என் மலர்
வழிபாடு
- சுத்தமான நீரால் செய்யப்படும் தாராபிஷேகத்தால் கஷ்டங்கள் நீங்கும்.
- நெய் அபிஷேகம் செய்தால் நோய் நீங்கி வம்ச விருத்தி ஏற்படும்.
* சிவனைத் தூய நல்லெண்ணையில் வாசனைத் திரவியங்கள் கலந்து நூறு குடம் அபிஷேகம் செய்தால் வாழ்வில் நோய் நீங்கி நோயற்ற வாழ்வு கிடைக்கும்.
* கோமூத்திரம் கலந்த பஞ்சகவ்யத்தைப் பத்துக்குடம் அபிஷேகம் செய்தால் உடலில் உள்ள அழுக்குகள் நீங்கி, மாசு மருவற்ற தேகத்தினைப் பெறலாம்.

* சுத்தமான பசுவின் கறந்த பால் ஆயிரம் குடம் அபிஷேகம் செய்தால் தீர்க்காயுசு கிடைக்கும்.
* சுத்தமான தேன் கொண்டு அபிஷேகம் செய்தால் மன துக்கமும், இனிய கானம் பாடும் திறமையும், குயிலினும் இனிய குரலும் கிடைக்கும்.
* எலுமிச்சம்பழம் ஆயிரம் கொண்டு அபிஷேகம் செய்தால் அஞ்ஞானம் நீங்கிவிடும்.
* சர்க்கரையினால் நூறு மூட்டை அபிஷேகம் செய்ய வாழ்வில் இல்லாமை நீங்கி, மனநிறைவு உண்டாகும்.
* இளநீர் ஆயிரம் குடம் அபிஷேகம் செய்தால் பேரானந்தமும், கைலாசவாசனின் காலடியில் வாழும் பேறும் கிட்டும்.
* 10 ஆயிரம் பழங்கள் சேர்த்து செய்த பஞ்சா மிர்தத்தால் அபிஷேகம் செய்தால் வாழ்வில் வீரத்துடன் எதையும் சாதிக்கும் மனோபலமும், சகல காரியங்களில் வெற்றியும் கிடைக்கும்.
* தயிர் நூறு குடம் அபிஷேகம் செய்தால் மேலான சம்பத்து கிடைக்கும்.
* கரும்புச்சாறு நூறு குடம் அபிஷேகம் செய்தால் தேக ஆரோக்கியம், உடல் வலிமை பெற்று விளங்கும்.
* மஞ்சள் தூளினால் அபிஷேகம் செய்தால் அரசனின் அன்பிற்கு பாத்திரமாகும் நிலை உண்டாகும்.
* திராட்சை ரசம் செல்வத்தினை அளிக்கும்.
* பசு நெய் கொண்டு அபிஷேகம் செய்தால் இகபர சுகங்களில் இருந்து நம்மை விடுவித்து சொர்க்க நிலையை நமக்கு அளிக்கும்.
* அரிசி மாவினால் அபிஷேகம் செய்தால் எத்தகைய கடன்கள் இருந்தாலும் அவற்றில் இருந்து நம்மை விடுவிக்கும்.
* அன்னாபிஷேகம், பதினொரு மூட்டை அரிசியால் அன்னம் சமைத்து அதனை லிங்க சொரூபமான சிவனுக்கு அபிஷேகம் செய்தால் வயிற்றில் உண்டாகும் சகலவிதமான நோய்களும் பஞ்சாகப் பறந்துவிடும்.
* தூய்மையான மங்களகரமான கங்கை நீர் நூறு குடம் கொண்டு அபிஷேகம் செய்தால் மனத்தில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி, பயம் போய், மனநிம்மதி உண்டாகும்.
* சந்தனக்குழம்பினை பன்னீரில் கரைத்து அபிஷேகம் செய்தால் இறைவனிடம் மாசற்ற பக்தி உண்டாகி அஞ்ஞானம் விலகும்.
* ருத்ரம் ஜபித்த ஆயிரம் கலசங்களில் வைக்கப்பட்டுள்ள கங்கை நீரால் கங்காதரனைக் குளிர்வித்தால் மந்திரசித்தி ஏற்படும்.
* ஈசனின் திருமேனியில் இருந்து தோன்றிய விபூதியினால் அபிஷேகம் செய்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
* தங்கத்தாமரை மொட்டுகள் செய்து அதனால் அபிஷேகம் செய்தால் சொர்க்க போகம் கிடைக்கும்.
* மாதுளை- அரச பதவி கொடுக்கும்
* நெய்- மோட்சத்தைக் கொடுக்கும்
* அன்னம்- வயிற்று நோயை நீக்கும்
* நெல்லிக்கனி- பித்தம் நீக்கும்
* பழரசங்கள்- வறட்சியைப் போக்கும்
சுத்தமான நீரால் செய்யப்படும் தாராபிஷேகத்தால் கஷ்டங்கள் நீங்கும். சுகம், குழந்தை பாக்கியம் ஏற்படும். நெய் அபிஷேகம் செய்தால் நோய் நீங்கி வம்ச விருத்தி ஏற்படும். சர்க்கரை கலந்த பாலாபிஷேகம் செய்ய மந்திர ஏவல்களால் பாதிப்பு ஏற்படாது. வாசனைத் திரவியங்களோடு கூடிய தயிர் அபிஷேகம் எதிரிகளை அழிக்கும். தேன், வியாதிகளை நீக்கும், கரும்புச்சாறு துக்கங்களை நீக்கி சந்தோஷத்தை கொடுக்கும்.
நெய் அபிஷேகம் செய்தவுடன் ஆறிய வெந்நீர் அபிஷேகம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அபிஷேகத்திற்கும் வாசனை கலந்த சுத்த தண்ணீரால் அபிஷேகம் செய்து, அடுத்தது தொடங்க வேண்டும். ஒவ்வொரு அபிஷேகத்தின் போதும் வகை வகையான மலர்களை சிவன் தலையில் வைக்க வேண்டும். ஈசனுக்கு அபிஷேகம் செய்யும் பொழுது சல்லடைக் கண்கள் உள்ள தாராபாத்திரத்தில் அபிஷேகம் செய்தால் நன்மைகள் பல உண்டு.
- சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 13-ந்தேதி திறக்கப்படுகிறது.
- பங்குனி உத்தரதிருவிழா 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்காக திறக்கப்படுவதை தவிர்த்து மாதந்தோறும் 5 நாட்கள் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். இது தவிர விஷு, ஓணம் பண்டிகை மற்றும் பங்குனி உத்திரம் திருவிழா ஆகியவற்றின் போதும் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டு பங்குனி மாத பூஜை மற்றும் உத்திர திருவிழாவை யொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 13-ந் தேதி (புதன்கிழமை) திறக்கப்படுகிறது. கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை காட்டுகிறார்.
மறுநாள் (14-ந் தேதி) முதல் தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதிஹோமம், நெய் அபிசேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும். 18-ந் தேதி வரை 5 நாட்கள் தந்திரி மகேஷ் மோகனரு தலைமையில் படிபூஜை, களபாபிசேகம் போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.
பங்குனி உத்தரதிருவிழா 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் காலை9.45 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனகுரு கொடியேற்றி வைத்து 10 நாள் திருவிழாவை தொடங்கி வைக்கிறார். விழாவில் சிறப்பு பூஜையாக உத்சவ பலி நடைபெற உள்ளது. 25-ந் தேதி 10-ம் திருநாளில் பம்பயைில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெற உள்ளது. அன்று மாலை கொடியிறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறுகிறது. அன்று இரவு பூஜைகளுக்கு பிறகு கோவில் நடை அடைக்கப்படும்.
- கபிலேஸ்வரா் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.
- இரவு 10 மணி வரை சிறப்பு நந்தி வாகன சேவை நடக்கிறது.
திருமலை:
திருப்பதி கபிலேஸ்வரா் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாளை (வெள்ளிக்கிழமை) மகாசிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. பக்தர்களின் கூட்டத்தை கருத்தில் கொண்டு சிறப்பு வரிசைகள், சாமியானா பந்தல்கள், வாகனங்கள் நிறுத்துமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நாளை அதிகாலை 2.30 மணியில் இருந்து 4.30 மணி வரை மகான்யாச ஏகாதச ருத்ராபிஷேகம், காலை 7 மணியில் இருந்து 9 மணி வரை தேரோட்டம் (போகித்தேர்) காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை உற்சவமூர்த்திகளுக்கு திருமஞ்சனம், மாலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை சிறப்பு நந்தி வாகன சேவை நடக்கிறது.
நாளை காலை 6 மணியில் இருந்து மதியம் 2 மணி வரையிலும், மாலை 4.30 மணியில் இருந்து இரவு 12 மணி வரையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். நாளை மறுநாள் (சனிக்கிழமை) இரவு 12 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரை லிங்கோத்பவ அபிஷேகம் நடக்கிறது.
அதையொட்டி திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் இந்து தர்மபிரசார பரிஷத், எஸ்.வி.சங்கீத், நிருத்ய கலாசாலா ஆகியவை ஏற்பாட்டில் பக்தி இசை மற்றும் கலா சார நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
மகாசிவராத்திரிக்கு மறுநாள் (சனிக்கிழமை) சிவன்-பார்வதி திருக்கல்யாண மகோற்சவம் நடக்கிறது. இந்தத் திருக்கல்யாண மகோற்சவம் அன்று மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை ஆர்ஜித சேவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
- புனித நீராடி சாமி தரிசனம் செய்தால் நாக தோஷம் நீங்கும்.
- மடாதிபதிகள் பலர் வந்து தங்கி பூஜை செய்து சிவனை வழிபட்டுள்ளனர்.
சித்தூர்:
சித்தூர் மாவட்டம் நகரி தொகுதிக்கு உட்பட்ட கீழப்பட்டு கிராமத்தில் திரிபுரசுந்தரி சமேத சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) மகா சிவராத்திரி விழா நடக்கிறது. அதையொட்டி 6 கால அபிஷேகமும் நடக்க உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோவிலில் நாக தீர்த்தம், ஐஸ்வர்ய தீர்த்தம் என 2 தீர்த்தங்கள் உள்ளன. அதில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தால் நாக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

இந்த கோவிலுக்கு மடாதிபதிகள் பலர் வந்து தங்கி பூஜைகள் செய்து சிவனை வழிபட்டுள்ளனர். அதேபோல் காஞ்சி மகா பெரியவர் எனப்படும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இக்கோவிலுக்கு வந்து பல மாதங்கள் தங்கி பூஜைகள் செய்து சிவனை வழிபட்டுள்ளார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவிலில் கரும்புகளால் அமைக்கப்பட்ட லிங்கம், வில்வக்காய்களால் உருவாக்கப்பட்ட லிங்கம், விபூதியால் செய்யப்படட லிங்கம், சந்தனத்தால் உருவாக்கப்பட்ட லிங்கம், பனை ஓலைகளில் அமைக்கப்பட்ட லிங்கம், பசு சாணத்தால் உருவாக்கப்பட்ட லிங்கம், ஐந்து லட்சம் ருத்ராட்சங்களால் அமைக்கப்பட்ட லிங்கம் எனப் பல்வேறு லிங்க அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு வந்தன.

இந்த மகாசிவராத்திரி விழாவையொட்டி 10 அடி உயரத்தில் தென்னை ஓலையால் செய்யப்பட்ட லிங்கம் மற்றும் 9 அடி உயரத்தில் ருத்ராட்சங்கள், துளசி மணி, தாமரை மணிகளால் செய்யப்பட்ட ஏகபாத மூர்த்தி உருவம் வைக்கப்பட்டுள்ளது.
மகாசிவராத்திரியான நாளை ஏகபாத மூர்த்திக்கு 6 கால பூஜையும், உமா மகேஸ்வரன் திருக்கல்யாண வைபவமும் நடக்க உள்ளது. நாளை காலை 10 மணியில் இருந்து இரவு வரை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
கோவிலுக்கு உள்ளூர், வெளியூர், பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் சாமி தரிசனம் செய்ய தரிசன வரிசை வழியாக கோவிலுக்குள் அனுப்பி வைக்கப்படுவார்கள். பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா.
- சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் 4 மாட வீதிகளில் உலா.
ஸ்ரீகாளஹஸ்தி:
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 11 மணியளவில் கங்காபவானியுடன் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் ஹம்ச வாகனத்திலும், யாளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
உடன் விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத முருகன், பக்த கண்ணப்பர் உலா வந்தனர். முன்னதாக கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் உற்சவர்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மேள தாளங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க ராஜகோபுரம் வரை கொண்டு வந்து அந்தந்த வாகனங்களில் உற்சவர்களை எழுந்தருள செய்தனர். வீதி உலா முன்னால் கோலாட்டம், நாட்டிய, நடன நிகழ்ச்சிகள் நடந்தன. இசை வாத்தியங்கள் இசைக்கப்பட்டன.
இதேபோல் இரவு 9 மணியளவில் ராவணாசூர வாகனத்தில் சோமசுந்தரமூர்த்தி, மயில் வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
- திருமாலுக்கு உரிய சிறந்த நட்சத்திரம் திருவோணம்.
- வியாழக்கிழமை வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.
இன்று சந்திரனுக்குரிய திருவோண நாள். திருமாலுக்கு உரிய சிறந்த நட்சத்திரம் திருவோணம். இது வியாழக்கிழமை வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. சந்திரனும், குருவும் சேர்வது யோகம் என்று கருதப்படுகிறது. இந்த யோக நாளில் விரதம் இருந்தால் சிறப்பான பலன் கிடைக்கும்.
ஒவ்வொரு திருவோண நட்சத்திரத்திலும் விரதம் இருந்து திருமாலை வழிபடுவது பூர்வ ஜென்ம வினைகளை கூண்டோடு ஒழிக்கும். தமிழகத்தில் பல வைணவத் தலங்கள் திருவோணத்தின் சிறப்பை சொல்லும் தலங்களாக உள்ளன.
கும்பகோணத்திற்கு அருகே உள்ள ஒப்பிலியப்பன் கோயில் போன்ற சில தலங்கள் திருவோணத்தின் சிறப்பை சொல்லும் தலங்களாகும்.
இன்று எல்லா பெருமாள் கோவில்களிலும் திருவோண சிறப்பு வழிபாடுகளும் திருமஞ்சனமும் நடைபெறும். இன்று காலை திருவோண விரதத்தை தொடங்க வேண்டும். மாலையில் துளசி மாலையோடு சென்று அருகில் உள்ள பெருமாள் கோவிலில் விளக்கேற்றி தரிசனம் செய்துவிட்டு வீட்டிற்கு வந்து பூஜை அறையில் விளக்கேற்றி சுவாமியை வணங்கி பால் அல்லது பழம் நிவேதனம் செய்து விரதத்தை முடிக்கலாம்.
திருவோண விரதம் இருப்பதால் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும். நல்ல புத்திக்கூர்மை ஏற்படும். திருவோண விரதம் இருப்பதால் சந்திர தோஷம் விலகுவதுடன், சந்தோஷமான மணவாழ்வு அமையும்.
திருவோண விரதம் அன்று சொல்ல வேண்டிய பாசுரம்:
`நான்ஏதும் உன்மாய மொன்றறியேன்
நமன்தமர் பற்றி நலிந்திட்டு இந்த
ஊனேபுகே யென்று மோதும் போது
அங்கேதும் நான்உன்னை நினைக்க
மாட்டேன்
வானேய் வானவர் தங்களீசா!
மதுரைப் பிறந்த மாமாயனே! என்
ஆனாய்! நீஎன்னைக் காக்க வேண்டும்
அரங்கத் தரவணைப் பள்ளியானே!'
- திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் புறப்பாடு.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மாசி 24 (வியாழக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: துவாதசி இரவு 10.27 மணி வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம்: உத்திராடம் காலை 9.49 மணி வரை பிறகு திருவோணம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று சுபமுகூர்த்த தினம். திருவோண விரதம். சுவாமிலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேலுடன் தரிசனம் தருதல். திருவைகாவூர், திருவாரூர், ராமேசுவரம் சுவாமி தங்கக் கேடயத்திலும், அம்பாள் முத்தங்கி சேவை அருளுதல். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் புறப்பாடு. ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன அலங்கார சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பாராட்டு
ரிஷபம்-புகழ்
மிதுனம்-வெற்றி
கடகம்-அன்பு
சிம்மம்-தனம்
கன்னி-ஆதரவு
துலாம்- சாதனை
விருச்சிகம்-பெருமை
தனுசு- நிறைவு
மகரம்-ஓய்வு
கும்பம்-லாபம்
மீனம்-அமைதி
- சிவ விரதங்கள் எட்டு. அவற்றுள் சிவராத்திரி ஒன்று.
- நான்கு காலங்களிலும் சிவபூஜை செய்ய வேண்டும்.
சிவ விரதங்கள் எட்டு. அவற்றுள் சிவராத்திரி ஒன்று. அதிகாலையில் நீராடி திருநீறும் ருத்திராட்ச மாலையும் அணிந்து சிவபூனுறு செய்து திரு ஐந்தெழுத்து ஓதவேண்டும். பகல் முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். மாலையில் மீண்டும் நீராடி சிவாலயம் சென்று வழிபட வேண்டும். முடியுமானால் நெய்விளக்கு ஏற்றி மலரால் அர்ச்சனை செய்து உள்ளம் உருகி தேவாரம் மற்றும் திருவாசக பாடல்களை பாடி துதி செய்து வலம் வந்து அஷ்டாங்க வணக்கம் புரிந்து வழிபாடு செய்ய வேண்டும். சிவராத்திரி அன்று இரவில் நான்கு காலங்களிலும் சிவபூஜை செய்ய வேண்டும்.
அன்று இரவு பதினான்கு நாழிகையின் போது முறைப்படி விரதம் இருந்து சிவனை வழிபட்டால் கோடி பிரம்ம ஹத்திகளும் (பாவங்களும்) விலகும் என்பது உறுதி.
சிவராத்திரி தினத்தன்று அதிகாலையில் எழுந்து கொள்ள வேண்டும். நீராடிவிட்டு சிவாலயம் ஒன்றிற்குச் சென்று, தான் இன்று சிவராத்திரி விரதம் அனுசரிக்க விருப்பதாகவும் தன்னுடைய விரதம் எவ்வித பங்கமும் இல்லாமல் நிறைவேற அருள வேண்டும் என்றும் தன் புலனடக்கத்திற்கு எந்தவிதக் கேடும் வந்து விடக்கூடாது என்றும் எம்பெருமானை வேண்டிக் கொள்ள வேண்டும்.
பிறகு பூஜைக்குத் தேவையான பொருட்களை எல்லாம் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். பொழுது சாயும் வேளையில் குளித்து விட்டு சுத்தமான உடைகளை உடுத்திக் கொள்ள வேண்டும். மூன்று முறை ஆசமனம் செய்து பரமேஸ்வரனைத் துதித்து பூஜையைத் தொடங்க வேண்டும்.
நான்கு ஜாமங்களிலும் நான்கு சிவலிங்கங்களை மண்ணால் செய்து வழிபட வேண்டும். வேதம் கற்றவர்களைக் கொண்டு மந்திரங்களை உச்சரித்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும். பால், தயிர், தேன், நெய், சர்க்கரை ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும்.
சிவராத்திரியின் முதல்நாள் பிரதோஷ தினம் ஆகையால் மாலையில் நடராஜப் பெருமானையும், சிவ மூலவரையும் வழிபட வேண்டும்.
சிவராத்திரி இரவில் நான்கு கால வழிபாடு நடை பெறும். முதல் காலத்தில் சோமாஸ்கந்தரையும், இரண்டாம் காலத்தில் தட்சிணாமூர்த்தியையும், மூன்றாம் காலத்தில் லிங்கோத்பவரையும், நான்காம் காலத்தில் ரிஷபாரூடர் என்று அழைக்கப்பெறும் சந்திரசேகரரையும் வழிபட வேண்டும்.
நான்கு காலங்களிலும் கருவறையிலுள்ள சிவ மூலவரை ஆகம முறைப்படி அபிஷேகங்கள் செய்வித்து வழிபட வேண்டும். மூன்றாம் காலம் லிங்கோத்பவ காலம் ஆகும். அந்நேரத்தில் கருவறைக்குப் பின்னே உள்ள லிங்கோத்ப வரை முறைப்படி வழிபட வேண்டும். அந்நேரத்தில் ஸ்ரீருத்ரத்தைப் பாராயணம் செய்தல், ஸ்ரீ சிவ சகஸ்ர நாமங்களை உச்சரித்தல், தேவாரத்தில் உள்ள லிங்க புராண திருக்குறுந்தொகை யையும் பாராயணம் செய்தல் வேண்டும்.
சிவராத்திரி விரதமானது எம பயத்தை நீக்கும். சிவனடியார்களை எமதூதர்கள் நெருங்க அஞ்சுவார்கள் என்று பரஇதிகாசம் உரைக்கிறது.
சிவராத்திரியின் நான்காம் காலத்தில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஓதுவதால், உடல் பிணிகள் அனைத்தும் விலகும். சிவராத்திரி அன்று தான தருமங்கள் செய்வதால் கோடிப் புண்ணியம் கிடைக்கும். சிவலிங்கம், உருத்திராட்சம், ரத்தினங்கள், நிவேதனப் பொருட்கள், அன்னம் போன்றவைகளைத் தானம் செய்யலாம்.
நான்கு காலங்களிலும் சிவபெருமானுக்கு பஞ்ச வில்வ தளங்களால் பஞ்சமுக அர்ச்சனை செய்ய வேண்டும். நான்காம் காலத்தில் மட்டும் செய்தால் கூடப் போதுமானது. பஞ்சமுக அர்ச்சனை செய்து, ஐந்து வகை அன்னங்களை சிவபெருமானுக்குப் படைத்தல் வேண்டும்.
சிவபூஜை செய்ய இயலாதவர்கள் நான்கு காலங்களிலும் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் கலந்து கொண்டு தரிசிக்க வேண்டும். நிரம்பிய அன்புடன் திரு ஐந்தெழுத்து ஓதுதல் இன்றியமையாதது. மறுநாள் காலை நீராடி சிவனை வழிபட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.
இப்படி விரதம் இருந்தவர்களின் சகல வினைகளும் நெருப்பில் விழுந்த பஞ்சு போல எரிந்து கரிந்து சாம்ப லாகும். தீபங்களை வரிசையாக வைத்து சிவபெருமானை வழிபட வேண்டும். சிவபெருமான் தீபமங்கள ஜோதியாக விளங்குபவர். அவர் ஒளிவெள்ளமாக திருவண்ணாமலையில் காட்சி தருகிறார்.
கோவிலுக்குள் நீராடிய பிறகே செல்ல வேண்டும். கொடி மரத்திற்கு வெளியே விழுந்து வணங்கி விநாயகரை ஒரு முறையும் சிவபெருமானை மூன்று முறையும், அம்பிகையை நான்கு முறையும் வலம்வரவேண்டும். வழிபடும் போது மனம் இறைவன் மீது மட்டுமே இருக்க வேண்டும். விபூதி மற்றும் பிரசாதத்தை பயபக்தியுடன் இரண்டு கைகளாலும் ஏந்திப் பெற வேண்டும். அதைக்கீழே சிந்துவதோ எறிவதோ பெரும்பாவமாகும். சண்டிகேஸ்வரர் மீது நூல் இடக்கூடாது.
சிவலிங்கத்திற்கும் நந்திதேவருக்கும் இடையே போகக்கூடாது. கோவிலில் பிரசாதங்களை சாப்பிட்டு விட்டு தூண்களில் துடைப்பது தவறாகும். வழிபாடு முடிந்த பிறகு கொடிமரத்தின் அருகில் வடதிசை நோக்கி அமர்ந்து மூலமந்திரம் ஜெபிக்க வேண்டும். அதிக சப்தம் இல்லாமல் இனிமையாக தோத்தி ரப் பாடல்களை பாட வேண்டும்.கோவிலுக்கு செல்வோர் முக்கிய மாக விளக்குகளில் எண்ணெய் ஊற்ற வேண்டும். இதனால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாவதுடன், அந்த வீட்டில் தெய்வ கடாட்சமும், லட்சுமியின் அனு கிரகமும் உண்டாகும்.
- மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி மகாலிங்கம் கோவில் உள்ளது.
- 21 வகையான அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியன்று சதுரகிரிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். அதன்படி வருகிற 8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் ஆயிரக் கணக்கானோர் திரளுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மகாசிவராத்திரி, அமாவாசையை முன்னிட்டு வருகிற 8-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 8-ந் தேதி சிவராத்திரி, பிரதோஷத்தை முன்னிட்டு சுந்தரமகாலிங்க சுவாமிக்கு 21 வகையான அபிஷே கங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. அன்று இரவு விடிய விடிய பூஜைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை தினம், சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால் சதுரகிரியில் முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், பஸ் உள்ளிட்ட வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
மதுரை, திருமங்கலம், விருதுநகர், ஸ்ரீவில்லி புத்தூர் உள்ளிட்ட பகுதி களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சதுரகிரிக்கு 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் வருவதை தவிர்க்க வேண்டும்.
மலையேறு பவர்கள் ஓடைகளில் இறங்கி குளிக்க கூடாது. சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். காலை 6 மணி முதல் 12 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.
பாலித்தீன் மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை உள்ளிட்ட கட்டுபாடுகளை வனத்துறை விதித்துள்ளது. சதுரகிரியில் மகா சிவராத்திரி, அமாவாசை பூஜை ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சாமி, பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.
- நீலச்சங்கு -அவச்சொல், அபாண்டம், தரித்திரம் நீங்கும்.
- மனோரஞ்சிதம், பாரிஜாதம்-பக்தி, தம்பதி ஒற்றுமை, ஆயுள்விருத்தி.
செந்தாமரை - தனலாபம், வியாபார விருத்தி, ஆயுள் விருத்தி
மனோரஞ்சிதம், பாரிஜாதம்- பக்தி, தம்பதி ஒற்றுமை, ஆயுள்விருத்தி
வெண்தாமரை, நந்தியாவட்டை, மல்லிகை, இருவாட்சி- மனச்சஞ்சலம் நீங்கி, புத்திக்கூர்மை ஏற்படும். சகலகலாவிருத்தி.
மாசிப்பச்சை, மரிக்கொழுந்து - நல்ல விவேகம், சுகபோகங்கள், உறவினர் ஒற்றுமை உண்டாகும்.
மஞ்சள் அரளி, தங்க அரளி, செவ்வந்தி- கடன்நீங்கும், கன்னியருக்கு விவாகப்ராபதி ஏற்படும்.
செம்பருத்தி, அடுக்கு அரளி, தெத்திப்பூ- ஞானம் நல்கும், புகழ், தொழில் விருத்தி
நீலச்சங்கு - அவச்சொல், அபாண்டம், தரித்திரம் நீங்கும் அருளும் ஆயுளும் கிட்டும்.
வில்வம், கருந்துளசி, மகிழம்பூ - சங்கடங்கள் நீங்கி, சகலகாரியமும் கைகூடும்.
தாமரை, செண்பகம் ஆகியவற்றை மொட்டுகளாகவும் பூஜை செய்யலாம். ஏனையவை மலர்ந்திருக்க வேண்டும்.
குங்குமப்பூ தவிர மற்ற முள் உள்ள பூக்கள் பூஜைக்கு உகந்தவை அல்ல. கிளுவை, விளா, வெண்நொச்சி, மாவிலங்கை, வில்வம் ஆகியவை பஞ்ச வில்வங்களாகும்.
மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, சதுர்த்தசி, அஷ்டமி, நவமி நாள்களில் வில்வத்தை மரத்தில் இருந்து பறிக்க கூடாது.
ஆகமங்கள் சொல்லும் மாத சிவராத்திரி
ரத கல்பம் என்னும் நூல் விரிவாகச் சொல்லுகிறது. அதனைச் சுருக்கி இங்கே தரப்படுகிறது.
1. சித்திரை மாதம் :- இம்மாதம் தேய்பிறை-அஷ்டமி சிவராத்திரி உமா தேவியால் வழிபடப்பட்டது.
2. வைகாசி மாதம் :- வளர்பிறை-அஷ்டமி சிவராத்திரி சூரிய பகவனால் வழிபடப்பட்டது.
3. ஆனி மாதம்:- வளர்பிறை-சதுர்த்தசி சிவராத்திரி ஈசனால் வழிபடப்பட்டது.
4. ஆடி மாதம்:- தேய்பிறை-பஞ்சமி சிவராத்திரி முருகனால் வழிபடப்பட்டது.
5. ஆவணி மாதம் :- வளர்பிறை-அஷ்டமி சிவராத்திரி சந்திரனால் வழிபடப்பட்டது.
6. புரட்டாசி மாதம் :- வளர்பிறை-திரியோதசி சிவராத்திரி ஆதி சேஷனால் வழிபடப்பட்டது.
7 .ஐப்பசி மாதம் :- வளர்பிறை-துவாதசி சிவராத்திரி இந்திரனால் வழிபடப்பட்டது.
8. கார்த்திகை மாதம் :- 2 சிவராத்திரி. வளர்பிறை சப்தமியும் தேய்பிறை அஷ்டமியும் சிவராத்திரிகள். இவை சரஸ்வதி தேவியால் வழிபடப்பட்டது.
9. மார்கழி மாதம் :- வளர்பிறை, தேய்பிறையில் வரும் சிவராத்திரி லட்சுமியால் வழிபடப்பட்டது.
10. தை மாதம்:- வளர்பிறை-நந்தி தேவரால் வழிபடப்பட்டது.
11. மாசி மாதம்:- தேய்பிறை-தேவர்களால் வழிபடப்பட்டது.
12.பங்குனி மாதம்:- வளர்பிறை-குபேரனால் வழிபடப்பட்டது.
நாமும் சிவராத்திரியில் சிவபெருமானை வழிபடுவோம். அவர் அருளை பெறுவோம்.
- மகா சிவராத்திரியன்று ஐந்து சிறப்புகள் இணைந்து வருவது சிறப்பானது.
- 300 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் ஜோதிட அதிசயம் என்கிறார்கள்.
ஜோதிட சாஸ்திரங்களின்படி, இந்த ஆண்டு மகா சிவராத்திரி அன்று சர்வார்த்தி சித்தி யோகம், சிவ யோகம், திருவோண நட்சத்திரம், வெள்ளிக்கிழமை பிரதோஷம், மகா சிவராத்திரி என்ற ஐந்து சிறப்புகள் இணைந்து வருவது சிறப்பானது. இந்த நாளில் மகா சிவராத்திரி வருவது சிறப்பானது. இந்த மகா சிவராத்திரி நாளை தவற விடக்கூடாது. மகா சிவராத்திரி சுக்கிர வார பிரதோஷத்தில் வருவதால் பொருளாதாரச் சிக்கல்கள் தீர்ந்து செல்வ வளம் சேரும். மகா சிவராத்திரியில் விரதமிருந்து கண் விழித்து சிவதியானம் செய்திட எல்லா காரியங்களிலும் வெற்றி உண்டாகும்.
இந்த ஆண்டு மார்ச் 8-ந் தேதி வெள்ளிக்கிழமை மகா சிவராத்திரி கொண்டாடப்பட உள்ளது. அன்று இரவு 8 மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை 4 கால பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற உள்ளன. ஐந்து யோகங்கள் ஒன்று கூடும் சிறப்பு நிகழ்வும் ஜோதிட ரீதியாக நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. இது 300 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் ஜோதிட அதிசயம் என்கிறார்கள்.
சிவராத்திரி தினத்தன்று நடராஜர் உருவத்தில் சிவபெருமான் நடனம் ஆடியதாகக் கூறுவார்கள். இந்த நடனத் தோற்றம் இறைவனின் தத்துவத்தை உணர்ந்த பக்தன் உணர்ச்சியால் மெய்மறந்திருப்பதைப் பிரதிபலிக்கிறது.
விழித்திருப்பது, தூங்குவது, ஆழ்ந்த தூக்கம் ஆகியவற்றை கடந்த நிலை வந்தால், மற்ற உணர்ச்சிகள் இந்த நிலையைப் பாதிக்காது. இந்த நிலையில் நித்தியஆனந்தத்தை உணருவதே உன்னதமானது. அதையே நடராஜரின் தோற்றம் பிரதிபலிக்கிறது. உடல் உள்ளம் ஆகியவற்றைச் சார்ந்த உணர்வுகளும், மனத்தின் எண்ணங்களும், புத்தியின் இயக்கமும் கட்டுப்படும் நிலையே பேரானந்தமானது. இதையே நடராஜரின் மெய் மறந்து கூத்தாடும் நிலையை உணர்த்துகிறது.
நடராஜர் ஒரு காலை இருத்தியும், ஒரு காலை உயர்த்தியும் ஆடுவது, உலகப் பற்றுகளை மிதித்து அடக்கியும், உன்னதமான ஆன்மீக உணர்வுகளை உயர்த்தியும் வாழ்ந்தாலும் பேரானந்தம் தரும் என்பதை உணர்த்துகிறது. எனவே சிவராத்திரி தினத்தன்று மறக்காமல் நடராஜர் சன்னதியிலும் வழிபாடுகள் செய்ய வேண்டும்.
- 35 பெருநகரங்களில் மகாசிவராத்திரி விழா நேரடி ஒளிபரப்பு.
- சக்தியூட்டப்பட்ட ருத்ராட்சம் பிரசாதமாக வழங்கப்படும்.
சென்னை:
திரையரங்க வரலாற்றில் முதல்முறையாக ஈஷா மகா சிவராத்திரி விழா பி.வி.ஆர். ஐநாக்ஸ் திரையரங்குகளில் வருகிற 8-ந் தேதி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
புதுச்சேரி, டெல்லி, மும்பை, புனே, பாட்னா, அகமதாபாத், இந்தூர், ஜெய்ப்பூர், கான்பூர், நொய்டா, லக்னோ, அலகாபாத், டேராடூன் உள்பட 35 பெருநகரங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பி.வி.ஆர். ஐநாக்ஸ் திரையரங்குகளில் மகாசிவ ராத்திரி விழா நேரலை ஒளிபரப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
8-ந்தேதி மாலை 6 மணி முதல் அனுமதிக்கப்பட்ட காட்சி நேரம் வரை இவ் விழா ஒளிபரப்பு செய்யப் படும். இதில் பங்கேற்கும் பக்தர்களுக்கு சத்குருவால் சக்தியூட்டப்பட்ட ருத்ராட்சம் பிரசாதமாக வழங்கப்படும்.
கோவை ஈஷா யோக மையத்தில் சத்குரு முன்னி லையில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
சங்கர் மகாதேவன், குரு தாஸ் மான், தமிழ் நாட்டுப்புற பாடகர் மகாலிங்கம், மும்பை தாராவி பகுதியைச் சேர்ந்த ராப்பர்ஸ் இசை குழுவினர் மற்றும் ஆப்பி ரிக்கா, லெபனான், பிரான்ஸ் நாடுகளை சேர்ந்த இசை கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் விழா இரவு முழுவதும் களைகட்ட உள்ளது.
இது தொடர்பாக பி.வி.ஆர். ஐநாக்ஸ் நிறுவனத் தின் துணை தலைமை செயல் அதிகாரி கவுதம் தத்தா கூறுகையில், ``மகா சிவராத்திரி விழா என்பது பாரத பாரம்பரியத்தில் ஈடு இணையற்ற ஆன்மீக முக்கி யத்துவம் வாய்ந்த விழாவாகும்.
இத்தகைய சிறப்பு மிக்க இவ்விழாவை ஈஷா வுடன் இணைந்து முதல் முறையாக வெள்ளித் திரையில் ஒளிபரப்பு செய்யும் வாய்ப்பை ஒரு பாக்கியமாக கருதுகிறோம். பக்தர்கள் உங்களுக்கு அருகில் இருக்கும் பி.வி.ஆர். ஐநாக்ஸ் திரையரங்குகளில் இவ்விழாவில் பங்கேற்று பயன்பெறலாம்" என தெரி வித்துள்ளார்.
இவ்விழாவில் பங்கேற்ப தற்கான டிக்கெட்டுகளை pvr-mahashivaratri.co என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
ஈஷா மகாசிவராத்திரி விழா தமிழ்நாட்டில் கோவை தவிர்த்து 36 இடங்களில் நேரலை ஒளிபரப்புடன் கூடிய நிகழ்ச்சியாக கொண்டாடப்பட உள்ளது.






