என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சதுர்த்தி விரதம்"

    • விநாயகப் பெருமான் பிள்ளையார், விக்னேஸ்வரர், ஐங்கரன், கணபதி போன்ற பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
    • ஏழை, எளிய மக்களுக்கு வசதிக்கேற்றவாறு தானங்கள் செய்யலாம்.

    இந்து மதத்தில் முழுமுதற் கடவுளாக போற்றப்படுபவர் விநாயகப் பெருமான். ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகர் அவதரித்ததாக கூறப்படுகிறது. ஆண்டுதோறும் இந்நாளையே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம். விநாயகர் சதுர்த்தி விழாவானது இந்தியா முழுவதும் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.

    பொதுவாக எந்த கடவுளாக இருந்தாலும், அவர்களை வழிபடுவதற்கு கோவிலுக்கு செல்ல வேண்டும். ஆனால் விநாயகப் பெருமானை வழிபடுவதற்கு அந்த அவசியம் இல்லை. ஏனென்றால் ஊரில் உள்ள சாலையோரம், ஆற்றங்கரை, குளக்கரை, அரச மரத்தடி போன்ற எல்லா இடங்களிலும் எளிமையாக அருள்புரிபவர் விநாயகப் பெருமான். சிவபெருமானை வழிபடுவதை 'சைவம்' என்றும், விஷ்ணு பகவானை வழிபடுவதை 'வைணவம்' என்றும் சொல்வதை போல விநாயகப் பெருமானை வழிபடுவதை 'காணாபத்யம்' என்று அழைப்பார்கள்.

    விநாயகப் பெருமான் பிள்ளையார், விக்னேஸ்வரர், ஐங்கரன், கணபதி போன்ற பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். விநாயகர் என்றால் 'மேலான தலைவர்' என்றும், விக்னேஸ்வரர் என்றால் 'இடையூறுகளை நீக்குபவர்' என்றும், பிள்ளையார் என்றால் 'குழந்தை மனம் படைத்தவர்' என்றும், ஐங்கரன் என்றால் 'ஐந்து கரங்களை உடையவர்' என்றும், கணபதி என்றால் 'கணங்களுக்கு அதிபதி' என்றும் பொருள்படும். விநாயகப் பெருமான் அவதாரம் குறித்து பல்வேறு புராணக் கதைகள் உள்ளன.

    ஒரு சமயம் சிவபெருமான் கைலாயத்தில் இருந்து வெளியே சென்றிருந்தபோது, பார்வதி தேவி நீராடச் சென்றார். அப்போது அவர், தனக்கு காவல் காக்க ஒருவரும் இல்லையென்பதால், தனது உடலில் இருந்து வாசனை துகள்களை உருட்டி ஒரு உருவத்தை உருவாக்கினார். பின்பு தன்னுடைய அனுக்கிரகத்தால் அதற்கு உயிரூட்டினார். இவ்வாறு உருவம் பெற்றவரே விநாயகர். விநாயகரிடம், யாரையும் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கக் கூடாது என கட்டளையிட்டு நீராட சென்றார், பார்வதி தேவி.

    அச்சமயம் கைலாயத்திற்கு திரும்பிய சிவபெருமான் உள்ளே நுழைய முயன்றார். வந்திருப்பது தன் தந்தை என்பதை அறியாத விநாயகர், அவரை உள்ளே செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினார். இதனால் சிவபெருமானுக்கும், விநாயகருக்கும் சண்டை மூண்டது. இறுதியில் கோபம் கொண்ட சிவபெருமான், தனது சூலாயுதத்தால் விநாயகரின் தலையை கொய்தார்.

    அப்பொழுது பார்வதி தேவி நீராடி முடித்துவிட்டு வெளியே வந்தார். தன் மகனான விநாயகர், தலை இல்லாமல் கிடப்பதை கண்டு கடும் கோபமும், ஆவேசமும் கொண்டார். தான் உருவாக்கிய விநாயகரை சிவனே சிதைத்து விட்டதை அறிந்த பார்வதி தேவி, காளியாக உருவம் எடுத்து கண்ணில் படுவதையெல்லாம் அழிக்கத் தொடங்கினார்.

    காளியின் ஆவேசத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். காளியை சாந்தப்படுத்துவதற்கு முடிவு செய்த சிவன், தனது கணங்களை அழைத்து வட திசையாகச் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவராசியின் தலையைக் வெட்டி கொண்டு வருமாறு பணித்தார். அதன்படி கணங்கள் வடதிசை நோக்கிச் சென்ற பொழுது அவர்களுக்கு யானையே முதலில் தென்பட்டது.

    அவர்கள் யானையின் தலையை வெட்டி எடுத்துச் சென்று இறைவனிடம் கொடுத்தனர். சிவபெருமான் அத்தலையை வெட்டுண்டு கிடந்த விநாயகரின் உடலில் வைத்து உயிர் கொடுத்தார். இதைக் கண்டு சாந்தமடைந்த தேவி மனம் மகிழ்ந்து விநாயகரை கட்டி அணைத்துக் கொண்டார். பின்பு சிவன், விநாயகருக்கு 'கணேசன்' என நாமம் சூட்டித் தமது கணங்களுக்கு தலைவராக நியமித்தார் என நாரத புராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விநாயகர் சதுர்த்தி விரதம்

    விநாயகர் சதுர்த்தி விரதம் என்பது ஆவணி மாதம் சதுர்த்தியில் தொடங்கி புரட்டாசி மாதம் சுக்கிலபட்ச சதுர்த்தி வரை மேற்கொள்ளப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டை சுத்தம் செய்து வாசலில் மாவிலை தோரணங்கள் கட்டி அலங்கரிக்க வேண்டும். பின்பு பூஜையறையை மொழுகி கோலம் இட்டு அதன் நடுவில் வாழை இலையை விரித்து பச்சரிசியை பரப்ப வேண்டும். அந்த பச்சரிசியில் வலது மோதிர விரலால் பிள்ளையார் சுழி போட்டு 'ஓம்' என்று எழுதி, மண் பிள்ளையார் அல்லது பிள்ளையார் படத்தை வைக்க வேண்டும்.

    விநாயகரை அருகம்புல், எருக்கம்புல், விபூதி, சந்தனம், மலர்கள் போன்றவற்றால் அலங்கரிக்க வேண்டும். பிறகு விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, மோதகம், தேங்காய், வெல்லம் கலந்த மாவு உருண்டை, அப்பம், அவல், பொரி, சுண்டல், எள்ளுருண்டை போன்றவற்றை படைத்து சாம்பிராணி காட்டி சூடம் ஏற்ற வேண்டும். அப்போது விநாயகருக்கான அகவல், மந்திரம், கவசம் பாடி வழிபட வேண்டும். `சதுர்த்தி விரதத்தை முறையாக கடைப்பிடிக்க உள்ளேன். அதனால் விரதம் முடியும் வரை எந்த தடைகளும் வராமல் இருக்க அருள்புரிய வேண்டும்' என்று பிரார்த்திக்க வேண்டும்.

    மேலும் ஏழை, எளிய மக்களுக்கு வசதிக்கேற்றவாறு தானங்கள் செய்யலாம். அன்னதானம் வழங்கலாம். விநாயகர் விரதத்தை பக்தியுடன் கடைப்பிடிப்பவர்களுக்கு சிறந்த கல்வி அறிவும், தெளிந்த ஞானமும், செல்வ வளமும் கிடைக்கும். குடும்பத்தில் துன்பம் விலகி, இன்பம் பொங்கும்.

    • விரதத்தை வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் தொடங்குதல் வேண்டும்.
    • விநாயக விரதத்தை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் செய்தல் வேண்டும்.

    ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தியை மிக பிரபலமாகவும் சிறப்பாகவும் கொண்டாடி வரும் நாம், அவர் குறித்த வெள்ளி விரதம், செவ்வாய் விரதம் சதுர்த்தி விரதம், குமார சஷ்டி விரதம், சங்கடஹர சதுர்த்தி, தூர்வா கணபதி விரதம், சித்தி விநாயக விரதம், தூர்வாஷ்டமி விரதம், விநாயக நவராத்திரி விரதம் ஆகியவற்றைக் கொண்டாடுவதும் ஏற்று செய்வதும் மிகக் குறைவே.

    தர்ம சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட விரத நாட்களில் குறிப்பிட்டபடி விநாயகர் அருள் தருகின்ற இந்த விரதத்தை வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் தொடங்குதல் வேண்டும்.

    விநாயக விரதத்தை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் செய்தல் வேண்டும். அப்படி இயலாதவர்கள் தமிழ் மாதத்தின் முதல் வெள்ளியோ அல்லது மூன்றாவது வெள்ளிக் கிழமையோ ஏற்றுச் செய்யலாம். ஒரு பலனைக் குறித்து முற்காலத்தில் ஆண்களும், பெண்களும் கடைப்பிடித்த இந்த விரதத்தால் பல குடும்பங்களில் கடன் தொல்லைகள் நீங்கி விரைவாகப் பலன் கிடைத்துள்ளது.

    விநாயக விரதத்தை அனுஷ்டிப்பதால் மூன்று முக்கிய பலன்களைப் பெற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் படிப்படியாக முன்னேற்றத்தைக் காண முடியும். அதில் ஏற்பட்டுள்ள கடன் தொல்லைகளில் இருந்து மீண்டு வர முடியும்.

    வேலை இல்லாதவர்களுக்கும் படிப்பை தொடங்குபவர்களுக்கும் விநாயகரே முதற்கடவுள். எனவே இந்த விநாயக விரதத்தால் கல்வி முன்னேற்றமும், நல்ல பணி அமர்வதும் சாத்தியமாகிறது. பிள்ளைகள் கலைகளில் சிறந்து விளங்கிட இந்த விரதத்தை பெண்களும் (தாய்) ஆண்களும் (பிள்ளைக்குத் தந்தை) கடைப் பிடிக்க வேண்டும்.

    • விநாயகரை சிறப்பாக பூசிக்கும் நாள் ஆவணி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தி என்னும் நான்காம் நாள் ஆகும்.
    • விநாயக சதுர்த்தியில் விநாயகரை கோவிலுக்கு சென்று வழிபடலாம்.

    விநாயகரை சிறப்பாக பூசிக்கும் நாள் ஆவணி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தி என்னும் நான்காம் நாள் ஆகும்.

    அதற்கு விநாயகர் சதுர்த்தி என்று பெயராகும்.

    வைகாசி மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை தோறும் விரதம் இருப்பவர்களும் உண்டு.

    கார்த்திகை மாதத் தேய்பிறை பிரதமை முதல் மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி வரை 21 நாட்களும்

    விநாயகர் விரதம் கொண்டாடுவார்கள்.

    விநாயக சதுர்த்தியில் விநாயகரை கோவிலுக்கு சென்று வழிபடலாம்.

    வீட்டிலேயே பூஜை செய்ய விருப்பமுள்ளவர்கள் பூஜை அறையில் சாணம், சந்தனம், வெல்லம், மஞ்சள், புற்று மண்

    இவற்றில் ஏதேனும் ஒன்றில் விநாயகர் திருவுருவைப் பிடித்து வைத்துப் பூஜை செய்யலாம்.

    இவ்வுருவங்கள் பூஜை முடித்த பின்னால் நீரில் விடுதல் வேண்டும்.

    • விநாயகர் விரதத்தை நாற்பத்து ஐந்து நாட்கள் அனுசரிக்க வேண்டும்.
    • முதலில் கன்றுக்குட்டி சாணத்தால் பிள்ளையார் ஒன்று செய்து கொள்ள வேண்டும்.

    நாம் வாழ்க்கையில் சிறப்புடன் விளங்கவும், நினைத்த காரியம் நிறைவேற வேண்டும் என்பதற்காகவும்,

    சில பல விரதங்களை மேற்கொள்கிறோம்.

    அவற்றுள் ஒன்று விநாயகர் விரதம்.

    விநாயகர் விரதத்தை நாற்பத்து ஐந்து நாட்கள் அனுசரிக்க வேண்டும்.

    தினமும் காலையில் எழுந்து நீராடிய பின்பு பூஜை செய்ய வேண்டும்.

    பூஜைக்கு உரிய பொருட்கள்-நல்லெண்ணெய், பசும்பால், தயிர், பன்னீர், விபூதி, சந்தனம், குங்குமம், பூ முதலியவை.

    முதலில் கன்றுக்குட்டி சாணத்தால் பிள்ளையார் ஒன்று செய்து கொள்ள வேண்டும்.

    இதை பூஜை ஆரம்பிக்கும் அன்று செய்யக்கூடாது.

    இந்த ஒரே பிள்ளையாரை தான் நாற்பத்து ஐந்து தினங்களுக்கும் பூஜை செய்ய வேண்டும்.

    எனவே பத்திரமாகக் கையாள வேண்டும்.

    குளித்து முடித்து சுத்தமான உடை உடுத்தி விளக்கேற்றி வைத்து, பிள்ளையாரை ஒரு சிறு மேடையில் வைக்க வேண்டும்.

    பிறகு அபிஷேகத்தை தொடங்கலாம்.

    முதலில் நல்லெண்ணெய் அபிஷேகம் முறைப்படி செய்தல் வேண்டும்.

    பிறகு பால் அபிஷேகம், தயிர் அபிஷேகம், பழச்சாறு அபிஷேகம், பன்னீர் அபிஷேகம், சந்தன அபிஷேகம், விபூதி அபிஷேகம்

    எல்லாம் செய்து முடித்து பிள்ளையாருக்கு சந்தனம், குங்குமம் முதலியவற்றால் பொட்டு இட்டு பூ சூட்டவும்.

    தேங்காயை உடைத்து வைத்து ஏதாவது ஒரு நைவேத்தியம் செய்யவும்.

    எளிமையான முறையில் அமைய வேண்டும் என்று நினைத்தால் வாழைப்பழம், சர்க்கரை முதலியவற்றை

    நைவேத்தியத்திற்குப் பயன்படுத்தலாம்.

    பிறகு தீபாராதனை செய்யவும்.

    விநாயகர் கவசம், விநாயகர் துதிப்பாடல்கள் முதலியவற்றைப் பாராயணம் செய்தல் வேண்டும்.

    பாராயணத்தை முடித்த பின் மறுபடியும் கற்பூர ஆரத்தி செய்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

    காரியத்தில் தடங்கலோ, தாமதமோ ஏற்பட்டால் அதை நிவர்த்தி செய்வதற்காக விநாயகரை வழிபட,

    உடனே அக்காரியத்தில் விநாயகர் வெற்றியை நல்குவார்.

    இது மட்டுமல்ல, விநாயகருக்குள் சகல சக்திகளும் அடக்கம்.

    ஆதலால் அவர் சகல சவுபாக்கியங்களையும் தருவதுடன் முக்தியும் அருளுவார்.

    ×