search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யூடியூப் சேனல்"

    • தன்னைப் பற்றி அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி தனியார் யூட்யூப் சேனல் ஒன்று வீடியோக்களை பதிவு செய்துள்ளது.
    • இதனால் தனது குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்

    தனது குடும்பத்தை பற்றி தவறான தகவல்களை யூடியூப் சேனலில் பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் அருண் விஜய் புகார் அளித்துள்ளார்.

    அருண் விஜய் சார்பில் அவரது வழக்கறிஞர் புகார் மனு அளித்துள்ளார்.

    அந்த புகார் மனுவில், "தன்னைப் பற்றியும் தனது தந்தை விஜயகுமாரின் முதல் மனைவி பற்றியும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி தனியார் யூட்யூப் சேனல் ஒன்று வீடியோக்களை பதிவு செய்துள்ளது. இதனால் தனது குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் தவறான தகவல்களைப் பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர் கோரிக்கை வைத்துள்ளார். 

    • உலகின் முதல் அரசியல் தலைவர் என்ற பெருமை.
    • பிரேசிலின் முன்னாள் அதிபர் இரண்டாவது இடம்.

    பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட யூடியூப் சேனலில் சந்தாதாரர் எண்ணிக்கை இரண்டு கோடியை கடந்து புதிய மைல்கல் எட்டியது. யூடியூபில் இத்தனை சந்தாதாரர் பெற்ற உலகின் முதல் அரசியல் தலைவர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.

    இதுவரை பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்கள் 450 கோடிக்கும் அதிக பார்வைகளை கடந்துள்ளது. யூடியூபில் அதிக சந்தாதாரர்கள் பெற்ற உலக தலைவர்கள் பட்டியலில் பிரேசிலின் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவ் 64 லட்சம் சந்தாதாரர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

     


    அதிக பார்வைகளை கொண்ட தலைவர்கள் பட்டியலில் உக்ரைன் அதிபர் விளோடிமிர் ஜெலன்ஸ்கி இரண்டாவது இடத்தில் உள்ளார். இவரது யூடியூப் சேனல் 22.4 கோடி பார்வைகளை கொண்டிருக்கிறது. இது பிரதமர் மோடியின் சேனலில் இருப்பதை விட பலமடங்கு குறைவு ஆகும்.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் 7.89 லட்சம் சந்தாதாரர்களையும், துருக்கி அதிபர் ரசிப் தைய்யிப் எர்டோகனின் யூடியூப் சேனல் 3.16 லட்சம் சந்தாதாரர்களையும் பெற்று இருக்கிறது.

    • சமூக வலைதளங்களை சிலர் நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்துகிறார்கள்.
    • சிறுமி தேவிகா தனது பள்ளிக்கு பஸ் ஏற 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றபடி இருந்திருக்கிறார்.

    திருவனந்தபுரம்:

    தற்போதைய நவீன காலத்தில் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களின் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. அதிலும் சிறிய குழந்தைகள் கூட செல்போனை சர்வ சாதாரணமாக பயன்படுத்துவதை காண முடிகிறது.

    செல்போன் பயன்படுத்துவோர் பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருக்கின்றனர். அவ்வாறு கணக்கு வைத்திருப்பவர்கள் அதிக லைக்குகளை வாங்குவதற்காக வித்தியாசமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள்.

    அதே சமூக வலைதளங்களை சிலர் நல்ல விஷயங்களுக்கும் பயன்படுத்துகிறார்கள். அதாவது மருத்துவ சிகிச்சைகளுக்கு பணம் இல்லாமல் தவிப்பவர்கள், படிக்க வசதியில்லாமல் தவிக்கும் குழந்தைகள் உள்ளிட்ட தகவல்களையும் வெளியிடுகிறார்கள்.

    இதன்மூலம் கஷ்டப்படக்கூடிய நபர்கள், பணம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை பெற முடிகிறது. அதேபோன்ற ஒரு செயலில் கேரளாவை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் செயல்பட்டுள்ளார்.

    புற்றுநோய் பாதித்து அவதிப்பட்டு வரும் தனது பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவரின் மருத்துவ செலவுக்கு நிதி திரட்டுவதற்காகவே அவர் யூடியூப்பில் கணக்கு தொடங்கியிருக்கிறார். அதன்மூலம் அவருக்கு கிடைத்த 3 லட்சம் ரூபாயை அந்த பெண்ணின் சிகிச்சைக்கு கொடுத்திருக்கிறார்.

    கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் ராஜன். பான் ஷாப் நடத்தி வருகிறார். இவரது மகள் தேவிகா. 7-ம் வகுப்பு படித்து வருகிறார். ராஜனின் சொற்ப வருமானத்திலேயே அவரது குடும்பம் இயங்கி வருகிறது. இதனால் தனது மகளுக்கு சைக்கிள் கூட வாங்க வழியில்லாமல் இருந்திருக்கிறார்.

    இதன் காரணமாக சிறுமி தேவிகா தனது பள்ளிக்கு பஸ் ஏற 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றபடி இருந்திருக்கிறார். இதனால் சைக்கிள் வாங்குவது சிறுமியின் கனவாக இருந்துள்ளது. சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் பிரேமா. அவர் புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார்.

    அந்த பெண்ணின் குடும்பமும் மிகவும் கஷ்டப்பட்ட குடும்பம். இதனால் அந்த பெண்ணுக்கு சிகிச்சை பெறக்கூட போதிய பணம் இல்லை. இதனையறிந்த சிறுமி தேவிகா, அந்த பெண்ணுக்கு உதவுவதற்காக யூடியூப்பில் "தேவுஸ் வேர்ல்ட்" என்ற பெயரில் கணக்கை தொடங்கினார். அதில் தனது கனவு மற்றும் தனது வீட்டின் அருகே சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிக்கும் பெண் பற்றிய தகவல்களை பதிவிட்டார்.

    மேலும் சிறுமி தேவிகா தனக்கு அதிர்ஷ்ட குலுக்கலில் கிடைத்த சைக்கிளை விற்று, அதில் கிடைத்த பணத்தை புற்றுநோய் பாதித்த பெண்ணின் சிகிச்சைக்கு வழங்கினார். சிறுமி தேவிகாவின் இந்த செயலை திருச்சூர் மாவட்ட கலெக்டர் கிருஷ்ண தேஜா அறிந்தார்.

    அவர் சிறுமியை நேரில் வரவழைத்து பாராட்டினார். மேலும் சிறுமியின் செயல்பாடு குறித்து கலெக்டர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

    அதன்பிறகே சிறுமியின் செயல் வெளியுலகுக்கு தெரியவந்தது. இதையடுத்து பலரும் சிறுமிக்கு பண உதவி செய்தனர். மேலும் பலர் சிறுமிக்கு சைக்கிளும் வாங்கிக் கொடுத்தனர். மொத்தம் சிறுமிக்கு 12 சைக்கிள்கள் கிடைத்துள்ளன. அவை அனைத்தையும் விற்றார்.

    நிதியுதவி மற்றும் சைக்கிள்களை விற்று கிடைத்த பணம் என மொத்தம் ரூ.3 லட்சம் நிதியை சிறுமி திரட்டியிருக்கிறார். அவற்றை புற்றுநோயால் பாதித்து அவதிபட்ட பெண்ணுக்கு சிகிச்சைக்காக வழங்கியிருக்கிறார்.

    தனது ஆசையைப்பற்றி சிந்திக்காமல், பரிசாக கிடைத்த சைக்கிள்களையும் விற்று, அதில் கிடைத்த பணத்தை புற்றுநோய் பாதித்த பெண்ணுக்கு வழங்கிய மாணவி தேவிகாவை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

    • ஆன்லைன் முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டி கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டி இருக்கிறது.
    • இதுவரை 35 பேர் ரூ.5 கோடி வரை பணம் கட்டி ஏமாந்துள்ளனர்.

    சென்னை:

    ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றன. உங்கள் செல்போன் நம்பருக்கு குறிப்பிட்ட அளவுக்கு பெரிய தொகை பரிசாக விழுந்துள்ளது.

    அதனை பெறுவதற்கு நீங்கள் பாதி அளவுக்கு பணம் செலுத்த வேண்டும் என்று ஆசை காட்டுவார்கள். இதை நம்பி பெரிய தொகைக்கு ஆசைப்பட்டு மோசடிக்காரர்கள் கேட்கும் தொகையை கட்டி ஏமாந்தவர்கள் ஏராளம்.

    இது போன்று குறிப்பிட்ட சில லிங்க்குகளை அனுப்பி அதனை கிளிக் செய்தால் உங்களுக்கு இத்தனை லட்சம் பணம் கிடைக்கும் என்று ஆசைகாட்டி மோசடி செய்வதும் மோசடியின் இன்னொரு வகை.

    அதே நேரத்தில் உங்களுக்கு சில லட்சங்கள் பரிசு கூப்பன் விழுந்துள்ளது. அதனை நீங்கள் பெற வேண்டுமென்றால் ஆன்லைனில் நாங்கள் கூறும் லிங்க்கில் சென்று குறிப்பிட்ட பணத்தை கட்டுங்கள் என்று கூறுவார்கள். இதை நம்பி பணத்தை இழந்து பலரும் தவித்து வருகிறார்கள். இப்படி ஆன்லைன் மோசடிகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

    அந்த வகையில் புதிது புதிதாக ஆன்லைன் மோசடிகள் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. இதன்படி சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் மோசடிக்கும்பல் ஆன்லைன் முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டி கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டி இருக்கிறது.

    புதிய மோசடி கும்பல் இந்த முறை யூடியூப் சேனல் மூலமாக வலை விரித்து உள்ளது. யூடியூப் சேனல் ஒன்றின் லிங்க்கை அனுப்பி இதனை நீங்கள் லைக் செய்தால் போதும். உங்களுக்கு முதலில் சிறிய தொகை கிடைக்கும் என்று ஆசை காட்டுவார்கள். பின்னர் தனியாக டெலிகிராம் குரூப் ஒன்றை தொடங்கி இருப்பதாக கூறி அதில் உங்களையும் டீம் லீடர் போல சேர்த்து வங்கி கணக்கு ஒன்றை தொடங்க சொல்லி அதில் சென்று நீங்கள் பணம் செலுத்தினால் அதில் அதிக வட்டி கிடைக்கும் என ஆசை காட்டுவார்கள்.

    இதை நம்பி சென்னையை சேர்ந்த என்ஜினீயர்கள், தொழில் அதிபர்கள் லட்சம் முதல் கோடி வரை பணத்தை முதலீடு செய்து ஏமாந்து தவித்து வருகிறார்கள். இதுவரை 35 பேர் ரூ.5 கோடி வரை பணம் கட்டி ஏமாந்துள்ளனர். புகார் கொடுக்காமல் பலர் உள்ளனர். அவர்களின் எண்ணிக்கை நூற்றுக்க ணக்கில் இருக்கும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஒருவர் ரூ.30 லட்சம் பணத்தையும் , தொழில் அதிபர் ஒருவர் ரூ.1.2 கோடியையும் இழந்துள்ளனர்.

    இதில் நீங்கள் தொடக்கத்தில் கட்டும் ஆயிரக்கணக்கான பணத்துக்கு கூடுதல் வட்டியை மோசடி ஆசாமிகள் வழங்கி விடுவார்கள். அந்த பணத்தை நீங்கள் எடுத்து பயன்படுத்தி இருப்பீர்கள்.

    இதன் பின்னர் நீங்கள் முதலீடு செய்யும் லட்சங்களையும் கோடிகளையும் மட்டுமே மோசடி பேர் வழிகள் தடுத்து நிறுத்தி சுருட்டி விடுகிறார்கள். இதனால் கடன் வாங்கி பணம் கட்டிய பலர் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள். இது தொடர்பாக போலீசார் கூறும்போது தேவையில்லாமல் ஆன்லைனில் சாட்டிங் செய்வதை தவிர்த்தலே போதும். இது போன்ற சிக்கல்களில் இருந்து தப்ப முடியும் என்று எச்சரித்து உள்ளனர்.

    • பொய்யான செய்தி பரப்பிய 6 யூடியூப் சேனல்களை மத்திய அரசு அதிரடியாக முடக்கியது.
    • இந்த சேனல்கள் மொத்தமாக சுமார் 20 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் நடைபெறும் தேர்தல்கள், பாராளுமன்றம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நடைமுறைகள், அரசின் இயக்கம் உள்ளிட்டவை குறித்து பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக 6 யூடியூப் தளங்கள் மீது புகார்கள் எழுந்தன.

    இதுதொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஊடக தகவல் மையத்தின் உண்மை கண்டறியும் குழுவினர் விசாரணை நடத்தினர். இதில் மேற்படி யூடியூப் சேனல்கள் பொய்யான செய்திகளை பரப்பி வந்தது தெரியவந்தது. இந்த சேனல்கள் மொத்தமாக சுமார் 20 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளதும், இவை வெளியிட்ட வீடியோக்கள் 51 கோடிக்கு அதிகமான பார்வைகளைப் பெற்றிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்நிலையில், அரசின் முக்கிய நிறுவனங்கள் தொடர்பாக பொய் தகவல்களைப் பரப்பிய இந்த சேனல்களை மத்திய அரசு அதிரடியாக முடக்கியது.

    • யூடியூப் சேனல் ஒன்றில் இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் பொய்யான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன.
    • குறிப்பிட்ட சமூகத்தினரை அவமதிக்கும் வகையிலும் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும் அதில் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

    சென்னை:

    பாரத் இந்து முன்னணி அமைப்பின் மத்தி சென்னை மாவட்ட செயலாளர் சுரேஷ், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    யூடியூப் சேனல் ஒன்றில் இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் பொய்யான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பிட்ட சமூகத்தினரை அவமதிக்கும் வகையிலும் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும் அதில் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

    இதுதொடர்பாக வீடியோக்களும் யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ளது.

    அதில் பேசும் நபர் இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துக்களை கூறிவருகிறார். இது இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மிகப்பெரிய அளவில் மத மாற்றத்தை தூண்டும் வகையிலும் அதில் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

    எனவே யூடியூப் சேனல் மீதும் அதில் பேசும் நபர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முடக்கப்பட்டுள்ள யூடியூப் சேனல்கள் பொய்யான செய்திகளை பரப்பி வந்தன.
    • மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கத்தில் அவதூறு செய்திகளை வெளியிட்டன.

    புதுடெல்லி

    பொய் செய்திகளை பரப்பும் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. அந்த விதிமுறைகளின் கீழ், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சில யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியது.

    அவ்வப்போது நடந்து வந்த இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக, கடந்த 18-ந் தேதி 8 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டன. இவற்றில் ஒரு சேனல், பாகிஸ்தானில் இருந்து இயங்கி வருகிறது. இத்துடன் மொத்தம் 102 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன.

    இதற்கான காரணங்கள் குறித்து மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சக உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

    முடக்கப்பட்டுள்ள யூடியூப் சேனல்கள், இந்திய பார்வையாளர்களை குறிவைத்து பொய்யான செய்திகளை பரப்பி வந்தன. மத வெறுப்புணர்வை தோற்றுவித்து, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கத்தில் அவதூறு செய்திகளை வெளியிட்டன.

    உதாரணமாக, இந்தியாவில் அணுஆயுத வெடிவிபத்து நடந்ததாகவும், பக்ரீத் பண்டிகை கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதாகவும், முஸ்லிம்களின் வழிபாட்டு தலங்கள் திட்டமிட்டு தாக்கப்பட்டதாகவும், துருக்கி மீது இந்தியாவும், எகிப்தும் இணைந்து படையெடுத்ததாகவும் பொய்ச்செய்தி வெளியிட்டன.

    குறிப்பாக, ஏ.எம்.ரஸ்வி என்ற சேனல், அஜ்மீர் தர்கா மீது ராணுவ தாக்குதல் நடந்ததாகவும், ஒரு கோவில் மீது முஸ்லிம்கள் இஸ்லாமிய கொடியை பறக்க விட்டதாகவும், ஒரு பாகிஸ்தான் சேனல், குதுப்மினார் மசூதி இடிக்கப்பட்டதாகவும் பொய்ச்செய்தி வெளியிட்டன.

    மற்றொரு சேனல், வடகொரியா அதிபர் அயோத்திக்கு தனது படையை அனுப்பியதாகவும், இன்னொரு சேனல் இந்தியா தனது அணு ஆயுதத்தை தொலைத்து விட்டதாகவும், அது பாகிஸ்தானின் வெற்றி என்றும் தெரிவித்தன.

    இந்த சேனல்கள், நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஊறு விளைவிப்பதாக அமைந்துள்ளன. அண்டை நாடுகளுடனான நட்புறவை கெடுக்கும் விதத்தில் உள்ளன.

    முடக்கப்பட்ட யூடியூப் சேனல்கள், பொய்ச் செய்திகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதுடன், அவற்றின் மூலம் சம்பாதித்து வருகின்றன. விளம்பரங்கள் மூலமும் வருவாய் ஈட்டுகின்றன. மேலும், பிரபலமான டெலிவிஷன் சேனல்களின் அடையாள சின்னத்தை மேற்கோள்காட்டி, அது உண்மை செய்திதான் என்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றன.

    இத்தகைய யூடியூப் சேனல்கள் மற்றும் சமூக வலைத்தள கணக்குகளை மேல்நடவடிக்கைக்காக உளவு அமைப்புகள் கண்காணித்து வருகின்றன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×