search icon
என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • ரெஜிமோன் தனது நண்பர்களை அழைத்துக்கொண்டு நேற்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.
    • தனக்கு தங்க நகைகளை அணிந்து கொள்வதில் அலாதி பிரியம் அதனாலேயே எப்போதும் தங்க நகைகளை அணிந்தவாறுதான் இருப்பேன் என்று கூறினார்.

    விழுப்புரம்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் புதுச்சேரி நோக்கி காரில் வந்த கர்நாடக மாநிலம், சிவமொக்காவை சேர்ந்த தொழில் அதிபர் ரெஜிமோன்(வயது 53) என்பவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ.68 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இந்த நிலையில் தன்னிடம் இருந்து பறிமுதல் செய்த ரூ.68 ஆயிரத்தை பெறுவதற்காக ஆவணங்களுடன் ரெஜிமோன் தனது நண்பர்களை அழைத்துக் கொண்டு நேற்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் பறிமுதல் செய்த பணத்துக்குரிய ஆவணங்கள் மற்றும் இதர விவரங்களை தேர்தல் பிரிவு அலுவலர்களிடம் கொடுத்தார். அதை வாங்கி சரிபார்த்த அதிகாரிகள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.68 ஆயிரத்தை திருப்பி கொடுத்தனர்.

    பணத்தை பெறுவதற்காக வந்த ரெஜின்மோன் தனது இரு கைகளிலும் தங்க கை சங்கிலி, காப்பு, விரல்களில் மோதிரம், கழுத்தில் தங்கச்சங்கிலிகள் என சுமார் 2¼ கிலோ எடையுள்ள தங்க நகைகளை அணிந்து வந்ததால் அவரை கலெக்டர் அலுவலக ஊழியர்கள், தேர்தல் பிரிவு அலுவலர்கள் மட்டுமின்றி, பொதுமக்கள் அனைவரும் வியப்புடன் பார்த்தனர்.

    தான் நகை அணிந்து வந்தது குறித்து ரெஜிமோன் கூறும்போது, கர்நாடக மாநிலத்தின் சிவமொக்கா பகுதியை சேர்ந்த தனக்கு, சொந்தமாக டீ எஸ்டேட் உள்ளதாகவும், தனியார் நிறுவனம் ஒன்றில் உயர் அலுவலராக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் தனக்கு தங்க நகைகளை அணிந்து கொள்வதில் அலாதி பிரியம் அதனாலேயே எப்போதும் தங்க நகைகளை அணிந்தவாறுதான் இருப்பேன் என்று கூறினார். பின்னர் அவர் தனது நண்பர்களுடன் காரில் கர்நாடக மாநிலத்துக்கு புறப்பட்டு சென்றார். 

    • வாக்குச்சாவடி மையத்தில் கிராம நிர்வாக அலுவலர் சாந்தி தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தார்.
    • தி.மு.க. கவுன்சிலர் ராஜீவ்காந்தி இன்று கைது செய்யப்பட்டார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள முகையூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ் காந்தி (வயது 40). இவர் தி.மு.க. மாவட்ட கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். அதே கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக சாந்தி பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலையொட்டி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆ.கூடலூர் மற்றும் ஆயந்தூர் ஆகிய இரு கிராமங்களுக்கு ஆயந்தூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது.

    இந்த வாக்குச்சாவடி மையத்தில் கிராம நிர்வாக அலுவலர் சாந்தி தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தார். தேர்தல் முடிந்த பிறகு வாக்குச்சாவடி மையத்தில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு இரவு உணவை அருகில் உள்ள உணவகத்தில் இருந்து வி.ஏ.ஓ. சாந்தி வாங்கி வந்தார்.

    தி.மு.க. கவுன்சிலர் ராஜீவ் காந்தியும் அதே கடையில் உணவு வாங்கினார். அப்போது ராஜீவ் காந்திக்கு கட்டி வைத்த உணவை கிராம நிர்வாக அலுவலர் சாந்தி எடுத்துக் கொண்டு வந்தாக கூறி, வாக்கு சாவடி மையத்திற்கு சென்ற தி.மு.க. கவுன்சிலர் ராஜீவ்காந்தி, அங்கிருந்த கிராம நிர்வாக அலுவலர் சாந்தியினை சரமாரியாக தாக்கினார். இதைக்கண்ட சக ஊழியர்கள், தி.மு.க. கவுன்சிலரை தடுத்து நிறுத்தி அவரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக காணை போலீஸ் நிலையத்தில் தி.மு.க. கவுன்சிலர் ராஜீவ் காந்தி, தன்னை அவதூறாக பேசி தாக்கி, மானபங்கம் செய்ததாக கிராம நிர்வாக அலுவலர் சாந்தி புகார் கொடுத்தார். அதன்பேரில் காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜீவ்காந்தியை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் தி.மு.க. கவுன்சிலர் ராஜீவ்காந்தி இன்று கைது செய்யப்பட்டார். ராஜீவ்காந்தியை கைது செய்யக் கோரி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் விழுப்புரம் மாவட்ட கலெக்டரிடம் நேற்று புகாரளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • விழுப்புரத்தில் பெண் பயணிகளை ஏற்றிச் செல்லவில்லை என்ற புகார் எழுந்தது
    • இந்த புகாரின் அடிப்படையில் ஒப்பந்த ஊழியரான நடத்துநர் தேவராசு பணிநீக்கம்

    ஏப்ரல் 22 அன்று விக்கிரவாண்டியிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசு பேருந்து, அண்ணாமலை ஹோட்டல் பேருந்து நிறுத்தத்தில் பெண்பயணிகள் கையைக் காட்டியும் நிறுத்தாமல் சென்றதாக ஊடகங்களில் புகார் எழுந்தது.

    இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்திய போக்குவரத்து அதிகாரிகள், பேருந்து ஓட்டுனர் ஆறுமுகத்தை சஸ்பெண்ட் செய்துள்ளனர். ஒப்பந்த ஊழியரான நடத்துநர் தேவராசுவை பணிநீக்கம் செய்துள்ளனர்.

     

    • கடந்த 2005-ம் ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் நக்கீரனும், அதே கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவரும் போட்டியிட்டனர்.
    • தேர்தலில் தங்களுக்கு எதிராக செயல்பட்டதால் குலசேகரன் தரப்பினரை கொலை செய்ய நக்கீரன் தரப்பினர் திட்டம் தீட்டினர்.

    விழுப்புரம்:

    தமிழகத்தையே உலுக்கியுள்ள இந்த பரபரப்பான தீர்ப்பு பற்றிய விவரம் வருமாறு:-

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரை அடுத்த கண்ணாரம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் குலசேகரன் (வயது 40). இவர் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார்.

    இவருடைய குடும்பத்திற்கும், அதே கிராமத்தை சேர்ந்தவரும், தி.மு.க. கிளைச்செயலாளராக இருந்தவருமான நக்கீரன் (48) குடும்பத்திற்கும் அரசு புறம்போக்கு இடத்தை சொந்தம் கொண்டாடுவது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.

    மேலும் கடந்த 2005-ம் ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் நக்கீரனும், அதே கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவரும் போட்டியிட்டனர். இத்தேர்தலில் சேகருக்கு ஆதரவாக குலசேகரன் தரப்பினர் செயல்பட்டனர். இதன் காரணமாக ஏற்பட்ட முன்விரோதத்திலும் இரு தரப்பினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் குலசேகரன் தரப்பினர் மீது நக்கீரன் தரப்பினருக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது.

    அரசு புறம்போக்கு நிலத்தை சொந்தம் கொண்டாடுவதற்கு தடையாக இருப்பதோடு, தேர்தலிலும் தங்களுக்கு எதிராக செயல்பட்டதால் குலசேகரன் தரப்பினரை கொலை செய்ய நக்கீரன் தரப்பினர் திட்டம் தீட்டினர்.

    கடந்த 4.11.2005 அன்று காலை 6 மணியளவில் அதே கிராமத்தில் உள்ள ஒரு டீக்கடையில் குலசேகரன் டீ குடித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வீச்சரிவாள், கொடுவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் திபுதிபுவென வந்த நக்கீரன் தரப்பினர், குலசேகரனை சரமாரியாக வெட்டினர்.

    இதை தடுக்க வந்த குலசேகரனின் நண்பர் காத்தவராயன் (50) என்பவரையும் அவர்கள் சரமாரியாக வெட்டினர். இதில் குலசேகரன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பலத்த காயம் அடைந்த காத்தவராயன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே நக்கீரன் தரப்பினர் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

    தகவல் அறிந்ததும் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த காத்தவராயனை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரும் இறந்தார்.

    இந்த பயங்கர இரட்டைக்கொலை குறித்து குலசேகரனின் அண்ணன் திருநாவுக்கரசு, திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் நக்கீரன், கோவிந்தராஜ் (70), தமிழ்மணி (27), அ.தி.மு.க. முன்னாள் கிளை பிரதிநிதி சிவபூஷணம் (64), ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் புகழேந்தி (77), மணவாளன் (74), ராஜேந்திரன் (64), குமரவேல் (52), மார்க்கண்டேயன் (64), சுதாகர் (45), பழனிவேல் (38), முரளி (43), தமிழ்செல்வன் (35), அருள் (24), அ.தி.மு.க. முன்னாள் கிளை மேலவை பிரதிநிதி கனகராஜ் (74), மோகன் (46), சிவநாதன் (44), பிரபு (44), காளிபசுபதி (72), அர்ஜூனன் (76), மணி (76), பாரி (49), பார்த்திபன் (44), சபரிநாதன் (49), கண்ணன் (64), மாதவன் (49) ஆகிய 26 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அனைவரையும் கைது செய்தனர்.

    பின்னர் இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விழுப்புரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இவ்வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே குற்றம் சாட்டப்பட்டவர்களில் தமிழ்மணி, பழனிவேல், தமிழ்செல்வன், அருள், அர்ஜூனன், கண்ணன் ஆகிய 6 பேரும் உடல்நலக்குறைவால் இறந்தனர்.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று மாலை தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ராஜசிம்மவர்மன், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் உயிரிழந்த 6 பேரை தவிர மற்ற அனைவருமே குற்றவாளிகள் என்று அறிவித்தார்.

    மேலும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நக்கீரன், கோவிந்தராஜ், சிவபூஷணம், புகழேந்தி, மணவாளன், ராஜேந்திரன், குமரவேல், மார்க்கண்டேயன், சுதாகர், முரளி, கனகராஜ், மோகன், சிவநாதன், பிரபு, காளிபசுபதி, மணி, பாரி, பார்த்திபன், சபரிநாதன், மாதவன் ஆகிய 20 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், கொலை செய்யப்பட்ட குலசேகரன், காத்தவராயன் ஆகிய இருவரின் குடும்பத்திற்கும் தலா ரூ.5 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி ராஜசிம்மவர்மன் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

    இதையடுத்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 20 பேரும், விழுப்புரம் கோர்ட்டில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் போலீஸ் வேன்களில் ஏற்றப்பட்டு, கடலூரில் உள்ள மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டு அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுப்புராயலு ஆஜரானார்.

    இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்களில் கோவிந்தராஜ் தற்போது வக்கீலாகவும், மோகன் கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராகவும், சபரிநாதன் பொதுப்பணித்துறையில் தற்காலிக தொழில்நுட்ப உதவியாளராகவும் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஏரிக்கரை பகுதியில் இருந்து விஷ தேனீக்கள் திடீரென நீதிமன்ற வளாகத்திற்குள் வந்தது.
    • 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு முதல் உதவி சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் அமைந்துள்ளது.

    நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள ஏரிக்கரை பகுதியில் இருந்து விஷ தேனீக்கள் திடீரென நீதிமன்ற வளாகத்திற்குள் வந்தது. அங்கிருந்த வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள், போலீசார் மற்றும் பொதுமக்களை விரட்டி விரட்டி கொட்ட தொடங்கியது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். இதில் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு முதல் உதவி சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தேனீ கூட்டை மர்ம நபர்கள் கல்லால் அடித்ததால், அங்கிருந்த தேனீக்கள் பறந்து நீதிமன்றத்திற்குள் வந்து அனைவரையும் கொட்டியது தெரிய வந்தது.

    • நேற்று வழக்கம்போல் மேய்ச்சலுக்கு மாடுகள் சென்றன.
    • மாட்டின் உரிமையாளர் சுதாகர், மரக்காணம் போலீஸ் நிலையம் மற்றும் விழுப்புரம் விலங்கு நல வாரியத்தில் புகார் கொடுத்துள்ளார்.

    மரக்காணம்:

    மரக்காணம் அருகே காக்காபாளையம் கிராமம் மேட்டு தெரு பகுதியில் வசிப்பவர் சுதாகர் (வயது 45). விவசாயி. இவர் தனது வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று வழக்கம்போல் மேய்ச்சலுக்கு மாடுகள் சென்றன. இதில் இரவு வெகுநேரமாகியும் ஒரு மாடு வீடு திரும்பவில்லை.

    இதனால் சுதாகர் அவரது மாட்டை தேடிச் சென்றுள்ளார். அப்போது அவரது பசு மாடு குடல் சரிந்த நிலையில் இருந்தது. மர்ம நபர் யாரோ மாட்டின் வயிற்றில் குத்தியதால் குடல் வெளியில் வந்திருக்கும் என்று சந்தேகம் அடைந்த சுதாகர், மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி மாடு உயிரிழந்தது.

    இதுகுறித்து மாட்டின் உரிமையாளர் சுதாகர், மரக்காணம் போலீஸ் நிலையம் மற்றும் விழுப்புரம் விலங்கு நல வாரியத்தில் புகார் கொடுத்துள்ளார். இச்சம்பவம் மாடு வளர்ப்போரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • திருமண பத்திரிகையில் திருமணம் நடக்கும் மண்டபத்திலேயே ரத்த தான முகாம் நடைபெறும் என்றும் அச்சிடப்பட்டிருந்தது.
    • ரத்த தானம் வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    செஞ்சி:

    திருமணம் நடந்த இடத்திலேயே ரத்த தான முகாம் நடத்தி மணமக்களும் ரத்த தானம் வழங்கிய வித்தியாசமான நிகழ்ச்சி செஞ்சி அருகே நடைபெற்றது.

    செஞ்சியை அடுத்த நரசிங்கராயன் பேட்டையை சேர்ந்த பொறியாளர் ஸ்ரீ கேசவ பிரகாஷ். இவருக்கும் ராணிப்பேட்டை மாவட்டம் மாந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த யோகா மருத்துவர் சோனியா ஆகியோருக்கு நேற்று காலை செஞ்சியை அடுத்த அப்பம்பட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

    திருமண பத்திரிகையில் திருமணம் நடக்கும் மண்டபத்திலேயே ரத்த தான முகாம் நடைபெறும் என்றும் அச்சிடப்பட்டிருந்தது. அதன்படி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் மனிதம் காப்போம் தன்னார்வலர்கள் குழு இணைந்து நடத்திய ரத்த தான முகாம் திருமண மண்டபத்தின் ஒரு பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    அதன்படி நேற்று காலை திருமணம் முடிந்தவுடன் 8 மணி அளவில் மணமக்கள் ஸ்ரீ கேசவ பிரகாஷ்-சோனியா ஆகியோர் ரத்த தானம் வழங்கினார்கள். இதனைப் பார்த்த திருமணத்திற்கு வந்திருந்த அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 15-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினார்கள்.

    ரத்த தானம் வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ரத்த தானத்தை ஊக்குவிக்கும் வகையில் இதுவரை எங்கும் நடைபெறாத வகையில் திருமணம் மண்டபத்திலேயே முகாம் நடத்தி மணமக்கள் உள்பட பலர் ரத்த தானம் வழங்கிய நிகழ்ச்சி இப்பகுதி மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. 

    • 3 பேரும் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் புதுச்சேரி-திண்டிவனம் 4 வழிச்சாலை உள்ளது. இந்த சாலையில் திண்டிவனத்தில் இருந்து தைலாபுரத்திற்கு ஒரு காரில் 3 பேர் இன்று காலை வந்து கொண்டிருந்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 3 பேர் மற்றொரு காரில் சென்று கொண்டிருந்தனர்.

    இவ்விரு கார்களும் மொளச்சூர் பகுதியில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் தைலாபுரம் செல்லும் காரில் வந்த ஒருவரும், தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த காரில் வந்த ஒருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படுகாயமடைந்த 4 பேரையும், அவ்வழியே சென்றவர்கள் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் தெலுங்கானாவை சேர்ந்த பெண் சிகிச்சை பலனின்றி பலியானார். தொடர்ந்து மீதமிருந்த 3 பேரும் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், 4 வழிச்சாலையில் நேருக்கு நேர் மோதி விபத்து நடந்தது எப்படி? இறந்தவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியாருக்கு சொந்தமான மருத்துவ கழிவு அரவை தொழிற்சாலை உள்ளது.
    • மக்கள் சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் அருகே வேடம்பட்டில் மருத்துவ கழிவு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறிய விஷக்காற்றால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 20 பெண்கள் உட்பட 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விழுப்புரம் அடுத்த வேடம்பட்டில் தனியாருக்கு சொந்தமான மருத்துவ கழிவு அரவை தொழிற்சாலை உள்ளது. இன்று அதிகாலை 1 மணி அளவில் இப்பகுதியில் இருந்து வெளியேறிய நச்சு காற்றால் அருகில் இருந்த வேடம்பட்டு காலனி பொதுமக்கள் இக்காற்றை சுவாசிக்கும் போது மூச்சு திணறல் ஏற்பட்டு அதிகாலை 1 மணி முதல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் வேடம்பட்டை சேர்ந்த அங்காளவள்ளி, ஜெயலட்சுமி, சவுமியா, மாரியம்மாள், சுசிலா, ரேணுகா, மதன், கடலூர் சுரேஷ், உள்ளிட்ட 17 பேரும், காணை அரசு மருத்துவமனையில் 13 பேர்களும் என மொத்தம் 20 பெண்கள் உள்பட 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதனால் வேடம்பட்டு கிராமத்தில் பதட்டம் அதிகரித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட காவல்துறை சார்பில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே இப்பிரச்சனை தொடர்பாக வேடம்பட்டு காலனி மக்கள் சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையான வாக்கினை செலுத்தி வருகின்றனர்.
    • வாக்கு சாவடியில் அவரது மகள் சமியுத்தா, சங்கமித்ரா, சஞ்சித்ரா ஆகியோர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

    திண்டிவனம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் விறுவிறுப்பாக தொடங்கி காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையான வாக்கினை செலுத்தி வருகின்றனர்.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், அவரது குடும்பத்தினருடன் தனது சொந்த ஊரான திண்டிவனம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள மரகதாம்பிகை பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார். இதே வாக்கு சாவடியில் அவரது மகள் சமியுத்தா, சங்கமித்ரா, சஞ்சித்ரா ஆகியோர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமர் ஆக வேண்டும். அதுவே இந்திய நாட்டுக்கு நன்மை பயக்கும்.
    • அனைவரும் சமத்துவம், சகோதரத்துவத்துடன் வாழ தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும் .

    திண்டிவனம்:

    திண்டிவனம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீமரகதாம்பிகை அரசு உதவி பெறும் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று காலை 8 மணிக்கு தனது வாக்கைப்பதிவு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அதனால் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும். நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமர் ஆக வேண்டும். அதுவே இந்திய நாட்டுக்கு நன்மை பயக்கும். அனைவரும் சமத்துவம், சகோதரத்துவத்துடன் வாழ தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும் .

    பேட்டியின் போது மயிலம் தொகுதி எம்.எல்.ஏ. சிவக்குமார், பா.ம.க. விழுப்புரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் ஜெயராஜ், முன்னாள் நகர செயலர் சண்முகம், வக்கீல் பாலாஜி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • நாங்கள் எல்லோரும் கடமையை கண்ணாக செய்து கொண்டுள்ளோம்.
    • எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    திண்டிவனம்:

    திண்டிவனம், ரொட்டிக்கார தெருவில் உள்ள ஸ்ரீ மரகதாம்பிகை நிதி உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தர்மபுரி தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி குடும்பத்துடன் வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மிக முக்கியமான நாள் இது. என் ஓட்டுரிமையை திண்டிவனத்தில் வாக்களித்த பின் தர்மபுரி தொகுதிக்கு செல்கிறேன். எங்கள் கூட்டணி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தேர்தல் நியாயமான முறையில் நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவரிடம் உங்கள் உடன்பிறந்த சகோதரர் வாழ்த்து தெரிவித்தாரா? என்ற கேள்விக்கு எல்லா தொகுதிகளிலும் என் உடன்பிறந்த சகோதரர்கள்தான் போட்டியிடுகிறார்கள். நாங்கள் எல்லோரும் கடமையை கண்ணாக செய்து கொண்டுள்ளோம். மகளிர் என் மேல் அன்புடன் உள்ளனர். எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    உள்ளூர் வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளாரே என்ற கேள்விக்கு அது முன்னாள் முதல்வரின் கருத்து. நீங்கள் நேரடி அரசியலுக்கு வருவீர்கள் என்று எதிர்பார்த்தீர்களா என்ற கேள்விக்கு நான் ஏற்கனவே அரசியலில்தான் உள்ளேன். தேர்தல் களத்தில் பிரசாரமெல்லாம் செய்துள்ளேன். தேர்தல் எனக்கு புதிதல்ல என்றார்.

    அப்போது சிவகுமார் எம்எல்.ஏ., மாவட்ட செயலாளர் ஜெயராஜ், முன்னாள் நகர செயலாளர் சண்முகம், வக்கீல் பாலாஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    ×