என் மலர்
வழிபாடு
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
- ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கஜேந்திர மோட்சம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, புரட்டாசி 3 (புதன்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: பஞ்சமி காலை 11.36 மணி வரை பிறகு சஷ்டி
நட்சத்திரம்: விசாகம் நண்பகல் 1.05 மணி வரை பிறகு அனுஷம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். தல்லாகுளம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கஜேந்திர மோட்சம். கரூர் தான்தோன்றி ஸ்ரீ கல்யாண வெங்கடேசப் பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் பவனி. ஆழ்வார்திருநகர் ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. மதுரை ஸ்ரீநவநீத கிருஷ்ணன் வெள்ளி தோளுக்கினியானில் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் காலை கற்பக விருட்ச வாகனத்திலும், இரவு சர்வ பூபால வாகனத்திலும் புறப்பாடு. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமிக்கு காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. திருப்பரங்குன்றம் ஆண்டவர் பவனி.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பெருமை
ரிஷபம்-கவனம்
மிதுனம்-தாமதம்
கடகம்-யோகம்
சிம்மம்-விருத்தி
கன்னி-ஓய்வு
துலாம்- வெற்றி
விருச்சிகம்-செலவு
தனுசு- புகழ்
மகரம்-ஆதரவு
கும்பம்-மேன்மை
மீனம்-இன்பம்
- ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தி அன்று மட்டும் விடிய,விடிய தேன் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
- திருமேனி செம்பவள நிறத்தில் காட்சி அளிக்கும்.
கபிஸ்தலம்:
திருப்புறம்பயம் சாட்சிநாதசாமி கோவிலில் பிரளயம் காத்த விநாயகருக்கு விடிய,விடியதேன்அபிஷேகம் நடந்தது.
சுவாமிமலை அருகே திருப்புறம்பயத்தில் சாட்சிநாதசாமி கோவில் உள்ளது. சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் பிரளயம் காத்த விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தி அன்று மட்டும் விடிய,விடிய தேன் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரளயம் காத்த விநாயகருக்கு விடிய,விடிய தேன் அபிஷேகம் நடந்தது.
இரவு முழுவதும் நடந்த தேன் அபிஷேகத்தில் தேன் முழுவதும் விநாயகர் திருமேனியில் ஊற்றப்பட்டது. தேன் அபிஷேக முடிவில் இந்த திருமேனி செம்பவள நிறத்தில் காட்சி அளிக்கும். வருடத்தில் மற்ற நாட்களில் இந்த விநாயகருக்கு அபிஷேகம் ஏதும் செய்யப்படுவதில்லை.
முன்னதாக சூரிய நாராயணன் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியும், பரதநாட்டியமும், மனித வாழ்க்கையை செம்மைப்படுத்துவது ஆன்மிகமே, அறிவியலே பட்டிமன்றம் ஆகியவை நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- பவித்திர உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- முக்கிய திருவிழாவான கருட சேவை நடந்தது.
திருவெண்காடு:
திருவெண்காடு அருகே நாங்கூர் கீழச்சாலையில் மாதவப் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் பவித்திர உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய திருவிழாவான கருட சேவை நடந்தது.
இதையொட்டி பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு, கருட வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் கோவில் ஆதீன கர்த்தர் சீனிவாசா பட்டாச்சாரியார், அடியார்கள் திருகூட்டத் தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- விநாயகர் சதுர்த்தி அன்று சொர்ண கணபதிக்கு தங்க கவசம்.
- கோவில் யானை பிரக்ருதிக்கு கஜ பூஜை செய்து, மகாதீபாராதனை நடைபெற்றது.
காரைக்கால்:
காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.இந்த கோவிலில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி அன்று சொர்ண கணபதிக்கு தங்க கவசமும், உடன் அமைந்துள்ள விநாயகருக்கு வெள்ளிக்கவச அலங்காரமும் செய்யப்படுவது வழக்கம்.
இதன்படி நேற்று விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சொர்ண கணபதிக்கு சிறப்பு அபிஷேகமும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து, கோவில் யானை பிரக்ருதிக்கு கஜ பூஜை செய்து, மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு இன்பமும், எலும்புகளுக்கு மருந்தாகவும் அமையும்.
- பொல்லாதவைகளை எல்லாம் பேசுவது பாவம் என்று வேதாகமம் சொல்கிறது.
"மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்". (நீதிமொழிகள் 18:21)
அன்பானவர்களே, நம் ஒவ்வொருவருடைய நாவில் இருந்து வெளிப்படும் வார்த்தைகளுக்கும் ஒரு வல்லமை உண்டு. இனிய சொற்கள் தேன்கூடு போல் ஆத்துமாவுக்கு இன்பமும், எலும்புகளுக்கு மருந்தாகவும் அமையும்.
அதனால் தான் நமது நாவில் இருந்து வெளிப்படும் வார்த்தைகள் நன்மை நிறைந்ததாக, ஆசிர்வாதம் அளிப்பதாக இருக்க வேண்டும் என்று முன்னோர்களும், பெரியோர்களும் சொல்லி இருக்கிறார்கள்.
நாம் அனுதினமும் நாவினால் 'என்னுடைய வாழ்க்கையில் நான் நிச்சயமாக நன்றாக இருப்பேன், சுகமாக இருப்பேன், வாழ்வில் உயர்வுகள் வரும்' என்று பேசி, அதற்கான முயற்சிகள் செய்யும் போது நாம் விரும்பியவை நிச்சயமாக நம்மைத் தேடி வரும்.
அதை விட்டு மாறாக நாவினால் ஒருவருக்கு முன்பாக முகஸ்துதியுடன் பேசுவது, அவர் அந்த இடத்திலிருந்து சென்ற உடன் அவர்களைப் பற்றி குறை கூறுவது, இல்லாத, பொல்லாதவைகளை எல்லாம் பேசுவது பாவம் என்று வேதாகமம் சொல்கிறது.
புதிய ஏற்பாட்டில் வேதம் சொல்கிறது: "கப்பல்களைப் பாருங்கள், அவைகள் மிகப் பெரியவைகளாயிருந்தும், கடுங்காற்றுகளால், புயல்களால், அலைகளால் அடிபட்டாலும் அவைகளை நடத்துகிறவன், போகும் படி யோசிக்கும் இடம் எதுவோ அவ்விடத்திற்கு நேராக மிகச் சிறிய சுக்கானாலே திருப்பப்படும்".
ஒரு சிறிய நெருப்பு பொறி எவ்வளவு பெரிய காட்டையும் கொளுத்தி விடுவதுபோல சிறிய உறுப்பான நாக்கில் இருந்து வெளிப்படும் வார்த்தைகள் நல்ல, கெட்ட செயல்களுக்கு காரணமாக அமைகிறது.
உருவத்தில் பெரிய யானை, காட்டுக்கு ராஜாவான சிங்கம் உள்பட பல்வேறு உயிரினங்களை மனிதன் தன் திறமையால் அடக்கி ஆள்கின்றான். ஆனால் அவனால் தன் நாக்கை அடக்க முடியவில்லை. அதில் இருந்து வெளிப்படும் வார்த்தைகள் மரணத்தை தரும் விஷத்தை போன்று உள்ளது.
ஒரே நாவினாலே பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம், அதே நாவினாலே தேவனுடைய சாயலின் படி உண்டாக்கப்பட்ட மனுசனை சபிக்கிறோம். ஒரு நபரை நேரில் பார்க்கும் போது இனிக்க இனிக்க பேசுகிறோம், அவர் அவ்விடத்தில் இருந்து சென்றவுடன், அவரைப் பற்றி தவறாக, கேவலமாக, பொய்யாக, கெட்ட வார்த்தைகளுடன் பேசுகிறோம். வீண் பேச்சுக்கள், கட்டுக்கதைகளை நமக்கேற்றவாறு புனைந்து உண்மை போல மற்றவர்களை நம்ப வைத்து பேசுகிறோம்.
ஒரே நீரூற்றிலிருந்து, இனிப்பும், கசப்புமான தண்ணீர் சுரக்குமா யோசித்துப் பார்ப்போம். நாம் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தைகளும் இறைவனின் கணக்கில் உள்ளது என்பதை மறக்க வேண்டாம்.
வேதம் சொல்கிறது: 'சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமாய்ப் பேசாதிருங்கள். சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் இறைவனுடைய கட்டளைகளை, போதனைகளை குற்றப்படுத்துகிறவனாக இருப்பான். மற்றவர்களைக் குறை சொல்லி குற்றப்படுத்துவதற்கு நாம் யார்?. யோசித்துப் பாருங்கள், அன்பானவர்களே.
'இன்னும் கோள் சொல்கிறவனுடைய வார்த்தைகள் விளையாட்டுப் போலிருக்கும், ஆனால் அவைகள் மற்றவர்கள் மனதை முள் போல குத்தும். மூடருடைய வார்த்தைகள் விவாதத்தில் நுழையும், அவன் வாய் அவனுக்கு அடிகளை வரவழைக்கும். அவனுடைய வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளே அவனுக்கு கேடாக அமைந்து விடும்'.
'ஒருவனுடைய வாயின் இனிய வார்த்தைகளால் அவனுடைய வயிறு நிரம்பி, அவன் வாழ்வில் திருப்தி அடைவான். இனிய வாய்மொழிகள் ஆழமான நீரூற்றுப் போலிருக்கும், அதிலிருந்து ஆசீர்வாதமான வற்றாத ஜீவ நதி புரண்டோடும். இனிய சொற்கள் தேன்கூடு போல ஆத்துமாவுக்கு இன்பமும், எலும்புகளுக்கு அரு மருந்தாகவும் அமையும்'.
ஆம் பிரியமானவர்களே, நாம் பேசும் வார்த்தைகள் மற்றவர்களுக்கு அருமருந்தாக அமைய வேண்டும். நம் வாயின் வார்த்தைகள் எதிர்மறையான காரியங்களை பேசாமல், நேர்மறையான காரியங்களை மட்டுமே பேச வேண்டும். நம் வாயின் வார்த்தைகளுக்கு வல்லமை உண்டு. நன்றாயிருப்போம், வாழ்ந்து சுகமாயிருப்போம். சிறப்பான, வளமான எதிர்காலம் நமக்கு உண்டு என்று அனுதினமும் அதைப் பற்றி பேசி, அதற்கான முயற்சிகளை எடுத்து வந்தால், நிச்சயமாக காரியங்கள் கைகூடும்.
ஆகவே நம் வாயின் வார்த்தைகளால் நம்மையும், நாம் சந்திக்கும் அனைத்து நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தி, ஆறுதல்படுத்தி, அன்பு செலுத்தினால் நிச்சயமாக நன்மைகள் நம்மைத் தேடி வரும், இறைவனின் ஆசிர்வாதங்களும் நதி போல நம்மைச் சுற்றி வரும். அது ஒரு வற்றாத ஜீவ நதி, அது பாயும் இடமெல்லாம் செழிப்பை உண்டாக்கி,அனேகருக்கு ஆசிர்வாதமாக விளங்கும்,
அது போல நம் நாவின் வார்த்தைகள் நமக்கும், நம்மைச் சார்ந்தவர்களுக்கும் ஆசிர்வாதமாக, செழிப்பாக விளங்க, நம்மை மாற்றுவோம், மாறுவோம். ஆமேன்.
"சொற்களின் மிகுதியால் பாவமில்லாமல் போகாது, தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான், பேசாதிருந்தால் மூடனும் ஞானியெனப்படுவான், நீதிமானுடைய வாய் ஜீவ ஊற்று".
அன்பானவர்களே தேவையான, நலமான விஷயங்களை மட்டும் பேசுவோம், நன்மைகள் பெறுவோம், உலகெங்கும் அன்பை பரவச்செய்வோம்.
- வெட்க உணர்வு என்பது பிற்போக்குத்தனமாகவும் பார்க்கப்படுகிறது.
- இஸ்லாம் உயர்த்திக் கூறும் பண்பாக வெட்கம் திகழ்கிறது.
வெட்கம் அல்லது வெட்கப்படுதல் இன்று சமூகத்தில் அதிக விவாதத்தை எதிர் கொள்ளும் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இன்று வெட்க உணர்வு என்பது வேண்டாத ஒன்றாகவும், பிற்போக்குத்தனமாகவும் பார்க்கப்படுகிறது.
ஆனால், இஸ்லாம் உயர்த்திக் கூறும் பண்பாக வெட்கம் திகழ்கிறது என்றால் அது மிகையல்ல. வெட்கம் இருந்தால் ஒரு முஸ்லிமின் இறையச்சம் சிறந்து விளங்கும். தவறுகளில் இருந்தும், தீயவற்றில் இருந்தும் அவனை வெட்கம் பாதுகாக்கும்.
வெட்கம் என்பது பெயர்ச்சொல் வார்த்தையாகும். இதற்குப் பொருள், பிறர் முன்னிலையில் இயல்பாக இருக்கமுடியாத அல்லது தன் விருப்பத்தைத் தெரிவிக்க முடியாத தயக்க உணர்வு.
மேலும் வெட்கம் இரண்டு அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது.
1. நாணம்: தனது திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்துவதற்கு வெட்கப்படுவது. சிலர் திறமைசாலியாக இருப்பார்கள். ஆனால் தங்கள் திறமையை வெளிக்காட்ட வெட்கப்படுவார்கள். ஒரு பெண் பிற ஆண்களின் முன்பு தன்னை பாதுகாத்துக்கொள்ள நாணம் எனப்படும் வெட்கம் வழிகாட்டுகிறது.
2. அவமானம்: தவறு செய்வதற்குப் பயப்படுவது, மானம் கெட்ட செயல்களைச் செய்வதற்கு அஞ்சுவது.
வெட்கம் என்ற உணர்வு இருப்பதால் மட்டுமே, மனித இனம் விபரீதங்களின் வீரியத்தை விட்டு விலகி நிற்கிறது. வெட்கம் விலகும் போது அந்தரங்கங்களும் பாழ்பட்டு போகும்.
ஆடைகள் அணிகிறோம், அந்தரங்கங்களை மறைத்துக் கொள்ள; மானத்தை பாதுகாத்துக் கொள்ள. இதை யாரும் மறுத்துச் சொல்வதில்லை. ஆனால் இன்றைய நாளில் ஆண், பெண் ஆடை அணிவதில் கூட கண்ணியங்கள் காற்றில் பறக்க விடப்பட்டிருக்கின்றன. காரணம், வெட்கம் நம்மைவிட்டு வெகுதூரம் சென்றுவிட்டதால் தானே.
இன்றைய சூழ்நிலைகளின் தாக்கத்தால் மனங்கள் மாறுபட்டு சில மனித ஜென்மங்கள், வெட்கம் என்ற நல்ல பண்பை உதிர்த்துவிட்டு கலாசாரங்களை உதாசீனப்படுத்துவதால் தான் பண்பாடுகள் அழிவை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கின்றன.
நபிகளார் (ஸல்) நவின்றார்கள்: 'ஒவ்வொரு மார்க்கத்திற்கும் தனியே ஒரு சிறப்பு குணமுண்டு. இஸ்லாமிய மார்க்கத்தின் சிறப்பு குணம் வெட்கம் ஆகும்'. (நூல்கள்: இப்னுமாஜா, தப்ரானி)
அனைத்து நபிமார்களும் வலியுறுத்திய கடமைகளில் ஒன்றாக வெட்க உணர்வு விளங்குகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஈமான் என்பது அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாகும். வெட்கம் ஈமானுடைய கிளைகளில் ஒன்றாகும்". (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)
மக்கள் பெற்றுக்கொண்ட முந்தைய நபித்துவத்தின் முக்கியச் செய்தி, அதாவது - முன்வந்த நபிமார்கள் அனைவரும் கூறி வந்த செய்தி, "உனக்கு வெட்கமில்லையானால் நீ நாடியதைச் செய்து கொள்" என்பது தான், என்று நபி (ஸல்) கூறியுள்ளார்கள். (நூல்: புகாரி)
எனவே வெட்க உணர்வின் மீதான கவனக்குவிப்பு என்பது இன்றோ, நேற்றோ தோன்றிய விஷயமன்று. தொன்றுதொட்டு வாழையடி வாழையாக இறைத்தூதர்கள் மூலம் வலியுறுத்தப்பட்ட அழகிய பண்பியல் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
'நபி (ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப்பெண்ணை விடவும் அதிக வெட்கமுடையவர்களாக இருந்தனர்' என்பது நபிமொழியாகும். (அறிவிப்பாளர்: அபூஸயீத் அல் குத்ரி (ரலி), நூல்:புகாரி)
நபி (ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. 'உங்களில் சிறந்தவர் உங்களில் நற்குணமுடையவரே' என்று அவர்கள் கூறுவார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: புகாரி)
வெட்கமும், குறைவான பேச்சும் ஈமானுடைய அம்சமாகும். கெட்ட வார்த்தையும், கடன் பெற்றவன் கடனைத் திருப்பி செலுத்த வேண்டும் என்ற கடமையுணர்வு, மானத்திற்கு அஞ்சிய வெட்கம் என்ற உணர்வு இருப்பதால் மட்டுமே. அன்னிய பெண்ணை கண்ணோடு கண் நேராக பார்க்க அச்சம் ஏற்படுகிறது என்றால், பாலியல் பாவங்கள் கூட தவிர்க்கப்படுகிறது என்றால், வெட்கம் என்ற உணர்வு இருப்பதால் மட்டுமே.
இது குறித்து அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'வெட்கம் எப்பொருளில் இருந்தாலும் அது அப்பொருளை அழகாக்காமல் இருப்பதில்லை' என்று கண்மணி நாயகம் நவின்றார்கள். (நூல்:திர்மிதி)
வஞ்சப் புகழ்ச்சியாலோ, அல்லது அளவிற்கு மீறிய புகழ்ச்சியாலோ ஒருவன் தலைகனம் என்னும் அகம்பாவத்தில் வீழ்ந்து அன்னியரை அற்பமாய் எண்ணுகின்ற அகந்தையிலிருந்து காப்பது வெட்கம் என்ற பண்பு அல்லவா? 'வெட்கம் கொள்வது அனைத்திற்கும் நல்லதே'. (நூல்: ரியாலுஸ் ஸாலிஹீன்)
அண்ணல் நபிகளார் அதிக அளவில் வெட்கம் என்ற பண்பை பெற்றிருந்தார்கள் என்பது அவர்கள் சரிதையைப் படித்தவர்களுக்குத் தெரியும். எனவே வெட்கம் வியாபித்திருக்கிற வரை தான் உலகில் விபரீதங்கள் கட்டுக்குள் இருக்கும். இல்லை என்றால், விளைவுகள் அபாயகரமானது என்பதை உணர்ந்து செயல்படுவோம்.
- ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமியில் வரக்கூடியது, ரிஷி பஞ்சமி விரதம்.
- இந்த விரதம் விநாயகர் சதுர்த்திக்கு அடுத்த நாள் வரும்.
ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமியில் வரக்கூடியது, ரிஷி பஞ்சமி விரதம். இந்த விரதம் விநாயகர் சதுர்த்திக்கு அடுத்த நாள் வரும். சப்த ரிஷிகளை வணங்கி வழிபடுவதன் மூலம் பெண்களின் சாபங்கள், பெண்களுக்கு ஏற்படும் தோஷங்கள் விலகும் என்று கூறப்பட்டுள்ளது.
ஒரு சமயம் தேவேந்திரன் தனது குருவுக்கு துரோகம் செய்ததால், தன் பதவி, ராஜ்ஜியம், செல்வம் போன்றவற்றை இழந்து தாமரைத் தண்டுக்குள் வசிக்கக்கூடிய சாபத்தை பெற்றான். இதையடுத்து அவன், விஷ்ணுவை துதித்து 'என் சாபம் நீங்க என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டான். அதற்கு விஷ்ணு, 'உன் சாபத்தை யாராவது ஏற்றுக் கொண்டால், உனக்கு தோஷம் நீங்கி பழையபடி ராஜ்ஜியமும், செல்வமும் கிடைக்கும்' என்றார். இதையடுத்து இந்திரன், தன்னுடைய சாபத்தை ஏற்றுக்கொள்ளும்படி பலரிடம் கேட்டான். அவனது சாபத்தை ஏற்க, மரம், நிலம், தண்ணீர், பெண் ஆகிய நான்கு பேர் முன்வந்தனர்.
இதன் காரணமாக இந்திரனின் சாபம் நீங்கியது. அவன் மீண்டும் தன் ராஜ்ஜியமான இந்திரலோகத்தை அடைந்து, செல்வ வளத்துடன் வாழத் தொடங்கினான். தன்னுடைய சாபம் நீங்க காரணமாக இருந்த மரம், நிலம், தண்ணீர், பெண் நால்வருக்கும் வரம் அளித்தான். அதன்படி மரத்தை வெட்டினாலும் மீண்டும், மீண்டும் துளிர்க்கும் சக்தி பெற்றது. நிலம் வறண்டு போனாலும், மறுபடியும் தண்ணீர் பட்டதும் பசுமையாக மாறிவிடும் தன்மை பெற்றது.
தண்ணீருக்கு எல்லாவித பொருட்களின் அசுத்தங்களையும் நீக்கக்கூடிய ஆற்றல் கிடைத்தது. பெண்ணுக்கு மூன்று நாட்கள் மாதவிடாய் ஏற்பட்டு, அதன் மூலம் அவளது தோஷங்கள் அனைத்தும் நீங்கி எப்போதும் புனிதமாக விளங்க ஆரம்பித்தாள். பெண்கள் மாதவிடாய் காலத்தில் செய்யக்கூடாத செயல்களை செய்வதால் ஏற்படும் தோஷத்தை நீக்க 'ரிஷி பஞ்சமி' விரதம் கைகொடுக்கிறது.
விதர்ப்ப நாட்டில், உதங்கர் என்ற முனிவர் வாழ்ந்து வந்தார். அவருடைய மனைவி சுசீலை. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருந்தனர். உதங்க முனிவர் தன்னுடைய பெண்ணை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்தார். ஆனால் மணமான சில நாட்களிலேயே அவள் தன்னுடைய கணவனை இழந்தாள். இதனால் மனம் துவண்ட முனிவர், தன்னுடைய குடும்பத்துடன் கங்கைக் கரையில் இருந்த ஒரு கிராமத்தில் தங்கினார். அங்கு தன்னுடைய சீடர்களுக்கு வேதம் கற்பித்து வந்தார். உதங்க முனிவரின் பெண், தந்தைக்கு பணிவிடை செய்து வந்தாள்.
ஒரு நாள் இரவு தூங்கும் நேரத்தில் அவளது உடலில் புழுக்கள் நெளிவதைக் கண்ட தாய், அதுபற்றி தன் கணவரான உதங்க முனிவரிடம் கேட்டாள். தன்னுடைய ஞான திருஷ்டியால் அதற்கான காரணத்தை அறிந்தார், முனிவர். அந்தப் பெண் இதற்கு முந்தைய பிறவியில் ஒரு அந்தணரின் மகளாக இருந்தாள். அப்போது மாதவிடாய் காலத்தில் அசுத்தம் என்று எண்ணாமல், வீட்டில் உள்ள பொருட்களைத் தொட்டாள். மேலும் பயபக்தியுடன் தனது தோழிகள் செய்து வந்த ரிஷி பஞ்சமி விரதத்தை பார்த்து கேலி செய்தாள். அதனால்தான் அவள் உடலில் புழுக்கள் நெளிகின்றன.
மேலும் தோழிகள் செய்த ரிஷி பஞ்சமி விரதத்தைப் பார்த்த காரணத்தால், இந்தப் பிறவியிலும் அவள் அந்தண குலத்தில் பிறக்கும் பேறு பெற்றாள். அந்த சாபம் நீங்க, ரிஷி பஞ்சமி விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்று உதங்க முனிவர் தெரிவித்தார். இதையடுத்து முனிவரின் மகள், ரிஷி பஞ்சமி விரதத்தை மேற்கொண்டு, தன்னுடைய சாபம் நீங்கப் பெற்றாள்.
ரிஷி பஞ்சமி நாள் அன்று, கவுதமர் - அவரது மனைவி அகல்யா, பாரத்வாஜர் - அவரது மனைவி சுசீலா, விசுவாமித்திரர் - அவரது மனைவி குமதவதி, காஷ்யபர் - அவரது மனைவி அதிதி, ஜமாத்கனி - அவரது மனைவி ரேணுகா, வசிஷ்டர் - அவரது மனைவி அருந்ததி, அத்ரி - அவரது மனைவி அனுசுயா ஆகிய சப்த ரிஷிகளையும், அவர்களின் பத்தினிகளையும் பூஜிப்பதன் மூலம், பெண்களின் சாபமும், அவர்களின் தோஷமும் விலகும் என்கிறார்கள்.
ரிஷி பஞ்சமி பூஜையை மாதவிலக்கு நின்றவர்கள், தொடர்ந்து ஏழு வருடம் பூஜை செய்து, எட்டாவது வருடம் பூஜையை முடிக்க வேண்டும். மாதவிலக்கு நின்று 7 வருடங்களுக்கு பின்னர் இந்த பூஜையை செய்ய வேண்டும் என்றும் சொல்கிறார்கள். ரிஷி பஞ்சமி பூஜை செய்பவர்கள், முதலில் யமுனை நதியை பூஜை செய்ய வேண்டும். பின்னர் கலசம் வைத்து சப்த ரிஷிகளையும், அவர்களின் பத்தினி களையும் ஆவாகனம் செய்ய வேண்டும். பூஜை அன்று மாலை வேளையில், தன்னால் இயன்றதை நைவேத்தியமாக படைத்து, தூப-தீபம் காட்ட வேண்டும். பின்னர் 'ஸப்தரிஷி தேவானாம் யதாஸ்த்தானம் ப்ரதிஷ்டாபயாமி, சோபநார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச' என்று கூறி, வடக்கு முகமாக சப்த ரிஷி கலசத்தை நகர்த்தி வைக்க வேண்டும்.
வடதேசங்களில், முதலில் காலையில் எழுந்தவுடன் ரிஷப பஞ்சமி பூஜை செய்யும் பெண்கள் (இங்கு மாதவிடாய் நின்ற பெண்கள் மட்டுமல்லாது, திருமணமான அனைத்து பெண்களும் இந்த பூஜையை செய்கிறார்கள்), நதிக்கரைக்குச் சென்று அதில் 365 முறை மூழ்கி எழுகிறார்கள். அதன் பிறகே இந்த பூஜையை தொடங்குவார்கள். நெல்லி பொடி தேய்த்து குளிப்பதை விசேஷமாக சொல்கிறார்கள். வீட்டின் வடகிழக்கில் பூஜையறையில் கும்பம் வைத்து பூஜை ஆரம்பிப்பார்கள்.
- சாமி ஊர்வலத்திற்கு முன்பாக பல்வேறு மாநில கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
- பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவிலில் வி.ஐ.பி . தரிசனங்கள், ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவம் நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கலந்து கொண்டு அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து நேற்று இரவு பெரிய சேஷ வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளினார். இன்று காலை பிரமோற்சவ விழாவில் சின்னசேஷ வாகனத்தில் ஏழுமலையான் வீதி உலா நடந்தது. மாட வீதிகளில் ஏழுமலையான் பவனி வந்தார்.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சாமி ஊர்வலத்திற்கு முன்பாக பல்வேறு மாநில கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
நேற்று ஏழுமலையான் கோவிலில் 62,745 பேர் சாமி தரிசனம் செய்தனர். 24,451 பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்தினர். ரூ.3.10 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் 19 காத்திருப்பு அறைகள் நிரம்பியது. 16 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவிலில் வி.ஐ.பி . தரிசனங்கள், ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
- வேலாயுதபுரம் லொயோலா எல்சியத்தில் திருச்சிலுவை ஆலய திருவிழா.
- திருச்சிலுவை 25 அடி உயரத்திலும் புதிதாக அமைக்கப்பட்டு அர்ச்சிப்பு விழா.
நெல்லை:
வாசுதேவநல்லூர் அருகே உள்ள வேலாயுதபுரம் லொயோலா எல்சியத்தில் திருச்சிலுவை ஆலய திருவிழா நடைபெற்றது. இத்திருச்சிலுவை ஆலயத்தில் வேலாயுதபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாளையங்கோட்டையில் வசிக்கும் லொயோலா பப்ளிகேஷன் இயக்குனர் இ.பெர்க்மான்ஸ் சார்பில், இந்தியாவிலேயே உயரமான திருச்சிலுவை சுமந்த ஆண்டவர் சொரூபம் 20 அடி உயரத்திலும், திருச்சிலுவை 25 அடி உயரத்திலும் புதிதாக அமைக்கப்பட்டு அர்ச்சிப்பு விழா நடைபெற்றது.
பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் எஸ்.அந்தோணிசாமி தலைமை தாங்கி, திருச்சிலுவை சுமந்த ஆண்டவர் சொரூபத்தை அர்ச்சித்தார். பின்னர் ஆயரை கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக திருச்சிலுவை ஆலயத்திற்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து திருச்சிலுவை ஆலயத்தில் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர் இரவில் திருவிழா சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து அசன விருந்து நடைபெற்றது. விழாவில் அருட்தந்தையர்கள் ஜோமிக்ஸ், ஞானப்பிரகாசம், அம்புரோஸ் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வேலாயுதபுரம் பங்குத்தந்தை வ.எட்வின் ஆரோக்கியநாதன் மற்றும் லொயோலா பப்ளிகேஷன் இயக்குனர் இ.பெர்க்மான்ஸ் செய்து இருந்தனர்.
- நவசந்தி விநாயகர்களுக்கு பட்டு வஸ்திரங்கள், பூஜை பொருட்கள்.
- ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் சிறப்பு பூஜைகள்.
ஸ்ரீ காளஹஸ்தி:
ஸ்ரீகாளஹஸ்தி சிவன்கோவில் சார்பில் நான்கு மாட வீதிகளில் உள்ள நவசந்தி விநாயகர்களுக்கு பட்டு வஸ்திரங்கள், பூஜை பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டது.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் துணை கோவில்களான நான்கு மாட வீதிகளில் உள்ள நவசந்தி விநாயகர் கோவிலுக்கு விநாயகர் சதுர்த்தியையொட்டி ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. மதுசூதன் ரெட்டி மற்றும் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசலு, கோவில் நிர்வாகி கே.வி.சாகர்பாபு மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நான்கு மாட வீதிகளில் உள்ள நவசந்தி விநாயகர் கோவிலுக்கு, சிவன் கோவில் சார்பில் பட்டு வஸ்திரங்கள், பூஜை பொருட்களை வழங்கினார்கள்.
முன்னதாக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் முறைப்படி பட்டு வஸ்திரங்கள் மற்றும் பூஜை பொருட்களை கோவிலில் இருந்து தலைமீது சுமந்து மேள தாளங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக சென்று நவசந்தி விநாயகர் கோவில்களுக்கு வழங்கப்பட்டது.
இது குறித்து அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசலு கூறுகையில், விநாயகர் சதுர்த்தி புனித தினத்தை யொட்டி ஸ்ரீகாளஹஸ்தி தேவஸ்தானம் சார்பில் முதன்மை கடவுளாக விளங்கும் கணபதிக்கு பட்டு வஸ்திரங்கள், பூஜைப் பொருட்கள் சமர்ப்பிப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் பட்டு வஸ்திரங்கள், பூஜை பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டது என தெரிவித்தார்.
- நேற்று முக்குறுணி விநாயகருக்கு வெள்ளிக்கவச அலங்காரம்.
- மெகா கொழுக்கட்டை படையல் நடைபெறும்.
மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் விநாயகர் சதுர்த்தியான நேற்று முக்குறுணி விநாயகருக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டு 18 படியில் மெகா கொழுக்கட்டை படைக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு சிறப்புகள் பல உண்டு. இந்த விநாயகர் சிலை அப்படியே முழு உருவமாக மண்ணில் இருந்து கிடைத்தது. மன்னர் திருமலை நாயக்கர், அரண்மனை கட்டுவதற்காக மண் எடுக்க தற்போதுள்ள தெப்பக்குளம் பகுதியில் தோண்டினார்.
அப்போது பூமிக்குள் இருந்து 8 அடி உயரத்தில் 4 கரங்களுடன் அமர்ந்த நிலையில் விநாயகர் சிலை இருப்பதை கண்டார். அந்த சிலையை அப்படியே மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அம்மன் சன்னதியில் இருந்து சுவாமி சன்னதிக்கு செல்லும் வழியில் பிரதிஷ்டை செய்து, முக்குறுணி விநாயகராக வழிபட்டார்.
விநாயகர் சதுர்த்தியன்று முக்குறுணி விநாயகருக்கு சிறப்பு பூஜை, மெகா கொழுக்கட்டை படையல் நடைபெறும். நேற்று விநாயகர் சதுர்த்தி என்பதால், முக்குறுணி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டது.
பின்னர் வழக்கம்போல், 18 படி பச்சரிசியில், வெல்லம், தேங்காய், கடலை, எள், ஏலக்காய், நெய் கலந்து, மெகா கொழுக்கட்டை தயார் செய்யப்பட்டது. அந்த கொழுக்கட்டையை 4 பேர் மூங்கில் கம்பில் சுமந்து வந்தனர். மெகா கொழுக்கட்டையை பகல் 11 மணிக்கு உச்சிக்கால பூஜையின் போது முக்குறுணி விநாயகருக்கு படைத்து, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் விநாயகரை தரிசனம் செய்தனர். அதை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனர் கிருஷ்ணன் தலைமையில் பட்டர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.
- மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார்.
- தேரோட்டம் பக்தர்கள் வெள்ளத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
திருப்பத்தூர்:
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கொட்டும் மழையில் நேற்று மாலை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழா நாட்களில் இரவு மூஷிக வாகனம், சிம்ம வாகனம், பூத வாகனம், கமல வாகனம், ரிஷிப வாகனம், மயில் வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் கற்பக விநாயகர் எழுந்தருளி வீதி உலா வந்தார்.
நேற்று 9-ம் நாள் விழா ஆகும். விநாயகர் சதுர்த்தியும் என்பதால் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலையில் மூலவர் தங்கக்கவசத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து மூலவருக்கு சந்தனம் சாத்தப்பட்டு சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது.
மாலையில் சந்தனகாப்பு அலங்காரத்தில் கற்பக விநாயகருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலை 4.30 மணி முதல் ஏராளமான பக்தர்கள் விநாயகரை சந்தனக்காப்பு திருக்கோலத்தில் தரிசித்தனர்.
மாலையில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் பெரிய தேரில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் கற்பக விநாயகரும், சிறிய தேரில் சண்டிகேசுவரரும் எழுந்தருளினர். அதன் பின்னர் தேரோட்டம் பக்தர்கள் வெள்ளத்தில் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது திடீரென மழை பெய்தது. ஆனால் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் தேரை இழுத்து சென்றனர். இதில் சண்டிகேசுவரர் தேரை முழுக்க முழுக்க பெண்களே இழுத்து வந்து தரிசித்தனர்.
தேரோட்டத்தை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் பிள்ளையார்பட்டிக்கு இயக்கப்பட்டன.
இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. பின்னர் உற்சவர் தங்க மூஷிக வாகனத்தில் எழுந்தருளி கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், மதியம் மூலவருக்கு மோதகம் (கொழுக்கட்டை) படையல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் கண்டவராயன்பட்டி தண்ணீர்மலை செட்டியார் மற்றும் காரைக்குடி சாமிநாதன் செட்டியார் ஆகியோர் செய்துள்ளனர்.






