search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agathiyanainar Temple"

    • நான்குமாட வீதிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட அழகிய கிராமம்.
    • பாண்டிய மன்னன் ஒருவர் கன்னியாகுமரி பகவதியைத் தரிசிக்க வந்தான்.

    குமரி மாவட்டத்தில் பல்வேறு சிறப்புகள் இருப்பதைப்போல, பல வினோதங்களும் இருக்கின்றன. பெரும்பாலான மாவட்டங்களின் பெயரும், மாவட்டங்களின் தலைநகரங்களும் அந்தந்த மாவட்டங்களின் பெயரிலேயே அமைந்திருப்பதை அறிந்திருக்கிறோம். ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தின் பெயர் கன்னியாகுமரி என்று இருந்தாலும், மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவிலாக அமைந்திருக்கிறது.

    கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலாத்தலமாக அமைந்திருந்தாலும், மாவட்ட நிர்வாக அலுவலகம், மாவட்ட போலீஸ் அலுவலகம் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் நாகர்கோவில் நகரில்தான் அமைந்துள்ளன. எனவே மாவட்டத்தின் பெயர் குமரியாக இருந்தாலும் வெளிமாவட்டத்தினர் நாகர்கோவில் மாவட்டம் என்று சொல்லும் அளவுக்கு நாகர்கோவில் மாவட்டத்தின் தலைநகராக விளங்குகிறது.

    இதேபோல் மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலை உள்ளடக்கிய தாலுகாவின் பெயர் அகஸ்தீஸ்வரம் என அழைக்கப்படுகிறது. ஆனால் தாலுகா அலுவலகம் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த தாலுகா அலுவலகம் நாகர்கோவில் கேப் ரோட்டில் தற்போது மாவட்ட தீயணைப்பு அலுவலகம் செயல்பட்டு வரும் இடத்தில் அமைந்திருந்தது. மாவட்டத்தின் தலைநகராக இருக்கும் நாகர்கோவில் பெயரில் தாலுகா அமையாமல் கன்னியாகுமரி அருகே அமைந்துள்ள அகஸ்தீஸ்வரம் என்ற ஊரின் பெயரில் அமைந்திருப்பது வியப்பை தருகிறது.

    அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. திருவிதாங்கூர் சமஸ்தான ஆட்சிக்காலத்திலேயே மன்னர்களால் இந்த ஊருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மன்னர் ஆட்சிக்காலத்தில் இந்த ஊரைச் சேர்ந்த சிலர் முக்கிய பொறுப்புகளில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த ஊரில் பிறந்த பலர் படித்து பல்வேறு துறைகளில் மின்னிக் கொண்டிருக்கிறார்கள். மலையாள சினிமாவின் தந்தை என புகழப்படும் ஜே.சி.டேனியல் பிறந்த ஊர் அகஸ்தீஸ்வரம் ஆகும். மேலும் பல்வேறு அரசியல் பிரமுகர்களையும் இந்த ஊர் உருவாக்கி உள்ளது.

    இப்படி பல்வேறு பெருமைகளைக் கொண்ட அகஸ்தீஸ்வரம், மதுரை நகரைப்போன்று நான்குமாட வீதிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட அழகிய கிராமம் ஆகும். அகஸ்திய முனிவர் இந்த பகுதிக்கு வந்து தவம் செய்ததாகவும் புராணக்கதைகளில் கூறப்படுகிறது. அதனால் அங்கு ஒரு கோவிலும் அமைந்துள்ளது.

    நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் கொட்டாரம் என்னும் ஊரிலிருந்து அகஸ்தீஸ்வரம் செல்லும் சாலையில் வடுகன்பற்று என்ற சிறிய கிராமத்தில் இந்த கோவில் உள்ளது. நாகர்கோவிலிருந்து 16 கி.மீ. தொலைவு ஆகும்.

    பாண்டிய மன்னன் கட்டிய கோவில்

    கைலாயத்தில் பரமசிவனுக்கும், பார்வதிக்கும் திருமணம் நடந்தபோது பூலோகவாசிகள் கைலாயம் சென்றனர். அதனால் கைலாயம் சமமின்றி வடக்கே உயர்ந்தும், தெற்கே தாழ்ந்தும் அப்போது சிவன் அகஸ்தியரிடம் தெற்கே செல்வாய், பொதிகை மலையில் அமர்வாய் என்றார். அகத்தியரும் அப்படியே செய்தார். சிவனுக்குத் திருமணம் முடிந்து கைலாயத்தில் இருந்தவர்கள் எல்லோரும் சென்றபின் அகத்தியர் தனியே ஓர் இடத்திற்குச் சென்று தியானத்தில் அமர்ந்தார். அவர் தியானம் செய்த இடம் அகஸ்தீஸ்வரம் ஆயிற்று. எனவே இந்த கோவிலில் உள்ள சிவன் அகத்தியர் பெயரால் வழங்கப்படுகிறார்.

    மதுரை பாண்டிய மன்னன் ஒருவர் கன்னியாகுமரி பகவதியைத் தரிசிக்க வந்தான். தரிசனம் முடிந்தபின் பாண்டியன் கோவிலில் அமர்ந்து கொண்டிருந்தபோது அவனது குதிரை தறி கெட்டு ஓடியது. காவலர்கள் குதிரையைப் பிடிக்கச் சென்றனர். அரசன் வேறு ஒரு குதிரை மேல் ஏறி தவறிய குதிரையைக் காணச் சென்றான். ஒரு காட்டுப்பகுதியில் குதிரை நிற்பதைக் கண்டான். குதிரையின் வலது, இடது என இரு பக்கங்களிலும் நிழல் விழுவதைக் கண்டான். அந்த காட்சி அதிசயமாக இருந்தது. ஜோதிடரிடம் அதற்கு காரணம் கேட்டான் மன்னன். அவர்கள் அகத்தியருக்கு சிவனும், பார்வதியும் திருமண கோலத்தில் காட்சி கொடுத்த இடம் அது என்றார்கள். அரசனும் அந்த இடத்தின் பெருமை அறிந்து அங்கே ஒரு கோவில் கட்டினான். அந்த கோவில் வடுகன்பற்று கோவில் என்பதும் ஒரு கதை.

    பரிவார தெய்வமான அகஸ்தியர்

    இந்த கோவில் கி.பி. 12 -ம் நூற்றாண்டில் இருந்து 17-ம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் கட்டப்பட்டது என சொல்லப்படுகிறது. கி.பி.1127-ம் ஆண்டு கல்வெட்டு உடையவர்மன் ஸ்ரீ வல்லவதேவன் என்ற பாண்டிய மன்னன் இந்த கோவிலைக் கட்டியது பற்றிக் கூறுகிறது. அகஸ்தியரும் இந்த கோவிலின் பரிவார தெய்வங்களுள் ஒன்றாக வழிபடப்படுகிறார். வடுகன்பற்று பகுதிக்கு அகஸ்திய முனிவர் வந்து தவம் செய்ததின் காரணமாகவும், அதனால் அகஸ்தீஸ்வரமுடைய நயினார் கோவில் அமைந்திருப்பதாலும் வடுகன்பற்றுக்கு அருகில் உள்ள ஊரின் பெயர் அகஸ்தீஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது. அகஸ்தீஸ்வரம் தற்போது பேரூராட்சியாக இருந்து வருகிறது.

    ×