என் மலர்
நீங்கள் தேடியது "Prayoga Chakra"
- பெருமாளின் திருக்கரத்தில் உள்ள சக்கரமானது பிரயோக நிலையில் உள்ளது.
- திருக்கரத்தில் சர்ப்பத்தை ஏந்தியும் காட்சி தருவது சிறப்பானது.
கோவில் தோற்றம்
சென்னை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே அமைந்துள்ளது, பொன்மார் எனும் கிராமம். இங்கே மிகப்பழமையான ஸ்ரீதேவி- பூதேவி சமேத தியாக வினோத பெருமாள் ஆலயம் இருக்கிறது. சுமார் 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்தலமானது, சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டு, விஜயநகர மன்னர்களின் காலத்தில் மேம்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
விஜயநகர மன்னர்களின் காலத்தில் இவ்வூரானது `ஜெயங்கொண்ட சோழமண்டலத்து புலியூர் கோட்டத்து கால்வாய் நாட்டு தியாக வினோத நல்லூரான பொன்மாறு' என்று வழங்கப்பட்டதாக, கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
போதிய பராமரிப்பின்றி முற்றிலும் சிதிலமடைந்த நிலையில் இருந்த இந்த ஆலயம், சில ஆண்டுகளுக்கு முன்பு கிராம மக்கள் மற்றும் ஆன்மிக அன்பர்களின் முயற்சியால் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஆண்டு ஜூன் மாதம் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தற்போது அற்புதமான திருத்தலமாக காட்சி தரும் இந்த ஆலயம், அதன் பழமை மாறாமல் செப்புக் கம்பிகளை பயன்படுத்தி புதுப்பிக்கப்பட்டுள்ளது.
முன் காலத்தில் இந்த ஊர், தியாக வினோத நல்லூர் என்று அழைக்கப்பட்டதால், இவ்வாலய பெருமாளும், 'தியாக வினோதப் பெருமாள்' என்று பெயர் பெற்றுள்ளார்.
இவ்வாலய பெருமாள், சதுர்புஜனாக தனது திருக்கரங்களில் சங்கும், சக்கரமும் தாங்கி ஸ்ரீதேவி- பூதேவியோடு நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். பெருமாளின் திருக்கரத்தில் உள்ள சக்கரமானது பிரயோக நிலையில் உள்ளது. இதுகுறித்த ஒரு தல வரலாறும் சொல்லப்படுகிறது.
முன்பொரு காலத்தில் இந்த பூவுலகம் முழுவதையும் ஆட்சி செய்தவர், அம்பரீஷன் என்ற மன்னன். இவர் ஏகாதசி விரதத்தை தன் உயிர் போலக் கருதி தவறாமல் கடைப்பிடித்து வந்தார். ஒரு முறை அவர் ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்த சமயத்தில், துர்வாசரின்
கோபத்திற்கு ஆளானார். துர்வாசர் அம்பரீஷனை அழிக்க பூதம் ஒன்றை ஏவினார். அக்கணமே தன் பக்தனைக் காக்க திருமால் தன் பிரயோக சக்கரத்தை ஏவ, அந்த சக்கரம் பூதத்தை அழித்து, பின்னர் துர்வாசரைத் துரத்தத் தொடங்கியது. தன் உயிரைக் காத்துக் கொள்ள துர்வாசர், திருமாலிடம் சரணடைந்தார்.
ஆனால் திருமாலோ, அம்பரீஷனிடம் சரணடையச் சொல்ல, அதன்படியே அம்பரீஷ மன்னனிடம் சென்று, தன்னை மன்னித்துவிடும்படி துர்வாசர் கேட்டுக் கொண்டார். இதையடுத்து சீறி வந்த பிரயோக சக்கரம், தன் வேகத்தைக் குறைத்துக் கொண்டு பெருமாளின் திருக்கரங்களைச் சென்றடைந்தது. அம்பரீஷனின் பக்தியையும், ஏகாதசி விரதத்தின் மகிமையையும் போற்றிப் புகழ்ந்த துர்வாசர், அம்பரீஷனுக்கு பல வரங்களை அளித்ததாக புராணங்கள் சொல்கின்றன.
தன் பக்தர்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றும் விதமாகத்தான், பெருமாளின் சக்கரம் பிரயோக நிலையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த கோவிலுக்குள் நுழைந்ததும் பலி பீடம் உள்ளது. அதன் அருகில் கருடாழ்வார் தனிச் சன்னிதியில் பெருமாளை நோக்கி வீற்றிருக்கிறார்.
இத்தலத்தில் வேறெங்கும் இல்லாத வகையில் பெரியதிருவடி எனும் கருடாழ்வார் நான்கு திருக்கரங்களோடு காட்சி தருகிறார். மேல் இரு கரங்களில் சங்கு, சக்கரத்தை ஏந்தியும், வலது கீழ் கரத்தினை அபய ஹஸ்த நிலையிலும், இடது கீழ் திருக்கரத்தில் சர்ப்பத்தை ஏந்தியும் காட்சி தருவது சிறப்பானது.
அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்போடு திகழும் இத்தலம் மிக உயரமாக அமைந்துள்ளது. சுவாமியை வணங்க 10 படிக்கட்டுகளைக் கடக்க வேண்டும். கருவறையில் மகாவிஷ்ணு, ஸ்ரீதேவி - பூதேவி சமேதராக தியாக வினோதப் பெருமாள் என்ற திருநாமம் தாங்கி தன்னை நாடி வரும் பக்தர்களைக் காத்தருள்கிறார். இவர்களுக்கு உற்சவர் திருமேனிகளும் உள்ளன. அருகில் நம்மாழ்வார் உற்சவராக இருக்கிறார்.
கருவறை விமானத்தில் வேறெந்த தலத்திலும் இல்லாத விதமாக 108 சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இத்தல இறைவனை வழிபடுபவர்களுக்கு, துன்பங்கள் உடனடியாக விலகும். திருமணத் தடை அகலும், உடல் ஆரோக்கியம் ஏற்படும் என்கிறார்கள்.
பாஞ்சராத்ர ஆகம வழிபாட்டு முறை பின்பற்றப்படும் இத்தலத்தில், வைகுண்ட ஏகாதசி, மாத ஏகாதசி, புரட்டாசி சனிக்கிழமைகளில் விசேஷ வழிபாடுகள், மார்கழி மாதத்தில் உற்சவங்கள், அனுமன் ஜெயந்தி முதலான உற்சவங்கள் நடைபெறுகின்றன. இவ்வாலயம் தினமும் காலை 7 மணி முதல் 11 மணி (சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை பகல் 12 மணி வரை) வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அமைவிடம்
மேடவாக்கத்தில் இருந்து மாம்பாக்கம் செல்லும் சாலையில் உள்ளது, பொன்மார் கிராமம். மேடவாக்கத்தில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவிலும், மாம்பாக்கத்தில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஊர் இருக்கிறது. பொன்மார் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 750 மீட்டர் தொலைவில் தியாக வினோதப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.






