என் மலர்tooltip icon

    வழிபாடு

    • வாழ்வாதாரத்தை நிர்ணயம் செய்வதில் பொருளாதாரத்தின் பங்கு அளப்பரியது.
    • நவீன யுகத்தில் லேட்டஸ்ட் டிரெண்டிங்கான தொழில்கள் பல உள்ளது.

    ஒரு தனி மனிதனின் வாழ்வாதாரத்தை நிர்ணயம் செய்வதில் பொருளாதாரத்தின் பங்கு அளப்பரியது. ஆள்பாதி, ஆடை பாதி என்பது போல் ஒரு மனிதனின் கர்ம வினைப்படி அமையும் தொழிலே சமுதாய அங்கீகாரத்தையும் பொருளாதாரத்தையும் நிர்ணயம் செய்கிறது. நவீன யுகத்தில் லேட்டஸ்ட் டிரெண்டிங்கான தொழில்கள் பல உள்ளது.

    ஆனால் ஒருவரின் ஜாதக ரீதியான ஜீவன அமைப்பை தேர்வு செய்வதில் பல விதமான கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. ஒருவரின் ஜாதகரீதியான தொழிலை 10-ம்மிடமான தொழில் ஸ்தானமும், சனி மற்றும் புத பகவானுமே நிர்ணயம் செய்கிறார்கள். 12 ராசியினருக்கும் பயன்படும் தொழில், உத்தியோகம் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

    மேஷம்

    மேஷ ராசியில் பிறந்தவர்கள் உணவு விடுதி, உணவுப் பொருட்கள் வியாபாரம். உர வியாபாரம், எண்ணை வியாபாரம், சுரங்கத்தொழில், சிறு பொருட்கள் விற்பனை, திரவப் பொருட்கள் விற்பனை, கழிவு பொருட்கள் விற்பனை, தோல் வியாபாரம், இரும்பு வியாபாரம்,விவசாயம், கட்டிட வேலை, மர வியாபாரம், கல், மண் வியாபாரம், கடினமான வேலைகள் கீழ்மட்ட ஊழியம் போன்றவற்றை தேர்வு செய்யலாம்.

    ரிஷபம்

    ரிஷப ராசியினர் மனவியல் கலை, ஜோதிடம், ஆன்மீகம், ஆசிரியர் பணி, ஆராய்ச்சி துறை . நிர்வாகப் பொறுப்பு, ஆலோசனை வழங்குதல், வாயு பொருட்கள் விற்பனை, விமானத்துறை, விண்வெளி துறை, தீயணைப்புத்துறை, சிறைச்சாலை பணி, தொல்பொருள் ஆராய்ச்சி, பொறியியல் துறை, சுரங்கப்பாதை அமைத்தல், வெடிகுண்டு தயாரிப்பு, பொதுஜன வழிகாட்டி, சுங்க இலாகா பணி, இறைச்சி கடை உளவுத்துறை போன்ற தொழில், உத்தியோகத்தில் பணி செய்யலாம்.

    மிதுனம்

    மிதுன ராசியினர் கல்வித்துறை, ஆன்மீகம், மருத்துவம், நிதித்துறை, நீதித்துறை, தூதரகம், கடற்படை, நீர் நிலைகளில் வேலை செய்தல், ஆலயப் பணி, மத போதனை செய்தல், வங்கியில் பணி செய்தல்.ஜோதிடம், பேச்சாற்றல், கணிதம், கணினித் துறை, கவிதை எழுதுதல், சிற்பம் வடித்தல், சித்திரம் வரைதல், நடிப்பு, நாடகம், சாஸ்திரம் , நுண்கலைகள். எழுத்தாளர், கவிஞர்கள், நகைச் சுவை நடிகர்கள், பேச்சாளர்கள், பத்திரிக்கை துறை, அரசியலை அலசுபவர்கள், விமர்சிப்பவர்கள், கல்வித்துறை, ஓவியர்கள் போன்ற தொழிலில் ஈடுபடலாம்.

    கடகம்

    கடக ராசியில் பிறந்தவர்கள் அரசு உத்தி யோகம், காவல்துறை ராணுவம், தீயணைப் புத்துறை, விளையாட்டுத்துறை, பொறியியல் துறை, தொழிற்சாலைகளில் பணி செய்தல், இரும்பு சம்பந்தமான தொழில், உழைக்கூடம் தொடர்பான தொழில், செங்கல் சூளை வைத்தல், மட்பாண்டங்கள் செய்தல், சுரங்கத் தொழில், அறுவை சிகிச்சை மருத்துவம், ஆயுதங்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை செய்தல், சமையல் கலை, பூமித்தொழில் விவசாயம் போன்றவற்றில் ஈடுபடலாம்.

    சிம்மம்

    சிம்ம ராசியில் பிறந்தவர்கள் பொன், வெள்ளி மற்றும் ரத்தின வியாபாரம், கால்நடை வளர்ப்பது, வட்டி தொழில், தரகுத்தொழில், நிதி நிறுவனங்களில் பணி செய்தல், கலைப் பொருட்கள், அழகு, பொருட் கள், ஆடம்பரப் பொருட் கள், அலங்காரப் பொருட்கள், வாசனைப் பொருட்கள், சுவையான உணவுப் பொருட்கள், சொகுசு பொருட்கள், மற்றும் இனிப்பான பானங்கள் விற்பனை செய்தல், இயல், இசை நாடகம், திரைப்படம், கவிதை, எழுதுதல், மற்றும் பாட்டு பாடுதல் போன்ற கலைத் தொழில்கள், தங்கும் விடுதி, மற்றும் கேளிக்கை விடுதிகள் நடத்துதல் கருவூலத்துறை போன்ற பணியில் ஈடுபடலாம்.

    கன்னி

    கன்னி ராசியை சார்ந்தவர்கள் செய்தி மற்றும் தகவல் தொடர்பு துறை, விண்வெளி துறை, கல்வித்துறை, தபால் துறை, தொலைபேசித் துறை, தந்தி துறை, புத்தகத் தொழில், கணிதத்துறை, கணக்கர், தணிக்கையாளர், போன்ற தொழில்கள் சட்டம் மற்றும் நீதித்துறை, ஆலோசனை வழங்கும் நிறுவனங்கள், நவீன பொறியியல் துறை, எழுத்து துறை, மேடைப்பேச்சு, ஜோதிடம், பலவிதமான வியாபாரம் செய்தல் தூதரகம் போன்ற பணிகளில் ஈடுபடலாம்.

    துலாம்

    துலாம் ராசியினர் திரவப் பொருட்கள், உணவுப் பொருட்கள் விற்பனை செய்தல், ஏற்றுமதி இறக்குமதி செய்தல், கடல் கடந்து சென்று வியாபாரம் செய்தல், வேளாண்மை தொழில், மருத்துவம், ஜோதிடம், ஆன்மீகம், போக்குவரத்து, கலைத்துறை, கல்வித்துறை போன்றவற்றில் ஆர்வம் செலுத்தலாம்.

    விருச்சிகம்

    விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு அரசு உத்தியோகம் ,அரசியல், பிரதம மந்திரி, முதல்-அமைச்சர், நிர்வாகப் பொறுப்பு, இரும்பு மற்றும் நெருப்பு சம்பந்தமான தொழில், Extension துறை, அறுவை சிகிச்சை மருத்துவர், சமூக சேவை செய்தல், தர்ம ஸ்தாபனம் நடத்துதல் சிறப்பான பலன் தரும்.

    தனுசு

    தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு கணக்கர் தொழில், தணிக்கையாளர், பலவிதமான வியாபாரம் செய்தல், ஆசிரியர், எழுத்தர், மளிகை கடை வைத்தல், சில்லரை வியாபாரம் ஆகியன பயன் தரும்.

    மகரம்

    மகர ராசியைச் சார்ந்தவர்கள் பொன், வெள்ளி மற்றும் ரத்தின வியாபாரம், அழகு பொருட்கள், கலைப் பொருட்கள், சொகுசுப்பொருட்கள், வாசனை திரவியங்கள், மற்றும் ஆடம்பரப் பொருட்கள் விற்பனை செய்தல்,, வட்டி தொழில், தரகு தொழில், வங்கிப் பணி, நிதி நிறுவனங்களில் பணி செய்தல், நிதித்துறை, நீதித்துறை, தங்கும் விடுதி, கேளிக்கை விடுதி, மற்றும் அழகு நிலையங்கள் நடத்துதல் இயல், இசை, நாடகம், பாட்டு மற்றும் கலைத் தொழில்கள் பயன்தரும்.

    கும்பம்

    கும்ப ராசியினருக்கு நெருப்பு சம்பந்தமான தொழில், பொறியியல் துறை, சுரங்கத் தொழில், விவசாயம், மின்னியல் துறை, மாந்திரீகம், ஜோதிடம், ஆன்மீகம், பூமித்தொழில், தாதுப் பொருட்கள் சம்பந்தமான தொழில், ஆராய்ச்சி செய்தல், உலோகங்கள் மற்றும் கருவிகள் சம்பந்தமான தொழில் பலன் தரும்.

    மீனம்

    மீன ராசியினர் மர வியாபாரம், ஆன்மீகத்துறை, வங்கித் தொழில் சட்டம், மற்றும் நீதித்துறை, அறநிலையத்துறை, நிதித்துறை, கல்வித்துறை, ஆயுத சாலை, போற்பயிற்சி சமூக சேவை தர்ம ஸ்தாபனங்கள் நடத்தலாம். பெரும்பான்மையாக ஒருவரின் விதிப்படி அவரவரின் தொழில், உத்தியோகத்தை பிரபஞ்சமே நிர்ணயித்துவிடும். தொழில் சார்ந்த குழப்பம் இருப்பவர்களுக்கு இந்த கட்டுரை நல்ல பயன் தரும்.

    • மூன்றாம் பிறையில் அன்னை பாத்திமா (ரலி) நினைவு கூரப்படுகிறார்கள்.
    • ரமலான் பிறை 3-வது தினத்தில் அன்னை இறைவனடி சேர்ந்தார்கள்.

    பாத்திமா (ரலி) அவர்களின் தியாகம்

    புனித ரமலான் மாதம் பிறந்துவிட்டால், அதன் மூன்றாம் பிறையில் அன்னை பாத்திமா (ரலி) அவர்கள் நினைவு கூரப்படுகிறார்கள். ஹிஜ்ரி 11-ம் ஆண்டில் ரமலான் பிறை 3-வது தினத்தில் புதன்கிழமை அன்று அன்னை அவர்கள் தமது 25-ம் வயதில் (கி.பி. 632 நவம்பர் 21) பூமியின் மடியிலிருந்து இறைவனடி சேர்ந்தார்கள்.

    அன்னை பாத்திமா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்கும் அன்னை கதீஜா (ரலி) அவர் களுக்கும் பிறந்த கடைக்குட்டி செல்லக் குழந்தை ஆவார். நபி (ஸல்) அவர்களுக்கு நபி பட்டம் கிடைத்த ஓராண்டிற்குப் பின் நபி (ஸல்) அவர்களின் 41-ம் வயதினிலே அன்னை பாத்திமா (ரலி) அவர்கள் பிறந்தார்கள்.

    இவர்கள் சிறுவயதிலேயே தமது தந்தையின் மார்க்கக் கொள்கையை, ஓரிறைக் கொள்கையாக ஏற்றுக்கொண்டு முஸ்லிம் பெண்மணியாக நடந்து கொண்டார்கள்.

    எல்லா சூழ்நிலைகளிலும் தந்தைக்கு துணையாக, தந்தையின் சொல்படி வாழ்ந்து வந்தார்கள். தந்தையின் சொல்லும், செயலுமே நல்வழி காட்டும் என்பதை உணர்ந்து அதன்படி நடந்தார்கள்.

    தமது தாயின் மரணத்திற்கு பிறகு நபி (ஸல்) அவர்களின் சோதனையான காலகட்டங்களில் தாய்க்கு நிகராக இருந்து ஆறுதல் அளித்து வந்தார்கள். நிழலாக இருந்து தந்தையை கவனித்துக்கொண்டார்கள்.

    உஹதுப் போரின் போது நபி (ஸல்) அவர்களின் முகம் காயப்படுத்தப்பட்டது. அவர்களின் நடுப்பல் உடைக்கப்பட்டது. அவரது தலைக்கவசம் தலையின் மீது வைத்து நொறுக்கப்பட்டது. பாத்திமா (ரலி) தமது தந்தை நபி (ஸல்) அவர்களின் மேனியிலிருந்து வழிந்த ரத்தத்தை கழுவிக்கொண்டிருந்தார்கள். பாத்திமாவின் கணவர் அலி (ரலி) ரத்தத்தை தடுத்து நிறுத்த முயற்சித்தும் இன்னும் அது அதிகமாகிக் கொண்டே போனது. இதைப்பார்த்த பாத்திமா (ரலி) ஒரு பாயை எடுத்து, எரித்து சாம்பலாக்கி அதை நபியின் காயத்தில் வைத்து அழுத்தினார்கள். உடனே, ரத்தப் போக்கு நின்று விட்டது. (அறிவிப்பாளர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி), நூல்: புகாரி)

    'ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் கஅபாவினருகில் தொழுது கொண்டிருந்தார்கள். குரைஷிகளில் மோசமான ஒருவன், நபி (ஸல்) அவர்கள் சிரசை தாழ்த்தியபோது ஒட்டகத்தின் சாணத்தையும், ரத்தத்தையும், கருப்பையையும் எடுத்து வந்து அன்னாரின் இரு தோள் புஜத்தில் போட்டுவிட்டான். நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாவிலேயே கிடந்தார்கள். இதைப்பார்த்து, குரைஷிகள் ஒருவர் மீது ஒரு வர்

    சாய்ந்துவிடும் அளவுக்கு சிரித்தார்கள். சிறுமியாக இருந்த பாத்திமா (ரலி) அவர் தான் அவற்றை அப்புறப்படுத்தினார். அப்புறம்தான் நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். பாத்திமா (ரலி) குரைஷிகளை ஏச ஆரம்பித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் 'இறைவா! குரைஷிகளை நீ பார்த்துக் கொள்!' என்று மூன்று தடவை கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: இப்னுமஸ்ஊத் (ரலி), நூல்:புகாரி)

    அலி (ரலி) அவர்களுக்கும், பாத்திமா (ரலி) அவர்களுக்கும், ஹிஜ்ரி 2-ம் ஆண்டு ரமலான் மாதம் திருமணம் நடந்தது. அப்போது பாத்திமா(ரலி) அவர்களுக்கு 15 வயது 5 மாதங்கள் ஆகும். அலி (ரலி) அவர்களுக்கு 21 வயது 5 மாதங்கள் ஆகும்.

    பாத்திமா (ரலி) நபியின் மகள் என்பதனால் அவர்களுக்கென்று தனி சலுகைகளை நபி (ஸல்) அவர்கள் வழங்கவில்லை. 'முஹம்மதின் மகள் பாத்திமாவே! என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதைக் கேள்! தருகிறேன். ஆனாலும், இறைவனின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் உன்னைக் காப்பாற்ற முடியாது' என நபி (ஸல்) அவர்கள் தன் மகளிடம் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

    நபி (ஸல்) அவர்கள் தன் மகளிடம் கனிவு, பாசம் காட்டினாலும், நீதி, நேர்மையுடன் நடந்து கொண்டார்கள்.

    • காரடையான் நோன்பை பெண்கள் கடைப்பிடிப்பார்கள்.
    • பெண்களின் மாங்கல்ய பாக்கியம் நிலைத்து இருக்கும்

    மாசி மாதமும், பங்குனி மாதமும் சேரும் நாளில் `காரடையான் நோன்பை' பெண்கள் கடைப்பிடிப்பார்கள். `கவுரி விரதம்', `காமாட்சி விரதம்', `சாவித்திரி விரதம்' என்று பல பெயர்களில் இந்த விரதம் அழைக்கப்படுகிறது. `மாசி கயிறு பாசி படரும்' என்பது சொல்வழக்கு. அதாவது இந்த விரதம் இருக்கும் பெண்களின் மாங்கல்ய பாக்கியம் நிலைத்து இருக்கும் என்பது இதன் பொருள்.

    அஸ்வபதி என்ற மன்னர், மாலதி தேவி என்ற நல்ல குணங்கள் நிரம்பப்பெற்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். நீண்ட காலமாக அவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படவில்லை. இதையடுத்து கணவன்- மனைவி இருவரும், வசிஷ்ட மகரிஷியை சென்று பார்த்து, தங்கள் குறைகளை கூறினர். அந்த தம்பதியர்க்கு, சாவித்திரி தேவியின் மகா மந்திரத்தை வசிஷ்டர் உபதேசம் செய்தார்.

    சாவித்திரி தேவியின் அந்த மகா மந்திரத்தை மன்னனும், அவனது மனைவியும் தொடர்ந்து சொல்லி வந்தனர். இதன் பயனாக விரைவிலேயே அவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

    தங்கள் தெய்வத்தின் ஞாபகமாக அந்த பெண் குழந்தைக்கு `சாவித்திரி' என்று பெயர் வைத்தார்கள். சாவித்திரி வளர்ந்து வருகையில் சிறிது தூரத்தில் உள்ள தேசத்தில் துயுமத்சேனன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு சத்திய சேனன் என்ற மகன் இருந்தான். சத்தியசேனன் மிக உயர்ந்த குணங்களைக் கொண்டிருந்தான்.

    சத்தியசேனன் அருமை பெருமைகளை கேள்விப்பட்ட சாவித்திரி, அவனையே தன் கணவனாக நினைத்து, திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தாள். அதே நேரத்தில் துயுமத்சேனன், தன்னுடைய பகைவர்களின் துரோகத்தால் ராஜ்ஜியத்தை இழந்து, தன் மனைவி, மகனுடன் ஒரு வனத்தை வந்தடைந்தான்.

    சாவித்திரி தன் தந்தையிடம் "சத்தியவானையே (சத்தியசேனன்) திருமணம் செய்வேன்" என்று கூறினாள். அப்பொழுது நாரத மகரிஷி அங்கு வந்து, "நீ நினைக்கும் சத்தியவான், தற்பொழுது நாட்டை இழந்து, கண்களை இழந்த தன் தந்தையுடன் காட்டில் வசித்து வருகிறான். எல்லாவற்றுக்கும் மேலாக, அவன் இன்னும் சரியாக 12 மாதத்தில் இறந்து விடுவான். அவனை நீ திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாயா?" என்றார்.

    அதற்கு சாவித்திரி "என் மனதால் நினைத்த சத்தியவானை, இனி நான் மறக்க மாட்டேன். என்ன நடந்தாலும் சத்தியவானை தான் திருமணம் செய்து கொள்வேன்" என்று உறுதி படக் கூறினாள்.

    இதையடுத்து சாவித்திரியின் தந்தையான அஸ்வபதி, தன் மகளை அழைத்துக் கொண்டு வனத்தை அடைந்தார். அங்கு வாழ்ந்து வந்த சத்தியவானுக்கு தன் மகளை திருமணம் செய்து கொடுத்தார்.

     சரியாக 12 மாதம் முடியும் வேளையில், நடுக்காட்டில் விறகு வெட்டிக் கொண்டிந்த சத்யவான், திடீரென்று தன் மனைவி சாவித்திரியின் மடியில் சரிந்து விழுந்து தன் உயிரை இழந்தான்.

    அவனது ஆன்மாவை தன் பாசக் கயிற்றால் கட்டி இழுத்துச் சென்றார், எமதர்மன். சாவித்திரி மேற்கொண்ட பதிவிரதை மகிமையால், அவளது கண்ணுக்கு எமதர்மன் தெரிந்தார். சாவித்திரி, எமதர்மனை பின் தொடர்ந்து சென்றாள். அதைக் கண்டு ஆச்சரியப்பட்ட எமதர்மன், "உன்னுடைய கண்ணுக்கு என் உருவம் எப்படி தெரிகிறது? நீ திரும்பிச்செல். சரீரத்துடன் யாரும் என் பின்னால் எமலோகம் வர முடியாது. இறந்த பின் தான் வர முடியும்" என்றார்.

    எமதர்மன் சொன்னதைப் பொருட்படுத்தாமல், அவரைப் பின் தொடர்ந்தாள் சாவித்திரி. இதையடுத்து எமதர்மன், "சரி.. உனக்கு ஒரு வரம் தருகிறேன். நீ கேள்" என்றார். சாவித்திரியோ, "என் கணவனைத் திருப்பிக் கொடுங்கள்" என்று கேட்க, அதற்கு எமதர்மன், "பறித்த உயிரை திருப்பித் தர மாட்டேன். பதிவிரதையே, வேறு ஏதாவது வரம் கேள்" என்று கூறினார்.

    உடனே சாவித்திரி, "என் மாமனார் தன் கண்களால் அவரது 100 பேரக் குழந்தைகளைக் காண வேண்டும்" என்று வரம் கேட்டாள். (சத்தியவான் துயுமத்சேனனுக்கு ஒரே மகன்). சாவித்திரி கேட்ட வரத்தை தருவதாக எமதர்மனும் வாக்கு கொடுத்தார்.

    பின்னர் சாவித்திரி, "என் கணவனின் உயிரை நீங்கள் எடுத்துச் சென்றுவிட்டால், எப்படி எனக்கு குழந்தை உண்டாகும்" என்றாள். எமதர்மன், சாவித்திரியின் சாதுர்யத்தை எண்ணி மகிழ்ந்து, சத்தியவானின் உயிரைத் திருப்பித் தந்ததுடன், துயுமத்சேனன் இழந்த ராஜ்ஜியத்தையும் திரும்பப் பெறுவான் என்று வரம் கொடுத்தார்.

    சாவித்திரிக்கு அவளது கணவனைத் திரும்பித் தந்தது, அவள் கடைப்பிடித்து வந்த பதிவிரதை விரதம்தான். அதைத்தான் நாம் `சாவித்திரி விரதம்' என்கிறோம்.

    விரதம் இருக்கும் முறை

    பூஜை அறையில் கோலம் போட்டு விளக்கேற்றி வீட்டில் உள்ள பெண் குழந்தைகளின் எண்ணிக்கையின்படி ஒவ்வொரு இலையாக எண்ணி கோலத்தின் மீது வைப்பார்கள். இலையின் நூனி வடக்கு நோக்கி இருக்குமாறு போட வேண்டும். கார் அரிசி மற்றும் வெல்லம் கொண்டு இனிப்பு அடை, மற்றும் உப்பு அடை செய்து பின் நெய் விளக்கேற்றி பூரண கும்பம் வைத்து அம்பாளை பூஜிப்பார்கள்.

    கலசத்திற்கு பூச்சரம் அல்லது மாலை அணிவித்து, ரவிக்கை துண்டு வைத்து, கும்பத்தை அலங்காரம் செய்வார்கள். பின்னர் கும்பத்திற்கு தூப, தீபங்கள் காட்டி அம்பாளை வழிபடுவார்கள்.

    இந்த இலையின் நுனிப்பகுதியில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், பூ கட்டிய மஞ்சள் சரடு ஆகியவற்றை வைத்து, இலையின் நடுவில் இரண்டு வெல்ல அடைகளும், வெண்ணெய்யும் வைக்க வேண்டும். வயதானவர்கள் இந்த இலையில் அம்மனுக்கு ஒரு சரடு சேர்த்து வைத்துக்கொள்வார்கள்.

    ஒற்றைப்படையில் இலை வந்தால், ஒரு இலையை அதிகப்படுத்துவார்கள். அதாவது ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு என இருந்தால் அதை மாற்றி, இரண்டு, நான்கு, ஆறு, எட்டு என இரட்டைப் படையில் வருமாறு இலைகளைப் போடுவார்கள்.

    வீட்டில் உள்ள வயதான பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள், ஒவ்வொரு இலையின் முன்பாக நின்று கொண்டு நீரை எடுத்து மூன்று முறை இலையை சுற்றி விட்டு, 'உருகாத வெண்ணெய்யும் ஓர் அடையும் நான் தருவேன். ஒரு காலும் என்னை விட்டு என் கணவர் பிரியாது இருக்க வேண்டும்' என சொல்லுவார்கள். பிறகு வீட்டில் உள்ள வயதான பெண், பூஜை அறையில் நின்று முதலில் சரடு ஒன்றை எடுத்து அம்மனுக்கு கட்டிவிட்டு அல்லது படத்திற்கு சாற்றி விட்டு, தோராம் என்னும் சுலோகத்தை சொல்லி, தன் கழுத்தில் கட்டிக்கொண்டு, குழந்தைகளுக்கும் அது போல் கட்டி விடுவார்கள்.

     அடையில் ஒன்றை தன் கணவருக்காக தனியாக எடுத்து வைத்துவிட்டு, பின் அடையை சாப்பிடுவார்கள். இரண்டு அடையை எடுத்து தனியாக வைத்து விட்டு, மறுநாள் பசு மாட்டிற்கு கொடுப்பார்கள். 'ஏழையார் நோற்ற நோன்பை மோழையார் கொண்டு செல்வார்' என்று பழமொழி. எனவே அன்று முழுவதும் மோர் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

    காரடையான் நோன்பை கடைப்பிடிப்பதால் ஜாதகத்தில் உள்ள மாங்கல்ய தோஷம் விலகும். மேலும் சிலருக்கு திருமணத்திற்குப்பின் ரஜ்ஜு தோஷம் இருந்தால், அந்த தோஷமும் விலகும். கணவருக்கு நீண்ட ஆயுள் உண்டாகும்.

    அங்க பூஜை

    * ஓம் காமாக்ஷ்யை நம: பாதௌ பூஜயாமி (கால்)

    * ஓம் கல்மஷக்ன்யை நம: குல்பே பூஜயாமி (முன்கால்)

    * ஓம் வித்யாப்ரதாயின்யை நம: ஜங்கே பூஜயாமி (நுனிக்கால்)

    * ஓம் கருணாம்ருத ஸாகராயை நம: ஜாநுநீ பூஜயாமி (முழங்கால்)

    * ஓம் வரதாயை நம: ஊரூ பூஜயாமி (தொடை)

    * ஓம் காஞ்சீ நகர வாஸின்யை நம: கடிம் பூஜயாமி (இடுப்பு)

    * ஓம் கந்தர்ப்ப ஜனன்யை நம: நாபிம் பூஜயாமி (நாபி)

    * ஓம் புரமதனபுண்யகோட்யை நம: வக்ஷ: பூஜயாமி (மார்பு)

    * ஓம் மஹாக்ஞான தாயின்யை நம: ஸ்தநௌ பூஜயாமி (ஸ்தனம்)

    * ஓம் லோகமாத்ரே நம: கண்டம் பூஜயாமி (கழுத்து)

    * ஓம் மாயாயை நம: நேத்ரே பூஜயாமி (கண்)

    * ஓம் மதுரவேணீ ஸஹோதர்யை நம: லலாடம் பூஜயாமி (நெற்றி)

    * ஓம் ஏகாம்பரநாதாயை நம: கர்ணம் பூஜயாமி (காது)

    * ஓம் காமகோடி நிலயாயை நம: சிர: பூஜயாமி (தலை)

    * ஓம் காமேச்வர்யைநம: சி'குரம் பூஜயாமி (முன் முடி)

    * ஓம் காமிதார்த்ததாயின்யை நம: தம்மில்லம் பூஜயாமி (நெற்றிச்சுட்டி)

    * ஓம் காமாக்ஷ்யை நமஸர்வாணி அங்கானி பூஜயாமி (முழுவதும்)

    • இன்று காரடையான் நோன்பு விரதம்.
    • பெண்கள் அனுஷ்டிக்கும் விரதமே காரடையான் நோன்பாகும்.

    இன்று காரடையான் நோன்பு விரதம். பூஜை செய்து சரடு கட்டிக் கொள்ள உகந்த நேரம், காலை 10.30 மணிமுதல் 11.30 மணிவரை. இனி இந்த விரதம் குறித்து சுருக்கமாகக் காண்போம்.

    எமனுடன் வாதாடி இறந்த தன் கணவனின் உயிரை மீட்ட சாவித்திரியின் பதி விரதத்தைப் போற்றவும், உயிருடன் இருக்கும் தங்கள் கணவர்கள் சத்தியவான் போல எவ்வித குறைவுமின்றி நீடூழி வாழ்ந்து தங்களுக்கு மாங்கல்ய பாக்கியம் அருளவேண்டும் என்பதற்காகவும், பெண்கள் அனுஷ்டிக்கும் விரதமே காரடையான் நோன்பாகும்.

    சுமங்கலி பெண்கள் தங்களது மங்கள வாழ்வை நீட்டித்துக் கொள்ளும் மகத்தான விரத நாள்தான் இது. மாசி மாதத்தின் இறுதி நாளும், பங்குனி மாதத்தின் முதல் நாளும் இணையும் நேரத்தில் இந்த விரதம் கொண்டாடப்படுகிறது. இது சாவித்திரி விரதம், சர்வ மங்கள விரதம், கர்வ சாவத், கங்கார் விரதம், ஜித்திய விரதம் என்ற பெயர்களில் வட மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.

    எந்த பெயரில் இந்த விரதம் கொண்டாடப்பட்டாலும், நோக்கம் என்னவோ ஒன்றுதான். தன் கணவன், பூரண ஆயுளைப் பெற்று அனைத்து வளங்களுடன் வாழ வேண்டும் என்பதுதான் காரடையான் நோன்பு விரதத்தின் நோக்கமாகும்.

    கார் அரிசியால் செய்த இனிப்பு அடையும், உப்பு அடையும் செய்வது வழக்கம். இந்த நாளில் மஞ்சள் பூசிய நோன்புக் கயிற்றை பெண்கள் கட்டிக் கொள்வார்கள். சிலர் புதிய தாலிச்சரடுடன் நோன்புக்கயிற்றையும் கட்டிக் கொள்வார்கள். `மாசிக்கயிறு பாசி படியும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, பங்குனி நாளில் இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் பெண்கள், தங்கள் தாலிக்கயிற்றை மாற்றிக் கொள்வார்கள். படைக்கப்பட்ட அடையை எல்லோரும் உண்ட பிறகு, பசுமாட்டுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது.

     சம்பத்கௌரி விரதம்

    முதலில் பங்குனி மாத பிறப்பு என்பதால், மாத பிறப்பு பூஜையை செய்வார்கள். முன்னோர்களுக்கான மாத தர்ப்பணத்தை செய்வார்கள். ஒவ்வொரு மாதமும் அம்பாளுக்குரிய விரத நாட்களை ''கௌரி விரத நாள்கள்'' என்று சொல்வார்கள்.

    ஒவ்வொரு கௌரி விரதத்திற்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அதில் பங்குனி மாதம் அதாவது இன்றைய தினம் அனுஷ்டிக்க வேண்டிய கௌரி விரதம், சம்பத் கௌரி விரதம். சகல விதமான செல்வாக்குடன் பெண்கள் வாழ்வதற்கும், குடும்ப கருத்து ஒற்றுமைக்கும் இந்த விரதமானது அனுசரிக்கப்படுகிறது. காரடையான் நோன்பு நாளாகவும் இந்த நாள் அமைவதால், இரண்டு விரதத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். அம்பாளை வழிபடுவதுதானே முக்கியமான நோக்கம்.

    • சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    • இன்று காரடையான் நோன்பு.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, பங்குனி 1 (வியாழக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சதுர்த்தி காலை 7.02 மணி வரை பிறகு பஞ்சமி நாளை விடியற்காலை 4.41 மணி வரை பிறகு சஷ்டி

    நட்சத்திரம்: பரணி இரவு 10.23 மணி வரை பிறகு கிருத்திகை

    யோகம்: சித்த, மரணயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று காரடையான் நோன்பு (நோன்பு நோற்கும் நேரம் காலை 10 மணிக்கு மேல் 11 மணிக்குள்). சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். ஆலங்குடி குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு காலை சிறப்பு குருவார திருமஞ்சன அலங்கார சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-செலவு

    ரிஷபம்-பயணம்

    மிதுனம்-வரவு

    கடகம்-இன்சொல்

    சிம்மம்-நன்மை

    கன்னி-பரிசு

    துலாம்- பக்தி

    விருச்சிகம்-போட்டி

    தனுசு- தேர்வு

    மகரம்-நிறைவு

    கும்பம்-இன்பம்

    மீனம்-கவனம்

    • ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும்.
    • இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். பங்குனி மாத பூஜைகள் நாளை (14-ந்தேதி) தொடங்குகிறது. இதற்காக ஐயப்பன் கோவில் நடை இன்று (13-ந்தேதி) மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

    கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் கோவில் நடையை திறக்கிறார். இன்று சிறப்பு பூஜைகள் எதுவும் நடை பெறாது. வழக்கமான பூஜைகளுக்கு பிறகு ஹரிவராசனம் பாடப் பட்டு இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.

    பின்பு நாளை(14-ந்தேதி) அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். அதன்பிறகு கணபதி ஹோமம், உஷபூஜை உள்ளிட்ட பூஜைகள் நடை பெறும். காலை 9 மணி முதல் 11 மணி வரை நெய் அபிஷேகம் நடைபெறுகிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வருகிற 16-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் 9-ம் நாளான வருகிற 24-ந்தேதி சரங்குத்தியில் பள்ளி வேட்டையும், 25-ந்தேதி பம்பையில் ஆராட்டும் நடைபெறுகிறது. அன்றுடன் பங்குனி உத்திர திருவிழா முடி வடைந்து இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.

    பங்குனி மாத பூஜை மற்றும் பங்குனி உத்திர திருவிழா அடுத்தடுத்து வருவதால் ஐயப்பன் கோவில் நடை நாளை (14-ந்தேதி) முதல் வருகிற 25-ந்தேதி வரை 12 நாட்கள் தொடர்ச்சி யாக திறந்திருக்கும்.

    அந்த 12 நாட்களும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களே, சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் உடனடி முன்பதிவு செய்ய பம்பையில் தற்காலிக மையம் திறக்கப்பட்டு இருக்கிறது.

    • ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
    • நெய்வேத்தியமாக பூரி படையலிடப்பட்டு வழிபாடு நடந்தது.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கடை வீதி மாரியம்மன் கோவில் அருகில் 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மதுரைவீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள், காமாட்சியம்மன், பகவதியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் வேடசந்தூர், ஆயக்குடி, காலப்பட்டி, தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொள்வார்கள்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. இரவு 11 மணிக்கு தொடங்கிய திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கோவில் பூசாரி தங்கவேல் (70) அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறினார்.

    திருமண தடை, குழந்தைப்பேறு, கடன் பிரச்சினை, தொழிலில் நஷ்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக பூசாரியிடம் பக்தர்கள் அருள்வாக்கு பெற்றுச் சென்றனர்.

    இந்த கோவிலில் சுவாமிக்கு நெய்வேத்தியமாக பூரி படையலிடப்பட்டு வழிபாடு நடந்தது. இதற்காக கோவில் வளாகத்திலேயே மிகப்பெரிய வானலி வைக்கப்பட்டு பூரி தயாரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். பின்னர் அந்த பூரி படையலிடப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. விடிய விடிய நடந்த இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    • ரமலான் மாதம் வந்துவிட்டால் கருணையின் வாசல்கள் திறக்கப்படுகின்றன.
    • மனிதர்களின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

    `கருணையின் வாசல் திறக்கப்படும் புனித ரமலான்'

    'ரமலான் மாதம் வந்துவிட்டால் கருணையின் வாசல்கள் திறக்கப்படுகின்றன' என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்) புனித ரமலானில் கருணையின் வாசல் திறக்கப்பட்டதன் பின்னணியில் தான் மனிதர்களின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. வணக்க வழிபாடுகளில் ஈடுபட வழி பிறக்கின்றன. பாவங்களில் இருந்து விலகியிருக்க வாய்ப்பு கிடைக்கின்றன.

    அன்பு மலர்கின்றன, அமைதி நிலவுகின்றன, சாந்தி பரவுகின்றன, சமாதானம் பிறக்கின்றன, சகோதரத்துவம் வளர்கின்றன. ஈவு, இரக்கம், ஈகை ஆகிய பண்புகள் பரிணமிக்கின்றன. இறைவனின் அன்பு, அவனின் தரிசனம், சொர்க்கம் இவையாவும் ஒருவரின் வணக்கத்தினால் மட்டுமே கிடைத்து விடுவதில்லை. இதற்கும் மேலாக இறைவனின் கருணை அவசியம் தேவைப்படுகிறது.

    நபி (ஸல்) அவர்கள், 'எவரையும் அவரின் நற்செயல் சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது, (மாறாக, அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையாலேயே எவரும் சொர்க்கம் புக முடியும்)' என்று கூறினார்கள்.

    மக்கள், 'தங்களையுமா? (தங்களின் நற்செயல் சொர்க்கத்தில் நுழைவிப்பதில்லையா) இறைத்தூதர் அவர்களே?' என்று கேட்டார்கள்.

    அதற்கு நபி (ஸல்) அவர்கள் (ஆம்), என்னையும் தான்; அல்லாஹ் தனது கருணையாலும், அருளாலும் என்னை அரவணைத்துக் கொண்டால் தவிர' என்று கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), நூல் : புகாரி)

    ஆயிஷா (ரலி) கூறுகிறார்: 'நபி (ஸல்) அவர்கள் (இறப்பதற்கு முன்பு) என் மீது சாய்ந்தபடி, 'இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக! எனக்கு கருணை புரிவாயாக, மிக்க மேலான தோழர்களுடன் (சொர்க்கத்தில்) என்னைச் சேர்த்தருள்வாயாக!' என்று பிரார்த்திப்பதை செவியுற்றேன்.' (நூல்: புகாரி)

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'அல் லாஹ் கருணையை நூறாகப் பங்கிட்டான். அதில் தொண்ணூற்று ஒன்பது பங்குகளைத் தன்னிடம் வைத்துக் கொண்டான் (மீதியிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால்தான் படைப்பினங்கள் பரஸ்பரம் பாசம் காட்டுகின்றன. எந்த அளவிற்கென்றால், மிதித்து விடுவோமோ என்ற அச்சத்தினால்தான் குதிரை தனது குட்டியை விட்டுக் கால் குளம்பைத் தூக்கிக் கொள்கிறது'. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்:புகாரி)

    'அல்லாஹ் அன்பையும், கருணையையும் படைத்தபோது, அதனை நூறு வகைகளாக அமைத்தான். அவற்றில் 99 வகைகளைத் தன்னிடமே வைத்துக்கொண்டான் (மீதியுள்ள) ஒரு வகையை மட்டுமே தன் படைப்புகள் அனைத்துக்கும் வழங்கினான். எனவே, இறைமறுப்பாளன் அல்லாஹ்வின் கருணை முழுவதையும் அறிந்தால், சொர்க்கத்தின் மீது அவநம்பிக்கை கொள்ளமாட்டான். (இதைப் போன்றே) இறைநம்பிக்கையாளர் அல்லாஹ் வழங்கும் வேதனை முழுவதையும் அறிந்தால் நரகத்தைப் பற்றிய அச்சமில்லாமல் இருக்க மாட்டார் என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

    'ஆனால் எனது கருணை எல்லாப் பொருட்களின் மீதும் (விரிந்து, பரந்து) சூழ்ந்து நிற்கிறது. எனினும், அதனை பயபக்தியுடன் பேணி நடப்போருக்கும், (முறையாக) ஜகாத் கொடுப்போருக்கும், நமது வசனங்களை நம்புகிறவர்களுக்கும் நான் விதித்தருள்செய்வேன்' (திருக்குர்ஆன் 7:156)

    இறைவனின் கருணை கிடைத்திட மேற்கூறப்பட்ட நற்செயல்களையும் சேர்த்து, புனித ரமலானில் நோன்பு நோற்றால் இறைவனின் கருணை கிடைக்கும். இறைவனின் கருணைப்பார்வை நம் மீது விழும் போது பாவ மன்னிப்பும், சொர்க்கமும் உறுதியாகும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரமலானில் கண்டிப்பாக நோன்பிருக்க வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது.
    • சிறப்பு மிகுந்த ரமலான் நோன்பை கடைப்பிடிப்போம், நன்மைகள் பெறுவோம்.

    நோன்பின் மாண்பு ரமலான் மாதம் அரபி மாதங்களில் ஒன்பதாவது வரிசையில் இடம்பெற்ற ஓர் ஒப்பற்ற மாதமாகும். ரமலான் என்பதன் பொருள் 'கரித்தல்' என்பதாகும். ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு முஸ்லிம்கள் மீது ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டது. "எவர் ரமலான் மாதம் (அல்லாஹ்வின் நற் கூலி கிடைக்கும் என்ற அவனின் வாக்குறுதியை) நம்பியும், நன்மையை நாடியும் நோன்பு இருக்கிறாரோ, அவருக்காக அவர் முன் செய்த (சிறு) பாவங்கள் யாவும் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்". (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

    "இறை நம்பிக்கை கொண்டோரே, உங்கள் முன்னோர்கள் மீது நோன்பு விதியாக்கப்பட்டிருப்பது போன்று உங்கள் மீதும் விதியாக்கப்பட்டிருக்கிறது. அதனால் நீங்கள் பரிசுத்த மானவர்களாக ஆகக்கூடும்". (திருக்குர்ஆன் 2:183)

    நோன்பு யாருக்கு கடமை?

    1) முஸ்லிமாக இருக்க வேண்டும்

    2) பருவ வயதை அடைந்திருக்க வேண்டும்

    3) புத்தி சுவாதீனமுள்ளவராக இருக்க வேண்டும்

    4) சுகமுள்ளவராக இருக்க வேண்டும்.

    5) ஊரில் தங்கி இருக்க வேண்டும்

    இந்த ஐந்து அடிப்படைகளின் மீது இருப்பவர்கள், புனித ரமலானில் கண்டிப்பாக நோன்பிருக்க வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது. இந்த ஐந்து அடிப்படைகளில் ஒன்றை இழந்திருந்தாலும் அவர் மீது நோன்பு நோற்பது கடமையாகாது. நோன்பு இரு வகைப்படும். அவை: கடமையான நோன்பு, உபரியான நோன்பு.

    கடமையான நோன்புகள் மூன்று பிரிவுகளாகப் பிரிகிறது. ரமலான் மாத நோன்பு, குற்றப்பரிகார நோன்பு, நேர்ச்சை நோன்பு, இம்மூன்று நோன்புகளையும் நோற்பது கடமையாகும்.

    உபரியான நபி வழி நோன்புகள் எட்டு வகைகளாக பிரிகிறது. அவை: வாரத்தில் திங்கள், மற்றும் வியாழன் ஆகிய இரண்டு நாட்களின் நோன்பு, மாதத்தில் பிறை 13, 14, 15 ஆகிய மூன்று நாட்களின் நோன்பு, முஹர்ரம் மாதம் பிறை 9, 10 ஆகிய இரண்டு நாட்களின் நோன்பு, ஷவ்வால் மாதத்தின் ஆறு நாட்களின் நோன்பு, துல்ஹஜ் மாதத்தின் 1 முதல் 9 நாட்களின் வரையுள்ள நோன்பு, ஷஃபான் மாதத்தில் அதிகமாக நோற்கப்படும் நோன்பு, துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய சங்கையான மாதங்களில் வைக்கப்படும் நோன்பு, ஒருநாள் நோன்பு மறுநாள் ஓய்வு ஆகிய எட்டு வகையான நோன்புகள் உபரியான நபிவழி நோன்புகளாகும்.

    கடமையான ரமலான் மாத நோன்புகளை நோற்பதற்கு, மேற்கூறப்பட்ட எட்டு வகையான நோன்புகளும் பயிற்சிக்களமாக அமைகிறது. இதனால் ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருக்க உடல் வலிமையையும், மன வலிமையையும் முஸ்லிம்கள் பெற்று சர்வ சாதாரணமாக நோன்பிருக்கிறார்கள்.

    `இன்னும் பஜ்ரு (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலில் இருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள், பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்" (திருக்குர் ஆன் 2:187)

    இஸ்லாம் மனித உணர்வுகளுக்கும், உணர்ச்சிகளுக்கும், அவர்களின் உரிமைகளுக்கும் எவ்வளவு முக்கியத்துவம் அளித்திருக்கிறது என்பதை குர்ஆனும், ஹதீஸூம் உணர்த்துகின்றன. நோன்பு வைத்திருக்கும் பகல் வேளையில் மட்டுமே உண்ணுதல், பருகுதல், உடலுறவு கொள்ளுதல் போன்ற செயல்கள் கூடாதே தவிர இரவு நேரங்களில் அல்ல. பகல் இறைவனுக்கு, இரவு நமக்கே. இறைவனுக்காக இருக்கும் உண்ணாவிரதம், மனித உணர்ச்சிக்கு ஒருபோதும் தடையில்லை. சிறப்பு மிகுந்த ரமலான் நோன்பை கடைப்பிடிப்போம், நன்மைகள் பெறுவோம்.

    • பங்குனித் திருநாளில் விரதம் இருந்து வள்ளி மணாளனை வழிபட வேண்டும்.
    • தெய்வத் திருமணங்கள் நடைபெற்ற நாள், பங்குனி உத்திர திருநாளாகும்.

    எத்தனை உத்திர நட்சத்திரங்கள் வந்தாலும் பங்குனி மாதத்தில் வரும் பொழுது, அது பங்குனி உத்திரம்' என்று சிறப்பாக அழைக்கப்படுகிறது. மாதங்களில் கடைசி மாதம் பங்குனியாக இருந்தாலும், நம்மை முதன்மையான மனிதராக மாற்றுவதற்கும், முக்கியமாக இல்லறம் என்னும் நல்லறத்தை ஏற்பதற்கும் இந்த பங்குனித் திருநாளில் விரதம் இருந்து வள்ளி மணாளனை வழிபட வேண்டும்.

     தெய்வத் திருமணங்கள் நடைபெற்ற நாள், பங்குனி உத்திர திருநாளாகும். முருகப்பெருமான்- தெய்வானை திருமணம் நடைபெற்றதும், ராமபிரான் சீதையை மணந்து கொண்டதும், மீனாட்சி அம்மன் சொக்கநாதரை மணந்ததும், ரதிக்காக மன்மதனை சிவபெருமான் எழுப்பித் தந்ததும் இந்த நாளில்தான் என்று புராணங்கள் சொல்கின்றன. தெய்வத் திருமணங்கள் நடந்த பங்குனி உத்திர திருநாளில், நாமும் விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட்டால் நமது வாழ்விலும் மறுமலர்ச்சி ஏற்படும். மணக்கோலம் காண வழிபிறக்கும்.

    ஏனெனில் ஆறுமுகமும், பன்னிரண்டு கரங்களும் கொண்ட முருகப்பெருமான். கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக் கொடுக்கும் வள்ளல் தன்மை கொண்டவர். இந்த ஆண்டு பங்குனி உத்திரத் திருநாள் 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. மறுநாள் (திங்கள்) காலை 10.59 மணிவரை உத்ரம் நட்சத்திரம் உள்ளது. அன்றைய தினம் வீட்டு பூஜையறையில் வள்ளி - தெய்வானை உடனாய முருகப்பெருமானின் படத்தை வைத்து பஞ்சமுக விளக்கேற்றி வழிபாடு செய்யவேண்டும்.

    முருகனே! செந்தில் முதல்வனே! மாயோன் மருகனே, ஈசன்மகனே! ஒருகைமுகன் தம்பியே! நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் நான்! என்று முன்னோர்கள் பாடியதைப்போல, நாமும் நம்பிக்கையோடு பாடி வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

     ஒருசிலர் தங்களுக்கான வாழ்க்கைத் துணையை தேர்வு செய்ய இயலாமல் தவிர்ப்பார்கள். ஜாதகத்தில் அங்காரக தோஷம், களத்திர தோஷம் அமைந்தவர்களுக்கும், வரன்கள் வாசல் வரை வந்து திரும்பிச் செல்லும். அவர்கள் அனைவரும் பங்குனி உத்திர நாளில், முருகப்பெருமானை வழிபட்டால் நலம் யாவும் சேரும். அன்றைய தினம் முழுவதும் விரதம் இருந்து முருகனை வழிபட்டால், நன்மைகள் வந்து சேரும்.

    வாழ்க்கை வளமாக இருக்க எதையேனும் ஒன்றை நாம் நம்புகிறோம். அந்த நம்பிக்கையை சிவன் மீது மாசி மாதம் மகா சிவராத்திரி அன்று பரிபூரணமாக வைக்கிறோம். தந்தை மீது நம்பிக்கை வைத்த நாம் பங்குனி மாதம் தனயன் முருகன் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும். குத்துவிளக்கின் கீழே இடும் கோலம் வெறும்கோலமாக இல்லாமல் 'நடு வீட்டுக் கோலம்' என்று அழைக்கப்படும்.

    முக்கோண, அறுங்கோண, சதுரங்கள் அமைந்த கோலங்களாக இருக்க வேண்டும். கோலத்தில் புள்ளி அதிகம் இருந்தால் தான் 'புள்ளி' எனப்படும் வாரிசு பெருகும் என்பார்கள்.

    பங்குனி உத்திர வழிபாட்டின் பொழுது மாங்கனி கிடைத்தால் மாங்கனி வைக்கலாம். இல்லையேல் தேன் கதலியோடு, தேனும், தினைமாவும் வைத்து வழிபடலாம். அருகில் இருக்கும் சிவாலங்களுக்குச் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வருவது நல்லது.

    அன்றைய தினம் சண்முகருக்கு சர்க்கரை அபிஷேகம் செய்தால், அவர் அக்கறையோடு நமக்கு அருள்தருவார். பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால், அஞ்சாத வாழ்வை அளிப்பார். பாலும், பன்னீரும் கொண்டு அபிஷேகம் செய்து பார்த்தால் வாழ் நாளை நீட்டித்துக்கொடுப்பார்.

    • திருவல்லிக்கேணி ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை.
    • திருவாரூர் ஸ்ரீ தியாகராஜர் பவனி.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, மாசி 30 (புதன்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: திருதியை காலை 8.53 மணி வரை பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம்: அசுவினி இரவு 11.20 மணி வரை பிறகு பரணி

    யோகம்: மரண, சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை. மிலட்டூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் புறப்பாடு. திருவாரூர் ஸ்ரீ தியாகராஜர் பவனி. ஸ்ரீ வைகுண்டபதி புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு காலையில் சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-போட்டி

    ரிஷபம்-நன்மை

    மிதுனம்-வெற்றி

    கடகம்-உண்மை

    சிம்மம்-ஆதரவு

    கன்னி-உழைப்பு

    துலாம்- பக்தி

    விருச்சிகம்-வரவு

    தனுசு- கடமை

    மகரம்-நலம்

    கும்பம்-ஆர்வம்

    மீனம்-செலவு

    • பங்குனி மாத பூஜைகள் நாளை மறுநாள் கோவில் நடை திறக்கப்படுகிறது.
    • வருகிற 25-ந்தேதி வரை 12 நாட்கள் தொடர்ச்சியாக திறந்திருக்கும்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். பங்குனி மாத பூஜைகள் நாளை மறுநாள் (14-ந்தேதி) தொடங்குகிறது. இதற்காக ஐயப்பன் கோவில் நடை நாளை (13-ந்தேதி) மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

    கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் கோவில் நடையை திறக்கிறார். நாளை சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. வழக்கமான பூஜைகளுக்குப் பிறகு ஹரிவராசனம் பாடப்பட்டு இரவில் நடை சாத்தப்படும்.

    பின்பு மறுநாள் (14-ந்தேதி) அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். அதன்பிறகு கணபதிஹோமம், உஷபூஜை உள்ளிட்ட பூஜைகள் நடை பெறும். காலை 9 மணி முதல் 11 மணி வரை நெய் அபிஷேகம் நடைபெறுகிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வருகிற 16-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் 9-ம் நாளான வருகிற 24-ந்தேதி சரங்குத்தியில் பள்ளி வேட்டையும், 25-ந்தேதி பம்பையில் ஆராட்டும் நடைபெறுகிறது.

    அன்றுடன் பங்குனி உத்திர திருவிழா முடிவடைந்து இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். பங்குனி மாத பூஜை மற்றும் பங்குனி உத்திர திருவிழா அடுத்தடுத்து வருவதால் ஐயப்பன் கோவில் நடை நாளை மறுநாள் (14-ந்தேதி) முதல் வருகிற 25-ந்தேதி வரை 12 நாட்கள் தொடர்ச்சியாக திறந்திருக்கும்.

    அந்த 12 நாட்களும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களே, சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் உடனடி முன்பதிவு செய்ய பம்பையில் தற்காலிக மையம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ×