search icon
என் மலர்tooltip icon
    • கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிச்சாங் புயல் மற்றும் வெள்ளத்திற்கு 275 கோடி மட்டுமே.

    மதுரை:

    மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ.115 கோடி நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு ரூ.160.61 கோடி நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 24-ந்தேதி மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் நிதியை விடுவிக்க மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

    கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல... வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிச்சாங் புயல் மற்றும் வெள்ளத்திற்கு 275 கோடி மட்டுமே. தமிழ்நாடு கேட்டதோ 38,000 கோடி.

    பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம் என்று தெரிவித்துள்ளார்.


    • வெள்ள பாதிப்பிற்கு ரூ.160 கோடி நிவாரணம் அறிவிப்பு.
    • ரிசர்வ் வங்கி உடனடியாக நிதியை விடுவிக்க உத்தரவு.

    மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ.115 கோடி நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு ரூ.160 கோடி நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 24ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய பிரிந்துரையின் அடிப்படையில் நிதியை விடுவிக்க மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

    மாநில அரசின் கணக்கிற்கு ரிசர்வ் வங்கி உடனடியாக நிதியை விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும், கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

    • வூங் டின் ஹியூ மீது அதிகார துஷ்பிரயோகம், ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
    • உதவியாளர் பாம் தாய் ஹா ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

    ஹனோய்:

    அண்டை நாடான வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகராக வூங் டின் ஹியூ (வயது 67) இருந்து வருகிறார்.

    இவர் மீது அதிகார துஷ்பிரயோகம், ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதற்கிடையே அவரது உதவியாளர் பாம் தாய் ஹா ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

    இந்தநிலையில் தற்போது வூங் டின் ஹியூ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது அங்குள்ள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நேற்று நள்ளிரவு தொடங்கி அதிகாலை 2:15 மணி வரை தாக்குதல் நடந்துள்ளது.
    • உயிரிழந்த இருவரும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் சிஆர்பிஎப் 128 பட்டாலியனைச் சேர்ந்தவர்கள்.

    மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் இரு இன குழுக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் மாநிலம் முழுவதும் கலவரமாக மாறி ஏராளமானோர் உயிரை பறித்தது.

    இன்னமும் அந்த கலவரத்தில் இருந்து மணிப்பூர் மாநிலம் விடுபடவில்லை. அடிக்கடி இரு இன மக்களும் மோதலில் ஈடுபடுகிறார்கள்.

    இந்த நிலையில் மணிப்பூரில் நேற்று பாராளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது. இதற்காக துணைநிலை ராணுவத்தினர் அங்குள்ள வாக்குச்சாவடிகளில் குவிக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் பிஸ்னுபூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட துணைநிலை ராணுவத்தினர் மலையடி வார கிராமத்தில் தங்கியிருந்தனர்.

    நரைன்சைனா என்ற கிராமத்தில் துணைநிலை ராணுவத்தினர் ஓய்வு எடுத்து வந்தனர். நேற்று இரவு 12.30 மணியளவில் அந்த முகாம் மீது மணிப்பூர் பயங்கரவாத குழு ஒன்று திடீர் தாக்குதல் நடத்தியது. மலையில் பதுங்கி இருந்தபடி அவர்கள் சரமாரியாக கையெறி குண்டுகளை வீசி தாக்குதல்களை நடத்தினார்கள்.

    இதையடுத்து ராணுவ வீரர்களும் பதிலடி தாக்குதலை மேற்கொண்டனர். இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இன்று அதிகாலை 2.30 மணி வரை இந்த தாக்குதல் நீடித்தது.

    இதில் ஏராளமான துணைநிலை ராணுவத்தினர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் துணைநிலை ராணுவத்தின் சப்-இன்ஸ்பெக்டர் சர்கார், தலைமை போலீஸ்காரர் அருப்சைனி ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

    10-க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிரவாதிகளை பிடிக்க அந்த பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    • ரெஜிமோன் தனது நண்பர்களை அழைத்துக்கொண்டு நேற்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.
    • தனக்கு தங்க நகைகளை அணிந்து கொள்வதில் அலாதி பிரியம் அதனாலேயே எப்போதும் தங்க நகைகளை அணிந்தவாறுதான் இருப்பேன் என்று கூறினார்.

    விழுப்புரம்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் புதுச்சேரி நோக்கி காரில் வந்த கர்நாடக மாநிலம், சிவமொக்காவை சேர்ந்த தொழில் அதிபர் ரெஜிமோன்(வயது 53) என்பவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ.68 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இந்த நிலையில் தன்னிடம் இருந்து பறிமுதல் செய்த ரூ.68 ஆயிரத்தை பெறுவதற்காக ஆவணங்களுடன் ரெஜிமோன் தனது நண்பர்களை அழைத்துக் கொண்டு நேற்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் பறிமுதல் செய்த பணத்துக்குரிய ஆவணங்கள் மற்றும் இதர விவரங்களை தேர்தல் பிரிவு அலுவலர்களிடம் கொடுத்தார். அதை வாங்கி சரிபார்த்த அதிகாரிகள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.68 ஆயிரத்தை திருப்பி கொடுத்தனர்.

    பணத்தை பெறுவதற்காக வந்த ரெஜின்மோன் தனது இரு கைகளிலும் தங்க கை சங்கிலி, காப்பு, விரல்களில் மோதிரம், கழுத்தில் தங்கச்சங்கிலிகள் என சுமார் 2¼ கிலோ எடையுள்ள தங்க நகைகளை அணிந்து வந்ததால் அவரை கலெக்டர் அலுவலக ஊழியர்கள், தேர்தல் பிரிவு அலுவலர்கள் மட்டுமின்றி, பொதுமக்கள் அனைவரும் வியப்புடன் பார்த்தனர்.

    தான் நகை அணிந்து வந்தது குறித்து ரெஜிமோன் கூறும்போது, கர்நாடக மாநிலத்தின் சிவமொக்கா பகுதியை சேர்ந்த தனக்கு, சொந்தமாக டீ எஸ்டேட் உள்ளதாகவும், தனியார் நிறுவனம் ஒன்றில் உயர் அலுவலராக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் தனக்கு தங்க நகைகளை அணிந்து கொள்வதில் அலாதி பிரியம் அதனாலேயே எப்போதும் தங்க நகைகளை அணிந்தவாறுதான் இருப்பேன் என்று கூறினார். பின்னர் அவர் தனது நண்பர்களுடன் காரில் கர்நாடக மாநிலத்துக்கு புறப்பட்டு சென்றார். 

    • படத்தின் டீசரை படக்குழு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டது.
    • கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள இந்த பாடல் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவு.

    செல்வம் மாதப்பன் இயக்கத்தில் யாஷிகா ஆனந்த் நடித்துள்ள திரைப்படம் 'படிக்காத பக்கங்கள்'. இந்த படத்தில் பிரஜின், ஜார்ஜ் மரியன், பாலாஜி, லொள்ளு சபா மனோகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இந்த படத்தை எஸ் மூவி பார்க் மற்றும் பவுர்ணமி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

    இந்த படத்தின் டீசரை படக்குழு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டது.

    இந்நிலையில், படிக்காத பக்கங்கள் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள மதுவுக்கு எதிரான பாடல் ஒன்று இன்று மாலை வெளியாகிறது.

    கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள இந்த பாடல் குறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மரணத்திற்கு முன்பே

    மனிதனைப் புதைத்துவிடுகிறது

    மது

    ஒவ்வொரு மணி நேரத்திற்கும்

    16 மதுச் சாவுகள் நிகழ்கின்றன

    44 முதல் 67 விழுக்காடு

    சாலை விபத்துகள்

    மதுவால் நேர்கின்றன

    20மில்லி ரத்தத்தில் கலந்தாலே

    பார்வையைப் பாதிக்கிறது மது

    30மில்லி கலந்தால்

    தசை தன் கட்டுப்பாட்டை

    இழந்துவிடுகிறது

    ஒருநாட்டின் மனிதவளம்

    தவணைமுறையில் சாகிறது

    ஒழுக்கக்கோடுகள் அழிந்து

    ஒழுக்கக்கேடுகள் நுழைகின்றன வாழ்வியலில்

    மதுவுக்கு எதிராக

    நான் எழுதிய ஒருபாடலை

    இன்று மாலை வெளியிடுகிறோம்

    இப்போதே உங்கள்

    கண்களுக்கும் காதுகளுக்கும்

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 85 பேரும் ஒரே நேரத்தில் வாக்குச்சாவடிக்கு ஒன்றாக வந்து ஓட்டுப்போட்டு தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
    • தேர்தலை ஒரு திருவிழா போல் கொண்டாடும் இவர்கள் ஓட்டுப்போடுவதற்காக வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்துள்ளனர்.

    சிக்பள்ளாப்பூர் டவுன் வாக்குச்சாவடியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாத்தா, பாட்டி, மகன்கள், மகள்கள், பேரன்-பேத்திகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 85 பேரும் ஒரே நேரத்தில் வாக்குச்சாவடிக்கு ஒன்றாக வந்து ஓட்டுப்போட்டு தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

    இவர்களை அந்த பகுதியில் 'பாதாம் குடும்பம்' என்று அழைக்கிறார்கள். தேர்தலை ஒரு திருவிழா போல் கொண்டாடும் இவர்கள் ஓட்டுப்போடுவதற்காக வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சென்னை சென்ட்ரலில் இருந்து கொச்சுவேலி செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் மே 1-ந்தேதியில் இருந்து 29-ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
    • நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் சிறப்பு ரெயில் மே 12-ந்தேதியில் இருந்து 26-ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பயணிகளின் வசதிக்காக நாகர்கோவில்- தாம்பரம், சென்னை சென்ட்ரல்- கேரள மாநிலம் கொச்சுவேலி, சென்ட்ரல்-நாகர்கோவில் இடையிலான வாராந்திர சிறப்பு ரெயில்களின் சேவை மே 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

    அதன்படி, நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-06012) மே 5-ந்தேதியில் இருந்து 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நீட்டிக்கப்படுகிறது. மேலும், தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06011) மே 6-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை (திங்கட்கிழமை) நீட்டிக்கப்படுகிறது.

    அதே போல, சென்னை சென்ட்ரலில் இருந்து கொச்சுவேலி செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (06043) மே 1-ந்தேதியில் இருந்து 29-ந்தேதி வரை (புதன்கிழமை) நீட்டிக்கப்படுகிறது. மறுமார்க்கமாக, கொச்சுவேலியில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (06044) மே 2-ந்தேதியில் இருந்து 30-ந்தேதி வரை (வியாழக்கிழமை) நீட்டிக்கப்படுகிறது.

    நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் சிறப்பு ரெயில் (06019) மே 5-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை) நீட்டிக்கப்படுகிறது. மறுமார்க்கமாக, சென்னை சென்டிரலில் இருந்து நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரெயில் (06020) மே 6-ந்தேதியில் இருந்து 20-ந்தேதி வரை (திங்கட்கிழமை) நீட்டிக்கப்படுகிறது.

    நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் சிறப்பு ரெயில் (060231) மே 12-ந்தேதியில் இருந்து 26-ந்தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை) நீட்டிக்கப்படுகிறது. மறுமார்க்கமாக, சென்னை சென்டிரலில் இருந்து நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரெயில் (06022) மே 13-ந்தேதியில் இருந்து 27-ந்தேதி வரை (திங்கட் கிழமை) நீட்டிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போலீசாரை பார்த்ததும் சச்சின் தனது காரில் ஏறி தப்ப முயன்றார்.
    • சச்சின் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மனநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக அவருடைய முன்னாள் மனைவி லியா கோல்ட்ஸ்டைன் தெரிவித்துள்ளார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சான் அன்டோனியோ நகரில் வசித்து வந்த இந்தியர் சச்சின் குமார் சாஹூ (வயது 42). சம்பவத்தன்று சச்சின் தன்னுடன் அறையில் தங்கியிருந்த தோழியை கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், 2 போலீஸ் அதிகாரிகள் உடனடியாக அங்கு விரைந்தனர்.

    அப்போது சச்சின் ஒரு பெண் மீது வேண்டுமென்றே காரை மோதுவதை போலீஸ் அதிகாரிகள் பார்த்தனர். இதையடுத்து, போலீஸ் அதிகாரிகள் சச்சினை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்களிடம் சிக்காமல் சச்சின் அங்கிருந்து தப்பி ஓடினார்.

    அதனை தொடர்ந்து சச்சின் காரை மோதியதில் படுகாயம் அடைந்த 51 வயது பெண்ணை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் சச்சினுக்கு எதிராக கைது வாரண்டு பிறப்பித்து போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று மாலையில் சச்சின் மீண்டும் தனது அறைக்கு வந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் 2 போலீஸ் அதிகாரிகள் சச்சின் இருக்கும் இடத்துக்கு விரைந்தனர்.

    அப்போது போலீசாரை பார்த்ததும் சச்சின் தனது காரில் ஏறி தப்ப முயன்றார். ஆனால் போலீஸ் அதிகாரிகள் இருவரும் துப்பாக்கி முனையில் அவரது காரை வழிமறித்தனர்.

    தங்களிடம் சரணடைந்துவிடும்படி சச்சினை போலீசார் எச்சரித்தனர். ஆனால் அதற்கு செவிசாய்க்க மறுத்த அவர் போலீஸ் அதிகாரிகள் மீது காரை ஏற்றினார். அதை தொடர்ந்து போலீஸ் அதிகாரிகளில் ஒருவர் சச்சினை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் அவர் காருக்குள்ளேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தார்.

    காயம் அடைந்த 2 போலீஸ் அதிகாரிகளையும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதனிடையே சச்சின் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மனநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக அவருடைய முன்னாள் மனைவி லியா கோல்ட்ஸ்டைன் தெரிவித்துள்ளார்.

    • உஷாவிற்கு இடது கை ஆள்காட்டி விரலில் தடவப்பட்ட மை கடந்த 8 ஆண்டுகளாக மறையாமலேயே இருந்து வருகிறது.
    • பெண்ணை ஓட்டு போட வைக்க தேர்தல் ஆணையமும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் சொர்னூர் குளப்புள்ளியை சேர்ந்தவர் உஷா (வயது 62). இவர் கடந்த 2016-ம் ஆண்டு கேரள சட்டசபைக்கு நடந்த தேர்தலின் போது வாக்களித்தார். அப்போது அவரது இடது கை ஆள்காட்டி விரலில் தடவப்பட்ட மை கடந்த 8 ஆண்டுகளாக மறையாமலேயே இருந்து வருகிறது. அதற்கு பின் 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும், 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலிலும் பிரச்சினை ஏற்படும் என்று கருதி உஷா ஓட்டு போடவே செல்லவில்லை.

    அந்த பெண்ணை ஓட்டு போட வைக்க தேர்தல் ஆணையமும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நேற்று நடந்த தேர்தலிலும் அவர் வாக்களிக்க செல்லவில்லை. ஓட்டு போட முடியாததால் தான் தொடர்ந்து ஏமாற்றம் அடைவதாக அவர் தெரிவித்துள்ளார்.

    • கன்னியாகுமரியில் இருந்து ஜூன் 3-ந்தேதி புறப்பட்டு, அசாம் மாநிலம் திப்ருகார் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22503) காட்பாடி ரெயில் நிலையத்திற்கு 5 நிமிடம் தாமதமாக 9.45 மணிக்கு வந்து சேரும்.
    • மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் இருந்து நெல்லை வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22605) பெரம்பூர் ரெயில் நிலையத்திற்கு 5 நிமிடம் தாமதமாக மதியம் 2.05 மணிக்கு வந்து சேரும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பெங்களூருவில் இருந்து மே 3-ந்தேதி புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16526) கன்னியாகுமரிக்கு 15 நிமிடம் முன்கூட்டியே மதியம் 2.50 மணிக்கு வந்து சேரும்.

    அதே போல், கன்னியாகுமரியில் இருந்து ஜூன் 3-ந்தேதி புறப்பட்டு, அசாம் மாநிலம் திப்ருகார் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22503) காட்பாடி ரெயில் நிலையத்திற்கு 5 நிமிடம் தாமதமாக 9.45 மணிக்கு வந்து சேரும். அதே தேதியில் மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் இருந்து நெல்லை வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22605) பெரம்பூர் ரெயில் நிலையத்திற்கு 5 நிமிடம் தாமதமாக மதியம் 2.05 மணிக்கு வந்து சேரும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கண்ணூர் பினராயி அரசு ஆரம்ப பள்ளியில் முதல்-மந்திரி பினராயி விஜயன் வாக்களித்தார்.
    • மலையோர பகுதிகளில் எந்தவொரு அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை.

    திருவனந்தபுரம்:

    நாடு முழுவதும் 7 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்தது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19-ந்தேதி 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளும் அடங்கும்.

    2-வது கட்டமாக 88 பாராளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில் கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்காளர்கள் ஆர்வமுடன் ஓட்டு போட்டனர்.

    அதேபோல் அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள், மந்திரிகள், நடிகர்களும் ஆர்வமுடன் அவர்களுக்குரிய வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தனர். முதியவர்களும், முதல் தலைமுறை வாக்காளர்களும் ஆர்வமுடன் வந்து வாக்களித்ததை காணமுடிந்தது.

    கண்ணூர் பினராயி அரசு ஆரம்ப பள்ளியில் முதல்-மந்திரி பினராயி விஜயன் வாக்களித்தார். எர்ணாகுளத்தில் உள்ள ஒரு பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் நடிகர் மம்முட்டி ஓட்டு போட்டார்.

    சில வாக்குச்சாவடிகளில் எந்திரங்கள் பழுதானதால் வாக்குப்பதிவு தாமதமானது. மேலும் எந்திரத்தில் சின்னம் மாறியதாலும் பிரச்சனை ஏற்பட்டது. சில இடங்களில் கள்ள ஓட்டு போடப்பட்டதாகவும் பிரச்சனை எழுந்தது.

    அந்த வகையில் கண்ணூர் சப்பாரபடா வாக்குச்சாவடியில் கதீஜா என்பவரின் ஓட்டு கள்ளஓட்டு போடப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவருக்கு டெண்டர் ஓட்டு போட அனுமதி அளிக்கப்பட்டது. காசர்கோட்டில் காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் சேர்குளா அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் கள்ளஓட்டு போட முயற்சிப்பதாக இடதுசாரி முன்னணி தொண்டர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார் அளித்தனர்.

    கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் மலையோர பகுதியில் உள்ள மாவோயிஸ்டுகள் துப்பாக்கியுடன் சில நாட்களுக்கு முன்பு ஊருக்குள் வந்து யாரும் வாக்களிக்கக்கூடாது என மிரட்டி சென்றனர். ஆனாலும் நேற்று பொதுமக்கள் அந்த தொகுதியில் ஆர்வமுடன் வாக்களித்ததை காணமுடிந்தது. மலையோர பகுதிகளிலும் எந்தவொரு அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை. இதனால் ராகுல் தொகுதியில் 71.69 சதவீதம் வாக்குகள் பதிவானது. இது கேரளாவின் மொத்த சதவீதத்தை விட அதிகம்.

    இதுகுறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சை கவுல் கூறுகையில், ''கேரளாவில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. மாலை 6 மணிக்கு முன்னதாக வந்தவர்கள், வாக்குப்பதிவு நேரத்தை கடந்த பிறகு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்'' என்றார்.

    கேரளாவில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 77 லட்சத்து 49 ஆயிரத்து 159 ஆகும். இதில் மாநிலம் முழுவதும் 70.35 சதவீதம் பேர் வாக்களித்தனர்.

    ×