என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sanjay Manjrekar"

    • இரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது.
    • லீட்சில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

    பர்மிங்காம்:

    சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லீட்சில் நடைபெற்ற முதல் டெஸ் டில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

    இதற்கிடையே, இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

    இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம் இல்லை. முதல் டெஸ்டில் ஆடிய வீரர்களே களமிறங்குகின்றனர்.

    இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    இந்நிலையில், இரண்டாவது டெஸ்டில் முகமது சிராஜை நீக்கவேண்டும் என முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியதாவது:

    முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோரில் சிராஜை இரண்டாவது டெஸ்டில் நீக்குவதுதான் சரியாக இருக்கும்.

    முதல் டெஸ்டில் அவரைவிட பிரசித் கிருஷ்ணா நேர்த்தியாக பந்து வீசினார். இதனால் பிரசித் கிருஷ்ணாவை தேர்வு செய்யலாம்.

    இது கடினமான முடிவாக இருக்கும். தற்போதைய யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

    ஒரு வேகப்பந்து வீரருக்கு பதிலாக குல்தீப் யாதவையும், ஷர்துல் தாக்குருக்கு பதிலாக நிதிஷ்குமார் ரெட்டியையும் சேர்க்கலாம் என தெரிவித்தார்.

    • பிரசித் கிருஷ்ணா போன்ற இளம் பவுலர் மீது குறைகள் இருந்தாலும் அதை விமர்சனம் செய்வது நியாயமற்றது.
    • ஆனால் ஜடேஜாவை நான் விமர்சிப்பேன்.

    இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. 6 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட் சதத்தால் 364 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.

    இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 371 ரன் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 82 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 373 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் ரவீந்திர ஜடேஜா தன்னுடைய அனுபவத்தை வீணடித்து விட்டதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பிட்ச் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எந்த ஆதரவையும் கொடுக்கவில்லை. அந்த பிட்ச்சில் பும்ராவால் கூட எதையும் செய்ய முடியவில்லை. காற்றிலும் உதவியும் கிடைக்கவில்லை. இதுபோக பும்ரா, ஜடேஜாவுக்கு எதிராக பென் டக்கெட் சிறந்த ரெக்கார்டை வைத்துள்ளார்.

    அவரை சொந்த மண்ணில் நடைபெற்ற 2024 தொடரில் கூட ஜடேஜா அவுட்டாக்கியதாக எனக்குத் தெரியவில்லை அப்படி உங்களுடைய 2 முன்னணி பவுலர்களுக்கு எதிராக செட்டிலான இங்கிலாந்து பேட்ஸ்மேன் விளையாடினால் அவர்களுக்கு வெற்றி உறுதியாகி விடும்.

    பிரசித் கிருஷ்ணா போன்ற இளம் பவுலர் மீது குறைகள் இருந்தாலும் அதை விமர்சனம் செய்வது நியாயமற்றது. ஆனால் ஜடேஜாவை நான் விமர்சிப்பேன். ஏனெனில் கடைசி நாளில் பிட்ச்சில் அவருக்கு உதவி செய்ய ரஃப் இருந்தது. அது வழக்கமான இங்கிலாந்து சூழ்நிலைகள் கிடையாது. அந்த காலடிகளை பென் ஸ்டோக்ஸ்க்கு எதிராக ஜடேஜா பயன்படுத்தவில்லை. மிகவும் தாமதமாக பென் டக்கெட்டுக்கு எதிராக பயன்படுத்தினார்.

    ஆனால் அவரைப் போன்ற அனுபவமிக்க பவுலர் அதை அதிகம் பயன்படுத்துவார் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். அங்கே தான் ஜடேஜா ஏமாற்றத்தைக் கொடுத்தார் என்று நினைக்கிறேன்.

    ஒரு காலத்தில் இந்தியா மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை விளையாட வைக்கும். அது நியூசிலாந்தாக இருந்தாலும் சரி, இங்கிலாந்தாக இருந்தாலும் சரி. குல்தீப் உங்கள் அணியில் இருந்தால், அவரை விளையாட விடுங்கள். இங்கிலாந்தில் விளையாடுவதால் மட்டும் வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்யாதீர்கள்.

    நான் ஒரு வேகப்பந்து வீச்சாளரை விட்டுவிட்டு குல்தீப் யாதவை அணியில் சேர்ப்பேன். இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக குல்தீப் யாதவ் இடம் பெற வேண்டும்.

    என்று சஞ்சய் மஞ்ரேக்கர் கூறினார்.

    • சுப்மான் கில் டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து போட்டிகளிலும் நன்றாக விளையாடுகிறார்.
    • நடப்பாண்டில் 50 ஓவர் கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதனால் டி20 அணியில் அவர் விளையாடும் வாய்ப்பு மிகவும் குறைவு.

    மும்பை:

    இலங்கைக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் பிசிசிஐ அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. ஒரு நாள் கிரிக்கெட் அணியில் இருந்து ஷிகர் தவான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். துணை கேப்டன் பதவியில் இருந்து கே எல் ராகுல் தூக்கப்பட்டிருக்கிறார். அதேபோன்று டி20 அணியில் விராட் கோலி ,ரோஹித் சர்மா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்திய அணியின் முக்கிய வீரராக கருதப்படும் ரிஷப் பண்ட் இலங்கைத் தொடரில் விளையாடவில்லை. ஸ்ரேயாஸ், முகமது சிராஜ் ஆகியோருக்கு டி20 போட்டிகளில் ஓய்வு வழங்கப்பட்டிருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    இந்திய அணி தேர்வு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளதாவது:-

    ஷிகர் தவான் குறித்து நிச்சயமாக கவலைப்படுகிறேன். அவருக்கான வாய்ப்பு முடிவுக்கு வந்துவிட்டது. முதலில் டி20 மற்றும் டெஸ்ட் அணியில் தனது இடத்தை இழந்தார். அதை எல்லாம் தாண்டி ஒரு நாள் போட்டியில் தவானுக்கு வாய்ப்பு கிடைத்தது.

    ஏதேனும் ஒரு இன்னிங்ஸில் தவான் நன்றாக விளையாடி வந்தார். ஆனால் இப்போதெல்லாம் சில போட்டிகளில் ரன் சேர்க்கவில்லை என்றால் உங்களுடைய இடத்திற்கு ஆபத்து வந்துவிடும். காரணம் பல இளைஞர்கள் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஷிகர் தவானுக்கு மாற்றாக சுப்மான் கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கிறேன். சுப்மான் கில் டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து போட்டிகளிலும் நன்றாக விளையாடுகிறார்.

    இதனால் ஷிகர் தவானுக்கு சிக்கல் அதிகரித்து விட்டது. இதேபோன்று இஷான் கிஷனும் தொடக்க வீரருக்கான வாய்ப்புக்காக காத்திருக்கிறார். இதற்காக தவான் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டது என்று சொல்ல முடியாது. எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

    ஹர்திக் பாண்டியா டி20 அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறது ஐபிஎல் தொடரில் சாதித்ததற்காக கிடைத்த வெகுமானம். கேப்டனாக ஹர்திக் சிறப்பாக செயல்பட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.

    ஐபிஎல் போன்ற பெரிய தொடரில் அவர் அணியை வழி நடத்திய விதம் பாராட்டத்தக்கது. விராட் கோலியை பொறுத்தவரை டி20 போட்டியில் அவருடைய இடத்திற்கு ஆபத்து வந்துவிட்டது. 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2023 ஆம் ஆண்டு நடைபெறுகிறது. இதனால் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் தான் அதிகம் விளையாடுவார்.

    இந்திய ஒரு நாள் அணியில் முக்கியமான வீரராக விராட் கோலி திகழ்வதால் அவர் நடப்பாண்டில் 50 ஓவர் கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதனால் டி20 அணியில் அவர் விளையாடும் வாய்ப்பு மிகவும் குறைவு. இதனால் டி20 அணியில் பல இளம் வீரர்கள் தங்களது வாய்ப்பை பயன்படுத்தி கொள்வார்கள் என்பதால், விராட் கோலிக்கு நெருக்கடி ஏற்படும்.

    எனினும் அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பையில் விளையாட விராட் கோலி நிச்சயம் ஆர்வம் காட்டுவார். இதனால் விராட் கோலி டி 20 கிரிக்கெட்டில் விளையாட மாட்டார் என்று சொல்ல முடியாது.

    • ஐபிஎல் தொடரில் வீரர்கள் விளையாடுவதற்கு எந்த கட்டுப்பாடுகளும் இருக்கக் கூடாது.
    • ஐபிஎல் நிர்வாகம் அணி உரிமையாளர்களுக்கு ஸ்பெஷல் சலுகையை வழங்க வேண்டும்.

    ஐபிஎல் தொடரின் 16-வது சீசன் மார்ச் 31ஆம் தேதியன்று அகமதாபாத் நகரில் கோலாகலமாக துவங்கியது. இந்த தொடரில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கும் 10 அணிகளில் பல்வேறு இந்திய நட்சத்திர வீரர்கள் தங்களது அணிகளுக்காக விளையாட தயாராகி வருகின்றனர்.

    இருப்பினும் வரும் ஜூன் மாதம் லண்டன் ஓவல் மைதானத்தில் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி நடைபெறுகிறது. அதில் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்கிறது.

    முன்னதாக கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டியில் இதே போல் ஒரு வாரம் முன்பாக இங்கிலாந்து பயணித்து வலை பயிற்சிகளை மட்டும் செய்து நேரடியாக களமிறங்கிய விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை நியூசிலாந்து தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.

    டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் வீரர்களை 2023 ஐபிஎல் தொடரில் குறிப்பிட்ட சில போட்டிகளில் ஓய்வு பெறுமாறு ரோகித் சர்மா அறிவுறுத்தியிருந்தார். சொல்லப்போனால் மும்பை அணியில் சில போட்டிகளில் ரோகித் சர்மா ஓய்வெடுப்பார் என்றும் அவருக்கு பதில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக வழி நடத்துவார் என்றும் நேற்று செய்திகள் வெளியானது.

    இந்நிலையில் பல கோடி ரூபாய்களை கொடுக்கும் ஐபிஎல் நிர்வாகங்கள் ஏன் அது போன்ற ஓய்வு கொடுக்க வேண்டும் என்று முன்னாள் இந்த வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.

    இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:-

    ஐபிஎல் தொடரின் வெற்றி பெரும்பாலும் வீரர்களின் ஃபிட்னஸை அடிப்படையாக கொண்டுள்ளது. அதில் அனைவரும் தங்களுடைய முழு திறமைக்கேற்றார் போல் விளையாடுகிறார்கள்.

    அதனாலயே ரசிகர்கள் விரும்பும் இந்த தொடர் மிகவும் பிரபலமாக இருக்கிறது. எனவே உலகக்கோப்பை போன்ற தொடர்களில் விளையாட வேண்டும் என்பதற்காக முக்கிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் ஓய்வு பெறுவதை விரும்பும் ஒருவராக நான் இருப்பதில்லை. ஏனெனில் சர்வதேச அளவில் விளையாடும் போதும் காயத்தை சந்தித்து நிறைய முக்கிய வீரர்கள் வெளியேறுகிறார்கள் என்பதால் எப்போதும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

    எனவே ஐபிஎல் தொடரில் வீரர்கள் விளையாடுவதற்கு எந்த கட்டுப்பாடுகளும் இருக்கக் கூடாது. ஏனெனில் நிறைய பணத்தை செலவழிக்கும் அணி உரிமையாளர்களுக்கு தாங்கள் வாங்கும் வீரர்களை முழுமையாக தேவைப்படும் அளவுக்கு பயன்படுத்தும் சுதந்திரத்தை பெற வேண்டும். அதில் ஐபிஎல் நிர்வாகம் அணி உரிமையாளர்களுக்கு ஸ்பெஷல் சலுகையை வழங்க வேண்டும்.

    என்று கூறியுள்ளார். 

    • 2022 டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது.
    • ரோகித் சர்மா 28 பந்தில் 27 ரன்கள்தான் அடித்திருந்தார். விராட் கோலி 40 பந்தில் 50 ரன்கள் சேர்த்தார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது. இதற்கிடையே ஒவ்வொரு அணிகளும் எப்படி விளையாட வேண்டும். எதை செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது என வீரர்களுக்கு கிரிக்கெட் விமர்சகர்கள் புத்திமதி சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.

    இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தோல்வியடைந்தபோது ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி செய்த தவறை மீண்டும் செய்யக் கூடாது என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறுகையில் "இரண்டு வருடத்திற்கு முன்னதாக நடைபெற்ற கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் அடிலெய்டில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 20 ஓவரில் 168 ரன்கள் சேர்த்தது. ஆனால் முதல் 10 ஓவரில் 62 ரன்கள் மட்டுமே எடுத்து அதிர்ச்சி அளித்தது.

    ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஏராளமான பந்துகளை சந்தித்தனர். ரோகித் சர்மா 28 பந்தில் 27 ரன்கள் அடித்தார். ஸ்டிரைக் ரேட் 96. விராட் கோலி 40 பந்தில் 50 ரன்கள் எடுத்தார். ஸ்டிரைக் ரேட் 125. 18-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

    இந்த போட்டியில் (தொடரில்) இந்தியா தோல்வியடைந்தது. 33 பந்தில் 190 ஸ்டிரைக் ரேட்டுடன் 63 ரன்கள் அடித்த ஹர்திப் பாண்ட்யாவுக்கு நன்றி சொல்லனும். 10 ஓவரில் இங்கிலாந்து சேஸிங் செய்தது.

    இதில் இருந்து நாம் ஒன்றை உறுதியாக சொல்ல முடியும். அது என்னவென்றால் ரோகித் சர்மா, விராட் கோலி இந்த போட்டியில் செய்த அதே தவறை செய்யக் கூடாது. விராட் கோலி 2 வருடத்திற்கு முன்னதாக இருந்து அதே டி20 பிளேயர் அல்ல. வெளியில் இருந்து வந்த விமர்சனங்கள் அவரை இரண்டு வருடத்திற்கு முன்னதாக இருந்தை விட சிறந்த டி20 பேட்ஸ்மேனாக உருவாக்கியுள்ளது.

    இவ்வாறு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

    • துபேயின் பந்துவீச்சை இந்தியா அதிகம் பயன்படுத்தப் போவதில்லை என்று நினைக்கிறேன்.
    • சஞ்சு சாம்சன் கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடுவதில் அனுபவம் வாய்ந்து இருக்கிறார் என்று நான் நம்புகிறேன்.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ரோஹித் சர்மா தலைமையில் களமிறக்கியுள்ள இந்திய அணியானது அயர்லாந்துக்கு எதிரான தங்களது முதலாவது லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், நடப்பு உலகக்கோப்பை தொடரையும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

    இதையடுத்து ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியானது ஜூன் 9-ம் தேதி நியூயார்க்கில் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், உலகக்கோப்பை போட்டிகளில் சிவம் துபே பந்துவீச போவதில்லை என்றால் அவரது இடத்தை சஞ்சு சாம்சனிற்கு கொடுக்க வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    சிவம் துபே பந்துவீசப் போவதில்லை என்றால் அவருக்கு பதிலாக பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சனை பேட்டராக விளையாட வைக்க வேண்டும் என்பதே சரியான முடிவு. சஞ்சு சாம்சன் கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடுவதில் அனுபவம் வாய்ந்து இருக்கிறார் என்று நான் நம்புகிறேன்.

    மேலும் சர்வதேச அளவில் சஞ்சு சாம்சன் இந்தியா அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறேன். மேலும் துபேயின் பந்துவீச்சை இந்தியா அதிகம் பயன்படுத்தப் போவதில்லை என்று நினைக்கிறேன்.

    ஒரு பேட்டாராக அவரை நீங்கள் பயன்படுத்து உள்ளீர்கள் எனில் அவரைவிட சிறந்த பேட்டிங் உக்தியை கொண்டுள்ள சாம்சனை நீங்கள் நிச்சயம் பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும். ஏனெனில் சிவம் துபே சுழற்பந்து வீச்சுக்கு எதிராக நன்றாக விளையாடினாலும், சஞ்சு சாம்சனால் பந்தை தாமதமாக விளையாடுவதுடன் டைமிங்குடனும் விளையாட முடியும்.

    மேலும் அவரால் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பான புல் ஷாட்டும் விளையாட முடியும் என்பதால் பாகிஸ்தானுக்கு எதிரான அவரை பயன்படுத்துவது சிறந்த உத்தியாக இருக்கலாம்.

    இவ்வாறு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறினார்.

    • சூப்பர் 8 சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா வங்காளதேசத்தை இன்று எதிர்கொள்கிறது.
    • நடப்பு தொடரில் இந்திய அணியின் விராட் கோலி லீக் சுற்றில் சோபிக்கவில்லை.

    மும்பை:

    டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று முதல் ஆட்டத்தில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. இந்திய அணி தனது இரண்டாவது ஆட்டத்தில் வங்காளதேச அணியை இன்று எதிர்கொள்கிறது.

    நடப்பு தொடரில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி லீக் சுற்றில் சோபிக்கவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் 24 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

    எனவே அவரை மீண்டும் 3-வது இடத்தில் களமிறக்க வேண்டும் என ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில், இந்திய ரசிகர்களும் வல்லுனர்களும் விராட் கோலியின் பார்ம் குறித்து கவலைப்படுவதை நிறுத்தவேண்டும் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மஞ்ச்ரேக்கர் பேசியதாவது:

    விராட் கோலி பார்மில் இருக்கிறாரா, இல்லையா என்பதை பற்றி யோசிப்பதை நிறுத்துங்கள்.

    இந்திய கிரிக்கெட்டை பற்றி அதிகமாக சிந்திக்க வேண்டும் என நினைக்கிறேன்.

    ஐ.பி.எல். தொடரில் சுனில் நரைன் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் அசத்துவதை போல், பும்ரா அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 2 விதமான சூழ்நிலைகளிலும் செயல்பட்டு வருகிறார். அதாவது அமெரிக்காவை விட அவர் இங்கே இன்னும் சிறப்பாக செயல்படுகிறார்.

    உலகின் இதர தலைசிறந்த பவுலர்களுக்கும் பும்ராவுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதை நீங்கள் பார்க்க முடியும்.

    இந்தியா தங்களுடைய பிளேயிங் லெவனில் பும்ராவை வைத்திருப்பதற்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
    • கான்பூர் மைதானம் சுழற்பந்து வீச்சு சாதகமாக இருக்கும்.

    வங்கதேச அணி இந்தியாவில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதலில் தொடங்கிய டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணியானது 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நாளை செப்டம்பர் 27-ஆம் தேதி கான்பூர் நடைபெற இருக்கிறது.

    இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியில் 3-வது சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவை களமிறக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    முதல் டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்பதால் ஆகாஷ் தீப்பை விளையாட வைத்தது சரியான முடிவு தான். இவ்வேளையில் 2-வது டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த மைதானத்தில் சுழற்பந்து வீசும் குல்தீப் யாதவை கொண்டுவர வேண்டும்.

    ஏனெனில் பிளாட்டான மைதானத்தில் கூட பந்தை திருப்பி விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை உடைய அவரை இந்த போட்டியில் விளையாட வைத்தால் இந்திய அணிக்கு அது கூடுதல் சாதகத்தை தரும். எனவே என்னை பொறுத்தவரை இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களை தக்கவைத்து மூன்றாவதாக ஒரு சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவை இந்த போட்டியில் விளையாட வைக்க வேண்டும்.

    என சஞ்சய் மஞ்சரேக்கர் கூறினார்.

    • தற்போது முக்கிய தொடர்களில் அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது புது டிரென்டாக மாறி வருகிறது.
    • அறிதாகவே அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. இம்முறை பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நேருக்கு நேர் மோதவுள்ளனர்.

    இந்நிலையில் எதிர்வரும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. தற்சமாயம் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் அறிமுக வீரர்கள், அபிமன்யூ ஈஸ்வரன், நிதீஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ரானா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுக வீரர் ஹர்சித் ரானா இந்திய அணியில் இடம்பிடித்திருப்பது நல்ல முடிவு என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    தற்போது முக்கிய தொடர்களில் அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது புது டிரென்டாக மாறி வருகிறது. இந்தியா வெளிநாடுகளுக்குச் சென்று விளையாடும் ஒவ்வொரு சுற்றுப்பயணத்தையும் நீங்கள் பார்த்தால், அதில் ஏதேனும் ஒரு அறிமுக வீரர் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவார்.

    இதனைத் தற்போது எல்லா அணிகளும் செய்து வருகின்றன. அறிதாகவே அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இருப்பினும், ஹர்சித் ரானா ஆஸ்திரேலிய தொடருக்கு ஒரு நல்ல தேர்வு என்று நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அவரை இது போன்ற பணியில் இருந்து விலக்கி வைப்பது தான் கிரிக்கெட் வாரியத்துக்கு நல்லது.
    • செய்தியாளர்களுடன் உரையாடும் போது, அவரது நடத்தை, வார்த்தைகள் மெச்சும்படி இல்லை.

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் நேற்று நிருபர்களின் கேள்விகளுக்கு அதிரடி தொனியில் வெளிப்படையாக பதில்கள் அளித்தார். ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கை பகிரங்கமாக சாடினார்.

    இந்த நிலையில் கம்பீருக்கு பொதுவெளியில் வார்த்தைகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது தெரியவில்லை. அதனால் அவரை செய்தியாளர்கள் சந்திப்புக்கு அனுப்பாதீர் என இந்திய முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இந்திய கிரிக்கெட் வாரியத்தை கேட்டுக் கொண்டுள்ளார்.

    இது தொடர்பாக மஞ்ச்ரேக்கர் தனது எக்ஸ் தள பதிவில், 'கம்பீரின் செய்தியாளர் சந்திப்பை இப்போது தான் பார்த்தேன். அவரை இது போன்ற பணியில் இருந்து விலக்கி வைப்பது தான் கிரிக்கெட் வாரியத்துக்கு நல்லது. அவர் அணிக்கு பின்னணியில் இருந்து மட்டும் வேலை பார்க்கட்டும்.

    செய்தியாளர்களுடன் உரையாடும் போது, அவரது நடத்தை, வார்த்தைகள் மெச்சும்படி இல்லை. இந்திய கேப்டன் ரோகித் சர்மா, தேர்வு குழு தலைவர் அகர்கர் ஊடகத்தினரை எதிர்கொள்வதில் திறமையானர்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.

    • கோலி- ஜெய்ஸ்வால் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
    • 82 ரன்கள் அடித்த நிலையில் ஜெய்ஸ்வால் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார்.

    மெல்போர்ன்:

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களுடன் தடுமாறி வருகிறது.

    இதில் 51 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை ஜெய்ஸ்வால் - விராட் கோலி பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்தனர். 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. 82 ரன்கள் அடித்த நிலையில் ஜெய்ஸ்வால் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார்.

    இந்நிலையில் இந்த ரன் அவுட்டுக்கு விராட் கோலிதான் காரணம் என்று இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் விமர்சித்தார். அதை மற்றொரு இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்போது அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    மஞ்ரேக்கர் - இர்பான் பதான் இடையேயான உரையாடல் பின்வருமாறு:-

    மஞ்ரேக்கர்:

    இந்த தருணத்தை நாம் விராட் கோலியின் பக்கத்திலிருந்து கொஞ்சம் பார்க்க வேண்டும். அங்கே பந்தை மட்டும் பார்த்து ரன் இல்லை என்று விராட் கோலி சொன்னது பள்ளி வயது சிறுவனை போல் செய்த தவறாகும். பொதுவாக ரன்கள் எடுப்பதற்கு எதிர்ப்புறம் இருக்கும் பேட்ஸ்மேன்தான் அழைப்பை கொடுக்க வேண்டும். ஆனால் விராட் கோலி வேண்டாம் என்று சொன்னதால் ஜெய்ஸ்வாலுக்கு அங்கே வாய்ப்பு இல்லை.

    பதான்:

    கிரிக்கெட்டில் பந்து பாய்ண்ட் திசைக்கு அடிக்கப்பட்டால் எதிர்ப்புறம் இருக்கும் பேட்ஸ்மேன்தான் ரன் எடுப்பதற்கான அழைப்பை கொடுக்க வேண்டும் என்ற இன்னொரு உண்மை. அதை நிராகரிக்க ஸ்ட்ரைக்கர் பேட்ஸ்மேனுக்கு முழு சுதந்திரம் உள்ளது. சில நேரங்களில் வேண்டாம் என்றும் சொல்லலாம்.

    மஞ்ரேக்கர்:

    ஆனால் இர்பான் நீங்கள் இதைக் கேட்க விரும்பவில்லையெனில் வேறு எதுவுமில்லை. இர்பான் பதான் என்ற பெயரில் ரன்கள் எடுக்க எப்படி ஓடுவது என்ற புதிய பயிற்சி கையேடு வெளியிடப்பட வேண்டிய நேரம் வந்து விட்டது என்று நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர்களுக்கிடையேயான வாக்குவாதம் அமைந்தது.

    • நிதிஷ் முழுமையான பேட்ஸ்மேனாக விளையாட வைப்பது மிகப்பெரிய ரிஸ்க் என மஞ்ரேக்கர் கூறியிருந்தார்.
    • 4-வது டெஸ்ட் போட்டியில் நிதிஷ் சதம் அடித்து அசத்தினார்.

    ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 474 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

    இதனை தொடர்ந்து விளையாடி வரும் இந்திய அணி 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் எடுத்துள்ளது. நிதிஷ் ரெட்டி 105 ரன்களுடனும் சிராஜ் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் ஆடும் லெவன் குறித்தும் நிதிஷ் குமார் ரெட்டி குறித்தும் இந்திய அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சை மஞ்ரேக்கர் கூறியிருந்தார். நிதிஷ் முழுமையான பேட்ஸ்மேனாக விளையாட வைப்பது மிகப்பெரிய ரிஸ்க் எனவும் அவர் கூறியிருந்தார்.

    அவர் பேசுகையில், நிதிஷ் குமார் ரெட்டியை முழுமையான பேட்ஸ்மேனாக விளையாட வைப்பது மிகப்பெரிய ரிஸ்க். அவர் திறமையான வீரர் என்பதில் மாற்று கருத்து இல்லை. அதற்கான ஸ்பார்க்கை காட்டிவிட்டார். ஆனால் நிதிஷ் குமார் ரெட்டியை பிளேயிங் லெவனில் சேர்ப்பதால், இந்திய அணியின் பேலன்ஸ் சிக்கலுக்கு உள்ளாகிறது என்று கூறியிருந்தார். அவரால் 100 ரன்களுக்கு மேல் அடிக்க முடியுமா எனவும் கூறினார்.

    இவரது விமர்சனத்துக்கு இந்த போட்டியில் சதம் அடித்து நிதிஷ் ரெட்டி பதிலடி கொடுத்துள்ளார். இந்நிலையில் அவரது எக்ஸ்தள பதிவுக்கு பூமா ஸ்போர்ட்ஸ் பதிலளித்துள்ளது.

    அதில், பூமா விளம்பரத்தின் போது நிதிஷ் குமார் ரெட்டி போட்டோஷூட் நடத்தினார். அப்போது நிதிஷ் வாயில் கையில் வைத்தப்படி இருக்கும் போட்டோவை வைத்து பூமா பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.

    ×