search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sri Kalahastheeswarar"

    • ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் அன்னப்பறவை வாகனத்தில் எழுந்தருளினார்.
    • வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா.

    ஸ்ரீகாளஹஸ்தி:

    மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாளான நேற்று காலை ஹம்ச, சேஷ வாகனங்களில் உற்சவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று காலை ஹம்ச வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், கிளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    வாகன வீதிஉலாவுக்கு முன்னால் ஆண்களும், பெண்களும் கோலாட்டம் ஆடினர். பக்தர்கள் பக்தி பஜனை பாடல்களை பாடியவாறு சென்றனர். மாடவீதிகளில் திரண்ட பக்தர்கள் தேங்காய், உடைத்தும் கற்பூர ஆரத்தி காண்பித்தும் ஹர..ஹர.. மகா தேவா சம்போ சங்கரா.. எனப் பக்தி கோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர்.

    அன்னப்பறவை தண்ணீர் கலந்த பாலில் பாலை மட்டும் உறிஞ்சி குடித்து விடும், நீரை விட்டு விடும். அதுபோல அன்னப்பறவை வாகனத்தில் எழுந்தருளிய தன்னை வழிபடும் பக்தர்களிடம் இருக்கும் தீய குணங்கள், தீய சக்தியை நீக்கி, முக்தியின் பாதையில் செல்ல நல்வழிப்படுத்துவேன் என்பதை உணர்த்தவே உற்சவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் `ஹம்சம்' என்ற அன்னப்பறவை வாகனத்தில் எழுந்தருளினார்.

    அதேபோல் உற்சவர் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் கிளி வாகனத்தில் எழுந்தருளினார். பொதுவாக கிளி வாகனம் அம்பாளுக்கு உகந்ததாகவே கருதப்படுகிறது. இலக்கியத்தில் கிளி காதல் தூதுவனாகக் கூறப்படுகிறது. கிளி எளிதில் மனிதர்களிடம் பழகி தோழமை கொள்ளும் இயல்புடையது.

    பெண்கள் கிளியை பழக்கி தனக்கு துணைக்கு வைத்துக் கொள்கிறார்கள். கிளி சுகத்தின் அடையாளம். ஆகவே கிளி மேல் எழுந்தருளி உலா வரும் தன்னை வணங்கும் பக்தர்களுக்கு இனிய சுகங்களை வழங்கி எந்நாளும் மகிழ்ச்சியோடு வாழ வைப்பேன் என்பதை உணர்த்தவே தாயார் கிளி வாகனத்தில் எழுந்தருளினார்.

    அதைத்தொடர்ந்து இரவு சேஷ வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், யாளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    • ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா.
    • சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் 4 மாட வீதிகளில் உலா.

    ஸ்ரீகாளஹஸ்தி:

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 11 மணியளவில் கங்காபவானியுடன் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் ஹம்ச வாகனத்திலும், யாளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    உடன் விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத முருகன், பக்த கண்ணப்பர் உலா வந்தனர். முன்னதாக கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் உற்சவர்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மேள தாளங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க ராஜகோபுரம் வரை கொண்டு வந்து அந்தந்த வாகனங்களில் உற்சவர்களை எழுந்தருள செய்தனர். வீதி உலா முன்னால் கோலாட்டம், நாட்டிய, நடன நிகழ்ச்சிகள் நடந்தன. இசை வாத்தியங்கள் இசைக்கப்பட்டன.

    இதேபோல் இரவு 9 மணியளவில் ராவணாசூர வாகனத்தில் சோமசுந்தரமூர்த்தி, மயில் வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    ×