என் மலர்
இந்தியா

சபரிமலையில் திரளும் பக்தர்கள்: சாமி தரிசனத்துக்கு நாளை முதல் அனுமதிக்கப்படுகிறார்கள்
- கொரோனாவுக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு முறையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
- மாதாந்திர பூஜையிலும் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்களே அனுமதிக்கப்படுகிறார்கள்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் பல லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். மேலும் மாதந்தோறும் நடத்தப்படும் மாதாந்திர பூஜையிலும் ஆயிரக்கணக்கானோர் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்நிலையில் ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. வருகிற 22-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். முதல் நாளான இன்று வழக்கமான மற்றும் சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.
நாளை முதல் தினமும் கணபதிஹோமம், உஷ பூஜை, புஷ்பாபிஷேகம், நெய் அபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் அனைத்தும் நடைபெறும். மேலும் படி பூஜை, கலசாபிஷேகம், களபாபிஷேகம் மற்றும் உதயாஸ்தமன பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.
இதனால் நாளை முதல் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். நாளை முதலே பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டாலும், இன்றே ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வரத் தொடங்கினர். பம்பை மற்றும் சன்னிதான பகுதியில் பக்தர்கள் திரண்டனர்.
கொரோனாவுக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு முறையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய மாதாந்திர பூஜையிலும் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்களே அனுமதிக்கப்படுகிறார்கள்.
பக்தர்கள் உடனடியாக முன்பதிவு செய்துகொள்ளும் வகையில் நிலக்கல் மற்றும் பம்பையில் முன்பதிவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு சாமி தரிசனத்துக்கு வரக்கூடிய பக்தர்கள் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு செல்லலாம்.
சபரிமலை ஐயப்பன் மற்றும் மாளிகைபுரம் கோவில்களுக்கான மேல் சாந்திகள் ஆண்டுக்கு ஒரு முறை புதிதாக தேர்வு செய்யப்படுவார்கள். அடுத்த ஒரு வருடத்துக்கான புதிய மேல்சாந்திகள் தேர்வு நாளை(18-ந்தேதி) நடைபெறுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 17 பேரும், மாளிகைபுரம் கோவிலுக்கு 12 பேரும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் ஐயப்பன் கோவில் மற்றும் மாளிகைபுரம் கோவிலுக்கு தலா ஒருவர் குலுக்கல் முறையில் மேல்சாந்தியாக தேர்வு செய்யப்படுவார்.
நாளை காலை 7.30 மணிக்கு உஷ பூஜைக்கு பிறகு புதிய மேல்சாந்திகள் தேர்வு நடைபெறுகிறது. அவர்கள் கார்த்திகை மாதம் 1-ந்தேதி மேல்சாந்தியாக பொறுப்பேற்றுக் கொள்வார்கள். மேல்சாந்தியாக தேர்வு செய்யப்படுபவர்கள் அடுத்த ஒரு வருடத்துக்கு சபரிமலை மற்றும் மாளிகைபுரம கோவில்களில் முக்கிய பூஜைகளை நடத்துவார்கள்.






