என் மலர்
நீங்கள் தேடியது "பாம்பு"
- வன விலங்கு மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர்.
- குளிர் மற்றும் மழைக்காலங்களில் வாகன உரிமையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை வீடியோ காட்டுவதாக பலரும் பதிவிட்டனர்.
குளிர் மற்றும் மழை காலங்களில் பாம்புகள் வெப்பம் தேடி வாகனங்களுக்குள் தஞ்சமடையும் சம்பவங்கள் நிகழ்ந்தது உண்டு. இந்நிலையில் தமிழ்நாட்டின் நாமக்கல்-சேலம் சாலையில் கார் ஓட்டி சென்ற ஒருவர் காரின் கண்ணாடியில் பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
அதில், கார் டிரைவர் நெடுஞ்சாலையில் கார் ஓட்டி செல்கிறார். அப்போது காரின் பக்கவாட்டு கண்ணாடியில் ஏதோ அசைவு இருப்பதை கண்டார். அப்போது கண்ணாடியின் மறைவில் இருந்து ஒரு பாம்பு வெளியே வருவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் காரை நிறுத்தி விட்டு அதில் இருந்து வெளியேறினார்.
பின்னர் அவ்வழியே சென்றவர்கள் வன விலங்கு மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த குழுவினர் அந்த பாம்பை பாதுகாப்பாக மீட்டு கொண்டு சென்றனர். இதுகுறித்த காட்சிகள் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டது. குளிர் மற்றும் மழைக்காலங்களில் வாகன உரிமையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த வீடியோ காட்டுவதாக பலரும் பதிவிட்டனர்.
- பாம்பு கழிவறை கோப்பையில் இருந்து சீறும் வீடியோ வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது.
- அதிர்ஷ்டவசமாக யாரையும் பாம்பு கடிக்கவில்லை.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் அருகே உள்ள புஷ்கர், புனித யாத்திரைக்கு பெயர்பெற்ற இடமாகும். இங்குள்ள ஓட்டலில் சுற்றுலாப் பயணிகள் சிலர் அறை எடுத்து தங்கினர். 2-வது மாடியில் தங்கியிருந்த அவர்களில் ஒருவர் கழிவறைக்கு சென்றார்.
அப்போது கழிவறையின் கோப்பைக்குள் பெரிய பாம்பு ஒன்று படமெடுத்து நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதிர்ஷ்டவசமாக அவர் கழிவறை கோப்பையில் அமரும் முன்பாக பாம்பு இருப்பதை பார்த்துவிட்டார்.
உடனே உஷாரான அவர், கழிவறை கதவை திறந்துகொண்டு உதவிக்கு ஆட்களை அழைத்ததுடன், பாம்பை செல்போனில் படம் பிடிக்க ஆரம்பித்தார். அவரது சத்தம் கேட்டு அறையில் இருந்த மற்றவர்களும் வந்து கழிவறையை எட்டிப்பார்த்தபடி பேச்சு கொடுப்பது வீடியோவில் கேட்கிறது. கருப்பு நிற நாகப்பாம்பான அது, மனிதர்களை கண்டு அச்சம் அடையாமல் படமெடுத்து சீறியபடி நிற்கிறது.
பின்னர் இது குறித்து ஓட்டல் நிர்வாகத்தினர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து சிறிது நேர போராட்டத்துக்குப் பின், கழிவறையில் இருந்து 5 அடி நீள விஷத்தன்மை கொண்ட நாகப்பாம்பை மீட்டனர். 2-வது மாடியில் உள்ள கழிவறை கோப்பைக்குள் பாம்பு எப்படி வந்தது என்று பலரும் ஆச்சரியம் அடைந்தனர். எலி, தவளை போன்ற ஏதாவது இரையை துரத்திக் கொண்டு கழிவறை குழாய் வழியாக பாம்பு மேலே ஏறி வந்து இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக யாரையும் பாம்பு கடிக்கவில்லை.
பாம்பு கழிவறை கோப்பையில் இருந்து சீறும் வீடியோ வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. பலரும் அதுபோன்ற அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், நகைச்சுவை கலந்த கருத்துக்களை பதிவிட்டனர்.
- எவ்வாறு பாம்பை வெளியே விரட்ட வேண்டும் என சொல்லிக் கொடுக்கிறார்.
- சிறுமியின் இந்த தைரியத்தை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் தனது வீட்டுக்குள் நுழைந்த பாம்பை சிறுமி லாவகமாக அங்கிருந்து விரட்டினாள். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு சிறுமி தனது வீட்டின் மூலையில் பாம்பு இருந்ததைக் கண்டாள்.
இதனை தனது தந்தையிடம் அவள் கூற, அவர் எவ்வாறு பாம்பை வெளியே விரட்ட வேண்டும் என சொல்லிக் கொடுக்கிறார். அவர் சொல்வது போல துடைப்பானைக் கொண்டு அந்த பாம்பை சிறுமி வெளியில் விரட்டுகிறாள். அப்போது துளியும் பயமில்லாமல் அந்த சிறுமி பாம்பை விரட்டிய காட்சிகள் காண்போரை வியக்க வைத்துள்ளது. சிறுமியின் இந்த தைரியத்தை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
- மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
- சம்பவம் குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த தொழுதூர் கிராமம் வ.உ.சி நகரில் வசித்து வருபவர் கண்ணன். இவரது மகன் கவுஷிக் (வயது 12) ராமநத்தம் தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் மாணவன் பள்ளிக்கு செல்ல வீட்டில் ஷூ அணிந்தார்.
அப்போது அதில் இருந்த சிறிய பாம்பு கடித்தது. இதில் மாணவன் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவனின் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் மாணவனை மீட்டு பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடி காட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அது ஒரு ஜெர்ரிபோட்டு வகை பாம்பு ஆகும்.
- பாம்புகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.
பிரபல இந்தி நடிகர் சோனு சூட், தான் வசிக்கும் வீட்டு வளாகத்திற்குள் வந்த ஒரு பாம்பை வெறும் கைகளால் பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்ட அவர், அது ஒரு ஜெர்ரிபோட்டு வகை பாம்பு என்றும், அது விஷத்தன்மை வாய்த்தது அல்ல என்றும் தெரிவித்தார்.
அதே நேரத்தில், பாம்புகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.
வீடுகளுக்குள் நுழையும் பாம்புகளைப் பிடிக்க நிபுணர்களை மட்டுமே அழைக்க வேண்டும் என்றும் தான் செய்ததை பின்பற்ற வேண்டாம் என்றும் எச்சரித்தார். சோனு சூட் தமிழில் நெஞ்சினிலே, சந்திரமுகி, ஒஸ்தி உள்ளிட்ட பல்வேறு படங்களில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- குடியிருப்பு பகுதியில் வசிக்கும் ஒருவர் இதனை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
- வீடியோ இணையத்தில் வைரலாக பலரும் அவரது தைரியத்தை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் புகுந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை பிடித்த வனத்துறை அதிகாரி ரோஷ்னி லாவமாக பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அந்த குடியிருப்பு பகுதியில் வசிக்கும் ஒருவர் இதனை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். ரோஷ்னி ராஜநாகத்தை பிடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பலரும் அவரது தைரியத்தை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
வனத்துறை அதிகாரி ரோஷ்னி கடந்த 8 வருடங்களாக கிட்டத்தட்ட 800 பாம்புகளை பிடித்துள்ளார். ஆனாலும் 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை பிடித்தது ரோஷ்னிக்கு இதுவே முதல்முறையாகும்.
- கொழும்பு மைதானத்திற்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- பாம்பு புகுந்ததால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.
வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது.
இதையடுத்து இவ்விரு அணிகள் முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 49.2 ஓவர்கள் முடிவில் 244 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 167 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 77 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது.
இந்நிலையில், இப்போட்டியின்போது கொழும்பு மைதானத்திற்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. பின்னர் மைதானத்தில் இருந்து பாம்பு அகற்றப்பட்டதும் மீண்டும் ஆட்டம் நடைபெற்றது.
- மத்திய பிரதேசத்தில் விஷப்பாம்பு ஒன்று இளைஞரை கடித்துள்ளது.
- அடுத்த சில நிமிடங்களில் அந்தப் பாம்பு உயிரிழந்து போனது.
போபால்:
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. பாம்பிடம் இருக்கும் விஷமே அதற்கு காரணம். விஷமுள்ள பாம்பு மனிதன் ஒருவனை தீண்டினால் அவனது உயிர் போய்விடும். இதனாலேயே, பாம்பைக் கண்டால் அனைவரும் அலறி ஓடி விடுகின்றனர்.
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தின் பாலகாட் மாவட்டத்தில் இளைஞரை கடித்த பாம்பு ஒன்று இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
குட்சோடி கிராமத்தில் வசித்து வரும் சச்சின் நாக்பூரே (25), என்ற இளைஞர், தற்செயலாக பாம்பு ஒன்றை மிதித்துள்ளார். அப்போது, விஷப் பாம்பு அவரைக் கடித்துள்ளது. அடுத்த சில நிமிடங்களில் அந்தப் பாம்பு இறந்து போனது.
பாம்புக் கடியால் அவதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சச்சின் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இது அரிதிலும் அரிதான நிகழ்வு என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மனிதனை கடித்து பாம்பு இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் ஆச்சர்யத்தை அளித்துள்ளது.
- பாம்பை தோளில் போட்டுக்கொண்டு, புகை பிடித்தபடி ரீல்ஸ் எடுத்தார்.
- வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பல்வேறு விமர்சனங்களை பெற்றுள்ளது.
'ரீல்ஸ்' எனும் குறு வீடியோ மோகத்தால், சாகசத்தில் ஈடுபட முயன்று பலர் தங்கள் இன்னுயிரை இழப்பது வாடிக்கையாகி வருகிறது. அதுபோல் இங்கு ஒருவர் பாம்பிடம் கடிவாங்கி சிக்கலில் மாட்டியுள்ளார். அது பற்றிய விவரம் வருமாறு:-
உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டம் ஹைபத்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜிதேந்திர குமார். விவசாயி. இவர் பாம்பு பிடிப்பதிலும் கைதேர்ந்தவர்.
இந்தநிலையில் அந்த கிராமத்தில் ஒரு வீட்டில் விஷ பாம்பு ஒன்று புகுந்துவிட்டதாகவும், அதை பிடித்துக் கொடுக்கும் படியும் ஜிதேந்திர குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற அவர், அந்த வீட்டின் சுவரில் இருந்த பொந்தில் பதுங்கி இருந்த பாம்பை பிடித்தார்.
இதையடுத்து அந்த பாம்பை தனது தோளில் மாலை போல் போட்டு போஸ் கொடுத்தார். அதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் ஆரவார கூச்சலிட்டனர். அப்போது அவருக்கு, ஊர் மக்கள் மத்தியில் வீர சாகசம் நடத்தி அதை 'ரீல்ஸ்'ஆக வெளியிட வேண்டும் என்ற ஆசை பிறந்தது.
நடக்கப்போகும் விபரீதம் பற்றி அறியாமல், பாம்புக்கு முத்தமிட முயன்றார் ஜிதேந்திர குமார். அப்போது அவரது நாக்கில் பாம்பு கடித்துவிட்டது.
இதனால் உடலில் விஷம் ஏறிய அவரது உடல்நிலை மோசமாகியது. உடனடியாக அவரை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றி உள்ளூர் மக்கள் கூறும்போது, ஜிதேந்திர குமார் மதுபோதையில் இருந்தார். பாம்பை தோளில் போட்டுக்கொண்டு, புகை பிடித்தபடி ரீல்ஸ் எடுத்தார். பின்னர் நாங்கள் வேண்டாம் என்று கூறியபோதும், பாம்புக்கு முத்தம் கொடுக்கும் ரீல்ஸ் வெளியிடுகிறேன் என்று கூறி முத்தமிட முயன்றவரை பாம்பு கடித்துவிட்டது என்று கூறினார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பல்வேறு விமர்சனங்களை பெற்றுள்ளது.
- சாலையில் நடந்து கொண்டு பாம்பை காட்டி பொதுமக்களிடம் அட்ராசிட்டி செய்தார்.
- சாலையில் இருந்த இளைஞர்கள், பொதுமக்கள் பாம்புடன் இருந்த அந்த நபரை செல்போனில் படம் பிடித்தனர்.
தருமபுரி:
தருமபுரி நகரப்பகுதி நான்கு வழி சாலை அருகில் செயல்படும் அரசு மதுபான கடைக்கு இளைஞர் ஒருவர் கழுத்தில் பாம்பு ஒன்றை சுத்தி கொண்டு மது வாங்க வந்தார்.
அப்பொழுது மதுக்கடைக்கு வந்த மது பிரியர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். கடையின் விற்பனையாளர்கள் செய்வதறியாமல், மது வாங்க வந்த இளைஞரை எச்சரித்து, மது (பீர்) கொடுத்து அனுப்பி விட்டனர்.
மது வாங்கி கொண்டு சென்ற அந்த வாலிபர், பீர் பாட்டிலை திறந்து, பாம்பின் வாயில் ஊற்றியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து அந்த வாலிபர் மது போதையில் நான்கு ரோட்டில், சாலையில் நடந்து கொண்டு பாம்பை காட்டி பொதுமக்களிடம் அட்ராசிட்டி செய்தார்.
சாலையில் இருந்த இளைஞர்கள், பொதுமக்கள் பாம்புடன் இருந்த அந்த நபரை செல்போனில் படம் பிடித்தனர். அவர்களுக்கு அந்த இளைஞர் பல கோணங்களில் பாம்பை பிடித்து கொண்டு பாம்புக்கு முத்தம் கொடுத்தும், பாம்பு மற்றும், பீர் பாட்டிலை சாலை மைய தடுப்பு சுவரின் மீது வைத்தும், வித்தைக்காட்டி கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து அங்கு வந்த காவலர்கள் அந்த வாலிபரை எச்சரித்து அனுப்பினர்.
- அறையின் வெளிப்புறத்தில் உள்ள ஒரு பள்ளத்தில் இருந்து 2, 3 பாம்புகள் வெளியே வந்ததையும் கண்டு பீதி அடைந்தார்.
- பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறன்றனர்.
விடுமுறையை உற்சாமாக கழிக்க ஹோட்டலுக்கு சென்ற நபருக்கு ஏற்பட்ட அனுபவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தாய்லாந்தில் ஓட்டல் அறையில் தங்கி இருக்கும் நபர் காலை விடிந்ததும் சூரிய வெளிச்சத்தை காண அறையின் ஜன்னலை திறந்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் செல்போனில் அதனை வீடியோவாக பதிவு செய்தார். ஒரு பெரிய பாம்பு ஒன்று அங்கு ஊர்ந்து செல்வதை கண்டார். மேலும் அறையின் வெளிப்புறத்தில் உள்ள ஒரு பள்ளத்தில் இருந்து 2, 3 பாம்புகள் வெளியே வந்ததையும் கண்டு பீதி அடைந்தார்.
இதுதொடர்பான வீடியோவை அவர், 'தாய்லாந்தை விட்டு வெளியேற வேண்டிய நேரம் இது' என்ற தலைப்பில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, என் கைகள் நடுங்குகின்றன. நான் இப்போதுதான் விழித்தெழுந்து ஹோட்டல் திரைச்சீலைகளைத் திறந்தேன், இதோ பாருங்க, கதவுக்கு வெளியே ஒரு பெரிய பாம்பு இருக்கு, அந்தப் புதருக்குள் இன்னொன்று... அங்கே இன்னொன்று இருக்கு... இனி ஒருபோதும் வெளியே செல்ல மாட்டேன் என்று அவர் கூறினார்.
இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறன்றனர். முதலில் அந்த பாம்பு ராஜநாக இனத்தை சேர்ந்தது என்பதை உறுதி பட கூறிய பயனர்கள், அறை கழிப்பறை மற்றும் படுக்கையறையில் வேறு ஏதாவது இருக்கிறதா? என்று பாருங்கள் என்றும், அமைதியாக இருங்கள், ராஜ நாகப்பாம்புகளைத் தொந்தரவு செய்யாமல் இருந்தால் அவை ஒன்றும் செய்யாது என்றும் அறிவுறுத்தினர்.
- பாம்புகள் விரட்டி விரட்டி கடிப்பதால் தனக்கு நாகதோஷம் இருக்கலாம் என நினைத்தார்.
- ராகு, கேது மற்றும் பரிகார பூஜைகளை செய்தார். இருப்பினும் பாம்புகள் அவரை விடவில்லை.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், கும்மரகுண்டாவை சேர்ந்தவர் சுப்ரமணியம் (வயது 50). இவரது மனைவி சாரதா.
சுப்பிரமணியத்திற்கு 20 வயதாக இருந்தபோது முதல் முறையாக பாம்பு கடித்தது. அதன் பிறகு கூலி வேலைக்கு செல்லும் போதெல்லாம் வருடத்திற்கு 4 முதல் 5 தடவை பாம்புகள் கடித்தன.
ஒவ்வொரு முறையும் பாம்பு கடிக்கும் போதும் உயிர் பிழைப்போமா என்று கவலையடைந்தார். ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பி வருவதை வழக்கமாகக் கொண்டு இருந்தார்.
பாம்பு கடிக்கு பயந்து சுப்பிரமணியம் தனது குடும்பத்தினருடன் பெங்களூருக்கு குடிபெயர்ந்தார். அங்கு கட்டிட வேலை செய்தார். பெங்களூரில் கட்டிட வேலை செய்யும் போதும் சுப்பிரமணியத்தை பாம்புகள் கடித்தன.
இதனால் விரத்தி அடைந்த சுப்பிரமணியம் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பினார்.
பாம்புகள் விரட்டி விரட்டி கடிப்பதால் தனக்கு நாகதோஷம் இருக்கலாம் என நினைத்தார். இதனால் ராகு, கேது மற்றும் பரிகார பூஜைகளை செய்தார். இருப்பினும் பாம்புகள் அவரை விடவில்லை.
சொந்த ஊருக்கு திரும்பிய சுப்பிரமணியம் அங்குள்ள கோழிப்பண்ணையில் வேலைக்கு சேர்ந்தார். நேற்று முன் தினம் கோழி பண்ணையில் வேலை செய்து கொண்டு இருந்தபோது மீண்டும் ஒரு பாம்பு வந்து சுப்பிரமணியத்தை கடித்தது. அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சைக்கு பிறகு சுப்பிரமணியம் தற்போது குணம் அடைந்து வருகிறார்.
இதுகுறித்து அவரது மனைவி சாரதா கூறுகையில்:-
எனது கணவரை டஜன் கணக்கில் பாம்புகள் கடித்துள்ளன. ஒவ்வொரு தடவை பாம்பு கடிக்கும் போதும் வெளியில் கடன் வாங்கி சிகிச்சை பெறுவதும் மீண்டும் கூலி வேலை செய்து கடனை அடைப்பதே எங்கள் வாழ்க்கையில் சுமையாக மாறிவிட்டது என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இனியாவது பாம்பு கடியில் இருந்து தப்பிக்க முடியுமா? என்ற கலக்கத்தில் சுப்பிரமணியின் குடும்பத்தினர் உள்ளனர்.






