என் மலர்tooltip icon

    வழிபாடு

    • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
    • ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீபிள்ளை லோகாச்சாரியார் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, புரட்டாசி 29 (திங்கட்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: துவிதியை நள்ளிரவு 1.07 மணி வரை பிறகு திருதியை

    நட்சத்திரம்: சுவாதி இரவு 8.17 மணி வரை பிறகு விசாகம்

    யோகம்: அமிர்த, மரணயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று சந்திர தரிசனம். தல்லாகுளம் ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள், ராமநாதபுரம் ராஜராஜேஸ்வரி, அருப்புக் கோட்டை சவுடாம்பிகையம்மன் நவராத்திரி அலங்காரம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் புறப்பாடு. திருவனந்தபுரம் சிவபெருமான் பவனி. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ பிள்ளை லோகாச்சாரியார் புறப்பாடு. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், லால்குடி, திருவிடைமருதூர் கோவில்களில் சுவாமிக்கு காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-அன்பு

    ரிஷபம்-அமைதி

    மிதுனம்-ஆக்கம்

    கடகம்-உற்சாகம்

    சிம்மம்-பண்பு

    கன்னி-இன்பம்

    துலாம்- லாபம்

    விருச்சிகம்-சுபம்

    தனுசு- முயற்சி

    மகரம்-மகிழ்ச்சி

    கும்பம்-ஆர்வம்

    மீனம்-பெருமை

    • 36 அடி உயரம் 36டன் எடை கொண்ட தேரில் அய்யா வைகுண்ட தர்மபதி எழுந்தருளி மணலி புதுநகர் பகுதிகளில் வீதி உலா வந்தார்.
    • அய்யா அர ஹர சிவ சிவ அய்யா உண்டு என்று பக்தி கோஷங்கள் எழுப்பியபடி தேரை இழுத்து சென்றனர்.

    திருவொற்றியூர்:

    சென்னை, மணலிபுதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் மிகவும் பிரசித்திப் பெற்றது. இங்கு, ஆண்டு தோறும் புரட்டாசி மாதம், 10 நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 6-ந்தேதி, கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாள் திருவிழாவில், அய்யா, காளை, அன்னம், கருடர், மயில், ஆஞ்சநேயர், சர்பம், மலர்முக சிம்மாசனம் உள்ளிட்ட வாகனங்களில் பதிவலம் வந்தார். தினமும் திருஏடு வாசிக்கப்பட்டது.

    முக்கிய நிகழ்வான தேரோட்டம், இன்று நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு பணிவிடை - உகப்படிப்பு நடைபெற்றது. பின்னர் தேர். அலங்காரம் செய்தல் பணிவிடை நடை பெற்றது. மதியம் 12 மணிக்கு அய்யா வைகுண்ட தர்மபதி பதிவலம் வந்து அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் ஏறினார். முன்னதாக தேர் புறப்படுவதை குறிக்கும் வகையில் நாதஸ்வரம், செண்டை, உருமி மேளம் முழங்கப்பட்டது. இலுப்பை, தேக்கு மரங்களை கொண்டு செய்யப்பட்ட 36 அடி உயரம் 36டன் எடை கொண்ட தேரில் அய்யா வைகுண்ட தர்மபதி எழுந்தருளி மணலி புதுநகர் பகுதிகளில் வீதி உலா வந்தார்.

    தமிழ்நாடு பனைமரத்தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் எர்ணாவூர் ஏ. நாராயணன், முன்னாள் எம்.பி. எஸ்.ஆர்.ஜெயத்துரை, ஞான திரவியம் எம்.பி., நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க முன்னாள் தலைவர் டி.பத்மநாபன், திருவொற்றியூர் ஆகாஷ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் செல்வராஜ்குமார், பிரைட் சி.முருகன், சி. அருணாசலம், நாடார் பேரவை சட்ட ஆலோசகர் எம். கண்ணன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் வடசென்னை மாவட்ட தலைவர் பி.ஆதி குருசாமி மாநில இணைச்செயலாளர் சந்திரசேகர் உள்ளிட்டோர் தேரை வடம் பிடித்து இழுத்த னர்.

    தேரோட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அய்யா அர ஹர சிவ சிவ அய்யா உண்டு என்று பக்தி கோஷங்கள் எழுப்பியபடி தேரை இழுத்து சென்றனர்.

    பிற்பகல் 1 மணிக்கு அன்ன தானம், மாலை 6 மணிக்கு இந்திர விமான வாகனத்தில் அய்யா பதிவலம் வருதல், இரவு10.30 மணிக்கு பட்டா பிஷேக திருஏடு வாசிப்பு நடைபெறுகிறது. பின்னர் இரவு 1.30 மணிக்கு அகண்ட நாமம், 1.45 மணிக்கு அய்யா பூம் பல்லக்கு வாகனத்தில் பதிவலம் வருதல், வைகுண்ட சோபனம், அண்டநாமம், திருநாமக்கொடி இறக்குதல், பள்ளியுணர்த்தல், திருநாள் சேவை மகத்துவகானம், இனிமம் வழங்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது.

    • ஆனந்த பெருவாழ்வுக்கு அழைத்து செல்வது தான் நவராத்திரி வழிபாடு.
    • வீரம், செல்வம், கல்வி என்ற முப்பெரும் சக்திகள்.

    யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய்

    தீதுநன்மை எல்லாம் காளி தெய்வ லீலையன்றோ

    பூதம் ஐந்துமானாய் காளி பொறிகள் ஐந்துமானாய்

    துன்பம் நீக்கிவிட்டாய் காளி தொல்லை போக்கிவிட்டாய்

    -என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப முப்பெரும் தேவியர்களும் ஒன்றாகி நாம் ஒவ்வொருவருடைய துன்பங்களையும், தொல்லைகளையும் போக்கி இன்ப வாழ்வு வழங்க நவராத்திரி விழாவையே நாம் கொண்டாடுகிறோம்.

    மன உணர்ச்சியை கட்டுப்படுத்தி மனதிற்கு அமைதியை அளித்து, ஆனந்த பெருவாழ்வுக்கு அழைத்து செல்வது தான் இந்த நவராத்திரி வழிபாடு

    நவராத்திரி வழிபாடு சக்தி மகிமையை விளக்கும், இச்சா சக்தி. துர்க்கை- வெற்றியின் தேவதை, வீரத்தின் தெய்வம் சிவப்பிரியை. மகிசன் என்னும் அரக்கனை 9 இரவுகள் போரிட்டு வெற்றி கண்டவள். கிரியா சக்தி- திருமகள் விஷ்ணுபிரியை, செல்வத்தின் உறைவிடமே இவரின் இருப்பிடம். ஞானசக்தி-சரஸ்வதி பிரம்மாவின் பிரியை, ஆயகலைகளுக்கும், கல்விக்கும் அதிபதி. வீரம், செல்வம், கல்வி என்ற முப்பெரும் சக்திகள் தான் இந்த உலகத்தையே ஆள்கின்றனர்.

    இந்த முப்பெரும் சக்திகளின் வழிபாடான, நவராத்திரியை தான் 9 நாட்கள் நாம் திருவிழாவாகக் கொண்டாடுகிறோம். வருடத்தில் 4 நவராத்திரிகள் உண்டு. ஆடி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் நவராத்திரி ஆஷாட நவராத்திரி, புரட்டாசி அமாவாசைக்கு பிறகு வரும் நவராத்திரி மகா நவராத்திரி என்றும் சாரதா நவராத்திரி என்றும் கூறுவர். தை மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் நவராத்திரியை ஷியாமளா நவராத்திரி என்றும், சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் நவராத்திரி வசந்த நவராத்திரி என்றும் அழைக்கப்படுகிறது.

    வருடத்தில் 4 நவராத்திரிகள் இருந்தாலும், இரண்டு நவராத்திரிகளை கண்டிப்பாக கொண்டாட வேண்டும் என்று தேவிபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. புரட்டாசி மாதம் குளிர்காலம் ஆரம்பமாகின்ற மாதம், அதேபோல சித்திரை மாதம் கோடையின் துவக்க காலம். இந்த இரு மாதங்களும் எமதர்மனின் கோரை பற்கள். இந்த இரு மாதங்களில் தான் நோய்கள் அதிகமாக பரவும் என்று அக்னி புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பருவ காலம் மாறும்போது நோய்கள் அதிகம் பரவும். எனவே இந்த இரு மாதங்களில் நோய் எதிர்ப்பு சக்தி பெற்று நீண்ட              ஆரோக்கியமாக வாழ அருள் தரக்கூடியள் தான் அகிலாண்ட நாயகியான அம்பிகை. அதனால் தான் புரட்டாசி, சித்திரை மாதங்களில் வரக்கூடிய நவராத்திரியை கொண்டாட வேண்டும் என்று நவராத்திரி விழாவை கொண்டாடி வருகின்றோம்.

    காலப்போக்கில் எல்லா நவராத்திரியும் மறைந்துபோய் புரட்டாசியில் வரும் சாரதா நவராத்திரி மட்டும் வழக்கத்தில் உள்ளது. நவராத்திரி விழாவை தெய்வங்களும், தேவர்களும் கூட கொண்டாடி பலன் அடைந்துள்ளனர். ராமபிரான் நவராத்திரி பூஜை செய்து தான் சீதை இருக்கக்கூடிய இடத்தை கண்டறிந்தார் என்று தேவி பாகபதம் தெரிவிக்கிறது. கண்ணபிரானுக்கு வந்த துன்பம் நவராத்திரி பூஜை செய்ததால் தான் நீங்கியது. இந்த நவராத்திரி பூஜை செய்ததால் தான் பஞ்சபாண்டவர்கள் பாரதப்போரில் வென்றார்கள் என்று நம்முடைய புராணங்கள் பதிவு செய்துள்ளன.

    தீய சக்திகள் மேலோங்கும் போது மக்களை காப்பாற்றிட அம்மனை வேண்டினால் அகிலாண்ட நாயகியாக அன்னை சண்டிகையாக 9 வடிவங்கள் எடுத்து தீமைகளை அழித்து நன்மை செய்வாள் என்று தேவி மகாமத்யம் அழகாக விவரிக்கிறது. இதுபோன்ற நாட்களில் அம்பிகையை வெவ்வேறு வடிவங்களில் அலங்கரித்து வழிபாடு செய்கிறோம்.

    முதல் நாள்- தேவி மகேஸ்வரி பாலா

    இரண்டாம் நாள்- கவுமாரி ராஜராஜேஸ்வரி

    மூன்றாம் நாள்- கல்யாணி

    நான்காம் நாள்- மகாலட்சுமி, ரோகிணி

    ஐந்தாம் நாள்- வைஷ்ணவி மோகினி

    ஆறாம் நாள்- இந்திராணி

    ஏழாம் நாள்- மகா சரஸ்வதி சுமங்கலி

    எட்டாம் நாள்- நரசினி

    ஒன்பதாம் நாள்- லிலிதா பரமேஸ்வரி

    இவ்வாறு 9 நாட்களும் அம்பிகையை இவ்வாறு அலங்கரித்து அழைக்கப்படுகிறாள்.

    நவராத்திரி பெருவிழாவின் 9-வது நாள் மகாநவமி அன்று நாம் செய்யும் தொழிலையும், கல்வியையும், கலையையும் மதிக்கும் வண்ணம் அதற்கு நாம் வழிபாடு செய்கின்றோம். விஜயதசமி நாளில் தான் அம்பிகை, மகிஷாசுரன், அரக்கர்கள், சிம்ப, நிசும்பன் அரக்கர்களை அழித்து வெற்றிவாகை சூடினாள்.

    பாண்டவர்கள் தங்களுடைய வெற்றிக்காக தங்களுடைய ஆயுதங்களை துர்க்கா தேவி முன்னிலையில் தான் வழிபட்டனர். நவராத்திரியின் 9 நாட்களில் பூஜை விரதத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். பூஜை, விரதத்தை கடைபிடிக்காதவர்கள் அஷ்டமி நாளிளாவது விரதம் இருக்கலாம். நவராத்திரியில் திருமகளை துதித்து வழிபட்டால் சகல சவுபாக்கியங்களையும் தந்து முக்தி கிடைக்கும்.

    புரட்டாசி மாத நவராத்திரியின் போது கொலு வைப்பது என்பது பரம்பரையாக செய்யப்பட்டு வரக்கூடிய பக்தி நிகழ்வு. எல்லாருடைய நட்பையும் பெருகச்செய்வது தான் இந்த கொலுவின் முக்கிய நோக்கமே. நவராத்திரி கொண்டாடுவதால் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் மீது குழந்தைகள் வரை அனைவருக்குமே பங்குண்டு. இதனால் ஒற்றுமை, மரியாதை உணர்வு, பக்தியும் அதிகரிக்கிறது.

    நவராத்திரியினால் ஆன 9 இரவுகள் தனி சக்தியாக விளங்கக்கூடிய ஜகன் மாதா 10-வாது நாள் இறைவனாகிய சிவபெருமானை வணங்கி சிவசக்தியாக, அர்த்தநாரீஸ்வரராக சிவபெருமானுடன் ஐக்கிய ரூபினியாக மாறுகிறார். இதுதான் நவராத்திரி புராண வரலாறு.

    • முத்தாரம்மன் கோவில் பின்புறம் ஒரு அரசமரம் உள்ளது.
    • குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வாரிசுக்காக தொட்டில் கட்டுகின்றனர்.

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் பின்புறம் ஒரு அரசமரம் உள்ளது. இதன் அடிப்பாகத்தை கூர்ந்து கவனித்தால் யானையின் பாதம் போல் இருக்கும். இருமனம் இணைந்து திருமணம் நடக்கும்போது உடனே வாரிசு வர வேண்டும் என்று வேண்டுதல் செய்து இந்த மரத்தில் தொட்டில் கட்டுகின்றனர்.

    திருமணம் ஆகி பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வாரிசுக்காக தொட்டில் கட்டுகின்றனர். பக்தர்களின் வேண்டுதல்களை வேண்டியபடி நிறைவேற்றி அருள்புரியும் அன்னையின் அருள் காட்டாற்று வெள்ளம்போல் பாய்வதால்தான் ஆண்டுக்கு ஆண்டு பக்தர்களின் கூட்டமும் அலைமோதுகிறது.

    • முத்தாரம்மனுக்கு மிகவும் பிடித்தது முளைப்பாரி.
    • அம்மனை பற்றி பாடல்கள் பாடி பின்பு முளைப்பாரியை கோவிலில் சேர்ப்பர்.

    அன்னை முத்தாரம்மனுக்கு மிகவும் பிடித்தது முளைப்பாரி. அதனால்தான் ஏராளமான கோவில்களில் முளைப்பாரி நேமிசம் நடைபெறும். 8 நாள் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சுத்தமாக இருந்து அன்னை முத்தாரம்மனின் திருநாமத்தை மனதில் நிலை நிறுத்தி, அம்மனை பற்றி பாடல்கள் பாடி பின்பு முளைப்பாரியை கோவிலில் கொண்டு சேர்க்கின்றனர்.

    பயிறு விதை போட்டவர்கள் பல நூறு கோடி பயன்பெறவும்

    எள்ளு விதை போட்டவர்கள் என்னாளும் வாழ்ந்திடவும்

    கானம் விதை போட்டவர்கள் கஷ்டங்கள் விலகிடவும்

    கடலை அவரை விதை போட்டவர்கள் அன்னை முத்தாரம்மனை நினைத்திடவும்

    என்று நவதானியத்திற்கு உரிய பாடல்களை பாடி அம்மனை நோக்கி ஆலயத்திற்கு வந்து அனைத்து செல்வங்களையும் அடைகின்றனர்.

    • பாண்டிய மன்னர்கள் முத்துக்களை குவித்து தேவியாக நினைத்து வழிபட்டனர்.
    • அம்மை நோயினை முத்துப்போட்டதாக கூறுவது மரபு.

    பாண்டி நாடு முத்துடைத்து என்பார்கள். பாண்டிய மன்னர்கள் முத்துக்களை குவித்து தேவியாக நினைத்து வழிபட்டனர். அம்முத்துகள் அம்பாளாகத் திருமேனி கொண்டன. முத்துகளில் இருந்து அன்னை உதித்ததால் முத்தாரம்மன் என அழைக்கப்பட்டாள் என்பது ஒரு கருத்து. பாண்டிய மன்னர்கள் முத்துக்களை ஆரமாகத் தொடுத்து அன்னைக்கு சூட்டி மகிழ்ந்தனர். எனவே அன்னை, முத்தாரம்மன் எனவும் வழங்கலானாள்.

    கிராமங்களில் அம்மை நோயினை முத்துப்போட்டதாக கூறுவது மரபு. முத்துக் கண்டவர்கள் இங்கு அம்பாள் பீடத்தைச் சுற்றி நீர் கட்டச் செய்வர். இதன் மூலம் அம்மை நோய் (முத்துநோய்) குணமாகும். முத்துக்களை ஆற்றிக் குணப்படுத்தியதால் அன்னை, முத்து ஆற்று அம்மன், முத்தாரம்மன் எனஅழைக்கப்படுகிறாள்.இப்படி முத்தாரம்மன் பெயர் தோன்றியதற்கு பல கதைகள் உள்ளன.

    • ஆண்கள் காளி வேடமிட்டு வருவதை பார்க்கலாம்.
    • கொடியேற்றத்திற்கு பின்னர் இவர்கள் ஊர், ஊராக செல்வார்கள்.

    குலசேகரன்பட்டினம் தசரா விழாவின்போது ஆண்கள் காளி வேடமிட்டு வருவதை பார்க்கலாம். காளி வேடத்தில் இருப்பவர்களை கண்டதும் அம்மனே நேரில் வந்ததாக பக்தர்கள் நினைத்து வழிபட்டு, காணிக்கை அளித்து அருள் வாக்கு பெறுவதும் வழக்கமாக உள்ளது. அம்மன் சூரனை சூலாயுதத்தால் குத்தும்போது இவர்களும் கைகளில் உள்ள சூலாயுதத்தால் மகிஷனை குத்துவார்கள்.

    காளிவேடம் போடுபவர்கள் தசராவின்போது 48 நாட்கள் கடும் விரதம் இருப்பர். அந்நாட்களில் ஒருவேளை மட்டுமே சைவ உணவு சாப்பிடுவார்கள். அவரவர் ஊரின் கோவில்களில் தங்கி தானே சமைத்து, காலை, மாலை இரு வேளையும் குளித்து விரதம் மேற்கொள்வார்கள்.

    கொடியேற்றத்திற்கு பின்னர் இவர்கள் ஊர், ஊராக செல்வார்கள். தலையின் பின்புறம் தொங்கும்படி கட்டப்பட்ட நீண்ட முடியுடன், தகரத்தாலும், அட்டையாலும் செய்யப்பட்டு அழகுபடுத்தப்பட்ட கிரீடம், நேர்பார்வை மட்டுமே பார்க்க தக்கவாறு சிறு துளையிடப்பட்டுத் தகரத்தால் செய்யப்பட்ட கண்மலர், வாயின் இருபுறமும் செருகி கொள்ளக்கூடிய வீரபற்கள், வெளியில் தொங்கும் நாக்கு, முகத்தில் சிவப்பு நிற பூச்சு, மரப்பட்டையாலும், இரும்பு தகடாலும், அட்டையாலும் செய்யப்பட்ட பக்கத்துக்கு நான்கு என்ற முறையில் 8 கைகள், சிவப்பு புடவை, மனித தலைகள் வரையப்பட்ட அட்டை மாலை, ருத்ராட்ச மாலைகள், பாசி மாலைகள், இடையில் ஒட்டியாணம், காலில் கனத்த சலங்கைகள், கையில் இரும்பு வாள் இவையே காளியின் அவதாரமாக அணிவதற்கு உரிய பொருட்கள். இப்பொருட்களின் மொத்த எடை 30 கிலோ இருக்கும்.

    • சூரனை சம்ஹாரம் செய்வதால் சூரசம்ஹாரம் என்கிறோம்.
    • குலசேகரன்பட்டினத்தில் நடக்கும் சூரசம்ஹாரமும் உலகப் புகழ்பெற்றது.

    அசுரர்கள் எனும் ஆணவசக்தி தேவர்களையும், மக்களையும் துன்புறுத்தும் போதெல்லாம் இறைசக்தி புதிய அவதாரம் எடுத்து, அவற்றை அழிக்கும். இதற்கு சம்ஹாரம் என்று பெயர். சூரனை சம்ஹாரம் செய்வதால் சூரசம்ஹாரம் என்கிறோம்.

    உலகம் முழுவதும் தமிழர்களுக்கு, சூரசம்ஹாரம் என்றதும் திருச்செந்தூர் தலத்தில் கடலோரத்தில் நடக்கும் சூரசம்ஹாரம் தான் நினைவுக்கு வரும். மேலும் திருச்செந்தூர் அருகில் உள்ள குலசேகரன்பட்டினத்தில் நடக்கும் சூரசம்ஹாரமும் உலகப் புகழ் பெற்று உள்ளது.

    ஒரே மாவட்டத்தில் அடுத்தடுத்த ஊர்களில் அதுவும் அடுத்தடுத்த மாதங்களில் நடக்கும் இந்த சூரசம்ஹாரங்கள் நிறைய ஒற்றுமைகளையும் - வேற்றுமைகளையும் கொண்டுள்ளன.

    சூரபத்மன் எனும் அரக்கனை ஒழிக்கவே முருக அவதாரம் நிகழ்ந்தது. அது போல மகிஷாசுரனை அழிக்க அம்மன் முத்தாரம்மனாக அவதரித்தார். முருகப் பெருமானுக்கு வலுவூட்டும் வகையில் ஐப்பசி மாதம் சுக்கிலபட்சத்தில் பிரதமை தொடங்கி சஷ்டி வரை 6 நாட்கள் பக்தர்கள் கடும் விரதம் இருப்பது வழக்கம். அது போல அன்னை பராசக்தி வேள்வியில் வளர்ந்த 9 நாட்களும் அதாவது புரட்டாசி அமாவாசை கழிந்த மறுநாள் பிரதமையில் இருந்து 9 நாட்கள் பக்தர்கள் கடும் விரதம் இருப்பது வழக்கம்.

    சஷ்டி அன்று திருச்செந்தூரில் முருகன் தேரில் எழுந்தருளி சூரபத்மனை சம்ஹாரம் செய்வார். குலசையிலும் முத்தாரம்மன் கடற்கரையில் தேரில் எழுந்தருளி மகிஷனை சம்ஹாரம் செய்வாள்.

    முருகன் சம்ஹாரம் செய்யும் முன்பு சூரன் விதவிதமான வேடங்களில் வருவான். அதுபோல குலசையிலும் மகிஷன் மூன்று வடிவங்களில் வருவான். திருச்செந்தூர் கடற்கரையில் சூரபத்மனை தம் வேலால் முருகன் சம்ஹாரம் செய்வார். குலசையில் மகிஷனை சூலத்தால் அம்மன் சம்ஹாரம் செய்வாள். சம்ஹாரம் நடப்பதற்கு முன்பு திருச்செந்தூரில் வேலுக்கும் குலசையில் சூலத்துக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இவையெல்லாம் இரு தலத்திலும் உள்ள ஒற்றுமையான சம்ஹார தகவல்களாகும்.

    ஒரே ஒரு முக்கியமான வித்தியாசம் திருச்செந்தூரில் சூரபத்மன் முருகனால் சம்ஹாரம் செய்யப்படும் நிகழ்வுகள் அமைதியாக நடைபெறும். ஆனால் குலசையில் மகிஷன் அழிக்கப்படும் நிகழ்வு மிகவும் ஆக்ரோஷமாக நடைபெறும். மற்றொரு வித்தியாசம் திருச்செந்தூரில் மாலை நேரத்தில் சூரசம்ஹாரம் நடத்தப்படும். குலசையில் நள்ளிரவு 12 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெறும்.

    திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் முடிந்ததும் முருகனை குளிர்விக்க அபிஷேகம் செய்வார்கள். குலசையிலும் அம்மனுக்கு குடம், குடமாக பால் அபிஷேகம் நடைபெறும். திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நிறைவு பெற்றதும் 90 சதவீத பக்தர்கள் புறப்பட்டு சென்று விடுவார்கள். ஆனால் குலசையில் விடிய, விடிய தசரா குழுக்களின் ஆடல் நிகழ்ச்சி நடைபெறும். குலசை சூரசம்ஹாரத்தை திருச்செந்தூர் சம்ஹாரத்தில் இருந்து மிகவும் வித்தியாசப்படுத்தி காட்டுவது இதுதான். மற்றப்படி இரு சூரசம்ஹாரத்துக்கும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள்வது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் வேறு எந்த மாவட்டத்துக்கும் கிடைக்காத இத்தகைய சிறப்பு தூத்துக்குடி மாவட்டத்துக்கு கிடைத்துள்ளது.

    • ஐப்பசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • பிரகலாத சரிதம் கதகளி ஆகியவை நடக்கிறது.

    திருவட்டார்:

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பங்குனி மற்றும் ஐப்பசி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு ஐப்பசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நேற்று காலை நிர்மால்யம், அபிஷேகம், தீபாராதனையை தொடர்ந்து, கருட இலச்சினை பொறிக்கப்பட்ட கொடி ஆதிகேசவ பெருமாளின் பாதத்தில் பூஜைக்கு வைக்கப்பட்டது. தொடர்ந்து மேளதாளம் முழங்க கொடி மர பீடம் அருகே கொடி கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதைத்தொடர்ந்து கோவில் தந்திரி கோகுல், தங்க கொடி மரத்தில் கொடியேற்றினார்.

    இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், உறுப்பினர் முரளிதரன் நாயர், குழித்துறை தேவஸ்வம் சூப்பிரண்டு சிவகுமார் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மதியம் அன்னதானம், இரவு சாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல் நடந்தது.

    இதையடுத்து விழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு நவநீதம் நாராயணியம் சமிதி வழங்கும் நாராயணீய பாராயணம், இரவு 9 மணிக்கு சாமி அனந்த வாகனத்தில் பவனி, 10 மணிக்கு பிரகலாத சரிதம் கதகளி ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து விழா நாட்களில் தினமும் மதியம் ஸ்ரீபூதபலி எழுந்தருளல், இரவு சாமி பவனி வருதல், கதகளி ஆகியவை நடக்கிறது.

    விழாவில் 18-ந் தேதி இரவு 8 மணிக்கு கிருஷ்ணன் சன்னதியில் கொடியேற்றம் நடக்கிறது. 22-ந் தேதி இரவு 8.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வர கச்சேரி, 9.30 மணிக்கு சாமி கருட வாகனத்தில் பள்ளிவேட்டைக்கு எழுந்தருளல் ஆகியவை நடக்கிறது.

    விழாவின் 10-ம் நாளான 23-ந் தேதி காலை 11 மணிக்கு திருவிலக்கு எழுந்தருளல், மாலை 7 மணிக்கு சிறப்பு நாதஸ்வர கச்சேரி, இரவு 8 மணிக்கு கருட வாகனத்தில் ஆராட்டுக்கு தளியல் ஆற்றுக்கு சாமி எழுந்தருளல் ஆகியவை நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்துள்ளனர்.

    • மாலங்கி நதியில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
    • மாலங்கி நதியில் நீர்வரத்து இல்லை.

    விஜயநகர தளபதி ஸ்ரீரங்கராயனிடம் இருந்து ஸ்ரீரங்கப்பட்டணாவை கடந்த 1601-ம் ஆண்டு அன்றைய மைசூரு மகாராஜா ராஜ உடையார் கைப்பற்றினார். அப்போது ஸ்ரீரங்கராயனின் மனைவி அலமேலம்மாவின் அழகில் மயங்கிய மகாராஜ ராஜ உடையார், அவரை பிடித்து வர தனது படைகளை அனுப்பினார். அப்போது அவர்களிடம் இருந்து அலமேலம்மா தப்பி ஓடினார். அவர் தப்பித்து சென்றபோது மாலங்கி நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதற்கு மேல் தப்பி ஓட முடியாததால் அலமேலம்மா மகாராஜா ராஜ உடையாருக்கு சாபமிட்டார். `தலக்காடு மணல் மூடி போகட்டும், மாலங்கி நதி மடுவாகட்டும், உடையார் பரம்பரை வாரிசற்று போகட்டும்' என்று கூறி சாபமிட்டார். மேலும் மாலங்கி நதியில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

     அவர் விட்ட சாபம்போல் தலக்காடு இன்று வரை மணல் மூடித்தான் இருக்கிறது. மாலங்கி நதியில் நீர்வரத்து இல்லை. மேலும் உடையார் பரம்பரையும் வாரிசு இல்லாமல் இருந்தனர். அவர்கள் தத்துப்பிள்ளைகளையே வாரிசுகளாக கொண்டிருந்தனர். ஆனால் கடைசியாக முடிசூடிய யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையாருக்கு வாரிசு பிறந்தது. அவரும், ராஜஸ்தான் மாநில ராஜ குடும்பத்தைச் சேர்ந்த திரிஷிகா குமாரிக்கும் திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அலமேலம்மா சாபத்திற்கு உடையார் குடும்பத்தில் பிறந்த முதல் வாரிசு இந்த குழந்தை தான். இந்த குழந்தைக்கு ஆத்யவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் என்று பெயரிட்டுள்ளனர். இதன்மூலம் அலமேலம்மாவின் சாபம் நீங்கியது.

    • மகிஷாசூரனை மைசூரு சாமுண்டி மலையில் வைத்து வதம் செய்தார்.
    • நன்மைக்கும், தீமைக்கும் நடந்த போராக கருதப்படுகிறது.

    கலை, கலாசாரம், பண்பாட்டை பிரதிபலிக்கும் மைசூரு தசரா விழாவைப் பற்றி இங்கு காண்போம்.

    பார்வதி தேவியை வேண்டினர்

    விஜயதசமி நாளில் மைசூருவின் சாமுண்டீஸ்வரி அம்மன் மகிஷாசூரனை வெற்றி கொண்ட நாள் தான் மைசூரு தசரா விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது மகிஷாசூரன் என்ற கொடூர அரக்கன் மக்களை கொடுங்கோல் ஆட்சியால் வாட்டி வதைத்து வந்தான். அதையடுத்து மக்கள் தங்களை காக்க வேண்டி காவல் தெய்வமான பார்வதி தேவியை வேண்டினர். அதன்பேரில் அவர் சாமுண்டீஸ்வரி அம்மனாக பிறந்தார். பின்னர் விஜயதசமி நாளன்று சாமுண்டீஸ்வரி அம்மன், படைகளுடன் சென்று மகிஷாசூரனை மைசூரு சாமுண்டி மலையில் வைத்து வதம் செய்தார். அதைத்தான் மைசூரு தசரா விழாவாக கொண்டாடுவதாக கூறப்படுகிறது. மேலும் இது நன்மைக்கும், தீமைக்கும் நடந்த போராக கருதப்படுகிறது.

    மகிஷாசூரன் என்கிற பெயரில் இருந்து தான் மகிசூர் என்ற பெயர் தோன்றியதாகவும், பிற்காலத்தில் அது மருவி மைசூரு என வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2010-ம் ஆண்டு கொண்டாடப்பட்ட மைசூரு தசரா விழா 400-ம் ஆண்டு தசரா விழா ஆகும்.

    தனியார் தர்பார்

    கர்நாடக மக்களின் கலை, கலாசாரம், பண்பாட்டை பிரதிபலிக்கும் மைசூரு தசரா விழா விஜயநகர பேரரசர்களால் 15-ம் நூற்றாண்டில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. பெர்ஷியன் தூதுவர் அப்துர் ரஜாக் `இரண்டு புனித நட்சத்திரக் கூட்டங்களின் எழுச்சியும், இரண்டு கடல்களின் சங்கமமும்' என்ற புத்தகத்தில் மகாநவமி என்ற பெயரில் தசரா கொண்டாட்டங்கள் நடந்ததாக குறிப்பிட்டுள்ளார். விஜயநகர பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு மைசூருவை ஆண்ட உடையார் வம்ச அரசர் ராஜ உடையார் இந்த தசராவை ஸ்ரீரங்கப்பட்டணாவில் (மண்டியா மாவட்டம்) கொண்டாடினார்.

    தசரா கொண்டாட்டங்களில் கிருஷ்ணராஜ உடையார் காலத்தில் சிறப்பு தர்பார் இடம் பெற்றது. இந்த தர்பார் மைசூரு அரண்மனையில் கூடியது. அரச குடும்பத்தினரும், சிறப்பு விருந்தினர்களும், அதிகாரிகளும், பொதுமக்களும் இந்த தர்பாரில் பங்கேற்றனர். அதன்பின்னர் ஒவ்வொரு ஆண்டும் தசரா விழாவின்போது தனியார் தர்பார் நடந்து வருகிறது. மஹாநவமி என்று சொல்லப்படும் ஒன்பதாவது தினம் அரசரின் வாள் யானையின் மேல் ஏற்றப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். இந்த ஊர்வலத்தில் யானைகளுடன் ஒட்டகங்களும், குதிரைகளும் பங்கேற்கும்.

    தங்க அம்பாரி

    முதலில் மைசூரு மன்னர்கள் மற்றும் அரண்மனை சார்பில் கொண்டாடப்பட்ட தசரா விழா பின்னர் கர்நாடக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. தசரா விழாவின் கடைசி நாளில் ஜம்பு சவாரி ஊர்வலம் நடைபெறும். அதாவது சாமுண்டீஸ்வரி அம்மன் எழுந்தருள 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை ஒரு யானை சுமந்து கொண்டு யானைகள் புடைசூழ செல்ல, அதனை தொடர்ந்து மற்ற யானைகள் அணிவகுத்து வரும். யானைகளுக்கு முன்னர் பல்வேறு கலைக்குழுவினர், அலங்கார வண்டி அணிவகுப்புகள் நடைபெறும்.

    மேலும் பீரங்கிகளும் முழங்கும். ஒட்டகங்கள், குதிரை படைகள், போலீசாரின் இசைக்குழு ஆகியவற்றுடன் ஜம்பு சவாரி ஊர்வலம் களைகட்டும். ஜம்பு சவாரி ஊர்வலம் மைசூரு அரண்மனையில் இருந்து தொடங்கி பன்னிமண்டபத்தில் உள்ள தீப்பந்து விளையாட்டு மைதானம் வரை 5 கிலோ மீட்டர் தூரம் நடக்கும். இந்த சந்தர்ப்பத்தில் வழிநெடுகிலும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு ஜம்பு சவாரி ஊர்வலத்தை கண்டு ரசிப்பார்கள்.

    தீப்பந்து விளையாட்டு மைதானத்தை அடைந்ததும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாணவேடிக்கை நடைபெறும். முன்னதாக பன்னி(வன்னி மரங்கள்) வெட்டும் நிகழ்ச்சியும் நடத்தப்படும். பாண்டவர்கள் தங்களது ஆயுதங்களை அந்த மரத்தில் தான் மறைத்து வைத்திருந்தார்கள் என்றும், அதனால் தான் பன்னி மரத்தை வெட்டும் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. அரசர்கள் இந்த மரத்தை வணங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள் என்று கூறப்படுகிறது.

    மின்விளக்கு அலங்காரம்

    இதுஒருபுறம் இருக்க தசரா விழாவையொட்டி மைசூரு அரண்மனை வண்ண, வண்ண மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும். அதுபோல் தற்போது மைசூரு நகரம் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு வருகிறது. தீப்பந்து விளையாட்டு மைதானத்தில் போலீசாரின் சாகச நிகழ்ச்சிகள், பல்வேறு வீரர்களின் சாகசங்கள், லேசர் கதிர்கள் மூலம் ஒளி வாயிலாக நடத்தப்படும் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெறும்.

    முன்னதாக மன்னர் குதிரை சவாரி செய்து ராணுவ மரியாதையை ஏற்றுக் கொள்வார். இது ராஜாவிடம் இருக்கும் படை பலத்தை வெளிக்கொண்டு வந்து மக்களின் மனதில் தங்களை ராஜா காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையை விதைக்கும் என்று கூறப்படுகிறது. இப்படி பல்வேறு சிறப்புமிக்க மைசூரு தசரா விழா இந்த ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

    • நவதானியங்களில் அனுமன் மற்றும் ராமர் உருவங்களை வடிவமைத்துள்ளனர்.
    • நான்கு மாடவீதிகளில் தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    திருமலை:

    நவராத்திரி பிரம்மோற்சவத்தையொட்டி திருமலையில் பக்தர்களை கவரும் வகையில் மலர்கள்-புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் வருடாந்திர பிரம்மோற்சவம் மற்றும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறைக்கும் நவராத்திரி பிரம்மோற்சவம் நடக்கும் நாட்களில் பக்தர்களை கவரும் வகையில் திருமலையில் கவர்ச்சியான, கருத்துகளுடன் மலர்-புகைப்படக் கண்காட்சி நடப்பது வழக்கம்.

     அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி பிரம்மோற்சவத்தையொட்டி திருப்பதி தேவஸ்தான தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு கலை வடிவங்களை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதில் துரியோதணன் சபையில் திரவுபதி துகிலுரிக்கப்பட்ட காட்சி, புகழ்பெற்ற மாயா பஜார், மகாபாரதத்தில் இருந்து

    பிருஹன்னலா-உத்தர குமார அத்தியாயங்கள் உள்பட இதிகாசங்களில் இருந்து எடுக்கப்பட்ட தனித்துவமான கருத்துகளுடன் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    விஜயவாடாவை சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணர் என்பவர், கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக மலர் கண்காட்சியில் காய்கறிகள், ஐஸ், தானியங்கள், பழங்கள் போன்றவற்றைக் கொண்டு தெய்வ உருவங்களை செதுக்கி வருகிறார். நவதானியங்களில் அனுமன் மற்றும் ராமர் உருவங்களை வடிவமைத்துள்ளார்.

    ராவணன் ஜடாயுவை கொன்றது, ராமரின் மகன்களான லவ-குசா, ராம ஜனனம், மோகினி-பஸ்மாசூரன், பீமசேனன்-பாகாசூரன், அனந்தாழ்வார் அத்தியாயங்கள் தவிர திருவனந்தபுரம் அனந்த பத்மநாபசாமி போன்ற கலை வடிவங்கள் பக்தர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இதனுடன் திருமலையில் பல்வேறு புகைப்படங்களும் பக்தர்களின் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

    அலிபிரியில் உள்ள கருடன் சிலை, திருமலை கோவில் உள்பட பல்வேறு சிற்பங்களை தேவஸ்தானத்தின் பாரம்பரிய சிற்பக்கழகம் வடிவமைத்து வைத்துள்ளது. அதில் கல், சிமெண்டு, இரும்பு, மரம் மற்றும் வண்ணப்பூச்சு வேலைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆயுர்வேதப் பொருட்கள், மதம் மற்றும் ஆன்மிக புத்தகங்கள் வைத்திருப்பது தேவஸ்தானத்தின் பெருமையை உயர்த்தியது.

    இதுதவிர நவராத்திரி பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவில் வளாகம், நான்கு மாடவீதிகள், ஸ்ரீவாரி புஷ்கரணி உள்பட பல்வேறு இடங்களில் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பெருமாள், சங்கு, சக்கரம் உருவங்களில் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. நான்கு மாடவீதிகளில் தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கோவிலின் தங்க கொடிமரம், பலிபீடம் பிரத்யேக மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மின் விளக்கு அலங்காரத்தைப் பார்க்க கண்கொள்ளா காட்சியாக உள்ளது.

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவில் வளாகம், நான்கு மாடவீதிகள் உள்பட பல்வேறு இடங்களில் பலத்தபோலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

    ×