என் மலர்tooltip icon

    வழிபாடு

    • உபவாசம் இருந்து இரவு முழுவதும் சிவ பூஜை செய்யலாம்.
    • சிவாலயங்களுக்குச் சென்று சிவபூஜையை தரிசனம் செய்யலாம்.

    சிவனின் ராத்திரி= சிவராத்திரி, சிவனுக்கான இரவு, ஆகவே, அன்று (8-ந்தேதி) சூரியன் மறையும் நேரம் முதல் மறுநாள் (9-ந்தேதி) சூரிய உதயம் வரையுள்ள காலமே மகா சிவராத்திரி காலம் எனப்படும். மகா சிவராத்திரி தினத்தன்று கோடி சூர்ய பிரகாசத்துடன் பரமேஸ்வரன் லிங்க வடிவில் மகாலிங்கமாக முதன் முதலில் தோன்றினார் என்கிறது நாரத புராணம்.

    * விண்ணும் மண்ணும் நிறைந்து ஜோதி ஒளிப்பிழம்பாக நின்ற சிவ பெருமானின் அடிமுடி காண முடியாமல் பிரம்மன் திகைத்த நாள்

    * சிவபஞ்சாட்சர மகாமந்திர ஜபத்தை முறையாக குருவின் மூலம் உபதேசம் செய்து கொள்ள- சிவபஞ்சாட்சர மந்திரத்தை ஜபம் ஹோமம் செய்து சித்தி செய்ய மகா சிவராத்திரி தினம் சிறந்த நாள். மனிதராகப் பிறந்த அனைவரும் வருகிற சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.

    விரதம் என்பது 1. உபவாசம், (சாப்பிடாது இருத்தல்) 2. பூஜை, 3. ஜாகரணம் (தூங்காது இருத்தல்) ஆகிய மூன்று செயல்களுடன் கூடியது.

    சிவராத்திரி அன்று உணவு உட்கொள்ளாமல் (சக்தியற்றவர்கள்) பால், பழம் முதலியவற்றை மட்டும் சாப்பிட்டு விட்டு) உபவாசம் இருப்பதாலும், முயற்சியுடன் பகலிலும், இரவிலும் துாங்காமல் கண்விழிப்பதாலும் சிவலிங்கத்தை பூஜை செய்வதாலும் அழிவற்ற, குறைவற்ற அனைத்து போகங்களையும் அனுபவிப்பதுடன் இறுதியில் சிவலோகமும் கிட்டும் என்பது ஐதீகம். ஆகவே வருகிற 8-ந் தேதி இயன்றவர்கள் உபவாசம் இருந்து இரவு முழுவதும் சிவ பூஜை செய்யலாம். அதன்பிறகு அருகில் உள்ள சிவாலயங்களுக்குச் சென்ற அங்கு நடைபெறும் சிவபூஜையை தரிசனம் செய்யலாம்.

    அன்று இரவு முழுவதும் தனது வீட்டு பூஜையறையில் அல்லது அருகில் உள்ள சிவன் கோவிலில் மண்ணாலான அகல் விளக்கில் பஞ்சுத் திரி போட்டு நெய்தீபம் (அகண்ட தீபமாக) ஏற்றி வைக்கலாம்.

    சிவராத்திரியில் செய்ய வேண்டிய வழிபாடு பற்றி லிங்க புராணத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    1. சிவபெருமானைத் தீர்த்தவாரி செய்ய வேண்டும்.

    2. மனம் மிகுந்த மலரைச் சிவபெருமானின் உச்சி முதல் கால் வரை தூவ வேண்டும். தூவும் பொழுது நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓத வேண்டும்.

    3. ஓதிக்கொண்டே வலம் வர வேண்டும். வணக்கம் செலுத்த வேண்டும்.

    4.சிவாலயங்களை துடைப்பத்தால் பெருக்கித் தூய்மை செய்து கோலமிடுதல் வேண்டும்.

    5. நீர், பால், நெய் முதலியவற்றால் சிவபெருமானை அபிஷேகம் செய்ய வேண்டும்.

    6. சிவபெருமானுக்கு நல்ல தூய்மையான ஆடையை அணிவிக்க வேண்டும்.

    7. எருக்க மலர் மாலைகளை பெருமாள் தலையில் வட்டமாக அணிய வேண்டும்.

    8. சிவ தண்டமான கட்டங்களும், கபாலமும் ஏந்தி அவன் புகழைப் பாட வேண்டும்.

    9. அஷ்டங்க நமஸ்காரம் ஆண்கள் செய்ய வேண்டும். பெண்கள் ஐந்தகங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.

    10. விபூதி அணிந்து சிவனைப் போற்ற வேண்டும்.

    இவ்வாறு லிங்க புராணம் கூறுகிறது.

    • கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.
    • இன்று காலை வியாக்ராபாத வாகன வீதிஉலா, இரவு யானை வாகன வீதிஉலா.

    திருமலை:

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று காலை 7 மணியில் இருந்து 9 மணிவரை திருச்சி உற்சவம் நடந்தது. அதில் உற்சவர்களான சோமஸ்கந்தமூர்த்தி, காமாட்சி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். வழி நெடுகிலும் பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூர ஆரத்தி காண்பித்தும் சாமி தரிசனம் செய்தனர்.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை அதிகார நந்தி வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர்களான சோமஸ்கந்தமூர்த்தி, காமாட்சி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மேற்கண்ட வாகன வீதிஉலா முன்னால் நாட்டிய, நடன, இசை நிகழ்ச்சிகள் நடந்தன.

    பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான இன்று (புதன் கிழமை) காலை வியாக்ராபாத வாகன வீதிஉலா, இரவு யானை வாகன வீதிஉலா நடக்கிறது.

    • ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா.
    • நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    ஸ்ரீகாளஹஸ்தி:

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று காலை 10 மணியளவில் சூரிய பிரபை வாகனத்தில் உற்சவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், சப்பரத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    அதைத்தொடர்ந்து இரவு 9 மணியளவில் பூத வாகனத்தில் உற்சவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், கிளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். வாகன வீதிஉலாவில் கோவில் செயல் அலுவலர் நாகேஸ்வரராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான இன்று (புதன்கிழமை) காலை 9 மணியளவில் ஹம்ச வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், யாளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் வீதிஉலா, இரவு 9 மணியளவில் ராவணாசூர வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், மயில் வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் வீதிஉலா வருகின்றனர்.

    • ஏகாதசி திதி என்றாலே விஷ்ணுவின் வழிபாட்டு நாள்தான்.
    • ஸ்ரீ ரங்கத்தில் சந்தன மண்டபத்தில் விசேஷ திருமஞ்சனம் நடைபெறும்.

    மகாவிஷ்ணுவின் அருளை வாரி தரும் ஏகாதசி விரதம். ஏகாதசி திதி என்றாலே விஷ்ணுவின் வழிபாட்டு நாள்தான். நாம் இருக்கும் விரதங்களில் ஏகாதசி விரதம்தான் அதிகம் புண்ணியம் அளிக்கும் விரதமாக கருதப்படுகிறது. இன்று ஸ்ரீ ரங்கத்தில் நம் பெருமாளுக்கு சந்தன மண்டபத்தில் விசேஷ திருமஞ்சனம் நடைபெறும்.

    ஏகாதசியில் விரதம் இருப்பவர்களுக்கு வாழ்க்கையில் இருக்கும் எல்லா நலன்களும் கிடைக்கும் என விஷ்ணு புராணம் நமக்கு விளக்குகிறது. திதிகளில் பதின்றொவது திதியாக வருவது ஏகாதசி, வளர்பிறை, தேய்பிறை முறையே ஒவ்வொரு மாதத்திற்கும் இரண்டு ஏகாதசிகள் உண்டு. இப்படி ஆண்டுக்கு 24 ஏகாதசிகள் இருக்கின்றன. அவற்றிற்கு வெவ்வேறு பெயர்கள், சிறப்பு பலன்கள் உள்ளன.

    அதிகாலையில் எழுந்து, குளிர்ந்த நீரில் நீராடி, விஷ்ணு பகவானை வழிபட வேண்டும். அன்றைய தினம் முழுவதும் விரதம் இருந்து, மறுநாள் காலை பூஜை செய்த பின் விரதம் முடிக்க வேண்டும். விரதம் இருக்கும்போது திருமாலின் நாமத்தை உச்சரிக்கவேண்டும்.

    தேவையுள்ள எளியவர்களுக்கு உணவு, உடை போன்ற அத்தியாவசியப் பொருட்களை தானம் செய்யலாம். ஏகாதசி அன்று பெருமாளுக்கு நெல்லிக்காய் நைவேத்தியம் வைத்து வழிபடலாம். உங்கள் வீட்டின் அருகே ஏதேனும் நெல்லிமரம் உண்டெனில் அதற்கு தீபாராதனை, தூபராதனை காட்டி வழிபடுங்கள். இந்த பாசுரத்தை சொல்லி வழிபடுங்கள்.

    `துப்புடையாரை அடைவதெல்லாம்

    சோர்விடத்துத் துணையாவ ரென்றே

    ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன்

    ஆனைக்குநீ அருள்செய் தமையால்

    எய்ப்புஎன்னை வந்துநலியும்போது

    அங்குஏதும் நானுன்னை நினைக்க

    மாட்டேன்

    அப்போதைக்கு இப்போதே சொல்லி

    வைத்தேன்

    அரங்கத் தரவணைப் பள்ளியானே!'

    • நாளை சர்வ ஏகாதசி, ராமேசுவரம் சுவாமி, அம்பாள் தேரோட்டம்.
    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, மாசி 23 (புதன்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: ஏகாதசி நள்ளிரவு 12.23 மணி வரை பிறகு துவாதசி

    நட்சத்திரம்: பூராடம் காலை 10.53 மணி வரை பிறகு உத்திராடம்

    யோகம்: அமிர்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    நாளை சர்வ ஏகாதசி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை. ராமேசுவரம் சுவாமி அம்பாள் தங்க விருஷப சேவை. ஸ்ரீசைலம், திருவாரூர் கோவில்களில் சிவபெருமான் புறப்பாடு. திருக்கோகர்ணம், திருவைகாவூர் கோவில்களில் சிவபெருமான் தேரோட்டம். ராமேசுவரம் சுவாமி, அம்பாள் தேரோட்டம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்த ராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நேர்மை

    ரிஷபம்-பரிவு

    மிதுனம்-பாராட்டு

    கடகம்-ஓய்வு

    சிம்மம்-ஆர்வம்

    கன்னி-நலம்

    துலாம்- நன்மை

    விருச்சிகம்-நட்பு

    தனுசு- பக்தி

    மகரம்-ஆக்கம்

    கும்பம்-உதவி

    மீனம்-இன்பம்

    • ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கொடியேற்றம் கோலாகலமாக நடந்தது.
    • வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.

    ஸ்ரீகாளஹஸ்தி:

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கொடியேற்றம் கோலாகலமாக நடந்தது.

    முன்னதாக கோவில் வளாகத்தில் உள்ள தங்கக் கொடிமரம் அருகில் பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி, தெய்வானை சமேதசுப்பிரமணியசாமி, கங்காபவானி சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார், பக்தகண்ணப்பர், சண்டிகேஸ்வரரை மூலவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் சன்னதி அருகில் வைத்தனர்.

    வேதப் பண்டிதர்கள், அர்ச்சகர்கள் கலச ஸ்தாபனம், சிறப்புப்பூஜை, ஹோமப் பூஜை செய்தனர். வேதப் பண்டிதர்கள் வேத மந்திரங்களைமுழங்க கலசங்களில் உள்ள புனித கங்கை நீரால் தங்கக் கொடி மரத்துக்கு அபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பித்தனர்.

    அதன் பிறகு மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்க முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் வேத மந்திரங்கள், சிவ நாமங்கள் முழங்க பக்தர்கள் வழங்கிய சேலைகள், வெள்ளைநிற பிரம்மோற்சவ விழா கொடியை கம்பத்தில் ஏற்றினர்.

    அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் `ஹர ஹர மகாதேவா சம்போ சங்கரா' எனப் பக்தி கோஷம் எழுப்பினர். அப்போது அர்ச்சகர்கள் கொடிக்கம்பத்துக்கு தீப தூப நெய்வேத்தியம் சமர்ப்பித்தனர்.

    • 5-வது நாளான நேற்று காலை பல்லக்கு வாகன சேவை.
    • வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.

    திருமலை:

    பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாளான நேற்று காலை பல்லக்கு வாகன சேவை, இரவு கருடவாகன சேவை நடந்தது. அதில் கல்யாண வெங்கடேஸ்வரர் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.

    விழாவின் 5-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 9 மணிவரை உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் மோகினி அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பல்லக்கு வாகனத்துக்கு அருகில் உற்சவர் ஸ்ரீகிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உடன் வந்தார்.

     வாகனங்களுக்கு முன்னால் பக்தி பஜனைகளை பாடியபடி பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். பெண்களும், ஆண்களும் கோலாட்டம் ஆடினர். மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டது. பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூர ஆரத்தி காண்பித்தும் சாமி தரிசனம் செய்தனர்.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து சிறப்பு கருட வாகனத்தில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாடவீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. எனப் பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

    • கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.
    • பக்தர்கள் குழுக்கள் பக்தி பஜனை பாடல்களை பாடியபடி வந்தனர்.

    திருமலை:

    திருப்பதியில் இருந்து சீனிவாசமங்காபுரத்துக்கு கொண்டு வரப்பட்ட ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகள் கோவிலில் மூலவருக்கும், கருட வாகனத்தில் எழுந்தருளிய உற்சவருக்கும் அணிவிக்கப்பட்டது. திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.

    விழாவின் 5-வது நாளான நேற்று இரவு 7 மணிக்கு கருடசேவை (கருட வாகன வீதிஉலா) நடந்தது. கருட வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரருக்கும், மூலவர் கல்யாண வெங்கடேஸ்வரருக்கும் அணிவித்து அலங்காரம் செய்வதற்காக நேற்று காலை திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் ஆண்டாள் சன்னதியில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகள் சீனிவாசமங்காபுரம் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

     ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகளை ஒரு கூடையில் வைத்து பெரிய ஜீயர் சுவாமி தனது தலையில் சுமந்தபடி கோவிந்தராஜசாமி கோவிலில் இருந்து வெளியே ஊர்வலமாக கொண்டு வந்து அம்பாரி வாகனத்தில் வைத்தார். காலை 6.30 மணிக்கு புறப்பட்ட ஊர்வலம் எஸ்.வி.கோசம் ரக்ஷன சாலை, தாடித்தோப்பு, பெருமாள்பள்ளி வழியாக சீனிவாசமங்காபுரம் கோவிலை அடைந்தது.

    கோவில் யானை மீது ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகளை வைத்து நான்கு மாடவீதிகளில் ஊர்வலம் நடத்தி மூலவரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. நான்கு மாடவீதிகளில் யானைகளுக்கு முன்னால் பக்தர்கள் குழுக்கள் பக்தி பஜனை பாடல்களை பாடியபடி வந்தனர்.

    கலைஞர்கள் கோலாட்டம் ஆடினர். மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகளில் ஒன்று மூலவருக்கும், மற்றொரு மாலை கருட வாகனத்தில் எழுந்தருளிய உற்சவருக்கும் அணிவிக்கப்பட்டது.

    ஊர்வலத்தில் பெரியஜீயர் சுவாமி, சின்னஜீயர் சுவாமி, துணை அதிகாரிகள் வரலட்சுமி, சாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தங்க தேரோட்டம்

    பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணியில் இருந்து 5 மணிவரை தங்கத்தேரோட்டம் நடக்கிறது. உற்சவர்களான சீனிவாசர், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் தங்கத்தேரில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் யானை வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    • நன்மைகளே நடக்க வேண்டும் என்ற எண்ணமே மனிதர்களிடம் அதிகம் பரவி உள்ளது.
    • சோதனை வரும்போது நாம் பொறுமை காக்கவேண்டும்.

    எளிதான வெற்றிகளையும், இனிமையான வாழ்க்கையையும் விரும்பும் மனிதர்களே இந்த உலகில் அதிகம் உள்ளனர். எதுவும் எளிதாக கிடைக்க வேண்டும், எப்போதும் நன்மைகளே நடக்க வேண்டும் என்ற எண்ணமே மனிதர்களிடம் அதிகம் பரவி உள்ளது. ஆனால் மனித வாழ்க்கை அப்படிப்பட்டதல்ல, எப்போதும் நன்மைகள், இனிமைகள் நிறைந்தது அல்ல. மனித வாழ்க்கை இன்ப துன்பங்கள் நிறைந்ததாக, ஏற்ற இறக்கங்கள் கொண்டதாகவே அமைந்துள்ளது.

    எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த உலக வாழ்க்கையை தன் நல்லடியார்களுக்கு ஒரு சோதனைக் களமாகவே அமைத்துள்ளான். சோதனைகள் பல்வேறு வடிவில் தாக்கும் வகையில் தான் மனித வாழ்க்கை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த சோதனைகளை யார் பொறுமையாக எதிர்கொண்டு, இறைவனிடம் மட்டுமே பிரார்த்தனை செய்து, உதவி தேடுகிறார்களோ, அவர்களே வெற்றியாளர்கள். சோதனைகளை மட்டும் அல்ல இறைவனின் அன்பையும் அவர்கள் வெற்றி கொள்கின்றனர்.

    திருக்குர்ஆனில் கூறியிருப்பதாவது:-

    'நம்பிக்கையாளர்களே, உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடம் இருந்தும், இணை வைத்து வணங்குவோரிடம் இருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள்.

    ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாகாரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும்'. (திருக்குர்ஆன் 3:186)

    இந்த திருக்குர்ஆன் வசனம் மூலம் நாம் அறிவது என்ன?.

    நாம் எவை எல்லாம் நமக்கு நன்மை என்று நினைத்துக்கொண்டு இருக்கிறோமோ அவை எல்லாம் முழுமையான நன்மைகள் அல்ல. அந்த நன்மையிலும் நமக்கு சோதனை காத்திருக்கிறது. அத்துடன் அந்த சோதனையை எவ்வாறு வெற்றி கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டுதலையும் இந்த வசனம் நமக்கு தெளிவுபடுத்துகிறது.

    அதாவது, சோதனைகள் இறைவன் தரப்பில் இருந்து வரும், அப்போது நாம் அதற்காக கலங்கி நின்று வேதனையில் மூழ்கிவிடக்கூடாது. சோதனை வரும்போது நாம் பொறுமை காக்கவேண்டும். இறைவனிடம் பயபக்தியுடன் நடந்துகொள்ள வேண்டும்.

    எல்லாம் வல்ல அல்லாஹ் ஈடு இணையற்றவன். சோதனைகளில் இருந்து நம்மை காக்கும் சக்தியும் வல்லமையும் பெற்றவன் அவன் ஒருவனே. எனவே அந்த இறைவனிடம் மட்டுமே நாம் சரணடைந்து உதவி கேட்க வேண்டும். அது தான் நமக்கு சோதனைக்காலத்தில் நன்மை தேடித்தரும் செயலாகும்.

    எந்த மனிதரும் இறைவனின் சோதனையில் இருந்து தப்பிக்க முடியாது. இறைவன் தரும் சோதனைகள் எல்லோருக்கும் பொதுவானவையே. மனிதர்கள் மட்டுமல்ல இறைவனின் அருள்பெற்ற இறைத் தூதர்களும், இறை நேசச்செல்வர்களும், இறைவனின் நல்லடியார்களும் சோதனைக்கு ஆளாக்கப் பட்டார்கள். இறைத்தூதர்கள் அல்லாஹ்வின் உபதேசங்களை மக்களிடம் எடுத்துச் சொன்னபோது அடைந்த இன்னல்களும், துன்பங்களும் அளவிட முடியாதவை.

    ஆனால் எத்தனை சோதனைகள் வந்த போதும் அவர்கள் அல்லாஹ்வின் மீது திடமான நம்பிக்கை கொண்டார்கள். தங்களுக்கு ஏற்பட்ட சோதனைகளில் இருந்து மீண்டு வர அந்த இறைவனிடமே உதவி கேட்டனர். அந்த உதவி மூலம் அவர்கள் சோதனை களைக் கடந்து சாதனை புரிந்தனர். இதையே திருக்குர்ஆனில் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்:

    '(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்டது போன்ற கஷ்டமான நிலைமை உங்களுக்கு வராமலே நீங்கள் சொர்க்கத்தில் நுழைந்து விடலாம் என்று நினைத்துக் கொண்டீர்களோ? உங்களைப் போல நம்பிக்கை கொண்ட அவர்களையும் அவர்களுடைய தூதரையும், வாட்டும் வறுமையிலும், நோயிலும் பீடித்து அவர்கள் வருந்தித் தங்கள் கஷ்டங்களை நீக்கி வைக்க ''அல்லாஹ்வுடைய உதவி எப்பொழுது வரும்? எப்பொழுது வரும்?'' என்று கேட்டதற்கு ''அல்லாஹ்வுடைய உதவி நிச்சயமாக இதோ சமீபத்திலிருக்கிறது'' என்று நாம் ஆறுதல் கூறும் வரை அவர்கள் ஆட்டிவைக்கப்பட்டார்கள்'. (திருக்குர்ஆன் 2:214)

    'நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!'. (திருக்குர்ஆன் 2:155)

    "நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு" என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள். (திருக்குர்ஆன் 8:28).

    மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவே இருக்கும். (திருக்குர்ஆன் 2:45)

    சோதனைகளை கொடுப்பவனே அதில் இருந்து மீண்டு வர வழியையும் காட்டுகின்றான். அந்த வழி, அல்லாஹ்விடம் முழுமையாக சரண் அடைந்து அவனை மட்டுமே வணங்கி உதவி தேடுவது. நமது பாவங்களையும், பிழைகளையும் மன்னித்து அருள்புரியுமாறு அவனிடம் கேட்பது. இதன் மூலம் அல்லாஹ் நமது சோதனைகளை நீக்கி நமக்கு இம்மையிலும், மறுமையிலும் நன்மை தருவான்.

    • ஸ்ரீகாளஹஸ்தியில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் நடந்து வருகிறது.
    • நேற்று முதல் ஆர்ஜித சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. நேற்று முதல் ஆர்ஜித சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் மிகுந்த பக்தியுடன் ஈடுபடும் ராகு, கேது சர்ப்பதோஷ நிவர்த்தி பூஜைகள் இந்த ஆண்டு தடை செய்யப்படவில்லை வழக்கம் போல் நடைபெறும்.

    ராகு, கேது பூஜை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை குறிப்பிட்ட நேரத்தில் செய்யப்படும் என காளஹஸ்தி கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • பெருமாளின் திருக்கரத்தில் உள்ள சக்கரமானது பிரயோக நிலையில் உள்ளது.
    • திருக்கரத்தில் சர்ப்பத்தை ஏந்தியும் காட்சி தருவது சிறப்பானது.

    கோவில் தோற்றம்

    சென்னை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே அமைந்துள்ளது, பொன்மார் எனும் கிராமம். இங்கே மிகப்பழமையான ஸ்ரீதேவி- பூதேவி சமேத தியாக வினோத பெருமாள் ஆலயம் இருக்கிறது. சுமார் 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்தலமானது, சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டு, விஜயநகர மன்னர்களின் காலத்தில் மேம்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    விஜயநகர மன்னர்களின் காலத்தில் இவ்வூரானது `ஜெயங்கொண்ட சோழமண்டலத்து புலியூர் கோட்டத்து கால்வாய் நாட்டு தியாக வினோத நல்லூரான பொன்மாறு' என்று வழங்கப்பட்டதாக, கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

    போதிய பராமரிப்பின்றி முற்றிலும் சிதிலமடைந்த நிலையில் இருந்த இந்த ஆலயம், சில ஆண்டுகளுக்கு முன்பு கிராம மக்கள் மற்றும் ஆன்மிக அன்பர்களின் முயற்சியால் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஆண்டு ஜூன் மாதம் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தற்போது அற்புதமான திருத்தலமாக காட்சி தரும் இந்த ஆலயம், அதன் பழமை மாறாமல் செப்புக் கம்பிகளை பயன்படுத்தி புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    முன் காலத்தில் இந்த ஊர், தியாக வினோத நல்லூர் என்று அழைக்கப்பட்டதால், இவ்வாலய பெருமாளும், 'தியாக வினோதப் பெருமாள்' என்று பெயர் பெற்றுள்ளார்.

    இவ்வாலய பெருமாள், சதுர்புஜனாக தனது திருக்கரங்களில் சங்கும், சக்கரமும் தாங்கி ஸ்ரீதேவி- பூதேவியோடு நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். பெருமாளின் திருக்கரத்தில் உள்ள சக்கரமானது பிரயோக நிலையில் உள்ளது. இதுகுறித்த ஒரு தல வரலாறும் சொல்லப்படுகிறது.

    முன்பொரு காலத்தில் இந்த பூவுலகம் முழுவதையும் ஆட்சி செய்தவர், அம்பரீஷன் என்ற மன்னன். இவர் ஏகாதசி விரதத்தை தன் உயிர் போலக் கருதி தவறாமல் கடைப்பிடித்து வந்தார். ஒரு முறை அவர் ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்த சமயத்தில், துர்வாசரின்

    கோபத்திற்கு ஆளானார். துர்வாசர் அம்பரீஷனை அழிக்க பூதம் ஒன்றை ஏவினார். அக்கணமே தன் பக்தனைக் காக்க திருமால் தன் பிரயோக சக்கரத்தை ஏவ, அந்த சக்கரம் பூதத்தை அழித்து, பின்னர் துர்வாசரைத் துரத்தத் தொடங்கியது. தன் உயிரைக் காத்துக் கொள்ள துர்வாசர், திருமாலிடம் சரணடைந்தார்.

    ஆனால் திருமாலோ, அம்பரீஷனிடம் சரணடையச் சொல்ல, அதன்படியே அம்பரீஷ மன்னனிடம் சென்று, தன்னை மன்னித்துவிடும்படி துர்வாசர் கேட்டுக் கொண்டார். இதையடுத்து சீறி வந்த பிரயோக சக்கரம், தன் வேகத்தைக் குறைத்துக் கொண்டு பெருமாளின் திருக்கரங்களைச் சென்றடைந்தது. அம்பரீஷனின் பக்தியையும், ஏகாதசி விரதத்தின் மகிமையையும் போற்றிப் புகழ்ந்த துர்வாசர், அம்பரீஷனுக்கு பல வரங்களை அளித்ததாக புராணங்கள் சொல்கின்றன.

    தன் பக்தர்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றும் விதமாகத்தான், பெருமாளின் சக்கரம் பிரயோக நிலையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த கோவிலுக்குள் நுழைந்ததும் பலி பீடம் உள்ளது. அதன் அருகில் கருடாழ்வார் தனிச் சன்னிதியில் பெருமாளை நோக்கி வீற்றிருக்கிறார்.

    இத்தலத்தில் வேறெங்கும் இல்லாத வகையில் பெரியதிருவடி எனும் கருடாழ்வார் நான்கு திருக்கரங்களோடு காட்சி தருகிறார். மேல் இரு கரங்களில் சங்கு, சக்கரத்தை ஏந்தியும், வலது கீழ் கரத்தினை அபய ஹஸ்த நிலையிலும், இடது கீழ் திருக்கரத்தில் சர்ப்பத்தை ஏந்தியும் காட்சி தருவது சிறப்பானது.

    அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்போடு திகழும் இத்தலம் மிக உயரமாக அமைந்துள்ளது. சுவாமியை வணங்க 10 படிக்கட்டுகளைக் கடக்க வேண்டும். கருவறையில் மகாவிஷ்ணு, ஸ்ரீதேவி - பூதேவி சமேதராக தியாக வினோதப் பெருமாள் என்ற திருநாமம் தாங்கி தன்னை நாடி வரும் பக்தர்களைக் காத்தருள்கிறார். இவர்களுக்கு உற்சவர் திருமேனிகளும் உள்ளன. அருகில் நம்மாழ்வார் உற்சவராக இருக்கிறார்.

    கருவறை விமானத்தில் வேறெந்த தலத்திலும் இல்லாத விதமாக 108 சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இத்தல இறைவனை வழிபடுபவர்களுக்கு, துன்பங்கள் உடனடியாக விலகும். திருமணத் தடை அகலும், உடல் ஆரோக்கியம் ஏற்படும் என்கிறார்கள்.

    பாஞ்சராத்ர ஆகம வழிபாட்டு முறை பின்பற்றப்படும் இத்தலத்தில், வைகுண்ட ஏகாதசி, மாத ஏகாதசி, புரட்டாசி சனிக்கிழமைகளில் விசேஷ வழிபாடுகள், மார்கழி மாதத்தில் உற்சவங்கள், அனுமன் ஜெயந்தி முதலான உற்சவங்கள் நடைபெறுகின்றன. இவ்வாலயம் தினமும் காலை 7 மணி முதல் 11 மணி (சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை பகல் 12 மணி வரை) வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    அமைவிடம்

    மேடவாக்கத்தில் இருந்து மாம்பாக்கம் செல்லும் சாலையில் உள்ளது, பொன்மார் கிராமம். மேடவாக்கத்தில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவிலும், மாம்பாக்கத்தில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஊர் இருக்கிறது. பொன்மார் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 750 மீட்டர் தொலைவில் தியாக வினோதப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

    • சிவபெருமானை பூஜை செய்வது மோட்சத்தை வழங்கும் என்பது ஐதீகம்.
    • சதுர்த்தசி திதியில் வரும் சிவராத்திரியை, `மகா சிவராத்திரி' என்று வழிபடுகிறோம்.

    சக்தியை வழிபட நவராத்திரி என்னும் ஒன்பது இரவுகள் இருப்பது போல், சிவபெருமானை வழிபாடு செய்ய மகா சிவராத்திரி என்னும் ஒரு நாள் முக்கியமானதாக இருக்கிறது. இந்த நாளில் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையான 4 ஜாம வேளைகளில் சிவபெருமானை பூஜை செய்வது மோட்சத்தை வழங்கும் என்பது ஐதீகம்.

     மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை முதல் கால பூஜை, இரவு 9 மணி முதல் இரவு 12 மணி வரை இரண்டாவது கால பூஜை, இரவு 12 முதல் அதிகாலை 3 மணி வரை மூன்றாம் கால பூஜை, அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை நான்காவது கால பூஜை. இதில் இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை லிங்கோத்பவ காலமாகும். இதை ஞாபகப்படுத்தும் விதமாக சிவாலயங்களில் கர்ப்பக் கிரக (வெளிப்புறத்தில்) கோஷ்டத்தில் லிங்கோத்பவர் மூர்த்தி காட்சி தருவதைப் பார்க்க முடியும்.

    சிவராத்திரியை ஐந்து வகையாக சொல்வார்கள். அது நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி. மாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதியில் வரும் சிவராத்திரியை, `மகா சிவராத்திரி' என்று வழிபடுகிறோம்.

    அன்றைய தினம் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருந்து மாலை முதல் மறுநாள் காலை வரை நான்கு யாமங்களிலும் ஸ்ரீ ருத்ர மகா மந்திரங்களை சொல்லி,11 திரவியங்களால் (வாசனை தைலம், பஞ்ச கவ்யம், பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, பழரசம், இளநீர், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்துவிட்டு, பின்னர் சுத்தமான நீர் கொண்டு அல்லது விபூதி கொண்டு அபிஷேகம் செய்யப்படும்) சிவபெருமானை அபிஷேகித்து வழிபடுவார்கள்.

     மகா சிவராத்திரி பிறந்த கதை

    ஒரு கிருத யுகத்தில் இந்திரன் தனது ஐராவதம் என்னும் யானை மீது ஏறி வந்துகொண்டிருந்தான். அப்போது துர்வாச முனிவர் தனக்கு மகாலட்சுமி அளித்த மாலையை, இந்திரனுக்கு கொடுத்தார். அதை இந்திரன் தன் கையால் வாங்காமல் தன் வாகனமாகிய ஐராவதத்தை வாங்கச் சொல்ல, யானையோ அந்த மாலையை அலட்சியமாக வாங்கி தன் காலில் போட்டு மிதித்தது. இதனால் கோபம் அடைந்த துர்வாச முனிவர், இந்திரன் தன் செல்வத்தை இழந்துபோவான் என்று சபித்தார். அதன்படி செல்வத்தை இழந்துபோன இந்திரன், பிரம்மதேவனிடம் சென்று முறையிட்டு, இழந்த செல்வத்தைப் பெற முயற்சித்தான். இந்திரன் பூஜித்த காலமே மகா சிவராத்திரி என்கிறார்கள்.

     அதே நேரத்தில் இன்னொரு கதையும் சொல்வார்கள். அசுரர்கள் இறந்து விட்டால் அவர்களுக்கு குருவாக இருக்கக்கூடிய சுக்ராச்சாரியார், தனக்கு தெரிந்த `மிருத்த சஞ்ஜீவினி' மந்திரத்தால் அவர்களை பிழைக்க வைத்து விடுவார். எனவே தேவர்கள், தாங்களும் இறக்காமல் இருக்க ஏதாவது வழி உண்டா என்று பிரம்மாவிடம் கேட்டனர். அதற்காக பாற்கடல் உள்ளிருக்கும் அமிர்தத்தை எடுக்க யோசனை கூறப்பட்டது. அதன்படி தேவர்கள் மந்தார மலையை மத்தாகவும், வாசுகி பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைய முற்பட்டனர். ஆனால் தேவர்களால் பாற்கடலைக் கடைய முடியவில்லை. எனவே துணைக்கு அசுரர்களையும் அழைத்தனர். அசுரர்களும், தேவர்களும் சேர்ந்து திருப்பாற் கடலைக் கடைவதாகவும், கிடைக்கும் அமிர்தத்தை பகிர்ந்து கொள்வதாகவும் முடிவு செய்யப்பட்டது.

    வாசுகி பாம்பின் தலைப் பகுதியை அசுரர்களும், வால் பகுதியை தேவர்களும் பிடித்து மந்தார மலையைக் கொண்டு பாற்கடலைக் கடையத் தொடங்கினர். அப்பொழுது பாற்கடலின் உள்ளிருந்து காமதேனு, கற்பக தரு, ஐராவதம், கவுஸ்துபம் என்ற மணி, லட்சுமி தேவி, சந்திரன் போன்றோர் வெளிவர ஆரம்பித்தனர். ஆனால் இவற்றிற்கெல்லாம் முன்பாக ஆலகாலம் என்ற விஷம் வெளிப்பட்டது. இதன் சக்தியால் அனைத்து உலகங்களும் வெப்பத்தில் தகித்தது. இதைக் கண்டு பார்வதி தேவி, பரமேஸ்வரனிடம் முறையிட்டார்.

    உடனே பரமேஸ்வரன் அந்த ஆலகால விஷத்தை எடுத்து உண்டார். உலகத்தையே காத்தருளும் சிவனை, ஆலகால விஷம் என்ன செய்து விட முடியும்? ஆனாலும் மயங்கி சரிவதுபோல் தோற்றம் கொண்டார், நீலகண்டர். இதைக் கண்ட தேவர்கள் பயந்து, "சுவாமி தாங்கள் கண் விழித்து எங்களை காக்க வேண்டும்" என்று பிரார்த்தனை செய்தனர். தேவர்கள் அவ்வாறு சிவபெருமானை பூஜித்த அந்த காலமே `மகா சிவராத்திரி' என்று அழைக்கப்படுகிறது.

     மகா சிவராத்திரி விரத பலன்

    முன்பொரு சமயம் வேதங்கள் நன்றாக கற்ற ஒரு அந்தணர், அவர் இல்லத்தில் கிளிகள் வளர்த்து வந்தார். கூண்டில் அடைத்து கிளி வளர்த்த தோஷத்தாலும், அதன் மேல் உள்ள பற்றாலும், இறக்கும் பொழுது கிளிகளின் நினைவாகவே இறந்தார். மறுஜென்மத்தில் அவர் வேடனாக பிறந்து, காட்டில் வேட்டையாடி தன் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். ஒரு முறை காட்டில் வேட்டையாட சென்றபோது, வேடனுக்கு எதுவும் கிடைக்கவில்லை.

    எனவே விலங்குகளைத் தேடி நீண்ட தூரம் காட்டிற்குள் சென்றுவிட்டான். இருள் சூழும் நேரம் ஆகிவிட்டதால் காட்டை விட்டு வெளியேற முடியவில்லை. அப்போது தாகம் எடுக்க, வில் -அம்புகளை தரையில் வைத்து விட்டு ஒரு குளத்தில் தண்ணீர் குடிக்க இறங்கினான்.

    அந்த வேளையில் வேடனை தாக்க ஒரு புலி பாய்ந்து வந்தது. இதனால் பதறிப்போன வேடன், வில்-அம்புகளை எடுக்க முடியாமல் அவசரமாக ஓடி பக்கத்தில் இருந்த மரத்தின் மேல் ஏறி அமர்ந்து கொண்டான். இரவு முழுவதும் புலி அந்த மரத்தை சுற்றி வந்தது.

    வேடனுக்கு கை, கால் எல்லாம் நடுக்கமாக இருந்தது. பசியால் தலை சுற்றியது. எதுவும் சாப்பிடாமல் இரவு முழுவதும் அந்த மரத்தின் கிளைகளைப் பற்றிய படியே இருந்தான். மறுநாள் பொழுது விடிந்ததும் கீழே பார்த்தபோது, புலி அங்கே இல்லை. இதையடுத்து வேடன் கீழே இறங்கி வந்தான். பல ஆண்டுகள் வாழ்ந்த அந்த வேடன் வயது முதிர்ச்சியால் இறந்தான்.

    அந்த வேடனின் ஆன்மா எமலோகம் சென்றது. அங்கே எமனிடம் `இந்த வேடனின் வாழ்வில் பாவங்கள் எதுவும் இல்லை' என்று சித்திரகுப்தன் கூறினார். தன் வாழ்நாளில் பல மிருகங்களை வேட்டையாடிய வேடனின் பாப கணக்கில் எதுவும் இல்லை என்றது, எமதர்மனுக்கு அதிர்ச்சியை அளித்தது.

    வேடன் செய்த புண்ணியம் என்ன என்று பார்க்க, முன்பு புலிக்கு பயந்து வேடன் ஏறி அமர்ந்தது, வில்வ மரம் ஆகும். அன்றைய தினம் மகா சிவராத்திரி. பயத்தில் கைகள் நடுங்க கிளைகளைப் பற்றி இருந்ததால், அந்த நடுக்கத்தில் வில்வ இலைகள் உதிர்ந்து கீழே விழுந்தன.

    வில்வ இலைகள் விழுந்த இடத்தில் ஒரு பழமையான சிவலிங்கம் மண்ணில் புதைந்திருந்தது. அந்த சிவலிங்கத்தின் மீது வில்வ இலைகள் விழுந்தன. மகா சிவராத்திரி அன்று சாப்பிடாமல், வில்வ இலைகளால் சிவலிங்கத்தை அர்ச்சனை செய்த புண்ணியம் வேடனுக்கு கிடைத்தது என்பதை எமதர்மனும், சித்திரகுப்தனும் அறிந்தனர். வாழ்நாள் முழுவதும் செய்த பாவங்களை கூட போக்கும் தன்மை கொண்டது, மகா சிவராத்திரி வழிபாடு.

    மகா சிவராத்திரி அன்று உபவாசம் இருத்தல் (சாப்பிடாமல் இருப்பது), பூஜை செய்வது, தூங்காது இருத்தல் ஆகியவை முக்கியமானவை. சிவராத்திரி அன்று உணவு தவிர்க்க முடியாதவர்கள், பால், பழம், வேகவைத்த பொருள் சாப்பிட்டு உபவாசம் இருக்கலாம். பகலிலும், இரவிலும் தூங்காமல் இருப்பது, புண்ணியத்தை தரும் சிவலிங்கத்தை பூஜிப்பது, சுவாமியை சிவாலயம் சென்று தரிசிப்பது மிக விசேஷமானது. 8-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி தொடங்கி 9-ந்தேதி (சனிக்கிழமை) காலை 6 மணி வரை சிவராத்திரி தினம். அன்றைய தினம் இரவு கண் முழிப்பது மிக அவசியம். விளக்கேற்றுவதும், அபிஷேகப் பொருட்கள் கொடுப்பதும் மிகுந்த புண்ணியத்தை தரும்.

    மகா சிவராத்திரியில் சொல்ல வேண்டிய மந்திரம்

    அரிதிலும் அரிதான அனைவரும் ஜெபிக்க வேண்டிய மோட்சத்தைத் தரும் சிவ பஞ்சாட்சர மகா மந்திரம், 'ஓம் நமசிவாய'. இந்த மந்திரத்தை நம் சக்திக்கேற்றபடி 108 அல்லது 1008 முறை மகா சிவராத்திரி அன்று ஜெபிக்கலாம். சக்தி பஞ்சாட்சரி மந்திரம், `ஓம் ஹ்ரீம் நமசிவாய'. இதனையும் தங்களின் சக்திக்கேற்ப ஜெபிக்கலாம்.

    ஸ்ரீ குரு தாரக பஞ்சாட்சரி மந்திரம், 'ஓம் ஓங்காராய நம சிவாய, ஓம் நகாராய நமசிவாய, ஓம் மகாராய நமசிவாய, ஓம் சிகாராய நமசிவாய, ஓம் வகாராய நமசிவாய, ஓம் யகாராய நமசிவாய, ஓம் நம ஸ்ரீகுருதேவாய பரம புருஷாய ஸர்வ தேவதா வசீகராய ஸர்வாரிஷ்ட விநாசாய ஸர்வ துர்மந்த்ர ச்சேதனாய த்ரைலோக்யம் வசமானய ஸ்வாஹா' என்ற மந்திரத்தையும் உச்சரிக்கலாம்.

    ×