என் மலர்
வழிபாடு
- சிவபெருமானை பூஜை செய்வது மோட்சத்தை வழங்கும் என்பது ஐதீகம்.
- சதுர்த்தசி திதியில் வரும் சிவராத்திரியை, `மகா சிவராத்திரி' என்று வழிபடுகிறோம்.
சக்தியை வழிபட நவராத்திரி என்னும் ஒன்பது இரவுகள் இருப்பது போல், சிவபெருமானை வழிபாடு செய்ய மகா சிவராத்திரி என்னும் ஒரு நாள் முக்கியமானதாக இருக்கிறது. இந்த நாளில் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையான 4 ஜாம வேளைகளில் சிவபெருமானை பூஜை செய்வது மோட்சத்தை வழங்கும் என்பது ஐதீகம்.

மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை முதல் கால பூஜை, இரவு 9 மணி முதல் இரவு 12 மணி வரை இரண்டாவது கால பூஜை, இரவு 12 முதல் அதிகாலை 3 மணி வரை மூன்றாம் கால பூஜை, அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை நான்காவது கால பூஜை. இதில் இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை லிங்கோத்பவ காலமாகும். இதை ஞாபகப்படுத்தும் விதமாக சிவாலயங்களில் கர்ப்பக் கிரக (வெளிப்புறத்தில்) கோஷ்டத்தில் லிங்கோத்பவர் மூர்த்தி காட்சி தருவதைப் பார்க்க முடியும்.
சிவராத்திரியை ஐந்து வகையாக சொல்வார்கள். அது நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி. மாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதியில் வரும் சிவராத்திரியை, `மகா சிவராத்திரி' என்று வழிபடுகிறோம்.
அன்றைய தினம் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருந்து மாலை முதல் மறுநாள் காலை வரை நான்கு யாமங்களிலும் ஸ்ரீ ருத்ர மகா மந்திரங்களை சொல்லி,11 திரவியங்களால் (வாசனை தைலம், பஞ்ச கவ்யம், பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, பழரசம், இளநீர், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்துவிட்டு, பின்னர் சுத்தமான நீர் கொண்டு அல்லது விபூதி கொண்டு அபிஷேகம் செய்யப்படும்) சிவபெருமானை அபிஷேகித்து வழிபடுவார்கள்.

மகா சிவராத்திரி பிறந்த கதை
ஒரு கிருத யுகத்தில் இந்திரன் தனது ஐராவதம் என்னும் யானை மீது ஏறி வந்துகொண்டிருந்தான். அப்போது துர்வாச முனிவர் தனக்கு மகாலட்சுமி அளித்த மாலையை, இந்திரனுக்கு கொடுத்தார். அதை இந்திரன் தன் கையால் வாங்காமல் தன் வாகனமாகிய ஐராவதத்தை வாங்கச் சொல்ல, யானையோ அந்த மாலையை அலட்சியமாக வாங்கி தன் காலில் போட்டு மிதித்தது. இதனால் கோபம் அடைந்த துர்வாச முனிவர், இந்திரன் தன் செல்வத்தை இழந்துபோவான் என்று சபித்தார். அதன்படி செல்வத்தை இழந்துபோன இந்திரன், பிரம்மதேவனிடம் சென்று முறையிட்டு, இழந்த செல்வத்தைப் பெற முயற்சித்தான். இந்திரன் பூஜித்த காலமே மகா சிவராத்திரி என்கிறார்கள்.

அதே நேரத்தில் இன்னொரு கதையும் சொல்வார்கள். அசுரர்கள் இறந்து விட்டால் அவர்களுக்கு குருவாக இருக்கக்கூடிய சுக்ராச்சாரியார், தனக்கு தெரிந்த `மிருத்த சஞ்ஜீவினி' மந்திரத்தால் அவர்களை பிழைக்க வைத்து விடுவார். எனவே தேவர்கள், தாங்களும் இறக்காமல் இருக்க ஏதாவது வழி உண்டா என்று பிரம்மாவிடம் கேட்டனர். அதற்காக பாற்கடல் உள்ளிருக்கும் அமிர்தத்தை எடுக்க யோசனை கூறப்பட்டது. அதன்படி தேவர்கள் மந்தார மலையை மத்தாகவும், வாசுகி பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைய முற்பட்டனர். ஆனால் தேவர்களால் பாற்கடலைக் கடைய முடியவில்லை. எனவே துணைக்கு அசுரர்களையும் அழைத்தனர். அசுரர்களும், தேவர்களும் சேர்ந்து திருப்பாற் கடலைக் கடைவதாகவும், கிடைக்கும் அமிர்தத்தை பகிர்ந்து கொள்வதாகவும் முடிவு செய்யப்பட்டது.
வாசுகி பாம்பின் தலைப் பகுதியை அசுரர்களும், வால் பகுதியை தேவர்களும் பிடித்து மந்தார மலையைக் கொண்டு பாற்கடலைக் கடையத் தொடங்கினர். அப்பொழுது பாற்கடலின் உள்ளிருந்து காமதேனு, கற்பக தரு, ஐராவதம், கவுஸ்துபம் என்ற மணி, லட்சுமி தேவி, சந்திரன் போன்றோர் வெளிவர ஆரம்பித்தனர். ஆனால் இவற்றிற்கெல்லாம் முன்பாக ஆலகாலம் என்ற விஷம் வெளிப்பட்டது. இதன் சக்தியால் அனைத்து உலகங்களும் வெப்பத்தில் தகித்தது. இதைக் கண்டு பார்வதி தேவி, பரமேஸ்வரனிடம் முறையிட்டார்.
உடனே பரமேஸ்வரன் அந்த ஆலகால விஷத்தை எடுத்து உண்டார். உலகத்தையே காத்தருளும் சிவனை, ஆலகால விஷம் என்ன செய்து விட முடியும்? ஆனாலும் மயங்கி சரிவதுபோல் தோற்றம் கொண்டார், நீலகண்டர். இதைக் கண்ட தேவர்கள் பயந்து, "சுவாமி தாங்கள் கண் விழித்து எங்களை காக்க வேண்டும்" என்று பிரார்த்தனை செய்தனர். தேவர்கள் அவ்வாறு சிவபெருமானை பூஜித்த அந்த காலமே `மகா சிவராத்திரி' என்று அழைக்கப்படுகிறது.

மகா சிவராத்திரி விரத பலன்
முன்பொரு சமயம் வேதங்கள் நன்றாக கற்ற ஒரு அந்தணர், அவர் இல்லத்தில் கிளிகள் வளர்த்து வந்தார். கூண்டில் அடைத்து கிளி வளர்த்த தோஷத்தாலும், அதன் மேல் உள்ள பற்றாலும், இறக்கும் பொழுது கிளிகளின் நினைவாகவே இறந்தார். மறுஜென்மத்தில் அவர் வேடனாக பிறந்து, காட்டில் வேட்டையாடி தன் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். ஒரு முறை காட்டில் வேட்டையாட சென்றபோது, வேடனுக்கு எதுவும் கிடைக்கவில்லை.
எனவே விலங்குகளைத் தேடி நீண்ட தூரம் காட்டிற்குள் சென்றுவிட்டான். இருள் சூழும் நேரம் ஆகிவிட்டதால் காட்டை விட்டு வெளியேற முடியவில்லை. அப்போது தாகம் எடுக்க, வில் -அம்புகளை தரையில் வைத்து விட்டு ஒரு குளத்தில் தண்ணீர் குடிக்க இறங்கினான்.
அந்த வேளையில் வேடனை தாக்க ஒரு புலி பாய்ந்து வந்தது. இதனால் பதறிப்போன வேடன், வில்-அம்புகளை எடுக்க முடியாமல் அவசரமாக ஓடி பக்கத்தில் இருந்த மரத்தின் மேல் ஏறி அமர்ந்து கொண்டான். இரவு முழுவதும் புலி அந்த மரத்தை சுற்றி வந்தது.
வேடனுக்கு கை, கால் எல்லாம் நடுக்கமாக இருந்தது. பசியால் தலை சுற்றியது. எதுவும் சாப்பிடாமல் இரவு முழுவதும் அந்த மரத்தின் கிளைகளைப் பற்றிய படியே இருந்தான். மறுநாள் பொழுது விடிந்ததும் கீழே பார்த்தபோது, புலி அங்கே இல்லை. இதையடுத்து வேடன் கீழே இறங்கி வந்தான். பல ஆண்டுகள் வாழ்ந்த அந்த வேடன் வயது முதிர்ச்சியால் இறந்தான்.
அந்த வேடனின் ஆன்மா எமலோகம் சென்றது. அங்கே எமனிடம் `இந்த வேடனின் வாழ்வில் பாவங்கள் எதுவும் இல்லை' என்று சித்திரகுப்தன் கூறினார். தன் வாழ்நாளில் பல மிருகங்களை வேட்டையாடிய வேடனின் பாப கணக்கில் எதுவும் இல்லை என்றது, எமதர்மனுக்கு அதிர்ச்சியை அளித்தது.
வேடன் செய்த புண்ணியம் என்ன என்று பார்க்க, முன்பு புலிக்கு பயந்து வேடன் ஏறி அமர்ந்தது, வில்வ மரம் ஆகும். அன்றைய தினம் மகா சிவராத்திரி. பயத்தில் கைகள் நடுங்க கிளைகளைப் பற்றி இருந்ததால், அந்த நடுக்கத்தில் வில்வ இலைகள் உதிர்ந்து கீழே விழுந்தன.
வில்வ இலைகள் விழுந்த இடத்தில் ஒரு பழமையான சிவலிங்கம் மண்ணில் புதைந்திருந்தது. அந்த சிவலிங்கத்தின் மீது வில்வ இலைகள் விழுந்தன. மகா சிவராத்திரி அன்று சாப்பிடாமல், வில்வ இலைகளால் சிவலிங்கத்தை அர்ச்சனை செய்த புண்ணியம் வேடனுக்கு கிடைத்தது என்பதை எமதர்மனும், சித்திரகுப்தனும் அறிந்தனர். வாழ்நாள் முழுவதும் செய்த பாவங்களை கூட போக்கும் தன்மை கொண்டது, மகா சிவராத்திரி வழிபாடு.
மகா சிவராத்திரி அன்று உபவாசம் இருத்தல் (சாப்பிடாமல் இருப்பது), பூஜை செய்வது, தூங்காது இருத்தல் ஆகியவை முக்கியமானவை. சிவராத்திரி அன்று உணவு தவிர்க்க முடியாதவர்கள், பால், பழம், வேகவைத்த பொருள் சாப்பிட்டு உபவாசம் இருக்கலாம். பகலிலும், இரவிலும் தூங்காமல் இருப்பது, புண்ணியத்தை தரும் சிவலிங்கத்தை பூஜிப்பது, சுவாமியை சிவாலயம் சென்று தரிசிப்பது மிக விசேஷமானது. 8-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி தொடங்கி 9-ந்தேதி (சனிக்கிழமை) காலை 6 மணி வரை சிவராத்திரி தினம். அன்றைய தினம் இரவு கண் முழிப்பது மிக அவசியம். விளக்கேற்றுவதும், அபிஷேகப் பொருட்கள் கொடுப்பதும் மிகுந்த புண்ணியத்தை தரும்.
மகா சிவராத்திரியில் சொல்ல வேண்டிய மந்திரம்
அரிதிலும் அரிதான அனைவரும் ஜெபிக்க வேண்டிய மோட்சத்தைத் தரும் சிவ பஞ்சாட்சர மகா மந்திரம், 'ஓம் நமசிவாய'. இந்த மந்திரத்தை நம் சக்திக்கேற்றபடி 108 அல்லது 1008 முறை மகா சிவராத்திரி அன்று ஜெபிக்கலாம். சக்தி பஞ்சாட்சரி மந்திரம், `ஓம் ஹ்ரீம் நமசிவாய'. இதனையும் தங்களின் சக்திக்கேற்ப ஜெபிக்கலாம்.
ஸ்ரீ குரு தாரக பஞ்சாட்சரி மந்திரம், 'ஓம் ஓங்காராய நம சிவாய, ஓம் நகாராய நமசிவாய, ஓம் மகாராய நமசிவாய, ஓம் சிகாராய நமசிவாய, ஓம் வகாராய நமசிவாய, ஓம் யகாராய நமசிவாய, ஓம் நம ஸ்ரீகுருதேவாய பரம புருஷாய ஸர்வ தேவதா வசீகராய ஸர்வாரிஷ்ட விநாசாய ஸர்வ துர்மந்த்ர ச்சேதனாய த்ரைலோக்யம் வசமானய ஸ்வாஹா' என்ற மந்திரத்தையும் உச்சரிக்கலாம்.
- இன்று காரி நாயனார் குருபூஜை தினம்.
- ஒவ்வொரு நாயன்மாருக்கும் ஒரு சிறப்பு உண்டு.
இன்று, மாசி மாதம் பூராடம். காரி நாயனார் குருபூஜை தினம் ஒவ்வொரு நாயன்மாருக்கும் ஒரு சிறப்பு உண்டு. அதில் காரி நாயனார் தன்னுடைய பூத உடம்போடு கயிலை சேர்ந்து இன்புற்றார் என்பது பெருமை. இதை சேக்கிழார் பெருமான் மிக அற்புதமாக தன்னுடைய பெரிய புராணத்தில் பாடுகின்றார்.
`ஏய்ந்த கடல் சூழ் உலகில் எங்கும் தம்
இசை நிறுத்தி
ஆய்ந்த உணர்விடை அறா அன்பினராய்
அணி கங்கை
தோய்ந்த நெடும் சடையார்தம் அருள்
பெற்ற தொடர்பினால்
வாய்ந்த மனம் போலும் உடம்பும்
வடகயிலை மலை சேர்ந்தார்'.
அங்கே அவர் ஒளிஉடம்பு பெற்றார் என்பது வரலாறு. காலனைக் கடிந்து, தன்னைச் சரணடைந்த மார்க்கண்டய மகரிஷிக்கு என்றும் பதினாறு என்ற வரத்தை அளித்தவர் திருக்கடவூர் அமிர்த கடேஸ்வரர். அபிராமி அன்னை கோயில் கொண்டுள்ள அத்தலத்தில் பிறந்தவர் காரி நாயனார். செந்தமிழ் கற்றவர்.
நற்றமிழ் கற்ற நாவால் எப்பொழுதும் நமசிவாய என்ற ஐந்து எழுத்து மந்திரத்தை ஓதிக் கொண்டிருப்பவர். நான்கு வகை கவிபாடுவதில் வல்லவர். சேர, சோழ, பாண்டிய மன்னர்களிடம் சேர்ந்து, பாடி, பெரும் பரிசுகளைப்பெற்று, அந்த பரிசுகளை எல்லாம் சிவனடியார்களுக்கும் சிவனுடைய திருத்தலத் தொண்டுக்கும் முழுமையாக பயன்படுத்தியவர். கயிலைநாதனை கண நேரமும் மறவாதவர். அதனால் சிவபெருமான் இவரை நேரடியாக கயிலைப் பதியை அளித்தார்.
- வாஸ்து பகவான் கண் விழிக்கும் நாளே வாஸ்து நாள்.
- வாஸ்து புருஷன் ஒன்றரை மணிநேரம்தான் கண் விழித்திருப்பார்.
வாஸ்து நாளில், வாஸ்து பகவானை வழிபடுவது சிறப்பு. இல்லத்தின் திருஷ்டியைப் போக்கி, தொழிலில் மேன்மையும் உத்தியோகத்தில் உயர்வும் தந்து அருளுவார் வாஸ்து பகவான். இன்று வாஸ்து நாள். வாஸ்து பகவான் கண் விழிக்கும் நாளே வாஸ்து நாள் எனப்படுகிறது. சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி என எட்டு மாதங்களில் வரும் வாஸ்து நாட்களில் பூமி பூஜை செய்யலாம். ஒரு வருடத்தில் எட்டு வாஸ்து நாட்கள் மட்டுமே வரும். அந்த எட்டு நாட்களிலும் வாஸ்து புருஷன் ஒன்றரை மணிநேரம்தான் கண் விழித்திருப்பார்.

வாஸ்து பகவான் விழித்திருக்கும் நாட்களில் ஒருநாளில் ஒன்றரை மணி நேரம் மட்டுமே விழித்திருப்பார். அப்படி அவர் விழித்ததும் காலையிலேயே நீராடுவார் என்றும் பூஜைகள் செய்வார். இதையடுத்து பூஜைக்குப் பின்னர் உணவு எடுத்துக் கொள்ளுவார். அப்படி நிம்மதியும் நிறைவுமாக இருக்கும் தருணம்தான், வாஸ்து பூஜைக்கான நேரம். பூமி பூஜைக்கான நேரமாகும். பூமிபூஜையின் போது வாஸ்து ஹோமம் மற்றும் பூஜைசெய்தால் கட்டுமானப்பணி தடையின்றி நிறைவேறும். இன்று பூமி காரகனாகிய செவ்வாய்க்கிழமை வாஸ்து செய்வது விசேஷம். இன்று வேறு தோஷங்கள் பார்க்க வேண்டாம். நேரம், வாக்கிய பஞ்சாங்கப்படி காலை 9.12 முதல் 10.42 வரை வாஸ்து செய்ய நல்ல நேரம் ஆகும்.
- ராமேசுவரம் சுவாமி, அம்பாள் யானை வாகனத்தில் பவனி.
- முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மாசி 22 (செவ்வாய்க்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: தசமி பின்னிரவு 2.01 மணி வரை பிறகு ஏகாதசி
நட்சத்திரம்: மூலம் காலை 11.40 மணி வரை பிறகு பூராடம்
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று வாஸ்து நாள் (காலை 10.32 மணி முதல் 11.08 மணி வரை வாஸ்து செய்ய நன்று). சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். ராமேசுவரம் சுவாமி, அம்பாள் யானை வாகனத்தில் பவனி. ஸ்ரீகாளஹஸ்தி, திருக்கோர்ணம் கோவில்களில் சிவபெருமான் புறப்பாடு. காரிய நாயனார் குருபூஜை. சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்த கோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-முயற்சி
ரிஷபம்-நன்மை
மிதுனம்-ஜெயம்
கடகம்-யோகம்
சிம்மம்-சாந்தம்
கன்னி-ஓய்வு
துலாம்- பக்தி
விருச்சிகம்-நட்பு
தனுசு- நன்மை
மகரம்-நலம்
கும்பம்-சாதனை
மீனம்-உதவி
- 8-ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள்
- தேதி வாரியாக பொதுவான பலன்கள்.
8-ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள்
* 8-ம் எண் சனி பகவானுக்குரிய எண்ணாகும். 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 8-ம் எண்ணின் அதிபதியாகிய சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாவார்கள். எட்டாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நீதி, நேர்மைக்கு கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள். எந்த செயலையும் அவசரமகாவோ, பரபரப்பாகவோ செய்ய மாட்டார்கள். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பார்கள். எதையும் எளிதில் உள்வாங்கிக் கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள் ஆவார்கள். நியாய, அநியாயத்தை யாராக இருந்தாலும் பயமின்றி தெளிவாக எடுத்துரைப்பார்கள்.
எந்த பிரச்சனை என்றாலும் சமரசமாக போகவே விரும்புவார்கள். இவர்கள் மனத்தில் ஏதாவது ஒரு சோகம் எப்போதும் குடிகொண்டிருக்கும். மனதில் நிம்மதியில்லையே என்று அலைவார்கள். "பாசமாவது ஒன்றாவது. அது தெருவில்தான் கிடைக்கும்'' என்று புலம்புவார்கள்.
ஏதாவது ஒரு பெரிய குறை அல்லது குறைபாடு மனதை அரித்துக்கொண்டே இருக்கும். குழந்தையில்லை, மனைவியால் இன்பமில்லை. நண்பனால் சுகமில்லை என்று எதையாவது நினைத்து தங்களை தாங்களே வருத்திக் கொள்வார்கள். இவர்கள் சுகத்தையும், துக்கத்தையும் சரிசமமாக பாவிப்பார்கள். எதையும் நன்கு ஆராயும் மனதை உடையவர்கள்.
எந்த துறையில் ஈடுபட்டாலும் அதில் தான் முழு ஆதிக்கத்தை செலுத்துவார்கள். சாமர்த்தியசாலிகளான இவர்கள் எல்லா காரியங்களிலும் வெற்றி காண்பார்கள். இவர்கள் எந்த இடத்திற்கு சென்றாலும் அந்த இடத்திற்கு தகுந்தாற்போல் தங்களை மாற்றிக்கொள்வார்கள்.
தெய்வ நம்பிக்கை இவர்களிடம் அதிகம் உண்டு. இவர்களில் ஒரு சிலர் கடவுளே இல்லை என்பார்கள். வேறு சிலர் கடவுளே கதி என்று கிடப்பவர்கள். எடுத்துச் கொண்ட காரியங்களை எவ்வளவு எதிர்ப்புகளும் தடைகளும் வந்தாலும், அவைகளைப் பற்றி கவலைப்படாமல் செய்து முடிப்பார்கள்.
பிடிவாத குணம் கொண்டவர்கள். இவர்கள் மற்றவர்கள் பார்வைக்குக் கடின மனமும், பிடிவாதமும் உடையவராகத் தோன்றினாலும், சமூகத்தில் பாதிக்கப்பட்டோரைக் கண்டால், அவர்களை ஆதரிப்பார்கள் இவர்களுக்கு எப்பொழுது எப்படி கோபம் வரும் என்று யாராலும் கூற முடியாது. பிடிவாத குணம் இவர்களிடம் அதிகம் உண்டு.
சேமிப்பு என்பது இவர்களுக்கு குறைவாகவே இருக்கும். மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் கொண்டவராதலால் மற்றவர்கள் மூலம் கடன்கள் ஏற்படக்கூடிய வாய்ப்பு இவர்களுக்கு உண்டு. மற்றவர்களை துல்லியமாக எடை போடுவதில் திறமைசாலிகள். எந்த காரியங்களை எடுத்துக் கொண்டாலும் இருவிதங்களில் ஆதாயம் அடைவார்கள்.
எதையும் கூர்ந்து ஆராய்ந்து பார்ப்பார்கள். ஆதலால் எந்த காரியத்திலும் அதன் சாதகப்பலனை பார்த்த பின்தான் செயலில் ஈடுபடுவார்கள். எதிலும் பிரதிபலன் எதிர்பாராது உழைத்திடும் இவர்கள் தெய்வத்தை கூட உழைப்பிற்கு அடுத்தப்படியாகத்தான் நினைப்பார்கள்.
சிரித்து பேசும் சுபாவம் கொண்ட இவர்களுக்கு, மற்றவர்களை சிரிக்க வைக்கக்கூடிய ஆற்றலும் உண்டு. இவர்களுக்கு வாழ்வில் எவ்வளவு சோதனைகள் நேர்ந்தாலும் வேதனை அடையமாட்டார்கள்.
உடலமைப்பு
இவர்கள் உயரமாக இருப்பார்கள். சதை பற்றான கன்னங்கள் இருக்கும். கண்கள் உள்நோக்கி காணப்படும். கழுத்து நீண்டு உறுதியுடன் இருக்கும். நரம்புகள் படர்ந்து இருக்கும். குரலில் கவர்ச்சியும், வளமும் அவ்வளவு இருக்காது. கருமையான முடியும், நீல நிற கண்களுடன் இருப்பார்கள். நடையில் சோம்பல் தன்மை இருக்கும். தலைமுடி அடர்த்தியாகவும், சிலருக்கு சுருண்டும் காணப்படும்.
குடும்பம் உறவுகள்
குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குடும்பத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். வாழ்வில் சுக துக்கங்கள் மாறி மாறி வந்தாலும் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் பெற்றிருப்பார்கள். மத்திய வயதில் இருந்தே எல்லா சுகங்களையும் அனுபவிப்பார்கள்.
நண்பர்கள் பொதுவாக 1, 4 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களை நண்பர்களாக வைத்துக் கொள்ளலாம். 6, 5 தேதியில் பிறந்தவர்களாலும் ஆதரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். இவர்கள் நண்பர்கள் வட்டம் பெரிதாக இருந்தாலும் யாரையும் நிரந்தர நண்பர்களாக வைத்துக்கொள்ள மாட்டார்கள்.
இவர்கள் பகுத்தறிவு கருத்துக்களை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். யாரையும் அவ்வளவு எளிதில் நம்பிவிட மாட்டார்கள். செய்தொழிலில் கூட்டாளிகளை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு நிரந்தர நட்பும் கிடையாது, விரோதியும் கிடையாது.
திருமண வாழ்க்கை
இந்த எட்டு எண் ஆதிக்கத்தில் பிறந்த பெண்களில் சிலர் நல்ல கவர்ச்சியாக அழகுடன் இருப்பார்கள். கணவன், மனைவி இருவரும் கடுமையாக உழைத்து வாழ்வில் உன்னத நிலையை அடைவார்கள். காதல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏமாற்றம் ஏற்படும்.
இவர்களுக்கு அமையும் வாழ்க்கைத்துணை மிகவும் சிக்கனமானவராகவும், எதிர்த்து பேசாத குணம் கொண்டவராகவும் இருப்பார். கணவன், மனைவி இருவரும் நல்ல தான, தர்ம காரியங்களில் ஈடுபடுவார்கள். பெண் குழந்தைகளை பெற்றெடுத்து மனித குலத்திற்கு பெருமை சேர்ப்பார்கள்
தொழில், வியாபாரம்
இவர்கள் பொறியாளர், லேத் தொழில்கள், லாரி, பஸ் தொடர்பான தொழில்கள், எண்ணெய் மில்கள், இரும்பு வியாபாரம், ஆன்மிகம், விவசாயம், கட்டிடங்கள் கட்டுதல், ஆராய்ச்சி தொழில், பேச்சாளர்களாகவும் இவர்கள் இருப்பார்கள்.
மதப்பிரசங்கம், சுரங்கம் தொடர்பான பணிகள், கிரானைட் கற்கள், கடப்பாக்கற்கள் வியாபாரம், கம்பளி துணிகள், ஆயுதங்கள், சோப்பு வியாபாரம், வைத்திய தொழில்கள், சிறைத்துறை தொடர்பான தொழில்கள், கடலை, எள்ளு, கம்பு, மலை வாழை, புகையிலை, மூங்கில், கீரை வகைகள் போன்ற தொழில்களை மேற்கொள்ளலாம்.
மரம், விறகு, கரி, உதிரி பாகங்கள் விற்பனையகம், கட்டிட வேலை மேஸ்திரி, தபால் துறை, துப்பறியும் துறை, அச்சுத் தொழில், பைண்டிங் தொழில்கள், நில ஆராய்ச்சி, பிராணிகள் வளர்ப்பு, வாகன ஓட்டுநர், தோல், செருப்பு, ஏற்றுமதி, இறக்குமதி தொழிலும் இவர்களுக்கு சாதகமாக அமையும். விவசாய முதலாளிகளும், தொழிலாளிகளும் இவர்களே. இவர்களில் பலர் பெரிய தொழிலதிபதிர்களாகவும் வெற்றி பெறுவார்கள்.
அதிர்ஷ்ட தினங்கள்
இவர்களுக்கு ஒவ்வொரு மாதத்திலும் வரும் 1, 10, 19, 28 ஆகிய நாட்கள் மிகச் சிறந்தவை. 8ம் எண்ணின் தீய குணங்களை 5-ம் எண் மட்டுமே போக்கும் வல்லமை படைத்தது. எனவே, 5, 14, 23 ஆகிய நாட்களும் இவர்களுக்கு நன்மையே புரியும். எனவே கூட்டு எண் 1 மற்றும் 5 வரும் நாட்கள் மிகவும் அதிர்ஷ்டமானவை. 4, 13, 22, 31 நாட்களில் நல்லவை தாமாகவே நடக்கும். ஒவ்வொரு மாதத்திலும் 8, 17, 26 ஆகிய நாட்களும், 2, 11, 20, 29 நாட்களும் கெட்ட பலன்களையே கொடுக்கும். கூட்டு எண் 8 மற்றும் 2 வரும் நாட்களைத் தவிர்க்க வேண்டும்.
அதிர்ஷ்ட ரத்தினம், உலோகம்
இவர்களுக்கு நீலக்கல் மிகவும் அதிர்ஷ்டமானது.
அதிர்ஷ்ட நிறங்கள்
இவர்களுக்கு மஞ்சள் நிறம் அதிர்ஷ்டத்தை வழங்கும். கரும் பச்சை, நீலம் ஆகியவை நன்மை தரும். மற்றவர்களை சந்திக்கச் செல்லும்போது எப்போதும் நீலநிறம் மற்றும் மஞ்சள் நிற ஆடைகள் சிறந்தவை. கருப்பு, மற்றும் கரும்சிவப்பு ஆகிய நிறங்களைத் தவிர்க்க வேண்டும்.
ஆரோக்கியம்-நோய்
சிறு வயதுகளில் வயிற்றுவலி பெரும்பாலோர்க்கு இருக்கும். ஆஸ்த்துமா, மூச்சு விடுதல் பிரச்சனை அடிக்கடி உண்டு. தலைவலி, கிறுகிறுப்பு ஆகியவற்றால் அடிக்கடி பாதிக்கப்படுவார்கள். இவர்களுக்கு குடல் சம்பந்தப்பட்ட ஜீரண உறுப்புகளால் தொல்லைகள் ஏற்பட்டு மறையும்.
எளிதில் ஜீரணமாகும் உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல் இவர்கள் இந்த தொந்தரவுகளில் இருந்து நீங்க கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. நீர் பானங்கள், தேன், பேரீச்சம்பழம் உடலை வலுவடைய செய்யும்.
பித்தம் சம்பந்தமான தலை சுற்றல், தலை பாரம், கிறுகிறுப்பு, சோர்வு, ரத்த சோகை சம்பந்தப்பட்ட பாதிப்புகளும் அவ்வப்போது ஏற்படும். உடல் வலி, மூட்டு வலி உண்டாகும். உஷ்ணம் தரும் உணவு பொருட்களை இவர்கள் உண்ணக்கூடாது. மலச்சிக்கல் அடிக்கடி ஏற்பட வாய்ப்புகள் உண்டு. வாழைத்தண்டு இவர்கள் தினமும் அல்லது வாரத்திற்கு ஒரு முறை சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியமானது.
கருநிற தானியங்களை இவர்கள் உணவில் சேர்த்துக் கொள்வது சிறப்பு. பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். தக்காளி, உளுந்து, கொள்ளு போன்றவற்றை சேர்த்துக் கொள்வது நல்லது. நல்லெண்ணெய், மற்ற எண்ணெய்களை விட நன்மை தருவதால் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

தேதி வாரியாக பொதுவான பலன்கள்
8-ந் தேதி பிறந்தவர்கள்
* இவர்கள் மிகுந்த தெய்வ நம்பிக்கை கொண்டவர்கள்.
* இவர்கள் பொருளாதாரத்தில் சிறந்த அறிஞர்களாக இருப்பார்கள். கற்பனை வளம் மிக்கவர்கள். நல்ல சிந்தனையாளர்கள்.
* அடுத்தவர்களைத் தங்களது கருத்துகளுக்கு உட்படுத்தும் திறமை கொண்டவர்கள். சமூக சேவையில் மிகவும் நாட்டம் இருக்கும். கடுமையான உழைப்பாளிகள்.
* பெரும் சாதனை புரிவார்கள். நலிவுற்றவர்களைக் கைதூக்கி விடும் நல்ல இயல்பினர். தனித்துச் செயல்புரியும் ஆற்றல் உடையவர்கள்.
17-ந் தேதி பிறந்தவர்கள்
* இவர்கள் மிகுந்த சோதனைகளை சந்திப்பார்கள். சலிக்காமல் உழைக்கும் உழைப்பாளிகள்.
* நுண்ணிய அறிவு படைத்த சாமர்த்தியசாலிகள். குற்றங்களை மன்னிக்கும் கருணை மனமும் உண்டு.
* ஆன்மிக வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும், அரசியலிலும் நிலையான இடத்தைப் பிடித்து விடுவார்கள்.
* இவர்கள் வறுமையான குடும்பத்தில் பிறந்தாலும், தங்கள் உழைப்பினால் பெரும் செல்வத்தைச் சம்பாதிக்கும் யோகமும் உண்டு.
* பணம் சேர்ப்பதில் சாமர்த்தியர். இவர்களே பெரும்திட்டங்களைத் தீட்டி, அவற்றைச் செயல்படுத்துவார்கள்.
26-ஆம் தேதி பிறந்தவர்கள்
* பொருளாதார விஷயத்தில் குறைபாடு உடையவர்கள். முன்னோர் சேர்த்து வைத்த சொத்துகள் விரயமாகும். பண விரயங்களும் அதிகம் உண்டு.
* இவர்கள் அடுத்தவர்களால் அடிக்கடி ஏமாற்றம் அடைவார்கள். இருப்பினும் மனோ தைரியம் மிக்கவர்கள்.
* எப்போதும் உயர்வான சிந்தனைகள் நிறைந்தவர்கள். எப்படியும் உயர்ந்த பதவி, தொழிலை அடைய வேண்டும் என்று கடுமையாக உழைப்பவர்கள் இவர்கள்தான்.
* கற்பனைச் சக்தியும், கூர்மையான அறிவும் உண்டு. விதியின் சதியால் அடிக்கடி தோல்விகளைச் சந்திப்பார்கள். இருப்பினும் இறுதி காலத்தில் பொன்னும், பொருளும், கீர்த்தியும் கிடைத்து விடும்.
- வேறு எந்த தெய்வத்தைக் காட்டிலும் சிவனை வழிபடுதல் எளியது.
- சிவ நாமத்தை உச்சாரணம் செய்யும் அந்த கணமே பாபங்கள் எல்லாம் போய்விடும்.
நமசிவாய என்பது ஐந்தெழுத்து மந்திரம். பஞ்சாட்சர மந்திரத்தைப்பற்றி கூறுங்கால் வித்தைகளில் சுருதியும் அதைவிட ஸ்ரீ ருத்ரமும் அதைவிட பஞ்சாட்சரமும் சிறந்தது என ஆகமங்கள் கூறுகின்றன. இந்த பஞ்சாட்சர மந்திரம் யஜுர் வேத சம்ஹிதையின் இருதயபீடமாக அமைந்து விளங்குகிறது.
எல்லாப் பாவங்களையும் போக்கவல்ல சிவ என்ற இரண்டெழுத்துக்களைக் கொண்டது இந்த ஐந்தெழுத்து மந்திரம். இம்மந்திரத்தை தேவதையின் சரீரமென்று சொல்வதால் இதில் உள்ள ஒவ்வொரு அட்சரமும் சிவனுடைய ரூபமாகக் கொள்ளலாம். வேறு எந்த தெய்வத்தைக் காட்டிலும் சிவனை வழிபடுதல் எளியது. அவருக்கு பூஜைக்குரிய பொருள்களோ எளிதில் கிடைக்கும்.
எருக்கம்பூ, தும்பைப்பூ என்ற இலைகளால் பூஜித்தாலும் சாந்தம் அடைகிறார் சிவபெருமான். எவ்வொருவனுக்கு வாக்கு சுத்தம் வேண்டுமோ, எவனொருவனுக்கு மனத்தூய்மை வேண்டுமோ அவர்கள் நமசிவாய என சிவ நாமத்தை சொல்லி எளிதில் அதைப் பெற்று விடலாம்.
நமச்சிவாய என்று சொல்லக்கூட இக்காலத்தில் மக்களுக்கு முடியாவிட்டால் சிவ சிவ என்று பக்திபூர்வமாகச் சொன்னாலே போதும். இதை சொல்வதற்கு எந்த குறிப்பிட்ட காலவரையும் கிடையாது. சிவ நாமத்தை உச்சாரணம் செய்யும் அந்த கணமே பாபங்கள் எல்லாம் போய்விடும்.
சிவபெருமானை பற்றி மார்க்கண்டேயர் கூறுகையில், சந்திரனைத் தனது தலையில் அணிந்துள்ள சிவபிரானை உறுதுணையாக கொண்ட என்னை எமன் என்ன செய்வான் என்று குறிப்பிடுகிறார்.
சிவபெருமானின் அரிய பல செயல்கள் பல உண்டு என்றாலும் ஆலாலம் என்ற கொடிய நஞ்சை தேவர்களை காத்தருள வேண்டுமென்பதற்காக ஈசன் உண்டதுதான் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதில் இருந்து அவருக்கு நீலகண்டன் என பெயர் வந்தது.
எனவே எச்சமயத்திலும் நமக்கு அருள்புரிய காத்திருக்கும் சிவபெருமானை பக்தியுடன் தியானம் செய்து வழிபட வேண்டும். அதோடு ஆலயங்களுக்கு நேரில் சென்று அல்லது தரிசனம் செய்தோ அவசியம் வழிபட வேண்டும்.
நாம சங்கீர்த்தனம் செய்தோ அல்லது துதி செய்தோ வந்தாலும் சகல பாபங்களும் பஸ்பமாக்கப் படுகின்றன என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே வருகிற 8-ந் தேதி சிவராத்திரி தினத்திலாவது மேற்குறிப்பிட்டவைகளில் ஏதேனும் ஒன்றின்மூலம் சிவனை வழிபட்டு நற்கதி அடைவோமாக.
- சிவம் என்ற சொல்லுக்கு மங்களமானது என்று பொருள்.
- கையினில் உடுக்கை, திரிசூலம் தாங்கியிருத்தல்.
சிவம் என்ற சொல்லுக்கு "செம்மை" (பூரணத்துவம்), "மங்களமானது" என்று பொருள். எல்லாவற்றிற்கும் மேலாக, முழுமையாக, தான் மங்களகரமாகவும் தன்னைச் சார்ந்தவர்களை மங்களகரமாக்குபவரும் ஆன இறைவனைச் சிவபெருமான் என்று அழைக்கின்றோம்.
சிவன் முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து நின்று ஐந்தொழில்களையும் செய்து, ஆன்மாக்களின் மூன்று மலங்களையும் போக்கி வீடுபேறு அருளுகிறார். அருவத் திருமேனியுடைய சிவம் `சத்தர்' என்றும், அருவுருவத் திருமேனியுடைய சிவம் `பரம்பொருள்' என்றும், உருவத் திருமேனியுடைய சிவம் `பிரவிருத்தர்' என்றும் சைவர்களால் அழைக்கப்படுகிறது. சிவதரிசனம் செய்யும் வேளைகளைக் கொண்டே பலன்கள் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவை;
காலையில் தரிசிக்க - நோய்கள் நீங்கும்.
நண்பகலில் தரிசிக்க - தனம் பெருகும்.
மாலையில் தரிசிக்க - பாவம் அகலும்
அர்த்த சாமத்தில் தரிசிக்க - வீடுபேறு கிடைக்கும்.
படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்தும் சிவனின் தொழில் எனப்படுகிறது.
சிவ பெருமானின் தனித்துவ அடையாளங்களாக கீழ்வருவன கொள்ளப்படுகின்றன.
நெற்றிக்கண் காணப்படல்.
கழுத்து நீலநிறமாக காணப்படல்.
சடைமுடியில் பிறை நிலாவைக் கொண்டிருத்தல்.
நீண்ட சுருண்ட சடாமுடி
தலையில் கங்கை நதி பாய்ந்து கொண்டிருத்தல்.
உடல் சாம்பல் நிறமாக இருத்தல்.
புலித் தோலினை ஆடையாக அணிந்திருத்தல்.
கழுத்தினைச் சுற்றி பாம்பு காணப்படல்.
கையினில் உடுக்கை, திரிசூலம் தாங்கியிருத்தல். நந்தியினை (காளை) வாகனமாகக் கொண்டிருத்தல். இடுகாட்டினை வாழ்விடமாக கொண்டிருப்பவர் சக்தியைப் பாதியாக கொண்டிருத்தல் அருவம், உருவம், அருவுருவம் என்ற மூன்றுவகையான சிவ வழிபாட்டு முறையில் உருவ வழிபாடும் சைவர்களால் கடைபிடிக்கப்படுகிறது. உருவ வழிபாட்டில் சிவனை, லிங்கம், மகேசுவர மூர்த்தங்கள், சிவ உருவத்திருமேனிகள் ஆகிய சிவ வடிவங்களாக சைவர்களால் வணங்குகிறார்கள்.
இந்த வடிவங்களை சிவ ரூபங்கள் என்றும், சிவ சொருபங்கள் என்றும் குறிப்பிடலாம். மகேசுவ மூர்த்தங்கள் என்று இருபத்து ஐந்து வடிவங்களும், உருவத்திருமேனிகள் என்று அறுபத்து நான்கு வடிவங்களும் குறிப்பிடப்படுகின்றன.

சிவனை மூலமூர்த்தியாகக் கொண்டு இந்தியா, இலங்கை, நேபாளம் உள்பட பல நாடுகளில் கோயில்கள் பல உண்டு. சோதி லிங்கங்கள் உள்ள சிவத்தலங்கள், பஞ்சபூத சிவத்தலங்கள், ஐந்து தாண்டவங்களுக்கான சிவத்தலங்கள், ஐந்து மன்றங்களுக்கான சிவத்தலங்கள், சத்த விடங்க சிவத்தலங்கள், முக்தி தரவல்ல சிவத்தலங்கள், தமிழகத்தின் நவ கைலாயங்கள் (சிவதலங்கள்), தேவாரப்பாடல் பெற்ற சிவதலங்கள், அட்டவீரட்டானக் கோயில் என பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
மகா சிவராத்திரி, யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ஷிய சிவராத்திரி, மாத சிவராத்திரி என ஐந்து வகைகளாக கொண்டாடப்படும் சிவராத்திரி திருவிழா சைவர்களின் முக்கிய விழாவாகும். மாசி மாதத்தில் தேய்பிறை காலத்தில் வரும் சதுர்த்தசி நாளை மகா சிவராத்திரி என்று அழைக்கின்றார்கள்.
இந்த ஆண்டு மகா சிவராத்திரி வருகிற 8-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்நாளில் பார்வதி தேவி, சிவபெருமானை எண்ணி வழிபட்டதாக சைவர்கள் நம்புகின்றார்கள். அன்று நாமும் சிவனை வணங்கி எல்லா வளமும், நலனும் பெறலாம்.
- மூன்று பிறை தொடர்ந்து தரிசித்தால் மூர்க்கனும் அறிவு பெறுவான்.
- நான்கு பிறை தொடர்ந்து தரிசித்தால் நம்வினை நாசமாகும்.
மூன்றாம் பிறையைத் தரிசனம் செய்தால், சிவனின் சிரசையே நேரில் தரிசனம் செய்ததாக அர்த்தம். தொடர்ந்து மூன்றாம் பிறையை தரித்து வருபவர்கள் வாழ்வில் வற்றாத செல்வ வளத்தை பெற்று பிரகாசத்துடன் திகழ்வர்.

மூன்று பிறை தொடர்ந்து தரிசித்தால் மூர்க்கனும் அறிவு பெறுவான்.
நான்கு பிறை தொடர்ந்து தரிசித்தால் நம்வினை நாசமாகும்.
ஐந்து பிறை தொடர்ந்து தரிசித்தால் ஆண்டியும் அரசயோகம் பெறுவான்.
ஆறு பிறை தொடர்ந்து தரிசித்தால் திருமணம் தடையின்றி நடக்கும்.
ஏழு பிறை தொடர்ந்து தரிசித்தால் ஏற்பட்ட கடன் தீரும்.
பத்து பிறை தொடர்ந்து தரிசித்தால் பாரில் புகழ் ஓங்கும்.
வருடம் முழுவதும் பிறை தொடர்ந்து தரிசிக்க வம்ச விருத்தியாகும்.
நீடித்த பிறை தரிசனம் நீடுலக வாழ்வு தரும் (முத்திப்பேறு)
- வியாசர்பாடியில் சூரிய தலமான ரவீஸ்வரர் ஆலயம் உள்ளது.
- தினமும் சூரியபூஜை நடைபெறும் திருத்தலம் இது.
வட சென்னை பகுதியிலுள்ள வியாசர்பாடியில் சூரிய தலமான ரவீஸ்வரர் ஆலயம் உள்ளது. முலவர் ரவீஸ்வரர் மரகதாம்பாளுடன் அருள, உற்சவ மூர்த்தி சோமாஸ்கந்தராக அருள்கிறார். தல விருட்சமாக வன்னிமரமும், தல தீர்த்தமாக சூரிய தீர்த்தமும் உள்ள இத்தலத்தில் காமீக ஆகம முறைப்படி வழிபாடுகள் நடைபெறுகின்றன. சிவன் சந்நதிக்கு மேலே உள்ள இந்திர விமானம், நடுவில் எந்த ஆதாரமும் இல்லாமல் கூடு போன்று கட்டப்பட்டிருக்கிறது. சிவன் மூலஸ்தானத்தில் இருந்து பார்த்தால், இந்த அமைப்பு தெரியும். தினமும் சூரியபூஜை நடைபெறும் திருத்தலம் இது.

இக்கோயிலில் சிவன், கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இவரது சந்நதி எதிரில் வாசல் கிடையாது. தென்திசையில் உள்ள வாசல் வழியாக நுழைந்துதான், இவரைத் தரிசிக்க முடியும். சிவனுக்கு எதிரேயுள்ள சுவரில், சிவலிங்கம் போன்ற அமைப்பில் துளை அமைத்துள்ளனர்.
இதற்கு நேரே நந்தி இருக்கிறது. தினமும் காலையில் சூரியனின் ஒளி, சிவலிங்க வடிவ துளையின் வழியாக, சுவாமியின் மீது விழுகிறது. தினமும் இங்கு சூரியனே, முதலில் சிவனுக்கு பூஜை செய்வதாக ஐதீகம். இதன் பிறகுதான் காலசந்தி பூஜை செய்கின்றனர். சிவன் சந்நதி முன்மண்டபத்தில் சூரியன், இருக்கிறார்.
ஞாயிற்றுக்கி ழமை, உத்தராயண, தட்சிணாயண புண்ணிய கால துவக்கம், மகரசங்கராந்தி (தைப்பொங்கல்), ரதசப்தமி ஆகிய நாட்களில் சிவன் மற்றும் சூரியன் இருவருக்கும் விசேஷ அபிஷேக, பூஜைகள் நடக்கின்றன.

ஜாதகத்தில் சூரியன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் சிவன், சூரியனுக்கு விசேஷ பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள். சூரியபகவானின் மனைவியான சம்ஞ்யா தேவி, அவரது உக்கிரம் தாங்காமல், தனது நிழல் வடிவை பெண்ணாக்கி சூரியனிடம் விட்டுச்சென்று விட்டாள். சாயா (நிழல்) தேவி எனப்பட்ட அவள், சம்ஞ்யாதேவியின் பிள்ளைகளிடம் பாரபட்சமாக நடந்து கொண்டாள்.
இதை அறிந்த சூரியன் அவளிடம் கேட்டபோது, சம்ஞ்யாதேவி தன்னை பிரிந்து சென்றதை அறிந்தார். கோபம் கொண்ட சூரியன், சம்ஞ்யா தேவியைத் தேடிச் சென்றார். வழியில் பிரம்மா, ஒரு யாகம் நடத்திக் கொண்டிருந்தார். மனைவியைத் தேடிச் சென்ற கோப அவசரத்தில் சூரியன் பிரம்மாவைக் கவனிக்கவில்லை.
தன்னை சூரியன், அவமரியாதை செய்ததாக எண்ணிய பிரம்மா, அவரை மானிடனாகப் பிறக்கும்படி சபித்துவிட்டார். இந்த சாபம் நீங்க, நாரதரின் ஆலோசனைப்படி பூலோகம் வந்த சூரியன் இத்தலத்தில் ஒரு வன்னி மரத்தடியில் லிங்க பிரதிஷ்டை செய்து, சிவனை வழிபட்டார்.
அவருக்குக் காட்சி தந்த சிவன், சாப விமோசனம் கொடுத்தருளினார். சூரியனின் வேண்டுதலுக்காக சிவன், அந்த லிங்கத்தில் ஐக்கியமானார். சூரியனுக்கு விமோசனம் கொடுத்தவர் என்பதால், `ரவீஸ்வரர்' (ரவி என்பது சூரியனின் ஒரு பெயர்) என்றும் பெயர் பெற்றார்.
முற்காலத்தில் இங்கு சிவன் சந்நதி மட்டும் இருந்தது. இப்பகுதியை ஆண்ட வீச்சாவரன் என்னும் மன்னனுக்கு புத்திரப்பேறு இல்லை. தனக்கு அப்பாக்கியம் தரும்படி இங்கு சிவனை வேண்டினான். சிவன், அம்பிகையிடம் மன்னனின் மகளாகப் பிறக்கும்படி அருளினார்.
அதன்படி, மன்னனின் அரண்மனை நந்தவனத்திலுள்ள ஒரு மகிழ மரத்தினடியில் அம்பிகை குழந்தை வடிவில் தவழ்ந்தாள். அவளைக் கண்ட மன்னன், மரகதாம்பிகை என பெயர் சூட்டி வளர்த்தான். அவளும் இத்தலத்து இறைவன் மீது பக்தி கொண்டாள். அவளது திருமண வயதில் சிவன், அவளை மணந்து, தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார். இதன் பின்பு, இங்கு அம்பிகைக்கு சந்நதி எழுப்பப்பட்டது. இவ்விழாவின் பத்தாம் நாளில் மகிஷன் வதம் வைபவம் நடக்கும்.
அப்போது அம்பாள் சந்நதி எதிரில் ஒரு வாழை மரம் கட்டி, (வாழை மரத்தின் வடிவில் மகிஷன் இருப்பதாகக் கருதி), அதில் வன்னி இலையையும் சேர்த்துக் கட்டிவிட்டு, அம்பாள் சார்பாக வெட்டி விடுகின்றனர்.
இந்த வைபவம் இங்கு விசேஷமாக நடக்கும். சிவன் சந்நதிக்கு பின்புறத்தில் வன்னி மரம் இருக்கிறது. நாக தோஷம் உள்ளவர்கள், இம்மரத்திற்கு கீழேயுள்ள நாகருக்கு மஞ்சள்பொடி, பால் அபிஷேகம் செய்தும், பெண்கள் சுமங்கலிகளாக இருக்க தாலி கட்டியும் வேண்டிக்கொள்கிறார்கள்.
- செய்த பாவத்திற்கு பரிகாரம் இல்லை. அனுபவித்தே தீர வேண்டும்.
- யமலோகம் விசித்திர லோகம்.
நல்ல நேரம் பார்த்து, நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை, புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அருமருந்தாக அமையும். செய்த பாவத்திற்கு பரிகாரம் இல்லை. அனுபவித்தே தீர வேண்டும் என்று பெரியோர், சான்றோர் கூற கேட்டிருப்போம். கீழ் கண்ட கதையை படித்தால், காரணம் என்ன என்று நமக்கு புலப்படும் கர்மாவின் கதை.

ஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார்...! யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திர குப்தனை அனுப்புகிறேன் என்றார்.! பின்னர் சித்திரகுப்தனை யமன் ரிஷியுடன் செல்ல பணிந்தார். சித்திர குப்தன் யமன் ஆணைக்கு இணங்க ரிஷியுடன் சென்றார்.
யமலோகம் விசித்திர லோகம். அங்கே நடக்கும் ஒவ்வொரு காரியத்துக்கும் உண்டான காரணம், பாகுபாடற்ற-பாரபட்சமற்ற நீதி, நிலை நிறுத்தப்படும் தர்மம் அத்தனையையும் பார்க்கப் பார்க்க, அந்த ரிஷியே ஆடிப்போனார். தண்டனைகளுக்கான காரணங்களில் அத்தனை துல்லியம். `இப்படி நரகம் என்று ஒன்று இருப்பது தெரிந்தும், தண்டனை கிடைக்கும் என்பதை அறிந்தும் ஏன் இந்த மனிதர்கள் பாவங்களைச் செய்கிறார்கள்?' நினைக்க நினைக்க அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது.
மனிதர்கள் தங்கள் பாவங்களுக்காக அனுபவிக்கும் கொடூர தண்டனைகள் அவரை சஞ்சலம் கொள்ள வைக்கவில்லை. பந்த பாசங்களுக்கு அப்பாற்பட்ட, அனைத்தையும் கடந்த, சித்தி பல பெற்ற முனிவர் அல்லவா?! சந்தேகம் எழும் இடங்களில் எல்லாம் சித்ரகுப்தனைத் திரும்பிப் பார்ப்பார். அவரின் குறிப்பை உணர்ந்தவனாக, சித்ரகுப்தனே அவருக்கு அனைத்தையும் விளக்குவார்.
இருவரும் நடந்துவரும் வழியில், ஓர் இடத்தில் ஐந்தடி உயரத்துக்கு கற்பாறை ஒன்றைக் கண்டார் முனிவர். "இது என்ன... கற்பாறை?" ஒன்றுமில்லை மகாமுனி! ஒரு சிறுவனின் பாவம்... இப்படி வளர்ந்து நிற்கிறது.
சிறுவன் செய்த பாவமா? அது என்ன பாவம்? பூலோகத்தில் ஒரு முனிவரின் ஆசிரமத்துக்கு தினமும் பல அதிதிகள் வருவது வழக்கம். முனிவரும் வருபவர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்று உபசரித்து உணவு அளிப்பார். அந்த முனிவருக்கு ஒரு பிள்ளை. அந்த பிள்ளை மிகவும் சேட்டைக்காரன். எப்போதும் ஏதாவது குறும்புகள் செய்துகொண்டே இருப்பான். அதிதியாக வருபவர்களுக்கு முனிவர் பரிமாறும் உணவில் சிறு சிறு கற்களைப் போட்டு, அவர்கள் சாப்பிடும்போது படும் கஷ்டத்தை ரசித்துப் பார்ப்பான்.
அப்படி அவன் அதிதிகளுக்கு செய்த பாவமான அந்தக் கற்கள்தான் சிறுவன் வளர வளர சிறு பாறையாக இப்படி வளர்ந்து நிற்கிறது. விதி முடியும் நேரத்தில் அவன் யமலோகத்துக்கு வரும்போது இந்தப் பாறையை அவன் உண்ண வேண்டும். இதுதான் அவனுக்கான தண்டனை என்றான் சித்ரகுப்தன். அசந்துபோனார் முனிவர்.
இருவரும் நடந்தார்கள். முனிவருக்கு அந்தச் சிறுவன் யார் என அறிந்துகொள்ள ஆர்வம். இது எங்கோ நடந்ததை தான் அறிந்ததாக அவருக்குள் ஒரு நினைவு நிழலாட்டம். ஆனால், சித்ரகுப்தனிடம் கேட்கத் தயக்கம். அவன் வேறுபுறம் சென்றதும், ரிஷி தன் ஞான திருஷ்டியில் அந்தச் சிறுவன் யார் எனப் பார்த்தார். அது வேறு யாரும் அல்ல... சாட்சாத் அவரேதான். தன் தவறை உணர்ந்தார்.
யமதர்மனிடம் போனார். நடந்ததைச் சொன்னார். யமதர்மா... நான் முக்தி பெற்று இறைவனடி சேர விரும்புகிறேன். அதற்குத் தடையாக நிச்சயம் இந்தக் கல் இருக்கும். எனவே, இந்த ஜென்மத்திலேயே அந்த பாவத்தைப் போக்க விரும்புகிறேன். நானே கொஞ்சம் கொஞ்சமாக இந்த கல்லை தின்று செரித்துவிடுகிறேனே.

முனிவரின் கோரிக்கையை யமதர்மன் ஏற்றான். கல்லைச் சிறிது சிறிதாக அரைத்து உண்டார் முனிவர். `சிலா' என்றால் கல் என்று பொருள். கல்லை உண்டவர் என்பதால் அந்த முனிவர், `சிலாதர்' ஆனார்.
எத்தனை சக்தி பெற்றவராக இருப்பினும், எண்ணற்ற தவம், ஞானம் பெற்றவராக இருந்தாலும், ஒருவர் பிறருக்கு செய்யும் தீமை அவரை சும்மா விடாது. பெரும் கர்ம வினையாக வளர்ந்துகொண்டே போகும். ஒருநாள் மொத்தமாகத் திரும்பக் கிடைக்கும். அப்போது நாம் அந்த கர்ம வினையை அனுபவித்தே தீர்க்க வேண்டும். இதை உணர்ந்தவர்கள் எறும்புக்கு கூட இன்னல் விளைவிக்க நினைக்க மாட்டார்கள்.
சிலாதரின் கதை எத்தனை யாகம், ஹோமம், தவம், பரிகாரம், இறைவழிபாடு செய்தாலும் நம் கர்மவினை நம்மை விட்டு அகலாது அதை கல் போல் மனம் இல்லாமல் உண்டு அனுபவித்து கழிக்க வேண்டும். இந்த நீதியைத்தான் அழுத்தமாக உணர்த்துகிறது.
- சிவன் கோவில்களில் நாளை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்.
- சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மாசி 21 (திங்கட்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: நவமி பின்னிரவு 3.18 மணி வரை பிறகு தசமி
நட்சத்திரம்: கேட்டை காலை 11.56 மணி வரை பிறகு மூலம்
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருவைகாவூர், திருவாரூர் கோவில்களில் சிவபெருமான் பவனி. திருத்தணி முருகனுக்கு பாலாபிஷே கம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம். திருமயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீசுவரர், திருவான்மியூர் திரிபுரசுந்தரியம்பாள் சமேத மருந்தீசுவரர், பெசன்ட் நகர் அரளகேசியம்பாள் சமேத ரத்தினகிரீசுவரர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உயர்வு
ரிஷபம்-பணிவு
மிதுனம்-பண்பு
கடகம்-நிம்மதி
சிம்மம்-ஆசை
கன்னி-தாமதம்
துலாம்- சிறப்பு
விருச்சிகம்-பெருமை
தனுசு- ஜெயம்
மகரம்-ஆக்கம்
கும்பம்-தேர்ச்சி
மீனம்-லாபம்
- ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 84-வது பிறந்தநாள் விழா.
- அதிகாலை சுயம்பு அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
சென்னை:
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 84-வது பிறந்தநாள் விழா நேற்று முன்தினம் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் கருவறையில் உள்ள ஆதிபராசக்தி அம்மனுக்கும், சுயம்புவிற்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆதிபராசக்தி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ரமேஷ் கலந்து கொண்டார்.
ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர் செந்தில்குமார் கலந்துகொண்டு அன்னதானம் வழங்கினார். சித்தர் பீடம் வந்த ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளாருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பங்காரு அடிகளாரின் திரு வுருவப்ப டத்தினை வெள்ளி ரதத்தில் வைத்து சித்தர் பீடத்தில் வலம் வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்று மாலை கலச விளக்கு வேள்வி பூஜையை ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ் தொடங்கி வைத்தார்.
நேற்று காலை ஆதிபராசக்தி அம்மனுக்கு நடைபெற்ற அபிஷேகத்தை ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர் கோ.ப.அன்பழகன் துவக்கி வைத்தார். பின்னர் பங்காரு அடிகளாரின் திருவுருவ சிலையுடன் தங்கரதம் சித்தர் பீடத்தை வலம் வந்தது.
பங்காரு அடிகளாரின் பிறந்த நாளான இன்று அதிகாலை சுயம்பு அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் பங்காரு அடிகளாரின் திருவுருவப் பட மலர் அலங்கார ரத ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் பங்காரு அடிகளாரின் திருப்பாதுகைகளுக்கு பக்தர்கள் பொது பாத பூஜை செய்து தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தொழில் அதிபர் ஜெய் கணேஷ், உமாதேவி, ஆன்மீக இயக்க தலைமை செயல் அதிகாரி வழக்கறிஞர் அகத்தியன் ஆகியோர் அருட்பிரசாதம் வழங்கினார்கள்.
இன்று மாலை மக்கள் நலப்பணி விழா மற்றும் விழா மலர் வெளியிடும் நிகழ்ச்சி ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க கலை அரங்கில் நடைபெற உள்ளது.






