என் மலர்
வழிபாடு
- 1008 தீபங்களை லிங்க வடிவில் ஏற்றி பக்தர்கள் தரிசனம்.
- ஆயிரக்கணக்கானோர் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
ராஜபாளையம்:
தென் மாவட்டங்களில் பஞ்ச ஸ்தலங்கள் என்று அழைக்கப்படும் ராஜபாளையம் அருகே உள்ள சிவாலயங்களில் விடிய, விடிய பூஜைகள் நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் ஸ்தலங்களுக்கு சென்று விடிய, விடிய தரிசனம் செய்தனர்.
நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட ஸ்தலங்கள் விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களை அடங்கியதாக இருந்து வருகிறது.
நீரை அடிப்படையாகக் கொண்ட கோவில் தென்காசி மாவட்டம் தாருகாபுரம் மத்தியஸ்தநாதர் குழல்வாய் மொழியம்மை சமேதராய் பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். இங்கு ஆயிரக்கணக்கானோர் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் மற்றும் சிவனடியார்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிலத்தை அடிப்படையாக கொண்ட கோவில் சங்கரன்கோவில் சங்கரநாராயணர்-கோமதி அம்மன் சமேதராய் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். கோவில் வளாகத்தில் 1008 தீபங்களை லிங்க வடிவில் ஏற்றி வைத்ததை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நெருப்பை அடிப்படையாகக் கொண்ட கரிவலம் வந்தநல்லூர் பகுதியில் உள்ள பால் வண்ண நாதர் ஒப்பனை அம்மன் சமேத ராய் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். பாலில் தேங்காய் கலந்து சர்க்கரை சேர்த்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
காற்றை அடிப்படையாகக் கொண்ட தென்மலை திரிபுர நாதேஸ்வரர், சிவபரி பூரணி அம்மாள் சமேதராய் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். சிவபெருமான் முன்பு உள்ள தீபங்களில் அனைத்து தீபங்களும் அமைதியாக இருக்க மேலே உள்ள ஒரே ஒரு தீபம் மட்டும் காற்றில் லேசாக ஆடிக்கொண்டே இருப்பது இந்த கோவிலில் சிறப்பபாகும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.
ஆகாயத்தை அடிப்படையாகக் கொண்ட விருதுநகர் மாவட்டம் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி-தவம் பெற்ற நாயகி சமேதராய் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். ஏராளமான பக்தர்கள் விடிய விடிய காத்திருந்து அதிகாலை வரை தொடர்ச்சியாக பூஜை நடத்தப்பட்டு தரிசனம் செய்தனர். அன்ன தானமும் வழங்கப்பட்டது.போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.
- சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு பூச்சொரிதல் விழா.
- மாரியம்மன் பக்தர்களுக்காக 28 நாள் விரதம் இருப்பது சிறப்பம்சமாகும்.
மண்ணச்சநல்லூர்:
சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேரோட்டம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு பூச்சொரிதல் விழா இன்று காலை தொடங்கியது.
மும்மூர்த்திகளை நோக்கி மாயாசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும், இத்தலத்தில் தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எல்லா விதமான நோய்களும் நீங்கவும், தீவினைகளையும் அணுகாமல் இருக்கவும், சகல சவுபாக்கியங்களும் கிடைக்க மாரியம்மன் பக்தர்களுக்காக 28 நாள் விரதம் இருப்பது சிறப்பம்சமாகும்.
வருடம் தோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை அம்மன் விரதம் இருப்பார்.இதற்கு பச்சைப் பட்டினி விரதம் என பக்தர்கள் அழைக்கின்றனர்.இந்த 28 நாட்களும் திருகோவிலில் அம்மனுக்கு தளிகை நைவேத்தியம் கிடையாது. துள்ளு மாவு நீர்மோர், பானகம், மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக செய்யப்படுகிறது.
பூச்சொரி தல் விழாவை ஒட்டி இன்று அதிகாலை விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாஜனம் அனுக்ஞை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப் பணம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து மீன லக்னத்தில் அம்மனுக்கு காப்பு கட்டுகளுடன் தொடங்கி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இன்று முதல் பூச்சொரிதல் விழா தொடங்கியதால் சமயபுரம் மாரியம்மன் கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விழாக்கோலம் பூண்டது.
- மகாபாரத காலத்திற்கு முன்பே புகழ்பெற்ற நகரம் காசி.
- பசுபதேஸ்வரரை வழிபடுவோருக்கு எல்லா விதமான தோஷங்களும் நீங்கும்.
ராமாயண, மகாபாரத காலத்திற்கு முன்பே புகழ்பெற்ற நகரம் காசி. சிவபெருமான் ஆனந்தத்துடன் தங்கியிருக்கும் தலம் என்பதால் காசி நகருக்கு `ஆனந்த வனம்' என்னும் பெயரும் உண்டு. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காசி நகரம் ஆன்மிகத்தில் சிறந்து விளங்கி உள்ளது. `அறிவு தரத்தக்க ஒளி பொருந்திய நகரம்' என்னும் பொருளில் காசி நகரம் பற்றி ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது.
இத்தகைய பெருமை வாய்ந்த காசிக்கு நிகராக அதே பெயரில் விளங்குகிறது பசுபதேஸ்வரர் ஆலயம். இது திருநெல்வேலி மாவட்டத்தில் திருமலாபுரம் என்ற ஊரில் உள்ள ஒரு குடவரைக் கோவிலாகும். இப்பகுதியில் சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் பயன்படுத்திய நுண்ணியக் கருவிகளைத் தொல்லியல்துறை கண்டு பிடித்து பாதுகாத்து வருகிறது.

கோவில் அமைப்பு
தமிழ்நாட்டில் எத்தனையோ குடவரை இருந்தாலும், `சிரட்டைக் கின்னரி' (பழமையான வில்லிசைக் கருவி) இடம் பெற்றுள்ள ஒரே குடவரைக் கோவில், பசுபதேஸ்வரர் ஆலயம் மட்டுமே. நின்ற திருக்கோலத்தில் மகாவிஷ்ணு சங்கு, சக்கர தாரியாய் நான்கு திருக்கரங்களுடன் இங்கு வீற்றிருக்கிறார். அருகே அமர்ந்த நிலையில் விநாயகர் எழுந்தருளியுள்ளார்.
பல்லவர் காலத்தை ஒட்டிய கோவில் என்பதால், பல்லவர் குகைக்கோவில்களில் காணப்பெறாத, சிறப்புமிக்க விநாயகர் புடைப்புச் சிற்பம் இங்குள்ளது. கருவறைக்கு நேர் எதிரில் கிழக்கு உட்பகுதி பாறைச்சுவற்றில், நின்ற நிலையில் பிரம்மா மூன்று சிரசு, நான்கு கரங்களுடன் காணப்படுகிறார். நுழைவு வாசலில் உள்ள கனமான தூண்கள், விரிந்த தாமரைப் பதக்கங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
தரங்கப் பொதிகைகள் (தோரணம் போன்ற அமைப்பு) நுழைவு வாசலுக்கு மேன்மேலும் அழகு சேர்க்கின்றன. முன்மண்டப விதானத்தில் பழங்கால ஓவியங்களின் (அன்னம், தாமரை மலர், வேட்டுவேர், சிம்மாசனம்) வண்ண எச்சங்கள் சிதைந்த நிலையில் உள்ளன.முன்மண்டபத்தில் இருந்து சுமார் 2 அடி உயரத்தில் கருவறை அமைக்கப்பட்டுள்ளது.
கருவறை வாசலில் இருபுறமும் துவார பாலகர்கள் உள்ளனர். கருவறையில் பாறையில் வடிக்கப்பட்ட ஒற்றைக் கற்பீடத்தில் பசுபதேஸ்வரர் அழகாகக் காட்சி தருகிறார். குடவரைக் கோவில் உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்தே முறையான அபிஷேக, ஆராதனை சிறப்பாக நடைபெற்று வந்துள்ளன என்பதை சிவலிங்கம் உணர்த்துகிறது.
காலத்தால் பழையதும், கீர்த்தியால் செழுமை பெற்றதும், மனித உயிர்களை மெய் மறக்கச் செய்து, வேண்டுவன தந்து உலகம் உய்யக் கோவில் கொண்டு எழுந்தருளி இருக்கிறார், பசுபதேஸ்வரர். இவருக்கான நித்யபூஜை சிறப்புடன் நிகழ்வுற, வல்லவ தேவன் என்ற பாண்டிய மன்னன் மலைப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள குளங்களை தானமாக வழங்கி உள்ளான். இத்தகவல் குகைக்கோவில் இடது தூண் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இங்கு மன்னர்களின் 2 கல்வெட்டுகள் உள்ளன.
சுயம்பு லிங்கம்போல் குடவரையில் உள்ள சிவலிங்கத்துக்கும் அதீத ஆற்றல் உண்டு என்பதால், பிரதோஷ வழிபாட்டில் இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்கின்றனர். மேலும் பவுர்ணமிதோறும் நடைபெறும் கிரிவலத்திலும் திரளான பக்தர்கள் பங்கேற்கிறார்கள். திருக்கார்த்திகை, மகா சிவராத்திரி தினங்களில் சுற்றுப்பகுதி கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து தரிசனம் செய்து மகிழ்கின்றனர்.
பசுபதேஸ்வரரை வழிபடுவோருக்கு எல்லா விதமான தோஷங்கள், சாபங்கள் நீங்கி, சகல யோகங்களும் ஏற்படுவதால், இப்பகுதி மக்கள் ஈசனை `சர்வேஸ்வரன்' எனவும் அழைக்கின்றனர். திருமணம், வாரிசு ஆகிய பிரார்த்தனைக்காகவும், சிறந்த கல்வி, உயர்பதவி பெறவும் வேண்டிப் பயன்பெறுகின்றனர். மழை பொழியவும், மன பயம் அகலவும் இங்கு வேண்டியதும் கைமேல் பலன் கிட்டுகிறது என்பது ஐதீகம்.
தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஆலயம், தினமும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். துன்பங்களைப் போக்கி, இன்பங்களைத் தந்து, நிறைவில் முக்தியைத் தரவல்ல சர்வேஸ்வரனாம் பசுபதேஸ்வரரை, வாழ்வில் ஒருமுறையாவது தரிசனம் செய்ய வாருங்கள்.
அமைவிடம்
சங்கரன்கோவிலில் இருந்து 15 கி.மீ. தொலைவில் சேர்ந்தமரம் என்னும் ஊர் உள்ளது. இங்கிருந்து மேற்குத் திசையில் 3 கி.மீ. தூரத்தில் பசுபதேஸ்வரர் குடவரைக் கோவில் அமைந்துள்ளது. கடையநல்லூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் சுரண்டை செல்லும் வழியில் இவ்வாலயம் இருக்கிறது. திருநெல்வேலியில் இருந்து ஆலங்குளம், வீ.கே.புதூர், சுரண்டை, சேர்ந்தமரம் வழியாக 60 கி.மீ. பயணித்தும் இக்கோவிலுக்கு வரலாம்.
- திருவைகாவூர் கோவில்களில் சிவபெருமான் திருக்கல்யாணம்.
- இருக்கன்குடி மாரியம்மன், காஞ்சீபுரம் காமாட்சியம்மன் சிறப்பு அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மாசி 27 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: அமாவாசை பிற்பகல் 3.39 மணி வரை பிறகு பிரதமை
நட்சத்திரம்: பூரட்டாதி பின்னிரவு 3.43 மணி வரை பிறகு உத்திரட்டாதி
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று சர்வ அமாவாசை. ராமேசுவரம், வேதாரண்யம், திருவள்ளூர் கோவில்களில் பித்ரு பூஜை செய்ய நன்று. ராமேசுவரம் சுவாமி, அம்பாள் இந்திர விமானத்தில் இரவு தங்க விருஷப சேவை. சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். ஸ்ரீ சைலம், திருவைகாவூர் கோவில்களில் சிவபெருமான் திருக்கல்யாணம். ராமநாதபுரம் முத்தாலம்மன் பவனி. இருக்கன்குடி மாரியம்மன், காஞ்சீபுரம் காமாட்சியம்மன் சிறப்பு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-முயற்சி
ரிஷபம்-வெற்றி
மிதுனம்-யோகம்
கடகம்-சாதனை
சிம்மம்-பாராட்டு
கன்னி-புகழ்
துலாம்- ஜெயம்
விருச்சிகம்-லாபம்
தனுசு- உழைப்பு
மகரம்-கடமை
கும்பம்-ஆக்கம்
மீனம்-ஆசை
- உற்சவ அம்மனுக்கு ஆக்ரோஷ அங்காளி (மயானக் காளி) அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தது.
- இன்று இரவு அம்மன் ஆண் பூதவாகனத்தில் வீதி உலா நடக்கிறது.
மேல்மலையனூர்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசிப் பெருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கி சக்தி கரக ஊர்வலம் நடைபெற்றது.
விழாவின் 2-ம் நாளான இன்று காலை மயானக் கொள்ளைவிழா நடை பெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், விபூதி, மஞ்சள், குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
உற்சவ அம்மனுக்கு ஆக்ரோஷ அங்காளி (மயானக் காளி) அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு ஊரின் முக்கியப் பிரமுகர்கள் மேள தாளம் முழங்க கோவிலுக்கு அழைத்து வரப்பட்டனர். பின்பு பூஜைகள் நடை பெற்றவுடன் காலை 10.45 மணிக்கு அம்மனுக்கு தீபாரதனை காண்பித்தவுடன் உற்சவ அம்மன் பம்பை, மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக வந்து சிம்ம வாகனத்தில் அமர்ந்தார். 11 மணிக்கு பிரம்ம கபாலம் (கப்பரை முகம்) அம்மனுக்கு முன்பாக பூசாரிகள் ஆடியபடி மயானம் நோக்கி சென்றனர். தொடர்ந்து அம்மனும் மயானத்தில் எழுந்தருளினார். பின்பு அம்மனுக்கு தீபாரதனை காண்பித்தவுடன் பக்தர்கள் மயானத்தில் குவித்திருந்த சுண்டல் , நவதானியங்கள், காய்கறிகள் பழங்கள்,சில்லறை நாணயங்கள் ஆகியவற்றை பூசாரிகள் வாரி இறைத்தனர். இதுவே மயானக் கொள்ளை என்று அழைக்கப்படுகிறது.
- நான்கு ரத வீதிகளிலும் ஆடி, அசைந்து வந்த தேரை பக்தி பரவசத்துடன் கண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, சுவாமி, அம்பாள் வீதி உலா மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
திருவிழாவின் 8-வது நாள் நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு காலை 9 மணிக்கு நடராஜர் கேடயத்தில் புறப்பாடாகி வீதி உலா நடைபெற்றது. இதனை தொடர்ந்து, இரவு 9 மணிக்கு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் வெள்ளி தேரில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. மேலும் சிவராத்திரியை முன்னிட்டு விடிய விடிய கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதனைதொடர்ந்து, இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்பாள் எழுந்த ருளினர். கிழக்கு ராஜ கோபுரம் பகுதியில் இருந்து தேரோட்டம் நடந்தது. சிவ கோஷத்துடன் பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளிலும் ஆடி, அசைந்து வந்த தேரை பக்தி பரவசத்துடன் கண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேரோட்டத்தை முன்னி ட்டு கோவில் மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது. நான்கு ரத வீதிகளிலும் இன்று காலை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- முன்னதாக பக்தர்கள் அங்குள்ள நளன் குளத்தில் நீராடி சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தனர்.
- வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைபுரிந்து சனீஸ்வரரை வழிபட்டனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் தர்ப்பாரண்யேஸ்வர கோவிலில் பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது.
மகா சிவராத்திரியை முன்னிட்டு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் நேற்று மாலை முதல் நடை சாத்தப்படாமல் 4 கால பூஜைகள் நடந்தது. நாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது. பக்தர்கள் விடிய விடிய தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து இன்று விடுமுறை தினமான சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று தர்ப்பாரண்யேஸ்வரரை வழிபட்டனர்.

முன்னதாக பக்தர்கள் அங்குள்ள நளன் குளத்தில் நீராடி சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தனர்.
சென்னை, திருச்சி, கோவை, சேலம், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைபுரிந்து சனீஸ்வரரை வழிபட்டனர்.
- திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜருக்கு திருமஞ்சனம்.
- கோட் செங்கட்சோழ நாயனார் குருபூஜை.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மாசி 26 (சனிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சதுர்த்தசி மாலை 6 மணி வரை பிறகு அமாவாசை
நட்சத்திரம்: அவிட்டம் காலை 6.58 மணி வரை பிறகு சதயம்
யோகம்: சித்த, அமிர்த, மரணயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
குச்சனூர் சனிபகவான் சிறப்பு அபிஷேகம். திருவாரூர் தியாகராஜர் பவனி. ராமநாதபுரம் முத்தாலம்மன் திருவீதி உலா. கோட் செங்கட்சோழ நாயனார் குருபூஜை. ஸ்ரீசைலம், ஸ்ரீ காளஹஸ்தி, திருக்கோகர்ணம் கோவில்களில் சிவபெருமான் ரதோற்சவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜருக்கு திருமஞ்சனம். உப்பிலியப்பன் கோவில் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நன்மை
ரிஷபம்-நட்பு
மிதுனம்-உதவி
கடகம்-ஆக்கம்
சிம்மம்-நற்செயல்
கன்னி-தெளிவு
துலாம்- போட்டி
விருச்சிகம்-மாற்றம்
தனுசு- சந்தோஷம்
மகரம்-முயற்சி
கும்பம்-வேகம்
மீனம்-கவனம்
- சங்குதீர்த்த குளத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை சங்கு தோன்றுவதாக நம்பப்படுகிறது.
- சங்கு நன்னீரில் உருவாவது அதிசயமாக பார்க்கப்படுகிறது.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. இங்குள்ள சங்குதீர்த்த குளத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை சங்கு தோன்று வதாக நம்பப்படுகிறது. சங்குகள் பெரும்பாலும் கடலில் உள்ள உப்பு நீரில் தோன்றும். ஆனால் நன்னீரில் உருவாவது அதிசயமாக பார்க்கப்படுகிறது.
சங்கு தீர்த்த குளத்தில் கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தெப்பக்குளத்தில் சங்கு தோன்றியது. அதன்பின்னர் நேற்று காலை அந்த குளத்தில் மீண்டும் புனித சங்கு தோன்றி வெளியே வந்தது. இதனை கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்தனர். இதனை காண ஏராளமான பக்தர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் புதிதாக தோன்றிய சங்கிற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிறிய பல்லக்கில் மேள தாளத்துடன் ஊர்வலமாக மாடவீதியை சுற்றி வந்து தாழக்கோவிலை வந்தடைந்தது.
பின்னர் பக்தர்கள் பார்வைக்காக அங்கு சங்கு வைக்கப்பட்டது. நேற்று இரவு 8 மணிவரை திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சங்கை பார்த்து தரிசனம் செய்து சென்றனர்.
இன்று சிவராத்திரி என்பதால் காலை முதலே கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. குளத்தில் தோன்றிய சங்கை பார்க்க ஏராளமான பக்தர்கள் சுற்றுப்புற பகுதியில் இருந்து வந்தனர். இதனால் கோவிலில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. பக்தர்கள் பக்தியுடன் சங்கை பார்த்து வழிபட்டு சென்றனர்.
உள்ளுர் மற்றும் வெளியூர் பக்தர்கள் அதிகளவில் சங்கை பார்க்க வருவதால் வருகிற 13-ந் தேதி வரை சங்கு தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. சங்கை சுற்றி பூ அலங்காரம் செய்து பக்தர்கள் பார்வைக்கு வைத்து உள்ளனர்.
சிவராத்திரியை முன்னிட்டு தாழக்கோவில் கிழக்கு கோபுரம் மின்வி ளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது. சங்கு தரிச னம் நடைபெறும் நாட்கள் வரை கோபுர மின் அலங்காரமும் இருக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் தருபவர் என்று பொருள்.
- திருவிடை மருதூர் மகாலிங்க சுவாமியை வழிபட்டால் மறுபிறவி கிடையாது.
1. சிவராத்திரி என்ற சொல் சிவனுடைய ராத்திரி, சிவமான ராத்திரி, சிவனுக்கு இன்பமான ராத்திரி என்று பல வகைப்பொருளை தருகிறது.
2. சிவராத்திரி 4 ஜாமங்களிலும் ஒருவர் செய்யும் பூஜை, அவரை முக்தி பாதைக்கு அழைத்து செல்ல உதவும்.
3. சூரியன், முருகன், மன்மதன், இந்திரன், எமன், சந்திரன், குபேரன், அக்னி பகவான் ஆகியோர் முறைப்படி சிவராத்திரி விரதம் இருந்து பேறு பெற்றுள்ளனர்.
4. சிவராத்திரியன்று ஆலயங்களுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே சிவபெருமானுக்கு மனதில் அபிஷேகம் செய்து சிவனை வழிபடலாம்.
5. எறும்பு, நாரை, புலி, சிலந்தி, யானை, எலி போன்றவை கூட சிவபூஜையால் மோட்சம் அடைந்துள்ளன.
6. சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் தருபவர் என்று பொருள். எனவே எந்த அளவுக்கு ஒருவர் சிவ, சிவ.... என்று உச்சரிக்கிறாரோ, அந்த அளவுக்கு அவர் நன்மை பெறுவார்.
7. சிவராத்திரியன்று திருவிடை மருதூர் மகாலிங்க சுவாமியை வழிபட்டால் மறுபிறவி கிடையாது.
8. சிவராத்திரி தினத்தன்று, தியாகராஜர் என்ற பெயரில் ஈசன் வீற்றிருக்கும் தலங்களில் தரிசனம் செய்தால் பாவங்களில் இருந்து விடுபடலாம்.
9. கஞ்சனூரில் ஒரே பிரகாரத்தில் அடுத்தடுத்து 2 தட்சிணாமூர்த்திகள் உள்ளனர். சிவராத்திரி அன்று இவர்களை வழிபட்டால், சிவஞானம் எளிதில் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
10. சிவபெருமான் லிங்கமாக உருவெடுத்த தினமே சிவராத்திரி என்று ஒரு கருத்து உண்டு.
11. திருவதிகை தலத்தில் உள்ள வீராட்டானேஸ்வரரை சிவராத்திரி தினத்தன்று வழிபட்டால் ஆணவம், கர்மம், மாயை ஆகிய மூன்றும் நீங்கும்.
12. பண்டரிபுரத்தில் உள்ள பாண்டு ரங்கன் "சங்கர மற்றும் நாராயண" வடிவம் என்பார்கள். பாண்டுரங்கன் தலையில் கிரீடத்துக்கு பதில் "பாண லிங்கம்" இடம் பெற்றுள்ளது. சிவராத்திரி தினத்தன்று பாண்டுரங்கனுக்கு நிவேதனம் செய்வதில்லை. அவரும் அன்று சிவராத்திரி விரதம் இருப்பதாக சொல்கிறார்கள்.
13. மகா சிவராத்திரி தினத்தன்று அபிஷேகத்துக்கு உரிய பொருட்களை வாங்கி ஆலயத்துக்கு கொடுப்பவர்கள் பரமானந்த நிலையை அடைவார்கள் என்பது ஐதீகம்.
14. ஊத்துக் கோட்டை அருகில் உள்ள சுருட்டப் பள்ளியில் மட்டுமே சயன கோலத்தில் ஈசன் உள்ளார். சிவராத்திரி தினத்தன்று அங்கு ஈசனை வெள்ளி அங்கியில் தரிசனம் செய்யலாம்.
15. சிவராத்திரி தினத்தன்று சிவபுராணம், தேவாரம் மற்றும் திருமுறைகள் படிப்பது மிகவும் நல்லது.
16. திருவைகாவூர் ஈசனை சிவராத்திரி தினத்தன்று வழிபட்டால், மரண பயம் நீங்கும்.
17. கருட புராணம், கந்தபுராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களில் சிவராத்திரி மகிமை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
18. சிவராத்திரி தினத்தன்று மாலை சூரியன் மறைந்ததில் இருந்து மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை சிவ பூஜை செய்பவர்களுக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்கும்.
19. ஒரு வருடம் சிவராத்திரி விரதம் இருப்பது என்பது நூறு அசுவமேத யாகம் செய்த பலனும், பல தடவை கங்கா குளியல் செய்த பலனும் தரவல்லது.
20. சிவராத்திரியன்று கலச பூஜையுடன் லிங்கமும் வைத்து வழிபடுவது கூடுதல் பலன்களைத் தரும்.
- கன்னியாகுமரியில் சிவராத்திரியை யொட்டி சிவாலய ஓட்டம் நடைபெறும்.
- 12 சிவாலயங்களிலும் ஓடி சென்று தரிசனம் செய்தனர்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களிலும் சிவராத்திரியை யொட்டி சிவாலய ஓட்டம் நடைபெறும். முஞ்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து பக்தர்கள் நேற்று சிவாலய ஓட்டத்தை தொடங்கினார்கள். காவி துண்டு, காவி வேஷ்டி, கையில் விபூதி, பனையோலை விசிறி உடன் பக்தர்கள் ஓடத் தொடங்கினார்கள்.
திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு வீரபத்தி ரர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், கல் குளம் நீலகண்டசாமி கோவில், மேலாங்கோடு மகாதேவர் கோவில், திருவிடைக்கோடு மகா தேவர் கோவில், திருவி தாங்கோடு மகாதேவர் கோவில், திருப்பன்றியோடு மகாதேவர் கோவில், நட்டாலம் சங்கர நாராயணர் கோவில், பன்றிபாகம் ஆகிய 12 சிவாலயங்களிலும் ஓடி சென்று தரிசனம் செய்தனர்.

நேற்று காலை முதல் விடிய விடிய பக்தர்கள் ஒவ்வொரு கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தனர். கோவிந்தா... கோபாலா... என்ற பக்தி கோஷத்துடன் கோவில்களில் தரிசனம் செய்து வருகிறார்கள்.
இன்று 2-வது நாளாகவும் பக்தர்கள் காலையிலேயே மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்து சிவாலய ஓட்டத்தில் கலந்துகொண்டனர். இதையடுத்து அனைத்து சிவன் கோவில்களிலும் கூட்டம் அலைமோதியது.
குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இருசக்கர வாகனங்களிலும், வேன்களிலும் சென்று தரிசனம் செய்தனர். சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தை நடைபயணமாக சென்றும், ஓடி சென்றும் தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு வழிநெடுகிலும் குளிர்பானங்கள், உணவு வகைகள் வழங்கப்பட்டது. சிவாலய ஓட்டத்தில் கலந்துகொண்ட பெரும் பாலான பக்தர்கள் இன்றிரவு சிவாலயங்களில் தங்கி கண்விழித்து வழிபாடு செய்வார்கள்.
அனைத்து சிவாலயங்களிலும் இன்று இரவு விடிய விடிய பூஜைகளும் நடை பெறும். சிவராத்திரியை யொட்டி இன்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருந்தது.
சிவாலய ஓட்ட பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பஸ் இயக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலை மையில் 12 சிவாலயங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சிவராத்திரியை யொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களும் விழாகோலம் பூண்டிருந்தது. நாகர்கோவில் கோதை கிராமத்தில் உள்ள சிவன் கோவில் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது. சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி விழா இன்று நடக்கிறது. இன்று பிரதோஷம் என்பதாலும், மாலை 5 மணிக்கு கொன்றையடி நாதருக்கு அபிஷேகம் தொடர்ந்து மூலவராகிய தாணுமாலயன் சாமிக்கு அபிஷேகம் நடக்கிறது. மேலும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் சிவன், விஷ்ணு சாமிகள் திருவீதி உலா நடக்கிறது.
இரவு 11 மணிக்கு தாணுமாலயன் சாமிக்கு பால், தயிர், நெய், தேன், இளநீர், தண்ணீர், விபூதி, பஞ்சாமிர் தம் ஆகிய 8 விதமான பொருட்களால் அபிஷேகம் நடக்கிறது. இதைத் தொடர்ந்து சாமிக்கு தங்க அங்கி சாத்தப்பட்டு முதல் கால பூஜை நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு 2-வது கால பூஜையும், அதிகாலை 1.30 மணிக்கு 3-ம் கால பூஜையும், 2.30 மணிக்கு 4-ம் கால பூஜையும் நடக்கிறது. சிவராத்திரியை யொட்டி இரவு முழுவதும் கோவில் நடை திறந்தே இருக்கும்.
- பரமசிவனைப் போற்றி ஆராதிக்கும் சிறப்பான மாதங்களாகும்.
- தேய்பிறையின் 14-வது நாள் சதுர்த்தசி திதியில் நிகழ்வதுதான் சிவராத்திரி.
ராத்திரி என்ற பெயரோடு அழைக்கப்படும் விரதங்களில் சிவனை துதித்து வணங்கப்படும் விரதமே சிவராத்திரியாகும். சிவராத்திரி நித்ய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மகா சிவராத்திரி, யோக சிவராத்திரி என்றெல்லாம் வகைப்படுத்தப்பட்டுள்ளன. சிவராத்திரிகள் பல இருந்தாலும் மாசி மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் வரும் புண்ணிய தினமே மகாசிவராத்திரி ஆகும். மகேசனைப் போற்றி துதித்து அவன் அருளைப் பெற மகத்துவமிக்க மாதமாக கருதப்படுவது மாசி.
சிராவணம் (ஆவணி) மற்றும் மாசியும் பரமசிவனைப் போற்றி ஆராதிக்கும் சிறப்பான மாதங்களாகும். அதிலும் மாசி என்ற சொல்லில் பொதிந்துள்ள பொருள் எப்படிப்பட்டது என்று பாருங்கள்.
மா-இறைவன், சிம்மம், சிம்மராசி என்பதாகும். அசி-இருக்கிறாய். அதாவது இம்மாதம் முழுவதும் ஈசன் சிம்மராசியில் இருந்து அருள்பாலிப்பதால் மகேசனைப் போற்றி துதித்து அவன் ஆசி நாடுகின்ற மாதமாக விளங்குகிறது. மாதந்தோறும் தேய்பிறையின் 14-வது நாள் சதுர்த்தசி திதியில் நிகழ்வதுதான் சிவராத்திரி. அன்று நம் மனதை அலைக்கழிக்கும் மனோகாரகன் என அழைக்கப்படும் சந்திரன் கண்களுக்குத் தென்படாமல் சற்றே குறைய மறைந்தே இருக்கும். நம் மனம் அலை பாயாமல் ஒருமித்து இருப்பதற்கு அன்றைய நாள் சிவதியானம் மேற்கொள்வது மிக அவசியம் என ஞானியர் கூறியிருக்கின்றனர்.
அப்படி செய்து, பிறவிச் சூழலில் இருந்து விடுபட்டு, சிவ பதவி பெற்றிட, மகேசனை வழிபடும் உன்னத நாள்தான் சிவராத்திரி.
அம்பிகைக்கு நவ (ஒன்பது) ராத்திரி, அப்பனுக்கு ஓர் இரவு சிவராத்திரி என்பது மக்களிடம் புழங்கும் வழக்காடல் ஆகும். மாதந்தோறும் சிவராத்திரி உண்டு என்றாலும் மாசி மாதத்தில் வருவதே மகா சிவராத்திரி என்று போற்றப்படுகிறது.
ஊழிக்காலத்துக்குப் பின், பிரபஞ்சத்துக்கு இழந்த சக்தியை அளிப்பதற்காக சிவன், தனக்குள் அதை அடக்கிக் கொள்கிறார். அவ்வாறு உலகம் சிவனிடம் ஒடுங்கிய நாளே 'சிவராத்திரி'. அன்று எல்லாமே சிவன்தான். வேறெதுவம் இல்லை. ஆனால் சிவனை விட்டு என்றுமே எப்போதுமே பிரியாதவளான உமையவள்.
அன்றைய இரவு நேரத்தில் நான்கு ஜாமங்களிலும் சிவனாரை ஆகம முறைப்படி பூஜித்தாள். பொழுது புலர்ந்ததும் ஈசனை வணங்கிய அம்பிகை "சுவாமி தங்களை நான் பூஜித்த இந்த இரவு, சிவராத்திரி என உங்கள் பெயரால் அழைக்கப்பட வேண்டும்.
அத்துடன் சிவராத்திரி அன்று சூரிய அஸ்தமனம் முதல், மறுநாள் காலை சூரிய உதயம் வரை தேவர்கள் உள்பட எல்லோரும் தங்களை பூஜிக்க வேண்டும். அப்படி பூஜிப்பவர்களுக்கு சர்வ மங்கலங்களுடன் முக்தியையும் தாங்கள் அருள வேண்டும்" என வரம் பெற்றாள்.
அவ்வாறு அம்பிகை பூஜை செய்த மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி தினமே மகா சிவராத்திரி என அழைக்கப்படுகிறது. அன்று விரதம் இருந்து சிவபெருமானை மனமுருகி வழிபட்டால் குடும்பத்தில் மங்கல காரியங்கள் மளமளவென்று நடைபெறும்.
இந்துக்களின் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை எண்ணி முழு நாளும் வழிபடும் சிறப்பான விரதம் இந்த சிவராத்திரி ஆகும்.
அலை பாய்ந்து அவதிப்படும் மனிதனது ஐம்புலன்களும் ஓரிடத்தில் ஒடுங்கி பரமாத்மாவாகிய பரம் பொருளிடம் ஒடுங்கும் இந்த "ராத்திரி" மங்கலமான ஒளி சிந்தும் ராத்திரியாகும். நமது ஐம்புலன்களையும் அடக்கி இறைவனது சிந்தனையோடு இறையன்பில் மூழ்கியிருக்கும் போது இந்த உலகின் இடையூறுகள் நம்மை எதுவும் செய்வதில்லை.
உலகினில் உள்ள எல்லா பொருட்களுமே மாயையிடம் ஒடுங்கும். அப்படி மகா சக்தியிடம் ஒடுங்கும் காலம் இருள் நிறைந்ததாக இருக்கும். இந்த காலம் மகா பிரளயம் என்று சொல்லப்படுகின்றது. உலகம் எத்தனை காலம் இருக்கின்றதோ அத்தனை காலமும் பிரளயமும் உண்டு". இந்த காலத்தில் தான் உமாதேவி நான்கு காலமும் சிவனைப் பூஜித்தார். முழுமுதற் கடவுளான சிவபெருமான் மனம் இறங்கி உமா தேவியை நோக்கி உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.
அதற்கு அம்மையார் நான் தங்களை மனமுவந்து பூஜித்த இந்த நாள் சிவராத்திரி எனப்பெயர் பெற வேண்டும். இந்த தினத்தில் உங்களை முழு மனதோடும் பயபக்தியோடும் பூஜிப்பவர்கள் தங்கள் அருளினால் சகல பாக்கியங்களையும் பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். இறைவனும் அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்டார். அதனால் தான் சிவராத்திரி சிவ பூஜைக்கு சிறந்த நாளாகக் கொள்ளப்படுகின்றது.
சிவராத்திரி பற்றி பல கதைகள் மூலமாகவும் சிவ ராத்திரி மகிமை கூறப்படுகின்றது. சிவராத்திரியன்று நான்கு ஜாமங்களுக்கும் தனித்தனியான பூஜை முறைகள் சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளன. அதை கடைப்பிடித்தால் அனைத்து பலன்களையும் பெற முடியும்.
முக்கியமாக அன்று நாம் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். முதலாவது அபிஷேகம். இது ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதற்குறியது. அடுத்தது லிங்கத்துக்குக் குங்குமம் அணி வித்தல். இது நல் இயல்புகளையும் பலன்களையும் குறிக்கிறது.
மூன்றாவது பல்வேறு வகையான உணவுகளை சிவபெருமானுக்கு நைவேத்தியமாகப் படைக்கப் படுகிறது. இது வாழ்க்கையில் நீண்ட ஆயுளையும் நம்முடைய விருப்பங்களை எல்லாம் நிறைவேற்று வதையும் குறிக்கும். நான்காவதாக செய்ய வேண்டியது தீபம் ஏற்றுதல், இல் வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை செல்வங்களையும் நமக்குக் கொடுக்கும். எண்ணெய் விளக்கேற்றுவதால் நமக்கு அவசியமாக தேவைப்படுகிற ஞானத்தை அடைய முடியும். வெற்றிலை வழங்குவதால் உலக இன்பங்களை எல்லாம் அனுபவித்து முழு திருப்தி அடைய முடியும்.
சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரே ஒரு நேரம் மட்டும் சாப்பிட வேண்டும். சுத்தமான ஆடை உடுத்த வேண்டும். தூய்மையான மனதுடன் சிவனை வணங்க வேண்டும். அன்று இரவு முழுவதும் சிவனை நினைத்து மந்திரம் ஓதியோ, புராணங்களைப் படித்தோ உறங்க வேண்டும்.
மறு நாள் அதிகாலையில் நல்ல சுத்தமான நீரில் குளித்து சூரிய உதயத்துக்கு முன்னாடி சிவ சிந்தனையுடன் கோவிலுக்கு போய் வணங்க வேண்டும். பகல் முழுவதும் உணவு எதுவும் தேவையில்லை. இரவிலும் மறுமுறை குளித்து, கோவிலில் நான்கு காலங்களிலும் நடைபெறும் பூஜைகளைக் கண்டு சிவனை வணங்கி இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும்.
அவசியம் நாலுகால பூஜையையும், பார்க்க வேண்டும். அப்படி இல்லா விட்டாலும் கூட கடைசி 14 நாழிகையான லிங்கோத்பவ காலம் முழுவதுமாவது பஞ்சாட்சரம் சொல்லி வழிபட வேண்டியது அவசியம்.
அபிஷேகம் எதற்காக செய்யப்படுறது?
தேன், பால், தயிர், நெய் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது எண்ணற்ற பலன்களைக் கொடுக்கக் கூடியது. சிவ பெருமான் ஆலகால விஷத்தை உட்கொண்டதால் அவரோட உடல் மிகவும் வெப்பமாக மாறி விடுவதாக ஐதீகம். அந்த வெப்பத்தைத் தணிப்பதற்காகவே அவருக்குப் பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்கிறோம்.
வெண்பொங்கல், வடை, அன்னம், தோசை போன்றவற்றை நிவேதனமாகப் படைக்க வேண்டும். சிவனுக்கு மிகவும் விருப்பமானது வில்வம், விலக்க வேண்டியது தாழம்பூ.
மகா சிவராத்திரி அன்று தான் நான்கு சாமங்களிலும் ருத்திராபிஷேகம் செய்து வில்வத்தால் சகஸ்ரநாம அர்ச்சனை செய்ய வேண்டும். அப்படி செய்யும் போது இவ்வுலக சுகமும் மறுமையில் கைலாசமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.






