஊழல் பட்டியல் வெளியானது.

    ஜூலை.27: மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் மூங்கில் யானை கூட்ட சிலைகள் வைக்கப்பட்டன.

    ஜூலை.28: செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளை துரிதமாக செய்த தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 2023-ம் ஆண்டின் சிறந்த மனிதர் விருது ஆசிய செஸ் கூட்டமைப்பால் அறிவிக்கப்பட்டது. அந்த விருதை செஸ் கூட்டமைப்பு நிர்வாகிகள் நேரில் வந்து மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்தனர்.

    ஆகஸ்டு

    ஆக.5: 3 நாள் பயணமாக தமிழகம் வந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு. அவர் முதல் நாளில் முதுமலை யானைகள் முகாமை பார்வையிட்டார். 2-ம் நாள் பயணத்தில் சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். 3-ம் நாளில் சென்னை கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கத்திற்கு பாரதியார் பெயர்சூட்டி கல்வெட்டை திறந்துவைத்தார்.

    ஆக.15: சுதந்திர தின விழாவையொட்டி எவரெஸ்டில் ஏறிய தமிழக பெண்ணான முத்தமிழ் செல்விக்கு கல்பனா சாவ்லா விருது, கீ.வீரமணிக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது.

    ஆக.16: டி.எம்.சவுந்தரராஜன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரையில் ரூ.50 லட்சத்தில் நிர்மாணிக்கப்பட்ட அவரது முழு உருவ வெண்கல சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

    ஆக.22: டி.என்.பி.எஸ்.சி. தலைவராக சைலேந்திரபாபுவை நியமிக்க கவர்னர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்து கோப்புகளை திருப்பி அனுப்பினார்.

    செப்டம்பர்

    செப்.6: முறைகேடு வழக்கில் விடுதலையான அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    செப் 23: உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    செப் 24: நெல்லை- எழும்பூர் வந்தே பாரத் ரெயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    அக்டோபர்

    அக்.5: வள்ளலார் 200-வது பிறந்தநாளையொட்டி கவர்னர் மாளிகையில் முழு உருவ சிலை அமைக்கப்பட்டது. அதை கவர்னர் திறந்துவைத்தார்.

    அக்.9: அரியலூர் அருகே விரகாலூர் கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 11 பேர் பலி.

    அக்.11: மோட்டார் சைக்கிள்கள், கார்கள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக் கும் வரியை உயர்த்தி தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேறியது.

    அக்.14: தி.மு.க. சார்பில் சென்னையில் தி.மு.க. மகளிர் உரிமை மாநாடு நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்துகொண்டு பேசினார்.

    அக்.14: 40 ஆண்டுகளுக்கு பிறகு நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவை மீண்டும் தொடங்கியது. 50 பயணிகளுடன் கப்பல் புறப்பட்டு சென்றது. பிரதமர் மோடி இதை காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

    அக்.15: கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் அப்துல்கலாமிற்கு முழு உருவ சிலை நிறுவப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    நவம்பர்

    நவ.3: அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் வருமான வரித்துறை சோதனை தொடங்கியது. 3-வதுநாள் சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கின.

    நவ. 7: அ.தி.மு.க. பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு இடைக்கால தடைவிதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவு.

    நவ 9: ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடையில்லை என்று ஐகோர்ட்டு தீர்ப்பு.

    நவ.16: ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு அறிக்கையை பெங்களூரு கோர்ட்டில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் சமர்ப்பித்தனர். 1380 ஏக்கர் நிலம் இருந்ததாக கூறப்பட்டிருந்தது.

    நவ.19: தமிழகம் முழுவதும் 55 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடந்தது.

    நவ.20: பாடகி பி.சுசீலாவுக்கு கவின் கலை பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டத்தை முதல்-அமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

    நவ.22: திருச்சி அருகே சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டி தப்ப முயன்ற, ரவுடி கொம்பன் ஜெகன் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    நவ.23: உங்களைத் தேடி உங்கள் ஊரில் புதிய திட்டம் அறிமுகம். ஒவ்வொரு மாதமும் கிராமங்களில் கலெக்டர்கள் தங்கி மக்கள் குறை கேட்க வேண்டும்.

    நவ.23: தமிழக முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி (வயது 96) மரணம்.

    டிசம்பர்

    டிச.1: கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அயோத்தி தாசருக்கு மணிமண்டபம் திறக்கப்பட்டது.

    டிச.5: அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு.

    டிச.18: 30 நாட்களில் மனுக்களுக்கு தீர்வு காணும் 'மக்களுடன் முதல்வர்' புதிய திட்டத்தை கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    • 2023ல் ஆங்காங்கு காடுகள் தீப்பற்றி எரிவதும், அதிகளவு வறட்சியும் அதிகரித்தது
    • புளோரிடா மாநிலத்தில் பவழ பாறைகள் வெள்ளை நிறமாக மாறின

    முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 2023ல் உலகளாவிய வெப்பநிலையில் கடும் மாற்றம் காணப்பட்டது.

    வல்லுனர்கள் நேரடியாக பூமியின் வெப்பத்தை கணக்கிட தொடங்கியதில் இருந்து 174 வருடங்களில் இத்தகைய வெப்பம் இருந்ததில்லை என்றும், நேரடியாக கணக்கிடாமல் அறிவியல்பூர்வமாக எடுக்கப்பட்ட சில கணக்கீடுகளின்படி 1,25,000 வருடங்களில் இந்த அளவு அதிக வெப்பம் ஏற்பட்டதில்லை எனவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

    ஆங்காங்கு காடுகள் தீப்பற்றி எரிவதும், அதிகளவு வறட்சியும் இவ்வருடம் அதிகரித்தது.

    அமெரிக்காவில் அரிசோனா மாநிலத்தில் (Arizona) பல வாரங்களுக்கு அதிக வெப்பம் மக்களை வாட்டியது. வெப்பம், தொடர்ந்து 110 டிகிரிக்கு மேல் 31 நாட்களுக்கு நிலவியது.

    புளோரிடா (Florida) மாநிலத்தில் பவழ பாறைகள் வெள்ளை நிறமாக மாறி அதிக வெப்ப நீரினால் கரை ஒதுங்கின.

    சீனா, தெற்கு ஐரோப்பா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளிலும் வெப்பத்தின் தாக்கம் உணரப்பட்டது.

    படிம எரிபொருள் (fossil fuel) பயன்படுத்துவதால் வெளியாகும் புகையினால் புவி வெப்பமயமாதல் அதிகரிப்பதை இதற்கு காரணமாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். விரைவில் இதற்கு தீர்வு காணவில்லை என்றால் எதிர்கால தலைமுறை இப்பூமியில் வாழ்வது கடினமாகி விடும் என புவியியல் வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

    • 2008 பிறகு ஏற்பட்ட பெரும் வங்கி நெருக்கடியாக இந்த வீழ்ச்சி அமைந்தது
    • 3 வங்கிகளின் சொத்து மதிப்பு $500 பில்லியன் இருந்தும் நஷ்டமைடந்தது

    2023 அமெரிக்க பொருளாதாரத்திற்கு சவாலான வருடமாக இருந்தது.

    மார்ச் மாதம் சிலிக்கான் வேலி வங்கி (Silicon Valley Bank) மற்றும் சிக்னேச்சர் வங்கி (Signature Bank) ஆகியவையும், மே மாதம் ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியும் (First Republic Bank) திவாலானது.

    2008 வருடம் நிகழ்ந்த அமெரிக்க வங்கிகளின் நெருக்கடிக்கு பிறகு நடைபெற்ற பெரும் வங்கி சிக்கலாக இவை கருதப்பட்டது.


    3 வங்கிகளிலும் சுமார் $500 பில்லியன் சொத்துக்கள் இருந்தும் அவை நஷ்டமடைந்தன.

    பல்வேறு காரணத்திற்காக இவை நஷ்டமடைந்திருந்தாலும் அமெரிக்க வங்கிகளில் முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறைய இது ஒரு காரணமானது. இந்த வங்கிகளில் முதலீடு செய்திருந்தவர்களுக்கு அமெரிக்கா பணம் திரும்ப கிடைக்க வழிவகை செய்வதாக உறுதியளித்தாலும் முதலீட்டாளர்களின் அச்சம் விலகவில்லை.

    அனைத்து முதலீட்டாளர்களும் ஒரே நேரத்தில் தங்கள் முதலீடுகளை திரும்ப பெற நீண்ட வரிசையில் நின்ற காட்சிகள் வெளியாகி அமெரிக்க நிதி நிலைமை குறித்து சந்தேகங்களை எழுப்பியது.

    இந்த 3 வங்கிகள் மட்டுமின்றி மேலும் பல அமெரிக்க வங்கிகள், மத்திய வங்கியான ஃபெடரல் வங்கியின் தொடர் வட்டி விகித உயர்வினால் வர்த்தகம் செய்ய முடியாமல் தவிக்கின்றன.

    • திமுக ஆட்சி அமைத்து 1967-ல் இருந்து பதவியில் இருக்கும் ஒரு அமைச்சர் தண்டனை பெற்றது இதுவே முதல்முறை
    • 3 ஆண்டு சிறைத்தண்டனையுடன் 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது

    மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் முக்கிய இடம் பிடித்திருந்தார் பொன்முடி. முக்கியமான உயர்க்கல்வித்துறை இலாக்கா பொன்முடிக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அரசியல் கட்சி தலைவர்கள் இருந்தால் அவர்கள் மீது வழக்குகள் போடப்படும். அதில் வியப்பு ஏதும் இல்லை. ஆனால், சில வழக்கு அவர்கள் அரசியல் வாழ்க்கையை அஸ்தமிக்க செய்துவிடும்.

    அப்படித்தான் பொன்முடிக்கு எதிராக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு அமைந்துள்ளது.

    2006 முதல் 2011 வரை தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்றது. அப்போது பொன்முடி அமைச்சராக இருந்தார். அந்த காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கை விழுப்புரம் நீதிமன்றம் விசாரித்தது. விசாரணை முடிவில் பொன்முடியை விடுதலை செய்தது. இதனை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

    மேல்முறையீடு தொடர்பான விசாரணை முடிவடைந்து வழக்கு அப்படியே கிடப்பில் போடப்பட்டது. டிசம்பர் 19-ந்தேதி பொன்முடி குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்து, தண்டனை விவரம் 21-ந்தேதி வழங்கப்படும் எனத் தெரிவித்தது. அதன்படி 21-ந்தேதி பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    இதனால் பொன்முடி தனது எம்.எல்.ஏ. பதவியை இழந்தார். அமைச்சர் பதவியையும் இழந்தார்.

    தமிழகத்தில் அமைச்சராக இருந்தபோது தண்டனை பெற்று பதவியை இழந்த 3-வது அமைச்சர் பொன்முடி ஆவார். முதன்முறையாக திமுக அமைச்சர் ஒருவர் பதவியை இழந்த நபரும் இவர்தான்.

    • பிரிக்ஸ் மாநாட்டில் சீன யுவானை செலாவணிக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டது
    • 2023ல் பல நாடுகள் தங்களுக்கிடையே மாற்று கரன்சியை பயன்படுத்த உடன்பட்டன

    உலக நாடுகளில் வல்லரசாக அமெரிக்கா திகழ முக்கிய காரணம் அதன் ராணுவ பலமும், சர்வதேச வர்த்தகங்களில் அமெரிக்க கரன்சியான டாலர் (Dollar), பெருமளவில் பயன்படுத்தப்படுவதும்தான்.

    அமெரிக்காவின் டாலர் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகளை பல நாடுகள் சில ஆண்டுகளாக எடுக்க துவங்கின.

    கொரோனாவிற்கு முந்தைய காலகட்டத்தில் சீனா அதன் கரன்சியை வர்த்தகத்திற்கு பயன்படுத்த பிரிக்ஸ் (BRICS) மாநாடுகளில் முன்மொழிந்தது. ஆனால், கோவிட் பெருந்தொற்றால் இந்த முடிவு தள்ளி போடப்பட்டது.


    2021ல் துவங்கிய, டாலருக்கு மாற்றாக ஒரு கரன்சியை தேடும் டீ-டாலரைசேஷன் (de-Dollarization) எனப்படும் இந்த முயற்சி, 2023ல் வேகமெடுக்க தொடங்கியது.

    ரஷியா மற்றும் அர்ஜெண்டினா சீனாவுடனான வர்த்தகத்திற்கு சீன யுவான் (Yuan) பயன்படுத்த தொடங்கின.

    கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் சீனாவும், இந்தியாவும் தங்கள் நாட்டு கரன்சிகளை மாற்றாக கொண்டு வர முயற்சி எடுத்தன.

    எண்ணெய் சாராத வர்த்தகத்திலும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இலங்கையும், செலாவணிக்கு "இந்திய ரூபாய்" பயன்படுத்த உடன்பட்டுள்ளன.

    லத்தீன் அமெரிக்கா, தென் கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் பல நாடுகள் டாலருக்கு மாற்று கரன்சிக்கான தேடுதலை துவங்கியுள்ளன.

    ஒரு சில நாடுகள் டிஜிட்டல் கரன்சி மற்றும் கிரிப்டோகரன்சிகளில் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள தயாராகி விட்டன.

    எதிர்காலத்தில் பல நாடுகள் டாலருக்கு மாற்றான வழிமுறையில் தீவிரமாக வணிகத்தில் ஈடுபடும் போது டாலருக்கான தேவை குறையும் என்றும் இதன் காரணமாக அமெரிக்காவிற்கு உள்நாட்டிலும் அயல்நாடுகளிலும் சிக்கல்கள் அதிகமாகும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    • 80 வருடங்களில் துருக்கியை தாக்கிய கடுமையான நிலநடுக்கம் என ஐ.நா. தெரிவித்தது
    • "ஆபரேஷன் தோஸ்த்" எனும் பெயரில் துருக்கி மற்றும் சிரியாவிற்கு இந்தியா உதவியது

    தென்கிழக்கு ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியாவிலும் எல்லைகளை கொண்ட நாடு, துருக்கி.

    துருக்கியில் பிப்ரவரி 6 அன்று, ரிக்டர் அளவுகோலில் 7.8 என பசார்சிக் (Pazarcik) மாவட்டத்தில் ஒரு நில நடுக்கம் தாக்கியது. அந்நாட்டில் 80 வருடங்களில் நிகழ்ந்த நில நடுக்கங்களில் இதுவே அதிகமானது என ஐ.நா. சபை தெரிவித்தது.

    மீண்டும் அதே தினம், எல்பிஸ்டான் (Elbistan) மாவட்டத்தில் 7.6 அளவில் மற்றுமொரு நில அதிர்வு தாக்கியது. இந்த நிலநடுக்கம் கடுமையாக இருந்ததால், இதன் தாக்கம் அண்டையில் சிரியா மற்றும் லெபனான் நாடுகளிலும் உணரப்பட்டது.

    மூன்றாவது முறையாக கோக்ஸன் (Goksun) மாவட்டத்தில் 6.0 எனும் அளவில் தாக்கியது.

    இந்த தொடர் நில நடுக்கங்களால் 19 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

    இந்திய அரசு துருக்கிக்கு வேண்டிய உதவிகளை செய்வதாக உறுதியளித்தது. நிவாரண பொருட்கள், உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் 7 கோடி மதிப்புள்ள உபகரணங்கள் உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்களை "ஆபரேஷன் தோஸ்த்" எனும் நடவடிக்கையில் துருக்கிக்கும் சிரியாவிற்கும் இந்தியா அனுப்பி வைத்தது.

    ×