என் மலர்

    வழிபாடு

    முக்குறுணி விநாயகருக்கு வெள்ளிக்கவச அலங்காரம்
    X

    முக்குறுணி விநாயகருக்கு வெள்ளிக்கவச அலங்காரம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நேற்று முக்குறுணி விநாயகருக்கு வெள்ளிக்கவச அலங்காரம்.
    • மெகா கொழுக்கட்டை படையல் நடைபெறும்.

    மதுரை:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் விநாயகர் சதுர்த்தியான நேற்று முக்குறுணி விநாயகருக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டு 18 படியில் மெகா கொழுக்கட்டை படைக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு சிறப்புகள் பல உண்டு. இந்த விநாயகர் சிலை அப்படியே முழு உருவமாக மண்ணில் இருந்து கிடைத்தது. மன்னர் திருமலை நாயக்கர், அரண்மனை கட்டுவதற்காக மண் எடுக்க தற்போதுள்ள தெப்பக்குளம் பகுதியில் தோண்டினார்.

    அப்போது பூமிக்குள் இருந்து 8 அடி உயரத்தில் 4 கரங்களுடன் அமர்ந்த நிலையில் விநாயகர் சிலை இருப்பதை கண்டார். அந்த சிலையை அப்படியே மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அம்மன் சன்னதியில் இருந்து சுவாமி சன்னதிக்கு செல்லும் வழியில் பிரதிஷ்டை செய்து, முக்குறுணி விநாயகராக வழிபட்டார்.

    விநாயகர் சதுர்த்தியன்று முக்குறுணி விநாயகருக்கு சிறப்பு பூஜை, மெகா கொழுக்கட்டை படையல் நடைபெறும். நேற்று விநாயகர் சதுர்த்தி என்பதால், முக்குறுணி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டது.

    பின்னர் வழக்கம்போல், 18 படி பச்சரிசியில், வெல்லம், தேங்காய், கடலை, எள், ஏலக்காய், நெய் கலந்து, மெகா கொழுக்கட்டை தயார் செய்யப்பட்டது. அந்த கொழுக்கட்டையை 4 பேர் மூங்கில் கம்பில் சுமந்து வந்தனர். மெகா கொழுக்கட்டையை பகல் 11 மணிக்கு உச்சிக்கால பூஜையின் போது முக்குறுணி விநாயகருக்கு படைத்து, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் விநாயகரை தரிசனம் செய்தனர். அதை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனர் கிருஷ்ணன் தலைமையில் பட்டர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×