என் மலர்
வழிபாடு
- நமது வேண்டுதலை எதிர்பார்க்காமல், நமக்கு வேண்டியதைத் தந்தருளும் வள்ளல்.
- கணபதிக்கு எருக்கம்பூ மாலை சாற்றி வணங்குவது விசேஷம்.
விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்கு உகந்த நாள். மாதந்தோறும் வளர்பிறை சதுர்த்தியில் சுக்ல சதுர்த்தி விரதமும், தேய்பிறை சதுர்த்தியில் சங்கடஹர சதுர்த்தி விரதமும் உண்டு என்கிறது புராணம். சதுர்த்தி என்றால் நான்கு. 4-வது புருஷார்த்தத்தை (மோட்சம் வீடுபேறு) எளிதாக எட்ட வைப்பவர் விநாயகர், உலக இன்பத்துடன் பேரின்பத்தையும் அளிக்கும் தெய்வம் அவர்.
அவருடைய கழுத்துக்குக் கீழே உள்ள பகுதி, உலக இன்பத்துக்கு ஆதாரமான பிரபஞ்சத்தை சுட்டிக் காட்டும். பிரபஞ்சத்துக்கு அழிவும் தோற்றமும் உண்டு. அப்படி தோன்றி மறைவதை, 'மாயை' என சாஸ்திரம் வர்ணிக்கிறது.
அவரது மஸ்தகம் பிரம்மம். இது எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருள் என்பதைக் குறிக்கும். மிகப் பெரியது எனும் பொருளுக்கு ஏற்ப, அவரின் யானை முகம் எல்லோருக்கும் புலப்படும் படியாகத் தென்படுகிறது என்று விவரிக்கிறது புராணம்
(கண்டாதோ மாயயா யுக்தம் மஸ்தகம் பிரம்மவாசகம்), விநாயகரின் கரத்தில் உள்ள கொழுக்கட்டைக்கு மோதகம் என்றும் பெயர் உண்டு. 'மோதக ஹஸ்தா' எனப் போற்றுகிறது ஒரு செய்யுள். மகிழ்ச்சியைத் தரும் என்பதே மோதகத்தின் தாத்பரியம். ஆக, மகிழ்ச்சியை (மோதகம்) கையில் ஏந்தித் தயாராக வைத்திருக்கிறார் விநாயகர்.
நமது வேண்டுதலை எதிர்பார்க்காமல், நமக்கு வேண்டியதைத் தந்தருளும் வள்ளல் அவர். கொழுக்கட்டைக்கு உள்ளே இருப்பது பூரணம்: அதாவது நிறைவு. அது இனிப்பாக இருக்கும். இனிப்பு எல்லா உயிரினங்களுக்கும் பிடிக்கும்' என்கிறது புராணம்.
பூரணத்தை மறைத்திருக்கும் மாவு வெள்ளை நிறம். அந்த நிறத்தின் குணம் சாத்விகம். மோதகம், உருண்டை வடிவில் இருக்கும் தானே?! அதைத் தன் கரத்தில் ஏந்தியிருப்பதன் மூலம், 'உலகம் அனைத்துக்கும் மகிழ்ச்சியை அளிப்பேன்' என விநாயகர் சொல்லாமல் சொல்கிறார் என்றால், அது மிகையல்ல!
பிள்ளையாருக்கு மோதகம் படைத்து வழிபடும் இல்லத்தில் நிறைவான மகிழ்ச்சியும் குறையாத செல்வமும் உண்டாகும். 21 உளுந்துமணி அளவு, புருஷனின் உருவம்' என குட்சும புருஷனைச் சுட்டிக் காட்டுகிறது வேதம். அது, ஆனைமுகனுக்கும் பொருந்தும். ஆகவே, 21 இலைகள், 21 பூக்கள், 21 அருகம்புல் ஆகியவற்றால் விநாயக சதுர்த்தி தினத்தில் சிறப்பாக பூஜிப்பார்கள். அவற்றில், எருக்க இலையும் எருக்கம்பூவும் அடங்கும்!
பரம்பொருள், தான் படைத்த இலைகளையும் பூக்களையும் ஏற்று மகிழ்கிறார். இயற்கை செல்வமான பொருட்களை, இயற்கைக்குப் படைத்து விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளும் அற்புதத் தருணம் விநாயக சதுர்த்தி. இந்த நாளில் கணபதிக்கு எருக்கம்பூ மாலை சாற்றி வணங்குவது விசேஷம்.
காரடையான் நோன்பு அடை, வருஷப் பிறப்பு வேப்பம்பூ பச்சடி, திருவாதிரைக்களி இப்படி புண்ணிய தினங்களில் சில பொருள்கள் சிறப்புப் பெறுவது போல், விநாயகர் சதுர்த்தி அன்று எருக்கம்பூ மாலை சிறப்பிடம் பெறுகிறது.
விநாயகர் எளிமையானவர். அவருக்கு மிக எளிதில் கிடைக்கும் எருக்கம் பூவைச் சமர்ப்பித்தாலே போதும், அளவில்லா மகிழ்ச்சி அடைந்து எல்லையில்லா இன்பத்தை வரமாகத் தந்தருள்வார். இது மட்டுமன்றி, எருக்கம்பூ சூரிய கிரகத்துக்கு உரியது. இது, சகலவிதமான எதிர்மறை சக்திகளை விலக்கும் வல்லமை கொண்டது. ஆகவே பிள்ளையாருக்கு எருக்கம் பூ சமர்ப்பித்தால் காரியத் தடைகள் நீங்கும். ஜாதகத்தில் சூரியனின் நிலையால் உண்டாகும் பாதிப்புகளும் தோஷமும் விலகும். சூரிய பகவானின் அனுக்ரஹம் வாய்ப்பதால், ஆத்ம பலமும் ஆரோக்கியமும் உண்டாகும்.
- விநாயகர் விரதத்தை பார்வதி தேவியே மேற்கொண்டிருக்கிறார்.
- விநாயகர் ஆதி பரம்பொருள். எல்லோருக்கும் மூத்தவர்.
விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் தருவார். அதனால்தான் அவர் எல்லோருக்கும் பொதுவாகவும், யாரும் சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார்.
விநாயகர் விரதத்தை பார்வதி தேவியே மேற்கொண்டிருக்கிறார். தன் கணவரை அவமதித்து யாகம் நடத்திய தந்தை தட்சனிடம் நியாயம் கேட்கப் போனாள் பார்வதி என்ற தாட்சாயணி. ஆனால், தட்சனோ மிகவும் கர்வம் பிடித்தவன். மருமகனை அவமானப் படுத்தியது போதாதென்று, மகளையும் கேலி பேசினான். இந்த அவமானத்தை பொறுத்துக் கொள்ள முடியாத தாட்சாயணி, தட்சன் வளர்த்து வைத்திருந்த யாக குண்டத்தில் அப்படியே பாய்ந்துவிட்டாள்.
அதன்பிறகு, பர்வதரா ஜனுக்கு மகளாகப் பிறந்து பார்வதி என்னும் பெயருடன் வளர்ந்து வந்தாள். சிறுவயதில் இருந்தே கயிலைநாதன்தான் தன் கணவன் என்று தீர்மானமாக இருந்தாள். அவளுடைய அந்த எண்ணம் பலிக்க வேண்டும் என்றால், அவள் விநாயகரை நினைத்து சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டு மென்று அவளுடைய தந்தையார் பர்வதராஜன் யோசனை சொன்னார்.
அவர் சொன்னபடியே, மண்ணால் ஒரு விநாயகர் விக்ரகத்தை உருவாக்கினாள் பார்வதி. கூடவே தங்கத்தாலும் ஓர் உருவம் செய்து இரண்டையும் பொற்கும்பம் ஒன்றின் பக்கத்தில் வைத்தாள். அந்த விக்ரகங்களுக்கு ஆகம விதிப்படி பூஜைகளை செய்தாள். ஆவணி மாத அமாவாசைக்கு அடுத்த சதுர்த்தியில் இப்படி பூஜையை ஆரம்பித்து, பவுர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி வரையில் தினமும் பூஜை செய்தாள்.
அதற்கு பிறகு மண் பிள்ளையாரை, மேள தாளத்தோடு ஊர்வலமாக எடுத்து சென்று நதியிலே இறக்கி விட்டாள். அந்த பதினைந்து நாட்களும் நியம நிஷ்டைகளை மீறாமல் இருந்த விரதத்தின் பலனாக, தான் ஆசைப்பட்டாற்போல கயிலைநாதனை கைப்பிடித்தாள்.
விநாயகர் ஆதி பரம்பொருள். எல்லோருக்கும் மூத்தவர். பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று எல்லோரையும் உருவாக்கியவர் அவர்தான். அவர் சாதிக்க வேண்டியது நிறைய இருந்ததால் அவர் பலவித அவதாரங்களை எடுத்தார். அந்த மாதிரியான ஒரு அவதாரம்தான் சிவன் மகனாக அவர் தோன்றியது. அற்ப தாவரமான புல்லையும் (அருகம்புல்) அவர் ஏற்றுக் கொள்கிறார்.
காட்டுப்பூவான எருக்கம் பூவைக் கூட அவர் மறுப்பதில்லை. விநாயகர் சதுர்த்தி தினத்தன்று விடியற் காலையிலேயே எழுந்து, சுத்தமாக குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். வாசலில் மாவிலைத் தோரணம் கட்டலாம். முடிந்தால், இரண்டு வாழைக் கன்றுகளையும் வாசலின் இருபுறங்களிலும் கட்டி வைக்கலாம். பிறகு, பூஜையறையில் சுத்தம் செய்த ஒரு மனையை வைக்க வேண்டும்.
அதன்மேல் ஒரு கோலம் போட்டு, அதன்மேல் ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும். இலையின் நுனி வடக்கு பார்த்ததுபோல இருப்பது நல்லது. இந்த இலையின் மேல் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும்.
பூமியில் இருந்து உருவான எதுவும் பூமிக்கே திரும்பப் போகவேண்டும் என்ற தத்துவம்தான் களிமண் பிள்ளையார். களிமண் மட்டும்தான் என்றில்லாமல், உலோகம், கற்சிலை விக்ர கங்களையும் வைக்கலாம். பத்ர புஷ்பம் எனப்படும் பல்வகைப் பூக்கள் கொண்ட கொத்து, எருக்கம்பூ மாலை, அருகம்புல், சாமந்தி, மல்லி என்று எத்தனை வகை பூக்களை வாங்க முடியுமோ, அவரவர் வசதிக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம். அதேபோல முடிந்த அளவுக்கு சில வகை பழங்களையும் வாங்கிக் கொள்ளலாம். இவை எல்லாவற்றையும் விட, விநாயகருக்கு மிகவும் பிடித்தமான மோதகத்தை செய்து கொள்ளலாம்.
பிள்ளையாருக்கு பூக்களால் அலங்காரம் செய்து விட்டு, பிறகு விநாயகர் பாடல்கள் எதை வேண்டுமானாலும் பாடலாம். அவ்வையார் தந்த விநாயகர் அகவல், காரிய சித்தி மாலை படிப்பது விசேஷமான பலன்களைத் தரும். பிள்ளையாருக்கு கொழுக்கட்டை மட்டுமில்லாமல், அவரவர் வசதிக்கேற்ப எள்ளுருண்டை, பாயாசம், வடை என்றும் நைவேத்யம் செய்யலாம்.
பால், தேன், வெல்லம், முந்திரி, அவல் என்று ஒவ்வொன்றிலும் சிறிதளவு எடுத்து ஒன்றாகக் கலந்து அதையும் நைவேத்யம் செய்யலாம். நிவேதனப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் 21 என்ற கணக்கில் சிலர் வைப்பார்கள். ஆனால், எண்ணிக்கை முக்கியமில்லை; ஈடுபாடுதான் முக்கியம். பிறகு கற்பூரம் காட்டி விரதத்தை முடிக்கலாம்.
இந்த விரதத்தை காலையில் இருந்தே உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் அனுஷ்டிப்பது மிகவும் விசேஷம். பூஜை நேரம் வரை பட்டினியாக இருப்பது சிறப்பு. சம்பிரதாயம் பார்க்கக் கூடியவர்கள் இந்த விநாயகர் சதுர்த்திக்குப் பிறகும் தொடர்ந்து விரதத்தை அனுசரிப்பார்கள். அப்படித் தொடர்ந்து, பவுர்ணமிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினத்தோடு விரதத்தை நிறைவு செய்வார்கள்.
- மேலப்புதுக்குடியில் தான் அருஞ்சுனைகாத்த அய்யனார் கோவில் உள்ளது.
- நான் இந்த இடத்தில் சுனையாக இருக்க விரும்புகிறேன்.
திருச்செந்தூர் அருகில் உள்ள ஊர் தான் மேலப்புதுக்குடி. இந்த பகுதியில் தான் அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் அமைந்துள்ளது. சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டத்தை தலைமையிடமாகக்கொண்டு சிங்கராஜன் என்ற மன்னன் இந்த பகுதியை ஆட்சி செய்து வந்தார்.
இந்த பகுதியில் ஒரு தடாகம் ஒன்று இருந்தது. இந்த தடாகத்தில் இருக்கக்கூடிய நீர் பன்னீர்போல் சுவைகொண்டதாக இருக்கும்.
ஒருதடவை கனகமணி என்ற பெண் இந்த தடாகத்துக்கு வந்து தண்ணீர் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு போய்க்கொண்டு இருந்தார். அவ்வாறு போகும்போது கல்தடுக்கி கீழே விழுந்தார். இப்படி கல் தட்டி கால் இடறி கீழே விழுந்ததால் இடுப்பில் வைத்துக்கொண்டிருந்த நீர் கீழே விழுந்தது.
கீழே விழுந்ததும் அங்கு தவம் செய்துகொண்டிருந்த முனிவரை நனைத்துவிட்டது. தண்ணீர் பட்டு முனிவரை நனைத்துவிட்டதால் அவர் கோபம் அடைந்து அந்த பெண்ணை பார்த்து உன் கையால் நீர் வாங்கி அருந்தினால் அவர்கள் உயிரிழந்துவிடுவார்கள். இந்த உண்மையை நீ வெளியே தெரிவித்தால் மறுகணமே மரணம் உன்னை தழுவும். இதையெல்லாம் விட நீ எவ்வகையில் இறந்தாலும் இறக்கும் தருவாயில் செய்யாத குற்றம் சுமத்தப்பட்டு தண்டனைக்காக மறிப்பாய் என்று சாபமிட்டார் முனிவர்.
உடனே கனகமணி முனிவரை பார்த்து அய்யனே அறியாமல் செய்த இந்த பிழைக்கு மாபெரும் தண்டனையா? என்று கேட்டாள்.
உடனே முனிவர் பெண்ணே நீ இறக்கும் தருணத்தில் சொல்வது எல்லாம் பலிக்கும். மரணத்திற்கு பிறகு நீ சொர்க்கத்திற்கு செல்வாய் என்று கூறினார்.
இப்படி பல நாட்கள் கடந்தது. அந்த தடாகத்துக்கு அருகில் கனி தரக்கூடிய மரம் ஒன்று இருந்தது. அந்த மரத்தில் இருந்து வரக்கூடிய கனியை அந்த இடத்தை ஆட்சி புரிந்து வந்த சிங்கராஜன் என்பவர் சாப்பிட்டு வந்தார். மரத்தில் இருக்கும் கனி மன்னன் வருகைக்காக அதே இடத்தில் இருக்கும். கனியை யாரும் எடுத்துவிடக்கூடாது என்பதற்காக சிங்கராஜனின் காவல்காரர்கள் 5-க்கும் மேற்பட்டோர் அங்கு காவல் காத்து நின்றனர்.
வழக்கம்போல் கனகமணியும் தண்ணீர் எடுத்து வருவதற்காக தடாகத்திற்கு வந்தார். கனகமணி தண்ணீர் எடுத்துக்கொண்டிருக்கும் போது மரத்தில் இருக்கும் கனி அவருடைய குடத்திற்குள் விழுந்துவிட்டது. அதை காவலாளிகள் கவனிக்கவில்லை.
கனகமணி அந்த குடத்துடன் வீட்டிற்கு வந்துகொண்டிருக்கும்போது 21 தேவாதி தேவதைகள் கனகமணிக்கு முன்னால் வந்து நாங்கள் அனைவரும் தாகத்துடன் இருக்கிறோம். பெண்ணே... தண்ணீர் கொடு என்று கேட்டார்கள். இதைக்கேட்டதும் கனகமணி அவர்களை ஆச்சரியத்துடன் பார்த்தாள்.
உடனே அந்த முனிவர் கொடுத்த சாபம் தான் அவளுக்கு நினைவுக்கு வந்தது. அவள் யாருக்காவது தண்ணீர் கொடுத்தால் அவர்கள் மரணம் அடைவார்கள். அந்த விஷயத்தை வெளியே சொன்னால் கனகமணியும் மறித்துவிடுவாள் என்று முனிவர் கொடுத்த சாபம் அவள் கண்முன் தோன்றியது.
அந்த சாபத்தை எண்ணி 21 தேவாதி தேவதைகளுக்கும் தண்ணீர் கொடுக்க மறுத்தாள் கனகமணி. உடனே அந்த 21 தேவாதி தேவதைகளும், கனகமணியிடம் ரொம்ப தாகமாக இருக்கிறது. தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் இறந்துவிடுவோம் என்று கெஞ்சி கேட்டனர். ஆனாலும் கனகமணி மனதை கல்லாக்கிக் கொண்டு தண்ணீர் கொடுக்க மறுத்துவிட்டாள்.
அதன்பிறகு கனகமணி அந்த 21 தேவாதி தேவர்களை பார்த்து ரொம்ப கோபத்துடன் நான் அனுதினம் வழிபடும் ஹரிஹர புத்திரன் மீது ஆணை எனக்கு வழிவிடுங்கள் என்று சொன்னாள். உடனே தேவாதி தேவதைகளும் அவளுக்கு வழிவிட்டனர். உடனே கனகமணியும் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.
அந்த சமயத்தில் சிங்கராஜ மன்னன் அந்த கனியை தேடி தடாகத்திற்கு வந்தார். தடாகத்திற்கு பக்கத்தில் இருக்கும் மரம் அருகே வந்ததும் காவலில் இருந்தவர்கள் மன்னா கனி இன்னும் விழவே இல்லை என்று கூறினர். இதை கேட்டதும் கோபம் கொண்ட மன்னன் நேரம் தவறிவிட்டது. கனி இன்னும் விழாமல் இருக்காது. கனி விழுந்துவிட்டது. கனியை உண்டது உங்களில் யார்? என்று கேட்டார்.
காவலாளிகள் அனைவரும் அரசனிடம் நாங்கள் யாரும் உண்ணவில்லை மன்னா... என்று கூறினார்கள் பயத்துடன். காவலாளிகளை பார்த்து அரசன் சரி எப்படியானாலும் இன்னும் ஒரு மணிநேரத்திற்குள் அந்த கனியை நான் உட்கொள்ள வேண்டும். ஊருக்குள் செல்லுஙள் ஒரு வீடு விடாமல் தேடுங்கள் பழத்தோடு வாருங்கள். இல்லையென்றால் உங்களில் ஒருவருக்கும் தலை தப்பாது என்று கூறி எச்சரித்தார்.
தலைவனின் கட்டளைக்கிணங்க காவலாளிகள் அனைவரும் ஊருக்குள் சென்று அனைவரது வீடுகளிலும் தேடினார்கள்.
கடைசியாக கனகமணி வீட்டுக்கு முன் வந்தனர். குடத்திற்குள் நீரோடு மன்னன் சாப்பிடும் கனியும் இருந்தது. அந்த பழத்தை எடுத்துவந்த காவலாளிகள், அந்த பெண்ணையும் இழுத்துவந்து மன்னரது முன்னால் நிறுத்தி மன்னா... நீங்கள் சாப்பிடக்கூடிய கனி இவளுடைய குடத்து நீருக்குள் இருக்கிறது என்று கூறினார்கள்.
அப்போது அங்கு வந்த தேவாதி தேவதைகள் அரசனிடம், அரசரே நாங்கள் கூறுவதையும் ஒரு தடவை கேளுங்க. குடத்தினுள் கனியினை இவள்தான் திருடி சென்றிருக்க வேண்டும். நாங்கள் ஒரு தடவை மிகுந்த தாகத்துடன் இவளிடம் சென்று எங்களுக்கு சிறிதளவு தண்ணீர் கொடு என்று கேட்டோம். ஆனால் அவள் எங்களுக்கு தரவே இல்லை.
அதனால் எங்களுக்கு இப்போதுதான் புரிகிறது. எதற்காக தரவில்லை என்று. நீங்கள் தினமும் சாப்பிடக்கூடிய அதிசய பழத்தை இவள் தான் திருடி இருக்கிறாள். அதனால் தான் இவள் எங்களுக்கு தண்ணீர் தரவில்லை என்று 21 தேவாதி தேவதைகளும் சொன்னார்கள்.
அப்போது பேச்சியம்மன் முதுமை பெண் வடிவத்தில் அங்கு வந்து அரசன் முன்னால் சென்று மன்னா... அந்த கனியை இந்த பெண் களவாடவில்லை. அந்த மரத்தின் பழம் தானாகவே இவளது குடத்து நீருக்குள் விழுந்துவிட்டது என்று கூறினாள். அந்த வயதான பெண் கூறுவதை கேட்காமல் மன்னன் உடனே கனகமணிக்கு மரண தண்டனையை நிறைவேற்றுங்கள் என்று உத்தரவிட்டார்.
மன்னனின் கட்டளையை ஏற்ற காவலாளிகள் கனகமணிக்கு மரண தண்டனையை நிறைவேற்றினார்கள். கனகமணி இறக்கும் தருவாயில் தான் வணங்கும் அய்யனே என்று ஹரிஹர புத்திரனை அழைத்தாள். கனகமணியின் பக்திக்கு மனமிறங்கி வந்தார் ஹரிஹரபுத்திரன். பெண்ணே கலங்காதே உன்னை உயிர்ப்பிக்கிறேன் என்று சொன்னார்.
இதைக்கேட்டதும் கனகமணி வேண்டாம். நான் இந்த பிறவியில் சாபம் வாங்கிவிட்டேன். அந்த சாபத்தோடு வாழ்வதை நான் விரும்பவில்லை. நான் இறக்கும் தருவாயில் நான் எண்ணியது நிறைவேறும் என்றார் முனிவர். எந்த தண்ணீருக்காக நான் சாபம் பெற்றேனோ அதுபோல் இனி தண்ணீருக்காக அலைந்து திரிந்து சாபம் பெறக்கூடாது என்பதற்காக நான் இந்த இடத்தில் சுனையாக இருக்க விரும்புகிறேன்.
இந்த சுனையை யாரும் அபகரிக்காமல், வேலியிட்டு தடுக்காமலும் இருக்க அய்யனே நீங்களே சுனையை காத்தருள வேண்டும் என்று கனகவல்லி ஹரிஹரபுத்திரனிடம் கேட்டார். உடனே ஹரிஹர புத்திரனும் அருமையான சுனையாக மாறும் உன்னை நான் காத்தருள்வேன் என்று உறுதியளித்தார். அதனால் தான் அருஞ்சுனைகாத்த அய்யனார் என்று அழைக்கப்படுகிறார்.
இந்த நிகழ்ச்சியை கண்ட மன்னன் தன்னுடைய தவறுக்கு வருந்தி உயிரை மாய்த்துக்கொண்டார். உடனே 21 தேவாதி தேவதைகளும் ஹரிஹரனிடம் வந்து மன்னிப்பு கேட்டனர். அதன்பிறகு அவர்களுக்கும் தன்னுடைய இருப்பிடத்தில் இடம் கொடுத்து தன் அருகில் வைத்துக்கொண்டார் அய்யனார்.
இங்குள்ள அய்யனார் பூரணபுஷ்கலையுடன் அமர்ந்த கோலத்தில் உள்ளார். பரிவார தெய்வங்களாக பேச்சியம்மன், பரமேஸ்வரி அம்மன், தளவாய் மாடன், வன்னியடி ராஜன் கருப்பசாமி, சுடலைமாடசுவாமி, இசக்கி அம்மன், பட்டானி சாமி, முன்னோடி முருகன் ஆகியோருடன் அருள்பாலித்து வருகிறார்கள்.
இங்குள்ள சுனைநீரில் குளித்தால் தீராத நோய்களும் தீரும் என்ற நம்பிக்கை இன்றளவும் மக்களிடம் உள்ளது. இங்குள்ள அருஞ்சுனை காத்த அய்யனாரை வழிபட்டால் கடன் தீர்ந்து துன்பம் அனைத்தும் மாறிவிடும் என்பது இங்கு வரும் பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையாக உள்ளது. துன்பங்களை நீக்கி அருமையான வாழ்க்கையை தரும் அருஞ்சுனைகாத்த அய்யனாரை நாம் ஒவ்வொருவரும் வணங்குவோம். அவர் அருள் பெறுவோம்.
- காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் வருகிற நவம்பர் மாதம் 14-ந் தேதி தொடங்கி, 17 நாட்கள் நடைபெறும்.
- திருவண்ணாமலை ஐயங்குளத்தில் 3 நாட்களுக்கு தீர்த்தவாரி நடைபெறும்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்திப் பெற்றது.
காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் வருகிற நவம்பர் மாதம் 14-ந் தேதி தொடங்கி, 17 நாட்கள் நடைபெறும்.
விழாவுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல லட்சம் பக்தர்கள் வருவார்கள்.
மூலவர் சன்னதி முன்பு உள்ளதங்க கொடிமரத்தில் வரும் நவம்பர் மாதம் 17-ந் தேதி கொடியேற்றம் நடைபெறுகிறது.
தொடர்ந்து 10 நாள் உற்சவம் ஆரம்பமாகும். 7-ம் நாளில் 'மகா தேரோட்டம்' நடைபெறும். விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் தனித்தனி தேர்களில் எழுந்தருளி மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.
ஒரே நாளில் 5 தேர்கள் பவனி என்பது கூடுதல் சிறப்பாகும். ஒவ்வொரு தேரும் நிலைக்கு வந்த பிறகு அடுத்த தேரின் புறப்பாடு இருக்கும் என்பதால் காலையில் தொடங்கும் மகாதேரோட்டம் இரவு வரை நடைபெறும்.
கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 'மலையே மகேசன்' என போற்றப்படும் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையின் உச்சியில் வரும் நவம்பர் மாதம் 26-ந்தேதி மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படும்.
ஜோதி வடிவில் அண்ணாமலையார் காட்சி கொடுப்பார். தொடர்ந்து, 11 நாட்களுக்கு மகா தீப தரிசனத்தை பக்தர்கள் காணலாம்.
இதற்காக, 3,500 கிலோ நெய் மற்றும் 1,000 மீட்டர் காடா துணி பயன்படுத்தப்படும்.
இதையடுத்து, திருவண்ணாமலை ஐயங்குளத்தில் 3 நாட்களுக்கு தீர்த்தவாரி நடைபெறும். அக்னி பிழம்பாக காட்சி தரும் அண்ணாமலையாரை குளிர்விக்க தீர்த்தவாரி நடைபெறுவதாக புராணங்கள் கூறுகின்றன.
கார்த்திகை தீப திருவிழாவின் பூர்வாங்க பணிகளை மேற்கொள்ள வரும் 21-ம் தேதி காலை 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் பந்தக்கால் முகூர்த்தம் நடைபெறவுள்ளது.
அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனை நடைபெறும்.
பின்னர், சம்பந்த விநாயகர் சன்னதி முன்பு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டு பந்தக்கால் முகூர்த்தம் நடைபெறவுள்ளது.
- பரணி- சந்தன அலங்காரம் செய்வித்து, தங்கக் கிரீடம் சாற்றலாம்.
- ஹஸ்தம்- குளிர்வூட்டும் சந்தன அலங்காரத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சாற்றவும்.
அவரவர் பிறந்த நட்சத்திர தினத்தன்று விநாயகருக்கு செய்ய வேண்டிய அலங்காரங்கள்:-
அஸ்வினி- வெள்ளிக்கவசம், தங்கக் கிரீடத்தால் அலங்கரித்து அருகம்புல் மாலை சாற்றலாம்.
பரணி- சந்தன அலங்காரம் செய்வித்து, தங்கக் கிரீடம் சாற்றலாம்.
கிருத்திகை- வெள்ளிக்கவசம், தங்கக் கிரீடத்தால் அலங்காரம் செய்விக்கலாம்.
ரோகினி- சந்தன அலங்காரத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை அணிவிக்கலாம்.
மிருகசீரிடம்- கஸ்தூரி மஞ்சள் அலங்காரத்தில் அழகு படுத்தி, அருகம்புல் மாலையைச் சாற்றலாம்.
திருவாதிரை- தங்கக் கிரீடம் அணிவித்து, அருகம்புல் மாலையால் அலங்கரிக்கலாம்.
புனர்பூசம்- சந்தன அலங்கா ரத்துடன் அருகம்புல் மாலையும் சாற்றலாம்.
பூசம்- தங்கக் கிரீடத்தால் அழகு படுத்தி, அருகம்புல் மாலையை அணிவிக்கலாம்.
ஆயில்யம்- அருகம்புல் மாலை போதும்.
மகம்- தங்கக் கிரீடம் அணிவித்து, திருநீறு அலங்காரத்தால் அழகு செய்து, அருகம்புல் மாலையை அணிவிக்கவும்.
பூரம்- கஸ்தூரி மஞ்சளால் அலங்கரித்து, தங்கக் கிரீடம் சாற்றவும்.
உத்திரம்- அழகு தரும் திருநீறு அலங்காரம் செய்வித்து, அருகம்புல் மாலை சாற்றவும்.
ஹஸ்தம்- குளிர்வூட்டும் சந்தன அலங்காரத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சாற்றவும்.
சித்திரை- வெள்ளிக்கவசம் அணிவித்து, அருகம்புல் மாலையால் அலங்கரிக்கவும்.
சுவாதி- தங்கக் கிரீடம் அணிவித்து அழகு பார்ப்பதுடன், அருகம்புல் மாலையும் சாற்றலாம்.
விசாகம்- திருநீறு அலங்காரம் போதும்.
அனுஷம்- கஸ்தூரி, மஞ்சள் அலங்காரம், தங்கக் கிரீடம், அருகம்புல் மாலை, ரோஜா மாலை சாற்றலாம்.
கேட்டை- தங்கக்கிரீடத்தால் அழகுபடுத்தி திருநீறு அலங்காரம் செய்வதுடன் அருகம்பு-ல் மாலையும் சாற்றவும்.
மூலம்- சந்தன அலங்காரமும், அருகம்புல் மாலை சாற்றலுமே போதுமானது.
பூராடம்- தங்கக்கிரீடம் அணிவித்து, திருநீறு அலங்காரத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சாற்றுங்கள்.
உத்திராடம்- அருகம்புல் மாலையே போதும்.
திருவோணம்- சுவர்ணத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சாற்றவும்.
அவிட்டம்- வெள்ளிக்கவசம் சார்த்தி, மலர் அலங்காரம் செய்வித்தால் போதும்.
சதயம்- குங்கும அலங்காரத்தால் அலங்கரித்து, வெள்ளிக்கவசம் அணிவியுங்கள்.
பூரட்டாதி- தங்கக் கிரீடம் அணிவித்து, அருகம்புல் மாலையால் அலங்கரிக்கவும்.
உத்திரட்டாதி- ரோஜா மாலை அங்காரமே போதும்.
ரேவதி- மலர்களால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சாற்றி, வெள்ளிக்கவசம் அணிவிக்கவும்.
- அறுகம்புல் - அனைத்துப் பாக்கியங்களும் கிடைக்கும்.
- கரிசலாங்கண்ணி- இல்வாழ்க்கைக்கு தேவையானபொருள்
வீடுகளில் நாம் அவரவர் சக்திக்கு தக்கவாறு வழிபாடுகளை செய்யலாம். கோலம் போட்டமனையில் அச்சுமண் பிள்ளையாரை வாங்கி வந்து, அதனை மண்டபத்தில் சின்ன வாழைக்கன்று கட்டி, மாவிளை தோரணங்கள் கட்டி, மலர்களால் அலங்காரம் செய்வார்கள்.
பின்னர் மண் பிள்ளையாருக்கு சந்தனம், குங்குமம் இட்டு, எருகம்பூ மாலை, அருகம்புல் மாலை ஆகியவை அணிவித்து அலங்காரம் செய்வார்கள். விநாயகருக்கு மிகவும் பிரியமான பத்ரம், வன்னிபத்ரம், அருகம்புல் இவைகள் கொண்டு அர்ச்சனை செய்தால் அதற்கான பலன் ஏராளம் என சொல்லப்படுகிறது.
மேலும் 21 வகையான இலைகளால் அர்ச்சித்தல் சிறப்பு. அந்த இலைகளின் பெயர், அர்ச்சனை செய்தால் கிடைக்கும் பலன்கள் விவரம் வருமாறு:-
1) முல்லை- அறம்
2) கரிசலாங்கண்ணி- இல்வாழ்க்கைக்குத் தேவையானபொருள்
3) வில்வம்- இன்பம்; விரும்பியவை அனைத்தும்
4) அறுகம்புல் - அனைத்துப் பாக்கியங்களும்
5) இலந்தை -கல்வி
6) ஊமத்தை - பெருந்தன்மை
7) வன்னி - இவ்வுலகில் வாழும் காலத்திலும் சொர்க்கத்திலும் பல நன்மைகள்
8) நாயுருவி - முகப்பொலிவு, அழகு
9) கண்டங்கத்திரி - வீரம்
10) அரளி- வெற்றி
11) எருக்களம்- கருவில் உள்ள சிசுவுக்கு பாதுகாப்பு
12) மருதம் - குழந்தைப்பேறு
13) விஷ்ணுக்ராந்தி - நுண்ணறிவு
14) மாதுளை- பெரும்புகழ்
15) தேவதாரு - எதையும் தாங்கும் இதயம்
16) மருவு - இல்லற சுகம்
17) அரசு - உயர் பதவி, மதிப்பு
18) ஜாதி மல்லிகை - சொந்த வீடு, பூமி பாக்கியம்
19) தாழம் இலை - செல்வச்செழிப்பு
20) அகத்திக் கீரை - கடன் தொல்லையில் இருந்து விடுதலை
21) தவனம் - நல்ல கணவன்-மனைவி அமைதல்
இந்த 21 இலைகளைத் தவிர நெல்லி, மருக்கொழுந்து, நோச்சி, கரிசலாங்கண்ணி, மாவிலை, துளசி, பாசிப்பச்சை ஆகிய இலைகளாலும் விநாயகருக்கு அர்ச்சனை செய்யலாம். அர்ச்சனை செய்தபின் பலவிதமான கனிகள், முக்கியமாக நாவல் பழம், மாதுளம் பழம், கொய்யாப்பழம், விளாம்பழம் ஆகியவை நைவேத்யம் செய்ய வேண்டும். மேலும் பிள்ளையாருக்கு பாயாசம், வடை, அப்பம் ஆகியவைகளும் முக்கியமாக கொழுக்கட்டை விநாயகருக்கு பிடித்தமானது.
- விநாயகரை வணங்கும் மதத்திற்கு காணாபத்யம் என்று பெயர்.
- புத்தர்களும் ஜைனர்களும் கூட விநாயகருக்கு முக்கிய இடம் அளிக்கின்றனர்.
நம் கஷ்டங்களையும், வினைகளையும் தீர்த்து வைப்பவர் விநாயகப் பெருமான், அதனால் தான் விநாயகரை, ''வினை தீர்ப்பவர்' என்கிறோம். எந்த செயலை ஆரம்பிக்கும் முன் அவரைத் தொழுதுவிட்டு செய்தால் கையில் எடுத்த வேலை மங்கலகரமாய் முடியும் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை ஆகும். தொடங்கும் ஒவ்வொரு செயலுக்கும் இவருக்கே முதல் வழிபாடு என்ற மரபு பல காலமாக உள்ளது. எதனை எழுதுவதற்கு முன்பும் இவரை நினைத்து பிள்ளையார் சுழி போட்டு தான் எழுத தொடங்குவார்கள்.
பஞ்சாயதன பூஜையில் அதாவது சிவன் அம்பாள், விஷ்ணு, சூரியன், விநாயகர் என்பதில் முதலில் வருபவர் விநாயகர். விநாயகரை வணங்கும் மதத்திற்கு காணாபத்யம் என்று பெயர். இதனை பின்பற்றுபவர்கள் விநாயகரை உலகினை படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலையும் செய்பவராகவும் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று மூன்று வடிவங்களிலும் இவர் விளங்குபவராகவும் கருதுகின்றனர்.
பிரம்மாவை வர்த்த புராணத்தில் விநாயகரே தான் ஸ்ரீகிருஷ்ணன் என்று சொல்லப்படுகிறது. எனவே இவர் வைணவர்களாலும் வணங்கப்படுகிறார். அவர்கள் இவருக்கு அளிக்கும் பெயர் விஸ்வக்சேனர் என்பதாகும்.
புத்தர்களும் ஜைனர்களும் கூட விநாயகருக்கு முக்கிய இடம் அளிக்கின்றனர். விநாயகர் வழிபாடு இந்தியாவின் மட்டும் என்று இல்லாமல் தமிழிழம் நோபாள், திபெத், தாய்லாந்து, பெர்சியா, ஆப்கானிஸ்தான், மத்திய ஆசியா, என கடல் கடந்தும், சீனா, ஜப்பான், ஜாவா, பாலி, போர்னியா போன்ற அயல் நாடுகளிலும் பரவியுள்ளது.
மத்திய அமெரிக்காவிலும், மெக்சிகோவிலும் கண்டு எடுக்கப்பட்ட 3,000 இந்து கடவுள் சிலைகளில் விநாயகர் சிலையும் அதிகமாக உள்ளன. மெக்சிகோவில் இவருக்கு உள்ள பெயர் 'வீரகோசா' அயல் நாடுகளில் வெகு பழமை காலத்திலேயே விநாயகர் வழிபாடு இருந்துள்ளது. ஈரான் நாட்டில் அரிசிதான் என்ற இடத்தில் பல வருடங்களுக்கு முன் யானை முகம் கொண்ட ஒரு தகடு அகழ் ஆராய்ச்சியின்போது கண்டு பிடிக்கப்பட்டது. ஆராய்ச்சியாளர்கள் இந்த தகட்டின் காலத்தை 1200 ஆண்டுகளுக்கு முந்தையது என நிர்ணயித்துள்ளனர்.
மிகவும் பழமையான ரிக் வேத வல்லுனர்கள் கடவுளர்களில் மிகச்சிறந்தவராக விநாயகரை கருதுகின்றனர். விநாயகரை குறித்த பல தோத்திரங்கள் வேதங்களில் காணப்படுகின்றன. தமிழ் ஈழத்திலும், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் விநாயகர் வழிபாட்டு புனித தலங்கள் ஏராளமாக உள்ளன.
இவரது உருவம் நம்மை புன்முறுவல் பூக்க வைப்பதுடன் சிந்திக்கவும் வைக்கிறது. வேழமுகம், அதற்குக் கீழே மனித உடல், மிகப்பெரிய தொந்தி, இடதுபக்க வாயில் ஆண்மையைக் குறிக்கும் நீண்ட தந்தம், வலதுபுறம் பெண் தன்மையைக் குறிக்கும் முறிந்த சிறிய தந்தம் ஆகியவை வியக்க வைக்கின்றன. பருத்த வயிறு பூதகணங்களை உள்ளடக்கியவர் என்பதைச் சுட்டுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி எனப்படுகிறது. இந்த வளர்பிறைச் சதுர்த்தி சிலசமயம் புரட்டாசியில் கூட நிகழும். இந்த வருடம் புரட்டாசி 1 (திங்கட்கிழமை 18.9.2023) சதுர்த்தி திதி நிகழ்கிறது. அன்றே சதுர்த்தி விரதமும், விநாயகர் சதுர்த்தியும் அனுஷ்டிக்க வேண்டும்.
ஒருமுறை பார்வதி தேவி நீராடச் செல்லும் போது காவலுக்கு யாருமில்லாததால் தான் குளிக்க வைத்திருந்த சந்தனக்குழம்பினால் ஓர் உருவம் உருவாக்கி அதற்கு உயிர் கொடுக்க அதுவே அவரது பிள்ளையாகிவிட்டது. எவரையும் உள்ளே அனுமதிக்கக்கூடாது என்ற தேவியின் ஆணைப்படி அப்பிள்ளை ஈசனையும் தடுத்ததால் சினமடைந்தவர் அதன் சிரசை துண்டித்துவிட்டார்.
அதைக் கண்ட தேவி கடும் கோபமுற்று, காளியாக மாறி எல்லாவற்றையும் அழிக்கலானார். அவரைச் சாந்தப்படுத்த ஈசனின் ஆணைப்படி தங்கள் பார்வையில் முதலில் தென்பட்ட யானையின் தலையைப் பூதகணங்கள் கொண்டுவர அதையே பிள்ளையின் முண்டத்தில் இருத்தி உயிர்ப்பித்தார்.
அன்னையும் சமாதானமுற்று 'பிள்ளையாரை' அணைத்துக்கொண்டார். இந்நிகழ்வு நடந்த தினமே பாத்ரபத வளர்பிறை சதுர்த்தியாகி அவரது ஜெயந்தி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அவருக்கு பிடித்த அவல், பொரி, கடலை கொழுக்கட்டை, கரும்பு போன்ற நிவேதனப் பொருள்களை ஏழை எளியோருக்கு தானம் செய்தால் நல்லது. விநாயகர் சதுர்த்தி அன்று அதிகாலையிலேயே எழுந்து, நற்சிந்தனையோடு நன்னீரில் குளித்துப் பூஜைக்கு வேண்டிய பொருள்களைச்சேகரிக்க வேண்டும்.
களிமண்ணில் செய்த பிள்ளையாரைப் பல்வேறு விதமான இலைகள், பூக்களில் (21 வகையான) அருகம் புல்லையும் இரண்டு இரண்டாகச் சேர்த்துப்பூஜிக்க எடுத்து வைத்து கொள்ளலாம்.
வீடுகளில் பிள்ளையார் அகவல், காப்பு, புராணம் போன்றவற்றைப்படித்து வரலாம். பிள்ளையார் வழிபாடு என்ற அத்தியாயத்தில் கூறியுள்ளபடி அவருக்கு உபச்சரங்களான ஆவாகனம், ஆசனம், ஸ்தாபனம், பாதபூஜை, நீர் அளித்தல், பால், தயிர், மோர் அளித்தல், பஞ்சாமிருதம், துணிகள், சந்தனம், குங்குமம், ஆபரணங்கள், மலர், அட்சதை, தூபம், தீபம், குடை, தாம்பூலம், சுற்றி வணங்குதல், தரையில் வீழ்ந்து வணங்குதல், சாமரம் வீசுதல், போன்ற சேவைகளைச் செய்தல் வேண்டும்.
வீட்டில் இது போல் செய்ய முடியாதவர்கள் கோவில் சென்று சிறப்பாக சேவை செய்தல், பாடல் கேட்டல், காப்பு, அகவல், படிப்பதும் நல்ல பயன் தரும். பூஜையில் வைத்த பிள்ளையார் சிலையை அடுத்த நாளோ ஓரிருநாட்களிலோ ஆற்றிலோ கடலிலோ கரைத்தல் வேண்டும்.
- ஆறுமுகமங்கலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆயிரத் தெண் விநாயகர் கோவில்.
- சுப்ரமணிய புஜங்கம் பாடியபின் நோய் வலி நீங்கப்பெற்றார்.
கடவுள் ரூபங்களில் முதன் முதலாக வணங்கப்பட்ட விநாயகர் என்றும் தமிழகத்தில் முதலில் எழுப்பப்பட்ட விநயாகர் கோவில் என்றும் சொல்லப்படுவது தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆயிரத் தெண் விநாயகர் கோவில்.
கி.மு. 2300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தென்று இந்த ஆலயத்தின் வரலாறு கூறுகிறது. கி.மு. 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கோமார வல்லபன் என்ற அரசன் நர்மதை நதிக்கரையில் இருந்து ஆயிரம் வேத பண்டிதர்களை அழைத்து இங்கு மிகப் பெரிய யாகம் ஒன்றை நடத்திட முடிவு செய்தான்.
ஆனால் அங்கு வந்தவர்களோ 999 பேர்தான் ஒரு பண்டிதர் குறைந்ததால் மன்னனின் மனதில் கவலை ஏற்பட்டது. பிரார்த்தனை செய்பவர் போல வடிவம் கொண்டு விநாயகரே பண்டிதராக வந்து யாகத்தை நிறைவுசெய்தார். இதனால் இங்குள்ள விநாயகர் ஆயிரத்தெண் விநாயகப் பெருமான் என்று அழைக்கப்படுகிறது.
யக்ஞம் முடிந்த உடன் ஆறுமுக மங்கலத்தையே கிராமதானமாக பெற்றுக்கொண்டு அங்கேயே தங்கிவிட்ட தாக வரலாற்று ஏடு தெரிவிக்கிறது.
தொடக்க காலத்தில் இந்த கிராமத்தின் தெற்கு கரையில் பல அந்தணர்கள் ஆயிரத்தெண் விநாயகரை ஸ்தாபித்து வழிபட்டார்கள். பின்னர் காளஹஸ்தீஸ்வரர் கல்யாணி தேவி சன்னதிகளோடு மகா மண்டபம் அமைக்கப்பட்டது. தேர், கொடிமரம், 10 நாட்கள் உற்சவங்களோடு திருவிழா காணும் முக்கிய விநாயகர் கோவில்களில் இதுவும் ஒன்றாக கூறப்படுகிறது.
5 நிலை ராஜகோபுரத்துடன் கூடிய இந்த கோவிலில் ஒரு சமயம் ஆதிசங்கரருக்கு வயிற்று வலி ஏற்பட்டபோது, இங்கே கணேச பஞ்சரத்ன கீர்த்தனம் பாடி பிறகு திருச்செந்தூருக்கு சென்று முருகன் சன்னதியில் சுப்ரமணிய புஜங்கம் பாடியபின் நோய் வலி நீங்கப்பெற்றார் என்பது இங்கே நடந்த முக்கிய செய்தி.
வாகன விபத்து, பயண பிரச்சினை, வழக்கு இழுபறி ஆகியவை சுமூகமாக முடிய இந்த விநாயகரை வேண்டினால் நடந்துவிடும் என்று நம்பும் கக்தர்கள் அப்படி நடந்த பிறகு 1008, 108 தேங்காய்களை உடைத்து 108 தீபங்களும் ஏற்றி வழிபடுகிறார்கள்.
சித்திரை மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும்போது 7-ம் திருநாளன்று ஸ்ரீநடராஜ மூர்த்தியுடன் பஞ்சமுக கணபதி திரு வீதி உலா வருவார். நெல்லையில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள ஏரலில் இருந்து அடுத்த 4 கி.மீட்டரில் வடக்கு திசையில் ஆறுமுக மங்கலத்தை அடையலாம்.
- விரதத்தை வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் தொடங்குதல் வேண்டும்.
- விநாயக விரதத்தை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் செய்தல் வேண்டும்.
ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தியை மிக பிரபலமாகவும் சிறப்பாகவும் கொண்டாடி வரும் நாம், அவர் குறித்த வெள்ளி விரதம், செவ்வாய் விரதம் சதுர்த்தி விரதம், குமார சஷ்டி விரதம், சங்கடஹர சதுர்த்தி, தூர்வா கணபதி விரதம், சித்தி விநாயக விரதம், தூர்வாஷ்டமி விரதம், விநாயக நவராத்திரி விரதம் ஆகியவற்றைக் கொண்டாடுவதும் ஏற்று செய்வதும் மிகக் குறைவே.
தர்ம சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட விரத நாட்களில் குறிப்பிட்டபடி விநாயகர் அருள் தருகின்ற இந்த விரதத்தை வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் தொடங்குதல் வேண்டும்.
விநாயக விரதத்தை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் செய்தல் வேண்டும். அப்படி இயலாதவர்கள் தமிழ் மாதத்தின் முதல் வெள்ளியோ அல்லது மூன்றாவது வெள்ளிக் கிழமையோ ஏற்றுச் செய்யலாம். ஒரு பலனைக் குறித்து முற்காலத்தில் ஆண்களும், பெண்களும் கடைப்பிடித்த இந்த விரதத்தால் பல குடும்பங்களில் கடன் தொல்லைகள் நீங்கி விரைவாகப் பலன் கிடைத்துள்ளது.
விநாயக விரதத்தை அனுஷ்டிப்பதால் மூன்று முக்கிய பலன்களைப் பெற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் படிப்படியாக முன்னேற்றத்தைக் காண முடியும். அதில் ஏற்பட்டுள்ள கடன் தொல்லைகளில் இருந்து மீண்டு வர முடியும்.
வேலை இல்லாதவர்களுக்கும் படிப்பை தொடங்குபவர்களுக்கும் விநாயகரே முதற்கடவுள். எனவே இந்த விநாயக விரதத்தால் கல்வி முன்னேற்றமும், நல்ல பணி அமர்வதும் சாத்தியமாகிறது. பிள்ளைகள் கலைகளில் சிறந்து விளங்கிட இந்த விரதத்தை பெண்களும் (தாய்) ஆண்களும் (பிள்ளைக்குத் தந்தை) கடைப் பிடிக்க வேண்டும்.
- விநாயகர் அனலாசுரனுடன் போரிட்டு கடைசியில் விழுங்கிவிட்டார்.
- அருகு ஊறிய மூலிகை நீரை அவர் மேல் ஊற்றி நீராட்டினார்கள்.
கணபதிக்கு பிரியமானது அருகம்புல் ஆகும். அதை உணர்த்தும் கதை வருமாறு:-
இந்திரன் முதலான தேவர்களை அப்படியே விழுங்கி விட வந்தான் எமனின் மகனான அனலாசுரன் என்ற அரக்கன். தேவர்கள் பயந்து ஓடிசென்று விநாயகரிடம் முறையிட்டார்கள். விநாயகர் அனலாசுரனுடன் போரிட்டு கடைசியில் அவனை அப்படியே எடுத்து விழுங்கி விட்டார். அதனால் விநாயகர் உடலும் பெரும் வெப்பத்தால் சூடானது.
விநாயகருக்கு ஏற்பட்ட அந்த வெப்பத்தை போக்க சித்திரன் தம் அமுத கிரணங்களால் அமுத மூற்றினான். சக்தியும் புத்தியும் தம் குளிர் மேனியால் ஒத்தடம் கொடுத்தார்கள். திருமால் தாமரை மலர்களால் அர்ச்சனை செய்தார். வருணன் மழை பொழிந்து விநாயகரை நன்னீரால் அபிஷேகம் செய்தான். இவ்வாறாக பலரும் பல விதமாக பணிவிடைகள் செய்தும் வெப்பம் அகலவில்லை.
கடைசியாக மகரிஷிகளும் முனிவர்களும் வந்து கூடி அருகம்புல்லை கட்டு கட்டாக அமைத்து விநாயகர் மேல் சாற்றினார்கள். அருகு ஊறிய மூலிகை நீரை அவர் மேல் ஊற்றி நீராட்டினார்கள். பின்பு இரண்டிரண்டு அருகாக எடுத்து விநாயகரை நாமாவளி கூறி அர்ச்சனை செய்தார்கள். அதனால் அவருக்கு அனலாசுரனை விழுங்கிய வெப்பம் தணிந்தது. அன்று முதல் அருகம்புல் விநாயகருக்குப் பிரியமானது.
அதனால் உலக முதல் பொருளுக்கு உலகின் முதல் பிறப்பான புல்லையே சாத்தி வழிபாடு செய்கிறார்கள். பல பிறவிகளைக் கடந்த ஆன்மாக்கள் மழைவழியே வந்து அருகம்புல்லின் நுனியில் துளிநீரில் பொருந்தி, பசு வயிற்றிற்கு சென்று, பின் எருவாகி, உரமாகி பயிர்பச்சைகளுக்குள் சென்று உணவாகி, மனிதர்கள் உண்ணும் உணவில் சென்று, ஆண்களின் உயிர்நிலையில் சென்றமர்ந்து உயிரணுவாகி, பின்பு பெண் கர்ப்பத்திற்குள் சென்று பிள்ளையாகி மனிதப்பிறவி பெறுகின்றது. இத்தகைய சிறப்புடையது அருகம்புல்.
ஓரிடத்தில் முளைத்து கொடிபோல் நீண்டு, ஆறு இடங்களில் கிளைத்து வேரூன்றி வாழும் தன்மையுள்ளது. "அருகு" இந்த தன்மையால் தான் அது "அருகு" என்றே அழைக்கப்பட்டது.
அதுபோல் மூலவாயுவானது மூலாதாரத்தில் இருந்து எழுந்து ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என ஆறு இடங்களில் படிப்படியாக பிரவேசித்து இறுதியாக சகஸ்ராரம் என்ற இடத்தில் சென்று முழுநிலையை அடைகின்றது. இதுவே குண்டலினி சக்தி. ஆறு இடங்களில் கிளைத்தெழும் குண்டலினி யோகத்தின் மூலக்கடவுள் விநாயகர் என்பதால், ஆறு இடங்களில் கிளைத்து எழும் அருகு அவருக்கு அணிவிக்கப்படுகிறது. இதனால் விநாயகரை அருகம்புல்லால் அர்ச்சிப்ப தால் அவர் யோக நிலையில் நம்மை முன்னேற செய்வார்.
- கணபதி வழிபாடு என்பது காணா பத்யம் என்றழைக்கப்படுகிறது.
- அமெரிக்காவில் விநாயகருக்காக விவேகானந்தர் கோவில் கட்டினார்.
1. மாதம் தோறும் பவுர்ணமி நான்காம் நாளான (நான்காம் பிறை) ஸ்ரீவிநாயகரை வழிபடுவோர் சங்கடம் நீங்கி, சந்தோஷம் அடைவர்.
2. விநாயகரின் ஐந்து கைகளில் உள்ளவை. துதிக்கையில் தண்ணீர்க்குடம். பின் இரண்டு கைகளில் அங்குசம் பாசம். முன் கைகளில் வலதுகையில் தந்தம், இடது கையில் மோதகம்.
3. விநாயகரை ஒரு முறை வலம் வருதல் வேண்டும்.
4. அமெரிக்காவில் விநாயகருக்காக விவேகானந்தர் கோவில் கட்டினார்.
5. மகாபாரதத்தை வியாசர் சொல்லச் சொல்ல விநாயகர் எழுதினார்.
6. விநாயகர் பயிர் தொழிலுக்குரிய தெய்வம் என்று சொல்லப்படுகின்றார். அதாவது பயிரை அழிக்கக் கூடிய பெருச்சாளியை தமது வாகனமாக்கி அடக்கி வைத்துள்ளார் என்பது இதன் பொருள்.
7. சிவபெருமான் உமாதேவியைத் தமது இடதுபாகத்தில் வைத்துள்ளார். இதனைப் போன்றே விநாயகர் வல்லபையைத் தமது இடதுபாகத்தில் வைத்துள்ளார்.
8. விநாயகரின் வாகனங்கள் மயில், காளை, சிங்கம், யானை, குதிரை, பூதம் முதலியனவாகும்.
9. வெள்ளிக்கிழமை தோறும் அருகம்புல், தேங்காய் ஆகியவற்றினைக் கொண்டு கணபதி ஹோமம் செய்து வந்தால், நீண்ட ஆயுளும், செல்வமும் கிடைக்கும்.
10. விநாயகரின் மந்திரம் ஓம் கம் கணபதியே நமஹ என்பதாகும். காலை மாலை 108 தடவை இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் சகல நன்மைகளும் உண்டாகும்.
11. பஞ்சபூதத் தொடர்பு உடையவர் விநாயகர். இவர் அரச மரத்தடியில் ஆகாய வடிவாகவும், வாதநாராயண மரத்தடியில் வாயு வடிவமாகவும், நெல்லி மரத்தடியில் நீர் வடிவமாகவும், ஆல மரத்தடியில் மண்வடிவமாகவும் விளங்குகின்றார்.
12. விநாயகப் பெருமான் பிரணவம் ஆகிய ஓங்கார மந்திர சொரூபமாய் விளங்குபவர்.
13. இப்பூவுலகில் விநாயகரின் பரிபூரண அருளைப் பெற்று வாழ்ந்தவர் புருசுண்டி என்ற முனிவர். இவர் விநாயகரைப் போல் துதிக்கையுடன் கூடிய தோற்றத்தில் காணப்பட்டார்.
14. விநாயகர் உருவத்தில் எல்லா கடவுள்களும் உள்ளனர். நாபி - பிரம்ம உருவம், முகம் - விஷ்ணு, கண் - சிவரூபம், இடப்பாகம்- சக்தி, வலப்பாகம் - சூரிய ரூபம் என்று கருதப்படுகிறது.
15. விநாயகருக்கு தேங்காய் எண்ணை காப்புதான் மிகவும் பிரியமானது. விநாயகர் ஏற்காத இலை துளசி இலை.
16. பிள்ளையார் அழித்த அசுரர்கள் 1) அபிஜயன். 2) ஜ்வாலாமுகன். 3) துராசாரன். 4) சிந்து. 5) கிருத்திராசுரன் (6) குரோசுரன். 7) பாலாசுரன்.
17. விநாயகப் பெருமானின் அருளைப் பெற்றோர் அவ்வையார், நம்பியாண்டார் நம்பி, சேந்தனார்.
18. சக்தியையும், சிவனையும் வேண்டிக்கொண்டு இடப்படுகின்ற குறியானது பிள்ளையார் சுழி எனப்படும்.
19. வடக்கே விநாயகர் சதுர்த்தியை உருவாக்கியவர் பாலகங்காதர திலகர்.
20. விநாயக ருத்ராட்சத்தின் மற்றொரு பெயர் எண்முக ருத்ராட்சம் ஆகும்.
21. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை உருவாக்கியது நரசிம்மவர்ம பல்லவன்.
22. பிள்ளையார் சுழியில் உள்ள ஐந்தெழுத்துத் தத்துவம் நமசிவாய என்பதாகும்.
23. விநாயகர் புகழ்பாடும் நூல்கள்: ஸ்ரீகச்சியப்ப முனிவர் அருளிய விநாயகக் கவசம், ஸ்ரீவிநாயக சப்தகம், ஷோடச கணபதி துதிகள், ஸ்ரீகணேச புஜங்கம், ஸ்ரீகணேச பஞ்ச ரத்னம், ஸ்ரீகணேச வைகறைத் துதி, அவ்வையார் அருளிய விநாயகர் அகவல், ஸ்ரீகணேஷாஷ்டகம்.
24. விநாயகர் என்றால் அவரைவிட மேலான ஒருவர் இல்லை என்று அர்த்தமாகும்.
25. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் ஆகிய மூவரும் போற்றி வணங்குகின்ற விநாயகர் புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் ஆவார்.
26. பிள்ளையாருக்கு ஞானக் கொழுந்து என்றொரு பெயருண்டு. ஞானத்தை அருள்வதற்காக விநாயகர் அரச மரத்தடியில் அமர்ந்துள்ளார்.
27. வைணவ கோவில்களில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் தும்பிக்கையாழ்வார் என்று அழைக்கப் படுகின்றார்.
28. கணபதிக்கும், சனீஸ்வரனுக்கும் பிரியமானது வன்னி மரம். எனவே, வன்னிமர இலைகளால் விநாயகப் பெருமானை வழிபட்டால் சனிபகவான் தொல்லைகள் நீங்கும்.
29. கணபதி வழிபாடு என்பது காணா பத்யம் என்றழைக்கப்படுகிறது. இது ஆதிசங்கரர் சிறப்பித்த வழிபாடு ஆகும்.
30. விநாயகப் பெருமான் சித்தி, புத்தி என்ற தம் மனைவியர் மூலம் உருவாக்கியவர் தான் சந்தோஷி மாதா ஆவார்.
- செவ்வாய்க்கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு.
- சதுர்த்தி விரதம் அன்று விநாயகர் அகவல், விநாயகர் காயத்ரி பாராயணம் செய்வது சிறப்பு.
விநாயகரை தினமும் எந்த நேரத்திலும் வணங்கலாம் என்றாலும் அவரை குறிப்பிட்ட நாட்களில் வணங்குவதன்மூலம் அவரின் அன்பைப் பெறலாம். வெள்ளிக்கிழமை, சதுர்த்தி திதி, மார்கழி மாத வளர்பிறை சஷ்டி ஆகிய நாட்களில் விரதமிருந்து அவரை வழிபட்டால் அனைத்துவிதமான பேறுகளையும் பெறலாம்.
விநாயகரை அவிட்ட நட்சத்திரத்தன்று நெல் பொரியால் அர்ச்சனை, அபிஷேகங்கள் செய்து வணங்குவதுடன் ஏழைப்பெண்களுக்கு முடிந்த வரை தானங்கள் செய்தால் திருமணத் தடைகள் நீங்கி நல்வாழ்க்கை அமையும். அவிட்டம் நட்சத்திரத்தன்று வன்னி மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகருக்கு பொரியை நைவேத்தியமாகப் படைத்து அதை குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் தொழிலில் நல்ல லாபம் அடையலாம்.
விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்து அந்தப் பாலை அருந்திவிட்டு எந்த ஒரு இடத்துக்கும் சென்றால் அங்கு உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடியும். சென்ற வேலையில் வெற்றி உண்டாகும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், இலுப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், பசு நெய் ஆகிய ஐந்துவகை எண்ணெய்களால் பஞ்சதீபம் ஏற்றி விநாயகரை வழிபட்டால் பெண்கள் ஆசைபட்டபடி இல்லற வாழ்வு அமையும்.
செய்யும் தொழில் செழிப்பாக இருக்கும். பூச நட்சத்திரத்தன்று விநாயகருக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபட்டால் விளைச்சல் பெருகி விவசாயம் தழைக்கும், உறவினர்கள் மனம்மகிழ்ந்து உதவி புரிவார்கள். மூல நட்சத்திரத்தன்று விநாயகருக்கு பால்கோவாவை நைவேத்தியமாகப் படைத்தால் பதவி மாற்றம், இடமாற்றம் போன்றவை நடக்கும்.
திருவாதிரை நட்சத்திரத்தன்று விநாயகருக்கு கோதுமையால் செய்யப்பட்ட அல்வாவை படைத்து வணங்கி வந்தால் அபாண்டமாக பழிசுமத்தப்பட்டு பதவியை இழந்தவர்கள், மீண்டும் இழந்த பதவியையும், மனநிம்மதியையும் பெறுவார்கள்.
செவ்வாய்க்கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி சனிப்பிரதோஷத்தைப்போல் மிகவும் சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த விரதத்தை பார்வதி தேவியில் இருந்து, பஞ்சபாண்டவர்கள் வரை கடைப்பிடித்துள்ளனர். சிவபெருமானும் இந்த விரதம் இருந்துள்ளார். விநாயகர் சதுர்த்தி விரத தினத்தன்று விநாயகர் அகவல், விநாயகர் காயத்ரி போன்றவற்றை பாராயணம் செய்து பயன்பெறலாம்.






