என் மலர்
வழிபாடு
- ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமியில் வரக்கூடியது, ரிஷி பஞ்சமி விரதம்.
- இந்த விரதம் விநாயகர் சதுர்த்திக்கு அடுத்த நாள் வரும்.
ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமியில் வரக்கூடியது, ரிஷி பஞ்சமி விரதம். இந்த விரதம் விநாயகர் சதுர்த்திக்கு அடுத்த நாள் வரும். சப்த ரிஷிகளை வணங்கி வழிபடுவதன் மூலம் பெண்களின் சாபங்கள், பெண்களுக்கு ஏற்படும் தோஷங்கள் விலகும் என்று கூறப்பட்டுள்ளது.
ஒரு சமயம் தேவேந்திரன் தனது குருவுக்கு துரோகம் செய்ததால், தன் பதவி, ராஜ்ஜியம், செல்வம் போன்றவற்றை இழந்து தாமரைத் தண்டுக்குள் வசிக்கக்கூடிய சாபத்தை பெற்றான். இதையடுத்து அவன், விஷ்ணுவை துதித்து 'என் சாபம் நீங்க என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டான். அதற்கு விஷ்ணு, 'உன் சாபத்தை யாராவது ஏற்றுக் கொண்டால், உனக்கு தோஷம் நீங்கி பழையபடி ராஜ்ஜியமும், செல்வமும் கிடைக்கும்' என்றார். இதையடுத்து இந்திரன், தன்னுடைய சாபத்தை ஏற்றுக்கொள்ளும்படி பலரிடம் கேட்டான். அவனது சாபத்தை ஏற்க, மரம், நிலம், தண்ணீர், பெண் ஆகிய நான்கு பேர் முன்வந்தனர்.
இதன் காரணமாக இந்திரனின் சாபம் நீங்கியது. அவன் மீண்டும் தன் ராஜ்ஜியமான இந்திரலோகத்தை அடைந்து, செல்வ வளத்துடன் வாழத் தொடங்கினான். தன்னுடைய சாபம் நீங்க காரணமாக இருந்த மரம், நிலம், தண்ணீர், பெண் நால்வருக்கும் வரம் அளித்தான். அதன்படி மரத்தை வெட்டினாலும் மீண்டும், மீண்டும் துளிர்க்கும் சக்தி பெற்றது. நிலம் வறண்டு போனாலும், மறுபடியும் தண்ணீர் பட்டதும் பசுமையாக மாறிவிடும் தன்மை பெற்றது.
தண்ணீருக்கு எல்லாவித பொருட்களின் அசுத்தங்களையும் நீக்கக்கூடிய ஆற்றல் கிடைத்தது. பெண்ணுக்கு மூன்று நாட்கள் மாதவிடாய் ஏற்பட்டு, அதன் மூலம் அவளது தோஷங்கள் அனைத்தும் நீங்கி எப்போதும் புனிதமாக விளங்க ஆரம்பித்தாள். பெண்கள் மாதவிடாய் காலத்தில் செய்யக்கூடாத செயல்களை செய்வதால் ஏற்படும் தோஷத்தை நீக்க 'ரிஷி பஞ்சமி' விரதம் கைகொடுக்கிறது.
விதர்ப்ப நாட்டில், உதங்கர் என்ற முனிவர் வாழ்ந்து வந்தார். அவருடைய மனைவி சுசீலை. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருந்தனர். உதங்க முனிவர் தன்னுடைய பெண்ணை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்தார். ஆனால் மணமான சில நாட்களிலேயே அவள் தன்னுடைய கணவனை இழந்தாள். இதனால் மனம் துவண்ட முனிவர், தன்னுடைய குடும்பத்துடன் கங்கைக் கரையில் இருந்த ஒரு கிராமத்தில் தங்கினார். அங்கு தன்னுடைய சீடர்களுக்கு வேதம் கற்பித்து வந்தார். உதங்க முனிவரின் பெண், தந்தைக்கு பணிவிடை செய்து வந்தாள்.
ஒரு நாள் இரவு தூங்கும் நேரத்தில் அவளது உடலில் புழுக்கள் நெளிவதைக் கண்ட தாய், அதுபற்றி தன் கணவரான உதங்க முனிவரிடம் கேட்டாள். தன்னுடைய ஞான திருஷ்டியால் அதற்கான காரணத்தை அறிந்தார், முனிவர். அந்தப் பெண் இதற்கு முந்தைய பிறவியில் ஒரு அந்தணரின் மகளாக இருந்தாள். அப்போது மாதவிடாய் காலத்தில் அசுத்தம் என்று எண்ணாமல், வீட்டில் உள்ள பொருட்களைத் தொட்டாள். மேலும் பயபக்தியுடன் தனது தோழிகள் செய்து வந்த ரிஷி பஞ்சமி விரதத்தை பார்த்து கேலி செய்தாள். அதனால்தான் அவள் உடலில் புழுக்கள் நெளிகின்றன.
மேலும் தோழிகள் செய்த ரிஷி பஞ்சமி விரதத்தைப் பார்த்த காரணத்தால், இந்தப் பிறவியிலும் அவள் அந்தண குலத்தில் பிறக்கும் பேறு பெற்றாள். அந்த சாபம் நீங்க, ரிஷி பஞ்சமி விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்று உதங்க முனிவர் தெரிவித்தார். இதையடுத்து முனிவரின் மகள், ரிஷி பஞ்சமி விரதத்தை மேற்கொண்டு, தன்னுடைய சாபம் நீங்கப் பெற்றாள்.
ரிஷி பஞ்சமி நாள் அன்று, கவுதமர் - அவரது மனைவி அகல்யா, பாரத்வாஜர் - அவரது மனைவி சுசீலா, விசுவாமித்திரர் - அவரது மனைவி குமதவதி, காஷ்யபர் - அவரது மனைவி அதிதி, ஜமாத்கனி - அவரது மனைவி ரேணுகா, வசிஷ்டர் - அவரது மனைவி அருந்ததி, அத்ரி - அவரது மனைவி அனுசுயா ஆகிய சப்த ரிஷிகளையும், அவர்களின் பத்தினிகளையும் பூஜிப்பதன் மூலம், பெண்களின் சாபமும், அவர்களின் தோஷமும் விலகும் என்கிறார்கள்.
ரிஷி பஞ்சமி பூஜையை மாதவிலக்கு நின்றவர்கள், தொடர்ந்து ஏழு வருடம் பூஜை செய்து, எட்டாவது வருடம் பூஜையை முடிக்க வேண்டும். மாதவிலக்கு நின்று 7 வருடங்களுக்கு பின்னர் இந்த பூஜையை செய்ய வேண்டும் என்றும் சொல்கிறார்கள். ரிஷி பஞ்சமி பூஜை செய்பவர்கள், முதலில் யமுனை நதியை பூஜை செய்ய வேண்டும். பின்னர் கலசம் வைத்து சப்த ரிஷிகளையும், அவர்களின் பத்தினி களையும் ஆவாகனம் செய்ய வேண்டும். பூஜை அன்று மாலை வேளையில், தன்னால் இயன்றதை நைவேத்தியமாக படைத்து, தூப-தீபம் காட்ட வேண்டும். பின்னர் 'ஸப்தரிஷி தேவானாம் யதாஸ்த்தானம் ப்ரதிஷ்டாபயாமி, சோபநார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச' என்று கூறி, வடக்கு முகமாக சப்த ரிஷி கலசத்தை நகர்த்தி வைக்க வேண்டும்.
வடதேசங்களில், முதலில் காலையில் எழுந்தவுடன் ரிஷப பஞ்சமி பூஜை செய்யும் பெண்கள் (இங்கு மாதவிடாய் நின்ற பெண்கள் மட்டுமல்லாது, திருமணமான அனைத்து பெண்களும் இந்த பூஜையை செய்கிறார்கள்), நதிக்கரைக்குச் சென்று அதில் 365 முறை மூழ்கி எழுகிறார்கள். அதன் பிறகே இந்த பூஜையை தொடங்குவார்கள். நெல்லி பொடி தேய்த்து குளிப்பதை விசேஷமாக சொல்கிறார்கள். வீட்டின் வடகிழக்கில் பூஜையறையில் கும்பம் வைத்து பூஜை ஆரம்பிப்பார்கள்.
- சாமி ஊர்வலத்திற்கு முன்பாக பல்வேறு மாநில கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
- பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவிலில் வி.ஐ.பி . தரிசனங்கள், ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவம் நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கலந்து கொண்டு அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து நேற்று இரவு பெரிய சேஷ வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளினார். இன்று காலை பிரமோற்சவ விழாவில் சின்னசேஷ வாகனத்தில் ஏழுமலையான் வீதி உலா நடந்தது. மாட வீதிகளில் ஏழுமலையான் பவனி வந்தார்.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சாமி ஊர்வலத்திற்கு முன்பாக பல்வேறு மாநில கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
நேற்று ஏழுமலையான் கோவிலில் 62,745 பேர் சாமி தரிசனம் செய்தனர். 24,451 பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்தினர். ரூ.3.10 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் 19 காத்திருப்பு அறைகள் நிரம்பியது. 16 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவிலில் வி.ஐ.பி . தரிசனங்கள், ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
- வேலாயுதபுரம் லொயோலா எல்சியத்தில் திருச்சிலுவை ஆலய திருவிழா.
- திருச்சிலுவை 25 அடி உயரத்திலும் புதிதாக அமைக்கப்பட்டு அர்ச்சிப்பு விழா.
நெல்லை:
வாசுதேவநல்லூர் அருகே உள்ள வேலாயுதபுரம் லொயோலா எல்சியத்தில் திருச்சிலுவை ஆலய திருவிழா நடைபெற்றது. இத்திருச்சிலுவை ஆலயத்தில் வேலாயுதபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாளையங்கோட்டையில் வசிக்கும் லொயோலா பப்ளிகேஷன் இயக்குனர் இ.பெர்க்மான்ஸ் சார்பில், இந்தியாவிலேயே உயரமான திருச்சிலுவை சுமந்த ஆண்டவர் சொரூபம் 20 அடி உயரத்திலும், திருச்சிலுவை 25 அடி உயரத்திலும் புதிதாக அமைக்கப்பட்டு அர்ச்சிப்பு விழா நடைபெற்றது.
பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் எஸ்.அந்தோணிசாமி தலைமை தாங்கி, திருச்சிலுவை சுமந்த ஆண்டவர் சொரூபத்தை அர்ச்சித்தார். பின்னர் ஆயரை கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக திருச்சிலுவை ஆலயத்திற்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து திருச்சிலுவை ஆலயத்தில் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர் இரவில் திருவிழா சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து அசன விருந்து நடைபெற்றது. விழாவில் அருட்தந்தையர்கள் ஜோமிக்ஸ், ஞானப்பிரகாசம், அம்புரோஸ் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வேலாயுதபுரம் பங்குத்தந்தை வ.எட்வின் ஆரோக்கியநாதன் மற்றும் லொயோலா பப்ளிகேஷன் இயக்குனர் இ.பெர்க்மான்ஸ் செய்து இருந்தனர்.
- நவசந்தி விநாயகர்களுக்கு பட்டு வஸ்திரங்கள், பூஜை பொருட்கள்.
- ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் சிறப்பு பூஜைகள்.
ஸ்ரீ காளஹஸ்தி:
ஸ்ரீகாளஹஸ்தி சிவன்கோவில் சார்பில் நான்கு மாட வீதிகளில் உள்ள நவசந்தி விநாயகர்களுக்கு பட்டு வஸ்திரங்கள், பூஜை பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டது.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் துணை கோவில்களான நான்கு மாட வீதிகளில் உள்ள நவசந்தி விநாயகர் கோவிலுக்கு விநாயகர் சதுர்த்தியையொட்டி ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. மதுசூதன் ரெட்டி மற்றும் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசலு, கோவில் நிர்வாகி கே.வி.சாகர்பாபு மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நான்கு மாட வீதிகளில் உள்ள நவசந்தி விநாயகர் கோவிலுக்கு, சிவன் கோவில் சார்பில் பட்டு வஸ்திரங்கள், பூஜை பொருட்களை வழங்கினார்கள்.
முன்னதாக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் முறைப்படி பட்டு வஸ்திரங்கள் மற்றும் பூஜை பொருட்களை கோவிலில் இருந்து தலைமீது சுமந்து மேள தாளங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக சென்று நவசந்தி விநாயகர் கோவில்களுக்கு வழங்கப்பட்டது.
இது குறித்து அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசலு கூறுகையில், விநாயகர் சதுர்த்தி புனித தினத்தை யொட்டி ஸ்ரீகாளஹஸ்தி தேவஸ்தானம் சார்பில் முதன்மை கடவுளாக விளங்கும் கணபதிக்கு பட்டு வஸ்திரங்கள், பூஜைப் பொருட்கள் சமர்ப்பிப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் பட்டு வஸ்திரங்கள், பூஜை பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டது என தெரிவித்தார்.
- நேற்று முக்குறுணி விநாயகருக்கு வெள்ளிக்கவச அலங்காரம்.
- மெகா கொழுக்கட்டை படையல் நடைபெறும்.
மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் விநாயகர் சதுர்த்தியான நேற்று முக்குறுணி விநாயகருக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டு 18 படியில் மெகா கொழுக்கட்டை படைக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு சிறப்புகள் பல உண்டு. இந்த விநாயகர் சிலை அப்படியே முழு உருவமாக மண்ணில் இருந்து கிடைத்தது. மன்னர் திருமலை நாயக்கர், அரண்மனை கட்டுவதற்காக மண் எடுக்க தற்போதுள்ள தெப்பக்குளம் பகுதியில் தோண்டினார்.
அப்போது பூமிக்குள் இருந்து 8 அடி உயரத்தில் 4 கரங்களுடன் அமர்ந்த நிலையில் விநாயகர் சிலை இருப்பதை கண்டார். அந்த சிலையை அப்படியே மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அம்மன் சன்னதியில் இருந்து சுவாமி சன்னதிக்கு செல்லும் வழியில் பிரதிஷ்டை செய்து, முக்குறுணி விநாயகராக வழிபட்டார்.
விநாயகர் சதுர்த்தியன்று முக்குறுணி விநாயகருக்கு சிறப்பு பூஜை, மெகா கொழுக்கட்டை படையல் நடைபெறும். நேற்று விநாயகர் சதுர்த்தி என்பதால், முக்குறுணி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டது.
பின்னர் வழக்கம்போல், 18 படி பச்சரிசியில், வெல்லம், தேங்காய், கடலை, எள், ஏலக்காய், நெய் கலந்து, மெகா கொழுக்கட்டை தயார் செய்யப்பட்டது. அந்த கொழுக்கட்டையை 4 பேர் மூங்கில் கம்பில் சுமந்து வந்தனர். மெகா கொழுக்கட்டையை பகல் 11 மணிக்கு உச்சிக்கால பூஜையின் போது முக்குறுணி விநாயகருக்கு படைத்து, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் விநாயகரை தரிசனம் செய்தனர். அதை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனர் கிருஷ்ணன் தலைமையில் பட்டர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.
- மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார்.
- தேரோட்டம் பக்தர்கள் வெள்ளத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
திருப்பத்தூர்:
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கொட்டும் மழையில் நேற்று மாலை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழா நாட்களில் இரவு மூஷிக வாகனம், சிம்ம வாகனம், பூத வாகனம், கமல வாகனம், ரிஷிப வாகனம், மயில் வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் கற்பக விநாயகர் எழுந்தருளி வீதி உலா வந்தார்.
நேற்று 9-ம் நாள் விழா ஆகும். விநாயகர் சதுர்த்தியும் என்பதால் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலையில் மூலவர் தங்கக்கவசத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து மூலவருக்கு சந்தனம் சாத்தப்பட்டு சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது.
மாலையில் சந்தனகாப்பு அலங்காரத்தில் கற்பக விநாயகருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலை 4.30 மணி முதல் ஏராளமான பக்தர்கள் விநாயகரை சந்தனக்காப்பு திருக்கோலத்தில் தரிசித்தனர்.
மாலையில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் பெரிய தேரில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் கற்பக விநாயகரும், சிறிய தேரில் சண்டிகேசுவரரும் எழுந்தருளினர். அதன் பின்னர் தேரோட்டம் பக்தர்கள் வெள்ளத்தில் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது திடீரென மழை பெய்தது. ஆனால் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் தேரை இழுத்து சென்றனர். இதில் சண்டிகேசுவரர் தேரை முழுக்க முழுக்க பெண்களே இழுத்து வந்து தரிசித்தனர்.
தேரோட்டத்தை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் பிள்ளையார்பட்டிக்கு இயக்கப்பட்டன.
இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. பின்னர் உற்சவர் தங்க மூஷிக வாகனத்தில் எழுந்தருளி கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், மதியம் மூலவருக்கு மோதகம் (கொழுக்கட்டை) படையல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் கண்டவராயன்பட்டி தண்ணீர்மலை செட்டியார் மற்றும் காரைக்குடி சாமிநாதன் செட்டியார் ஆகியோர் செய்துள்ளனர்.
- அபிஷேகம், தீபாராதனை மற்றும் பூஜைகள் நடந்தன.
- விநாயகர் கோவில்களில் பக்தி சொற்பொழிவு மற்றும் பக்தி பாடல்கள் இசைக்கப்பட்டன.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பொதுமக்கள் வீடுகள், பொது இடங்களில் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. குமரி மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடந்தது. இதையொட்டி விநாயகர் கோவில்களில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு அபிஷேகம், தீபாராதனை மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இதனால் விநாயகர் கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
நாகர்கோவிலை பொறுத்த வரையில் மீனாட்சிபுரம் அற்புத விநாயகர் கோவில், கோட்டார் செட்டிநயினார் தேசிக விநாயகர் தேவஸ்தான கோவில், வடசேரி விஜய கணபதி கோவில் ஆகிய விநாயகர் கோவில்களில் பக்தி சொற்பொழிவு மற்றும் பக்தி பாடல்கள் இசைக்கப்பட்டன. மேலும் கோவில்களில் நாள் முழுவதும் விநாயகருக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது.
மேலும் பொதுமக்கள் அதிகாலையிலேயே எழுந்து நீராடி தங்களது வீட்டில் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்தனர். பின்னர் விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து அவருக்கு பிடித்த அவல், பொரி மற்றும் கொழுக்கட்டை படைத்து வழிபட்டனர்.
இதேபோல இந்து முன்னணி, அகில பாரத இந்து மகா சபா மற்றும் சிவசேனா ஆகிய இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களிலும், கோவில்களிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. வீடுகளில் சிறிய விநாயகர் சிலைகளும், பொது இடங்கள் மற்றும் கோவில்களில் 2 அடி முதல் 10 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அந்த வகையில் வீடுகள் மற்றும் பொது இடங்கள் உள்பட சுமார் 5 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
தக்கலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சமய வகுப்பு மாணவ-மாணவிகளில் பஜனை ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை தக்கலை பெருமாள் கோவிலில் வெள்ளிமலை சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஊர்வலம் பார்த்தசாரதி கோவில், தக்கலை பஸ் நிலையம், மேட்டுக்கடை வழியாக கேரளபுரம் அதிசய விநாயகர்கோவிலுக்கு சென்று மீண்டும் பெருமாள் கோவிலை வந்தடைந்தது. இதில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.வேலாயுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குமரி மேற்கு மாவட்டத்தில் இந்து முன்னணி, சிவசேனா, இந்து மகாசபா உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் 2500-க்கும் மேற்பட்ட சிலைகள் பொது இடங்கள், கோவில்களில் பூஜைக்கு வைக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக மீனச்சல் கிருஷ்ண சாமி கோவிலில் நேற்று காலையில் விநாயகர் சிலை பூஜைக்கு வைக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் சமய வகுப்பு சார்பில் சிறுவர்-சிறுமிகள், பெரியவர்கள் கலந்து கொண்ட ஊர்வலம் நடந்தது. இதில் கணபதி, முருகன், கிருஷ்ணர் போன்று வேடமணிந்து பலர் கலந்து கொண்டனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குளச்சல் நகர இந்து முன்னணி சார்பில் ஆலுமூடு அதிசய நாகர் கோவிலில் 5 அடி உயர விநாயகர் சிலை பூஜைக்கு வைக்கப்பட்டது. இதுபோல் கொத்தனார்விளை சிவன் கோவிலில் 2 சிலைகள், கூத்தாவிளை சி.எம்.சி.காலனியில் 2 சிலைகள் உள்பட பல்வேறு இடங்களில் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டன. இந்த சிலைகள் 24-ந் தேதி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வெட்டுமடை கடலில் கரைக்கப்படும்.
ஆரல்வாய்மொழி பகுதியில் வடக்கூர், சுப்பிரமணியபுரம், கணேசபுரம், வடக்கு பெருமாள்புரம் வெள்ளமடம் உள்ளிட்ட இடங்களில் இந்து மகாசபை மற்றும் இந்து முன்னணி சார்பில் 40-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த சிலைகளுக்கு தினமும் காலையிலும், மாலையிலும் பூஜை நடத்தப்படுகிறது. இந்து மகாசபை சார்பில் வைக்கப்பட்ட சிலைகள் 23-ந் தேதியும், இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட சிலைகள் 24-ந் தேதியும் ஊர்வலகமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் சுமார் 1,200 போலீசார் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நேரில் சென்ற பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- கொட்டும் மழையிலும் பக்தர்கள் சாமி தரிசனம்.
- புரட்டாசி மாத பூஜைக்காக நேற்று முன்தினம் மாலை நடை திறக்கப்பட்டது.
திருவனந்தபுரம்:
சபரிமலை அய்யப்பன் கோவிலில் கொட்டும் மழையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் புரட்டாசி மாத பூஜைக்காக நேற்று முன்தினம் மாலை நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். இரவு வழக்கம் போல் 10.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
நேற்று அதிகாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டது. வழக்கமான பூஜைகளுடன் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, மாலை 6 மணிக்கு தீபாராதனையை தொடர்ந்து புஷ்பாபிஷேகம் நடைபெற்றது.
வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையிலேயே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ஆன்லைனில் முன்பதிவு செய்யாதவர்களுக்கு, சபரிமலை தரிசனத்திற்கான உடனடி முன்பதிவு செய்ய நிலக்கல், பம்பையில் சிறப்பு வசதி செய்யப்பட்டிருந்தது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதிப்பு இருந்த போதிலும் கோவிலில் கட்டுப்பாடு இல்லை. எனவே திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் அய்யப்பனை தரிசனம் செய்ய காத்திருந்தனர். அப்போது பலத்த மழை பெய்தது. எனினும் பக்தர்கள் அதனை பொருட்படுத்தாமல் சரண கோஷம் முழங்க அய்யப்பனை தரிசனம் செய்தனர். புரட்டாசி மாத பூஜைக்காக வருகிற 22-ந் தேதி வரை நடை திறக்கப்பட்டிருக்கும்.
- திருவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் அனுமன் வாகனத்தில் பவனி.
- 20-ந்தேதி சஷ்டிவிரதம்.
19-ந்தேதி (செவ்வாய்)
* ரிஷி பஞ்சமி.
* மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி, இரவு புஷ்ப சப்பரத்தில் ராஜாங்க சேவை.
·* திருவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் அனுமன் வாகனத்தில் பவனி.
* உப்பிலியப்பன் கோவிலில் சீனிவாசப் பெருமாள் காலை பல்லக்கிலும், இரவு வெள்ளி சேஷ வாகனத்திலும் வீதி உலா.
* சமநோக்கு நாள்.
20-ந்தேதி (புதன்)
* சஷ்டி விரதம்.
* திருப்பதி ஏழுமலையான் காலை கற்பக விருட்ச வாகனத்திலும், இரவு சர்வ பூபால வாகனத்திலும் பவனி,
* கரூர் தான்தோன்றி கல்யாண வெங்கடேசப் பெருமாள் வெள்ளி கருடவாகனத்தில் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
21-ந்தேதி (வியாழன்)
* திருப்பதி கருட சேவை. தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் காலை காளிங்க நர்த்தனக் காட்சி.
* மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி, வெள்ளி தோளுக்கினியானில் பவனி.
* சமநோக்கு நாள்.
22-ந்தேதி (வெள்ளி)
* திருவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் யானை வாகனத்தில் பவனி.
* திருப்பதி ஏழுமலையான் காலை அனுமன் வாகனத்தில் புறப்பாடு.
* உப்பிலியப்பன் கோவிலில் சீனிவாச பெருமாள் காலை வெள்ளி பல்லக்கில் வீதி உலா.
* சமநோக்கு நாள்.
23-ந்தேதி (சனி)
* திருநெல்வேலி கெட்வெல் ஆஞ்சநேயருக்கு 5008 வடை அலங்காரம்
.* கரூர் தான்தோன்றி கல்யாளா வெங்கடேச பெருமாள் திருக்கல்யாணம்.
* திருப்பதி ஏழுமலையான் காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
24-ந்தேதி (ஞாயிறு)
* தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் காலை வெண்ணெய்| தாழி சேவை.
* உப்பிலியப்பன் கோவிலில் சீனிவாச பெருமாள் இரவு வெள்ளி குதிரை வாகனத்தில் பவனி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
* கீழ்நோக்கு நாள்.
25-ந் தேதி (திங்கள்)
* சர்வ ஏகாதசி.
* திருப்பதி ஏழுமலையான் காலை பல்லக்கு உற்சவம்.
* சாத்தூர் வெங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
- சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம்.
- தேரெழுந்தூர் ஞானசம்பந்தர் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, புரட்டாசி 2 (செவ்வாய்க்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சதுர்த்தி காலை 11.50 மணி வரை பிறகு பஞ்சமி
நட்சத்திரம்: சுவாதி நண்பகல் 12.51 மணி வரை பிறகு விசாகம்
யோகம்: சித்த, மரணயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று மகாலட்சுமி விரதம். தேரெழுந்தூர் ஞானசம்பந்தர் புறப்பாடு. மதுரை ஸ்ரீநவநீத கிருஷ்ணன் வீற்றிருந்த தவழ்ந்த கண்ணன் திருக்கோலம். தல்லாகுளம் ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப்பெருமாள் ராமாவதாரம். சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம். வடபழனி, சிறுவாபுரி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் காலை வெள்ளிப் பல்லக்கிலும், இரவு வெள்ளி சேஷ வாகனத்திலும் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மாற்றம்
ரிஷபம்-கடமை
மிதுனம்-கண்ணியம்
கடகம்-பெருமை
சிம்மம்-வாழ்வு
கன்னி-நலம்
துலாம்- முயற்சி
விருச்சிகம்-உவகை
தனுசு- நிறைவு
மகரம்-தெளிவு
கும்பம்-நன்மை
மீனம்-பயணம்
- உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- நீண்ட வரிசையில் நின்று ஏராளமான பக்தர்கள் விநாயகரை தரிசித்து வணங்கினர்.
புதுச்சேரி:
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
புதுவையின் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
மூலவர் மற்றும் உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவிய அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து கலசாபிஷேகம் செய்யப்பட்டு மூலவருக்கு தங்க கவசம், அமெரிக்க வைர கீரிடம் அணிவிக்கப்பட்டது. உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நீண்ட வரிசையில் நின்று ஏராளமான பக்தர்கள் விநாயகரை தரிசித்து வணங்கினர்.
சதுர்த்தியையொட்டி தனி நபர் அர்ச்சனைகள், விசேஷ பூஜைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் தரிசிக்கும் வகையில் சர்வ திவ்ய தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அனைத்து பக்தர்களுக்கும் இடைவிடாது லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது.
இதற்காக 30 ஆயிரம் லட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்பட்டு மீண்டும் 2 மணிக்கு திறக்கப்படும். இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும். இரவு மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதியுலா நடக்கிறது.
- புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை
- ஆசியாவிலேயே மிக உயரமான விநாயகர் சிலைக்கு அபிசேகம் நடைபெற்றது
தமிழகத்தில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா, இன்று அதிகாலை முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் காலையில் அபிசேகம் செய்யப்பட்டு, அலங்கார கோலத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் காலை முதல் தரிசனம் செய்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் புளியகுளத்தில் அமைந்துள்ள ஆசியாவிலேயே மிக உயரமான விநாயகர் சிலைக்கு அபிசேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும், தமிழகத்தில் உள்ள பிரபலமான விநாயகர் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதற்கிடையே ஆங்காங்கே பிள்ளையார் சிலை வைத்து வழிபட்டு வருகின்றனர். சென்னையில் 4 ஆயிரம் இடங்களில் பிள்ளையார் சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோவையில் சுமார் 2 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்கு கழித்து குளங்கள் போன்ற இடங்களில் இந்த சிலைகள் கரைக்கப்படும்.






