search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வெப்ப அலை... எந்த மாதிரி அபாயத்தை கொடுக்கும்?
    X

    வெப்ப அலை... எந்த மாதிரி அபாயத்தை கொடுக்கும்?

    • உடலில் நன்றாக காற்று புகக்கூடிய வகையிலான பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும்.
    • கோடை காலத்தில் ஏற்படும் செரிமான பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு தயிர்.

    தமிழகத்தில் கோடை வெயில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகவே சுட்டெரித்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தற்போது கோடை வெயில் உச்சத்தை தொடும் நிலையில் வெப்ப அலை வீசும் என்று எச்சரிக்கப்படுகிறது.

    தமிழகத்தில் வருகிற 30-ந்தேதி வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டுள்ளது. வெப்ப அலை வீசும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பானது பொதுமக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது. ஆனால் அதற்கு பயப்பட வேண்டியதில்லை. பகல் 11 மணி முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தால் போதும், வெப்ப அலையில் இருந்து எளிதாக தப்பலாம் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

    அதே நேரத்தில் எத்தனை பேரால் பகல் 11 மணி முதல் 3 மணி வரை வெளியே வராமல் இருக்க முடியும்? அவரச வேலை, சொந்த வேலை, அலுவலக வேலை, தொழில் நிமித்தம் என ஏதாவது ஒரு காரணத்துக்காக பலர் பகல் நேரத்தில் வெளியே வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதனால் வெப்ப அலையை எப்படி சமாளிக்கப்போகிறோம்? என்கிற கேள்வியும் அவர்களின் மனதிற்குள் எழாமல் இல்லை.

    கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர காலத்தில் தான் வழக்கமாக வெயில் உச்சம் தொடும். ஒவ்வொரு ஆண்டும் மே 4-ந்தேதி தொடங்கும் அக்னி நட்சத்திரம் மே 28-ந்தேதி வரை மொத்தம் 25 நாட்கள் நீடிக்கும். ஆனால் அதற்கு முன்பே வெப்ப அலை தாக்கும் என்ற எச்சரிக்கையானது, பொதுமக்களை அச்சப்படத்தான் வைக்கிறது.

    வெப்ப அலை என்றால் என்ன? அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வதில் பலருக்கும் ஆர்வம் உள்ளது.

    ஒரு மாநிலத்தில் குறைந்தது 2 மாவட்டங்களிலாவது வெப்பநிலை 113 டிகிரிக்கு மேல் பதிவாக வேண்டும். அல்லது வெப்பநிலை 104 டிகிரிக்கு மேல் பதிவாகி 2 நகரங்களில் வழக்கத்தை விட 8 டிகிரி வெப்பம் அதிகமாக இருந்தாலும் வெப்ப அலை உருவாகும் என்று கணிக்கப்படுகிறது.

    மேலும் சமவெளிப் பகுதியில், குறைந்தது 2 நாட்களுக்கு 104 டிகிரி வெயில் அல்லது அதற்கு மேலாகவும், மலைப் பிரதேசங்களில் 86 டிகிரி வெயில் அல்லது அதற்கு மேலாகவும், கடலோரப் பகுதிகளில் 98.6 டிகிரி வெயில் அல்லது அதற்கு மேலாகவும் வெப்பநிலை உயரும்போது 'வெப்ப அலை' நிகழ்வு ஏற்படுவதாக வானிலை ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். தமிழகத்தில் கடந்த 25 ஆண்டுகளில், சராசரியாக ஆண்டுக்கு 8 வெப்ப அலைகள் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    வெப்ப அலைகளால் தமிழகம் பல்வேறு காலகட்டங்களில் பலவித பாதிப்புகளை சந்தித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு தான் வெப்ப அலை கடுமையாக தாக்கியது.

    வெப்ப அலைகளின் காலம் அதிகரிக்கும்போதும், தீவிரமடையும்போதும் கூடவே வறட்சியும் அதிகரிக்கும். வெப்ப அலைகளுக்கு மத்தியில் மழை பெய்வது குறையும். எனவே, நிலத்தில் உள்ள ஈரப்பதம் குறைந்து நிலம் விரைவில் வறண்டு போகும். இதனால் நிலம் வேகமாக வெப்பமடைந்து காற்றை சூடாக மாற்றும். இது ஒரு தொடர் சுழற்சியாகி ஒட்டுமொத்த வெப்ப நிலையும் அதிகரிக்கும். இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்.

    இதுபோன்ற வெப்ப அலை காலகட்டத்தில் கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர்கள், உடல் நலக்குறைபாடு கொண்ட நோயாளிகள் ஆகியோரே கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே வெப்ப அலையின்போது கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர்கள் விஷயத்தில் கூடுதல் கவனமும், கண்காணிப்பும் செலுத்த வேண்டும். தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் ஆசியா கண்டம் முழுவதும் 24 கோடி குழந்தைகள் வெப்ப அலையால் பாதிக்கப்படக்கூடிய ஆபத்து இருப்பதாக ஐ.நா. சபை எச்சரித்துள்ளது. வெப்ப அலையின்போது நமது உடலில் இருந்து அதிக வியர்வை வெளியேறுவதால் பூஞ்சை தொற்றுகள், சொறி, படர் தாமரை போன்ற தோல் நோய்கள் ஏற்படலாம். உடலின் ஈரப்பதத்தை பராமரித்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதன் மூலம் இதிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

    கோடை காலங்களில் உடலில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையால் பல்வேறு நீர் சார்ந்த நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்போது, நமக்கு கிடைக்கும் நீர் மாசடைந்து இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். அதனால், வாந்தி, வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். ஆகவே, நீரை சூடாக்கிய பின்னர் குடிப்பது நல்லது. மேலும் உடலில் நீர்ச்சத்து குறைந்தால் சிறுநீரகக் கல் வரும் பாதிப்பு அதிகமாகவே இருக்கும். கோடைக்காலங்களில் அதிக அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்போருக்கு இந்தப் பிரச்சனை ஏற்படும்.

    அதே நேரத்தில் வெப்ப அலையில் இருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகளையும் மருத்துவர்கள் வகுத்துள்ளனர்.

    இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது:-

    வெப்ப அலையில் இருந்து தப்பிக்க முதலில் ஆடை விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உடலில் நன்றாக காற்று புகக்கூடிய வகையிலான பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும். தினமும் அதிக அளவில் தண்ணீர் குடித்து உடலை நீர்ச்சத்துகளுடன் வைத்திருக்க வேண்டும். 10 நிமிடம் முதல் 15 நிமிடத்துக்கு ஒரு முறை தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் எடுக்கவில்லை என்றாலும் அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும். பகல் 11 மணி முதல் 3 மணி வரை வெளியே வெயிலில் வருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

    குழந்தைகளை வெப்பம் தாக்காமல் இருக்க அவர்களுக்கு பருத்தி துணியால் ஆன ஆடைகளையே அணிவிக்க வேண்டும். தினமும் 2 முறை அவர்களை குளிக்க வைக்க வேண்டும். குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் பகல் நேரத்தில், குறிப்பாக பகல் 11 மணி முதல் 3 மணி வரை வெயிலில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும்.

    மேலும் வெயிலுக்கு தகுந்தாற்போல் உணவு பழக்கங்களையும் கடைபிடிக்க வேண்டும். நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும்போது இரும்பு சத்தும் உடலில் குறையும். இதனை தவிர்க்க பேரீச்சை மற்றும் சாத்துக்குடி பழங்களை சாப்பிட வேண்டும். பேரீச்சை, சாத்துக்குடி ஆகிய பழங்கள் வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதத்தில் இருந்து நம்மை பாதுகாக்கும். பேரீச்சை சாப்பிடுவதால் நாள் முழுவதும் சோர்வில்லாமல் ஆரோக்கியமாக இருக்கலாம்.

    கோடை காலத்தில் ஏற்படும் செரிமான பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு தயிர். இதனை கண்டிப்பாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தயிரை லஸ்சியாகவும் செய்து சாப்பிடலாம். புதினா இலையில் இயற்கையாகவே ஏராளமான நன்மைகள் உள்ளன. உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும் புதினாவை சட்னி செய்து சாப்பிடலாம். புதினா சாறு குடிப்பது கோடையில் ஆரோக்கிய மேம்பாட்டுக்கு உதவும்.

    தர்பூசணியில் லைகோபீன் எனப்படும் ஆக்சிஜனேற்றி உள்ளது. இது சருமத்தின் பளபளப்பை பராமரிக்கிறது. தர்பூசணியில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. மேலும் அதில் குளிர்ச்சி தன்மையும், 92 சதவீதம் தண்ணீரும் இருப்பதால், உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது.

    மேலும் எலுமிச்சையில் வைட்டமின் 'சி' உள்ளது. இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, குழந்தைகளிடம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. அதனால் தான் கோடைக்காலத்தில் எலுமிச்சை பழச்சாறு அதிகம் குடிக்க வேண்டும். வியர்வையால் குழந்தைகள் உடலில் உள்ள தாது உப்புகள் அதிகமாக வெளியேறும். இதனால் உடலில் ஏற்படும் தாது உப்புக்களின் பற்றாக்குறையை போக்க எலுமிச்சை பழச்சாறில் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து கொடுக்கலாம்.

    தயிர் சேர்த்த கம்மங்கூழ், பழச்சாறு, இளநீர், நுங்கு ஆகியவற்றையும் சாப்பிடலாம். பெரும்பாலும் ஐஸ்கிரீம், செயற்கை குளிர்பானம் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.

    முதியவர்கள் பகல் நேரத்தில் வெயிலில் வெளியே செல்லும்போது அவர்களுக்கு மயக்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே 60 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் பகல் நேரத்தில் வெளியே செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க வேண்டும்.

    பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது தண்ணீர் குடித்தால் வாந்தி வரும் என்பதற்காக பலர் தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பார்கள். அவர்கள் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் பிரசவத்தின் போது பிரச்சனை உருவாகி குழந்தையின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும். பனிக்குடத்தில் எப்போதும் குழந்தைக்கு தேவையான அளவு நீர் இருக்க வேண்டும் என்பதால் கோடை காலத்தில் கர்ப்பிணி பெண்கள் அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.

    வெப்ப அலையின்போது புரதச்சத்து அதிகம் உள்ள உணவை தவிர்க்க வேண்டும். வீட்டில் தண்ணீர் தெளித்து எப்போதும் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் வெப்ப அலையில் இருந்து நாம் நம்மையும், நம் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×