என் மலர்
நீங்கள் தேடியது "வித்யஜோதி நாயகி"
- தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் 34-வது தலமாகும்.
- கடம்ப வனமே காலப்போக்கில் `கடம்பூர்’ என்றானது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது, மேலக்கடம்பூர் கிராமம். இங்கு சோதிமின்னம்மை உடனாய அமிர்தகடேசுவரர் ஆலயம் உள்ளது. பெருங்கோவில், மாடக்கோவில், தாழக்கோவில், கரக்கோவில், ஞாழற்கோவில், கொகுடிக்கோவில், ஆலக்கோவில், மணிக்கோவில், மலைக்கோவில், இளங்கோவில் என்னும் 10 வகையான கோவில்களில், இது `கரங்கோவில்' வகையைச் சேர்ந்தது. சக்கரங்களுடன் கூடிய தேர் பீடத்தின் அமைப்பைக் கொண்டிருக்கும் இக்கோவிலை வடமொழியில் `விஜயம்' என்று குறிப்பிடுவர். இந்த ஆலயம் தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் 34-வது தலமாகும்.

தலவரலாறு
திருப்பாற்கடலை கடைந்து அமுதகலசம் பெற்ற தேவர்களும், அசுரர்களும், முழுமுதற்கடவுளான விநாயகரை வழிபடாமல் அதை உண்ண நினைத்தனர். இதனால் கோபம் கொண்ட விநாயகர், அமுத கலசத்தை பூலோகத்தில் மறைத்து வைக்க எடுத்து வந்தார். அப்படி வருகையில் கலசத்தில் இருந்து ஒரு துளி அமுதம், கடம்ப வனக்காட்டில் விழுந்து, சுயம்பு லிங்கமாக மாறியது. இந்த சிவலிங்கமே, இவ்வாலயத்தில் மூலவராக வீற்றிருக்கும் அமிர்தகடேசுவரர் ஆவார். கடம்ப வனமே காலப்போக்கில் `கடம்பூர்' என்றானது.
ராஜராஜ சோழனின் பரந்துவிரிந்த சோழ தேசத்தின் ஒரு சிற்றரசாக மேலக்கடம்பூர் விளங்கியது. இப்பகுதியை சம்புவராயர்கள் ஆட்சி செய்தனர். ஆனால் இக்கோவில் சம்புவராயர்களாலோ அல்லது ராஜராஜ சோழனாலோ கட்டப்படவில்லை. சிற்பக்கலையிலும், இசையிலும் அதிக ஆர்வம்கொண்ட சாளுக்கிய வம்சத்து சோழ அரசனான முதலாம் குலோத்துங்கனால் கி.பி. 1100-ம் ஆண்டு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு சிதலமடைந்த இந்த ஆலயம் பல அன்பர்களின் திருப்பணி சேவையால் தற்போதைய நிலைக்கு உயர்வு பெற்றிருக்கிறது.
யுகங்கள் தோறும் இக்கோவிலை பலர் வந்து வழிபட்டுச் சென்றுள்ளனர். அவர்களில் கிருதாயுகத்தில் சூரியன், சந்திரன், உரோமச முனிவர், இந்திரன் ஆகியோரும், திரேதாயுகத்தில் பர்வத தலைவனான பர்வதராஜனும், துவாபர யுகத்தில் பதஞ்சலி முனிவரும் வணங்கியதாக சொல்லப்படுகிறது. அதை நினைவுறுத்தும் வகையில் இங்கே சிற்பங்களும் வடிக்கப்பட்டுள்ளன. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், அருணகிரிநாதர், ராமலிங்கர், பாம்பன் சுவாமிகள், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் ஆகியோர் இவ்வாலய இறைவனைப் பற்றி பாடியிருக்கிறார்கள்.
கிழக்கு நோக்கிய இத்திருக்கோவில் ஐந்துநிலை ராஜகோபுரத்தையும், இரண்டு பிரகாரத்தையும் கொண்டுள்ளது. கோவிலுக்கு தென்மேற்கில் மேற்கு திருமாளப்பத்தியில் ஆரவார விநாயகர் சன்னிதி உள்ளது. இவ்விநாயகர் வாதாபியில் இருந்து கொண்டுவரப்பட்டவர். விநாயகர் சன்னிதியைத் தொடர்ந்து, ஆறுமுகப்பெருமானும், சமயக்குரவர்கள் நால்வரும், மீனாட்சி உடனாய பாபஹரேசுவரர் ஆகியோர் உள்ளனர். இதையடுத்து சரஸ்வதி, வனதுர்கை, லட்சுமி ஆகியோர் தனித்தனி சன்னிதியில் அருள்கின்றனர்.

திருமஞ்சன கிணற்றின் அருகே மேற்கு நோக்கிய பைரவர், பெருஞ்சாத்தன், நின்றகோலத்தில் நாயுடன் காலபைரவர், சூரிய-சந்திரர்கள், ரிஷப வாகனர், காக்கைக்குப் பதிலாக கழுகு வாகனத்தில் சனி பகவான், கரண்டமகுடம் தரித்த காளி ஆகியோர் உள்ளனர். கோவிலின் மகா மண்டபத்தில் தரும
நந்தியும், பிரம்மசந்தி எனப்படும் பலிபீடமும் உள்ளது. இவைகளுக்கு வடதிசையில் தென்முகம் நோக்கிய அம்பிகையின் தனிச் சன்னிதி உள்ளது. இந்த அன்னை `வித்யஜோதி நாயகி' என்ற திருநாமம் தாங்கியுள்ளார். தமிழில் 'சோதிமின்னம்மை' என்பது பொருள்.
இந்த அம்பாள் பார்ப்பதற்கு ஒரே தோற்றத்தில் காட்சியளித்தாலும், காலையில் வீணை ஏந்திய சரசுவதியாகவும், உச்சி காலத்தில் யானையுடன் லட்சுமியாகவும், மாலையில் சூலாயுதத்துடன் துர்க்கையாகவும் காட்சித் தருவதாக ஐதீகம். அதனால்தான் 'வித்யஜோதிநாயகி' என்ற பெயர் வந்தது. இதில் `வித்ய' என்பது சரஸ்வதியையும், `ஜோதி' என்பது லட்சுமியையும், 'நாயகி' என்பது பார்வதியையும் குறிப்பதாகும்.
அம்பாளின் இடதுபுறத்தில் பள்ளியறை மற்றும் நவக்கிரகங்களும், வலதுபுறத்தில் ஆடல்வல்லானின் காணக்கிடைக்காத கற்சிற்ப சன்னிதியும் உள்ளன. அவரருகில் சுவற்றில் 63 நாயன்மார்களின் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. அர்த்தமண்டபத்தின் நுழைவு வாசலில் திண்டி - முண்டி என்னும் துவார பாலகர்களும், உள்ளே விஷ்ணு நந்தியும் உள்ளது. அதைக் கடந்து பஞ்சாட்சர படியேறி, சங்கநிதி- பதுமநிதிகள் கொண்ட குபேரவாசலைக் கடந்தால், கருவறையில் வீற்றிருக்கும் அமிர்தகடேசுவரரை தரிசிக்கலாம்.
கருவறை மற்றும் அர்த்தமண்டபத்தின் புறச்சுவர்களில் எண்ணிலடங்கா சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கருவறையைச் சுற்றி ஐந்து தேவகோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தெற்கில் அர்த்தநாரீசுவரரும், தட்சிணாமூர்த்தியும், மேற்கில் திருமாலும், வடக்கில் நான்முகனும், ஆலிங்கனமூர்த்தியும், மகிஷாசுரனின் தலைமீது நின்ற கோலத்தில் துர்க்கையும் இக்கோட்டங்களில் அருள்பாலிக்கின்றனர்.
கோட்டங்களும் அதிலுள்ள தெய்வங்களும் மிக நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளுடனும், கலைநயத்துடனும் காண்போரை கவர்ந்திழுக்கின்றது. திருமணம், புத்திர தோஷம் உள்ளவர்கள் அம்பாளுக்கு மஞ்சள் கிழங்கு வைத்து வழிபடுகின்றனர்.
செவ்வாயின் அதிபதியான அங்காரகனே தனது தோஷம் நிவர்த்தியாக இங்கு வந்து வழிபட்டதால், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வழிபட ஏற்ற தலமாகவும் இது திகழ்கிறது.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்படும். காட்டுமன்னார்கோவிலில் இருந்து எய்யலூர் செல்லும் சாலையில், மேலக்கடம்பூர் அமிர்தகடேசுவரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் இருந்து பஸ் வசதிகள் உள்ளன.
இந்த ஆலயத்தில் சிவன் கோவில்களில் நடைபெறும் மாதந்திர உற்சவங்கள் தவிர, மகா சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், அன்னாபிஷேகம், கார்த்திகைதீபம் போன்ற வருடாந்திர உற்சவங்களும் சிறப்பாக நடத்தப்பெறுகின்றன. ஒவ்வொரு மாதமும் பிரதோஷ உற்சவம் மிகவும் சீரும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இதற்கென்று 'தசபுஜ ரிஷப தாண்டவமூர்த்தி' என்ற உற்சவ மூர்த்தி உள்ளது.
இந்த மூர்த்தி வேறு எந்த ஆலயத்திலும் காணக்கிடைக்காத அபூர்வ பஞ்சலோக சிலையால் ஆனதாகும். பிரதோஷ உற்சவத்தின் போது இந்த மூர்த்திற்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடத்தப்படுகிறது.
இந்த மூர்த்தியானவர், செவ்வக பீடத்தில் மையமாக உள்ள தாமரைமலரின் நடுவே, மேல்நோக்கிப் பார்க்கும் காளையின் மீது சதுர தாண்டவ கோலத்தில் காட்சி தருகிறார். தன்னுடைய கரங்களில் வீரவெண்டயம், பிரம்மகமலம், கேடயம், சூலம், அரவம், கட்டங்கம், தண்டம், குத்தீட்டி ஏந்தியும் உள்ளார். இவரது வலது கை கஜஹஸ்த அமைப்பிலும், இடக்கை பிரபஞ்சம் தாங்கியும் உள்ளது.
இந்த தாண்டவமூர்த்தியின் காலடியில் திருமால் மத்தளம் இசைக்க, வீரபத்திரர் சூலம் கொண்டு ஆட, விநாயகர், பைரவர், நந்தி, மகாகாளர், பிருங்கி, காரைக்கால் அம்மையார், சிவகணங்கள் மற்றும் நாட்டிய பெண்கள் சேர்ந்தாட, முருகன் மயில் மீது பறக்க, கந்தர்வர்கள் மலர்தூவ என்று எண்ணற்ற சிற்பங்களும் வடிக்கப்பட்டுள்ளன. திருவாசியில் அக்னிக்குப் பதிலாக அரச இலைகளும், தலைக்குப் பின்புறம் ஒளிவட்டமும், மணிமுடியும் அமைந்துள்ளது. சுமார் ஒன்றரை அடி உயரமுள்ள இச்சிலை பிரளய காலத்தில் நந்திமீது நின்று சிவன் சதுரத்தாண்டவம் ஆடியதைக் குறிக்கின்றது.
இந்திரன் வழிபட்ட ருத்ரகோடீசுவரர்
தேவர்களின் தலைவனான இந்திரனின் தாய் அதிதி, இந்த ஆலயத்தை தினமும் பூஜித்து வந்தார். தன் தாய் தினமும் தேவலோகத்தில் இருந்து பூலோகம் வந்து செல்வதைப் பார்த்த இந்திரன், இந்த ஆலயத்தின் அடிப்பகுதியில் தேர் சக்கரத்தை வைத்து தேவலோகம் எடுத்துச் செல்ல முற்பட்டான். அவன் முயற்சியை தடுத்த இவ்வாலய விநாயகர், "ஒரு நாழிகைப் பொழுதில் ஒரு கோடி லிங்கங்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்டால், தேரை விடுகிறேன்" என்றார். இந்திரன் செய்த ஒவ்வொரு லிங்கமும் சேதமடைந்தது.
இதையடுத்து அவன் ஈசனை வழிபட, அவரோ "ஒரு கோடி முறை என் நாமத்தை உச்சரித்து ஜெபம் செய். பின்னர் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்" என்றார். இந்திரனும் அப்படியே செய்தான். இதையடுத்து இந்திரனுக்கு காட்சி கொடுத்த ஈசன், "உன் தாய்க்கு பதிலாக தினமும் நீயே இங்கு வந்து என்னை பூஜிக்கலாம். அதற்கான பலன் உன் தாய்க்கு கிடைக்கும்" என்று அருளினார். இந்திரன் பிரதிஷ்டை செய்த சிவலிங்கம் 'ருத்ரகோடீசுவரர்' என்ற பெயரில், இவ்வாலயத்தில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் கீழக்கடம்பூரில் உள்ளது.






