என் மலர்
வழிபாடு
- மனதை உருகச் செய்யும் செய்யுள்களில் இறைவனை போற்றிப் பாடி உள்ளார்.
- பன்னிரு திருமுறைகளில் 8-ம் திருமுறையாக வைத்து போற்றப்படுகிறது.
மனதை உருகச் செய்யும் செய்யுள்களால் இறை வனை போற்றிப் பாடிய மாணிக்கவாசகர், அதனை `திருவாசகம்' என்ற பெயரில் தொகுத்தார். இந்த திருவாசகம், பன்னிரு திருமுறைகளில் 8-ம் திருமுறையாக வைத்து போற்றப்படுகிறது. இந்த நூலில் இருந்து வாரம் ஒரு பாட லையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தை யும் பார்ப்போம்.
பாடல்:
கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்து அடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான்...
விளக்கம்:-
புதியதாக கறந்த பசும் பாலுடன் கரும்பின் சாறும், நெய்யும் கலந்தால், அதன் சுவை எவ்வளவு தித்திப்பாக இருக்கும் என்பதை எண்ணிப்பாருங்கள். அதுபோலத்தான் தன்னுடைய பக்தர்கள் மற்றும் அடியவர்களின் மனதில் தேன் ஊற்றெடுப்பது போல நின்று, அவர்களின் இந்தப் பிறவியை முற்றுப்பெறச் செய்யும் எங்களுடைய சிவபெருமானே.. ஐந்து முகங்களுடன், ஐந்து வண்ணங்களை தாங்கி அருள்பவன் நீ.. தேவர்கள் அனைவரும் உன்னை போற்றி வணங்கும்போது, அவர்களுக்கு அரிதானவராய் மறைந்திருந்து அருள் செய்யும் எம்பெருமானே...
- மாசி மாதம் என்றாலே குலதெய்வ வழிபாடு என்பது பிரபலம்.
- பொங்கல் வைத்து சுமார் 1,001 ஆடுகள் பலியிடப்பட்டன.
பசும்பொன்:
மாசி மாதம் என்றாலே குலதெய்வ வழிபாடு என்பது பிரபலம். அதனை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் 19 கிராமங்களுக்கு சொந்தமான பகவதி பரஞ்சோதி, அக்னி வீரபத்திரன், நிறை குளத்து அய்யனார் கோவில்கள் களை கட்டின.
இந்த கோவிலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மாசிகளரி திருவிழாவை முன்னிட்டு, ஆடுகள் பலியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 19 கிராம மக்கள் சார்பில், பொங்கல் வைத்து சுமார் 1,001 ஆடுகள் பலியிடப்பட்டன. இன்று அதிகாலை 2 மணி முதல் 8 மணி வரை கிடா வெட்டு நடைபெற்றது.
ஒரே வெட்டில் தலை வேறு, உடல் வேறாக ஆடுகள் வெட்டப்பட்டன. பெரும்பாலும் ஒவ்வொரு குடும்பத்தினரும் இரட்டை கிடா வெட்டுவது வழக்கம். பலியிடப்பட்ட ஆடுகள் மைதானத்தில் குவித்து வைக்கப்பட்டு சிறப்பு பூஜைக்கு பின் அவரவர் சமைக்க கொண்டு சென்றனர்.
இந்த திருவிழாவில், கமுதியை சுற்றிலும் உள்ள ஏராளமான கிராம மக்கள் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அசைவ உணவுகள் பரிமாறப்பட்டது. விழாவை முன்னிட்டு, கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
- 4-ந்தேதி காரடையான் நோன்பு.
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மாடவீதி புறப்பாடு.
12-ந்தேதி (செவ்வாய்)
* காரைக்குடி முத்துமாரி அம்மன் கோவிலில் காப்பு கட்டும் விழா தொடக்கம்.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* குரங்கணி முத்துமாலை அம்மன் பவனி வருதல்.
* சமநோக்கு நாள்.
13-ந்தேதி (புதன்)
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.
* தேரெழுந்தூர் ஞான சம்பந்தர் புறப்பாடு கண்டருளல்.
* மிலட்டூர் விநாயகப்பெருமான் பவனி.
* சமநோக்கு நாள்.
14-ந்தேதி (வியாழன்)
* காரடையான் நோன்பு.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* திருப்போரூர் முருகப்பெருமான் பால் அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
15-ந்தேதி (வெள்ளி)
* நாங்குநேரி வானமா மலை பெருமாள் கோவிலில் பங்குனி உற்சவம் ஆரம்பம்.
* திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
16-ந்தேதி (சனி)
* திருநெல்வேலி கரிய மாணிக்க பெருமாள் கோவில் ரத உற்சவம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மாடவீதி புறப்பாடு.
* மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள், இரவு சேஷ வாகனத்தில் பவனி.
* மேல்நோக்கு நாள்.
17-ந்தேதி (ஞாயிறு)
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தங்க குதிரையில் பவனி.
* திருச்சி தாயுமானவர் கற்பக விருட்சப வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் புறப்பாடு.
* காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சுவாமி, காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் வீதி உலா.
* மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் இரவு கருட வாகனத்தில் பவனி.
18-ந்தேதி (திங்கள்)
* ராமகிரிப்பேட்டை கல்யாண நரசிம்ம பெருமாள் கோவில் விழா தொடக்கம்.
* பரமக்குடி முத்தாலம்மன் கிளி வாகனத்தில் பவனி.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் வெள்ளி பூத வாகனத்தில் புறப்பாடு.
* திருப்புல்லாணி ஜெகந்நாதப் பெருமாள் சிம்ம வாகனத்தில் பவனி.
* மேல்நோக்கு நாள்.
- நோன்பு இருப்பது வாழ்வின் ஒரு முக்கிய அம்சமாகும்.
- ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருப்பது மிகவும் சிறப்பு மிக்கதாகும்.
இஸ்லாமியர் களிடத்தில் நோன்பு இருப்பது வாழ்வின் ஒரு முக்கிய அம்சமாகும். அதிலும் குறிப்பாக ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருப்பது மிகவும் சிறப்பு மிக்கதாகும்.
`நோன்பு' எனும் வார்த்தை அரபு மொழியில் `ஸவ்மு' என்னும் சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இதனுடைய பொருள் `தடுத்துக்கொள்ளுதல்' ஆகும். அதாவது, சூரியன் உதிக்கும் நேரத்தில் இருந்து மறையும் நேரம் வரையில் எதையும் சாப்பிடாமல், தீய செயல்களில் ஈடுபடாமல் உடலையும் உள்ளத்தையும் கட்டுப்படுத்தி ரமலான் மாதம் முழுவதும் 30 நாட்களும் இறையச்சத்துடன் இருப்பதே ரமலான் நோன்பு ஆகும்.
நோன்பின் மாண்புகள் குறித்தும், சிறப்புகள் பற்றியும் திருக்குர் ஆனில் பல்வேறு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏராளமான நபி மொழிகளிலும் ரமலான் நோன்பின் சிறப்புகள் விளக்கமாக கூறப்பட்டுள்ளது.
திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது: "நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. அதனால் நீங்கள் இறையச்சமுடையவர்களாக ஆகலாம்". (2:183)
இந்த ரமலான் மாதத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் உலக மக்களுக்கு நேர்வழிகாட்டியாக விளங்கும் திருக்குர்ஆன் அருளப்பட்டதும் ஒரு ரமலான் காலத்தில் தான்.
இதையே திருக்குர்ஆன் (2:185) இவ்வாறு கூறுகின்றது: "ரமலான் மாதம் எத்தகையதென்றால், அம்மாதத்தில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், மேலும் நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதும், சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடியதுமான குர்ஆன் இறக்கியருளப்பட்டது".
ரமலான் நோன்பின் சிறப்புகள் குறித்த நபி மொழிகள் வருமாறு:
`எவர் இறை நம்பிக்கையுடனும்' மறுமையின் நற்கூலியைப்பெறுகின்ற எண்ணத்துடனும் ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்பாராயின், அவர் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்.
`நிச்சயமாக சொர்க்கத்தில் ஒரு வாயில் இருக்கிறது. அது `ரய்யான்' என்று சொல்லப்படும். அவ்வாயில் வழியாக நோன்பாளிகள் மாத்திரம் நுழைவார்கள், அவர்கள் தவிர வேறு யாரும் அவ்வழியே நுழைய மாட்டார்கள், அவர்கள் நுழைந்தவுடன் அவ்வாயில் மூடப்பட்டு விடும்'.
'ரமலான் மாதம் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படும், நரகத்தின் வாயில்கள் மூடப்படும், சைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்'.
`அல்லாஹ்வின் பாதையில் ஒருநாள் நோன்பு நோற்றவரின் முகத்தை நரக நெருப்பை விட்டு எழுபது ஆண்டு கால அளவுக்கு தூரமாக்காமல் அல்லாஹ் விடுவதில்லை''.
`நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூவரின் பிரார்த்தனைகள் நிராகரிக்கப்படுவதில்லை. நோன்பாளி தனது நோன்பை திறக்கும் போது, நேர்மையான அரசர், பாதிக்கப்பட்டவரின் பிரார்த்தனை ஆகியவை தான் அந்த மூன்று பிரார்த்தனைகள்.
அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது:- ``நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, என்னை சுவனத்தில் நுழைவிக்கக்கூடிய ஒரு செயலைக்கொண்டு எனக்கு தாங்கள் ஏவுங்களேன் என வேண்டினான். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'நீர் நோன்பை பற்றிப் பிடித்துக் கொள்வீராக. ஏனெனில் நோன்புக்கு நிகர் வேறெதுவும் கிடையாது என பதில் கூறினார்கள். திரும்பவும் நான் நபியிடம் வந்து முறையிட, அண்ணலார் எனக்கு அதே பதிலைச் சொன்னார்கள்''. (நூல்: அஹ்மது)
நோன்பு இருக்கும் ரமலான் காலத்தில் அதிகமாக தான தர்மங்கள் செய்ய வேண்டும். மேலும் `ஜகாத்' எனப்படும் தர்மத்தையும் ரமலானில் நிறைவேற்றுவது கடமையாகும். நமது வருமானத்தில் குறிப்பிட்ட அளவு தர்மம் செய்வது ஜகாத் ஆகும்.
இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகின்றது:- இறை வழியில் ஹலால் (ஆகுமான) செல்வத்தையே செலவு செய்யுங்கள். தூய்மையான பொருட்களையே இறைவன் ஏற்றுக்கொள்கிறான். 'இறை நம்பிக்கை கொண்டோர்களே, நீங்கள் சம்பாதித்த பொருட்களில் இருந்தும், பூமியில் நாம் உங்களுக்கு வெளிப்படுத்தி தந்தவற்றிலும் சிறந்தவற்றை (தூய்மையானவற்றை- இறைவழியில்) செலவு செய்யுங்கள். (திருக்குர்ஆன் 2:267)
நோன்பு இருக்கும் போது மனது கட்டுப்பாடு நிலைக்கு வந்து தீய செயல்களில் இருந்து நம்மை விலக்கி நல்வழியில் செலுத்துகிறது. நம்மில் இருக்கும் கோபத்தினை முற்றிலும் இந்த நோன்பு குறைக்கிறது.
உடலில் பலவிதமான நோய்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் உடலில் தேங்கும் கழிவுகளே. ஆகவே, நோன்பு மேற்கொள்வதால் அது உடல் கழிவுகள், ரத்தக்குழாய்களில் தங்கியுள்ள அழுக்குகள், கசடுகள் நீங்கிவிடும். தொண்டை, இதயம், ரத்தத்தை தூய்மைப்படுத்தும்.
ஏனென்றால், உணவு சாப்பிடாத போது உடல் உறுப்புகளுக்கு ஓய்வு கிடைப்பதால் அந்த நேரங்களில் தன்னைத்தானே உடலானது சுத்தப்படுத்திக்கொள்கின்றன.
ரமலான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது என்றால், இந்த புனிதமிக்க ரமலான் மாதத்தில் தான் ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவான லைலத்துல் கத்ர் எனும் இரவு இம்மாதத்தில் உள்ளது.
`எவரொருவர் நோன்பாளிக்கு உண்ண உணவும் குடிக்க நீரும் கொடுத்து உதவுகிறாரோ அவருக்கு அல்லாஹ் தனது பெரிய நீர் தடாகத்தில் இருந்து நீர் புகட்டி அவர் சுவனம் செல்லும் வரை தாகிக்காமல் காப்பாற்றுகிறான்' என்பது நபி மொழியாகும். (அறிவிப்பவர்: ஸல்மான் பின் பார்ஸி (ரலி), நூல்: பைஹகி).
நோன்பின் மகிமையை உணர்வோம், நன்மைகள் பெறுவோம்.
- ஒவ்வொரு பக்தர்களுக்கும் குருவாக இருந்து அருள்பாலித்து வருகிறார்.
- ராகவேந்திர சுவாமிகளாக சன்னியாசம் ஏற்ற தினம் மார்ச் 12-ந் தேதியாகும்.
கடலூர் மாவட்டம் புவனகிரி என்ற ஊரில் 1595-ம் ஆண்டு திம்மண்ணபட்டர் - கோபிகாம்பாள் தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக பிறந்தவர் வேங்கடநாதன். இவருக்கு குருராஜன் என்ற சகோதரனும், வெங்கடம்பா என்ற சகோதரியும் இருந்தனர். வேங்கடநாதன் சிறு வயதிலேயே மிகுந்த ஞானம் கொண்டவராக விளங்கினார். இதன் காரணமாக தனது சகோதரர் குருராஜன் மூலமாக கும்பகோணம் ஸ்ரீமடத்தில் குருகுல பாடம் பயில சேர்க்கப்பட்டார். அப்போது ஸ்ரீ மடத்தை கவனித்து வந்தவர் ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர் ஆவார்.
வேங்கடநாதனின் அறிவுக்கூர்மையை கண்டு சுதீந்திரர் மிகவும் மகிழ்ந்தார். அங்கிருக்கும் மற்ற மாணவர்களிடையே வேங்கட நாதனை பற்றி உயர்வாக சொல்லி வந்தார். நாட்கள் கடந்து செல்ல, வேங்கடநாதனுக்கு திருமணம் செய்து வைக்க, அவரது சகோதரர் குருராஜன் நினைத்தார்.
அதனால் கும்பகோணம் சென்று தனது தம்பியை அழைத்து வந்து, திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். லட்சுமி கடாட்சம் பொருந்திய சரஸ்வதி என்ற பெண்மணிக்கு, வேங்கடநாதனை மணமுடித்து வைத்தார். ஏழ்மை நிலையில் மிகவும் கஷ்டப்பட்டு தனது இல்லற வாழ்க்கையைத் தொடங்கினார் வேங்கடநாதன்.
இந்த நிலையில் கும்பகோண ஸ்ரீமடத்தில் வேங்கடநாதனுக்கு பாடம் சொல்லி கொடுத்த சுதீந்திர தீர்த்தர் மிகவும் நோயுற்றார். 'தனக்கு பிறகு மடத்தை யார் கவனித்துக் கொள்வாரோ' என்ற கவலை அவருக்கு தோன்றியது. ஒரு பக்கம் வேங்கடநாதன் தனது மனைவியுடன் கடினமான நிலையில் காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் அவர்களுக்கு லட்சுமி நாராயணன் என்ற பிள்ளை பிறந்தது. இருவர் இருக்கும்போதே வறுமை சூழ்ந்திருந்த வேளையில், இப்போது மூன்று பேருடன் வறுமையும் வீட்டில் சூழத் தொடங்கியது. வேங்கடநாதனின் மனைவி சரஸ்வதி, "நாம் கும்பகோணம் சென்று உங்கள் குருவிடம் உதவி கேட்கலாமா?" என வேங்கடநாதனை கேட்க, அவரும் "சரி" என்று கூறவே, அவர்கள் கும்பகோணம் புறப்பட்டனர்.
கும்பகோண ஸ்ரீ மடத்தில் வேங்கடநாதனை கண்டதும், சுதீந்திர தீர்த்தர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். "எனக்குப் பிறகு இந்த மடத்தை நீதான் கவனிக்க வேண்டும், ஆகவே நீ சன்னியாசம் ஏற்று கொள்ள வேண்டும்" என்று வேங்கடநாதனை கேட்டுக் கொண்டார். அதற்கு மறுப்பு தெரிவித்த வேங்கடநாதன், "நான் எனது குடும்பத்துடன்தான் வாழப்போகிறேன். எனக்கு சன்னியாசம் தேவைஇல்லை சுவாமி" என்று கூறி அங்கிருந்து வெளியேறினார்.
அன்று இரவு வேங்கடநாதனின் கனவில் கலைவாணி சரஸ்வதி தேவி தோன்றி "வேங்கடநாதா, நீ சன்னியாசம் ஏற்றுக்கொள். நீ இந்த உலகை காக்க வந்தவன். உன்னால்தான் உலகம் சுபிட்சமாகப் போகின்றது. கவலை கொள்ள வேண்டாம். உடனே சன்னியாசம் ஏற்றுக் கொள்" என ஆசீர்வதித்து மறைந்தாள். அதன் பின்னர் நரசிம்மர், ராமர், கிருஷ்ணர், வேதவியாசர் போன்றோரெல்லாம் வேங்கடநாதன் கனவில் வந்து சன்னியாசம் ஏற்க வலியுறுத்தினர்.
பொழுது விடிந்தது. வேங்கடநாதன் தனது குருவான சுதீந்திர தீர்த்தரிடம், தான் கண்ட கனவை விளக்கினார். உடனே சுதீந்திர தீர்த்தரும் ஆனந்தத்தில் திளைத்தார். பின்னர் கி.பி. 1621-ம் ஆண்டு, அப்போதைய தஞ்சாவூர் அரசர் ரகுநாத பூபால் அரண்மனையில், வேங்கடநாதனுக்கு `ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தர்' என்ற திருநாமத்தை சூட்டி தீட்சை அளித்தார். அன்று முதல் வேங்கடநாதன் 'ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தர்' என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார்.
பல இடங்களுக்கு யாத்திரை சென்று, பல பக்தர்களுக்கு அனுக்கிரகம் செய்து, இறுதியாக மாஞ்சாலி என்ற மந்த்ராலய ஷேத்திரத்தில் 1671-ம் ஆண்டு ஜீவ பிருந்தாவனத்தில் சமாதி ஆனார். இன்று வரையிலும் அவர் பல பக்தர்களுக்கு நல்லாசிகள் வழங்கி கொண்டு, ஒவ்வொரு பக்தர்களுக்கும் குருவாக இருந்து அருள்பாலித்து வருகிறார்.
வேங்கடநாதனாக இருந்தவர், ராகவேந்திர சுவாமிகளாக சன்னியாசம் ஏற்ற தினம் மார்ச் 12-ந் தேதியாகும். இன்று 12-ந் தேதி (செவ்வாய்க்கிழமை), ராகேந்திரர் சன்னியாசம் ஏற்று 403-வது ஆண்டாகும். இந்த மகிழ்ச்சியான நன்னாளில் உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள ராகவேந்திர சுவாமி ஆலயங்களுக்கு சென்று அவரை வழிபடுங்கள். நிச்சயம் நீங்கள் கேட்டதை நடத்திக் காட்டுவார்.
அவர் பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் அத்யந்த ஞானி ஆவார். அவரால் பலனடைந்தவர்கள் கோடி. அந்த கோடியில் நீங்களும் ஒருவராக இருக்க, இந்த நன்னாளில் ராகவேந்திர சுவாமிகளை வணங்குங்கள்.
- அனைத்து முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
- தேவகோட்டை ஸ்ரீ ரெங்கநாதர் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மாசி 29 (செவ்வாய்க்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: துவிதியை காலை 11.01 மணி வரை பிறகு திருதியை
நட்சத்திரம்: ரேவதி நள்ளிரவு 12.35 மணி வரை பிறகு அசுவினி
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருவைகாவூர், திருக்கோகர்ணம் கோவில்களில் சிவபெருமான் கிரி பிரதட்சணம். திருவாரூர் ஸ்ரீ தியாகராஜர் வீதியுலா, தேவகோட்டை ஸ்ரீ ரெங்கநாதர் புறப்பாடு. சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-இன்பம்
ரிஷபம்-ஆதரவு
மிதுனம்-பதவி
கடகம்-முயற்சி
சிம்மம்-கவனம்
கன்னி-நிறைவு
துலாம்- நலம்
விருச்சிகம்-உதவி
தனுசு- யோகம்
மகரம்-துணிவு
கும்பம்-லாபம்
மீனம்-கவனம்
- பர்னாதன்' என்ற சிவபக்தன் கடும் தவம் இருந்தான்.
- தேவர்களுக்கெல்லாம் தேவர் மகாதேவர் என்பதை அவன் அறிந்தான்.
`பர்னாதன்' என்ற சிவபக்தன் இருந்தான். உணவு, தண்ணீர் மறந்து சிவனை நினைத்து, கடும் தவம் இருந்தான். ஒரு நாள் அவனுக்கு கடுமையான பசி ஏற்பட்டது. தவத்தை கலைத்து கண் திறந்து பார்த்தான்.
அவனைச் சுற்றி சிங்கங்களும், புலிகளும் பறவைகளும் என பல உயிரினங்களும் காவலுக்கு இருந்தன. பறவைகள் பழங்களை பறித்துக் கொண்டு வந்து அவன் முன் வைத்தது. பசி தீர சாப்பிட்டான். மீண்டும் தவம் செய்யத் தொடங்கினான். பலவருடங்கள் கடந்தோடியது.
தவம் முடிந்து சிவ வழிபாட்டை தொடங்கினான். ஒரு நாள், தர்பை புல்லை அறுக்கும் போது அவன் கையில் கத்திபட்டு ரத்தம் கொட்டியது. அவன் பதற்றம் இல்லாமல் இருந்தான். ஆனால் அவனை என்றும் காத்து அருளும் ஈசனின் மனம் பதறியது.
சிவபெருமான் வேடன் உருவில் பர்னாதனின் கையைப் பிடித்து பார்த்தார். என்ன ஆச்சரியம். ரத்தம் கொட்டிய இடத்தில் விபூதி கொட்ட ஆரம்பித்தது. வந்தது தேவர்களுக்கெல்லாம் தேவர் மகாதேவர் என்பதை அவன் அறிந்தான்.
ரத்தத்தை நிறுத்தியது யார்? என்பதை அடியேன் அறிவேன் ஸ்வாமி...!' உங்கள் சுய ரூபத்தை எனக்கு காட்டுங்கள் என்று பர்னாதன் வேண்டினான். சிவபெருமானும் காட்சி கொடுத்தார். "உனக்காகவே சாம்பலை உருவாக்கினேன். அதனால் இந்த சாம்பல் இன்று முதல் விபூதி என அழைக்கப்படட்டும் ". உன் நல் தவத்தால் விபூதி உருவானது. அக்னியை யாரும் நெருங்க முடியாதது போல இந்த விபூதியை பூசுபவர்களை துஷ்ட சக்தி நெருங்காது. விபூதி என் அம்சம் என்று கூறி அவனுக்கு ஆசி வழங்கினார் சிவபெருமான்.
- சிவன் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம்.
- திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் தெப்ப உற்சவம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மாசி 28 (திங்கட்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: பிரதமை நண்பகல் 1.17 மணி வரை பிறகு துவிதியை
நட்சத்திரம்: உத்திரட்டாதி பின்னிரவு 2.06 மணி வரை பிறகு ரேவதி
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று சந்திர தரிசனம். சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் தெப்ப உற்சவம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். பாலாபிஷேகம. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், ஸ்ரீ அராளகேசியம்பாள் சமேத ஸ்ரீ ரத்தினகிரீசுவரரர் கோவிலில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம்
இன்றைய ராசிபலன்
மேஷம்-அமைதி
ரிஷபம்-நட்பு
மிதுனம்-உண்மை
கடகம்-புகழ்
சிம்மம்-தனம்
கன்னி-அன்பு
துலாம்- வரவு
விருச்சிகம்-போட்டி
தனுசு- கணிப்பு
மகரம்-உவகை
கும்பம்-பாராட்டு
மீனம்-துணிவு
- மாசி அமாவாசையையொட்டி மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது.
- பக்தர்கள் ஆக்ரோஷத்துடன் ஊர்வலமாக வந்தனர்.
சேலம்:
சேலத்தில் மாசி அமாவாசையையொட்டி மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி ஆடு, கோழிகளை கடித்தபடி பக்தர்கள் ஆக்ரோஷத்துடன் ஊர்வலமாக வந்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி விழாவிற்கு அடுத்து வரும் மாசி அமாவாசை அன்று நடக்கும் மயான கொள்ளை நிகழ்ச்சி சேலத்தில் மிகவும் பிரபலமானது. பல 100 ஆண்டுகளாக இந்த மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்து வருகிறது.
அதன்படி மாசி மாத அமாவாசையான இன்று சேலம் மாநகரில் பல்வேறு இடங்களில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.
குறிப்பாக சேலம் டவுன் தேர்வீதி, ஜான்சன்பேட்டை, வின்சென்ட், கிச்சிப்பாளையம் நாராயண நகர் ஏரிக்கரை மற்றும் ஆண்டிப்பட்டியில் உள்ள அங்காளம்மன் கோவில்கள் உள்பட பல்வேறு அங்காளம்மன், பெரியாண்டிச்சி அம்மன் கோவில்களில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த கோவில்களில் இருந்து சாமி சிலைகளை அலங்கரித்து பக்தர்கள் மேளதாளங்களுடன் ஆங்காங்கே உள்ள சுடுகாட்டிற்கு ஊர்வலமாக எடுத்து சென்றனர். சாமி சிலைகளுக்கு முன்னால் பக்தர்கள் காளி, அங்காள பரமேஸ்வரி உள்பட பல்வேறு அம்மன்கள் வேடம் அணிந்து ஆடியவாறு சென்றனர். அப்போது, வழிநெடுக திரளான பக்தர்கள் நின்று தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தி, சாமியாடியவாறு வந்தவர்களிடம் ஆடு, கோழிகளையும், முட்டைகளையும் கொடுத்து வேண்டிக்கொண்டனர்.

மேலும் ஆட்டுகுட்டிகளை வாங்கிய பக்தர்கள், அதை தங்கள் கழுத்து மேல் தூக்கி போட்டு ஆடியதோடு, ஆட்டின் குரல்வளையை கடித்து ரத்தம் குடித்ததையும் காண முடிந்தது. இது ஒருபுறம் இருக்க, சில பக்தர்கள் கோழியை வாயில் கவ்வியபடி அதன் ரத்தத்தை குடித்தவாறு ஆடிக்கொண்டு சுடுகாட்டை நோக்கி சென்றனர்.
மேலும், சில பக்தர்கள் சுடுகாட்டின் புதைக்குழியில் கிடந்த இறந்த மனிதர்களின் மண்டை ஓடு மற்றும் எலும்புகள் ஆகியவற்றுடன் ஆடு, கோழிகளை வாயில் கவ்வியபடி ஆக்ரோஷத்துடன் ஊர்வலமாக சென்றனர்.
இந்த காட்சிகள் சாலையில் நின்றிருந்த பொதுமக்களை மெய்சிலிர்க்க வைத்தது. சேலம் ஜான்சன்பேட்டை பிள்ளையார் நகர் பகுதியில் உள்ள காக்காயன் சுடுகாட்டில் நேற்று மயான கொள்ளை நிகழ்ச்சியை யொட்டி ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர்.
அப்போது பல்வேறு இடங்களில் இருந்து ஆக்ரோஷத்துடன் சாமியாடி வந்த பக்தர்கள் அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு விபூதி கொடுத்து ஆசி வழங்கினர். மேலும், தீராத நோய்கள் குணமாகவும், திருமண தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும் தரையில் படுத்திருந்த பக்தர்கள் மீது சாமி வேடம் அணிந்திருந்தவர்கள் தாண்டி ஆக்ரோஷமாக சென்றனர்.
- 49-வது குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
- ஆயிரக்கணக்கானோர் குண்டம் இறங்கி அங்காளம்மனை வழிபட்டனர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் புகழ்பெற்ற அங்காளம்மன் கோவிலில் 49-வது குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று நடை பெற்றது.
முன்னதாக குண்டம் திருவிழாவானது கடந்த 7-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, கிராம சாந்தியுடன் தொடங்கியது. தொடர்ந்து கொடியேற்றம், யாகசாலை பூஜை, மகாசிவராத்திரி, மயான பூஜை, சக்தி விந்தை அலகு தரிசனம், மாவிளக்கு பூஜை நடைபெற்றது.
நேற்று மாலை அக்னி குண்டம் வளர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. 2 அடி அகலம்,45 அடி நீளம் கொண்ட குண்டத்தில் வேப்பமரங்களை போட்டு அக்னி வளர்க்கப்பட்டது.சுமார் 10 மணி நேரம் அக்னி வளர்த்து குண்டம் தயார் செய்யப்பட்டது.

இன்று காலை 7 மணி முதல் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் கோவில் பூசாரிகள் மற்றும் நிர்வாகிகள் குண்டத்தில் இறங்கினர். பின்னர் ஓம்சக்தி, பராசக்தி கோஷம் விண்ணதிர கைக்குழந்தைகளுடன் பெண்கள், சிறுவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் குண்டம் இறங்கி அங்காளம்மனை வழிபட்டனர்.
காலை 8 மணிக்கு அக்னி அபிஷேகம், பொங்கல் வைத்தல், பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றது. பல்லடம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- இன்று மாசி மாத மறைநிலா அமாவாசை.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் வருகை.
ராமேஸ்வரம்:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மகா சிவராத்திரி திருவிழா மற்றும் தேரோட்டம் நடைபெற்று நிறைவடைந்த நிலையில் இன்று மாசி மாத மறைநிலா அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் வருகை தந்தனர்.
அக்னி தீர்த்தக் கடலில் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்கள் நினைவாக அவர்களுக்கு திதி தர்பணம் மற்றும் பிண்ட பூஜை கொடுத்து வழிபட்டனர். இதன் பின்னர் ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீண்ட நேரம் காத்திருந்து நீராடி ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்து வழிபட்டனர்.
இந்த நிலையில், அமாவாசையை முன்னிட்டு சுவாமி, அம்பாள் இந்திர விமானத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. பின்னர் மதியம் 1.31 மணிக்கு சுவாமி, அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்த வாரி நடைபெற்றது. அதிகளவில் பக்தர்கள் வருகையை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டனர்.
- சனிக்கிழமை அரசு விடுமுறை என்பதால் பக்தர்கள் அதிக அளவில் குவிந்தனர்.
- திருப்பதியில் நேற்று 68,446 பேர் தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. மகா சிவராத்திரியை முன்னிட்டு வெள்ளி மற்றும் சனிக்கிழமை அரசு விடுமுறை என்பதால் பக்தர்கள் அதிக அளவில் தரிசனத்திற்காக குவிந்தனர்.
பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் தங்க வைத்து தரிசனத்திற்கு அனுமதித்தனர்.
இதனால் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும் பக்தர்கள் தரிசனத்திற்காக நீண்ட தூரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 68,446 பேர் தரிசனம் செய்தனர். 28, 549 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.24 கொடி உண்டியல் காணிக்கை வசூலானது. 18 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.






