என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜனாதிபதி திரவுபதி முர்மு"

    • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் மாநிலத்தின் முதன்மை அதிகார அமைப்பாக இருக்க முடியும்.
    • இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் ஜனாதிபதி, ஆளுநர்களுக்கு காலக்கெடு விதிப்பது அரசியல் சாசனத்தின் நெகிழ்வுத்தன்மைக்கு எதிரானது.

    தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டு இருந்தார்.

    முக்கியமாக, மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வகை செய்யும் பல்கலைக்கழக திருத்த மசோதா உள்பட மொத்தம் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைப்பதாக கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் 13-ந்தேதி அறிவித்தார்.

     

    இதனால் அந்த மசோதாக்களை தமிழக அரசு, 2023-ம் ஆண்டு நவம்பர் 18-ந்தேதி சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. அவற்றை அவர் ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பினார்.

    எனவே தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டை நாடியது. நிலுவையில் இருக்கும் மசோதாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுவை தாக்கல் செய்தது.

     இந்த மனுவை நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. நீண்ட கால விசாரணைக்குப்பின் கடந்த ஏப்ரல் 8-ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

     

    அப்போது தமிழ்நாடு சட்டசபையில் 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பிய ஆளுநரின் நடவடிக்கை சட்டவிரோதமானது என நீதிபதிகள் அறிவித்தனர்.

    மேலும் மசோதாக்கள் மீது முடிவு எடுப்பதில் ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது என்றும் அமைச்சரவையின் ஆலோசனையின்படியே செயல்பட வேண்டும் என்றும் கூறிய நீதிபதிகள், 10 மசோதாக்களையும் ஜனாதிபதிக்கு அனுப்பிய ஆளுநரின் நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

    பின்னர் சுப்ரீம் கோர்ட்டுக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி, ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்ட 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அத்துடன் சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு காலக்கெடு நிர்ணயித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அதன்படி சட்டசபைகளில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என காலக்கெடு நிர்ணயித்தனர்.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வரவேற்றன.

     

    அதேநேரம் இந்த தீர்ப்பு தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பி சுப்ரீம் கோர்ட்டின் விளக்கம் கேட்டிருந்தார்.

    இந்த கேள்விகள் தொடர்பாக 5 நீதிபதிகள் அடங்கிய சுப்ரீம் கோர்ட்டின் அரசியல்சாசன அமர்வு விசாரித்தது. தலைமை நீதிபதி கவாய், நீதிபதிகள் சூர்ய காந்த், விக்ரம் நாத், நரசிம்மா, சுந்துர்கர் அடங்கிய இந்த அமர்வில் நடந்த விசாரணை நிறைவடைந்து கடந்த செப்டம்பர் 11-ந்தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

    நாடு முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த வழக்கில் கடந்த மாதம் 20-ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜனாதிபதி எழுப்பியிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

    அதன்படி மசோதாக்கள் மீது முடிவு எடுக்க ஜனாதிபதி மற்றும் மாநில ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என நீதிபதிகள் அதிரடியாக தீர்ப்பு அளித்தனர்.

    5 நீதிபதிகளும் ஒருமித்த வகையில் வழங்கிய தீர்ப்பில் அவர்கள் கூறியதாவது:-

    மாநில சட்டசபைகள் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களை, ஆளுநர்கள் அரசியல் சட்டப்பிரிவு 200-ன் கீழ் தங்களுக்கு வழங்கப்பட்டு உள்ள அதிகாரத்தை மீறி நீண்ட காலம் கிடப்பில் போட முடியாது.

    அந்தவகையில், மாநில அரசில் 2 நிர்வாக அதிகார மையங்கள் இருக்க முடியாது என பஞ்சாப் அரசுக்கு எதிராக ராம் கபூர் என்பவர் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே அளித்த தீர்ப்பில் உடன்படுகிறோம்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் மாநிலத்தின் முதன்மை அதிகார அமைப்பாக இருக்க முடியும்.

    மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட அனுமதிப்பது என்பது சட்டசபை அதிகாரத்தை மதிப்பிழக்கச்செய்வதாகவும், கூட்டாட்சி கொள்கைக்கு எதிராகவும் அமையும் என கருதுகிறோம்.

    அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200-ன் கீழ் மசோதாக்கள் தொடர்பாக ஆளுநர்களுக்கு 3 வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. அதாவது ஒப்புதல் அளிப்பது, ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பது அல்லது ஒப்புதலை நிறுத்தி வைப்பது, தனது கருத்துடன் சட்டசபைக்கு திருப்பி அனுப்புவது ஆகியவை.

    இதில் ஒன்றை தேர்வு செய்தாக வேண்டும். இதில் மத்திய அரசு கூறுவது போல 4-வது வாய்ப்பு இல்லை. இதில் அமைச்சரவையின் ஆலோசனை இல்லாமல் தன் விருப்புரிமையுடன் செயல்பட முடியும்.

    நிதி மசோதாவாக இல்லாத பட்சத்தில் அந்த மசோதாவுக்கான ஒப்புதலை நிறுத்தி வைக்க முடியும் அல்லது கருத்துகளுடன் சட்டமன்றத்துக்கு மீண்டும் அனுப்பி வைக்கலாம்.

    அதேநேரம் இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் ஜனாதிபதி, ஆளுநர்களுக்கு காலக்கெடு விதிப்பது அரசியல் சாசனத்தின் நெகிழ்வுத்தன்மைக்கு எதிரானது.

    மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் அரசியல் சாசனத்தில் ஆளுநர்களுக்கு காலக்கெடு விதிக்காத நிலையில், சுப்ரீம் கோர்ட்டு கெடு விதிப்பது பொருத்தமாக இருக்காது.

    மசோதாக்கள் சட்டமாகி நடைமுறைக்கு வராத நிலையில், அவை குறித்த ஆளுநர்கள், ஜனாதிபதியின் முடிவுகளை கோர்ட்டு விசாரணைக்கு உட்படுத்த முடியாது. சட்டமாகாத மசோதாக்களின் பொருளடக்கம் குறித்து கோர்ட்டு விசாரிக்க முடியாது.

    மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநர்களின் செயல்பாடுகள் கோர்ட்டு விசாரணைக்கு உட்பட்டதல்ல. எனவே, ஆளுநர்களின் முடிவுகளை கோர்ட்டுகள் ஆய்வு செய்ய முடியாது. இது மசோதாக்கள் மீது ஜனாதிபதி எடுக்கும் முடிவுகளுக்கும் பொருந்தும்.

     

    மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் அரசியல் சாசனத்தில் ஜனாதிபதிக்கு கெடு விதிக்காத நிலையில், சுப்ரீம் கோர்ட்டு விதித்த கெடு ஜனாதிபதியையும் கட்டுப்படுத்தாது.

    இருப்பினும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநர்களின் காலதாமதம், விளக்கமற்ற நிலை நிலவும்போது குறிப்பிட்ட காலத்துக்குள் ஒப்புதல் அளிக்கும் வகையில், ஆளுநர்களின் விருப்புரிமை குறித்து கருத்து தெரிவிக்காமல் முடிவுகளை எடுக்க அளவான உத்தரவுகளை கோர்ட்டு பிறப்பிக்க முடியும்.

    ஆளுநர்களுக்கு எதிராக உரிமையியல் வழக்கு தொடர முடியாத வகையில் அரசியல் சாசனத்தின் 361-வது பிரிவு பாதுகாப்பு அளித்துள்ளது. இருப்பினும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநர்களின் காலதாமதம், விளக்கமற்ற நிலை நிலவும்போது கோர்ட்டு அளவாக தலையிட முடியும்.

    ஆளுநர்கள் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கும் ஒவ்வொரு மசோதாவுக்கும் ஒப்புதல் அளிப்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டின் ஆலோசனையை ஜனாதிபதி பெற தேவையில்லை.

    அதேநேரம் மசோதா குறித்த தெளிவில்லாதபோது அல்லது சுப்ரீம் கோர்ட்டின் ஆலோசனை தேவைப்படும்போது, ஜனாதிபதி அரசியலமைப்பு சாசனத்தின் 143-வது பிரிவின் கீழ் சுப்ரீம் கோர்ட்டின் ஆலோசனையை கேட்டுப்பெறலாம்.

    ஆளுநர்களின் அரசியலமைப்பு அதிகாரங்களையும், அவர்களின் உத்தரவுகளையும் சுப்ரீம் கோர்ட்டுக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்புப்பிரிவு 142-ன் கீழ் எந்த வகையிலும் மாற்ற முடியாது.

    அந்தவகையில் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்ததாக கொள்ளப்படும் என்ற கோட்பாட்டை சுப்ரீம் கோர்ட்டு சிறப்பு அதிகாரம் அனுமதிக்கவில்லை.

    ஆளுநர்களின் ஒப்புதல் இல்லாமல் ஒரு மசோதா சட்டமாகுமா என்ற கேள்விக்கே இடமில்லை. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் சட்டமியற்றும் பணியை ஐகோர்ட்டுகளோ, சுப்ரீம் கோர்ட்டோ பறித்துக்கொள்ள முடியாது.

    அரசியல்சாசன முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை குறைந்தபட்சம் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வு விசாரிக்க வேண்டும் என்ற விதி தொடர்பான கேள்வி நடைமுறைக்கு பொருத்தமற்றதாக இருப்பதால் பதில் அளிக்கவில்லை.

    சுப்ரீம் கோர்ட்டின் சிறப்பு அதிகாரம் குறித்து ஏற்கனவே விரிவாக பதில் அளித்து விட்டதால், குறிப்பிட்ட பாணியில் பதில் அளிப்பது சாத்தியமில்லை.

    மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நிலவும் தாவாக்களை தீர்வுகாணும் சுப்ரீம் கோர்ட்டின் வரம்பு எல்லை குறித்த கேள்வியும் நடைமுறைக்கு பொருத்தமற்றதாக இருப்பதால் பதில் அளிக்கவில்லை என்று தீர்ப்பில் விளக்கம் அளித்துள்ளது.

    இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

    • திருப்பதி மலைக்கு வந்து பத்மாவதி தாயார் விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
    • ஜனாதிபதி வருகையை முன்னிட்டு திருப்பதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    திருப்பதி:

    ஜனாதிபதி நேற்று மாலை 4.30 மணிக்கு தனது மகள் இதி ஸ்ரீ முர்மு மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வந்தார்.

    ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு அறநிலையத்துறை மந்திரி ராம நாராயண ரெட்டி, உள்துறை அமைச்சர் வாங்கலபுடி அனிதா, கலெக்டர் வெங்கடேஸ்வரர், எம்.எல்.ஏ. புலிவர்த்தி நானி உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    பின்னர் சாலை மார்க்கமாக பத்மாவதி தாயார் கோவிலில் தரிசனம் செய்தார். பின்னர் திருப்பதி மலைக்கு வந்து பத்மாவதி தாயார் விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

    இன்று காலை 9.30 மணி அளவில் வராஹ சாமியை தரிசனம் செய்தார். ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு, தலைமை நிர்வாக அதிகாரி அணில் குமார் சிங்கால், கூடுதல் தலைமை நிர்வாக அதிகாரி வெங்கைய்ய சவுத்ரி வரவேற்பு அளித்து கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்.

    இதையடுத்து திரவுபதி முர்மு குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசனம் செய்கிறார்.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு திருப்பதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

    • சர்தார் வல்லபாய் படேல் ஒரு சிறந்த தேசபக்தர்.
    • இந்தியாவின் ஒருங்கிணைப்புக்கு பின்னால் உந்து சக்தியாக வல்லபாய் படேல் இருந்தார்.

    இந்தியாவின் முதல் துணை பிரதமரும் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. வல்லபாய் படேலின் பிறந்தநாள் தேசிய ஒருமைப்பாட்டு நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

    டெல்லியில் சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இந்நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சர்தார் வல்லபாய் படேல் ஒரு சிறந்த தேசபக்தர்.

    தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பியவர். அவர் தனது அசைக்க முடியாத உறுதிப்பாடு, அசாத்திய தைரியம் மற்றும் திறமையான தலைமை மூலம் நாட்டை ஒன்றிணைக்கும் வரலாற்றுப் பணியை நிறைவேற்றினார். அவரது அர்ப்பணிப்பும் தேசிய சேவை மனப்பான்மையும் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது. தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு, நாம் ஒன்றுபட்டு, வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க உறுதிமொழி எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாளில் இந்தியா அவருக்கு மரியாதை செலுத்துகிறது. இந்தியாவின் ஒருங்கிணைப்புக்கு பின்னால் உந்து சக்தியாக அவர் இருந்தார், இதன் மூலம் நமது நாட்டின் வளர்ச்சிப் பாதையில் அதன் விதியை வடிவமைத்தார். தேசிய ஒருமைப்பாடு, நல்லாட்சி மற்றும் பொது சேவை மீதான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு இளம் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது. தன்னம்பிக்கை கொண்ட இந்தியா என்ற அவரது தொலைநோக்கு பார்வையை நிலைநிறுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.

    • காயமடைந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதியளித்துள்ளார்.
    • உடனடி உதவிக்காக ஆந்திரப் பிரதேச முதல்வர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட அதிகாரிகளுக்கு தெலுங்கானா முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.

    ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னதேகுரு கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் அந்த இருசக்கர வாகனம் பேருந்துக்கு அடியே சென்று சிக்கிக்கொண்டதால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

    தீவிபத்தின்போது பேருந்தில் 40-க்கும் அதிகமான பயணிகள் இருந்துள்ளனர். தீவிபத்து ஏற்பட்டபோது கண்ணாடி ஜன்னலை உடைத்து பலர் குதித்து உயிர் தப்பினர். இதில் காயம் அடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

    இந்நிலையில் பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளதாகவும்,18 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கர்னூல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

    பேருந்து தீ விபத்து சம்பவத்திற்கு ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள இரங்கலில், இந்த விபத்தை பேரழிவு என்று குறிப்பிட்டு, காயமடைந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று உறுதியளித்து உள்ளார். சம்பவ இடத்தை பார்வையிட்டு நிவாரண நடவடிக்கைகளை மேற்பார்வையிடுமாறு மூத்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

    தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இரங்கல் தெரிவித்து, உடனடி உதவிக்காக ஆந்திரப் பிரதேச முதல்வர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படவும், ஹெல்ப்லைனை நிறுவவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

    பேருந்து தீ விபத்து சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

    ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூலில் நடந்த ஒரு துயரமான பேருந்து தீ விபத்தில் உயிர் இழப்பு மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அவர்களை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்

    • பதினெட்டாம் படிகளில் இருமுடியுடன் ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்தார்.
    • ஜனாதிபதிக்கு கோவில் தந்திரி தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று கேரளா வந்தார். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லுதல், ராஜ்பவனில் முன்னாள் ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றல், வர்க்கலா சிவகிரி மடத்தில் நடக்கும் ஸ்ரீ நாராயணகுரு மகா சமாதி நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விதமாக அவரது பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி இன்று அவர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றார். முன்னதாக, சபரிமலைக்கு செல்லும் ஜனாதிபதி திரவுபதி முர்மு பம்பை நதியில் புனித நீராட வசதியாக திரிவேணி சங்கமம் பகுதியில் கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த இடத்துக்கு சென்று பம்பை நதியில் கால்களை நனைத்துவிட்டு ஜனாதிபதி திரும்பினார். பின்பு பம்பையில் வைத்து இருமுடி கட்டிய ஜனாதிபதி, சபரிமலை யாத்திரையை தொடங்கினார்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு சுவாமி ஐயப்பன் சாலை மற்றும் பாரம்பரிய மலையேற்றப் பாதை வழியாக சிறப்பு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். பகல் 11.55 மணி முதல் 12.25 மணி வரை ஜனாதிபதி சாமி தரிசனம் மற்றும் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    அதன்படி பதினெட்டாம் படிகளில் இருமுடியுடன் ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்தார். முன்னதாக ஜனாதிபதிக்கு கோவில் தந்திரி தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

    சபரிமலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு, தேவசம் விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். பின்பு பிற்பகலில் சபரிமலையில் இருந்து பம்பைக்கு திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது.

    ஆனால், பம்பையில் இருந்து குடியரசுத் தலைவர் புறப்பட இருந்த நிலையில், அப்பகுதியில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததால் அவர் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மரங்களை அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    • ஜனாதிபதி திரவுபதி முர்மு பம்பை நதியில் புனித நீராட வசதியாக திரிவேணி சங்கமம் பகுதியில் கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது.
    • பம்பையில் வைத்து இருமுடி கட்டிய ஜனாதிபதி, சபரிமலை யாத்திரையை தொடங்கினார்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று கேரளா வந்தார். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லுதல், ராஜ்பவனில் முன்னாள் ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றல், வர்க்கலா சிவகிரி மடத்தில் நடக்கும் ஸ்ரீ நாராயணகுரு மகா சமாதி நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விதமாக அவரது பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி இன்று அவர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றார். இதற்காக அவர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து இன்று காலை விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அவரது ஹெலிகாப்டர் முதலில் நிலக்கல்லில் தரையிறங்குவதாக இருந்தது.

    ஆனால் மழை உள்ளிட்ட பாதகமான வானிலை காரணமாக அவரது ஹெலிகாப்டர் இறங்கும் இடம் பத்தினம்திட்டா மல்லசேரி அருகே உள்ள பிரமடம் மைதானத்ததிற்கு மாற்றப்பட்டது. இதற்காக அந்த மைதானத்தில் ஹெலிபேட் அமைக்கப்பட்டது.

    அந்த ஹெலிகாப்டர் தளத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணித்த ஹெலிகாப்டர் இன்று காலை தரையிறக்கப்பட்டது. அப்போது ஜனாதிபதி வந்த ஹெலிகாப்டரின் சக்கரம் கான்கிரீட் தளத்தில் பதிந்து லேசாக சரிந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ஹெலிகாப்டர் சக்கரம் சிக்கி லேசாக சரிந்தபடி இருந்ததால் ஹெலிகாப்டரில் இருந்து ஜனாதிபதி உடனடியாக இறங்கவில்லை. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் ஜனாதிபதியின் ஹெலிகாப்டரை தள்ளி சமமான பகுதிக்கு கொண்டு சென்றனர்.

    அதன்பிறகு ஹெலிகாப்டரில் இருந்து ஜனாதிபதி இறங்கிவந்தார். அவரை தேவசம்போர்டு மந்திரி வாசவன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதன்பிறகு அங்கிருந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு கார் மூலமாக சபரிமலை கோவிலுக்கு புறப்பட்டார்.

    சபரிமலைக்கு செல்லும் ஜனாதிபதி திரவுபதி முர்மு பம்பை நதியில் புனித நீராட வசதியாக திரிவேணி சங்கமம் பகுதியில் கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த இடத்துக்கு சென்று பம்பை நதியில் கால்களை நனைத்துவிட்டு ஜனாதிபதி திரும்பினார். பின்பு பம்பையில் வைத்து இருமுடி கட்டிய ஜனாதிபதி, சபரிமலை யாத்திரையை தொடங்கினார்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு சுவாமி ஐயப்பன் சாலை மற்றும் பாரம்பரிய மலையேற்றப் பாதை வழியாக சிறப்பு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். பகல் 11.55 மணி முதல் 12.25 மணி வரை ஜனாதிபதி சாமி தரிசனம் மற்றும் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    அதன்படி பதினெட்டாம் படிகளில் இருமுடியுடன் ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்தார். முன்னதாக ஜனாதிபதிக்கு கோவில் தந்திரி தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

    சபரிமலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு, தேவசம் விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். பின்பு பிற்பகலில் சபரிமலையில் இருந்து பம்பைக்கு திரும்புகிறார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    ஜனாதிபதி வந்ததால் மாதாந்திர பூஜையின் கடைசி நாளான இன்று பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • வர்க்கலாவில் நாராயண குரு ஆசிராமத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு மீண்டும் திருவனந்தபுரம் திரும்புகிறார்.
    • கேரளாவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

    திருவனந்தபுரம்:

    ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 17-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஐயப்பன் கோவிலில் பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

    இதனை தொடர்ந்து ஐப்பசி மாத பூஜையின் நிறைவு நாளான நாளை ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலையில் சாமி தரிசனம் செய்கிறார். இதையொட்டி அவர் இன்று திருவனந்தபுரம் வருகிறார். இன்று இரவு கவர்னர் மாளிகையில் ஓய்வெடுக்கும் அவர் நாளை காலை 9 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல் வருகிறார். அங்கிருந்து கார் மூலம் பம்பை வரும் அவர் இருமுடி கட்டி தேவஸ்தானத்தின் சிறப்பு வாகனம் மூலம் சன்னிதானம் செல்கிறார். தொடர்ந்து பகல் 12.30 மணியளவில் சாமி தரிசனம் செய்துவிட்டு சன்னிதானத்தில் ஓய்வெடுக்கிறார். பின்னர் வாகனம் மூலம் நிலக்கல் வந்து அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் வருகிறார்.

    பின்னர் 23-ந்தேதி வர்க்கலாவில் நாராயண குரு ஆசிராமத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு மீண்டும் திருவனந்தபுரம் திரும்புகிறார். தொடர்ந்து 24-ந்தேதி வரை கேரளாவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலைக்கு வருவதையொட்டி இன்றும், நாளையும் பக்தர்களின் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த 2 நாட்களுக்கும் ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்பட்டு உள்ளது. 

    • ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை திறக்கப்படுகிறது.
    • சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

    திருவனந்தபுரம்:

    ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து நாளை மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது.

    கோவிலில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) வழக்கம் போல் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் உள்ளிட்ட பூஜைகளுக்கு பிறகு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு அடைக்கப்படும்.

    ஐப்பசி மாத பூஜையின் நிறைவு நாளான 22-ந் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலையில் சாமி தரிசனம் செய்கிறார். இதையொட்டி அவர் வருகிற 21-ந் தேதி திருவனந்தபுரம் வருகிறார். அன்று இரவு கவர்னர் மாளிகையில் ஓய்வெடுக்கும் அவர் மறுநாள் காலை 9 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல் வருகிறார். அங்கிருந்து கார் மூலம் பம்பை வரும் அவர் இருமுடி கட்டி தேவஸ்தானத்தின் சிறப்பு வாகனம் மூலம் சன்னிதானம் செல்கிறார். தொடர்ந்து பகல் 12.30 மணியளவில் சாமி தரிசனம் செய்துவிட்டு சன்னிதானத்தில் ஓய்வெடுக்கிறார், பின்னர் வாகனம் மூலம் நிலக்கல் வந்து அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் வருகிறார்.

    பின்னர் மறுநாள் (22-ந் தேதி) வர்க்கலாவில் நாராயண குரு ஆசிராமத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு மீண்டும் திருவனந்தபுரம் திரும்புகிறார். தொடர்ந்து 24-ந் தேதி வரை கேரளாவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலைக்கு வருவதையொட்டி வருகிற 21, 22-ந் தேதிகளில் பக்தர்களின் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த 2 நாட்களுக்கும் ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் பாதுகாப்பு உள்பட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    முன்னதாக 18-ந் தேதி காலை 8 மணிக்கு சன்னிதானத்தில் சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்படும் மேல் சாந்திகள் நடப்பு மண்டல சீசன் தொடக்கம் முதல் ஒரு வருட காலத்திற்கு சபரிமலையில் தங்கி இருந்து பூஜை மற்றும் திருப்பணிகளை நிறைவேற்றுவார்கள்.

    • இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவியதன் காரணமாக அவரது வருகை ஒத்திவைக்கப்பட்டது.
    • மலையேறி செல்லும் போது, அவர் சோர்வடைந்தால் சன்னிதானத்துக்கு டோலியில் செல்லவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை மட்டுமின்றி ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் மாதாந்திர பூஜையும் நடைபெறும். ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 17-ந்தேதி திறக்கப்படுகிறது.

    அதில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 22-ந்தேதி சபரிமலைக்கு வருகிறார். அவர் கடந்த மே மாதமே சபரிமலைக்கு வருவதாக இருந்தது. ஆனால் அப்போது இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவியதன் காரணமாக அவரது வருகை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்தநிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தற்போது சபரிமலைக்கு வருகிறார். இதற்காக அவர் சிறப்பு விமானத்தில் வருகிற 22-ந்தேதி மதியம் கொச்சி வருகிறார். அங்கிருந்து நிலக்கல்லுக்கு ஹெலிகாப்டரில் வரும் அவர், பின்பு பம்பைக்கு காரில் செல்கிறார்.

    பம்பையில் உள்ள பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையில் சிறிதுநேரம் ஓய்வெடுக்கும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, மாலையில் பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு இருமுடி கட்டுடன் மலையேறி செல்கிறார். அதே நேரத்தில் மலையேறி செல்லும் போது, அவர் சோர்வடைந்தால் சன்னிதானத்துக்கு டோலியில் செல்லவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

    இதற்காக 5 டோலிக்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. மேலும் அதனை தூக்கிச் செல்லக்கூடிய தொழிலாளர்கள் ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி தேர்வு செய்யப்படுகிறார்கள்.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு நிலக்கல் முதல் பம்பை வரையிலும், பம்பை முதல் சன்னிதானம் வரையிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. அதனை ஆய்வு செய்வதற்காக ஜனாதிபதிக்கான சிறப்பு பாதுகாப்பு குழுவினர் இந்த வாரம் சபரிமலைக்கு வருகிறார்கள்.

    • உத்தரபிரதேசத்தின் மதுராவுக்கு செல்ல ரெயிலில் பயணம் மேற்கொண்டார்.
    • மகாராஜா எக்ஸ்பிரஸ் ரெயில் அமைப்பில், ஜனாதிபதி சூட், டீலக்ஸ் சூட்கள், உணவகங்கள், ஓய்வறைகள் உள்ளிட்ட 12 பெட்டிகள் இருக்கும்.

    இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தால் மகாராஜா எக்ஸ்பிரஸ் சொகுசு ரெயில் சுற்றுலா பயணிகளுக்காக இயக்கப்படுகிறது. இது உலகின் மிக ஆடம்பரமான ரெயில்களில் ஒன்றாகும்.

    இந்த நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று மகாராஜா எக்ஸ்பிரஸ் சொகுசு சிறப்பு ரெயிலில் பயணம் செய்தார். அவர் டெல்லியில் இருந்து உத்தரபிரதேசத்தின் மதுராவுக்கு செல்ல இந்த ரெயிலில் பயணம் மேற்கொண்டார். ஜனாதிபதி மற்றும் அவரது ஊழியர்களுக்கான ஜனாதிபதி அறை, டீலக்ஸ் அறைகள், உணவகங்கள், ஓய்வறைகளைக் கொண்ட பெட்டிகள் சொகுசு ரெயிலில் உள்ளன.

    இன்று காலை 8 மணிக்கு திரவுபதி முர்மு பயணம் செய்த மகாராஜா எக்ஸ்பிரஸ் ரெயில் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இந்த ரெயில் உத்தரபிரதேசத்தின் பிருந்தாவன் சாலை ரெயில் நிலையத்தை காலை 10 மணிக்கு சென்றடைந்தது.

    பிருந்தாவனத்தில் உள்ள ஸ்ரீபாங்கே பிகாரி கோவில், நிதிவன்-குப்ஜ கிருஷ்ணா கோவில் ஆகியவற்றில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தரிசனம் மற்றும் பூஜை செய்தார். பின்னர் அவர் மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் வழிபடுகிறார். அதன்பின் மாலையில் அந்த சிறப்பு ரெயிலில் டெல்லிக்கு புறப்படுகிறார்.

    இதுதொடர்பாக ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, மகாராஜா எக்ஸ்பிரஸ் ரெயில் அமைப்பில், ஜனாதிபதி சூட், டீலக்ஸ் சூட்கள், உணவகங்கள், ஓய்வறைகள் உள்ளிட்ட 12 பெட்டிகள் இருக்கும். மூத்த ரெயில்வே ஊழியர்களுக்காக 2 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. தடையற்ற சேவைகளை உறுதி செய்வதற்காக 2 என்ஜின்கள் இருக்கும். ஒரு என்ஜின் இயங்கும் அதே வேளையில், மற்றொரு என்ஜின் தொழில்நுட்ப சிக்கல்களை சரிசெய்ய உடன் பயணிக்கும் என்றார். ஜனாதிபதியின் இந்த பயணத்தை தொடர்ந்து ரெயில் நிலைய மேலாளர்கள், ரெயில்வே பாதுகாப்புப் படை மற்றும் பிற ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டன.

    கடந்த 2023-ம் ஆண்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு ரெயில் மூலம் ஒடிசாவின் புவனேஸ்வரில் இருந்து தனது சொந்த ஊரான ராய்ரங்பூருக்குப் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • துலாசம பூஜைக்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு வர உள்ளார்.
    • ஜனாதிபதி திரவுபதி முர்மு எந்த நாளில் வந்தாலும் அவரை வரவேற்க கேரள அரசும் தேவசம் வாரியமும் தயாராக உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள தேவசம்போர்டு மந்திரி வாசவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, ஜனாதிபதி திரவுபதி முர்மு அடுத்த மாதம் சபரிமலை வர உள்ளதாக தெரிவித்தார்.

    துலாசம பூஜைக்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு வர இருப்பதாகவும், இது பற்றி கவர்னர் மாளிகையில் இருந்து தகவல் வந்துள்ள நிலையில், சரியான தேதி விவரம் தெரிய வரவில்லை. அதேநேரம் அவர் எந்த நாளில் வந்தாலும் வரவேற்க கேரள அரசும் தேவசம் வாரியமும் தயாராக உள்ளதாக அவர் கூறினார்.

    • ஜனாதிபதி திரவுபதி முர்மு தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
    • ஜனாதிபதிக்கு கோவில் நிர்வாகம் சார்பாக பூரண கும்பம் மரியாதை அளிக்கப்படுகிறது.

    திருச்சி:

    இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று (செவ்வாய்க்கிழமை) 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்தார்.

    மைசூருவில் இருந்து நேற்று நண்பகல் 12 மணி அளவில் சென்னை வருகை தந்த அவர், நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற சிட்டி யூனியன் வங்கியின் 120-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்ற அவருக்கு தமிழக கவர்னர் ஆர்.என். ரவி விருந்தளித்து உபசரித்தார்.

    பின்னர் இன்று (புதன்கிழமை) காலை 9:30 மணி அளவில் சென்னையிலிருந்து தனி விமான மூலம் புறப்பட்டு திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு வருகிறார். தொடர்ந்து திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

    பின்னர் அதே ஹெலிகாப்டரில் மாலை 4 மணிக்கு திருச்சி கொள்ளிடம் யாத்திரி நிவாஸ் அருகே அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் வந்து இறங்குகிறார்.

    அங்கிருந்து காரில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு செல்கிறார். அங்கு அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பாக பூரண கும்பம் மரியாதையை அளிக்கப்படுகிறது.

    அதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி கோவிலுக்குள் சென்று ரங்கநாதரை தரிசனம் செய்கிறார். தொட ர்ந்து அவர் கோவில் வளாகத்தை சுற்றி பார்க்கிறார். மேலும் கோவிலில் உள்ள சிற்பங்களையும் அவர் பார்வையிடுகிறார்.

    தரிசனம் முடிந்த உடன் அதே ஹெலிகாப்டரில் மீண்டும் திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு சென்று அங்கிருந்து தனி விமான மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, திருச்சி சர்வதேச விமான நிலையம் மற்றும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனாதிபதி திருச்சி வந்து செல்லும் அவரது பயணத்திட்ட வழித்தடத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு இன்று காலை 11 மணி வரை மட்டும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். மாலை 6 மணி வரை பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு மேல் பக்தர்கள் வழக்கம்போல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

    ஸ்ரீரங்கம் கோவில் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

    ×