என் மலர்
வழிபாடு
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையடிவாரமான தாணிப்பாறையில் குவிந்தனர்.
- 4 கால பூஜைகளில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. மலை மேல் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு மாதத்தில் 8 நாட்கள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
ஆடி, தை, அமாவாசை நாட்களிலும், மகா சிவராத்திரி அன்றும் சதுரகிரியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். அதன்படி இன்று சிவராத்திரியை முன்னிட்டு நேற்று இரவு முதலே சென்னை, திருச்சி, கோவை, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையடிவாரமான தாணிப்பாறையில் குவிந்தனர்.
இன்று அதிகாலை 6 மணிக்கு வனத்துறையினர் பக்தர்களின் உடைமைகளை சோதனையிட்ட பின் மலையேற அனுமதித்தனர்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் மலையேறினர். மலைப்பாதையில் உள்ள சங்கிலிப்பாறை, வழுக்குபாறை, மாங்கனி ஓடை, பிளாவடி கருப்பசாமி கோவில் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் மற்றும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தொடர்ந்து பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வந்ததால் அவர்களை போலீசார் ஒழுங்குபடுத்தி அனுப்பி வைத்தனர்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று இரவு சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு 21 வகையான அபிஷேகங்கள் மற்றும் 4 கால பூஜைகள் விடிய, விடிய நடைபெறுகிறது. ஆனால் இந்த பூஜைகளில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மலையேறிய பக்தர்கள் இன்று மாலை 4 மணிக்குள் சாமி தரிசனம் செய்துவிட்டு கீழே இறங்கி வந்து விட வேண்டு மென வனத்துறையினர் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு மலையடி வாரத்தில் உள்ள தோப்புகளில் தங்கி ஆடுகளை பலியிட்டு அன்னதானம் செய்தனர்.
பக்தர்களின் வசதிக்காக தாணிப்பாறை, சதுரகிரி கோவில் பகுதிளில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் மதுரை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
மகா சிவராத்திரி அன்று சிவாலயங்களில் பக்தர்கள் இரவு முழுவதும் தங்கி வழிபாடு நடத்துவார்கள். ஆனால் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் இரவு தங்க அனுமதி வழங்கப்படாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
- ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் அன்னப்பறவை வாகனத்தில் எழுந்தருளினார்.
- வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா.
ஸ்ரீகாளஹஸ்தி:
மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாளான நேற்று காலை ஹம்ச, சேஷ வாகனங்களில் உற்சவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று காலை ஹம்ச வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், கிளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
வாகன வீதிஉலாவுக்கு முன்னால் ஆண்களும், பெண்களும் கோலாட்டம் ஆடினர். பக்தர்கள் பக்தி பஜனை பாடல்களை பாடியவாறு சென்றனர். மாடவீதிகளில் திரண்ட பக்தர்கள் தேங்காய், உடைத்தும் கற்பூர ஆரத்தி காண்பித்தும் ஹர..ஹர.. மகா தேவா சம்போ சங்கரா.. எனப் பக்தி கோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர்.
அன்னப்பறவை தண்ணீர் கலந்த பாலில் பாலை மட்டும் உறிஞ்சி குடித்து விடும், நீரை விட்டு விடும். அதுபோல அன்னப்பறவை வாகனத்தில் எழுந்தருளிய தன்னை வழிபடும் பக்தர்களிடம் இருக்கும் தீய குணங்கள், தீய சக்தியை நீக்கி, முக்தியின் பாதையில் செல்ல நல்வழிப்படுத்துவேன் என்பதை உணர்த்தவே உற்சவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் `ஹம்சம்' என்ற அன்னப்பறவை வாகனத்தில் எழுந்தருளினார்.
அதேபோல் உற்சவர் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் கிளி வாகனத்தில் எழுந்தருளினார். பொதுவாக கிளி வாகனம் அம்பாளுக்கு உகந்ததாகவே கருதப்படுகிறது. இலக்கியத்தில் கிளி காதல் தூதுவனாகக் கூறப்படுகிறது. கிளி எளிதில் மனிதர்களிடம் பழகி தோழமை கொள்ளும் இயல்புடையது.
பெண்கள் கிளியை பழக்கி தனக்கு துணைக்கு வைத்துக் கொள்கிறார்கள். கிளி சுகத்தின் அடையாளம். ஆகவே கிளி மேல் எழுந்தருளி உலா வரும் தன்னை வணங்கும் பக்தர்களுக்கு இனிய சுகங்களை வழங்கி எந்நாளும் மகிழ்ச்சியோடு வாழ வைப்பேன் என்பதை உணர்த்தவே தாயார் கிளி வாகனத்தில் எழுந்தருளினார்.
அதைத்தொடர்ந்து இரவு சேஷ வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், யாளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
- தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனர்.
- இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடக்கிறது.
திருமலை:
பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான நேற்று காலை தேரோட்டம் நடந்தது. தேரில் உற்சவர்கள் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 9 மணிவரை தேரோட்டம் நடந்தது.
அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை குதிரை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர், `கல்கி' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர் களுக்கு அருள் பாலித்தார்.
சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி
பிரம்மோற்சவ விழாவின் 9-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணியில் இருந்து 9.30 மணி வரை உற்சவர்களான சக்கரத்தாழ்வார், ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண வெங்கடேஸ்வரருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது. அதன் பிறகு காலை 9.45 மணியளவில் கோவில் முன்னால் உள்ள புஷ்கரணியில் சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடக்கிறது. இரவு கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.
- தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் 34-வது தலமாகும்.
- கடம்ப வனமே காலப்போக்கில் `கடம்பூர்’ என்றானது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது, மேலக்கடம்பூர் கிராமம். இங்கு சோதிமின்னம்மை உடனாய அமிர்தகடேசுவரர் ஆலயம் உள்ளது. பெருங்கோவில், மாடக்கோவில், தாழக்கோவில், கரக்கோவில், ஞாழற்கோவில், கொகுடிக்கோவில், ஆலக்கோவில், மணிக்கோவில், மலைக்கோவில், இளங்கோவில் என்னும் 10 வகையான கோவில்களில், இது `கரங்கோவில்' வகையைச் சேர்ந்தது. சக்கரங்களுடன் கூடிய தேர் பீடத்தின் அமைப்பைக் கொண்டிருக்கும் இக்கோவிலை வடமொழியில் `விஜயம்' என்று குறிப்பிடுவர். இந்த ஆலயம் தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் 34-வது தலமாகும்.

தலவரலாறு
திருப்பாற்கடலை கடைந்து அமுதகலசம் பெற்ற தேவர்களும், அசுரர்களும், முழுமுதற்கடவுளான விநாயகரை வழிபடாமல் அதை உண்ண நினைத்தனர். இதனால் கோபம் கொண்ட விநாயகர், அமுத கலசத்தை பூலோகத்தில் மறைத்து வைக்க எடுத்து வந்தார். அப்படி வருகையில் கலசத்தில் இருந்து ஒரு துளி அமுதம், கடம்ப வனக்காட்டில் விழுந்து, சுயம்பு லிங்கமாக மாறியது. இந்த சிவலிங்கமே, இவ்வாலயத்தில் மூலவராக வீற்றிருக்கும் அமிர்தகடேசுவரர் ஆவார். கடம்ப வனமே காலப்போக்கில் `கடம்பூர்' என்றானது.
ராஜராஜ சோழனின் பரந்துவிரிந்த சோழ தேசத்தின் ஒரு சிற்றரசாக மேலக்கடம்பூர் விளங்கியது. இப்பகுதியை சம்புவராயர்கள் ஆட்சி செய்தனர். ஆனால் இக்கோவில் சம்புவராயர்களாலோ அல்லது ராஜராஜ சோழனாலோ கட்டப்படவில்லை. சிற்பக்கலையிலும், இசையிலும் அதிக ஆர்வம்கொண்ட சாளுக்கிய வம்சத்து சோழ அரசனான முதலாம் குலோத்துங்கனால் கி.பி. 1100-ம் ஆண்டு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு சிதலமடைந்த இந்த ஆலயம் பல அன்பர்களின் திருப்பணி சேவையால் தற்போதைய நிலைக்கு உயர்வு பெற்றிருக்கிறது.
யுகங்கள் தோறும் இக்கோவிலை பலர் வந்து வழிபட்டுச் சென்றுள்ளனர். அவர்களில் கிருதாயுகத்தில் சூரியன், சந்திரன், உரோமச முனிவர், இந்திரன் ஆகியோரும், திரேதாயுகத்தில் பர்வத தலைவனான பர்வதராஜனும், துவாபர யுகத்தில் பதஞ்சலி முனிவரும் வணங்கியதாக சொல்லப்படுகிறது. அதை நினைவுறுத்தும் வகையில் இங்கே சிற்பங்களும் வடிக்கப்பட்டுள்ளன. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், அருணகிரிநாதர், ராமலிங்கர், பாம்பன் சுவாமிகள், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் ஆகியோர் இவ்வாலய இறைவனைப் பற்றி பாடியிருக்கிறார்கள்.
கிழக்கு நோக்கிய இத்திருக்கோவில் ஐந்துநிலை ராஜகோபுரத்தையும், இரண்டு பிரகாரத்தையும் கொண்டுள்ளது. கோவிலுக்கு தென்மேற்கில் மேற்கு திருமாளப்பத்தியில் ஆரவார விநாயகர் சன்னிதி உள்ளது. இவ்விநாயகர் வாதாபியில் இருந்து கொண்டுவரப்பட்டவர். விநாயகர் சன்னிதியைத் தொடர்ந்து, ஆறுமுகப்பெருமானும், சமயக்குரவர்கள் நால்வரும், மீனாட்சி உடனாய பாபஹரேசுவரர் ஆகியோர் உள்ளனர். இதையடுத்து சரஸ்வதி, வனதுர்கை, லட்சுமி ஆகியோர் தனித்தனி சன்னிதியில் அருள்கின்றனர்.

திருமஞ்சன கிணற்றின் அருகே மேற்கு நோக்கிய பைரவர், பெருஞ்சாத்தன், நின்றகோலத்தில் நாயுடன் காலபைரவர், சூரிய-சந்திரர்கள், ரிஷப வாகனர், காக்கைக்குப் பதிலாக கழுகு வாகனத்தில் சனி பகவான், கரண்டமகுடம் தரித்த காளி ஆகியோர் உள்ளனர். கோவிலின் மகா மண்டபத்தில் தரும
நந்தியும், பிரம்மசந்தி எனப்படும் பலிபீடமும் உள்ளது. இவைகளுக்கு வடதிசையில் தென்முகம் நோக்கிய அம்பிகையின் தனிச் சன்னிதி உள்ளது. இந்த அன்னை `வித்யஜோதி நாயகி' என்ற திருநாமம் தாங்கியுள்ளார். தமிழில் 'சோதிமின்னம்மை' என்பது பொருள்.
இந்த அம்பாள் பார்ப்பதற்கு ஒரே தோற்றத்தில் காட்சியளித்தாலும், காலையில் வீணை ஏந்திய சரசுவதியாகவும், உச்சி காலத்தில் யானையுடன் லட்சுமியாகவும், மாலையில் சூலாயுதத்துடன் துர்க்கையாகவும் காட்சித் தருவதாக ஐதீகம். அதனால்தான் 'வித்யஜோதிநாயகி' என்ற பெயர் வந்தது. இதில் `வித்ய' என்பது சரஸ்வதியையும், `ஜோதி' என்பது லட்சுமியையும், 'நாயகி' என்பது பார்வதியையும் குறிப்பதாகும்.
அம்பாளின் இடதுபுறத்தில் பள்ளியறை மற்றும் நவக்கிரகங்களும், வலதுபுறத்தில் ஆடல்வல்லானின் காணக்கிடைக்காத கற்சிற்ப சன்னிதியும் உள்ளன. அவரருகில் சுவற்றில் 63 நாயன்மார்களின் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. அர்த்தமண்டபத்தின் நுழைவு வாசலில் திண்டி - முண்டி என்னும் துவார பாலகர்களும், உள்ளே விஷ்ணு நந்தியும் உள்ளது. அதைக் கடந்து பஞ்சாட்சர படியேறி, சங்கநிதி- பதுமநிதிகள் கொண்ட குபேரவாசலைக் கடந்தால், கருவறையில் வீற்றிருக்கும் அமிர்தகடேசுவரரை தரிசிக்கலாம்.
கருவறை மற்றும் அர்த்தமண்டபத்தின் புறச்சுவர்களில் எண்ணிலடங்கா சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கருவறையைச் சுற்றி ஐந்து தேவகோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தெற்கில் அர்த்தநாரீசுவரரும், தட்சிணாமூர்த்தியும், மேற்கில் திருமாலும், வடக்கில் நான்முகனும், ஆலிங்கனமூர்த்தியும், மகிஷாசுரனின் தலைமீது நின்ற கோலத்தில் துர்க்கையும் இக்கோட்டங்களில் அருள்பாலிக்கின்றனர்.
கோட்டங்களும் அதிலுள்ள தெய்வங்களும் மிக நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளுடனும், கலைநயத்துடனும் காண்போரை கவர்ந்திழுக்கின்றது. திருமணம், புத்திர தோஷம் உள்ளவர்கள் அம்பாளுக்கு மஞ்சள் கிழங்கு வைத்து வழிபடுகின்றனர்.
செவ்வாயின் அதிபதியான அங்காரகனே தனது தோஷம் நிவர்த்தியாக இங்கு வந்து வழிபட்டதால், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வழிபட ஏற்ற தலமாகவும் இது திகழ்கிறது.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்படும். காட்டுமன்னார்கோவிலில் இருந்து எய்யலூர் செல்லும் சாலையில், மேலக்கடம்பூர் அமிர்தகடேசுவரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் இருந்து பஸ் வசதிகள் உள்ளன.
இந்த ஆலயத்தில் சிவன் கோவில்களில் நடைபெறும் மாதந்திர உற்சவங்கள் தவிர, மகா சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், அன்னாபிஷேகம், கார்த்திகைதீபம் போன்ற வருடாந்திர உற்சவங்களும் சிறப்பாக நடத்தப்பெறுகின்றன. ஒவ்வொரு மாதமும் பிரதோஷ உற்சவம் மிகவும் சீரும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இதற்கென்று 'தசபுஜ ரிஷப தாண்டவமூர்த்தி' என்ற உற்சவ மூர்த்தி உள்ளது.
இந்த மூர்த்தி வேறு எந்த ஆலயத்திலும் காணக்கிடைக்காத அபூர்வ பஞ்சலோக சிலையால் ஆனதாகும். பிரதோஷ உற்சவத்தின் போது இந்த மூர்த்திற்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடத்தப்படுகிறது.
இந்த மூர்த்தியானவர், செவ்வக பீடத்தில் மையமாக உள்ள தாமரைமலரின் நடுவே, மேல்நோக்கிப் பார்க்கும் காளையின் மீது சதுர தாண்டவ கோலத்தில் காட்சி தருகிறார். தன்னுடைய கரங்களில் வீரவெண்டயம், பிரம்மகமலம், கேடயம், சூலம், அரவம், கட்டங்கம், தண்டம், குத்தீட்டி ஏந்தியும் உள்ளார். இவரது வலது கை கஜஹஸ்த அமைப்பிலும், இடக்கை பிரபஞ்சம் தாங்கியும் உள்ளது.
இந்த தாண்டவமூர்த்தியின் காலடியில் திருமால் மத்தளம் இசைக்க, வீரபத்திரர் சூலம் கொண்டு ஆட, விநாயகர், பைரவர், நந்தி, மகாகாளர், பிருங்கி, காரைக்கால் அம்மையார், சிவகணங்கள் மற்றும் நாட்டிய பெண்கள் சேர்ந்தாட, முருகன் மயில் மீது பறக்க, கந்தர்வர்கள் மலர்தூவ என்று எண்ணற்ற சிற்பங்களும் வடிக்கப்பட்டுள்ளன. திருவாசியில் அக்னிக்குப் பதிலாக அரச இலைகளும், தலைக்குப் பின்புறம் ஒளிவட்டமும், மணிமுடியும் அமைந்துள்ளது. சுமார் ஒன்றரை அடி உயரமுள்ள இச்சிலை பிரளய காலத்தில் நந்திமீது நின்று சிவன் சதுரத்தாண்டவம் ஆடியதைக் குறிக்கின்றது.
இந்திரன் வழிபட்ட ருத்ரகோடீசுவரர்
தேவர்களின் தலைவனான இந்திரனின் தாய் அதிதி, இந்த ஆலயத்தை தினமும் பூஜித்து வந்தார். தன் தாய் தினமும் தேவலோகத்தில் இருந்து பூலோகம் வந்து செல்வதைப் பார்த்த இந்திரன், இந்த ஆலயத்தின் அடிப்பகுதியில் தேர் சக்கரத்தை வைத்து தேவலோகம் எடுத்துச் செல்ல முற்பட்டான். அவன் முயற்சியை தடுத்த இவ்வாலய விநாயகர், "ஒரு நாழிகைப் பொழுதில் ஒரு கோடி லிங்கங்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்டால், தேரை விடுகிறேன்" என்றார். இந்திரன் செய்த ஒவ்வொரு லிங்கமும் சேதமடைந்தது.
இதையடுத்து அவன் ஈசனை வழிபட, அவரோ "ஒரு கோடி முறை என் நாமத்தை உச்சரித்து ஜெபம் செய். பின்னர் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்" என்றார். இந்திரனும் அப்படியே செய்தான். இதையடுத்து இந்திரனுக்கு காட்சி கொடுத்த ஈசன், "உன் தாய்க்கு பதிலாக தினமும் நீயே இங்கு வந்து என்னை பூஜிக்கலாம். அதற்கான பலன் உன் தாய்க்கு கிடைக்கும்" என்று அருளினார். இந்திரன் பிரதிஷ்டை செய்த சிவலிங்கம் 'ருத்ரகோடீசுவரர்' என்ற பெயரில், இவ்வாலயத்தில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் கீழக்கடம்பூரில் உள்ளது.
- இன்று மங்கலகரமான வெள்ளிக் கிழமை, சிவராத்திரி.
- சிவராத்திரி அன்று உபவாசம் இருக்க வேண்டும்.
இன்று மங்கலகரமான வெள்ளிக் கிழமை. சிவராத்திரி. சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் இரவு உறங்காமல் சிவபூஜை, சிவ நாமஜெபம், சிவ தியானம், சிவபஜனை, சிவதரிசனம், சிவத்தொண்டு ஆகியவற்றைச் செய்ய வேண்டும். நமசிவாய என்ற மந்திரத்தை இரவு முழுவதும் உச்சரித்தால், மகத்தான பலன்கள் கிடைக்கும். வாழ்வில் செல்வம், வெற்றி ஆகியவற்றை பெற விரும்புவோர், அவசியம் சிவராத்திரி விரதம் இருக்க வேண்டும்.
சிவாலயத்தில் பலிபீடத்துக்கு அருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்ய வேண்டும்.சிவாலயத்துக்குள் எப்போதும் திரியாங்க நமஸ்காரம் (இருகரங்களையும் சிரம் மேல் குவித்து) செய்ய வேண்டும்.
கிழக்கு நோக்கிய சந்நதியானால் பலிபீடத்திற்குத் தென்கிழக்கு மூலையில் தலை வைத்து வணங்க வேண்டும். தெற்கு, மேற்கு நோக்கிய சந்நதிகளில் பலிபீடத்திற்கு தென்மேற்கு மூலையில் தலை வைத்து வணங்க வேண்டும். வடக்கு நோக்கிய சந்நதியானால் பலிபீடத்திற்கு வடமேற்கு மூலையில் தலை வைத்து வணங்க வேண்டும். சிவராத்திரி அன்று உபவாசம் இருக்க வேண்டும்.
உபவாசம் என்றால் என்ன என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். உபவாசம் என்பது உப+வாசம் என்று பிரியும். இறைவனுக்கு அருகில் செல்வது உண்ணாநோன்பு. அனேகமாக அனைத்து சமயநூல்களும் உண்ணாநோன்பை வலியுறுத்துகின்றன.
உண்ணாநோன்பு என்பது உயிருக்கும் மட்டுமல்லாமல் உடலுக்கும் நன்மை செய்கின்றது. உடலில் உள்ள நச்சுப்பொருட்களை எல்லாம் உண்ணாநோன்பு வெளியேற்றுகின்றது. விரத நாளில் உண்ணாமல் இருப்பது மட்டுமல்ல, கெட்ட எண்ணங்களை எண்ணாமல் இருப்பதே உபவாசம் என்று பவிஷ்ய புராணம் சொல்கிறது.
சிவராத்திரியின் நோக்கம் என்னவென்றால் ஒருவன் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று சொன்னால், அவனுக்கு வேண்டிய குணங்கள் பொறுமை, மவுனம், அகிம்சை, சத்தியம், தயை, தானம், தூய்மை, புலனடக்கம். அக விழிப்புணர்வைத் தூண்டும் இந்த குணங்களை அடையச் செய்வதே சிவராத்திரியின் நோக்கமாகும்.
இறைவனின் பெயர்களை 16 முறை சொல்லி பூஜிப்பது ஷோடச பூஜை. 108 முறை சொல்லி பூஜை செய்வது அஷ்டோத்திரம். முன்னூறு முறை இறைவனின் நாமங்களை சொல்லி பூஜிப்பது திரிசதி. ஆயிரம் முறை சொல்லி பூஜிப்பது சகஸ்ரநாம அர்ச்சனை. ஒரு லட்சம் முறை சொல்லி பூஜிப்பது லட்சார்ச்சனை. ஒரு கோடி முறை சொல்லி பூஜை செய்வது கோடி அர்ச்சனை. சிவநாமத்தை ஒரு கோடி முறை சொல்வதன் மூலமாக பிறவிப்பிணி அகன்று பிறவாப் பேரின்பநிலை பிறக்கும்.
- திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் சிவன் கோவில்களில் ரிஷப வாகன பவனி.
- திருவண்ணாமலை அரிபிரம்மாதியர் அடிமுடி தேடியருளிய லீலை.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மாசி 25 (வெள்ளிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: திரயோதசி இரவு 8.19 மணி வரை. பிறகு சதுர்த்தசி.
நட்சத்திரம்: திருவோணம் காலை 8.30 மணி வரை. பிறகு அவிட்டம்.
யோகம்: மரண, சித்தயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று பிரதோஷம், சுபமுகூர்த்த தினம். மகாசிவராத்திரி, கன்னியாகுமரி மாவட்டத்தில் அருகருகே உள்ள 12 சிவாலயங்களில் (102 கி.மீட்டர்) இன்று சிவாலய ஓட்டம் என்ற பெயரில் இன்று இரவு ஓடி கடக்கும் நிகழ்வு. திருவண்ணாமலை அரிபிரம்மாதியர் அடிமுடி தேடியருளிய லீலை. திருமயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீசுவரர் திருவான்மியூர் திரிபுர சுந்தரியம்பாள் சமேத மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் அராள கேசியம்பாள் சமேத ரத்தினகிரீசுவரர், திருவிடைமருதூர் பிருகத் குஜாம்பிகை சமேத மகாலிங்க சுவாமி மாலை ரிஷப வாகனத்தில் பவனி.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆக்கம்
ரிஷபம்-சோர்வு
மிதுனம்-இன்பம்
கடகம்-உற்சாகம்
சிம்மம்-ஊக்கம்
கன்னி-பதவி
துலாம்- ஓய்வு
விருச்சிகம்-அமைதி
தனுசு- சுகம்
மகரம்-பரிவு
கும்பம்-சுபம்
மீனம்-பண்பு
- மாசி மாதம் வரும் சிவராத்திரி விழா மகா சிவராத்திரி விழா.
- பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
ஆண்டுதோறும் மாசி மாதம் வரும் சிவராத்திரி விழா மகா சிவராத்திரி விழாவாக கொண்டாடப் படுகிறது. சிவபெருமான் - பார்வதி தேவியின் திருமணத்தை நினைவுபடுத்தும் விதமாகவும், ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இருள் மற்றும் அறியாமை நீங்கி ஒளி பெறுவதை நினைவூட்டும் விதமாகவும் இவ்விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் சிவபெருமானை தியானித்து விரதம் இருப்பது நன்மை தரும் என்று கூறப்படுகிறது. இரவு முழுவதும் கண்விழித்து சிவபெருமானுக்கு நடைபெறும் நான்கு கால பூஜை மற்றும் அபிஷேகத்தை காண்பது பெரும் பேறாகக் கருதப்படுகிறது.
சிவன் கோவில்களில் நாளை மாலை தொடங்கும் முதல் கால பூஜை படைக்கும் தொழிலை செய்யும் பிரம்மன் சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாக அமைந்துள்ளது. 2-ம் கால பூஜை காத்தல் தொழிலை செய்யும் திருமால், சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாக அமைந்துள்ளது. 3-ம் கால பூஜை சக்தி வடிவமான அம்பாள் சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாக அமைந்துள்ளது.
4-ம் கால பூஜை முப்பத்து முக்கோடி தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள், பூதகணங்கள், மனிதர்கள், பிற உயிரினங்கள் சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாக அமைந்துள்ளது. இந்த மகா சிவராத்திரி விரதத்தை கடைபிடித்து சிவபெருமானை வழிபட்டால் அனைத்து செல்வங்களும் கிடைத்து வாழ்வில் மகிழ்ச்சி அடையலாம்.
அதன்படி இந்த ஆண்டு நாளை (8-ந்தேதி) மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டா டப்பட உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் நாளை மகா சிவராத்திரி விழாவையொட்டி நான்கு கால பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடை பெறுகின்றன. பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில்
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் நாளை மகா சிவராத்திரி விழா கோலா கலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை யொட்டி நாளை மாலை முதல் மறுநாள் காலை வரை விடிய விடிய 4 கால பூஜை கள், சிறப்பு அபிஷேகங்கள் நடக்கிறது.
மகா சிவராத்திரி விழாவை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைக்கிறார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்கிறார்கள். மேலும் ஆன்மிக சொற்பொழி வுகள், இசை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வடபழனி வேங்கீஸ்வரர் கோவில்
சென்னை வடபழனி வேங்கீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்தி ரியையொட்டி நாளை காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அதன்பிறகு இரவு 9மணி தொடங்கி அதிகாலை 4 மணி வரை நான்கு கால பூஜைகள் நடக்கிறது. ஒவ்வொரு 2 மணி நேர இடைவெளியில் அபிஷேகம், தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில்
கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவிலில் நாளை அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு அபிஷேகம் நடக்கிறது. பின்னர் மாலையில் பிர தோஷ அபிஷேக பூஜைகள் நடக்கிறது. இரவு 7 மணிக்கு தொடங்கி அதிகாலை வரை நான்கு கால பூஜைகள் நடைபெறுகிறது. பிரதோ ஷம் மற்றும் சிவராத்திரி என்பதால் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிக ரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கோவி லுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வரிசையில் நின்று சாமி தரிச னம் செய்திடும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

பாடி திருவல்லீஸ்வரர் கோவில்
பாடி திருவல்லீஸ்வரர் சிவன் கோவிலில் நாளை காலை 6 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடை பெறுகின்றன. மேலும் நாளை இரவு 9 மணி, நள்ளிரவு 12 மணி, 2 மணி, அதிகாலை 4.30 மணிக்கு நான்கு கால பூஜைகள் நடைபெறுகிறது. மேலும் பக்தர்கள் வரிசையில் சென்று தரிசனம் செய்யும் வகையில் ஆங்காங்கே தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாப்பு பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. இரவு முழு வதும் கோவில் வளாகத்தை சுற்றி பரதநாட்டியம், ஆன்மீக சொற்பொழிவுகள் ஆகி யவை நடைபெறுகின்றன.

திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோவில்
திருவொற்றியூர் தியாக ராஜசுவாமி கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி முதல் கால பூஜை நாளை இரவு 9 மணிக்கும், 2-ம் கால பூஜை இரவு 11 மணிக்கும், 3-ம் கால பூஜை இரவு 2 மணிக்கும், 4-ம் கால பூஜை அதிகாலை 4 மணிக்கும் நடக்கிறது. இந்த நான்கு காலபூஜையும் ஆலயத்தின் வாயு பாகத்தில் இருக்கும் திருவொற்றிஸ்வர பெருமானுக்கு நடைபெறும். ஆதிபுரிஸ்வர பெருமானுக்கு இரவு 11 மணிக்கு சங்கபி ஷேகம் நடைபெறுகிறது.
இதேபோல் திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவிலில் நாளை மாலை முதல் நான்கு கால பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறு கிறது. பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடு களும் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு சிறப்பு நிகழ்ச்சி களும் நடக்கிறது.
- சங்கு தீர்த்த குளத்தில் கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந்தேதி புதிய சங்கு வெளியேவந்தது.
- 12 ஆண்டுக்கு ஒரு முறை குளத்தில் இருந்து சங்கு வெளியே வருவது பக்தர்களை ஆச்சரியப்பட வைத்து வருகிறது.
மாமல்லபுரம்:
திருக்கழுகுன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்குள்ள சங்கு தீர்த்த குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு வெளியே வரும்.
இந்த சங்கு குளத்தில் கரை ஒதுங்கியதும், கோவில் நிர்வாகம் சார்பில் அதற்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். இதைத் தொடர்ந்து கார்த்திகை மாதத்தின் கடைசி திங்கட்கிழமையில் மலை மீது வேத கிரீஸ்வரருக்கு நடைபெறும் 1008 சங்காபிஷேகத்தில் குளத்தில் பிறந்த புதிய சங்கு முதன்மை பெறும்.
இதனை கண்டு வழிபட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். சங்கு தீர்த்த குளத்தில் கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந்தேதி புதிய சங்கு வெளியேவந்தது.
இதனால் சங்கு தீர்த்த குளத்தில் புதிய சங்கின் வருகைக்காக பக்தர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை குளத்தில் புதிய சங்கு கோவில் குளக்கரை யில் கரை ஒதுங்கி இருந்தது. இதனை கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
இதுபற்றி கோவில் நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற் கிடையே சங்கு தீர்த்த குளத்தில் புதிய சங்கு வெளியே வந்தது பற்றி அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் சங்கை பார்த்து பயபக்தியுடன் வழிபட்டனர். இதனால் கோவில் குளக்கரையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

பின்னர் அந்த சங்கிற்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதைத்தொடர்ந்து சங்கு பாதுகாப்பாக கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
மார்கண்டேயர் அனைத்து சிவாலயங்களுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு வந்து உள்ளார்.அப்போது, சிவ பெருமானை வழிபடுவதற்காக தீர்த்தம் எடுக்க பாத்திரம் இல்லாததால், இங்குள்ள குளத்தில் தீர்த்த பாத்திரம் வேண்டி சிவபெருமானை வணங்கியதாவும் அப்போது குளத்தில் இருந்து சங்கு ஒன்று பிறந்து கரை ஒதுங்கியதாகவும் நம்பப்படுகிறது. இந்த சங்கை சுவாமியே வழி பாட்டுக்கு வழங்கி யதாகவும் தல வரலாறு கூறுகிறது. இதனால் இந்த குளத் துக்கு சங்கு தீர்த்த குளம் என பெயர் பெற்று உள்ளது. மேலும் 12 ஆண்டுக்கு ஒரு முறை குளத்தில் இருந்து சங்கு வெளியே வருவது பக்தர்களை ஆச்சரியப்பட வைத்து வருகிறது.
நாளை சிவராத்திரி விழா நடைபெற உள்ள நிலையில் இன்று சங்குதீர்த்த குளத்தில் புதிய சங்கு வெளியே வந்ததால் பக்தர்கள் விசேஷமாக கூறி மகிழ்ச்சி அடைந்தனர். இன்றுடன் எடுத்த சங்குடன் மொத்தம் 8 சங்குகள் கோவிலில் இருப்பதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.
- பக்தர்கள் இன்று சிவாலய ஓட்டத்தை தொடங்கினார்கள்.
- வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில்:
நாட்டில் வேறொங்கும் இல்லாத வகையில் மகா சிவராத்திரி தினத்தில் 12 சிவாலயங்களுக்கும் பக்தர்கள் ஓடிச்சென்று தரிசிக்கும் முறை குமரி மாவட்டத்தில் மட்டுமே உள்ளது. பாரம்பரியமாக நடக்கும் இந்த நிகழ்வு வரலாற்று சிறப்பு மிக்கதாகும். சிவாலய ஓட்டத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் மாசி மாதம் ஏகாதசி தினத்தில் மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள்.
விரத நாளில் தீயினால் வேகவைக்கும் அனைத்து உணவுகளையும் தவிர்த்து விரதம் இருப்பார்கள். குறிப்பாக நுங்கு, இளநீர், பதநீர், பழங்கள் சாப்பிடுவது வழக்கம். அதுமட்டுமின்றி விரத நாட்களில் காலை, மாலை நேரங்களில் சிவாலயத்தின் அருகில் உள்ள நீர்நிலைகளில் நீராடி விட்டு ஈரத்துணியுடன் சிவபெருமானை தரிசிப்பார்கள். இந்த ஆண்டுக்கான சிவராத்திரி விழா நாளை (8-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து இன்று (7-ந்தேதி) பக்தர்கள் சிவாலய ஓட்டத்தை தொடங்கினார்கள்.
முஞ்சிறையில் உள்ள திருமலை மகாதேவர் ஆலயத்தில் இருந்து பக்தர்கள் ஓட்டத்தை தொடங்கினர். காவி உடை அணிந்து கோவிந்தா... கோபாலா... என்ற பக்தி கோஷத்துடன் கையில் விசிறி ஏந்தி சிவாலய ஓட்டத்தில் கலந்து கொண்டனர்.
திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு வீரபத்திரர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், கல்குளம் நீலகண்டசாமி கோவில், மேலாங்கோடு மகாதேவர் கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், திருப்பன்றிகோடு மகாதேவர் கோவிலில் தரிசனம் செய்து விட்டு சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து பக்தர்கள் நாளை (8-ந்தேதி) மாலை நட்டாலம் சங்கரநாராயணர் கோவிலை வந்தடைவார்கள்.
அங்கு இரவு முழுவதும் தூங்கா நோன்பு இருந்து ஓட்டத்தை நிறைவு செய்கின்றனர். சிவாலய ஓட்டத்தில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளா மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சிவாலய ஓட்டத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு சிவாலயங்களில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. சிவராத்திரியை யொட்டி நாளை (8-ந்தேதி) குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
- சிவராத்திரி அன்று இந்த கதையை படித்தால் எல்லா வளமும் கிடைக்கும்.
- வசுமதி சிவராத்திரி விரதம் இருந்து சிவனை நேராக பார்த்திருக்கிறாள்.
`அந்த காலத்துல ராமபிரான் வனவாசம் செஞ்ச தண்டகாரண்யம் காட்டுக்குப் பக்கத்துல கிருஷ்ணா நதிக்கரையில் கமாலபுரம்னு ஓர் ஊர் இருந்துச்சு. அந்த ஊர்ல இருந்த பொய்கைக்குக் கலசரஸ்னு பேரு. அந்த குளத்தோட கரையிலே நிறைய முனிவர்கள் ஆசிரமம் அமைத்து இறைவனை வழிபட்டாங்க. அவங்களில் ஒருத்தர்தான் வித்வஜிஹ்மர். அவரைப் பார்க்க கவுஸ்திமதி ரிஷின்னு ஒருத்தர் வந்தார். வித்வஜிஹ்மர் அவரை மனம் மகிழ வரவேற்று உபசரித்தார்.
`இந்த சின்ன வயசுல நீங்க துறவியா இருக்கறது கொஞ்சம் கூட சரியில்ல. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்காது என்பது உங்களுக்குத் தெரியாதா...! முன்னோர்களோட சாபமும் வந்து சேரும். அதனால்தானே அகஸ்தியர் லோபமுத்திரையை உருவாக்கி மணந்து கொண்டார். அதனால் நீங்கள் என் மகள் வசுமதியை மணந்து கொள்ளுங்கள்'னு வித்வஜிஹ்மர்கிட்ட கேட்டார்.
`சம்சாரங்கர பந்தத்துல அகப்பட்டு என்னோட வாழ்வை வீணாக்க நான் விரும்பவில்லை. வீணாக ஏன் கவலைகளையும் துன்பங்களையும் நாமே வரவழைத்து அனுபவிக்க வேண்டும். குடும்பம் குழந்தைன்னு கஷ்டப்படுறத விரும்பாமல் தானே நானே என்னோட அப்பாவான மரீச முனிவரைவிட்டு விலகி வந்து தவம் செய்யறேன். ஆனாலும் என்னோட கர்மா விடமாட்டேங்குதே' என்றார் வித்வஜிஹ்மர்.
`நமக்கு தந்தை என்கிற அந்தஸ்தை ஒரு மகனால்தான் தர முடியும்...! நம்மைப் படைத்து காத்துக் கொண்டிருக்கிற மும்மூர்த்திகளும் திருமணம் செஞ்சிருக்காங்க. சுப்ரமணியனும் விநாயகனும், ஐயப்பனும் கூட மணம்புரிந்து மனைவியோடு வீற்றிருக்கிறார்கள்.
உங்க பாட்டனார் பரத்வாஜ முனிவர் மணம் செய்யாமல் இருந்தால் நீங்கள் உருவாகியிருக்க முடியுமா? அதோட என் மகள் வசுமதியும் சாதாரண பெண் கிடையாது. கவுதம முனிவரின் பேரன் நான். சதாநந்த முனிவரின் பேத்தி வசுமதி. பதிவிரதைகளான பாஞ்சாலி, சீதை, அருந்ததி, அனுசுயா அவங்களுக்கு இணையானவள், என் மகள் வசுமதி. அதனால் நீங்கள் என் மகளை மறுப்பு எதுவும் சொல்லாமல் ஏத்துக்குங்க!' அப்படின்னார். அதுக்கு `மார்க்கண்டேயர், துர்வாசர், சனக் குமாரர்கள், கண்வமகரிஷி, நாரதர், சுகர் ஆகியோர் திருமணம் செய்யாமல் வாழவில்லையா?
அவங்க ஏன் கல்யாணம் செய்யாம வாழ்ந்தாங்க? அதுக்கான சரியான காரணத்தை நீங்கள் எனக்கு சொன்னால் நான் உங்கள் மகள் வசுமதியைக் கல்யாணம் செஞ்சுக்கறேன்'னு சொன்னார் வித்வஜிஹ்மர்.
கவுஸ்மதி முனிவர் தன்னோட தவ வலிமைய பயன்படுத்தி வைகுண்டத்துக்குப் போய் நாராயணைப் பார்த்து ஜிஹ்மரின் கேள்விகளைக் கேட்டார்.
அதற்கு நாராயணன் `நாரதனும் ஒருசமயம் என்னோட மாயையினால் பல குழந்தைகளைப் பெற்றிருக்கிறான். தமயந்தின்னு ஒருத்தியோட கொஞ்சகாலம் வாழ்ந்திருக்கான். ஸ்ரீமதியோட சுயம்வரத்தில் ஆசையில்லாமலா கலந்து கொண்டான்.
அதேபோல சனத்குமாரர்கள் வம்சத்தை விருத்தி செய்யாத காரணத்தால் பிரம்மனோட சாபத்தை பெற்றிருக்காங்க. காத்யாயனர் காத்யாயினியையும், கணவர் சகுந்தலையையும் வளர்த்தாங்க. பெண் குழந்தைகளை வளர்ப்பது கஷ்டம்னு அவங்க ஒருநாளும் நினைக்கலையே...! மார்க்கண்டேயரும் பூமாதேவியை வளர்த்து எனக்காகக் கொடுத்தார்.
துர்வாசரும் குந்திதேவிக்கு குழந்தை பாக்கியத்துக்கான ஐந்து மந்திரங்களை தந்தாரே! அவர் என்ன பாவம் என்று நினைத்தாரா...?
மகாலட்சுமியோட கலைகள் பதினாறையும் பெண் வடிவமாக்கி இந்த முனிவர்களுக்குத் தரலாம்னு பிரம்மா நினைச்சார். லட்சுமி இதை விரும்பாத காரணத்தினால் நான்தான் அதைத் தடுத்துவிட்டேன். அதனால் பிரம்மா அவர்களுக்கு, ஞானத்தைப் போதித்து முனிவர்களாக்கி விட்டார் என்று போய் ஜிஹ்மர்கிட்ட சொல் அவர் வசுமதியைக் கல்யாணம் செய்ய சம்மதம் சொல்வார் என்று சொல்லி அனுப்பினார்.
பூலோகத்துக்குத் திரும்பிய கவுஸ்திமதி, அப்படியே சொல்லி ஜிஹ்மர்கிட்ட அனுமதி வாங்கினார். வசுமதி திருமணம் சிறப்பாக நடந்தது.
கவுஸ்திமதி ரிஷி, மகளைவிட்டுப் பிரியும்போது பல்வேறு புத்திமதிகளைக் கூறினார். சீடர்களிடம் அன்னையாய் நடக்க வேண்டும். முனி பத்தினிகளிடம் தோழியாய் பழக வேண்டும் என்று நிறைய புத்திமதிகளைக் கூறினார். வித்வஜிஹ்மரும் வசுமதியும் நன்றாக வாழ்ந்தார்கள்.
அந்த வசுமதி சிவராத்திரி விரதம் இருந்து சிவனை நேருக்கு நேராகப் பார்த்திருக்கிறாள்.' சிவராத்திரி அன்று இரவு இந்த கதையை படித்தால் எல்லா வளமும் கிடைக்கும் என்று சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
- சிவராத்திரியை தொடர்ந்து 24 முறையும் அனுசரிக்க வேண்டும்.
- விவரிக்க முடியாத பெருமை பெற்றது தான் மகா சிவராத்திரி.
சிவபெருமானுக்கே உரிய சிவராத்திரி 5 வகையாக கூறப்பட்டு இருக்கிறது.
முதலாவதாக நித்திய சிவராத்திரி:
நித்திய சிவராத்திரி ஒவ்வொரு மாதமும் கிருஷ்ணபட்ச, சுக்லபட்ச சதுர்த்தசிகளில் வரும். மாதம் இரண்டாக வரும் நித்திய சிவராத்திரியை தொடர்ந்து 24 முறையும் அனுசரிக்க வேண்டும்.
இரண்டாவதாக பட்ச சிவராத்திரி:
தை மாதம் கிருஷ்ணபட்ச பிரதமை முதல் 13 நாட்கள் ஒரு நேரம் மட்டும் உணவு உண்டு 14-ம் நாளான சதுர்த்தசியில் முழு நேர உபவாசம் இருந்து பட்ச சிவராத்திரியில் சிவபெருமானை வழிபட வேண்டும்.
மூன்றாவது மாத சிவராத்திரி:
மாத சிவராத்திரி ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திதியில் வரும். சித்திரை மாதம் கிருஷ்ணபட்ச அஷ்டமியில், வைகாசி மாதம் சுக்லபட்ச அஷ்டமியில், ஆனி மாதம் சுக்லபட்ச சதுர்த்தியில், ஆடி மாதம் கிருஷ்ணபட்ச பஞ்சமியில், ஆவணி மாதம் சுக்லபட்ச அஷ்டமியில் புரட்டாசி மாதம் சுக்லபட்ச திரயோதசியில், ஐப்பசி மாதம் சுக்லபட்ச துவாதசியில், கார்த்திகை மாதம் சுக்லபட்ச சப்தமியில், மார்கழி மாதம் சுக்லபட்ச சதுர்த்தசியில், தை மாதம் சுக்லபட்ச திருதியையில், மாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியில், பங்குனி மாதம் சுக்லபட்ச திருதியையில் வருவது மாத சிவராத்திரி என்றழைக்கப்படும்.
நான்காவது யோக சிவராத்திரி:
திங்கட்கிழமை அன்று பகல், இரவு முழுவதும் அமாவாசையாக பொருந்தி வந்தால் அது யோக சிவராத்திரி.
ஐந்தாவது மகா சிவராத்திரி:
பெரும்பாலான சிவராத்திரிகளை கூர்ந்து கவனித்தால் அவை சதுர்த்தசி திதியில் வருவது தென்படும். ஏன் அப்படி? அமாவாசைக்கோ பெளர்ணமிக்கோ முன்பு பதினான்காம் நாளாக வருவது சதுர்த்தசி. அந்த நாள் சிவனுக்குரியது என்பது சாஸ்திரங்கள் கூறும் செய்தியாகும்.
ஒவ்வொரு தெய்வத்துக்கும் அவரவர்க்கேற்ற திதியை ஒதுக்கி வணங்கும் போது சிவனுக்கு ஒதுக்கப்பட்டது தான் சதுர்த்தசி. இந்த சதுர்த்தசி கிருஷ்ணபட்சமானால் மறுநாள் அமாவாசை அதே சுக்லபட்சமானால் மறுநாள் பெளர்ணமி. தொடக்க முடிவு இரண்டுமே அந்த சிவனால் தான் என்பதை உணர்த்தவே இந்த திதி சிவனுக்காக ஒதுக்கப்பட்டது. சிவன் என்றால் மங்களம் என்று பொருள்.
ராத்திரி என்றால் இரவு. எனவே மங்களகரமான இரவு என்று மகாசிவராத்திரியை சொல்லலாம். எல்லா வகையான சிவராத்திரிகளிலும் மேலானதும் வருஷம் ஒரு முறை மட்டுமே வருவதும் அனைத்து விதமான பாவங்களையும் நீக்கி நல்வாழ்வை தருவதும், எல்லா நலன்களையும் தரக்கூடியதுமான வார்த்தைகளால் விவரிக்க முடியாத பெருமை பெற்றது தான் மகா சிவராத்திரி.
- வெள்ளிங்கிரி மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
- ஏழாவது மலையில் உள்ள சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்து வருவது வழக்கம்.
கோவை:
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வெள்ளிங்கிரி மலை உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் இந்த மலையானது உள்ளது. 5.5 கி.மீ தூரம் செல்லும் இந்த மலைப்பாதையில் வெள்ளை விநாயகர் கோவில், பாம்பாட்டி சுனை, கைதட்டி சுனை, சீதைவனம், அர்ச்சுணன் வீல், பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை போன்றவற்றை கடந்து 7-வது மலையில் சுயம்பு லிங்கத்தை தரிசிக்க முடியும்.

ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரியை முன்னிட்டு தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் இங்கு வருவார்கள். அவர்கள் ஏழு மலைகள் ஏறி, ஏழாவது மலையில் உள்ள சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்து வருவது வழக்கம்.
இந்த ஆண்டு சிவாரத்திரியை முன்னிட்டு கடந்த மாதம் 9-ந் தேதி முதல் பக்தர்கள் மலையேறுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். அன்று முதல் தினந்தோறும் வெள்ளியங்கிரி மலைக்கு தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
வருடத்திற்கு வருடம் வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தபடியே உள்ளது. அதற்கு ஏற்ப அனைத்து வசதிகளையும் வனத்துறையினர் செய்து கொடுத்து வருகின்றனர்.

நாளை மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கடந்த சில தினங்களாக வெள்ளிங்கிரி மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளிங்கிரி மலையேறி சாமி தரிசனம் செய்து சென்றுள்ளனர். இதுவரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி உள்ளனர்.
நாளைய தினம் மகா சிவராத்திரி என்பதால் இன்றும், நாளையும் அதிகளவிலான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடம் 3 லட்சம் பக்தர்கள் வெள்ளிங்கிரி மலையேறுவார்கள் என தெரிகிறது. அடர் வனப்பகுதியில் மலை ஏற்றம் உள்ளதால் ஒரு சிலருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால், அடிவாரத்தில் 108 ஆம்பலன்ஸ் மற்றும் அவசர கால மருத்துவர்கள் பணியில் உள்ளனர்.
மேலும் கோடைக்காலம் என்பதால் தீயணைப்பு மீட்புக்குழுவினரும், வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே வெள்ளிங்கிரி மலையேறும் பக்தர்களை கண்காணிக்க வனத்துறை சார்பில் சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் 6-வது மலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.






