search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    அருகம்புல்லின் மகத்துவம்
    X

    அருகம்புல்லின் மகத்துவம்

    • விநாயகர் அனலாசுரனுடன் போரிட்டு கடைசியில் விழுங்கிவிட்டார்.
    • அருகு ஊறிய மூலிகை நீரை அவர் மேல் ஊற்றி நீராட்டினார்கள்.

    கணபதிக்கு பிரியமானது அருகம்புல் ஆகும். அதை உணர்த்தும் கதை வருமாறு:-

    இந்திரன் முதலான தேவர்களை அப்படியே விழுங்கி விட வந்தான் எமனின் மகனான அனலாசுரன் என்ற அரக்கன். தேவர்கள் பயந்து ஓடிசென்று விநாயகரிடம் முறையிட்டார்கள். விநாயகர் அனலாசுரனுடன் போரிட்டு கடைசியில் அவனை அப்படியே எடுத்து விழுங்கி விட்டார். அதனால் விநாயகர் உடலும் பெரும் வெப்பத்தால் சூடானது.

    விநாயகருக்கு ஏற்பட்ட அந்த வெப்பத்தை போக்க சித்திரன் தம் அமுத கிரணங்களால் அமுத மூற்றினான். சக்தியும் புத்தியும் தம் குளிர் மேனியால் ஒத்தடம் கொடுத்தார்கள். திருமால் தாமரை மலர்களால் அர்ச்சனை செய்தார். வருணன் மழை பொழிந்து விநாயகரை நன்னீரால் அபிஷேகம் செய்தான். இவ்வாறாக பலரும் பல விதமாக பணிவிடைகள் செய்தும் வெப்பம் அகலவில்லை.

    கடைசியாக மகரிஷிகளும் முனிவர்களும் வந்து கூடி அருகம்புல்லை கட்டு கட்டாக அமைத்து விநாயகர் மேல் சாற்றினார்கள். அருகு ஊறிய மூலிகை நீரை அவர் மேல் ஊற்றி நீராட்டினார்கள். பின்பு இரண்டிரண்டு அருகாக எடுத்து விநாயகரை நாமாவளி கூறி அர்ச்சனை செய்தார்கள். அதனால் அவருக்கு அனலாசுரனை விழுங்கிய வெப்பம் தணிந்தது. அன்று முதல் அருகம்புல் விநாயகருக்குப் பிரியமானது.

    அதனால் உலக முதல் பொருளுக்கு உலகின் முதல் பிறப்பான புல்லையே சாத்தி வழிபாடு செய்கிறார்கள். பல பிறவிகளைக் கடந்த ஆன்மாக்கள் மழைவழியே வந்து அருகம்புல்லின் நுனியில் துளிநீரில் பொருந்தி, பசு வயிற்றிற்கு சென்று, பின் எருவாகி, உரமாகி பயிர்பச்சைகளுக்குள் சென்று உணவாகி, மனிதர்கள் உண்ணும் உணவில் சென்று, ஆண்களின் உயிர்நிலையில் சென்றமர்ந்து உயிரணுவாகி, பின்பு பெண் கர்ப்பத்திற்குள் சென்று பிள்ளையாகி மனிதப்பிறவி பெறுகின்றது. இத்தகைய சிறப்புடையது அருகம்புல்.

    ஓரிடத்தில் முளைத்து கொடிபோல் நீண்டு, ஆறு இடங்களில் கிளைத்து வேரூன்றி வாழும் தன்மையுள்ளது. "அருகு" இந்த தன்மையால் தான் அது "அருகு" என்றே அழைக்கப்பட்டது.

    அதுபோல் மூலவாயுவானது மூலாதாரத்தில் இருந்து எழுந்து ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என ஆறு இடங்களில் படிப்படியாக பிரவேசித்து இறுதியாக சகஸ்ராரம் என்ற இடத்தில் சென்று முழுநிலையை அடைகின்றது. இதுவே குண்டலினி சக்தி. ஆறு இடங்களில் கிளைத்தெழும் குண்டலினி யோகத்தின் மூலக்கடவுள் விநாயகர் என்பதால், ஆறு இடங்களில் கிளைத்து எழும் அருகு அவருக்கு அணிவிக்கப்படுகிறது. இதனால் விநாயகரை அருகம்புல்லால் அர்ச்சிப்ப தால் அவர் யோக நிலையில் நம்மை முன்னேற செய்வார்.

    Next Story
    ×