search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Board"

    • சேலம் மாவட்டம் ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சி பகுதிகளில் குடிநீர் தேவை குறித்து அரசுத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
    • குடிநீர் அளவு குறித்து தனிக்குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு குடிநீர் வாரிய நிர்வாக இயக்குனர் பேட்டியளித்தார்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சி பகுதிகளில் குடிநீர் தேவை குறித்து அரசுத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குனர் தட்சிணாமூர்த்தி, கலெக்டர் கார்மேகம் ஆகியோர் ஆத்தூர் நகராட்சி பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டு குடிநீர் வாரிய அதிகாரியிடம் ஆத்தூர் நகராட்சிக்கு வழங்கப்படும் குடிநீர் அளவு குறித்து கேட்டறிந்தனர்.

    தனிக்குழு

    அதன் பின்னர் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குனர் தட்சிணாமூர்த்தி கூறும்போது, ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் அளவு மற்றும் அவை முறையாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள தனி குழுக்கள் அமைக்கப்பட்டு அதன்மூலம் நாள் ஒன்றுக்கு பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீர் அளவு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    மேலும் தண்ணீர் வினியோகம் குறித்து விரிவான அறிக்கை தயார் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின் போது ஆத்தூர் நகர மன்ற தலைவர் நிர்மலா பபிதா மணிகண்டன், நரசிங்கபுரம் நகர மன்ற தலைவர் அலெக்ஸ், மண்டல நகராட்சி இயக்குனர் பூங்கொடி, ஆத்தூர் நகராட்சி ஆணையாளர் சுபாஷினி, ஆத்தூர் நகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணி, நரசிங்கபுரம் நகராட்சி ஆணையாளர் சம்சுதீன் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • சங்கரன் என்பவர் தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் படித்த மாணவர்.
    • இஸ்ரோ விஞ்ஞானியான சங்கரனை பாராட்டி பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    சந்திராயன்-3 விண்கலம் நிலவுக்கு வெற்றிகரமாக அனுப்பி இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

    இதுவரை யாரும் செல்லாத நிலவின் தென் துருவத்தில் அதன் லேண்டரை வெற்றிகரமாக இறக்கி உலக நாடுகளே வியக்கும் வகையில் இந்திய விஞ்ஞானிகள் மாபெரும் சாதனை படைத்துள்ளனர்.

    இஸ்ரோ விஞ்ஞானிகளை பிரதமர் மோடி உள்ளிட்ட அனைத்து தலைவர்களும், உலக நாட்டு தலைவர்களும் பாராட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் இஸ்ரோ விஞ்ஞானி குழுவில் இடம் பெற்றிருந்த சங்கரன் என்பவர் தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் கடந்த 1983 -ம் ஆண்டில் இருந்து 1985-ம் ஆண்டு வரை இயற்பியல் துறையில் படித்த மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தற்போது அவர் இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.

    இதனை தொடர்ந்து சரபோஜி அரசு கல்லூரியில் முன்னாள் மாணவரும், இஸ்ரோ விஞ்ஞானியுமான சங்கரனை பாராட்டி அவரது படத்துடன் பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது.

    அதில் விஞ்ஞானி சங்கரன் மற்றும் சந்திரயான்- 3 வெற்றி விஞ்ஞானிகள் அனைவரையும் வாழ்த்தி பெருமிதம் கொள்கிறோம் . இங்கனம் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த பிளக்ஸ் போர்டை கல்லூரியில் படிக்கும் மாணவ -மாணவிகள் ஆர்வத்துடன் பார்த்து நாமும் சங்கரனை போல் விஞ்ஞானியாக மாறி இந்தியாவுக்கு பல்வேறு புகழை தேடி தர வேண்டும் என்று சபதம் எடுத்துக் கொண்டனர்.

    • ஆர்.எஸ்.புரம் டி.பி.சாலையின் இருபுறங்களிலும் தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.
    • மொத்தமாக 62 பலகைகளில் இந்த தகவல்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

    கோவை,

    சென்னைக்கு அடுத்தபடியாக தொழில், கல்வி, மருத்துவம் என அனைத்து துறைகளிலும் வளர்ந்த நகரமாக கோவை திகழ்கிறது.இதற்கு பல்வேறு தரப்பினரின் உழைப்பும், பங்களிப்பும் முக்கிய காரணம்.

    இப்படிப்பட்ட மூத்த முன்னோடிகளை இன்றைய தலைமுறையினர் அறியும் விதமாக ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டில் லெஜண்ட்ஸ் ஆப் கோயம்புத்தூர் என்ற பெயரில் புகைப்படங்களுடன் கூடிய தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறியதாவது:-

    கோவை மாநகரம் பலரின் உழைப்பு, பங்களிப்பின் மூலமாக வளர்ந்த ஒரு நகரமாகும். ஒரு சிறிய நகரமாக இருந்து, இன்று தமிழகத்தின் 2-வது பெரிய மாநகராட்சியாக உயர்ந்து ள்ளது.

    கோவை மாநகராட்சி நிர்வாகம், பொலிவுறு திட்டத்தின் (ஸ்மார்ட்சிட்டி) கீழ் பல்வேறு திட்டபணிகளை மேற்கொண்டு வருகிறது. மாநகராட்சி பகுதிகளில் மாதிரிசாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஆர்.எஸ்.புரம் டி.பி.சாலையின் இருபுறங்களிலும் தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.

    கோவை மாநகர் உருவாவதற்கு காரணமான பல தலைவர்கள் தங்களது அறிவு, நேரம், பொருட்கள் போன்றவற்றை செலவழித்துள்ளனர். அவர்களை நினைவு கூறும் வகையிலும், பெருமைப்படுத்தும் வகையிலும், மக்கள் அவர்களை தெரிந்து கொள்ளும் வகையிலும் கோவை நகரை சேர்ந்த தொழில்அதிபர்கள், பண்டைய கால நகர தலைவர்கள் உள்ளிட்டோரின் புகைப்படங்கள், அவர்கள் குறித்த தகவல்களை காட்சிக்கு வைக்கும் பணி தொடங்கி உள்ளது.

    தற்போது 32 பலகைகளில் இந்த காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. இன்னும் 30 பலகைளில் கோவை நகரை வளர்த்தவர்களின் புகைப்படங்கள், அவர்களது தகவல்களை வைக்க திட்டமிட்டுள்ளோம்.

    மொத்தமாக 62 பலகைகளில் இந்த தகவல்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இதில் விடுபட்டுள்ளவர்கள் குறித்த விவரங்களை மாநகராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    மேலும் பழங்காலத்தில் கோவையில் இருந்த இயற்கை சார்ந்த இடம், பழமை வாய்ந்த கட்டி டங்கள் குறித்த தகவல்களை தகவல் பலகைகளில் வைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த தகவல் பலகைகளை அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் நின்று பார்த்து படித்து சென்று வருகின்றனர்.

    ஆதி தமிழர் தூய்மை பணியாளர் சங்க பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.

    அரவேணு,

    ஆதி தமிழர் கட்சி சார்பில், கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி முன்பு ஆதி தமிழர் தூய்மை பணியாளர் சங்க பெயர் பலகை திறப்பு விழா நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் ஐக்கையன் கலந்து கொண்டு பெயர் பலகையை திறந்து வைத்தார். இதில் இதில்100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் வெளிப்பகுதியில் தூய்மை பணியாளர்களும் பங்கு பெற்றனர்

    இதில் ஆதி தமிழர் கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி மாவட்ட செயலாளராக ரைஸ் முகமது, கோத்தகிரி கிளை தலைவராக கார்த்திக், துணை மாவட்ட செயலாளராக நந்தகுமார், கோத்தகிரி ஒன்றிய செயலாளராக சத்தியமூர்த்தி, கிருஷ்ணா புதூர் கிளை செயலாளராக ஆறுமுகம்,எச்எப்சி நகர் கிளை செயலாளராக மாணிக்கம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    • கடலில் குளிக்கும்போது அலையில் சிக்கி பலியாகும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கின்றன.
    • இதை தடுக்கும் வகையில் எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகூர் சில்லடி கடற்கரைக்கு வரும் வெளியூர் பயணிகள், கடலில் குளிக்கும்போது அலையில் சிக்கி பலியாகும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கின்றன.

    இதை தடுக்கும் வகையில், கடலில் குளிப்பவர்களுக்கான எச்சரிக்கை பலகை நாகூர் முஸ்லிம் ஜமாத் சார்பில் சில்லடி கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ளது.

    அதை நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் திறந்து வைத்தார்.

    இந்நிகழ்வில், நகர்மன்ற தலைவர் இரா.மாரிமுத்து, துணைத் தலைவர் எம்.ஆர்.செந்தில் குமார், நாகூர் முஸ்லிம் ஜமாத் தலைவர் ஏ.எஸ்.ஏ.காதர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி செயற் பொறியாளர், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • தஞ்சை பெரிய கோவில் முன்பு நம்ம தஞ்சாவூர் என்ற போர்டு பிரம்மாண்டமான முறையில் வைக்கப்பட்டுள்ளது.
    • தஞ்சாவூர் புகழ் உலக அளவில் பரவ தொடங்கியுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக தஞ்சை பெரிய கோவில் முன்பு நம்ம தஞ்சாவூர் என்ற போர்டு பிரம்மாண்டமான முறையில் வைக்கப்பட்டுள்ளது.

    இதே போல் பல இடங்களிலும் இந்த போர்டு வைக்கப்பட்டுள்ளது. தஞ்சைக்கு வரும் உள்ளூர், வெளிமாநிலம், வெளிநாடு சுற்றுலா பயணிகள் இந்த போர்டு முன்பு நின்று செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

    நம்ம தஞ்சாவூர் என்ற போர்டு தற்போது உலக அளவில் பரவி புகழ்பெற்று விளங்குகிறது. கத்தார் நாட்டில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் பல ரசிகர்கள் நம்ம தஞ்சாவூர் என்ற பதாகையை காண்பித்தவாறு போட்டியை ரசித்து வருகின்றனர்.

    தினந்தோறும் நடக்கும் போட்டியில் நம்ம தஞ்சாவூர் என்ற பதாகை தென்படுவதை நம்மால் காண முடிகிறது.

    என் மூலம் தஞ்சாவூர் புகழ் உலக அளவில் பரவ தொடங்கியுள்ளது என்று சமூக ஆர்வலர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.

    • 24ம் ஆண்டு மகாசபை கூட்டம் ஓட்டலில் நடந்தது.
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    திருப்பூர் :

    திருப்பூர் கம்ப்யூட்டர் எம்ப்ராய்டர்ஸ் அசோசியேஷன், 24ம் ஆண்டு மகாசபை கூட்டம் ஓட்டலில் நடந்தது.கூட்டத்துக்கு அசோசியேஷன் தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.பனியன் தொழிலாளருக்கு விடுதி, கல்வி வசதியை மத்திய, மாநில அரசுகள் மேம்படுத்த வலியுறுத்துவது, மின் கட்டண உயர்வை கைவிட அரசை வலியுறுத்துவது, பல்வேறு கோரிக்கைகளை மத்திய வர்த்தக அமைச்சகத்தின் பார்வைக்கு வைப்பது, சணல், தேங்காய் வாரியம் இருப்பது போல் பின்னலாடைக்கென வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முன்னதாக பெட்ரோலியம் கன்சர்வேஷன் ரிசர்ச் அசோசியேஷன் நிர்வாகி சிவக்குமார் மின் இயக்க சாதனங்கள் அவற்றின் பாதுகாப்பான செயல்பாடுகள் குறித்தும், ஆடிட்டர் அரசப்பன் மத்திய, மாநில அரசுகளின் மானியம், சலுகை குறித்தும் பேசினர்.

    • மத்திய அரசு கொப்பரை கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.
    • கொப்பரை தேங்காய் வருடம் முழுவதும் கொள்முதல் செய்து தேங்காய் அதிகம் விளையும் ஊர்களில் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தென்னை விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    அப்போது தேங்காய் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் தேங்காய் எண்ணெய் நியாய விலை கடைகளில் வழங்க வேண்டும். மத்திய அரசு கொப்பரை கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். மாநில அரசு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். தென்னை சார்ந்த தொழில் பூங்கா அமைத்து தர வேண்டும். தென்னை நல வாரியம் அமைக்க வேண்டும்.

    கொப்பரை தேங்காய் வருடம் முழுவதும் கொள்முதல் செய்ய வேண்டும் தேங்காய் அதிகம் விளையும் ஊர்களில் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். தேங்காய் நார் தொழிற்சாலைகளை பாதுகாக்க வேண்டும். மதிப்புக் கூட்டப்பட்ட தேங்காய் பொருட்களின் ஏற்றுமதிக்கு உதவி செய்ய வேண்டும். தென்னங்கன்றுக்களுக்கு பராமரிப்பு மானியம் வழங்க வேண்டும்‌ என 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி, தென்னை விவசாயிகள் 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • தேர்வு எழுத வருபவர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளனவா மற்றும் காவல்துறை பாதுகாப்பு எவ்வாறு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து தேர்வாணைய உறுப்பினர் கிருஷ்ணகுமார் பார்வையிட்டார்.
    • அந்தியூர் பகுதியில் 6139 பேர் 17 சென்டர்களில் தேர்வு எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அந்தியூர்:

    தமிழகம் முழுவதும் வருகிற 24-ந் தேதி டி.என்.பி.எஸ்.சி. குரூப் தேர்வு நடைபெறுகிறது.

    இதையடுத்து தேர்வு எழுதும் மையங்களை டி.என்.பி.எஸ்.சி. தேர்வாணைய உறுப்பினர் கிருஷ்ணகுமார் பார்வையிட்டு வருகிறார்.

    அந்த வகையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு ஆண்கள்மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளை பார்வையிட்டு பள்ளி கட்டமைப்பு நல்ல நிலையில் உள்ளதா அடிப்படை வசதி இருக்கின்றதா மின்விளக்குகள் சரிவர வேலை செய்கின்றதா ? என்று ஆய்வு செய்தார்.

    மேலும் தேர்வு எழுத வருபவர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளனவா மற்றும் காவல்துறை பாதுகாப்பு எவ்வாறு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து தேர்வாணைய உறுப்பினர் கிருஷ்ணகுமார் பார்வையிட்டார்.

    அப்போது அவருடன் அந்தியூர் தாசில்தார் விஜயகுமார், அந்தியூர் டவுன் கிராம நிர்வாக அலுவலர் யசோதா மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பானுமதி வந்திருந்தனர்.

    அந்தியூர் பகுதியில் 6139 பேர் 17 சென்டர்களில் தேர்வு எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • போலீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க முதல் நாளான இன்று பலர் திரண்டனர்.
    • தேர்வு -2022 அறிவிப்பு கடந்த 30-ந்தேதி வெளியிட்டுள்ளது.

    சேலம்:

    தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் காவல் துறையில் உள்ள 2 -ம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை), சிறைத்துறையில் உள்ள 2-ம் நிலை சிறை காவலர், தீயணைப்புத்துறையில் உள்ள தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடி தேர்வு -2022 அறிவிப்பு கடந்த 30-ந்தேதி வெளியிட்டுள்ளது.

    விண்ணப்பப்பதிவு தொடங்கியது

    இதில் 2-ம் நிலை ஆயுதப்படை போலீசார் 2,180 , சிறப்பு காவல் படை போலீசார் 1091 , 2-ம் நிலை சிறை காவலர் 161, தீயணைப்பாளர்கள் 120 என மொத்தம் 3552 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இந்த தேர்வுக்கு இன்று முதல் இணையதள வழியாக விண்ணப்பப்பதிவு தொடங்கி உள்ளது. கல்வித்தகுதி குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதால், எஸ்.எஸ்.எல்.சி. முதல் முதுநிலை பட்டம் படித்தவர்கள் வரை ஏராளமானோர் ஆர்வமாக விண்ணப்பித்து வருகிறார்கள்.

    உதவி மையம் ஏற்பாடு

    இதில் சேலம் மாவட்டத்தில் விண்ணப்பிக்கும் இளைஞர்கள், இளம்பெண்களுக்கு உதவ இன்று முதல் வருகிற 15-ந்தேதி வரை சேலம் மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் உதவி மையம் செயல்படும் என போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

    அதன்படி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நாளில் பலர் கல்வி, மதிப்பெண் சான்றிதழ்களுடன் நேரில் வந்தனர். இணையதளம் வழியாக எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்து போலீசார் செயல் விளக்கம் அளித்தனர்.

    இது குறித்து போலீசார் கூறுகையில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரியம் அறிவித்துள்ள 3552 பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்கி உள்ளது. விண்ணப்பிக்க உதவி வேண்டுவோர் இந்த மையத்தை காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை நேரடியாக அணுகலாம். மேலும் விபரம் பெற 9445978599 என்ற எண்ணில் அழைக்கலாம் என கூறினர்.

    சம்பளம் ரூ. 67 ஆயிரம்

    எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்டவைகளில் தேர்வாகி பணியில் சேரும் நபர்களுக்கு ஊதியம் ரூ. 67 ஆயிரத்து 100 வழங்கப்படும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

    ×