என் மலர்tooltip icon

    வழிபாடு

    • புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை
    • ஆசியாவிலேயே மிக உயரமான விநாயகர் சிலைக்கு அபிசேகம் நடைபெற்றது

    தமிழகத்தில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா, இன்று அதிகாலை முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் காலையில் அபிசேகம் செய்யப்பட்டு, அலங்கார கோலத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் காலை முதல் தரிசனம் செய்து வருகின்றனர்.

    கோவை மாவட்டம் புளியகுளத்தில் அமைந்துள்ள ஆசியாவிலேயே மிக உயரமான விநாயகர் சிலைக்கு அபிசேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

    மேலும், தமிழகத்தில் உள்ள பிரபலமான விநாயகர் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதற்கிடையே ஆங்காங்கே பிள்ளையார் சிலை வைத்து வழிபட்டு வருகின்றனர். சென்னையில் 4 ஆயிரம் இடங்களில் பிள்ளையார் சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    கோவையில் சுமார் 2 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்கு கழித்து குளங்கள் போன்ற இடங்களில் இந்த சிலைகள் கரைக்கப்படும்.

    • திருவலஞ்சுழி சுவேத விநாயகப் பெருமான் ரதோற்சவம்.
    • பிள்ளையார்பட்டி கற்பக விநாயகருக்கு கணபதி ஹோமம், அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, புரட்டாசி 1 (திங்கட்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: திருதியை காலை 11.38 மணி வரை பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம்: சித்திரை காலை 11.57 மணி வரை பிறகு சுவாதி

    யோகம்: சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று ஸ்ரீ விநாயக சதுர்த்தி. திருவலஞ்சுழி சுவேத விநாயகப் பெருமான் ரதோற்சவம். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகருக்கு கணபதி ஹோமம், அபிஷேகம், அலங்காரம். திண்டுக்கல், தேவக்கோட்டை, மிலட்டூர் கோவில்களில் விநாயகப் பெருமான் தீர்த்தவாரி, மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 18 படி பச்சரிசி மாவால் ஆன கொழுக்கட்டை படைத்து வழிபடல். திருமயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீசுவரர், திருவான்மியூர் திரிபுரசுந்தரியம்பாள் சமேத மருந்தீசுவரர், பெசன்ட் நகர் அராளகேசியம்பாள் சமேத ரத்தினகிரீசுவரர் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-சுகம்

    ரிஷபம்-முயற்சி

    மிதுனம்-சாதனை

    கடகம்-செலவு

    சிம்மம்-பெருமை

    கன்னி-பரிசு

    துலாம்- தடை

    விருச்சிகம்-நன்மை

    தனுசு- தனம்

    மகரம்-மகிழ்ச்சி

    கும்பம்-உழைப்பு

    மீனம்-கடமை

    • தாரகாசுரன் எனக்கு எந்த நிலையிலும் மரணம் நேரக்கூடாது என்று வரம் கேட்டான்.
    • தேவர்கள், மனிதர்கள் என எல்லோருக்கும் துன்பம் விளைவித்துக்கொண்டிருந்தான்.

    ஒருசமயம் தாரகாசுரன் என்னும் அரக்கன் சிவபெருமானை நோக்கி கடுமையாக தவம்புரிந்தார். அவனுடைய தவத்திற்கு மனமிறங்கிய சிவபெருமான் தாரகாசுரன் முன்னால் தோன்றினார். அவனை பார்த்து உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றார் சிவபெருமான். உடனே தாரகாசுரன் இறைவனை பார்த்து எனக்கு எந்த நிலையிலும் மரணம் நேரக்கூடாது என்று வரம் கேட்டான்.

    இந்த வரத்தை கேட்டதும் சிவபெருமான் இந்த உலகத்தில் பிறக்கும் எல்லா உயிர்களுக்கும் இறப்பு உண்டு. அதனால் இந்த வரத்தை தர இயலாது. வேண்டுமென்றால் இன்னொரு வரம் கேள் என்றார்.

    தாரகாசுரன் சிவபெருமானிடம் எனக்கு மணம் முடிக்காத இளம் மங்கை அகோர முகத்துடன் ஆடை, அணிகலன்கள் எதுவும் இன்றி என்னோடு யுத்தம் செய்து என்னை வீழ்த்த வேண்டும் என்று கேட்டான். இறைவனாகிய சிவபெருமானும், வரத்தை தந்தோம் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

    உடனே தாரகாசுரனுக்கு ஒரே மகிழ்ச்சி நாம் வரம் வாங்கிவிட்டோம். இதனால் நமக்கு இப்பிறவில் மரணம் இல்லை என்று எண்ணிக்கொண்டு மகிழ்ச்சியுடன் இருந்தார். இதனால் தேவர்கள், மனிதர்கள் என எல்லோருக்கும் துன்பம் விளைவித்துக்கொண்டிருந்தான்.

    தாரகாசுரனின் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வரவே தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிவபெருமானிடம் சென்று தாரகாசுரனிடம் இருந்து எங்களை காப்பாற்ற வேண்டும் என்று முறையிட்டனர். உடனே சிவபெருமான் பக்கத்தில் இருக்கும் தன்னுடைய மனைவியான பார்வதிதேவியை பார்த்தார்.

    உடனே பார்வதி தேவியின் மேனியில் இருந்து தனது சாயலுடன் அனல்கொண்ட பார்வையும், ஆங்கார ரூபமும் கொண்ட காளி தேவி பிறந்தாள். இந்த காளிதேவிதான் தாரகாசுரனை அழிக்க புறப்பாட்டாள். அதனைக்கண்ட தாரகாசுரன், தனது உதவியாளரான சண்ட, முண்டாவை காளிதேவியிடம் யுத்தம் புரிய அனுப்பி வைத்தான். அவர்களும் காளிதேவியுடன் யுத்தம் செய்தனர்.

    யுத்தத்தின் போது காளிதேவி தனது வலதுகரத்து வாளால் சண்டனை வெட்ட அவனது உடலில் இருந்து கொட்டிய ஒவ்வொரு துளி ரத்தத்தில் இருந்து ஒரு அசுரன் தோன்றினான். உடனே காளிதேவி ஆக்ரோஷம் பொங்க தனது சடைமுடியை எடுத்தெறிந்தாள். அதில் இருந்து கருங்காளி தோன்றினாள்.

    அந்த கருங்காளி தேவியை தன்னகத்தே கொண்ட காளிதேவி அகோரம் கொண்டு எழுந்தாள். உடனே அசுரர்கள் நெருங்க நெருங்க ஆயிரம் கண்ணும் கரங்களும் கொண்டவளாய் காளிதேவி ஆயிரம் பேராக நின்றாள்.

    அசுரர்களை வெட்டி வீழ்த்திய காளிதேவி மீண்டும் அசுரர்கள் பிறக்கா வண்ணம் சண்டமுண்டாவை வதம் செய்தாள். சண்ட முண்டாவின் உடலில் இருந்து வெளியேறிய ரத்தம் மண்ணில் விழாதவாறு அது அனைத்தையும் குடித்துவிட்டாள் காளிதேவி. சண்டமுண்டாவை அழித்த பின்னர் தாரகாசுரனை அழித்தாள் காளிதேவி.

    அசுரனை அழித்த மகிழ்ச்சியில் வெறிகொண்டு ஆடினாள் காளிதேவி. இப்படி மகிழ்ச்சியில் ஆடிக்கொண்டிருக்கும் காளிதேவி, பின்னால் இருக்கக்கூடிய சிவபெருமானை தள்ளிவிட்டு அவர் மீது ஏறி நின்று ஆடினாள்.

    சிறிதுநேரத்தில் தன் தவறை உணர்ந்த காளிதேவி ஞானத்தால் தன்னுடைய நாக்கை கடித்தாள். அதில் இருந்து ரத்தம் கொட்டியது. அந்த வலியின் காரணமாக நாக்கை வெளியே நீட்டினாள் காளிதேவி. இப்படி அகோர முகமும், கழுத்தில் கபாள மாலையுடன் அட்டகருப்பு நிறத்தில் கருங்காளி தோற்றத்தை தன்னிடம் இருந்து நீக்கிவிட்டாள் காளிதேவி.

    அந்த கருங்காளி தோற்றத்தில் இருந்த காளி ஒரு ரூபமாக வெளியேறி சென்றது. அதன்பிறகு காளிதேவி, சிவபெருமானுடன் நடனம் புரிந்து தில்லையில் வீற்றிந்தாள்.

    காளிதேவியிடம் இருந்து விலகிவந்த நிழல் ரூபமான கருங்காளி தேவி பொதிகை மலைக்கு வந்தாள். அதன்பிறகு நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள பத்தமடையில் கருங்காளி அம்மன் நிலையம் கொண்டு இருக்கிறாள். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு கவலைகளை நீக்கி மகிழ்ச்சியான வாழ்வை தருகிறாள் கருங்காளி அம்மன். நாமும் அவரை வழிபடுவோம். அவர் அருள் பெறுவோம்.

    • உடுமலை பெரியகடை வீதியில் ஸ்ரீ பூமிநீளா நாயகி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில் உள்ளது.
    • இறுதி நாளான நேற்று பரமபதநாதன் தெப்ப உற்சவம், ரங்கமன்னார் ஆண்டாள் சேர்த்தி சேவை.

    உடுமலை பெரியகடை வீதியில் ஸ்ரீ பூமிநீளா நாயகி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் ஸ்ரீஜெயந்தி உற்சவ விழா கடந்த 7-ந் தேதி தொடங்கி நேற்று வரையில் 10 நாட்களாக தொடர்ந்து நடைபெற்றது.

    அதன்படி கண்ணன் பிறந்த நிகழ்வு, தவழும் கண்ணன், காளிங்க நர்த்தன கண்ணன், பாற்கடல் பள்ளிகொண்ட திருவரங்கன் தெப்ப உற்சவம், வெண்ணை தாழி கண்ணன், ராஜகோபாலன், உறியடி உற்சவம், விஸ்வரூபம், கோவர்த்தனை கிரிதாரி தெப்ப உற்சவம் என 9 நாட்களாக நடைபெற்றது.

    இறுதி நாளான நேற்று பரமபதநாதன் தெப்ப உற்சவம், ரங்கமன்னார் ஆண்டாள் சேர்த்தி சேவை, வாரணமாயிரம், பாசுரங்கள் சேவை, ராமானுஜ நூற்றாந்தாதி சேவை, சாற்றுமறை தீர்த்தப்பிரசாதம் கோஷ்டி உள்ளிட்டவை நடைபெற்றது. மேலும் நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், குமுதவல்லி நாச்சியார், ராமானுஜர், சர்ப்ப கிரகத்தில் எழுந்தருளிய மணவாள மாமுனிவர் உள்ளிட்டோருக்கும் சிறப்பு அலங்காரம் அபிஷேகம் செய்யப்பட்டது.

    அதைத் தொடர்ந்து நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள் பாடப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு பாடல்களை பாடி பெருமாள் பூதேவி ஸ்ரீதேவி, ஆழ்வார்களை சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் 108 ஓதுவா மூர்த்திகளின் தேவார திருமுறை இன்னிசை நிகழ்ச்சி.
    • 108 ஓதுவார்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    ஸ்ரீரங்கம்:

    தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் மற்றும் இந்திய அரசு கலாசார அமைச்சகம் சார்பில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் 108 ஓதுவா மூர்த்திகளின் தேவார திருமுறை இன்னிசை பெருவிழா நேற்று நடந்தது. இதில் 108 ஓதுவார்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு பக்கவாத்திய இசை கருவிகளுடன் தேவார திருமுறை இசை நிகழ்ச்சி நடத்தினர். இதில் திருவானைக்காவல் உதவி ஆணையர் ரவிச்சந்திரன், திருச்சி மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனர் நீலமேகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 36 கிலோ எடைக்கொண்ட முக்குறுணி கொழுக்கட்டை.
    • நாகர்கோவில் கோட்டார் குறுந்தெரு சக்தி விநாயகர் கோவில் விநாயகர் சதுர்த்தி விழா.

    விநாயகர் சதுர்த்தியையொட்டி நாகர்கோவில் கோட்டார் குறுந்தெரு சக்தி விநாயகர் கோவிலில் 36 கிலோ எடைக்கொண்ட முக்குறுணி கொழுக்கட்டையை சாமிக்கு படைக்க கொண்டு சென்றவர்களை படத்தில் காணலாம்.

    • சிவபெருமானின் 64 திருமேனிகளுள் பைரவர் ஒருவராவார்.
    • சிவ பெருமானின் ருத்ர ரூபமாக அறியப்படுபவர்.

    சிவபெருமானின் 64 திருமேனிகளுள் பைரவர் ஒருவராவார். இவர் வைரவர் என்றும் அறியப்படுகிறார். பைரவரின் வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் நாய்களுக்கு பைரவர் என்ற பொதுப் பெயரும் வழக்கத்தில் இருக்கிறது.

    பைரவரை சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்ர பைரவர் என்றெல்லாம் அழைக்கிறார்கள். கால பைரவர், சிவ பெருமானின் ருத்ர ரூபமாக அறியப்படுபவர். சிவன் கோவிலின் வட கிழக்குப்பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர். ஆடைகள் எதுவுமில்லாமல் பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனை தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களை தாங்கியும் நிர்வாண ரூபமாக காட்சி தருபவர்.

    கால பைரவர் சனியின் குருவாகவும், 12 ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவக்கிரகங்களையும், காலத்தையும் கட்டுப்படுத்துபவராகவும் கூறப்படுகிறார். பஞ்சகுண சிவமூர்த்திகளில் பைரவர் வக்ர மூர்த்தி என்றும் அறியப்படுகிறார்.

    அந்தகாசுரன் எனும் அசுரன் சிவபெருமானிடம் பெற்ற வரத்தால் ஆணவம் கொண்டு, தேவ முனிகளை வதைத்தான். தேவர்களை பெண் வேடமிட்டு சாமரம் வீசும் ஏவலைச் செய்யும்படி பணித்தான். அந்தகாசுரன் சிவனிடமிருந்து இருள் என்ற பெரும் சக்தியைப் பெற்றமையால், உலகை இருள்மயமாக்கி ஆட்சி செய்தான். தேவர்களும், முனிவர்களும் அவனை அழிக்க சிவனிடம் வேண்டினார்கள். இதையடுத்து தாருகாபுரத்தை எரித்த காலாக்னியை பைரவ மூர்த்தியாக சிவன் மாற்றினார். அப்போது எட்டு திசைகளிலும் இருந்த இருளை நீக்க எட்டு பைரவர்கள் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.

    பைரவ மூர்த்தியை பிரம்மசிரேச்சிதர், உக்ர பைரவர், ேஷத்ரபாலகர், வடுகர், ஆபத்துதாரனர், சட்டைநாதர், கஞ்சுகன், கரிமுக்தன், நிர்வாணி, சித்தன், கபாலி, வாதுகன், வயிரவன் என்று பல பெயர்களில் வணங்குகிறார்கள். தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை ஆகியவை பைரவருக்கு உகந்ததாக கூறப்படுகிறது. வாசனைப் பூக்களில் மல்லிகைப்பூவை தவிர்த்து மற்ற அனைத்து பூக்களும் பைரவருக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.

    இலங்கையில் ராமர், ராவணனை வதம் செய்தார். இதனால் ஏற்பட்ட தோஷம் நீங்குவதற்காக ராமேசுவரத்தில் ராமபிரான் சிவபூஜை செய்ய விரும்பினார். இதற்காக காசி சென்று சிவலிங்கம் எடுத்து வர வேண்டும் என ஆஞ்சநேயருக்கு உத்தரவிட்டார். ராம பிரானின் உத்தரவுப்படி காசிக்கு புறப்பட்டார் ஆஞ்சநேயர்.

    காசிக்கு சென்று அங்கிருந்து சிவலிங்கத்தை ஆஞ்சநேயர் எடுத்து வரும்போது அவருடன் பைரவரும் வந்து விட்டார். சிவலிங்கத்துடன் ஆஞ்சநேயர் ராமேசுவரம் செல்லும் வழியில் நாகை அருகே உள்ள தகட்டூர் என்ற தலத்துக்கு வந்தபோது பைரவருக்கு தகட்டூரில் தங்க வேண்டும் என்ற ஆசை உண்டானது. அதன்படி ஆஞ்சநேயரை அசதியில் ஆழ்த்தி விட்டு இங்கேயே உறங்க செய்தார் பைரவர்.

    இந்த நிலையில் உறக்கத்தில் இருந்து எழுந்த ஆஞ்சநேயர் பைரவரையும், காசி லிங்கத்தையும் தகட்டூரிலேயே விட்டு சென்று விட்டதாக தல புராணம் கூறுகிறது. இந்த கோவிலில் உள்ள மகா மண்டபத்தில் வடபாகத்தில் காசி லிங்கம் நிறுவப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற பைரவர் கோவில்களில் தகட்டூர் பைரவர் கோவிலும் ஒன்றாகும். வடக்கே காசியிலும் தெற்கே தகட்டூரில் மட்டுமே பைரவர் மூலவராக அருள்பாலிக்கிறார். இக்கோவிலின் தல விருட்சம் நாவல் மரம். தீர்த்தம் காசி தீர்த்தம் ஆகும்.

    மேலும் இக்கோவில் மகா மண்டபத்தில் அமைந்துள்ள ஞான பீடத்தில் சிவபஞ்சாட்சர எந்திரம் பதிக்கப்பட்டுள்ளது. இந்த பீடத்தில் இருந்து அருள்வாக்கு வழங்கப்படுகிறது. குழந்தை இல்லாதவர்கள், தீராத நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து செய்யும் பரிகாரங்களால் குணம் அடையும் அதிசயத்தை கண் கூடாக பார்க்க முடிகிறது.

    கைகளில் சூலம், மண்டை ஓடு, கயிறு, உடுக்கை மற்றும் பாம்புகளால் அலங்கரிக்கப்பட்ட மேனியுடன் நிர்வாணமாகவும், நாய் வாகனத்துடனும் பிரதான மூர்த்தியாக பைரவர் தகட்டூரில் காட்சி தருகிறார். மகா மண்டபத்தில் விசுவநாதர் விசாலாட்சி சன்னதி அமைந்துள்ளது.

    பிரகாரத்தில் கணபதி, சுப்பிரமணியர், துர்க்கை, சண்டிகேஸ்வரர், சிவபெருமான், ஆஞ்சநேயர் உள்ளிட்ட சன்னதிகள் அமைந்துள்ளன. கோவிலுக்கு எதிரே தீர்த்தக்குளம் அமைந்துள்ளது.

    தீர்த்த குளத்திற்கு எதிரே காவல் தெய்வமான ராவுத்தர் சன்னதி அமைந்துள்ளது. இந்த சன்னதியில் பக்தர்கள் வேண்டுதலுக்காக ஆடு, கோழி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர். ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமியில் உற்சவ திருவிழா கொண்டாடப்படுகிறது. தகட்டூர் பைரவர் கோவிலில் மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமி அன்று சிறப்பு யாகம் நடக்கிறது. அப்போது பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பைரவரை வேண்டி கொள்வார்கள்.

    பிரசித்திப்ெபற்ற தகட்டூர் பைரவர் கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) குடமுழுக்கு நடக்கிறது.

    "வடமொழியில் 'யந்திரபுரி' என்றும் தமிழில் 'தகட்டூர்' என்றும் இந்த தலம் அழைக்கப்படுகிறது"

    • காசி நகரின் காவல் தெய்வமாக விளங்குபவர் கால பைரவர்.
    • வடகிழக்கு மூலையில் சந்நிதி கொண்டிருக்கும் கால பைரவர்.

    காசி நகரின் காவல் தெய்வமாக விளங்குபவர் கால பைரவர். சிவாலயங்களில் வடகிழக்கு மூலையில் சந்நிதி கொண்டிருக்கும் கால பைரவர், வறுமை நிலை ஏற்படாமல் நம்மைப் பாதுகாக்கக் கூடியவர். பைரவருக்கு அஷ்டமி பூஜை மிகவும் விசேஷமானது.

    குறிப்பாக கால பைரவாஷ்டமி தினம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பொதுவாக கால பைரவாஷ்டமி கார்த்திகை மாதத்தில் வரும். இந்த நாள்தான் கால பைரவரின் ஜன்மாஷ்டமி தினமாக கொண்டாடப்படுகிறது. இலக்கியங்களில் கால பைரவாஷ்டமி பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

    அனைத்து சிவாலயங்களிலும் கால பைரவாஷ்டமி வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும். காலபைரவர் அவதரித்த கால பைரவாஷ்டமி நாளில் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டால் எல்லாவித கஷ்டங்களும் நீங்கி சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    ஆணவத்தை அழிக்க சிவபெருமான், கால பைரவராக அவதரித்த நாளே கால பைரவாஷ்டமி எனப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவரை வழிபடுவது சிறப்பானதாகும். அந்த நாளில் திருமகளின் 8 வடிவங்களும் பைரவரை வணங்குவதாக ஐதீகம்.

    அதிலும் அவர் அவதரித்த கால பைரவாஷ்டமி நாளில் அவரை வணங்குவது, சிறப்பு பூஜைகள், யாகங்களில் கலந்து கொள்வது என்பது சகல வித செல்வங்களையும் அள்ளித்தரும்.

    • சிவபெருமானுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.
    • பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா.

    பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் நடைபெற்று வரும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நேற்று கற்பகவிநாயகர் சிவபெருமானுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    • குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் 6 மாதங்களுக்கு ஒருமுறை தலைமை அர்ச்சகர் தேர்வு.
    • அக்டோபர் 1-ந்தேதி பதவியேற்கிறார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் 6 மாதங்களுக்கு ஒருமுறை தலைமை அர்ச்சகர் (மேல்சாந்தி) தேர்வு செய்யப்படுவது வழக்கம். அதன்படி அக்டோபர் மாதம் முதல் செயல்படும் புதிய தலைமை அர்ச்சகர் தேர்வு கோவிலில் நடந்தது.

    தற்போதைய மேல்சாந்தி சிவகரன் நம்பூதிரி, கோவில் அருகே உள்ள நமஸ்கார மண்டபத்தில் சீட்டு போட்டு புதிய மேல் சாந்தியை தேர்வு செய்தார். அதன்படி பாலக்காடு அருகே உள்ள தெக்கே வாவனூரைச் சேர்ந்த ஸ்ரீநாத் நம்பூதிரி புதிய மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டார். அவர் அக்டோபர் 1-ந்தேதி பதவியேற்கிறார்.

    • ரபிஉல் அவ்வல் மாத பிறை நேற்று மாலை தென்பட்டது.
    • வருகிற 28-ந் தேதி (வியாழக்கிழமை) மிலாடி நபி விழா கொண்டாடப்படும்.

    சென்னை:

    இஸ்லாமிய மாதமான ரபிஉல் அவ்வல் மாத பிறை நேற்று மாலை தென்பட்டது. எனவே, வருகிற 28-ந் தேதி (வியாழக்கிழமை) மிலாடி நபி விழா கொண்டாடப்படும். மேற்கண்ட தகவலை தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாகுத்தீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.

    • சுகப்பிரம்மா ஆசிரமம் அருகில் உள்ள குளத்தை தூர்வாரி தூய்மைப்படுத்துதல்.
    • பக்தர்களின் வசதிக்காக கனகாசலத்தின் இருபுறமும் பைபர் ஷீட்கள் பொருத்துதல்.

    ஸ்ரீகாளஹஸ்தி:

    ஆயிரம் லிங்கா கோணா கோவிலில் புதிய ராஜகோபுரம் கட்டி கும்பாபிஷேகம் நடத்த அறங்காவலர் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் உள்ள நிர்வாக அலுவலகத்தில் அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு தலைமை தாங்கினார். முக்கிய விருந்தினராக ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பியப்பு.மதுசூதன்ரெட்டி பங்கேற்றார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அவை வருமாறு:-

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் துணைக் கோவிலான தர்மராஜா கோவில் அருகில் காலியாக உள்ள பகுதி தனி நபர்களால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகாமல் இருக்க 2 திருமண மண்டபங்களை கட்டுவது.

    வெயிலிங்கால கோணா (ஆயிரம் லிங்கா கோணா) கோவிலில் புதிய கோபுரம் கட்டி மகா கும்பாபிஷேகம் நடத்துவது.

    சுகப் பிரம்மா ஆசிரமம் அருகில் உள்ள குளத்தை தூர்வாரி தூய்மைப்படுத்துதல், பக்தர்களின் வசதிக்காக ஞானப்பிரசுனாம்பிகா சதன் முதல் பரத்வாஜ் சதன் வரை சாலை அமைக்க தேவையான நிலத்தை கையகப்படுத்துதல்.

    சொர்ணமுகி ஆற்றில் ராம-சேது பாலத்துக்கும் புதிய பாலத்துக்கும் இடையே உள்ள பகுதியில் கிழக்கு நோக்கிய சூரியநாராயணமூர்த்தி உருவச்சிலை, மேற்கு நோக்கிய கால பைரவர் சிலை ஏற்பாடு செய்தல்.

    ஜல விநாயகர் கோவிலின் முன் தெற்கு நோக்கிய குரு தட்சிணாமூர்த்தி சிலையை அமைத்தல். பக்த கண்ணப்பர் மலையில் கட்டப்பட்டுள்ள சிவன்-பார்வதி சிலைகளை சுற்றி மலர் செடிகளை நடுதல்.

    சாமியின் நெப்பல மண்டபத்தையொட்டி உள்ள நகராட்சி வணிக வளாகத்துக்கு நஷ்டஈடு வழங்குவதன் மூலம், அதைக் கையகப்படுத்த நடவடிக்கை எடுத்தல்.

    பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவில் சன்னதியில் வரலட்சுமி விரதம், கோதா தேவி கல்யாணம், சீதா-ராம கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த தென்மேற்கு பகுதியில் மண்டபம் அமைத்தல்.

    பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் ஸ்ரீகிருஷ்ணா மந்திரம் புதிதாக கட்டுவது.

    பெத்தக்கன்னலியில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோவில், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் துணைக் கோவில் என்பதை பக்தர்கள் அறியும் வகையில் பிரதான சாலையில் வளைவு அமைத்தல்.

    கனகதுர்காதேவி நவராத்திரி கொண்டாட்டத்தின்போது, பிரசாதம் வழங்க மலையின் உச்சியில் சமையல் அறை அமைப்பது. அஞ்சூரு மண்டபம் முதல் துபான் சென்டர் வரை, சுற்று வட்டாரக் கிராம மக்களின் விருப்பம் மற்றும் கோரிக்கையின் படி சாமி, அம்பாளுக்கு ஆரத்தி எடுக்க நிரந்தரமாக நான்கு ஓய்வு மண்டபங்கள் கட்டுதல்.

    பக்தர்களின் வசதிக்காக கனகாசலத்தின் இருபுறமும் பைபர் ஷீட்கள் பொருத்துதல். கோவிலுக்குள் வாகன மண்டபம் மற்றும் ஆச்சார்யா மண்டபம் நவீன மயமாக்குவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் கோவில் நிர்வாக அதிகாரி சாகர்பாபு மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    ×