என் மலர்
இந்தியா

முத்தமிட முயன்ற விவசாயியின் நாக்கில் கடித்த பாம்பு- 'ரீல்ஸ்' எடுத்தவருக்கு நேர்ந்த பரிதாபம்
- பாம்பை தோளில் போட்டுக்கொண்டு, புகை பிடித்தபடி ரீல்ஸ் எடுத்தார்.
- வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பல்வேறு விமர்சனங்களை பெற்றுள்ளது.
'ரீல்ஸ்' எனும் குறு வீடியோ மோகத்தால், சாகசத்தில் ஈடுபட முயன்று பலர் தங்கள் இன்னுயிரை இழப்பது வாடிக்கையாகி வருகிறது. அதுபோல் இங்கு ஒருவர் பாம்பிடம் கடிவாங்கி சிக்கலில் மாட்டியுள்ளார். அது பற்றிய விவரம் வருமாறு:-
உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டம் ஹைபத்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜிதேந்திர குமார். விவசாயி. இவர் பாம்பு பிடிப்பதிலும் கைதேர்ந்தவர்.
இந்தநிலையில் அந்த கிராமத்தில் ஒரு வீட்டில் விஷ பாம்பு ஒன்று புகுந்துவிட்டதாகவும், அதை பிடித்துக் கொடுக்கும் படியும் ஜிதேந்திர குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற அவர், அந்த வீட்டின் சுவரில் இருந்த பொந்தில் பதுங்கி இருந்த பாம்பை பிடித்தார்.
இதையடுத்து அந்த பாம்பை தனது தோளில் மாலை போல் போட்டு போஸ் கொடுத்தார். அதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் ஆரவார கூச்சலிட்டனர். அப்போது அவருக்கு, ஊர் மக்கள் மத்தியில் வீர சாகசம் நடத்தி அதை 'ரீல்ஸ்'ஆக வெளியிட வேண்டும் என்ற ஆசை பிறந்தது.
நடக்கப்போகும் விபரீதம் பற்றி அறியாமல், பாம்புக்கு முத்தமிட முயன்றார் ஜிதேந்திர குமார். அப்போது அவரது நாக்கில் பாம்பு கடித்துவிட்டது.
இதனால் உடலில் விஷம் ஏறிய அவரது உடல்நிலை மோசமாகியது. உடனடியாக அவரை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றி உள்ளூர் மக்கள் கூறும்போது, ஜிதேந்திர குமார் மதுபோதையில் இருந்தார். பாம்பை தோளில் போட்டுக்கொண்டு, புகை பிடித்தபடி ரீல்ஸ் எடுத்தார். பின்னர் நாங்கள் வேண்டாம் என்று கூறியபோதும், பாம்புக்கு முத்தம் கொடுக்கும் ரீல்ஸ் வெளியிடுகிறேன் என்று கூறி முத்தமிட முயன்றவரை பாம்பு கடித்துவிட்டது என்று கூறினார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பல்வேறு விமர்சனங்களை பெற்றுள்ளது.






