search icon
என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை அந்த பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
    • சகோதரியின் திருமணத்திற்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் குடும்பத்தில் இந்த சோகம் ஏற்பட்டது

    சிறுவயதிலேயே மாரடைப்பு ஏற்படுவது இந்த காலக்கட்டத்தில் அதிகரித்திருப்பது கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. சமீபகாலமாக 'மாரடைப்பு' காரணமாக வாலிபர்கள், சிறுவர்கள், பெண்கள் என அனைத்து வயது தரப்பிரனரும் உயிரிழக்கும் சம்பவங்கள் ஏராளம் அரங்கேறி வருகிறது.

    முன்னதாக, ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது இளைஞர் ஒருவர் மாரடைப்பால் இறந்தார். பல பிரபலங்களும் சமீபத்தில் மாரடைப்பால் இறந்தனர்.

    இந்நிலையில் உத்தர பிரதேசம் மாநிலம் மீரட்டில் தனது சகோதரியின் ஹல்டி விழாவில் நடனமாடும்போது ரிம்ஷா என்ற 18 வயது சிறுமி மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

    சகோதரியின் ஹல்டி நிகழ்ச்சியில் ரிம்ஷா தனது சக தோழிகள் மற்றும் சிறுவர்களுடன் நடனம் ஆடிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு தலை சுற்றல் ஏற்பட்டது. சற்று தடுமாறி பிறகு மீண்டும் நடனத்தில் ஈடுப்பட்டார். பின்னர் நெஞ்சை பிடித்தவாரு தரையில் விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை அந்த பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு ரிம்ஷாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ரிம்ஷா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இதை கேட்ட குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

    சகோதரியின் திருமணத்திற்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் குடும்பத்தில் இந்த சோகம் ஏற்பட்டது அந்த பகுதியில் உள்ள அனைவனையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    ஹல்டி நிகழ்ச்சியில் மாரடைப்பால் மயங்கி விழுந்து மரணம் அடைந்த சிறுமியின் இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது.

    • ஏப்ரல் 19-ந் தேதி 102 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நடந்தது. 26-ந்தேதி 89 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது.
    • மே மாதம் 25-ந்தேதி 6-ம் கட்ட தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடத்தப்படும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1-ந்தேதி களில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதன்படி ஏப்ரல் 19-ந் தேதி 102 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நடந்தது. 26-ந்தேதி 89 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது.

    தற்போது 3-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. மே 7-ந்தேதி 94 தொகுதிகளுக்கு 3-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் 4-ம் கட்ட தேர்தலுக்கான ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. 4-ம் கட்டமாக 96 தொகுதிகளுக்கு மே 13-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளுக்கான மனு தாக்கல் இன்று (திங்கட் கிழமை) நிறைவு பெறுகிறது. இதற்கிடையே மே 20-ந் தேதி 49 தொகுதிகளுக்கு 5-ம் கட்ட தேர்தல் நடை பெற உள்ளது.

    இதற்கான மனுதாக்கல் கடந்த 26-ந் தேதி தொடங்கியது. வருகிற 6-ந்தேதி இந்த 49 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும். இதையடுத்து 6-ம் கட்ட தேர்தலுக்கான ஏற்பாடுகளும் தொடங்கி உள்ளன. 6-ம் கட்ட தேர்தல் மொத்தம் 57 தொகுதிகளுக்கு நடத்தப்பட உள்ளது. 6-ம் கட்ட தேர்தலுக்கான மனுதாக்கல் இன்று (29-ந் தேதி) தொடங்கியது. மனு தாக்கல் செய்ய 6-ந்தேதி கடைசி நாளாகும்.

    7-ந்தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறும். 9-ந்தேதி வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும். மே மாதம் 25-ந்தேதி 6-ம் கட்ட தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடத்தப்படும். 6-ம் கட்ட தேர்தலில் அரியானாவில் 10 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடத்தப்படுகிறது. அதுபோல டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அன்று தேர்தல் நடக்கிறது. உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகள், மேற்கு வங்காளத்தில் 8 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 4 தொகுதிகளில் 6-ம் கட்ட தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் லக்னோ தொகுதியில் போட்டியிட இன்று மனுதாக்கல் செய்தார்.

    • பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டுள்ள காவல்துறையினர் ஏப்ரல் 19 அன்று குற்றம் நடந்ததாக தெரிவித்தனர்
    • பாதிக்கப்பட்ட சிறுமியின் முகத்தில் தனது பெயரை சூடான இரும்புக் கம்பியால் எழுதி கொடூரமாக சித்ரவதை செய்துள்ளார்

    உத்தரப்பிரதேசம் மாநிலம் லகிம்பூர் கேரி பகுதியில் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்த 17 வயது சிறுமியை கடத்தி 3 நாட்கள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த அமன் என்கிற 22 வயது இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் முகத்தில் தனது பெயரை சூடான இரும்புக் கம்பியால் எழுதி கொடூரமாக சித்ரவதை செய்துள்ளார்.

    பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டுள்ள காவல்துறையினர் ஏப்ரல் 19 அன்று குற்றம் நடந்ததாக தெரிவித்தனர். 

    • கணவரின் சகோதரர் பாலியல் வன்கொடுமை செய்தது பற்றி மனைவி புகார் கூறினார்.
    • அப்போது, இனி நீ என் மனைவி இல்லை எனக்கூறி கணவர் அதிர்ச்சி ஏற்படுத்தினார்.

    லக்னோ:

    உத்தர பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் வசித்து வரும் பெண்ணை கடந்த 2-ம் தேதி கணவர் வெளியே சென்றபோது வீட்டில் வேறு யாரும் இல்லாத தருணத்தில் அவரது சகோதரர் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளார்.

    கணவர் வீட்டுக்கு திரும்பியதும் அந்தப் பெண் கணவரிடம் நடந்ததைக் கூறி அழுதார். இதைக்கேட்ட அவரது கணவர் அளித்த பதில் அந்தப் பெண்ணிற்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. அந்தக் கணவர், பெண்ணை நோக்கி, இனி நீ எனது மனைவியே இல்லை. நீ என்னுடைய மைத்துனி என கூறியிருக்கிறார். இதனால் என்ன செய்வதென தெரியாமல் அந்த பெண் திகைத்துப்போனார்.

    அடுத்த நாள் கணவரும், கணவரின் தம்பியும் ஒன்றாக அந்தப் பெண்ணின் அறைக்கு வந்தனர். கணவர் மனைவியின் நெஞ்சில் ஏறி அமர்ந்து, துப்பட்டாவை எடுத்து அப்பெண்ணைக் கொல்ல பார்த்திருக்கிறார். இதனை கணவரின் தம்பி செல்போனில் வீடியோவாக படம் எடுத்துள்ளார். அவர்களிடம் இருந்து அந்தப் பெண் தப்பி வெளியே ஓடியிருக்கிறார்.

    இது குறித்து சமூக ஊடகம் வழியே அந்தப் பெண் புகாராக தெரிவித்ததுடன், வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

    இதையடுத்து பாலியல் பலாத்காரம் (376), கொலை முயற்சி (307) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    இதுதொடர்பாகபோலீஸ் சூப்பிரெண்டு சத்யநாராயண் பிரஜாபதி கூறுகையில், அவர்கள் இருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சட்டப்படி இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

    • காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதியில், சிறுபான்மையினருக்கு உணவு சுதந்திரம் வழங்குவோம் என்று கூறியுள்ளனர்
    • நாம் தாயாக மதிக்கும் பசுவை, கறிக்காக கொடுக்கப்போகிறார்களாம். இந்தியாவின் உணர்வுகளோடு வெட்கமேயில்லாமல் விளையாடுகின்றனர்

    உத்தரபிரதேச மாநிலம் சம்பாலில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் அம்மாநில முதல்வர் யோகிநாத் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது,

    "காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதியில், சிறுபான்மையினருக்கு உணவு சுதந்திரம் வழங்குவோம் என்று கூறியுள்ளனர். அதாவது, பசுவதையை எந்தத் தடைகளும் இன்றி அனுமதிக்கப் போகிறார்கள் என்று அதற்கு அர்த்தம். நாம் தாயாக மதிக்கும் பசுவை, கறிக்காக கொடுக்கப்போகிறார்களாம். இந்தியாவின் உணர்வுகளோடு வெட்கமேயில்லாமல் விளையாடுகின்றனர்.

    அதாவது, ஒருவரது வீட்டில் நான்கு அறைகள் இருந்தால், அதில் இரண்டை அவர்களே எடுத்துச் சென்று விடுவார்கள். அதுமட்டுமின்றி, பெண்களின் நகைகளை கைப்பற்றுவோம் என்று காங்கிரஸ் கூறுகிறது, இதை நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

    கர்நாடகாவில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிகளுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க அவர்கள் முயலுகின்றனர்.

    நாட்டின் வளங்களில் முஸ்லீம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

    நாட்டை பிளவுபடுத்த காங்கிரஸ் சதி செய்து வருகிறது. ராமரின் பிறப்பிடமான அயோத்திக்கு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அவர்கள் ராமர் இருப்பதைக் கேள்விக்குள்ளாக்கினர். ஆனால் தெய்வம் அனைவருக்கும் உள்ளது. இது அவர்களின் இரட்டை நிலைப்பாட்டிற்கு எடுத்துக்காட்டு.

    'பாரத் மாதா கி ஜெய்' மற்றும் 'வந்தே மாதரம்' என்று முழக்கமிட தயங்குபவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க கூடாது" என்று அவர் தெரிவித்தார்.

    • குழந்தைகளை கடத்தி சென்று பணத்திற்கு விற்பனை செய்ய முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது.
    • குழந்தைகளை அழைத்து வந்தவர்களிடம் பெற்றோரிடம் இருந்து ஒப்புதல் கடிதம் இல்லை.

    அயோத்தி:

    பீகாரில் இருந்து உத்தரபிரதேசத்திற்கு குழந்தைகள் கடத்தப்படுவதாக குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

    இதையடுத்து உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர். குழந்தைகளை கடத்தி சென்று பணத்திற்கு விற்பனை செய்ய முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அயோத்தி குழந்தைகள் நலக்குழுவின் தலைவர் சர்வேஷ் அவஸ்தி கூறியதாவது:

    அயோத்தியில் நாங்கள் குழந்தைகளை மீட்டோம். அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவி வழங்கப்பட்டது. மீட்கப்பட்ட குழந்தைகள் 4-12 வயதுக்குட்பட்டவர்கள்.

    குழந்தைகளை அழைத்து வந்தவர்களிடம் பெற்றோரிடம் இருந்து ஒப்புதல் கடிதம் இல்லை. பெற்றோரை தொடர்பு கொண்டு குழந்தைகள் ஒப்படைக்கப்படும். பெற்றோரின் ஒப்புதலின்றி 95 குழந்தைகள் எதற்காக பஸ்சில் அழைத்து செல்லப்பட்டனர் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    உத்தரப்பிரதேச குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் சுசித்ரா சதுர்வேதியிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில், குழந்தைகள் கொண்டு செல்லப்படுவதை அறிந்துகொண்டதாக கூறினார்.

    • கவர்னர் ஆனந்திபென் படேல் உத்தரவின் பேரில் பல்கலைக்கழக துணைவேந்தர் வந்தனா சிங் விசாரணை நடத்தினார்.
    • இரண்டு பேராசிரியர்கள் லஞ்சமாக பணம் வாங்கிக் கொண்டு மதிப்பெண் வழங்கியது தெரியவந்தது.

    உத்தரபிரதேச மாநிலம் ஜோன்பூரில் வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகம் உள்ளது. கடந்த வருடம் பி.பார்ம் செமஸ்டர் தேர்வின் முடிவுகள் கடந்த ஆகஸ்டில் வெளியாகின. இதில் நன்கு படிக்கும் மாணவர்களை விட அதிகமாக 4 பேருக்கு 50 சதவீதம் முதல் 54 சதவீதம் வரை மதிப்பெண் கிடைத்துள்ளது.

    இதில் சந்தேகம் எழுந்ததால் அந்த 4 மாணவர்களின் விடைத்தாள்கள், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வாங்கி பார்க்கப்பட்டது. இதில் 4 மாணவர்களுமே விடைகளுக்கு பதிலாக ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஹனுமான், ஜெய் பஜ்ரங்பலி போன்ற வாசகங்களை எழுதி பக்கங்களை நிரப்பியிருந்தனர். இன்னொரு மாணவர், கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை எழுதியிருந்தார். இந்த விவகாரத்தில் விசாரணை கோரி பல்கலைக்கழக முன்னாள் மாணவர் திவ்யான்ஷூ சிங் புகார் அளித்தார். இது தொடர்பாக கவர்னர் ஆனந்திபென் படேல் உத்தரவின் பேரில் பல்கலைக்கழக துணைவேந்தர் வந்தனா சிங் விசாரணை நடத்தினார்.

    இதில் இரண்டு பேராசிரியர்கள் லஞ்சமாக பணம் வாங்கிக் கொண்டு மதிப்பெண் வழங்கியது தெரியவந்தது. இதையடுத்து வினய்வர்மா, ஆஷிஷ்குப்தா என்ற 2 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் இதற்கு முன் பல மாணவர்களை தேர்வில் காப்பியடிக்க அனுமதித்ததாக புகார்கள் வெளியாகின.

    • 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
    • 2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

    இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.

    இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது.

    இதைத்தொடர்ந்து 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

    2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், மணிப்பூர், திரிபுரா, காஷ்மீர் போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு உத்தரப் பிரதசேம் மாநிலம் அம்ரோஹாவில் உள்ள வாக்குச்சாவடியில் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தனது வாக்கினை பதிவு செய்தார்.

    • இந்தியா கூட்டணி மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அரசமைப்பை மாற்றுவதற்காக வாக்குகள் கோருகிறது.
    • அவர்கள் பொருளாதார அடிப்படையில் மட்டும் கணக்கெடுப்பு நடத்த விரும்பவில்லை.

    பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆன்லாவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது பேசும்போது அவர் கூறியதாவது:-

    இந்தியா கூட்டணி மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அரசமைப்பை மாற்றுவதற்காக வாக்குகள் கோருகிறது. அவர்கள் பொருளாதார அடிப்படையில் மட்டும் கணக்கெடுப்பு நடத்த விரும்பவில்லை. அமைப்புகள் மற்றும் அலுவலங்கள் அடிப்படையிலும் கணக்கெடுப்பு நடத்த விரும்புகிறார்கள்.

    பிறப்படுத்தப்பட்டோர் அல்லது தலித் குடும்பத்தை சேர்ந்த இருவர் வேலை செய்தால், அவர்கள் அதில் ஒருவர் வேலையை பறித்து, நாட்டின் வளத்தின் முதல் உரிமையை பெற்றிருக்க வேண்டும் என யாரை குறிப்பிட்டார்களோ அவர்களுக்கு வழங்குவார்கள்" என்றார்.

    மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள் நாட்டின் வளங்களில் முதல் உரிமை கோரலை பெற்றிருக்க வேண்டும் எனக் கூறியதை மேற்கோள் காட்டி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • கேரள மாநிலம் வயநாட்டில் தற்போது எம்.பி.யாக இருந்து வரும் ராகுல் காந்தி கடந்த தேர்தலில் அமேதி தொகுதியிலும் போட்டியிட்டார்.
    • ராகுல் காந்தியும், பிரியங்காவும் மே மாதம் 1-ந்தேதியில் இருந்து 3-ந்தேதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் நேரு குடும்பத்தின் கோட்டையாக ரேபரேலி தொகுதி இருந்து வருகிறது. கடந்த 1999-ம் ஆண்டு முதல் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இத்தொகுதி எம்.பி.யாக உள்ளார். சென்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்ற ஒரே தொகுதி ரேபரேலி ஆகும்.

    ஆனால் இம்முறை சோனியா காந்தி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. இதையடுத்து அவர் மேல்- சபை எம்.பியாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் வருகிற தேர்தலில் ரேபரேலியில் யார் போட்டியிட போகிறார்கள்? என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. இதுவரை காங்கிரஸ் சார்பில் இங்கு போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை.

    நேரு குடும்பத்துக்கு சொந்தமானதாக கருதப்படும் இத்தொகுதியில் சோனியா காந்தியின் மகளும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி களம் இறக்கப்பட உள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வரும் பிரியங்கா முதல் முறையாக தேர்தலை நேரடியாக சந்திக்கும் முதல் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    உத்தரபிரசேதத்தின் மற்றொரு தொகுதியான அமேதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிட இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கேரள மாநிலம் வயநாட்டில் தற்போது எம்.பி.யாக இருந்து வரும் ராகுல் காந்தி கடந்த தேர்தலில் அமேதி தொகுதியிலும் போட்டியிட்டார்.

    கடந்த 2004-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 முறை எம்.பி.யாக இருந்த அவர் சென்ற தேர்தலில் தற்போதைய மத்திய மந்திரியான ஸ்ருமிதி இரானியிடம் தோல்வியை தழுவினார். இருந்தபோதிலும் இம்முறை பாரதிய ஜனதாவை வீழ்த்தி வெற்றி கனியை எப்படியாவது பறித்து விட வேண்டும் என்ற முனைப்பில் ராகுல் காந்தி அமேதியில் களம் இறங்க உள்ளார். இன்னும் ஓரிரு நாளில் இருவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட உள்ளனர். இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ராகுல் காந்தியும், பிரியங்காவும் மே மாதம் 1-ந்தேதியில் இருந்து 3-ந்தேதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மனு தாக்கல் செய்வதற்கு முன்பாக இருவரும் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று வழிபட முடிவு செய்துள்ளனர்.

    அமேதி மற்றும் ரேபரேலி தொகுதியில் 2-ம் கட்டமாக மே மாதம் 20-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 26-ந்தேதி தொடங்கி மே மாதம் 3-ந்தேதியுடன் முடிவடைய இருக்கிறது.

    • திடீரென ரெயில் நகரத் தொடங்கியதால் அதிர்ச்சி அடைந்த சிறுவன் இறங்க முடியாமல் தவித்துள்ளான்.
    • சிறுவனை மீட்டு குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைத்த போலீசார், அச்சிறுவனை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்தனர்.

    உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோ ஆலம்நகர் பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒளிந்து பிடித்து விளையாடி கொண்டிருந்தான். அப்போது யார் கண்ணிலும் சிக்காமல் இருப்பதற்காக முடிவு செய்த சிறுவன் அங்கு தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரெயில் மீது ஏறி ஒளிந்துள்ளான். ஆனால் திடீரென ரெயில் நகரத் தொடங்கியதால் அதிர்ச்சி அடைந்த சிறுவன் இறங்க முடியாமல் தவித்துள்ளான்.

    பின்னர் ரெயிலின் சக்கரங்களுக்கு இடையே அமர்ந்து அழுதுகொண்டே பயணித்துள்ளான். அந்த ரெயில் ஹர்டோய் ரெயில் நிலையத்தை அடைந்த போது அங்கு வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே பாதுகாப்பு படையினர் சக்கரங்களுக்கு இடையே சிறுவன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் அந்த சிறுவனை பத்திரமாக மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அந்த சிறுவன் லக்னோவின் ராஜாஜிபுரத்தில் உள்ள பாலாஜி மந்திர் பகுதியை சேர்ந்த அஜய் என்பதும், ரெயில் சக்கரங்களுக்கிடையே அமர்ந்து சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ததும் தெரிய வந்தது. அந்த சிறுவனை மீட்டு குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைத்த போலீசார், அச்சிறுவனை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்தனர்.

    • உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன
    • 2000, 2004,2009 ஆகிய ஆண்டுகளில் கன்னோஜ் தொகுதியில் இருந்து அகிலேஷ் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார்

    உத்தரப் பிரதேச மாநில எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மக்களவை தேர்தலில் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடுகிறார் என சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது. நாளை அவர் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்.

    இதற்கு முன்னதாக இந்த தொகுதியில் தேஜ் பிரதாப் யாதவ் போட்டியிடுவார் என சமாஜ்வாதி கட்சி அறிவித்திருந்தது.

    2000, 2004,2009 ஆகிய ஆண்டுகளில் கன்னோஜ் தொகுதியில் இருந்து அகிலேஷ் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார். 2012 இல் அவர் முதலமைச்சரான பிறகு அவர் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். அப்போது நடந்த இடைத்தேர்தலில் அவரது மனைவி டிம்பிள் யாதவ் போட்டியின்றி வெற்றி பெற்றார். பின்னர், 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அத்தொகுதியில் டிம்பிள் வெற்றி பெற்றார். ஆனால் அவர் 2019 இல் பாஜகவின் சுப்ரத் பதக்கிடம் அவர் தோல்வியடைந்தார்.

    இந்த தொகுதிக்கு மே 13-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அங்கு உள்ள 80 இடங்களில் 17 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடுகிறது, மீதமுள்ள 63 இடங்களில் சமாஜ்வாதி கட்சியும் அதன் சிறிய கூட்டணிக் கட்சிகளும் போட்டியிடுகின்றன.

    ×