என் மலர்tooltip icon

    வழிபாடு

    • சிறிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது.
    • மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன, கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 2-வது நாளான நேற்று காலை சிறிய சேஷ வாகன வீதிஉலா, இரவு ஹம்ச வாகன வீதிஉலா நடந்தது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை சிறிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி, சங்கு-சக்கரதாரியுடன் பத்ரிநாராயணர் அலங்காரத்தில் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    வாகன வீதிஉலாவுக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், காளைகள் ஊர்வலமாக அணிவகுத்துக் கொண்டு செல்லப்பட்டன. மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன, கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை ஹம்ச வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலில் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை சிம்ம வாகன வீதிஉலா, இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை முத்துப்பந்தல் வாகன வீதிஉலா நடக்கிறது.

    • ஸ்ரீகாளஹஸ்தியில் நவராத்திரி உற்சவம் நடந்து வருகிறது.
    • மீனாட்சி தேவி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    ஸ்ரீகாளஹஸ்தி:

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் பல்வேறு கோவில்களில் நவராத்திரி உற்சவம் நடந்து வருகிறது. விழாவின் 2-நாளான நேற்று ஞானப்பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவிலில் உற்சவர் அம்மன், பிரம்மசாரினிதேவி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    ஸ்ரீகாளஹஸ்தி கனகாசலம் மலைமீதுள்ள கனகதுர்க்கையம்மன் கோவிலில் உற்சவர் அம்மன் மீனாட்சி தேவி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    பங்காரம்மன் கோவிலில் உற்சவர் அம்மன் காயத்ரிதேவி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    முத்தியாலம்மன் கோவிலில் உற்சவர் அம்மன் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் கோவில்களுக்கு சென்று வழிபட்டனர்.

    • கொரோனாவுக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு முறையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
    • மாதாந்திர பூஜையிலும் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்களே அனுமதிக்கப்படுகிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் பல லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். மேலும் மாதந்தோறும் நடத்தப்படும் மாதாந்திர பூஜையிலும் ஆயிரக்கணக்கானோர் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்நிலையில் ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. வருகிற 22-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். முதல் நாளான இன்று வழக்கமான மற்றும் சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.

    நாளை முதல் தினமும் கணபதிஹோமம், உஷ பூஜை, புஷ்பாபிஷேகம், நெய் அபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் அனைத்தும் நடைபெறும். மேலும் படி பூஜை, கலசாபிஷேகம், களபாபிஷேகம் மற்றும் உதயாஸ்தமன பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

    இதனால் நாளை முதல் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். நாளை முதலே பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டாலும், இன்றே ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வரத் தொடங்கினர். பம்பை மற்றும் சன்னிதான பகுதியில் பக்தர்கள் திரண்டனர்.

    கொரோனாவுக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு முறையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய மாதாந்திர பூஜையிலும் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்களே அனுமதிக்கப்படுகிறார்கள்.

    பக்தர்கள் உடனடியாக முன்பதிவு செய்துகொள்ளும் வகையில் நிலக்கல் மற்றும் பம்பையில் முன்பதிவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு சாமி தரிசனத்துக்கு வரக்கூடிய பக்தர்கள் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு செல்லலாம்.

    சபரிமலை ஐயப்பன் மற்றும் மாளிகைபுரம் கோவில்களுக்கான மேல் சாந்திகள் ஆண்டுக்கு ஒரு முறை புதிதாக தேர்வு செய்யப்படுவார்கள். அடுத்த ஒரு வருடத்துக்கான புதிய மேல்சாந்திகள் தேர்வு நாளை(18-ந்தேதி) நடைபெறுகிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 17 பேரும், மாளிகைபுரம் கோவிலுக்கு 12 பேரும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் ஐயப்பன் கோவில் மற்றும் மாளிகைபுரம் கோவிலுக்கு தலா ஒருவர் குலுக்கல் முறையில் மேல்சாந்தியாக தேர்வு செய்யப்படுவார்.

    நாளை காலை 7.30 மணிக்கு உஷ பூஜைக்கு பிறகு புதிய மேல்சாந்திகள் தேர்வு நடைபெறுகிறது. அவர்கள் கார்த்திகை மாதம் 1-ந்தேதி மேல்சாந்தியாக பொறுப்பேற்றுக் கொள்வார்கள். மேல்சாந்தியாக தேர்வு செய்யப்படுபவர்கள் அடுத்த ஒரு வருடத்துக்கு சபரிமலை மற்றும் மாளிகைபுரம கோவில்களில் முக்கிய பூஜைகளை நடத்துவார்கள்.

    • 22-ந்தேதி துர்க்காஷ்டமி.
    • முத்தாரம்மன் அன்ன வாகனத்தில் கலை மகள் திருக்கோலக்காட்சி.

    17-ந்தேதி (செவ்வாய்)

    * குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் ரிஷப வாகனத்தில் பவனி.

    * மதுரை மீனாட்சி சிறப்பு அலங்காரத்துடன் கொலு மண்டபத்தில் காட்சி.

    * குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் சுவாமி புறப்பாடு.

    * கீழ்நோக்கு நாள்.

    18-ந்தேதி (புதன்)

    * முகூர்த்த நாள்.

    * திருநெல்வேலி கெட்வெல் ஆஞ்சநேயருக்கு முத்தங்கி சேவை.

    * குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் மயில் வாகனத்தில், பாலசுப்பிரமணிய கோலத்துடன் காட்சி.

    * சமநோக்கு நாள்.

    19-ந்தேதி (வியாழன்)

    * குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் காமதேனு வாகனத்தில் நவநீதகிருஷ்ணன் கோலத்தில் காட்சி.

    * காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி அலங்காரம்.

    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைர வேல் தரிசனம்.

    * சமநோக்கு நாள்.

    20-ந்தேதி (வெள்ளி)

    * முகூர்த்த நாள்.

    * குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில், மகிஷா சுரமர்த்தினி கோலத்தில் காட்சி.

    * திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவம்.

    * கீழ்நோக்கு நாள்.

    21-ந்தேதி (சனி)

    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் கோவிலில் கோவர்த்தனாம்பிகைக்கு, மகிஷாசுரமர்த்தினி அலங்காரம்.

    * குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் பூச்சப்பரத்தில் ஆனந்த நட ராஜர் கோலம்.

    * கீழ்நோக்கு நாள்.

    22-ந்தேதி (ஞாயிறு)

    * துர்க்காஷ்டமி

    * குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கமல வாகனத்தில், கஜலட்சுமி கோலத்துடன் காட்சி.

    * மதுரை மீனாட்சி கொலு மண்டபத்தில் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்துடன் காட்சியருளல்.

    * மேல்நோக்கு நாள்.

    23-ந்தேதி (திங்கள்)

    * சரஸ்வதி பூஜை.

    * குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் அன்ன வாகனத்தில் கலை மகள் திருக்கோலக்காட்சி.

    * உப்பிலியப்பன் கோவிலில் சீனிவாசப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    * மேல்நோக்கு நாள்.

    • குலசை முத்தாரம்மன் ரிஷப வாகனத்தில் பார்வதி கோலத்துடன் காட்சி.
    • சங்கரன்கோவில் கோமதியம்மன் ஸ்ரீ வெள்ளிப்பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, புரட்டாசி 30 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: திருதியை நள்ளிரவு 12.04 மணி வரை பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம்: விசாகம் இரவு 8.48 மணி வரை பிறகு அனுஷம்

    யோகம்: மரண, சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். சங்கரன்கோவில் கோமதியம்மன் ஸ்ரீ வெள்ளிப் பாவாடை தரிசனம். குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் ரிஷப வாகனத்தில் பார்வதி கோலத்துடன் காட்சி. மதுரை மீனாட்சியம்மன் சிறப்பு அலங்காரத்துடன் கொலு மண்டபத்தில் காட்சி. திருவட்டாறு சிவபெருமான் புறப்பாடு. திருமலைநம்பி திருநட்சத்திர வைபவம். வடபழனி, சிறுவாபுரி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பொறுமை

    ரிஷபம்-போட்டி

    மிதுனம்-ஆசை

    கடகம்-செலவு

    சிம்மம்-வரவு

    கன்னி-புகழ்

    துலாம்- விவேகம்

    விருச்சிகம்-விருத்தி

    தனுசு- நற்செயல்

    மகரம்-சோர்வு

    கும்பம்-ஆதாயம்

    மீனம்-வாழ்வு

    • ஆணவத்தை அடக்கி, ஆட்கொண்ட தலங்களே அட்ட வீரட்டான தலங்கள்
    • அனைத்துமே தமிழ்நாட்டில் அமைந்திருப்பது சிறப்பு.

    படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து செயல்களைப் புரியும் சிவபெருமான், தமது லீலைகளின் மூலம் பலருடைய ஆணவத்தை அடக்கி, பக்தர்களை காப்பாற்றி இருக்கிறார். குறிப்பாக பிரம்மா, அந்தகாசுரன், திரிபுர அசுரர்கள், தட்சன், ஜலந்தரன், மன்மதன், காலன், கஜமுகாசுரன் ஆகியோரின் ஆணவத்தை அடக்கி, ஆட்கொண்ட தலங்களே அட்ட வீரட்டான தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.... அட்ட வீரட்ட தலங்கள் அனைத்துமே தமிழ்நாட்டில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

     1.பிரமசிரக்கண்டீசுவரர் ஆலயம்- திருக்கண்டியூர்

    தஞ்சையில் இருந்து திருவையாறு செல்லும் சாலையில் திருவையாறுக்கு சுமார் 4 கி.மீ தொலைவில் இருக்கிறது திருக்கண்டியூர். மூலவர் பெயர் வீரட்டேசுவரர், அம்பிகை மங்கள நாயகி. இவரை வழிபட்டால் சகல தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம்.

     2. வீரட்டேசுவரர் ஆலயம்- திருக்கோவிலூர்

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில், தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்திருக்கிறது வீரட்டேசுவரர் ஆலயம். வீரட்டேசுவரர் சுயம்புவாக அருள்புரிகிறார். இறைவன் வீரட்டேசுவரர், அம்பிகை பெரியநாயகி, சிவானந்தவல்லி, அந்தகாசுரனை கீழே தள்ளி, அவன் மேல் சூலாயுதத்தை ஏவும் நிலையில் அந்தகாசுர சம்ஹாரமூர்த்தி காட்சிதருகிறார். அஷ்டமி அன்று இந்த தலத்துக்கு வந்து பைரவர் உருவில் அருள்புரியும் இறைவனை வழிபட்டால், கஷ்டங்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை.

     3. வீரட்டானேசுவரர் ஆலயம்- திருவதிகை

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து 2 கி.மீ தொலைவில் கெடிலம் ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது. இந்த தலத்தில் அருளும் இறைவன் திரிபுர அசுரர்களை சம்ஹாரம் செய்தார். மேலும், திருஞானசம்பந்தருக்கு திருநடனமாடியும், அப்பருக்கு ஏற்பட்ட சூலைநோயைத் தீர்த்தும் அருள் புரிந்திருக்கிறார். இறைவனின் திருப்பெயர் வீரட்டானேசுவரர், அம்பிகை பெரியநாயகி, திரிபுரசுந்தரி.

    சிவபெருமான் முப்புரங்களை அழித்த இந்த தலத்துக்கு வந்து வழிபட்டால், நம் மனதில் இருக்கும் தீய குணங்கள் நீங்குவதுடன், வயிறு தொடர்பான பிணிகளும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

     4.திருப்பறியலூர் வீரட்டானேசுவரர் ஆலயம்- கீழப்பரசலூர்

    காவிரியின் தென் கரையில் அமைந்திருக்கிறது இந்த திருக்கோயில். மயிலாடுதுறையில் இருந்து 14 கி.மீ தொலைவில் இருக்கிறது பரசலூர். திருப்பறியலூர் என்பது புராணப் பெயர். பரசலூர் என்றே இப்போது அழைக்கப்படுகிறது. சிவபெருமான் தட்சனின் கர்வத்தை அடக்கிய தலம். மூலவர் வீரட்டானேசுவரர், அம்பிகை இளங்கொம்பனையாள். இந்த தலத்துக்கு வந்து சுவாமிக்கும் அம்பிகைக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டால், மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

     5.வீரட்டானேசுவரர் ஆலயம்- திருவிற்குடி

    இந்த தலமும் காவிரியின் தென் கரையில் அமைந்திருக்கிறது. திருவாரூரிலிருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் உள்ளது திருவிற்குடி. இறைவன் வீரட்டானேசுவரர், அம்பிகை ஏலவார்க்குழலி, பரிமளநாயகி. ஜலந்தரன் என்ற அசுரனை சிவபெருமான் சம்ஹாரம் செய்த தலம் இது. முன்னோர் வழிபாட்டில் ஏற்பட்ட தோஷங்களை நீக்கும் பரிகாரத்தலமாக திகழ்கிறது திருவிற்குடி.

     6.வீரட்டானேசுவரர் ஆலயம்- திருவழுவூர்

    திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் மங்கை நல்லூருக்கு அருகில் அமைந்துள்ளது வழுவூர். இந்த தலத்தில் இறைவன் சுயம்புவாகத் தோன்றியவர். இந்த தலத்தில்தான் கஜசம்ஹார மூர்த்தியாக அருளும் சிவபெருமானின் திருவடியின் உட்புறத்தை தரிசிக்க முடியும். இறைவன் வீரட்டானேசுவரர், அம்பிகை இளங்கிளைநாயகி. அமாவாசை அன்று இந்த தலத்துக்கு வந்து, தீர்த்தக்குளத்தில் நீராடி இறைவனையும் அம்பிகையையும் வழிபட்டால், புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    7. வீரட்டேசுவரர் ஆலயம்- திருக்குறுக்கை

    மயிலாடுதுறையில் இருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் காவிரியின் வடகரையில் அமைந்திருக்கிறது திருக்குறுக்கை. இறைவன் வீரட்டானேசுவரர், அம்பிகை ஞானாம்பிகை. சிவபெருமான், மன்மதனை எரித்த தலம் இது. இந்த தலத்துக்கு வந்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் மாலை சார்த்தி, அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கி இனிய இல்லற வாழ்க்கை அமையும்.

     8. அமிர்தகடேசுவரர் ஆலயம்- திருக்கடையூர்

    மயிலாடுதுறை-தரங்கம்பாடி சாலையில் அமைந்திருக்கும் இந்த தலத்தில் அருளும் இறைவனின் திருப்பெயர் அமிர்தகடேசுவரர். அம்பிகை அபிராமி. தன் பக்தனைக் காப்பாற்றவும், யமதர்மனின் ஆணவத்தை அடக்கவும் வேண்டி, சிவபெருமான் யமனைக் காலால் உதைத்து சம்ஹாரம் செய்த தலம் இது. இந்த தலத்தில் நீண்ட ஆயுளும் நோயற்ற வாழ்க்கையும் பெற ஆயுஷ் ஹோமம் செய்துகொள்வது சிறப்பு. சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற வைபவங்கள் தினமும் நடைபெறும் தலம்.

    • பக்தர்கள் கொலு அரங்குகளை பார்வையிட்டு மீனாட்சி அம்மனை தரிசித்தனர்.
    • சகஸ்ரநாம பூஜை போன்ற விஷேச பூஜைகள் நடைபெறும்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா நேற்று தொடங்கியது. முதல் நாளில், மீனாட்சி அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் கொலு மண்டபத்தில் கொலு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை காண ஏராளமான பக்தர்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்திருந்தனர். இதனால் கோவில் உள் வளாகத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்கள் கொலு அரங்குகளை பார்வையிட்டு மீனாட்சி அம்மனை தரிசித்தனர்.

    நேற்று தொடங்கிய இந்த விழா வருகிற 24-ந்தேதி வரை நடக்கிறது. நவராத்திரி திருவிழா நாட்களில் தினசரி மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை மூலஸ்தான சன்னதியில் உள்ள மீனாட்சி அம்மனுக்கு திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் செய்து கல்பபூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை போன்ற விஷேச பூஜைகள் நடைபெறும். அந்த நேரத்தில் பக்தர்களுக்கு அர்ச்சனைகள், மூலஸ்தான தரிசனத்திற்கு அனுமதி கிடையாது. கொலு மண்டபத்தில் எழுந்தருளும் உற்சவ அம்மனுக்குதான் அர்ச்சனைகள் செய்யப்படும்.

    விழாவின் தொடர்ச்சியாக, கோலாட்ட அலங்காரமும், அர்ஜூனனுக்கு பாசுபதம் அருளியது, ஏகபாதமூர்த்தி, கால்மாறி ஆடிய படலம், தபசு காட்சி, ஊஞ்சல், சண்டேசா அனுக்கிரஹமூர்த்தி, மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், சிவபூஜை செய்யும் அலங்காரத்தில் அம்மன் கொலு வீற்றிருந்து அருள்பாலிப்பார். தினமும் சிறப்பு பூஜை நடக்கிறது.

    திருவிழா நடைபெறும் நாட்களில் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம், வீணை இசைக் கச்சேரி, கர்நாடக சங்கீதம், தோற்பாவை கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

    • 11 அம்மன் கோவில்களிலும் தசரா விழா.
    • கோவில் சப்பரங்கள் வீதி உலா.

    நெல்லை பாளையங்கோட்டையில் பிரசித்தி பெற்ற தசரா திருவிழா நேற்று முன்தினம் ஆயிரத்தம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதேபோல் 11 அம்மன் கோவில்களிலும் தசரா விழா சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.

    நேற்று முன்தினம் இரவு 11 கோவில்களில் இருந்து சப்பரங்களில் அம்மன் எழுந்தருளினார்கள். ஆயிரத்தம்மன், முத்தாரம்மன், உலகம்மன், தூத்துவாரி அம்மன், உச்சினி மாகாளி அம்மன் உள்பட 11 அம்மன் கோவில் சப்பரங்கள் வீதி உலா நள்ளிரவில் தொடங்கியது.

    நேற்று காலை பாளையங்கோட்டை ராமர் கோவில் மற்றும் ராஜகோபால சுவாமி கோவில்கள் முன்பு பக்தர்கள் தரிசனத்துக்காக ஒரே நேரத்தில் அனைத்து சப்பரங்களும் அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அங்கு பக்தர்கள் வரிசையாக வந்து வழிபட்டனர்.

    இதை தொடர்ந்து நவராத்திரி விழாவில் அம்மன் கொலு வீற்றிருக்கும் வைபவம் நேற்று தொடங்கியது. தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் கொலு இருக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வருகிற 25-ந்தேதி (புதன்கிழமை) இரவு 12 மணிக்கு பாளையங்கோட்டை எருமைக்கடா மைதானத்தில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

    • தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது.
    • பல்வேறு வேடங்கள் அணிந்து அம்மனை வழிபடுவது தனிச்சிறப்பு

    குலசேகரன்பட்டினம்:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக நேற்று தொடங்கியது. விழாவையொட்டி கடற்கரையில் குவிந்த பக்தர்கள் புனிதநீர் எடுத்து சென்று வழிபட்டனர்.

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவது தனிச்சிறப்பு வாய்ந்தது ஆகும்.

    கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் அலங்கரிக்கப்பட்ட யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து சுவாமி-அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    காலை 9.21 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது கூடியிருந்த திரளான பக்தர்கள் 'ஓம் காளி, ஜெய் காளி' என்று விண்ணதிர பக்தி கோஷங்களை முழங்கி வழிபட்டனர். தொடர்ந்து கொடிமர பீடத்துக்கு மஞ்சள், பால், தயிர், குங்குமம், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் கொடிமர பீடம் தர்ப்பை புற்களாலும், வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

     விழாவில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, உடன்குடி யூனியன் தலைவர் பாலசிங், உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் இளங்கோ, உடன்குடி பேரூராட்சி துணைத்தலைவர் மால் ராஜேஷ் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பல்வேறு நாட்களாக விரதம் மேற்கொண்ட பக்தர்களின் கைகளில் மஞ்சள் கயிற்றாலான காப்புகளை கோவில் அர்ச்சகர்கள் அணிவித்தனர். தசரா குழுவினர் மொத்தமாகவும் காப்புகளை வாங்கி சென்று, தங்களது ஊர்களில் விரதமிருக்கும் பக்தர்களுக்கு வழங்கினர்.

    காப்பு அணிந்த பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்து, விழா நிறைவில் கோவிலில் செலுத்துவார்கள். தசரா குழுவினரும் பல்வேறு ஊர்களுக்கு சென்று கலைநிகழ்ச்சி நடத்தி காணிக்கை வசூலித்து கோவிலில் செலுத்துவார்கள்.

    விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் செவ்வாடை அணிந்து திரளான பக்தர்கள் கார், வேன், பஸ்களில் கோவிலுக்கு வந்தனர். கடலில் புனித நீராடிய பக்தர்கள், தாங்கள் விரதம் இருக்கும் தசரா பிறையில் தெளிப்பதற்காக புனிதநீரை எடுத்து கோவிலுக்கு வந்து வழிபட்டனர். கோவிலில் பல மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர்.

    இரவில் அம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 2-ம் நாளான இன்று (திங்கட்கிழமை) இரவில் கற்பக விருட்ச வாகனத்தில் விசுவகர்மேசுவரர் திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.

    விழா நாட்களில் தினமும் காலை முதல் இரவு வரையிலும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகளும், மாலையில் சமய சொற்பொழிவு, பல்சுவை நிகழ்ச்சிகளும், இரவில் அம்மன் வீதி உலாவும் நடைபெறுகிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 10-ம் திருநாளான வருகிற 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு நடக்கிறது.

    விழாவையொட்டி பல்வேறு ஊர்களில் இருந்தும் குலசேகரன்பட்டினத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அன்புமணி, செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன், தக்கார் சங்கர் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • நான்குமாட வீதிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட அழகிய கிராமம்.
    • பாண்டிய மன்னன் ஒருவர் கன்னியாகுமரி பகவதியைத் தரிசிக்க வந்தான்.

    குமரி மாவட்டத்தில் பல்வேறு சிறப்புகள் இருப்பதைப்போல, பல வினோதங்களும் இருக்கின்றன. பெரும்பாலான மாவட்டங்களின் பெயரும், மாவட்டங்களின் தலைநகரங்களும் அந்தந்த மாவட்டங்களின் பெயரிலேயே அமைந்திருப்பதை அறிந்திருக்கிறோம். ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தின் பெயர் கன்னியாகுமரி என்று இருந்தாலும், மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவிலாக அமைந்திருக்கிறது.

    கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலாத்தலமாக அமைந்திருந்தாலும், மாவட்ட நிர்வாக அலுவலகம், மாவட்ட போலீஸ் அலுவலகம் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் நாகர்கோவில் நகரில்தான் அமைந்துள்ளன. எனவே மாவட்டத்தின் பெயர் குமரியாக இருந்தாலும் வெளிமாவட்டத்தினர் நாகர்கோவில் மாவட்டம் என்று சொல்லும் அளவுக்கு நாகர்கோவில் மாவட்டத்தின் தலைநகராக விளங்குகிறது.

    இதேபோல் மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலை உள்ளடக்கிய தாலுகாவின் பெயர் அகஸ்தீஸ்வரம் என அழைக்கப்படுகிறது. ஆனால் தாலுகா அலுவலகம் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த தாலுகா அலுவலகம் நாகர்கோவில் கேப் ரோட்டில் தற்போது மாவட்ட தீயணைப்பு அலுவலகம் செயல்பட்டு வரும் இடத்தில் அமைந்திருந்தது. மாவட்டத்தின் தலைநகராக இருக்கும் நாகர்கோவில் பெயரில் தாலுகா அமையாமல் கன்னியாகுமரி அருகே அமைந்துள்ள அகஸ்தீஸ்வரம் என்ற ஊரின் பெயரில் அமைந்திருப்பது வியப்பை தருகிறது.

    அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. திருவிதாங்கூர் சமஸ்தான ஆட்சிக்காலத்திலேயே மன்னர்களால் இந்த ஊருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மன்னர் ஆட்சிக்காலத்தில் இந்த ஊரைச் சேர்ந்த சிலர் முக்கிய பொறுப்புகளில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த ஊரில் பிறந்த பலர் படித்து பல்வேறு துறைகளில் மின்னிக் கொண்டிருக்கிறார்கள். மலையாள சினிமாவின் தந்தை என புகழப்படும் ஜே.சி.டேனியல் பிறந்த ஊர் அகஸ்தீஸ்வரம் ஆகும். மேலும் பல்வேறு அரசியல் பிரமுகர்களையும் இந்த ஊர் உருவாக்கி உள்ளது.

    இப்படி பல்வேறு பெருமைகளைக் கொண்ட அகஸ்தீஸ்வரம், மதுரை நகரைப்போன்று நான்குமாட வீதிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட அழகிய கிராமம் ஆகும். அகஸ்திய முனிவர் இந்த பகுதிக்கு வந்து தவம் செய்ததாகவும் புராணக்கதைகளில் கூறப்படுகிறது. அதனால் அங்கு ஒரு கோவிலும் அமைந்துள்ளது.

    நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் கொட்டாரம் என்னும் ஊரிலிருந்து அகஸ்தீஸ்வரம் செல்லும் சாலையில் வடுகன்பற்று என்ற சிறிய கிராமத்தில் இந்த கோவில் உள்ளது. நாகர்கோவிலிருந்து 16 கி.மீ. தொலைவு ஆகும்.

    பாண்டிய மன்னன் கட்டிய கோவில்

    கைலாயத்தில் பரமசிவனுக்கும், பார்வதிக்கும் திருமணம் நடந்தபோது பூலோகவாசிகள் கைலாயம் சென்றனர். அதனால் கைலாயம் சமமின்றி வடக்கே உயர்ந்தும், தெற்கே தாழ்ந்தும் அப்போது சிவன் அகஸ்தியரிடம் தெற்கே செல்வாய், பொதிகை மலையில் அமர்வாய் என்றார். அகத்தியரும் அப்படியே செய்தார். சிவனுக்குத் திருமணம் முடிந்து கைலாயத்தில் இருந்தவர்கள் எல்லோரும் சென்றபின் அகத்தியர் தனியே ஓர் இடத்திற்குச் சென்று தியானத்தில் அமர்ந்தார். அவர் தியானம் செய்த இடம் அகஸ்தீஸ்வரம் ஆயிற்று. எனவே இந்த கோவிலில் உள்ள சிவன் அகத்தியர் பெயரால் வழங்கப்படுகிறார்.

    மதுரை பாண்டிய மன்னன் ஒருவர் கன்னியாகுமரி பகவதியைத் தரிசிக்க வந்தான். தரிசனம் முடிந்தபின் பாண்டியன் கோவிலில் அமர்ந்து கொண்டிருந்தபோது அவனது குதிரை தறி கெட்டு ஓடியது. காவலர்கள் குதிரையைப் பிடிக்கச் சென்றனர். அரசன் வேறு ஒரு குதிரை மேல் ஏறி தவறிய குதிரையைக் காணச் சென்றான். ஒரு காட்டுப்பகுதியில் குதிரை நிற்பதைக் கண்டான். குதிரையின் வலது, இடது என இரு பக்கங்களிலும் நிழல் விழுவதைக் கண்டான். அந்த காட்சி அதிசயமாக இருந்தது. ஜோதிடரிடம் அதற்கு காரணம் கேட்டான் மன்னன். அவர்கள் அகத்தியருக்கு சிவனும், பார்வதியும் திருமண கோலத்தில் காட்சி கொடுத்த இடம் அது என்றார்கள். அரசனும் அந்த இடத்தின் பெருமை அறிந்து அங்கே ஒரு கோவில் கட்டினான். அந்த கோவில் வடுகன்பற்று கோவில் என்பதும் ஒரு கதை.

    பரிவார தெய்வமான அகஸ்தியர்

    இந்த கோவில் கி.பி. 12 -ம் நூற்றாண்டில் இருந்து 17-ம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் கட்டப்பட்டது என சொல்லப்படுகிறது. கி.பி.1127-ம் ஆண்டு கல்வெட்டு உடையவர்மன் ஸ்ரீ வல்லவதேவன் என்ற பாண்டிய மன்னன் இந்த கோவிலைக் கட்டியது பற்றிக் கூறுகிறது. அகஸ்தியரும் இந்த கோவிலின் பரிவார தெய்வங்களுள் ஒன்றாக வழிபடப்படுகிறார். வடுகன்பற்று பகுதிக்கு அகஸ்திய முனிவர் வந்து தவம் செய்ததின் காரணமாகவும், அதனால் அகஸ்தீஸ்வரமுடைய நயினார் கோவில் அமைந்திருப்பதாலும் வடுகன்பற்றுக்கு அருகில் உள்ள ஊரின் பெயர் அகஸ்தீஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது. அகஸ்தீஸ்வரம் தற்போது பேரூராட்சியாக இருந்து வருகிறது.

    • மாலை ஊஞ்சல் சேவை நடந்தது.
    • திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.

    சித்தூர்:

    சித்தூர் குருவப்பநாயுடு தெரு பெத்தவீதியில் உள்ள சுயம்பு அங்காள பரமேஸ்வரியம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம் தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மகாளய அமாவாசையையொட்டி மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது.

    நேற்று காலை மூலவர் அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், நெய், தேன், பஞ்சாமிர்தம், விபூதி, புஷ்பம் போன்ற நறுமணப் பொருட்களால் அபிஷேகம், சிறப்புப் பூஜைகள், ஆராதனை செய்யப்பட்டது. மாலை ஊஞ்சல் சேவை நடந்தது.

    அதன் பிறகு உற்சவர் அங்காள பரமேஸ்வரியம்மன், லட்சுமி அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) காலை மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, மஞ்சள் அலங்காரம் செய்யப்படுகிறது. மாலை உற்சவர் அம்மன், காசி விசாலாட்சி அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    • 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கியது.
    • இன்று இரவு ஹம்ச வாகன வீதிஉலா

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கியது. அதையொட்டி நேற்று காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை தங்க திருச்சி வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை பெரிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலைப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    வாகனவீதி உலாவுக்கு முன்னதாக கோலாட்டம் உள்பட கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

    பிரம்மோற்சவ விழாவின் 2-வது நாளான இன்று (திங்கட்கிழமை) காலை சிறிய சேஷ வாகன வீதி உலா, இரவு ஹம்ச வாகன வீதிஉலா நடக்கிறது.

    ×