என் மலர்
வழிபாடு
- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை பிரம்மோற்சவ விழா தொடக்கம்
- நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி கொடிமரத்தில் கட்டுவற்காக புனித தர்ப்பை புல், பாய், கயிறு ஆகியவை திருமலைக்கு கொண்டு வரப்பட்டன. அவை நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை (திங்கட்கிழமை) வருடாந்திர (சாலகட்லா) பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின்போது, தங்கக் கொடிமரத்துக்கு பயன்படுத்தப்படும் புனித தர்ப்பை புல், பாய் மற்றும் கயிறு ஆகியவை திருமலைக்கு வந்தன. திருப்பதி தேவஸ்தான வனத்துறை அலுவலகத்தில் இருந்து துணை வனத்துறை அதிகாரி சீனிவாசுலு, அந்தத் துறை பணியாளர்கள் புனித தர்ப்ப புல், பாய், கயிறு ஆகியவற்றை நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாகக் கொண்டு வந்து, கோவிலுக்குள் எடுத்துச் சென்றனர்.
கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் சேஷ வாகனத்தின் மீது புனித தர்ப்பை புல், தர்ப்பை பாய், கயிறு ஆகியவை வைக்கப்பட்டன. நாளை நடக்கும் கொடியேற்ற நிகழ்ச்சியில் இந்தப் புனித பொருட்கள் பயன்படுத்தப்படும்.
பிரம்மோற்சவ விழாவின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் கருட கொடியேற்றம் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சி 'துவஜாரோஹணம்' என்று அழைக்கப்படுகிறது. இதையொட்டி கோவிலின் தங்கக் கொடிமரத்தில் கருட கொடி ஏற்றப்பட்டு, பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்க முப்பத்து முக்கோடி தேவர்கள், ரிஷிகள், முனிவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.
ருத்விக்குகள் கொடிமரத்தை சுற்றி வேத மந்திரங்களுடன் தர்ப்ப பாயை போர்த்துவர். கொடிமரம் வரை தர்ப்பை கயிறு கட்டப்படும். தர்ப்பை கயிறு, பாய் ஆகியவற்றை திருப்பதி தேவஸ்தான வனத்துறையினர் 10 நாட்கள் இரவும் பகலுமாக மிகுந்த அர்ப்பணிப்புடன் இந்தப் புனித பொருட்களை தயாரித்துள்ளனர். தர்ப்பையில் சிவ தர்ப்பை, விஷ்ணு தர்ப்பை என 2 வகைகள் உள்ளன. அதில் ஏழுமலையான் கோவிலில் 'விஷ்ணு தர்ப்பை' பயன்படுத்தப்படுகிறது.
இந்த விஷ்ணு தர்ப்பை புல் திருப்பதி மாவட்டம் ஏர்ப்பேடு மண்டலம் செல்லூர் கிராமத்தில் வளர்க்கப்படுகிறது. அதை, தேவஸ்தான வனத்துறையினர் அறுவடை செய்து, திருமலைக்கு கொண்டு வந்து ஒரு வாரம் மிதமான வெயிலில் உலர்த்தி காய வைத்து, நன்றாகச் சுத்தம் செய்து பாய், கயிறு தயார் செய்தார்கள். வனத்துறை ஊழியர்கள் 22 அடி நீளம், 7½ அடி அகலத்தில் தயாரித்த தர்ப்பை பாய் மற்றும் 200 அடிக்கு மேல் நீளமுள்ள கயிறு திருமலைக்கு கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தர்ப்பை புல், கயிறு, பாய் ஊர்வலத்தில் கோவில் துணை அதிகாரி லோகநாதம், பறக்கும் படை அதிகாரி பாலிரெட்டி மற்றும் வனத்துறையினர் பங்கேற்றனர்.
- நவராத்திரி பிரம்மோற்சவ விழா 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும்.
- பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இன்று இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை அங்குரார்ப்பண நிகழ்ச்சி நடக்கிறது.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதில் முதலில் வருவது (இந்த மாதம்) வருடாந்திர பிரம்மோற்சவ விழா, அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை நடப்பது நவராத்திரி பிரம்மோற்சவ விழா ஆகும். நவராத்திரி பிரம்மோற்சவ விழா 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும்.
நாளை (திங்கட்கிழமை) முதல் 26-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை அங்குரார்ப்பண நிகழ்ச்சி நடக்கிறது.
நாளை (திங்கட்கிழமை) மாலை 3.30 மணியில் இருந்து 5.30 மணி வரை தங்கத் திருச்சி உற்சவம், மாலை 6.15 மணியில் இருந்து 6.30 மணி வரை மீன லக்னத்தில் கொடியேற்றம் நடக்கிறது. இரவு 9 மணியில் இருந்து 11 மணிவரை பெரியசேஷ வாகன வீதிஉலா நடக்கிறது.
19-ந்தேதி காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை சின்ன சேஷ வாகன வீதிஉலா, மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணி வரை திருமஞ்சனம், இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை ஹம்ச வாகன வீதி உலா.
20-ந்தேதி காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை சிம்ம வாகன வீதிஉலா, மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணி வரை திருமஞ்சனம், இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை முத்துப்பந்தல் வாகன வீதிஉலா.
21-ந்தேதி காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை சர்வ பூபால வாகன வீதிஉலா.
22-ந்தேதி காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை பல்லக்கு உற்சவத்தில் எழுந்தருளும் உற்சவர் மலையப்பசாமி மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வருகிறார். இரவு 7 மணிக்கு பிரம்மோற்சவ விழாவின் 'சிகர' நிகழ்ச்சியாக கருட சேவை தொடங்குகிறது.
23-ந்தேதி காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை அனுமந்த வாகன வீதிஉலா, மாலை 4 மணியில் இருந்து 5 மணி வரை தங்கத்தேரோட்டம், இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை யானை வாகன வீதிஉலா.
24-ந்தேதி காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை சூரிய பிரபை வாகன வீதி உலா, மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணி வரை திருமஞ்சனம், இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை சந்திர பிரபை வாகன வீதிஉலா.
25-ந்தேதி காலை 6.55 மணியளவில் தேர்த்திருவிழா, இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை குதிரை வாகன வீதிஉலா.
26-ந்தேதி அதிகாலை 3 மணியில் இருந்து காலை 6 மணி வரை பல்லக்கு உற்சவம் மற்றும் திருச்சி உற்சவம், காலை 6 மணியில் இருந்து 9 மணி வரை திருமஞ்சனம் மற்றும் சக்கர ஸ்நானம், இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை கொடியிறக்கம் நடக்கிறது. இதோடு பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.
மேற்கண்ட வாகனங்களில் உற்சவர் மலையப்பசாமி தனித்தும், உபய நாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் இணைந்தும் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள்.
- சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம்.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் உற்சவம் ஆரம்பம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, ஆவணி-31 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: துவிதியை காலை 10.47 மணி வரை
பிறகு திருதியை
நட்சத்திரம்: அஸ்தம் காலை 10.33 மணி வரை
பிறகு சித்திரை
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று சுப முகூர்த்த தினம். சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். தல்லாகுளம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், கரூர் தான்தோன்றி ஸ்ரீ கல்யாண வேங்கடேச பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் கோவில்களில் உற்சவம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் உற்சவம் ஆரம்பம், பெரிய சேஷ வாகனத்தில் பவனி. மதுரை ஸ்ரீநவநீதகிருஷ்ணன் மச்சாவதாரம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. உப்பூர் விநாயகப் பெருமான் ரதோற்சவம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நலம்
ரிஷபம்-ஓய்வு
மிதுனம்-வெற்றி
கடகம்-அசதி
சிம்மம்-இன்பம்
கன்னி-விருத்தி
துலாம்- யோசனை
விருச்சிகம்-நன்மை
தனுசு- யோகம்
மகரம்-உதவி
கும்பம்-இன்பம்
மீனம்-நட்பு
- கொடிமரத்திற்கு பின்னாலேயே சொரிமுத்து அய்யனார் வந்துகொண்டே இருந்தார்.
- கற்குவா மரத்தின் மீது அமர்ந்த அய்யன் என்று பாசத்துடன் அழைத்து வந்தனர்.
திருச்செந்தூரில் இருந்து 16 கி.மீ தொலைவில் இருக்கும் ஊர் தான் தேரிக்குடியிருப்பு. அந்த தேரி குடியிருப்புக்கு பக்கத்தில் குதிரைமொழி தேரி என்ற ஊரில் எழுந்தருளி இருக்கிறார் கற்குவேல் அய்யனார்.
ஒரு சமயம் பொதிகைமலைக்கு அடியில் இருக்கக்கூடிய காக்காய்ச்சி மலையில் இருந்து திருச்செந்தூரில் உள்ள முருகன் கோவிலுக்கு கொடிமரம் வெட்ட வரும்போது, பேச்சியம்மன், சுடலைமாடசாமி, பிரம்மசக்தி அம்மன் முதலான 21 தேவாதி தேவதைகள் எல்லோரும் இடையூறு செய்தார்கள்.
உடனே கொடிமரம் வெட்ட சென்றவர்கள் எல்லோரும் சொரிமுத்து அய்யானாரிடம் சென்று முறையிட்டனர். சொரிமுத்து அய்யனாரில் கட்டளைப்படி அந்த 21 தேவாதி தேவதைகளும் அந்த கொடிமரத்தை திருச்செந்தூரில் இருக்கக்கூடிய முருகன் கோவிலில் கொண்டுவந்து சேர்த்தனர்.
அந்த கொடிமரத்திற்கு பின்னாலேயே சொரிமுத்து அய்யனார் வந்துகொண்டே இருந்தார். வந்துகொண்டு இருக்கும்போது செம்மண் காட்டு பகுதியில் தேரிக்குடியிருப்பு என்ற இடம் உள்ளது. அந்த செம்மண் தேரி சொரிமுத்து அய்யனாருக்கு மிகவும் பிடித்துபோகவே, இதனால் சொரிமுத்து அய்யனார் என்ன பண்ணினார் என்றால் அந்த செம்மண் தேரியில் உள்ள கறுவா மரத்தின் மீது அமர்ந்துகொண்டார்.
அதன்பிறகு தான் இங்கு இருப்பதை அந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காக அந்த பகுதியை சேர்ந்த நிலக்கிலாரின் கனவில் தோன்றி நான் அய்யனார் நீ வசிக்கும் பகுதியில் உள்ள கற்குவா மரத்தில் அமர்ந்திருக்கிறேன். எனக்கு இவ்விடம் பிடித்துவிட்டது. எனவே இந்த இடத்தில் எனக்கு கோவில் கட்டி பூஜை செய்துவா, நான் உன்னை மேம்படுத்துவேன். என்னை நம்பி வணங்கும் பக்தர்களுக்கு எல்லா வளமும், நலமும் அளித்து காத்தருள்வேன் என்று கூறினார் சொரிமுத்து அய்யனார்.
உடனே நிலக்கிலார் என்ன செய்தார் என்றால் அந்த பகுதியை ஆட்சி செய்து வந்த சிற்றரசன் உதவியுடன் கோவிலை கட்டினார். மக்கள் எல்லோரும் கற்குவா மரத்தின் மீது அமர்ந்த அய்யன் என்று பாசத்துடன் அழைத்து வந்தனர். அதுவே காலப்போக்கில் மருவி கற்குவேல் அய்யன் என்று ஆகி இன்று கற்குவேல் அய்யனார் என்று அழைக்கப்படுகிறது.
கற்குவேல் அய்யனார் சொன்னதுபடியே 21 தேவாதி தேவதைகளுக்கும் இந்த இடத்தில் கோவில் கட்டி கொடுக்கப்பட்டது. கொஞ்ச நாட்களுக்கு பிறகு இந்த கோவிலை கட்டி தந்த நிலக்கிலாருக்கு ஒரு மகன் பிறந்தார். அந்த மகனுக்கு கற்குவா அய்யனார் என்று பெயரிட்டு அழைத்து வந்தனர்.
கற்குவா அய்யனாரும் அந்த பெயரை சுருக்கி கற்கய்யனார் என்று அழைத்தனர். இந்த நிலக்கிலாரின் வம்சாவளியில் வந்த கய்யனார், இதேபகுதியை ஆட்சி செய்து வந்த அதிவீர ரணசூர பாண்டிய மன்னனிடம் அமைச்சராக இருந்தார்.
இந்த மன்னனின் கோட்டைக்கு அருகில் ஒரு அழகான சுனை ஒன்று உள்ளது. அந்த சுனையின் மேற்பரப்பில் ஒரு மா மரம் ஒன்று இருந்தது. அந்த மா மரத்துக்கு ஒரு சிறப்பு உண்டு. என்னவென்றால் தினமும் ஒரு காய் அதுவும் கனிந்த நிலையில் தானே விழும். அப்படிப்பட்ட மா மரம் தான் அந்த சுனை அருகில் இருந்தது. ஒரு நாள் அந்த சுனையில் தண்ணீர் குடிப்பதற்காக முனிவர் ஒருவர் வந்தார்.
அங்கு தண்ணீர் குடித்துக்கொண்டிருக்கும்போது திடீரென்று அந்த மா மரத்தில் இருந்து ஒரு கனி ஒன்று விழுந்தது. உடனே அந்த முனிவர் அந்த மாம்பழத்தை கையில் எடுத்துக்கொண்டு உடனே முனிவர் மன்னரை பார்க்க சென்றார். அங்கு மன்னரை பார்த்து முனிவர் இந்த மாம்பழம் கிடைப்பதற்கரிய மாம்பழம். இந்த மாம்பழத்தை நீங்கள் அன்றாடம் வழிபடக்கூடிய இறைவனுக்கு தினமும் ஒரு கனியை பின்னர் நீங்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் பிணியும், மூப்பும் அண்டாது என்று கூறினார்.
ரொம்ப சந்தோசமாக மன்னர் அந்த முனிவரிடம் இருந்து பழத்தை வாங்கிக்கொண்டார். அன்றில் இருந்து அந்த மரத்தில் இருந்து தானே பழுத்து கீழே விழும் மாம்பழத்தை யாரும் எடுத்துவிடக்கூடாது என்பதற்காக 4 வீரர்களை மன்னர் காவலுக்கு வைத்தார்.
அந்த பகுதியில் கணவனை இழந்த ஒரு விதவையான பேச்சித்தாய் வாழ்ந்து வந்தாள். இந்த பேச்சித்தாய் சிறுவயதில் இருந்தே கறுகுவேல் அய்யனார் மீதும், அந்த ஆலயத்தில் அருள்புரியும் பேச்சியம்மன் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தாள். இவர் தினமும் பகல் பொழுதில் ஊருக்குள் நடமாடுவதே கிடையாது. அதிகாலையில் அந்த சுனையில் இருந்து நீர் எடுத்து வந்து வீட்டு தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தாள்.
அதிகாலை நேரம் என்பதால் மரத்தை காக்கக்கூடிய வீரர்களும் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தனர். ஒருநாள் அதிகாலைப்பொழுது சுனையில் இருந்து தண்ணீர் எடுத்துவர சென்றாள். அப்போது ஒரு குடத்தை அந்த சுனையின் மேற்பரப்பில் வைத்துவிட்டு மற்றொரு குடத்தில் நீரை எடுத்துக்கொண்டிருந்தாள். அப்போது அந்த மாமரத்தில் இருந்து மாம்பழம் பழுத்து நீர் நிரம்பிய குடத்திற்குள் விழுந்தது.
இதை பேச்சித்தாய் கவனிக்கவே இல்லை. அதன்பிறகு தலையில் ஒரு குடமும், இடுப்பில் ஒரு குடமும் வைத்துக்கொண்டு வீட்டுக்கு கொண்டுவந்தாள். அரண்மனையில் பூஜைக்கு தயாரான அரசன் இன்னும் மாம்பழம் வராததைக் கண்டு காவலர்களை அழைத்து காரணம் கேட்டார்.
காவலர்கள் அதற்கு இன்னும் மாம்பழம் விழவே இல்லை என்று கூறினர். அது எப்படி விழாமல் இருக்கும். யாராவது எடுத்து சென்றிருப்பார்களோ என்று கேட்டார் மன்னன். உடனே காவலர்கள் நாங்கள் காலையில் சிறிதுநேரம் கண்ணயந்துவிட்டோம் மன்னா என்று கூறினர். அதற்கு மன்னன் பொறுப்பில்லாமல் இருந்த காவலர்களுக்கு சிறைதண்டனை கொடுத்தார்.
அதன்பிறகு தன்னுடைய படை வீரர்களை அழைத்து அனைத்துவீடுகளிலும் அடுப்பாங்கரை முதல் அனைத்து இடத்திலும் விடாமல் தேடுங்கள் அந்த மாம்பழம் கிடைக்கும் என்று சொல்லி உத்தரவிட்டார். அரசனின் உத்தரவிற்கிணங்க அந்த வீரர்கள் எல்லோரும் அந்த தேரிக்குடியிருப்பு ஊரில் இருக்கும் அனைத்து வீடுகளிலும் சென்று தேடினார்கள்.
இறுதியாக பேச்சித்தாய் வீட்டில் தேடியபோது, பேச்சித்தாய் ஒரு இளம் விதவை அதனால் அவள் கதவிற்கு பின்னால் சென்று ஆடவரின் முகம் பார்த்திராத வண்ணம் ஒதுங்கி நின்றாள். நிறைகுடத்தில் உள்ள தண்ணீரை எல்லாம் கொட்டி காட்டினாள். அப்போது குடத்தில் இருந்து மாம்பழம் கீழே விழுந்தது.
உடனே அந்த மாம்பழத்தை எடுத்துக்கொண்டு அரசனிடம் சென்றார்கள். அந்த அரசன் தெய்வத்திற்கும், அரசனுக்கும் உரித்தான இந்த மாம்பழத்தை களவாடி சென்ற அந்த பேச்சித்தாய். எனவே அவளை நீங்கள் இழுத்துவரும்படி உத்தரவிட்டார். உடனே படைவீரர்கள் அனைவரும் பேச்சித்தாயிடம் மன்னன் ஆணை குறித்து சொன்னார்கள். அதைகேட்டதும் பேச்சித்தாயும் அவர்கள் பின்னாலேயே வந்து கோட்டை நோக்கி நடந்து வந்தாள்.
இந்த பேச்சித்தாய்க்கு மொட்டை அடித்து கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி கழுதை மேல் ஏற்றி ஊரை வலம் வரச்செய்து சுண்ணாம்பு கால்வாயில் தள்ளுங்கள் என்று ஆணையிட்டார் அரசன்.
அப்போது அமைச்சர் கய்யனார் சென்று அரசனிடம், இவள் ஒரு அபலை பெண். இருட்டுக்குள் வாழ்ந்து பகலில் தூங்குபவள். இந்த இளம் வயது பெண்ணிடம் சொல்லும் பழிகள் நாளை நம் பரம்பரையையே பாழ்படுத்திவிடும் என்று கூறினார்.
இதைக்கேட்டதும் அரசன், நிறுத்து உன் உபதேசத்தை என்று கய்யனாரை பார்த்து கோபத்துடன் சொன்னார்.
அதன்பிறகு மன்னரின் ஆணைப்படி பேச்சித்தாய்க்கு மொட்டை அடித்து, கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி கழுதைமேல் ஏற்றி வலம் வந்தனர். சுண்ணாம்பு கால்வாயில் தள்ளிவிடும் நிலையில் இருந்தால் பேச்சித்தாய். அப்போது பேச்சித்தாய் தன்னுடைய உயிர்போகுல் நிலையில் சுற்றி நிக்கக்கூடிய மக்களுக்கு மத்தியில் இருந்து அரசனுக்கு சாபம் கொடுத்தாள்.
நன்றிநெடுகேளாதவன் சீமையில் தீக்காற்றும் தீமழையும் பெய்யக்கடவது, கண்டு நீதிநெறி சொல்லும் கற்குவேல் அய்யனாரே நீரே சாட்சி. மன்னவன் பூமியெங்கும் மண்மாரி பொழியட்டும். நீதிநெறி சொல்லுக்கும் கற்குவேல் அய்யனாருக்கும் பூங்காவாகட்டும் என்று சொல்லி சாபம் கொடுத்தாள்.
உடனே நெருப்பு பேச்சித்தாயை நெருங்குவதற்கு முன்பே பேச்சியம்மன் அங்கே வந்து பேச்சித்தாயை ஆட்கொண்டுவிட்டார். அங்கு சுற்றி நிற்கும் மக்கள் அனைவரும் கற்குவேல் அய்யன் கோவில் பேச்சியம்மனாக இருப்பது இந்த பேச்சித்தாய் என்று சொல்லிக்கொண்டே இருந்தனர்.
இந்த பேச்சித்தாயின் சாபத்தால் அந்த பகுதி முழுவதும் அழிந்து அதன்பிறகு ஊரானது என்று அங்கு இருக்கும் முன்னோர்கள் சொல்கிறார்கள். இந்த பேச்சித்தாயின் சாபத்தின்படி கோவிலின் பின்புறம் விரிந்தும், முன்பக்கம் சுளவுபோல் இருக்கிறது.
கற்குவேல் அய்யனார் கோவிலில் நடைபெறும் விழாக்களில் முக்கியமான விழா என்னவென்றால் கள்ளர்வெட்டு திருவிழா தான்.
இந்த திருவிழா எதற்காக கொண்டாடுகிறார்கள் என்றால் கற்குவேல் அய்யனாரை வேண்டி பலன் பெற்ற சிற்றரசர்கள், நிலச்சுவந்தார்களும் கோவிலுக்கு தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம் முதலானவற்றை தானமாக கொடுத்தார்கள். இதனால் கோவில் கருவறையில் உள்ள பெட்டகத்தில் ஆபரணங்கள் அதிகமாக இருந்தது.
இதை அறிந்த நெல்லை சீமையை சேர்ந்த வாலிபர் ஒருவர் கோவிலில் திருடுவதற்காக வந்து கோவிலில் திருடிவிட்டு கோவிலின் பின்புறம் சிறிதுதூரம் வந்தபோது அந்த வாலிபரின் கண்பார்வை பறிபோனது. உடனே கற்குவேல் அய்யனார் கோபம் கொண்டு உத்தரவிட வன்னியராஜன் வீச்சரிவாளுடன் சென்று அந்த வாலிபரை சிறைச்சேதம் செய்தார்.
தன்னுடைய மகனை காணாத திருடனின் தாய் கண்ணீர்விட்டு அழுது தேடிக்கொண்டே இருந்தாள். தெரியாமல் செய்த தவறை மன்னித்து என்னுடைய மகனுக்கு உயிர்பிச்சை தாரும் சுவாமி, கட்டிய மனைவியும், பெற்ற பிள்ளைகளும் கஞ்சிக்கு வழியின்றி கதறுகிறார்கள். கஞ்சிக்கும் வழியில்லை. பேரரசரும் உதவவில்லை. கருணைக்காட்ட யாருமே இல்லை. களவாட உன் இருப்பிடம் வந்தான்.
பிச்சாண்டார் மைந்தனே பிச்சை தாரும் என்று சொல்லி அந்த கற்குவேல் அய்யனாரிடம் புலம்பி நின்றாள் அந்த திருடனின் தாய். உடனே கற்குவேல் அய்யனார் மனம் இறங்கி அசரிரீயாக பூசாரி வந்து புனிதநீரை தெளித்து பிரம்பால் அடிக்க உன் மகன் உயிர்பெற்றெழுவான் என்று சொன்னார்.
உடனே தேரிக்குடியிருப்பில் தூங்கிக்கொண்டிருந்த கோவில் பூசாரியின் கனவில் காட்சி கொடுத்தார். பூசாரியிடம் நடந்ததை கூறிநீபோய் நீரை தெளித்து பிரம்பால் அடிக்க சிறைச்சேதம் செய்யப்பட்டவன் உயிர்பிழைப்பான் என்று கூறினார் கற்குவேல் அய்யனார்.
இதைக்கேட்டு பூசாரி தான் கண்ட கனவுபற்றி மற்றவர்களுக்கு கூற ஊர் முழுவதும் தகவல் பரவு அனைவரும் கோவிலுக்கு சென்றார்கள். அய்யனார் கனவில் சொன்னதுபடியே பூசாரி அருள்வந்து ஆடினார். அவர் துண்டாக கிடந்த திருடனின் உடல் மீது கற்குவேல் அய்யனாரின் அபிஷேக தீர்த்தத்தை தெளித்து பிரம்பால் 3 முறை அடிக்க உடனே உடலும், தலையும் சேர்ந்தது. உடனே அந்த திருடன் உயிர்த்தெழுந்தான். அந்த தாயின் வேண்டுகோளும் தீர்ந்தது.
உடனே ஆனந்த கண்ணீர் வடித்துக்கொண்டு அந்த தாய், கற்குவேல் அய்யனாரின் இந்த அற்புதத்தை அனைவருக்கும் உணர்த்தும் வண்ணம் ஆண்டுதோறும் எனது சந்ததியினர் கள்ளன் சாமி ஆடி நன்றிக்கடன் செலுத்துவோம் என்று சொல்லி உறுதிகொண்டாள் அந்த திருடனின் தாய்.
கள்ளராக வந்தவர் அவர் காலம் முடிந்த பிறகு அவருக்கும் ஒரு பீடம் கொடுத்து அய்யனார் சன்னதியில் அவருக்கு எதிர்புறம் ஒரு சிறிய கோவில் வைத்துள்ளனர். இப்போது அந்த கோவில் கள்ளர்சாமி கோவில் என்று அழைக்கப்படுகிறது.
கார்த்திகை முதல்நாள் கொடியேற்றம் நடக்கும். அன்றில் இருந்து 30-வது நாள் கள்ளர்வெட்டு திருவிழா நடக்கும். இந்த ௩௦ நாட்களும் அய்யனாரின் கதை வில்லுப்பாட்டாக தினமும் 2 வேளை பாடப்படும். விழாவின் போது காலையில் காவல்தெய்வமான அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் நடக்கும். அதன்பிறகு அலங்கார தீபாராதனை நடைபெறும்.
இந்த கள்ளர்வெட்டு திருவிழாவின்போது இளநீரை வெட்ட உதயத்தூர் கிராமத்தில் இருந்து ஒருகுலத்தவர்கள் அரிவாள் கொண்டு வருவார்கள். ஆண்டுதோறும் புதிய கயிறு, புதிய அரிவாள் பயன்படுத்தப்படுகிறது. கள்ளர்வெட்டு நடக்கும் இடத்தில் உள்ள புனித மண்ணை எடுத்து விவசாயம் செய்யும் நிலத்தில் போட்டால் விவசாயம் செழிக்கும். சிறிய துணியில் முடிந்து பூஜை அறையில் வைத்தால் செல்வம் கொழிக்கும் என்பது இங்கு வரக்கூடிய பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
இந்த கோவிலில் வீற்றிருக்கும் ஸ்ரீ கற்குவேல் அய்யனார் பூரணம், பொற்கலை ஆகிய இரு தேவியருடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகின்றனர்.
- திருச்சி பாலக்கரை பகுதியிலும் இரட்டைப் பிள்ளையார் அருள்புரிகிறார்.
- செவ்வாய்க்கிழமைகளில் விநாயகரை வழிபட்டால் நாக தோஷம் விலகும்.
ஒரு சமயம் சிவபெருமானை பிரிந்து பார்வதிதேவி தனியாக தவம் செய்ய நேரிட்டது. அப்போது விநாயகர் தன்னைப் போலவே ஒரு வடிவத்தை தன்னருகே உருவாக்கி, அந்த திருவுருவத்தையே, அதாவது தன்னையே சங்கல்பம் செய்து கொண்டு, பிரிந்த தன் பெற்றோர் விரைவில் ஒன்று சேர பிரார்த்தித்தாராம்.
இதன் அடிப்படையில் மயிலாடுதுறை அருகில் உள்ள திருவேள்விக்குடி திருத்தலத்தில், சங்கல்ப (இரட்டை) விநாயகர் என்ற பெயரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். 'ஆதி இரட்டை விநாயகர்' என்று போற்றப்படுபவரும் இவரே.
அதுபோலவே திருச்சி பாலக்கரை பகுதியிலும் இரட்டைப் பிள்ளையார் அருள்புரிகிறார். பிள்ளையாருக்கு உரிய தேய்பிறை சதுர்த்தி திதி மட்டுமின்றி திருவோணம், திருவாதிரை, விசாக நட்சத்திரங்களும் திதிகளில் பஞ்சமியும் இவருக்குரியதாக கருதப்படுகிறது.
தேய்பிறை சதுர்த்தியில் இவருக்கு அருகம்புல் மாலை அணிவித்து அர்ச்சித்து வழிபட்டால், செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் தீமைகள் விலகும். மேலும் கார் அரிசியில் மோதகம் (கொழுக் கட்டை) செய்து நிவேதனம் செய்தால் சந்திரனால் ஏற்படும் தோஷம் விலகும்.
திருவோண நட்சத்திரத்தில் இந்த இரட்டைப் பிள்ளையாருக்கு மாம்பழங்கள் நிவேதனம் செய்து ஏழைத் தம்பதிகளுக்கு அளித்தால், கணவன்-மனைவி உறவு பலப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். திருவாதிரையன்று வில்வத்தால் மாலை தொடுத்து இவரை வழிபட்டால் நோய் நொடிகள் குணமாகும். ஆரோக்கியமாக வாழலாம். பஞ்சமி திதியில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபட்டால் கடன் பிரச்சினைகள் தீரும். செல்வ வளம் பெருகும்.
விசாக நட்சத்திரத்தன்று இரட்டை விநாயகருக்கு பூக்களால் தொடுத்த போர்வை போன்ற மலர் ஆடை அணிவித்தால் குடும்பத்தில் சுப காரியங்கள் தடையின்றி நிறை வேறும்.
பொதுவாக, செவ்வாய்க்கிழமைகளில் வழிபட்டால் நாக தோஷம் விலகும். சனிக்கிழமைகளில் கனி வர்க்கத்தில் ஏதாவது ஒன்றைச் சமர்ப்பித்து வழிபட்டால் சனியின் தாக்கம் குறையும்.
இத்திருக்கோவில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
இதேபோல், தஞ்சை திருவையாறு ஐயானரப்பன் கோவிலில் அருள்பாலிக்கிறார் இரட்டைப்பிள்ளையார். இவர் சன்னதிமுன் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம்.
திருமணமாகாத பெண்கள் சந்தனாபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும். கணவன்-மனைவி ஒற்றுமை பலப்பட சங்கடஹர சதுர்த்தியில் அருகம்புல் மாலை அணிவித்து, மோதகங்கள் படைத்து வழிபட்டால், குடும்பத்தில் சுபகாரியங்கள் தங்கு தடையின்றி நிறைவேறும்.
மேலும், ஸ்ரீரங்கத்திற்கு அருகில் உள்ள உத்தமர் கோவில், திருச்சி உய்யகொண்டான் திருமலை சிவன் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், சேலம் மாவட்டம் ஆத்தூர் தலை வாசலை அடுத்த ஆறகலூரில் இருக்கும் கோவில், ஊட்டி பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள விநாயகர் கோவில் போன்ற இடங்களிலும் இரட்டை விநாயகர் சந்நிதி உள்ளது. இரட்டை விநாயகரை ஒரே சன்னதியில் வழிபட்டால் இரு மடங்கு பலன்கள் கிடைக்கும் என்பார்கள்.
- அயனாவரம், வில்லிவாக்கம், திருமுல்லைவாயல், திருவள்ளூர் வரை திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு திருமலைக்கு சென்றடைகிறது.
- வருகிற 21-ந்தேதி திருக்குடைகள் திருமலையை சென்று அடைகிறது.
சென்னை:
திருமலை திருப்பதியில் நடக்கும் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருடசேவையின் போது, ஏழுமலையானுக்கு சாற்றுவதற்காக, தமிழக பக்தர்கள் சார்பில் 11 அழகிய வெண்பட்டு திருக்குடைகள் இந்து தர்மார்த்த சமிதி சார்பில் ஆண்டு தோறும் சமர்ப்பணம் செய்யப்பட்டு வருகிறது.
திருமலை திருப்பதி ஏழுமலையானுக்கு தமிழகத்தில் இருந்து ஆண்டுதோறும் 2 மங்கலப்பொருட்கள் சமர்ப்பிக்கப்படும். அதில் ஒன்று ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலை. மற்றொன்று 11 வெண் திருக்குடைகள்.
250 ஆண்டுகளுக்கும் மேலாக, சென்னையில் இருந்து திருக்குடைகள் ஊர்வலமாகச் எடுத்துச் செல்லப்படுகிறது.
அதன்படி ஏழுமலையான் கருடசேவைக்கு சென்னையில் இருந்து 11 வெண்பட்டு திருக்குடைகள் இன்று காலை சென்னை பூக்கடை சென்னகேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மக்கள் நலமும், வளமும் பெறவும், விவசாயம் செழிக்கவும், நீர்வளம் பெருகவும் சங்கல்பம் செய்யப்பட்டது.
அதன் பின் மதியம் 12 மணிக்கு திருக்குடைகள் ஊர்வலத்தை ரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் கோவில் மவுனகுரு பாலமுரு கனடிமை சுவாமிகள், கலவை கமலக்கண்ணியம்மன் கோவில் சச்சிதானந்தா சுவாமிகள் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்து தர்மார்த்த சமிதியின் நிர்வாக அறங்காவலர் எஸ்.வேதாந்தம், அறங்காவலர் ஆர்.ஆர். கோபால்ஜி ஆகியோர் கொடி அசைத்தனர். திருக்குடை ஊர்வலத்தை காண அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர். கோவிந்தா... கோவிந்தா என்ற பக்தி கோஷங்களுடன் திருக்குடை ஊர்வலம் புறப்பட்டு சென்றது.
என்.எஸ்.சி. போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக சென்று மாலை 4 மணிக்கு யானை கவுனி தாண்டுகிறது. பின்னர், யானைக்கவுனி காவல் நிலையம், பேசின் பிரிட்ஜ், யானைக்கவுனி பிரிட்ஜ் ரோடு வழியாக திருக்குடை ஊர்வலம் செல்கிறது. அயனாவரம், வில்லிவாக்கம், திருமுல்லைவாயல், திருவள்ளூர் வரை திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு திருமலைக்கு சென்றடைகிறது.
வருகிற 21-ந்தேதி திருக்குடைகள் திருமலையை சென்று அடைகிறது. அங்கு ஏழுமலையான் கோவில் மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஏழுமலையானுக்கு வஸ்திரம், மங்கலப்பொருட்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படுகிறது.
- நாளை விநாயகர் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.
- சிறப்பு மகா தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ராமநாதபுரம்:
விநாயகர் சதுர்த்தி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக உப்பூர் விநாயகர் கோவிலில் நாளை விநாயகர் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் அமைந்துள்ளது ஸ்ரீ வெயிலுகந்த விநாயகர் கோவில். ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட இந்த கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா மிகச்சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டின் விநாயகர் சதுர்த்தி விழாவானது கடந்த 10-ம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. திருவிழாவில் தினமும் விநாயகர் சிம்ம, மயில், யானை வாகனம் போன்ற வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதனிடையே திருவிழாவின் 6-வது நாளான நேற்று விநாயக பெருமானுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து சிறப்பு மகா தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து இரவு ரிஷப வாகனத்தில் விநாயகா் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகின்றது. 18-ந் தேதி (திங்கட்கிழமை) தேரோட்டமும், 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தீர்த்தவாரி மற்றும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது.
- முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் நடக்கிறது.
- யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் லாந்தை கிராமத்தில் சந்தவழியான் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேக விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு முகூர்த்தக்கால் நடப்பட்டது.
இதையொட்டி நேற்று மாலை மங்கல இசை, எஜமான் சங்கல்பம், மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், கலாகர்ஷனம், முதல் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி நடந்தது. இன்று (சனிக்கிழமை) மங்கல இசை, சூரிய பூஜை, இரண்டாவது யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை மங்கல இசை கோமாதா பூஜை, நாடிசந்தானம், பரிஷாகுதி, உயிர் ஓட்டம், மகா பூர்ணாகுதி, மகா தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் நடக்கிறது.
சந்தவழியான் கோவில் விமான கோபுரங்கள் மற்றும் பரிவார தெய்வங்களான முனியப்ப சாமி, விநாயகர், பாதாள காளியம்மன், கருப்பணசாமி ஒச்சமை, நாச்சம்மை, நாகக்கன்னி, சோனை கருப்பர் ஆகிய சுவாமிகளுக்கும் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பும் செய்யப்படுகிறது. மேலும் முதுகுளத்தூர், ராமநாதபுரம், பரமக்குடி ஆகிய பகுதிகளில் இருந்து கும்பாபிஷேக விழாவுக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் அரசு உயர் அதிகாரிகள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர். இதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு போலீசார் மூலம் பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாட்டினை சந்தவழியான் சுவாமி கோயில் குடிமக்கள் செய்து வருகின்றனர்.
- சதுர்த்தி விழாவையொட்டி நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
- விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் நடைபெற்று வரும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
திருப்பத்தூர் அருகே உள்ளது பிள்ளையார்பட்டி. இங்கு பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. குடவரை கோவிலான இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும் விழாவையொட்டி தினந்தோறும் மூஷிக வாகனம், சிம்ம வாகனம், பூதவாகனம், கமல வாகனம், ரிஷப வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் கற்பகவிநாயகர் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் 6-ம் திருநாளான நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவையொட்டி நேற்று மாலை 4 மணி முதல் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. அதன் பின்னர் மாலை 5.30 மணிக்கு உற்சவர் வெள்ளி யானை வாகனத்திலும், சண்டிகேசுவரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி கோவில் கிழக்கு கோபுர வாசல் பகுதியில் தனித்தனியான சப்பரத்தில் எழுந்தருளினர். பின்னர் மூலவரிடம் இருந்து பூஜிக்கப்பட்ட தந்தத்தை கொண்டு வந்து உற்சவர் அருகே வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து மாலை 6.15 மணிக்கு சூரனை வதம் செய்ய புறப்பட்ட கற்பகவிநாயகர் கோவிலை சுற்றி வந்து தெப்பக்குளம் எதிரே அமைக்கப்பட்ட பந்தலில் காட்சியளித்து சூரனை வதம் செய்தார். முன்னதாக சூரனை வதம் செய்ய வந்த கற்பகவிநாயகரை அப்பகுதி பெண்கள் பூக்கோலமிட்டு வரவேற்றனர். சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நிறைவு பெற்ற பின்னர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நிகழ்ச்சி காட்டப்பட்டது. 7-ம் நாளான இன்று இரவு மயில் வாகனத்திலும், 8-ம் நாளான நாளை வெள்ளி குதிரை வாகனத்திலும் கற்பகவிநாயகர் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விழாவில் 9-ம் திருநாளான 18-ந்தேதி மாலை தேரோட்டமும் தொடர்ந்துமாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 19-ந்தேதி 10-ம் நாளன்று காலை தங்க மூஷிக வாகனத்தில் உற்சவர் கற்பகவிநாயகர் கோவில் திருக்குளத்தில் எழுந்தருளி அங்கு தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மதியம் மூலவருக்கு மோதகம் (கொளுக்கட்டை) படையல் செய்யும் நிகழ்ச்சியும், இரவு பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப்பாடு நிகழ்ச்சியுடன் சதுர்த்தி விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் கண்டவராயன்பட்டி தண்ணீர்மலை செட்டியார் மற்றும் காரைக்குடி சாமிநாதன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.
- விநாயகப் பெருமானுடைய சிறப்பினை உணர்த்த விநாயகர் புராணம் உள்ளது.
- முதலில் விநாயகர் வணக்கம் செய்யப்படுவது முக்கியமாகும்.
எந்த ஒரு வேலையைச் செய்யத் தொடங்கும் பொழுதும் முதலில் விநாயகர் வணக்கம் செய்யப்படுவது முக்கியமாகும். கரங்களை முட்டியாகப் பிடித்து மூன்று முறை தலையிலே குட்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தலையில் குட்டிக்கொள்ளும் பொழுது, யோக சாஸ்திரங்களின்படி, நம் தலையின் இரு பக்கமிருக்கும் அமிர்தமானது சுண்டிவிடப்பட்டு, சுரந்து சுழுமுனாநாடி வழியாக மூலாதாரத்தில் ஒளிரூபமாகவிருக்கும் விநாயகரைச் சென்றடைந்து அபிஷேகமாகின்ற பொழுது அவரின் அருள் கிடைக்கு மென்ற வெளிப்பாடாகவே செய்யப்படுகின்றது.
விநாயகப்பெருமானுடைய சிறப்பினை உணர்த்த, விநாயகர் புராணம் உள்ளது. சிவபெருமான் வாயிலாக தாம் உணர்ந்த விநாயக புராணத்தை பிரம்மன் வியாசருக்கு உபதேசிக்க, அவர் பிருகு முனிவருக்கு உபதேசிக்க அவர் இப்புராணத்தை 250 பிரிவுகளையுடைய உபாசனா காண்டம், லீலா காண்டம் என இரு காண்டங்களாக அமைத்துப் பன்னிரெண்டாயிரம் சுலோகங்களாக "ஸ்ரீ விநாயகர் புராணம்" பாடினார்.
விநாயகர் புராணத்தில் இரண்டாம் காண்டமாகிய லீலா காண்டத்தில் விநாயகப்பெருமான் எடுத்த பன்னிரண்டு அவதாரங்களும் கூறப்பட்டுள்ளன. அந்த அவதாரங்களில் அவர், வக்கிரதுண்டர், சிந்தாமணி விநாயகர், கஜநாதர், விக்கினராஜர், மயூரேசர், பாலசந்திரர், தூமகேது, கணேசர், கணபதி, மகோத்சுதர், முண்டி விநாயகர் மற்றும் வல்லபை கணேசர் என்ற பெயர்களோடு விளங்கியதாக அப்புராணம் கூறுகிறது.
பார்வதி தேவி மண்ணால் ஒரு உருவம் செய்து அதற்கு உயிர் கொடுத்து ஸ்ரீ விநாயகராக அவதாரம் செய்வித்தது ஆவணி மாதத்து சதுர்த்தி தினத்தில் தான். அந்த நாளையே ஸ்ரீ விநாயகர் ஜெயந்தியாக, விநாயகர் சதுர்த்தி விழாவாக கொண்டாடுகின்றோம்.
மண்ணில் அமைந்த விநாயகருக்கு அனைத்து அலங்காரங்களையும் செய்து, விநாயகருக்குப் பிடித்தமான கொழுக்கட்டை, அவல், பொரி முதலான அனைத்தும் அமைத்து வழிபாடு செய்தல் வேண்டும்.
விநாயக சதுர்த்தி வழிபாட்டினால் 1. தர்மம், 2. பொருள், 3. இன்பம், 4. சௌபாக்கியம், 5. கல்வி, 6. பெருந்தன்மை, 7. நல்வாழ்வுடன் கூடிய மோட்சம்,8. முக லக்ஷணம், 9. வீரம், 10. வெற்றி, 11. .எல்லோரிடமும் அன்பு பெறுதல், 12. நல்ல சந்ததி, 13. நல்ல குடும்பம், 14. நுண்ணறிவு, 15. நற்புகழ், 16. சோகம் இல்லாமை, 17. அசுபங்கள் அகலும், 18. வாக்கு சித்தி, 19. சாந்தம், 20. பில்லி சூனியம் நீங்குதல், 21. அடக்கம் ஆகிய 21 விதமான பேறுகள் கிடைக்கும்.
- பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது.
- விநாயகரை வழிபட்டு வர துன்பங்கள் விலகும்.
பிடித்து வைத்தால் பிள்ளையார்
பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது. கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் இறைவனின் திருவுருவங்களை செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. ஆனால் மண், பசுஞ்சாணம், மஞ்சள், மரக்கல், கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், முத்து, பவளம் போன்ற ரத்தினங்கள், தந்தம், வெள்ளெருக்கு வேர், அத்திமரம், பசு வெண்ணைய், அரைத்த சந்தனம், வெண்ணீறு, சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றால் விநாயகர் வடிவத்தை அமைக்கலாம். புற்றுமண், அரைத்தமாவு, சாளக்கிராமம் (நர்மதை நதிக்கல்) ஆகியவற்றை ஒரு கைப்பிடி பிடித்தாலே அது பிள்ளையாராகி விடும். இதனைத் தான் "பிடித்து வைத்தால் பிள்ளையார்" என்று வேடிக்கைப் பழமொழியாக சொல்கிறார்கள்.
மோதக தத்துவம்
அரிசி மாவுக்குள் பூரணம் வைத்து கொழுக்கட்டை தயாரித்து விநாயகருக்குப் படைக்கப்படுவது அனைவரும் அறிந்ததே. அரிசி மாவு சுவையற்றதாக உள்ளது. ஆனால் அதனுள் இருக்கும் பூரணம் சுவையானது. சுவையில்லாத அரிசி மாவு சுவையுள்ள வெல்லத்துடன் சேரும்போது எவ்வாறு விருப்பமுடன் உண்ணும் திண்பண்டமாக மாறுகிறதோ அதுபோல பக்தி கலந்த வாழ்க்கையே சுவையுள்ளதாக இருக்கும் என்று உணர்த்துகிறது இந்த மோதக தத்துவம்.
உருவ தத்துவம்
யானைத்தலையும், பெருவயிறும் மனித, உடலும் ஐந்து கைகளும் கூடிய ஒரு விந்தையான வடிவே பிள்ளையார் வடிவம். அவருக்கு இடையின் கீழ் மனித உடம்பு, இடைக்கு மேலே கழுத்து வரை தேவ உடம்பு, அதற்கு மேலோ விலங்கின் தலை. ஒரு கொம்பு ஆண்தன்மையையும், மற்றொரு கொம்புபெண் தன்மையையும் குறிக்கும். யானைத்தலை அஃறிணை, தெய்வ உடம்பு உயர்திணை. இவற்றை உற்று நோக்கி ஆராய்ந்தால் பிள்ளையார் தேவராய், மனிதராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர்திணையாய், அஃறிணையாய் விளங்குகிறார் என்ற உண்மை புலப்படும். உலகங்களைத் தன்னுள் அடக்கி இருக்கிறார் என்பதை குறித்திடவே பெருவயிறு அமைந்துள்ளது. துதிக்கை வலது புறம் திரும்பி இருப்பது(வலம்புரி) யோகத்தை குறிக்கிறது.
கடன்கள் தீர்க்கும் ஸ்ரீ ருண மோசன கணபதி
ருணம் என்றால் கடன் என்றுபொருள், மோசனம் என்றால் விடுபடச்செய்தல் என்று பொருளாகும். நம்மை கடன் தொல்லைகளில் இருந்து மீளச்செய்பவரே 'ருணமோசன கணபதி' கோவில்களுக்கு சென்று இம்மூன்று கடன்களையும் தீர்க்க முடியாதவர்கள் ருணமோசன கணபதியை வழிபாடு செய்து கடன்களை தீர்க்கலாம். அவருக்கான ருணஹரகணேச ஸ்தோத்ரத்தை பாராயணம் செய்வது கடன்களை தீர்க்க உதவும்.
நீரில் ஏன் கரைக்கிறார்கள்?
ஒரு சமயம் பார்வதிதேவி கங்கையில் நீராடியபோது தன் அழுக்கை திரட்டி பொம்மையாக்க, அது யானைத்தலையும் மனித உருக்கொண்டும் அமைந்தது. அதை அன்னை கங்கையில் எறிய பெரிய உருவத்துடன் விநாயகர் வெளிப்பட்டார் அப்போது பார்வதிதேவியும் கங்கையும் அவரை பிள்ளையாக ஏந்திக்கொண்டனர். இக்காரணத்தால் பார்வதி, கங்கை இருவருமே அவருக்கு அன்னை ஆனார்கள். இதனாலேயே சதுர்த்தி முடிந்த தும் பிளளையாரைக் கங்கையில் கரைக்கும் வழக்கம் ஏற்பட்டது.
தோப்புக்கரணம் போடும் முறை
விநாயகர் முன் நின்றவுடன் தலையில் குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் போடுவது நம் மரபு. ஏன் இப்படித் தோப்புக்கரணம் போடவேண்டும் என்பதற்க்கு புராணக்கதை ஒன்று உள்ளது. ஒருமுறை தவமுனிவரான அகத்தியர் கமண்டலமும் மையுமாக வந்துக் கொண்டிருந்தார். அப்போது காக உருவெடுத்து வந்த விநாயகர் அக்கமண்டல நீரை தட்டிவிட்டு ஓடி விட்டார். காகம் கவிழ்த்த கமண்டல நீர் ஆறாக ஒடியது. காகம் தட்டியதால் விரிந்து பரந்த நீராக ஒடியது என்பதால் "காவிரி" என்று பெயர் அந்நதிக்கு உண்டானது. அகத்தியர் தட்டிவிட்ட காகத்தை திரும்பி பார்த்தார். அதைக் காணவில்லை. காகம் நின்ற இடத்தில் கொழுகொழு என்று ஒரு சிறுவன் நின்றிருந்தான். அவர் தான் கணபதி. செய்த செயலுக்காக முனிவரைப் பார்த்து சிரித்தான்.
கோபமடைந்த அகத்தியர் அச்சிறுவன் தான் கமண்டல நீரைக் கவிழ்த்தவன் என்ற எண்ணத்தில் அவனது தலையில் குட்ட முயன்றார். ஆனால் சிறுவன் விநாயகப் பெருமானாக அகத்தியர் முன் நின்றார். குட்ட முயன்ற தவறுக்காக வருந்திய அகத்தியர் அப்படியே தன் தலையில் குட்டிக் கொண்டு, மன்னிக்குமாறு வேண்டினார். அது முதல் விநாயகருக்கு தோப்புகரணம் இடும் முறை உண்டானது.
5 தடவை குட்டுங்கள்
எந்த ஒரு விஷயத்துக்கும் ஆரம்பத்தில் `சுக்லாம்பரதம்' சொல்வோம். இதற்கு விநாயகர் அவர் எல்லாமுமாக இருக்கிறார் என்பது பொருள். அந்த சுலோகத்தை சொல்லி பாருங்கள் தெரியும். இந்த வார்த்தைகளில் ஒவ்வொன்றும் ஒரு குட்டாக ஐந்து தரம் நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்ள வேண்டும். தலையில் குட்டிக் கொள்வதால் மருத்துவ நலன்கனைப் பெறலாம். மனித உடலில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞேயம் மற்றும் சகஸ்ரம் என ஏழு சக்கரங்கள் உள்ளன. அவற்றில் சுவாச நடப்பு நடக்கிறது. மேலும் சிரசில் இருக்கும் சஹஸ்ரார கமலத்தில் உள்ள ஆனந்த அமுதம் நாடி நரம்புகளின் வழியே சுவாசத்தோடு பாய்வதற்சாகவே சிரசில் குட்டிக் கொள்கிறோம்.
கேது திசை நாயகன்
ஜாதக ரீதியாக கேது புத்தி, கேது திசை ஆகியவை நடைபெறும் ஜாதகர்கள் விநாயகரை வழிபட்டு வர துன்பங்கள் விலகும். இன்பம் பெருகும். திங்கட்கிழமை தோறும் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டால் நன்மை பெருகும்.
- திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு அபிஷேகம்.
- பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் குதிரை வாகனத்தில் பவனி.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, ஆவணி-30 (சனிக்கிழமை)
பிறை: வளர்பிறை.
திதி: பிரதமை காலை 9.32 மணி வரை பிறகு துவிதியை
நட்சத்திரம்: உத்திரம் காலை 8.41 மணி வரை பிறகு அஸ்தம்.
யோகம்: மரணயோகம்
ராகுகாலம்: காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை.
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சந்திர தரிசனம். திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருவலஞ்சுழி, தேவக்கோட்டை தலங்களில் விநாயகப்பெருமான் திருவீதி உலா. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் குதிரை வாகனத்தில் பவனி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை. அஹோபில் மடம் ஸ்ரீமத் 44-வது பட்டம் ஸ்ரீ அழகிய சிங்கர் திருநட்சத்திர வைபவம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-சிந்தனை
ரிஷபம்-நன்மை
மிதுனம்-பொறுப்பு
கடகம்-முயற்சி
சிம்மம்-பொறுமை
கன்னி-உழைப்பு
துலாம்-வெற்றி
விருச்சிகம்-ஊக்கம்
தனுசு- கடமை
மகரம்- நிம்மதி
கும்பம்-தெளிவு
மீனம்-நிறைவு






