search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rishi panchami"

    • ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமியில் வரக்கூடியது, ரிஷி பஞ்சமி விரதம்.
    • இந்த விரதம் விநாயகர் சதுர்த்திக்கு அடுத்த நாள் வரும்.

    ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமியில் வரக்கூடியது, ரிஷி பஞ்சமி விரதம். இந்த விரதம் விநாயகர் சதுர்த்திக்கு அடுத்த நாள் வரும். சப்த ரிஷிகளை வணங்கி வழிபடுவதன் மூலம் பெண்களின் சாபங்கள், பெண்களுக்கு ஏற்படும் தோஷங்கள் விலகும் என்று கூறப்பட்டுள்ளது.

    ஒரு சமயம் தேவேந்திரன் தனது குருவுக்கு துரோகம் செய்ததால், தன் பதவி, ராஜ்ஜியம், செல்வம் போன்றவற்றை இழந்து தாமரைத் தண்டுக்குள் வசிக்கக்கூடிய சாபத்தை பெற்றான். இதையடுத்து அவன், விஷ்ணுவை துதித்து 'என் சாபம் நீங்க என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டான். அதற்கு விஷ்ணு, 'உன் சாபத்தை யாராவது ஏற்றுக் கொண்டால், உனக்கு தோஷம் நீங்கி பழையபடி ராஜ்ஜியமும், செல்வமும் கிடைக்கும்' என்றார். இதையடுத்து இந்திரன், தன்னுடைய சாபத்தை ஏற்றுக்கொள்ளும்படி பலரிடம் கேட்டான். அவனது சாபத்தை ஏற்க, மரம், நிலம், தண்ணீர், பெண் ஆகிய நான்கு பேர் முன்வந்தனர்.

    இதன் காரணமாக இந்திரனின் சாபம் நீங்கியது. அவன் மீண்டும் தன் ராஜ்ஜியமான இந்திரலோகத்தை அடைந்து, செல்வ வளத்துடன் வாழத் தொடங்கினான். தன்னுடைய சாபம் நீங்க காரணமாக இருந்த மரம், நிலம், தண்ணீர், பெண் நால்வருக்கும் வரம் அளித்தான். அதன்படி மரத்தை வெட்டினாலும் மீண்டும், மீண்டும் துளிர்க்கும் சக்தி பெற்றது. நிலம் வறண்டு போனாலும், மறுபடியும் தண்ணீர் பட்டதும் பசுமையாக மாறிவிடும் தன்மை பெற்றது.

    தண்ணீருக்கு எல்லாவித பொருட்களின் அசுத்தங்களையும் நீக்கக்கூடிய ஆற்றல் கிடைத்தது. பெண்ணுக்கு மூன்று நாட்கள் மாதவிடாய் ஏற்பட்டு, அதன் மூலம் அவளது தோஷங்கள் அனைத்தும் நீங்கி எப்போதும் புனிதமாக விளங்க ஆரம்பித்தாள். பெண்கள் மாதவிடாய் காலத்தில் செய்யக்கூடாத செயல்களை செய்வதால் ஏற்படும் தோஷத்தை நீக்க 'ரிஷி பஞ்சமி' விரதம் கைகொடுக்கிறது.

    விதர்ப்ப நாட்டில், உதங்கர் என்ற முனிவர் வாழ்ந்து வந்தார். அவருடைய மனைவி சுசீலை. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருந்தனர். உதங்க முனிவர் தன்னுடைய பெண்ணை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்தார். ஆனால் மணமான சில நாட்களிலேயே அவள் தன்னுடைய கணவனை இழந்தாள். இதனால் மனம் துவண்ட முனிவர், தன்னுடைய குடும்பத்துடன் கங்கைக் கரையில் இருந்த ஒரு கிராமத்தில் தங்கினார். அங்கு தன்னுடைய சீடர்களுக்கு வேதம் கற்பித்து வந்தார். உதங்க முனிவரின் பெண், தந்தைக்கு பணிவிடை செய்து வந்தாள்.

    ஒரு நாள் இரவு தூங்கும் நேரத்தில் அவளது உடலில் புழுக்கள் நெளிவதைக் கண்ட தாய், அதுபற்றி தன் கணவரான உதங்க முனிவரிடம் கேட்டாள். தன்னுடைய ஞான திருஷ்டியால் அதற்கான காரணத்தை அறிந்தார், முனிவர். அந்தப் பெண் இதற்கு முந்தைய பிறவியில் ஒரு அந்தணரின் மகளாக இருந்தாள். அப்போது மாதவிடாய் காலத்தில் அசுத்தம் என்று எண்ணாமல், வீட்டில் உள்ள பொருட்களைத் தொட்டாள். மேலும் பயபக்தியுடன் தனது தோழிகள் செய்து வந்த ரிஷி பஞ்சமி விரதத்தை பார்த்து கேலி செய்தாள். அதனால்தான் அவள் உடலில் புழுக்கள் நெளிகின்றன.

    மேலும் தோழிகள் செய்த ரிஷி பஞ்சமி விரதத்தைப் பார்த்த காரணத்தால், இந்தப் பிறவியிலும் அவள் அந்தண குலத்தில் பிறக்கும் பேறு பெற்றாள். அந்த சாபம் நீங்க, ரிஷி பஞ்சமி விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்று உதங்க முனிவர் தெரிவித்தார். இதையடுத்து முனிவரின் மகள், ரிஷி பஞ்சமி விரதத்தை மேற்கொண்டு, தன்னுடைய சாபம் நீங்கப் பெற்றாள்.

    ரிஷி பஞ்சமி நாள் அன்று, கவுதமர் - அவரது மனைவி அகல்யா, பாரத்வாஜர் - அவரது மனைவி சுசீலா, விசுவாமித்திரர் - அவரது மனைவி குமதவதி, காஷ்யபர் - அவரது மனைவி அதிதி, ஜமாத்கனி - அவரது மனைவி ரேணுகா, வசிஷ்டர் - அவரது மனைவி அருந்ததி, அத்ரி - அவரது மனைவி அனுசுயா ஆகிய சப்த ரிஷிகளையும், அவர்களின் பத்தினிகளையும் பூஜிப்பதன் மூலம், பெண்களின் சாபமும், அவர்களின் தோஷமும் விலகும் என்கிறார்கள்.

    ரிஷி பஞ்சமி பூஜையை மாதவிலக்கு நின்றவர்கள், தொடர்ந்து ஏழு வருடம் பூஜை செய்து, எட்டாவது வருடம் பூஜையை முடிக்க வேண்டும். மாதவிலக்கு நின்று 7 வருடங்களுக்கு பின்னர் இந்த பூஜையை செய்ய வேண்டும் என்றும் சொல்கிறார்கள். ரிஷி பஞ்சமி பூஜை செய்பவர்கள், முதலில் யமுனை நதியை பூஜை செய்ய வேண்டும். பின்னர் கலசம் வைத்து சப்த ரிஷிகளையும், அவர்களின் பத்தினி களையும் ஆவாகனம் செய்ய வேண்டும். பூஜை அன்று மாலை வேளையில், தன்னால் இயன்றதை நைவேத்தியமாக படைத்து, தூப-தீபம் காட்ட வேண்டும். பின்னர் 'ஸப்தரிஷி தேவானாம் யதாஸ்த்தானம் ப்ரதிஷ்டாபயாமி, சோபநார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச' என்று கூறி, வடக்கு முகமாக சப்த ரிஷி கலசத்தை நகர்த்தி வைக்க வேண்டும்.

    வடதேசங்களில், முதலில் காலையில் எழுந்தவுடன் ரிஷப பஞ்சமி பூஜை செய்யும் பெண்கள் (இங்கு மாதவிடாய் நின்ற பெண்கள் மட்டுமல்லாது, திருமணமான அனைத்து பெண்களும் இந்த பூஜையை செய்கிறார்கள்), நதிக்கரைக்குச் சென்று அதில் 365 முறை மூழ்கி எழுகிறார்கள். அதன் பிறகே இந்த பூஜையை தொடங்குவார்கள். நெல்லி பொடி தேய்த்து குளிப்பதை விசேஷமாக சொல்கிறார்கள். வீட்டின் வடகிழக்கில் பூஜையறையில் கும்பம் வைத்து பூஜை ஆரம்பிப்பார்கள்.

    ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த ரிஷி பஞ்சமி விரதத்தை கணவனுடனோ அல்லது தனியாகவோ அனுஷ்டிக்க வேண்டும்.
    விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் வரும் பஞ்சமி திதியை ‘ரிஷி பஞ்சமி’ என்று அழைக்கிறார்கள். அன்றைய தினம் சப்த ரிஷிகளை வணங்கி வழிபாடு செய்பவர்களின் இல்லங்களில் வளம் பெருகும் என்பது ஐதீகம். இந்த விரதத்தின் மூலம் வேண்டிய வரங்களைப் பெற முடியும். பெண்களின் சவுபாக்கியம் அதிகரிக்க வேண்டிச் செய்யப்படும் விரதம் இதுவாகும்.

    அதுவும் வயது முதிர்ந்த பெண்களே இந்த விரதத்தை செய்வது வழக்கமாகும். ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த ரிஷி பஞ்சமி விரதத்தை கணவனுடனோ அல்லது தனியாகவோ செய்ய வேண்டும். அன்றைய தினம் காலை நீர்நிலைகளில், நெல்லிப்பொடியை உடலில் தேய்த்து குளிக்க வேண்டும்.

    பிறகு வீட்டின் நடுவில் மண்டபம் அமைத்து அதில் கலசங்கள் வைத்து, அந்த கலசங்களில் சப்த ரிஷிகளையும், அருந்ததியையும் சேர்த்து ஆவாஹனம் செய்து பூஜிக்க வேண்டும். சப்த ரிஷிகளுக்கு நைவேத்தியம் செய்ததை, 7 பேருக்கு தானமாக வழங்க வேண்டும். இரவு முழுவதும் சப்த ரிஷிகளின் கதைகளைக் கேட்டபடி கண் விழித்து இருக்க வேண்டும்.

    மறுநாள் காலையில் ரிஷிகளுக்கு ஹோமம் செய்து விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இதே போல் ஏழு ஆண்டுகள் செய்து வந்தால், துன்பங்கள் விலகும். மங்கலம் உண்டாகும். செல்வங்கள் சேரும். சவுபாக்கியம் கிடைக்கும்.

    இந்த விரதங்களின் போது 10 விதமான தானங்களைச் செய்வது நன்மைகளை வழங்கும். இந்த தானங்கள் செய்யப்படுவது, நம்முடைய வாழ்விலும், விரதங்களைக் மேற்கொள்ளும் போதும், அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு வேண்டியே ஆகும்.

    கோ-தானம் (பசு அல்லது தேங்காய்), பூதானம் (நிலம் அல்லது சந்தனக்கட்டை), தில தானம் (எள்), ஹிரண்யம் (பொன்னாலான நாணயம்), வெள்ளி நாணயம், நெய், வஸ்திரம், நெல், வெல்லம், உப்பு ஆகியன. ஒவ்வொன்றையும் ஒரு பாத்திரம் அல்லது தட்டில் வைத்துத் தானம் செய்யலாம். தச தானம் செய்ய இயலாதவர்கள், பஞ்ச தானம் செய்யலாம். அவை, வஸ்திரம், தீபம், கும்பம், மணி, புத்தகம் ஆகியன.
    ×